ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மார்ச், 2023

சற்றே விலகி இருங்கள்..

 


இயற்கையின் ரசத்தை

அமைதியாக

பருகுகிறேன்...

அதன் தித்திப்பு திகட்டாத

புத்துணர்வில் புகுந்துக் கொண்டு 

அடைக்கலமானேன்..

தேகமெங்கும்

தீண்டி செல்லும்

தென்றலில் கொஞ்சம்

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

கொஞ்சம் தலை உயர்த்தி

பார்க்கிறேன்...

மேகங்கள் என்னை வா என அழைப்பது போல 

உணர்ந்தேனா இல்லை

உண்மையோ நான் அறியேன்...

அந்த மேகங்கள் என்னை

இதமாக தூக்கிக் கொண்டு

வானவீதியில் பயணிக்கிறது...

கீழேயுள்ள காடுகள்

எங்களை விட்டு ஏன் போகிறாய் 

என்பது போல

சோகமாக தலையசைக்க...

நான் கொஞ்சம் சற்றே 

மிரண்டு தான் போனேன்..

அங்கே நிகழும் ஒவ்வொன்றின் 

பேரன்பிலும்..

இங்கே எனக்கென்று ஒரு உலகம் 

சிருஷ்டிக்கப்பட்டுள்ளதை

கொஞ்சம் தாமதமாக உணர்ந்தது யார் குற்றம் என்று 

என்னை நானே 

கேள்விக் கேட்டுக் கொண்டே

வானவீதியில் இருந்து 

இறங்கி வந்த போது

நீ பசி பொறுக்க மாட்டாயே

என்று அங்கே ஒரு மரம்

என் மடி மீது சில சுவை தரும்

கனிகளை பேரன்போடு 

போட்டு விட்டு

புன்னகை செய்ததை

மறக்காமல்

என் மனதில் 

பத்திரப்படுத்திக் கொண்டேன்...

இங்கே நான் வேடிக்கை 

மனுஷி தான்...

பல பேர் கண்களுக்கு...

நான் நானாக பயணிக்கும் போது 

இங்கே

ஒரு பித்தரை போல 

அனுமானிக்கப்படுகிறேன்...

அது எதுவோ இருந்து விட்டு போகட்டும்...

நான் இந்த நொடி ஆனந்தத்தை 

இழக்க விரும்பவில்லை...

காடும் நானும் பிரியாமல்

பயணிக்கிறோம்...

இங்கே எங்களை வேடிக்கை 

பார்ப்பதை விட்டு விட்டு

தங்கள் தங்கள் சம்சார கடமைகளை 

விரைந்து சென்று பாருங்கள்...

நாங்கள் இங்கே 

உங்களிடம் இருந்து 

சற்றே விலகி இருக்க 

விரும்புகிறோம்...

#கவிதைதினகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...