நீங்காத இரவொன்றில்
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் ஆக்கிரமித்து
என் உறக்கத்தின் நெரிசலில் சிக்கி தவிக்கிறது...
தேடுதலுக்கும் தேடாமல்
இருப்பதற்கும் எப்படியோ பழக்கி வைத்து இருக்கிறேன்...
பெரும் சிரமத்திற்கு இடையில் என் மனதை...
ஒன்றும் ஆகி விடப் போவதில்லை என்று தெரிந்தும் படபடப்பு அடங்காமல்
என்னை படுத்தும் ஒரு நினைவின் நீட்சியை மட்டும்
விலகி இருக்க சொல்லி இருக்கும் அந்த நொடியில்
நான் அந்த நினைவிடம்
கெஞ்சி கூத்தாடியபோது
அது என் வலியை புரிந்துக் கொள்ளாமல்
இரவை திருடி..
என் உறக்கத்தை திருடி
என்னை பித்தனாக்கி
ஒரு வித குறும்போடு
நகர்வதை நான் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லாமல் தவிப்பதை
இளம் விடியலின் கீற்றொன்று இரக்கப்பட்டு
ஆறுதல் தந்து அணைத்துக் கொண்டதை தவிர
வேறு எதுவும் மிஞ்சவில்லை..
மீண்டும் இரவை சந்திக்க
இன்னும் சில மணி நேரங்கள் உள்ளது என்று
என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணிக்கிறேன்
வெளிச்சம் நிறைந்த இந்த பகல் பொழுதில்...
#கொஞ்சம்தேநீர்
#கொஞ்சம்கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக