ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

கல்லறை மனிதர்கள் காத்திருக்கிறார்கள்...


கல்லறை மனிதர்கள்

காத்திருக்கிறார்கள்

இன்னும் கனவுகள்

பலிக்கும் நாளுக்காக!

நடப்பதோ நாடக கூத்து

இதில் இவர்கள்

கனவுகளுக்கு

குறைந்தபட்ச மரியாதை

இல்லை என்று

எவர் சொல்லக்கூடும்

கிசுகிசுப்பாகவேனும்

அந்த கல்லறை மனிதர்களிடம்!

#கல்லறைமனிதர்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இரவு சிந்தனை ✨


வாழ்தல் ஒரு சாபம் என்கிறார்கள்

அங்கே பல பேர்...

நானோ வாழ்தல் ஒரு வரம்

நீங்கள் எந்த ஜட பொருளோடோ

எந்த ஜீவனோடோ

பெரும் பற்றோடு பயணிக்காத வரை

வாழ்தல் ஒரு பெரும் வரம் என்றேன்!

அவர்களோ அது எப்படி என்றார்கள்...

அந்த பாதையில் 

பயணித்து பாருங்கள்

அப்போது தான் தெரியும் என்றேன்...

#இரவு சிந்தனை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :28/04/24.

ஞாயிற்றுக்கிழமை.

முன்னிரவு பொழுது 11:25.

இரவு கவிதை 🍁


என் வலி எனும் உணர்வுகளை நிச்சலனமாக 

உள் வாங்கி வெளியே தள்ளி

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்....

இந்த வெட்ட வெளி என்னை 

தழுவிக் கொண்டு

ஆறுதல் சொல்கிறது...

நான் என் உணர்வுகளை கடத்தி வைக்க எந்த ஜீவனையும் தேடவில்லை...

அதை மிக கச்சிதமாக

எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த இயற்கை செய்து முடித்து விடுகிறது...

ஒருவரின் தேடலும் இல்லாமல் இங்கே நான் வாழ கற்றுக் கொண்டேன்

மிகவும் இயல்பாக என்று

அந்த காலம் என்னை உதாரண புருஷராக்கி அங்கே பலபேருக்கு கை காட்டி விளக்கம் சொல்லி 

செல்லும் போது

நான் நானாக பயணிப்பதை இங்கே வேடிக்கை பார்க்க

இவ்வளவு கூட்டமா என்று

கொஞ்சம் மலைத்து போகிறேன்...

ஒரு தேடலும் 

ஒரு இலட்சியமும் இல்லாமல்

இங்கே பயணிப்பது எனக்கு அவ்வளவு எளிதாக இருப்பது

வரம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது

அங்கே ஒரு மனம் நலன் சரியில்லாத ஒருவர் தேமே என்று வானத்தை பார்த்துக் கொண்டு சாலையின் நடுவில் நிற்கிறார் என்று

யாரோ ஒருவர் கூப்பாடு போட

என்னை நோக்கி மறுபடியும் ஒரு கூட்டம் கூடி விட்டது...

இங்கே வாழ்தல் ஒரு பிழையா பிழைப்பிற்கான சாடலா என்று முணுமுணுத்துக் கொண்டே

அவர்களை ஒரு பார்வையால் 

தீண்டி விட்டு நகர்கிறேன்...

அந்த முணுமுணுப்பிற்கும்

இங்கே அந்த கூட்டம் சாபம் 

கொடுத்து செல்கிறது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:52.

நாள் 28/04/24.

ஞாயிற்றுக்கிழமை.


சனி, 27 ஏப்ரல், 2024

பெரும் நகரத்தில் இருந்து விடை பெறும் போது...


அந்த பெரு நகரத்தில் இருந்து 

விடை பெறும் போது

என்னையும் அறியாமல் துக்கம் 

எனை பீடிக்கிறது...

அது நகரத்தை விட்டு பிரியும் துக்கமா 

இல்லை

அந்த நகரத்தின் பரபரப்பான 

சாலைகளில் இருந்து

விடை பெறும் துக்கமா 

தெரியவில்லை...

இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத இந்த நகரத்தின் பிரிதல் ஏதோவொரு கனத்தை மட்டும் தந்து செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை...

 #இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:09.

நாள்:27/04/24.

சனிக்கிழமை.

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அந்த ஈசலின் பெரும் காதல் .🍁🍁🍁


அந்த ஈசலின் பெரும் காதலை மறுக்க மனமில்லாமல்

சேற்றில் விழுகிறது

அந்த மழைத் துளி...

ஈசலும் அந்த இரவை கடந்து ஜீவித்து இருக்கவில்லை...

அந்த தூய்மையான மழைத் துளியும் ஜீவித்து இருக்கவில்லை...

இங்கே பெரும் காதலோடு ஒரு சில மணித்துளிகள் பயணித்து இறந்து விட்ட 

இந்த இருவரின் ஈடு இணை இல்லாத காதல்

இரவென்றும் பாராமல் ஏதேதோ

முணுமுணுத்துக் கொண்டே சாலையில் பயணிக்கும்

அந்த நகரத்தாரை கூவி அருகே அழைத்து ஒரு சில விநாடிகள் துக்கம் அனுசரிக்க சொல்கிறேன்...

அந்த துக்கம் அனுசரிக்க நாங்கள் செய்யும் விநாடிகளின் விரயத்தை எங்களுக்கு தாங்கவொணாத துயரத்தை கொடுத்து விடும் என்று குரல் கம்ம சொல்லி செல்கிறார்கள்...

இங்கே வாழ்தல் இனிதா

இறத்தல் இனிதா

பெரும் காதல் இனிதா...

நீங்களே சொல்லுங்கள்

பிரபஞ்சத்தின் நாயகர்களே!

#பிரபஞ்சத்தின்நாயகர்கள்.

#இரவுகவிதை.

முன்னிரவு நேரம் 11:25.

நாள்:26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

அதீத காதல் 🍁

 


எனக்கு உன் மீது உள்ள கோபத்தில் நான் அந்த தந்தி கம்பிகள் அறுந்து விடும் அளவுக்கு இசைத்து

உன் மீது நான் கொண்ட அதீத காதலை இந்த பிரபஞ்சம் அறிய அறிவித்து விடுவேன் என்று

நீ அங்கே உன் தோழிகளோடு சாதாரணமாக சிரித்து சொல்லிக் கொண்டே என்னை கவனிக்கிறாய்...

நான் உன்னை அப்படி அறிலித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று இல்லை...

என் கையில் இருக்கும் இசைக் கருவியோடு நான் கொண்ட காதலை உன்னை காயப்படுத்தி அறிலித்து விட்டேன்...

என் பெரும் காதலை எப்போதும் நிராகரிக்காத

அந்த இசைக் கருவியை விட

உன் இதயம் மேலானதாக எனக்கு தோன்றவில்லை...

நான் உன் மீது தொடுத்த அந்த காயங்கள் 

ஆறி விடக் கூடும்...

என் கையில் எந்த கேள்விகளும் 

கேட்காமல் அடைக்கலம் ஆன

இசைக் கருவிக்கு என்னை விட 

வேறு துணை யார் இருக்கக்கூடும்...

சென்ற நொடி வரை

என்னை காயப்படுத்திய

முன்னாள் காதலியே...

#இரவுகவிதை.

நாள்:26/04/24.

முன்னிரவு 11:05.

#இளையவேணிகிருஷ்ணா.

வீழ்ந்துக் கொண்டே இருக்கும் அந்த உயிர் துளிகள்...


கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்று விடும் காலத்தின் முன் மண்டியிட மனமில்லாமல் கதறி அலைகிறேன் இங்கும் அங்கும்...

என் வாழ்வின் துளிகள் கரைகிறது சத்தம் இல்லாமல்...

நானோ இன்னும் ஏதோ ஒன்று என்னுள் உயிர் கொண்டு அலைவதை மட்டும் கையில் பிடித்து விட எண்ணம் கொண்டு பகீரத முயற்சி கொண்டு அகத்தில் ஆழமாக விழுகிறேன்...

விடுபட்டு விட மட்டும் எண்ணம் கொண்ட அந்த உயிர் துளி மட்டும் கையில் அகப்படாமல் உள்ளே உள்ளே வீழ்ந்துக் கொண்டே இருக்கிறது...

என் கையில் அகப்படாமல்

வீழ்ந்துக் கொண்டே இருக்கும் அந்த உயிர் துளிக்கும் ஏதோவொரு இலட்சியம் இருக்கும் போது நான் ஏன் அதை துரத்தி அலைய வேண்டும் என்று

விட்டு விட்டு மேலே மேலே

நான் மிதந்து வருவதை

அந்த காலம் மட்டும்

கண்டும் காணாமல் பயணிப்பது 

எனக்கு நியாயமாக தெரியவில்லை...

உங்களுக்கும் அப்படி தானே?

#இரவுகவிதை.

நேரம் முன்னிரவு 10:45.

நாள் 26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கல்லறை மனிதர்கள் காத்திருக்கிறார்கள்...

கல்லறை மனிதர்கள் காத்திருக்கிறார்கள் இன்னும் கனவுகள் பலிக்கும் நாளுக்காக! நடப்பதோ நாடக கூத்து இதில் இவர்கள் கனவுகளுக்கு குறைந்தபட்ச மரியாதை ...