ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஒன்றும் இல்லாத விசய சுகங்கள் எனும் சருகை நோக்கி...

 


ஓடிக் கொண்டே

இருக்கிறேன்..

ஒன்றும் இல்லாத

விஷய சுகஙங எனும்

பறக்கும் சருகுகளை

நோக்கி...


அந்த சருகின் மதிப்பு

ஒன்றும் இல்லை என்று

தெரிந்தும்

மற்றவர்கள் கைக்கு

அந்த சருகு கிடைத்து விடக் கூடாது 

என்ற அகங்காரம் 


மனதில் பசைப் போட்டு 

ஒட்டிக் கொண்டு

என் ஓட்டத்தை தீவிரமாக்கி

ஏதோவொரு தீவிர விசையை

மனதில் இயக்கி

ஓட வைக்கிறது... 


எப்படியோ அந்த ஒன்றுக்கும்

உதவாத சருகு

என் கைகளில் கிடைத்து விட்ட 

திருப்தியில்

வெற்றிக் களிப்போடு

நான் திரும்பி பார்க்கும் போது

என் பின்னால் எவரும் இல்லை


எங்கே என்று சற்றே

சுற்றும் முற்றும் பார்த்தேன்...

அவர்கள் வேறொரு

விஷய சுகங்கள் எனும்

சருகின் பின்

ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்!

நான் மீண்டும்

இந்த கையில் கிடைத்த சருகை

அங்கேயே நழுவ விட்டு விட்டு

அவர்கள் துரத்தி செல்லும்

சருகை நோக்கி 

இன்னும் தீவிரமாக

ஓடுகிறேன்...


அந்த சருகை 

மற்றவர்கள் கைக்கு

செல்லாமல்

எப்படியோ பிடித்து விட்டேன்..

அந்த சருகின் மகிமையை

ஆவலோடு பார்த்தால்

அது எதற்கும் உதவாததாக

உள்ளதை நினைத்து

மனம் வெதும்பி

அப்படியே சிறிது நேரம்

மூச்சு வாங்க அமர்கிறேன்...


இப்போது அவர்கள்

என்னை ஒரு முறைப்பு 

முறைத்து விட்டு

வேறொரு விசய சுகங்களை

நோக்கி செல்கிறார்கள்...


இதை எல்லாம் சற்றே

தூர இருந்து

வேடிக்கை

பார்த்து கொண்டிருந்த

காலமோ என்னை

வாரியணைத்து

பேரமைதியில்

வாழ்வின் மேலான

விலை மதிப்பு இல்லாத

தாத்பரியத்தை

தனது மௌனமொழியால்

உபதேசத்தை

என் ஆழ் மனதிற்கு

கடத்துவதை

இந்த பிரபஞ்சம்

கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறது...

இதோ இந்த பிரபஞ்சத்தில் 

ஒருவனை பக்குவப்படுத்தி விட்டோம் 

என்ற திருப்தியில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/01/26.

சனிக்கிழமை.




இன்றைய தலையங்கம்:-மீளுமா காங்கிரஸ்?

 


இன்றைய தலையங்கம்:-

#மீளுமா காங்கிரஸ்?:-

ஒன்றை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்... அது என்ன என்றால் எப்போதும் அடுத்தவர் முதுகில் சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது அல்லது அதற்கு அடிமையாக்கப்பட்டது காங்கிரஸ்... மாநிலத்தில் களத்தில் இறங்கி வேலை செய்ய யாரேனும் ஒருவர் தமிழ் நாட்டில் காட்டுங்கள் காங்கிரஸ் கட்சியில் என்று கேட்டால் நிச்சயமாக எவரிடமும் பதில் இருக்காது..

இதை பொதுமக்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் ஏன் காங்கிரஸ் உட்பட...

எப்போது பார்த்தாலும் திமுக காங்கிரஸ் கட்சியையும் தூக்கி சுமந்து காங்கிரஸ் தொகுதியிலும் வேலை பார்த்து வெற்றியை தேடி தந்து விடுவது வாடிக்கையாகி போனதால் அவர்கள் உழைக்காமலேயே எப்படி அதிக தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் பெறுவது என்று யோசிக்கிறார்கள்..

உண்மையில் தமிழ் நாட்டில் போல காங்கிரஸ் வேறு எந்த மாநிலத்திலும் மோசமாக இல்லை...

இதில் வேறு தவெக கூட கூட்டணி வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது மிகவும் மிகவும் கேலிக் கூத்தான விசயம்...


ஒரு அரசியல் கட்சி காமராஜருக்கு பிறகு தலை தூக்கவில்லை என்றால் அது யார் தவறு?


இந்த விசயத்தில் திமுக இவர்களுக்காக நிறைய தியாகம் செய்து உள்ளது... குறிப்பாக திமுக தொண்டர்கள்... அவர்கள் ஓட்டு கேட்க கூட வர சொன்னால் கூட காங்கிரஸ் வேட்பாளர் மெத்தனமாக இருந்த காட்சிகள் எல்லாம் உண்மையாக உழைத்து வந்த திமுக தொண்டர்களுக்கு மற்றும் மக்களுக்கு தெரியும்...

எப்போது பார்த்தாலும் பதவி சண்டை கீழ் மட்டத்தில் இறங்கி வேலை செய்யாத பண்ணையார் மனபாங்கு இதெல்லாம் இப்போது வேலைக்கு ஆகுமா என்று யோசிக்க மாட்டார்களா?

எனக்கு தெரிந்து திமுக தான் காங்கிரஸ் கட்சியை சோம்பேறி கட்சியாக மாற்றியதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்...


காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது நாடகம் நடத்துவதை நிறுத்தி கட்சியை அடிமட்டத்தில் இருந்து எப்படி மாற்றியமைத்து மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்ய வைக்க வேண்டும் என்று டெல்லி தலைமை யோசிக்க வேண்டும்...


அதை விடுத்து எப்போது பார்த்தாலும் தேர்தல் வந்து விட்டால் சீட்டு பேரம் பேசுவதை மட்டும் தீவிரமாக வைத்துக் கொண்டு இருந்தால் ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்கும் காங்கிரஸ் அபிமானிகள் வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள்...


தமிழ் நாட்டில் தொடர்ந்து காங்கிரஸ் பல தொகுதிகளில் வெற்றி அடைந்து வருவது எல்லாம் திமுக கட்சியில் உள்ள தொண்டர்களால் தான்...


உண்மையில் தியாகி பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் திமுக தொண்டர்களுக்கு தான் தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும்...


காங்கிரஸ் தமிழ் நாட்டில் கை நழுவி செல்லும் முன் யோசிக்குமா டெல்லி தலைமை என்று உண்மையான காங்கிரஸ் அபிமானிகள் கவலையில் உள்ளார்கள்...

காங்கிரஸ் சுய பரிசோதனை இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் இல்லை...

ஏனெனில் தமிழ் நாட்டில் பிஜேபி மிகவும் மும்முரமாக வேலை செய்கிறது... ஆனால் அதற்கு நேர் எதிராக வழக்கம் போல உங்களுக்குள்ளேயே சண்டை இடுகிறீர்கள்...

களத்தில் உழைப்பு மிகவும் அவசியம்.. தொகுதி மக்கள் அதை விட முக்கியம்...

#காங்கிரஸ்vsதிமுக.

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:31/01/26.

சனிக்கிழமை.

புதன், 28 ஜனவரி, 2026

சொல் வனம் எனும் அடர்ந்த காட்டில்...

 


என் நெஞ்சமெங்கும்

அடர்ந்து கிடக்கிறது

உனக்கான சொல் வனம் எனும்

அடர்ந்த காடுகள்...


அந்த நிழலில் நீ இளைப்பாறி

என் மடியில் சாய்ந்து...

அந்த மரத்தில் இருந்து

மெல்ல மெல்ல 

மென்மையாக விழுந்து

கவிதை மலர்கள்

உன்னை அலங்கரிக்க

நீ சிறிது நேரம் ஏதும் பேசாமல்

உன் பார்வையால் 

என் கண் பார்வையை 

ஊடுருவி ரசித்து

சிறிது நேரத்தில்


நிர்மலமான மனதில்

அமைதி பொங்க..

துயில் கொள்கிறாய்...

அந்த காட்சியை ரசித்துக்கொண்டே

அங்கே வசித்து வரும்

குயில்கள் 

தன் இனிமையான குரலால்

மென்மையாக தாலாட்ட...


நீ அந்த இசையில் மயங்கி

ஆழ்ந்த துயில் கொள்ள

நான் அந்த அடர் வனத்தை

பேரமைதிக் கொண்ட

மனதோடு பார்வையிடுகிறேன்...


உன் துயில் கொள்ளும் நிலை

சிறிதேனும் 

கலைந்து விடக்கூடாதே என்ற 

பெரும் தவிப்போடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/01/26.








செவ்வாய், 27 ஜனவரி, 2026

இயற்கையை நேசியுங்கள் இல்லையேல்...

 


#இன்றையதலையங்கம்:-

இயற்கையை நேசியுங்கள் இல்லையேல்...:-

அரசியல்வாதிகள் எப்போதும் திருந்த மாட்டார்கள்... இந்த பிரபஞ்சத்தில் மக்களாகிய நாம் தான் பூமியை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறோம்...குவாரி என்பது நிச்சயமாக மிகவும் ஆபத்தான விசயம்... இங்கே சில அறிவாளிகள் பிறகு சாலை வசதி கட்டிடங்கள் எப்படி கட்டுவது என்று கேட்பார்கள்... மேலைநாடுகளில் இப்படி தான் கட்டிடம் கட்டுகிறார்களா என்று அங்கே உள்ள கட்டணங்களை பற்றிய தகவல்கள் கூகுளில் தேடுங்கள்...

தமிழ் நாடு இப்படியே போனால் பாலைவனம் ஆவது உறுதி... மேலும் மண் நெகிழ்வு தன்மையை பெறும் போது நிலநடுக்கம் அந்த பகுதியை எதிர் காலத்தில் தாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..

இயற்கை சீரழிவு இப்படி தான் நிகழ்கிறது...

பெரும் ஆசைக் கொண்ட அதிகார போதையில் உள்ள அரசியல்வாதிகள் கொஞ்சம் இயற்கை நேசர்களாக இருந்தால் தமிழ் நாடு தப்பிக்கும்...

யோசியுங்கள் மக்களே..🙏.

இயற்கையை நேசியுங்கள்...

இல்லை என்றால் உங்கள் வருங்கால சந்ததி மோசமான சூழலில் சிக்கி தவிப்பதை நீங்கள் சூட்சமமாக வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் மேலே இருந்து...

#இயற்கையைநேசியுங்கள்.

#இன்றையதலையங்கம்.

#அதிகாரபோதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:28/01/26.

திங்கள், 26 ஜனவரி, 2026

நதி எனும் வித்தியாசமான தோழி 🎉

 


அந்திமாலையில் நதியின் வீட்டை நோக்கி என்கால்கள் நகர்ந்தது..என் அலுவலக பணி முடித்துவிட்டு..

சாலையில் கொஞ்சம் வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.. எவரும் நிதானமாக சாலையை கடந்து செல்லவில்லை. இந்த நேரத்தில் நதி என்னோடு இருந்திருந்தால் ஏதாவது தத்துவ ஆராய்ச்சி செய்ததை சொல்லி இருப்பாள் மக்கள் இவ்வாறு ஓடுவதை பார்த்து. நல்ல வேளை அவள் தற்போது தன்னோடு இல்லை என்று ஓர் புன்னகை செய்தபடி சாலையை கடந்து நதியின் வீட்டை அடைந்தேன்.

  கொஞ்சம் ஆவலாக இருந்தது என்ன தான் இன்று அலுவலகம் வராமல் செய்து கொண்டு இருப்பாள் என்று.

  வீடு முழுவதும் தேடினேன் அவள் எங்கும் காணவில்லை. நான் வந்ததை கவனித்து இங்கே வா கிருஷ் என்றாள். அவள் அழைத்த திசையை நோக்கினேன். ஏதோ செடி ஒன்று நட்டு வைத்துக்கொண்டு இருந்தாள் அவள் வீட்டு பின்புறம் உள்ள  சிறுநந்தவனத்தில்.

நான் ஆவலாக என்ன செடி இது நதி என்றேன்.

அவளோ இது ஓர் ரோஜா செடி என்றாள்..உனக்கு தான் ரோஜாவே பிடிக்காதே..நீ தலையில் எந்த பூவையும் சூடி நான் பார்த்ததே இல்லை..என்றேன் ரொம்ப பாவமாக.

அவள் நான் இந்த ரோஜாவை இப்போது வைத்தது நான் சூடிக்கொள்ள அல்ல.. நான் இங்கே இந்த தோட்டத்தில் வந்து உலாவும் போது இது காற்றில் அசைந்து என்னை வரவேற்கும். அந்த வரவேற்பு என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இப்போது எல்லாம் நீ எவர் வீட்டுக்கு சென்றாலும் பெரும்பாலும் அவர் அழைக்காமல் இருக்கும் போது நீ சென்றால் வரவேற்பு ஏதோ வேண்டாவெறுப்பாக இருப்பதை கவனித்து இருப்பாய் அல்லவா..எனக்கு அந்த அனுபவம் நிறைய நடந்து உள்ளது. ஒருவேளை உனக்கு அந்த அனுபவம் நிகழாமல் கூட இருக்கலாம் என்று சொல்லி கொண்டே அதற்கு நீர் நிற்பதற்கு கரை கட்ட தொடங்கினாள்..என் பதிலை எதிர்பார்க்காமலேயே.

  நான் அவ்வாறு எனக்கும் நடந்து இருக்கிறது எனது உறவுகள் மத்தியில். ஏனெனில் நான் அப்போது ஓர் வேலை இல்லா பட்டதாரி.. என்றேன் புன்னகைத்து கொண்டே.

அதற்கு அவள் சிரித்து கொண்டே சொன்னாள் இப்போது கூட நீ வேலை இல்லாமல் எங்கேயேனும் போனாய் என்றாலும் அதே கதிதான்..கிருஷ்.அது எப்போதும் மாறப்போவது இல்லை என்றாள் புன்னகை மாறாமலேயே..

சரி அதற்கும் இப்போது நீ இந்த ரோஜா செடி நடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றேன் புரியாமல்.

அதுவா நீ எப்போது இங்கே வந்தாலும் உனக்கு வேலை இருக்கிறதா எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று எல்லாம் இந்த ரோஜா செடி கேட்காது.தனது மலர்ந்த புன்னகை மாறாத முகத்தோடு உன்னை வரவேற்கும்.. இதற்கு இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடு தெரியாது என்றாள்.கரைகட்டி முடிக்க உதவிய அந்த மண்வெட்டியை எடுத்து சென்று கழுவிக்கொண்டே.

நான் ஆமோதித்து அந்த செடியை கொஞ்சம் வருடிக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதுவும் தனது பாசத்தாலேயே என்னை முள்ளால் கொஞ்சம் கீறியது.இதுவும் ஓர் அன்பு கீறல் தான் என்று நினைத்து நகர்ந்தேன்.கீறிய கையை தடவியபடியே.

  அதற்குள் அவள் அழைப்பு வர இதோ வந்து விட்டேன் என்று நகர்ந்தேன்.. கையில் தேநீர் கோப்பையோடு தோட்டத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.

  நான் அவள் போட்ட தேநீரை பருகினேன். இன்று கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கிறது நதி என்றேன் புன்னகைத்து.

தேநீர் எப்போதும் சுவைதான். நாம் தான் அதை ரசித்து பருக நேரம் இல்லாமல் வேகமாக பருகி அதன் மரியாதையை குறைக்கிறோம் என்றாள்.

   நான் புன்னகைத்து கொண்டே சரிதான் என்று தலையாட்டினேன்.

அவள் என்னருகில் அமர்ந்து பறவைகளின் ஒலியில் இசையை கேட்டு ரசித்தாள்.தோட்டத்தில் பறக்கும் பறவைகளின் ஒலியில் தன்னை மறந்து தலையாட்டிக்கொண்டே நடந்தாள் மிகவும் மெதுவாக.

கொஞ்ச நேரம் நான் அவள் மென்னடையை ரசித்து கொண்டே அவளிடம் நாளை அலுவலகத்தில் பார்க்கலாம் என்றேன். இனிமையான அந்த தருணத்தில் இருந்து விடைபெற்றபடியே.

பார்க்கலாம் என்றாள் பறவைகளிடம் இருந்து தன் கண்களை விலக்காமலேயே..

இவள் ஓர் அதிசயம் தான் என்று என் வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.

மீண்டும் அவளோடு பயணம் நாளைக்கு என்று மனதில் நினைத்தபடியே .

#அவளோடுஓர்பயணம்

#இளையவேணிகிருஷ்ணா.

மனம் எனும் ஊஞ்சலில்...


உனக்காக நறுமணம் சூழ்ந்த

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

என் மனம் எனும் 

கம்பீரமான கோட்டையில் 

கட்டி வைத்த

ஊஞ்சலில்...

நீ வந்து அதில் மகிழ்வோடு

அமர்ந்து ஆடும் தருணத்தை

அசைப் போட்டு

காத்திருக்கிறேன் இங்கே...


நீயோ அந்த தரம் தாழ்ந்த மனிதன் தனது மனம் எனும்

சிதிலமடைந்த கோட்டையில் அலங்கரித்து...

அந்த முள்ளில் கட்டி வைத்த

எவரும் கண்டுக்காத

தூசி படிந்த ...


எப்போது அறுந்து விழுமோ என்று

கவலைக் கொண்டு

போவோர் வருவோருக்கு

காட்சிக் கொடுத்த...


ஊஞ்சலை நம்பி போய் 

அமர ஓடிப் போவதை 

யதேச்சையாக பார்த்து

உன் பெயரை உச்சரித்தே

உன் பின்னால் ஓடி வருகிறேன்...

அதை காதில் வாங்காமல்


நீ அந்த பழுதடைந்த ஊஞ்சலில்

அமர்ந்த நொடியில்

கயிறு அறுப்பட்டு அந்த முட்புதரில்

வீழ்ந்து ...

அந்த அவமானம் தாங்காமல்

ஓடோடி

அருகில் உள்ள கிணற்றுக்கு

பலியாகி விட்டதை பார்த்து

நான் விக்கித்து நிற்கிறேன்...

எதுவும் செய்ய தோன்றாமல்...


அப்பொழுது என் மனமெனும்

அலங்கரிக்கப்பட்ட கோட்டையில்

உள்ள பூக்கள் வாடி உதிர்ந்து

உனக்கு அஞ்சலி செலுத்துவதை

பார்த்து தாங்கொணா துயரத்தில்

குலுங்கி குலுங்கி அழுவதை

போவோர் வருவோர் எல்லாம்

சிறு வருத்தம் தோய்ந்த

முகத்தோடு பார்த்து

எனக்கு ஆறுதல் சொல்லி

கடந்து செல்கிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/01/26.




சொல்ல மறந்து விட்டேன் ஜெய்ஹிந்த் 🙌🔥


நதிகள் குப்பைக் களங்களாக

பெரும் வாடை நாசியை

துளைக்க சகித்துக் கொண்டு

ஓடுகிறது...


சாலையின் இருபுறமும்

குப்பைகள் பறந்து

ஒவ்வொரு நாளையும்

பூக்கள் தூவி வரவேற்பது போல

வரவேற்கிறது...


மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு

அங்கங்கே கண்ணாடி பாட்டிலை

ஓடையில் ,சாலையில்

விவசாய நிலங்களில் தூக்கி

எறிந்து விட்டு 

மதியிழந்து...

தள்ளாடி போவோர் வருவோரை

மிரள வைக்கிறார்கள்...


இங்கே வழக்கம் போல

பாலாறும் தேனாறும் 

தேசத்தில் ஓடி

மக்களின் வாழ்வாதாரத்திற்கு

என்ன குறைச்சல் என்று

யூடியூப் காணொளி வழியாக

வரிந்துக் கட்டிக் கொண்டு

மணிக்கணக்கில் பேசி தீர்க்கிறார்கள்

கட்சி அபிமானிகள்...


அந்த கூச்சலுக்கிடையே

லட்ச கணக்கில் நிதி பற்றாக்குறை

மாநிலத்தில் யார் ஆட்சியில்

கூடி உள்ளது என்று

காரசாரமாக பொறுப்புள்ளவர்கள்

விவாதிக்கும் போதும்

சாதாரண மக்கள்

அதை சிரித்துக்கொண்டே

கடந்து செல்கிறார்கள்...


இத்தனையும் இங்கே

இன்னும் நடந்துக் கொண்டு தான்

இருக்கும்...

அது பற்றிய கவலை இங்கே

யாருக்கு இருக்கிறது?

தேர்தல் தேதி 

எப்போது அறிவிப்பார்கள் என்று

மக்கள் ஒரு பக்கம் துட்டுக்காக

பார்க்க...

வேட்பாளர்களோ

வேட்பாளராக அறிவிக்கப்படும் போது மக்களை 

சிறப்பாக கவர 

எத்தனை துட்டு செலவாகுமோ

என்று குழம்பி தவிக்க...


இந்த அலப்பறைகளுக்கிடையில்

இன்று குடியரசு தினம்

வந்ததும் தெரியவில்லை...

போனதும் தெரியவில்லை...

இந்த களேபரத்தில்

சொல்ல மறந்து விட்டேன்...

#ஜெய்ஹிந்த்.

#குடியரசுதினகொண்டாட்டம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/01/26.

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

என்னோடு பயணிக்கும் சில சுவைகள் 💫

 


நான் அப்படியே ஹெட் செட்டில் பாடல் கேட்டு கொண்டே தனது பணியில் மூழ்கி இருந்தேன்.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சுதா அதிகாலையிலேயே கிளம்பி சென்று விட்டாள்.. அவளோடு எழுந்து அவளுக்கு தேவையான உதவிகளை செய்ததில் இருந்து அவளை அனுப்பி விட்டு உறக்கம் வராததால் அலுவலக பணியை செய்யலாம் என்று தனது லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்துக் கொண்டு இருந்தேன்.. மணி பார்த்தால் ஆறாகி இருந்தது.நான் ஏதோவொரு யோசனையில் இருக்கும் போதே பால்க்காரர் அழைப்பு மணியை அழுத்தினார்.. போய் பால் வாங்கி விட்டு வந்து வேலை பார்க்கலாம் என்று போய் கதவை திறந்தேன்.. என்னம்மா இன்று ஞாயிற்றுக்கிழமை தானே.. நீங்கள் எப்போதும் வர தாமதமாகும்.. ஆனால் அழைப்பு மணியை அழுத்தியவுடன் வந்து விட்டீர்களே என்று ஆச்சரியமாக கேட்டார்..

நானும் எனது தோழி நேற்று மாலையில் வந்து இருந்தாள்.. அவள் இன்று அதிகாலை கிளம்பியதால் நானும் கொஞ்சம் சீக்கிரமாக எழு வேண்டிய அவசியம் வந்து விட்டது.. என்றேன் புன்னகையோடே..

சரிங்க அம்மா.. மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு பாலை ஊற்றி விட்டு சென்று விட்டார்..

நான் அந்த பாலை எடுத்துக் கொண்டு சமையலறையில் சென்று எனக்கு பிடித்த தேநீரை தயாரிக்க ஆயத்தம் ஆனேன்.. மீதி பாலை பிரிட்ஜில் வைத்து விட்டு இணைய வானொலியில் பாடல் கேட்டு கொண்டே நான் தயாரித்த தேநீரை பருகினேன்..

மிகவும் நிதானமாக தேநீரை பருகுவதில் இருக்கும் ஆனந்தமானது ஈரேழு உலகத்திலும் இல்லை..

அதை பருகும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்தி பருகி பாருங்கள்.. அப்போது தான் தேநீர் அல்ல அது ஓர் அமிர்தம் என்று உங்களுக்கு புரியும்..

இந்த பரபரப்பான உலகத்தில் எவரை கேட்டாலும் சாப்பிட தானே சம்பாதிக்கிறோம் என்று பெரும்பாலான மக்கள் சொல்வார்கள்.. ஆனால் ஓர் தேநீரை கூட ரசித்து பருக மாட்டார்கள்.. என்ன ஓர் விசித்திரமான குணம்..என்று உங்களுக்கு கூட சிரிப்பு தான் வருகிறது இல்லையா..

சரி தேநீர் பருகி முடித்தாயிற்று.. உங்களோடு தேநீரின் சுவையை சிலாகித்து பேசிக் கொண்டே..

இப்போது சிஸ்டத்தில் அமரலாமா என்று யோசனை வந்தது.. வேண்டாம் என்று அந்த முடிவை மாற்றிக் கொண்டேன்..

சிஸ்டத்தை சட் டவுன் செய்து விட்டு போய் குளிக்க சென்று விட்டேன்.. குளித்து முடித்து வந்தவுடன் அப்படியே இஷ்ட தெய்வமான நடராஜருக்கு ஓர் விளக்கை ஏற்றி விட்டு கண் மூடி தியானம் செய்து முடிக்கும் போது அழைப்பு மணி அழைத்தது..

நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு வேகமாக சென்று கதவை திறந்தேன்..

அங்கே கிருஷ்ணா நின்று இருந்தான்..புன்னகையோடே..

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..கிருஷ் நீயா.. என்ன இந்த காலை நேரத்தில் என்றேன்.. ஆச்சரியம் குறையாமலேயே..

ஏன் நான் உன்னை பார்க்க உன்னிடம் இந்த வீட்டிலும் எல்லாம் பர்மிஷன் கேட்டு விட்டு தான் வர வேண்டுமா என்றான் குறுஞ்சிரிப்போடே..

அப்படி எல்லாம் இல்லை.. ஆனால் ஓர் அலைபேசி குறுந்தகவல் கூட இல்லாமல் இவ்வளவு காலையில் உன்னை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி என்றேன்..

நதி இங்கே அதிசயங்கள் எல்லாம் எவரையும் கேட்டு விட்டு வருவதில்லை.. அதனால் தான் அது அதிசயம் என்றான்..

போதும் போதும் உனது வசீகரமான பேச்சு என்று சொல்லி அவனை வீட்டிற்குள் அனுமதித்தேன்..


சரி கிருஷ் என்ன சாப்பிடுகிறாய் என்றேன்..

நீ என்ன செய்தாலும் அது அமிர்தம் தான்.. அதனால் உனது விருப்பம் என்றான் மிகவும் உற்சாகமாக..

நான் போய் காலை சிற்றுண்டி தயாரிக்க செல்வதற்கு முன் அவனிடம் ஓர் வார இதழை திணித்து விட்டு சமையலறையை நோக்கி சென்றேன்..

அவனும் அதை புரட்டி ஆவலாக படிக்க துவங்கினான்..

நான் அவனுக்கு பிடித்த தோசை மற்றும் தக்காளி சாம்பார் கொஞ்ச நேரத்தில் தயாரித்து அவனை சாப்பிட அழைத்தேன்..

கிருஷ்..வா.. உனக்கு பிடித்த சிற்றுண்டி தயார் என்று சொல்லிக் கொண்டே மேசையில் கொண்டு வந்து வைத்தேன்..

அவனும் மிகவும் ஆவலாக இதோ வந்து விட்டேன் நதி என்று சொல்லி ஆவலாக வந்தான்..

நானும் அவனும் சேர்ந்து சாப்பிட்டோம்..சில பல விசயங்களை பேசிக் கொண்டே...

சாப்பிட்டு கை கழுவி முடித்தவுடன் நதி..உனது கைமணத்தில் உனது காதல் தேநீரை கொஞ்சம் எடுத்து வா என்றான்..

இதோ.. கொண்டு வந்து தருகிறேன் என்று இஞ்சி மணத்தோடு நான் கொண்டு வந்த தேநீரை மிகவும் ரசித்து அவன் பருகிய விதத்தை ரசித்தேன்..

நான் கண் கொட்டாமல் பார்ப்பதை பார்த்து என்ன என்றான் புருவங்களை கொஞ்சம் உயர்த்தி..

அப்போது தான் நான் அவனையே பார்த்துக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன்.. ஒன்றும் இல்லை..நீ என் காதல் தேநீரை என்னை போல ரசித்து பருகுவதை கொஞ்சம் என்னை மறந்து ரசித்தேன்.. என்றேன் கொஞ்சம் சிரிப்போடு..

ம்ம்..ரசனை எப்போதும் உன்னிடம் குறைவதில்லை நதி என்றான்..

பிறகு கொஞ்ச நேரம் எங்கள் பணிகளை பற்றி பேசிவிட்டு சமூகத்திடம் எங்கள் பார்வை திரும்பியது..

கிருஷ்.. இங்கே இந்த வார இதழை முழுவதும் படித்து விட்டாயா என்றேன் மேசையில் இருந்த அந்த வார இதழை காட்டி..

ஆமாம்.. படித்து விட்டேன் என்றான்..

அதில் ஓர் சிறப்பு கட்டுரை வாசித்தாயா.. அதில் சமீபத்தில் பள்ளியில் ஓர் மாணவி எழுதிய உருக்கமான கடிதத்தை படித்து விட்டு என்னால் கடந்த சில நாட்களாக உறக்கமே இல்லை என்று சொன்னேன்..

ஆம் நதி.. எனக்கும் அந்த கட்டுரையை படித்து விட்டு மனம் கனத்தது என்றான்..

ஏன் இப்படி படித்த மேதைகள் தான் பல தவறுகளை செய்கிறார்கள்.. என்றான்.

அதுவும் கல்வி துறையில் இப்படி அசிங்கங்கள் நடப்பது தான் மிகவும் வேதனையான விசயமாக உள்ளது என்றேன்..

இப்படியான அவலங்களுக்கு ஓர் முடிவே இல்லையா கிருஷ் என்றேன்.

ஏன் இல்லாமல்.. மாணவிகளின் பெற்றோர்கள் தீவிரமாக இந்த விசயத்தை பள்ளி நிர்வாகத்திடம் சென்று கூட்டமாக முறையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கி தர முயற்சி செய்ய வேண்டும்.. பள்ளி பெயர் கெட்டு விடக் கூடாது என்று சுயநலமாக யோசிக்கக் கூடாது..

இங்கே கல்வி கூடம் தொழில் ரீதியாக பார்க்கப்படும் உச்ச கட்டமாக தான் இப்படி எல்லாம் அவலங்கள் நடக்கிறது.. என்றான்.

கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு கிருஷ் என்ன விசயமாக இவ்வளவு காலையில் வந்தாய் என்று சொல்லவே இல்லையே என்றேன்..

சும்மா தான் நதி.. ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது..சரி உன்னிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு போகலாம் என்று வந்தேன் என்றான்..

அப்படியா மகிழ்ச்சி கிருஷ்..

நாளை மீண்டும் அலுவலகம் போக வேண்டும் இல்லையா என்றேன்..

ஆம் நதி.. இந்த தொடர் சுழற்சி ஓர் அலுப்பை ஏற்படுத்துகிறது.. வாழ்க்கை என்றால் இவ்வளவு தானா.. இந்த சுழற்சியில் வாழ்க்கை தொலைந்து விடுமா.. இல்லை நாம் தொலைந்து விடுவோமா என்று தெரியவில்லை என்றான் மிகவும் சோர்வாக..

நான் சிரித்தபடியே அப்படி எல்லாம் இல்லை கிருஷ்.. நாம் எந்த வேலையை தொடர்ந்து செய்தாலும் இப்படி தான் சோர்ந்து போய் விடுவோம்... அதனால் தான் இடை இடையே நமக்கு பிடித்த விசயத்தை செய்துக் கொண்டு மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றேன்.

ம்ம்..நீ சொல்வது சரிதான்..நதி என்றான்..

பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம்..

சரி நதி வா கொஞ்சம் வெளியே காலாற நடந்து வரலாம் என்று எழுந்து வாசல் பக்கம் வந்தான்.. நானும் சரி கிருஷ்.. இதோ போகலாம் என்று வாசல் கதவு சாவியை எடுத்துக் கொண்டு நடந்தேன்..

கதவை பூட்டி விட்டு சாலையில் இறங்கி நடந்தோம்..

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் அவ்வளவு கூட்டம் இல்லை.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் நடந்துக் கொண்டு இருந்தார்கள்.. எட்டு மணிக்கு எவர் எழுந்து விட போகிறார்கள் என்று சாலையும் கிடைத்த இடைவெளியில் மிகவும் அழகாக ஓய்வெடுத்துக் கொண்டது..

நாங்கள் அந்த மனிதர்களின் நெருக்கம் இல்லாத  சாலையில் அந்த பனியை ரசித்து காலாற நடந்தோம்.. வேடிக்கை பார்த்தபடியே..

அங்கே பல பெரியவர்கள் குளிர் தாங்க முடியாமல் வைராக்கியத்தோடு நடந்து கொண்டு இருந்தார்கள்.

கிருஷ் அங்கே பார் எத்தனை பெரியவர்கள் இந்த குளிரிலும் அதை பொருட்படுத்தாமல் நடக்கிறார்கள்.. மிகவும் உற்சாகமாக.. ஆனால் நமது தலைமுறை இன்னும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டு இருக்கிறோம் என்றேன்..

ஆம் நதி.. ஆனால் நமது வாழ்வியல் முறையே மாறி விட்டதே... அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.பெரும்பாலும் இரவில் நிறைய பணிகள் கணினி துறையில் இருப்பவர்களுக்கு..இரவு பணிக்கு செல்பவர்கள் இங்கே அதிகரித்து விட்டது.. அதுவும் இல்லாமல் ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு பணிக்கு செல்பவர்கள் என்று இப்படி.. என்றான்..

அப்படியே அந்த இளங்காலைப் பொழுதை ரசித்தபடியே மிகவும் நிதானமாக நடந்தோம்..

ஏன் கிருஷ் இப்படியே வாழ்வை சுவை இல்லாமல் வாழ்வது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்ற போதும் நடைமுறை வாழ்வில் செலவினங்களை, வாழ்வை எதிர்கொள்ள எத்தனை போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டி உள்ளது இன்றைய மனித இனத்திற்கு என்று கவலைப்பட்டு சொன்னேன்.

ஆமாம் நதி..நமது முன்னோர்கள் எவ்வளவு அழகாக வாழ்வை ரசித்து வாழ்ந்து விட்டு சென்று இருக்கிறார்கள்.. நாம் வாழ்வை பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் வாழ்ந்து சக்கையாக நாட்களை நகர்த்துகிறோம் இல்லையா என்றான்..


ஆமாம் கிருஷ்..தேவைகளை பெருக்கிக் கொண்டே செல்கிறோம்.. ஒரு பக்கம் ஜடபொருட்களை குவித்து குவித்து வைக்கிறோம்..அது தேவையோ இல்லையோ .. எல்லாமே இங்கே இயந்திரத்தனமாக போய் கொண்டு இருக்கிறது இல்லையா.. என்றேன்..

சரி நதி.. பேசிக் கொண்டே நிறைய தூரம் வந்து விட்டோம்..இதோ அருகே தான் பூங்கா உள்ளது.. அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு செல்லலாமா என்றான்..

ஓ..தாராளமாக என்று சொல்லி விட்டு உற்சாகமாக சென்றோம்.

அங்கே உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தோம்.கொஞ்ச நேரம் அமைதியாக அங்கே இங்கும் அங்கும் சுற்றி திரிந்த பறவைகளை ரசித்தோம்.

கிருஷ்.. இங்கே சிறகடித்து பறக்கும் பறவைகளை பார்.. எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது.. நம்மையும் உற்சாகப்படுத்தும் அதன் துடிப்பான சிறகை பார்த்து நமக்கும் உற்சாகமாக இருக்கிறது இல்லையா.. என்றேன்..

ஆமாம் நதி.. அந்த பறவைகள் மட்டுமே எப்போதும் போல தனது இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அன்றில் இருந்து இன்று வரை இருக்கிறது..

ஆனால் நாமோ நமது இயல்பை தொலைத்து வெகு தூரம் வந்து விட்டோம் இல்லையா என்றான்.

ஆம் கிருஷ்.. இந்த மாதிரி மற்ற ஜீவராசிகளை பார்க்கும் போது நாம் வெட்கி தலைகுனிய தான் வேண்டி உள்ளது.. சின்னஞ் சிறு ஜீவராசிகள் கூட வாழ்வை அதன் இயல்பை சிதைக்காமல் வாழும் போது ஆறறிவு உள்ள நாமோ நமது வாழ்வியல் அமிர்தத்தை தொலைத்து விட்டு ஏதோவொரு சுவையை தேடி அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம் என்றேன்..

சரி நதி நாம் கிளம்பலாமா..வெகு நேரம் ஆகிவிட்டது என்றான்.. கிருஷ்.

நதியும் ஆம் கிருஷ்.. இப்படி மிக இயல்பாக பேசி மகிழ்ந்து வாழ்வின் சுவையை நிதானமாக ரசித்து சுவைத்து நாட்களாகி விட்டது..

இன்றைய விடியல் எனக்கு புது உற்சாகத்தை கொடுத்தது என்றேன்..

எனக்கு கூட நதி.. மீண்டும் இதேபோல் ஓர் தருணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

என்றான்..

நாங்கள் அந்த பூங்காவை விட்டு கிளம்பும் போது எங்களை சுற்றி சில பறவைகள் அதன் பாஷையில் ஏதோ பேசி எங்களை வட்டமிட்டது..

நாங்களும் அதை கவனித்து ஒருவரையொருவர் பார்த்து சிறு முறுவல் செய்து கொண்டு அந்த பறவைகளுக்கு கையசைத்து விடை பெறுவதை பார்த்து அந்த பூங்காவில் இருந்த சில மனிதர்கள் கவனித்து எங்களை பார்த்து புன்னகைத்ததை கவனித்து அவர்களுக்கும் கையசைத்து சாலையில் இறங்கி நடந்தோம்..

பூங்காவும், மீண்டும் எங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக மௌனமொழி பேசியது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/01/26.


ஒவ்வொரு கணங்களும் ஒவ்வொரு நிறத்தை ஏந்தி...

 


எத்தனையோ வடிவங்களில்

நீ எனக்கு தரிசனம் கொடுத்தாய்

ஏன் ஒவ்வொரு கணங்களும்

ஒவ்வொரு நிறங்களை

ஏந்தி நிற்கிறது...

என் காட்சி பிழையோ என்று

நினைத்து மயங்கிய போது

நீ ஒரு நாள் மிரள வைக்கும் 

செந்தீ நிறத்தில்

எனக்கு காட்சிக் கொடுத்து

நான் பயந்து நடுங்கி

விலகும் முன்பே

என்னை ஆட்கொண்டு

உன்னுள் கரைத்தாய்...

அங்கே நான் இது நாள் வரை

கண்ட நிறங்கள் 

அத்தனையும் கண்டு

அதிசயித்து நிற்கிறேன்...

நீ ஒரேயொரு புன்னகையுடன்

என் தலை கோதி

உன் பேரன்பில் என்னை

மீண்டும் கரைத்தாய்...

இது தான் பக்தி எனும் 

பேரின்ப நிலையோ

நான் அறியேன்

நடராஜா...

எனக்கு தெரிந்ததெல்லாம்

உன் வசீகரிக்கும் நடனத்தில்

என்னை தொலைப்பதே...

இது தவிர நான் வேறொன்றும்

அறியேன் தியாகேசா....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/01/26.



சனி, 24 ஜனவரி, 2026

காலமும் நானும்...


காலம் என் தோள்

தொட்டு

நான் கொஞ்சம் திரும்புகிறேன்..

என் கன்னங்களில் வழியும்

கண்ணீரை பார்த்து

துடிதுடித்து போய்

என் கண்ணீரை துடைத்து

வாரியணைத்துக் கொண்டது 

அதன் நெஞ்சோடு...

சிறிது நேர அந்த ஆசுவாசப்படுத்தலில்

நான் ஆறுதல் அடைந்து

அதன் அணைப்பில்

இருந்து விலகுகிறேன்..

ஏன் கண்மணி என்றது

விழிகளால்...

ஒன்றும் இல்லை என்று

சிறிது சிரிக்கிறேன்...

என்னிடம் சொல்ல என்ன தயக்கம்...

நான் உன் காதல் அல்லவா என்றது...

ஆம்...அது மாபெரும் உண்மை என்றேன்

அழுகையில் குரல் கம்மியபடியே...

பிறகென்ன என்னிடம் சொல் என்றது காலம்...

ஆறுதலாக என் கைகளை பிணைத்துக் கொண்டு..

என் கண்ணீரால்

நான் எனது அகங்காரம் வலியை கரைத்து

வெளியேற்றுகிறேன்...

வேறொன்றும் இல்லை என்றேன்...

என்ன உன்னிடம் அகங்காரமா என்று

மெல்ல சிரித்தது..

ஆம்.... நான் என்று

நினைக்கும் போது தானே

இத்தனை கண்ணீர் என்றேன்...

காலம் புரிந்துக் கொண்டு

என்னை மேலும் ஆறுதலாக அணைத்துக் கொண்டு

மெல்லமாக சொன்னது...

இதோ அதை நான்

உன்னில் இருந்து

எனக்குள் கடத்திக் கொண்டேன்...

நீ நிம்மதியாக இரு என்றது..

அது சொன்ன அடுத்த நொடி 

நான் இலேசாக உணர்ந்தேன் ...

இங்கே காலத்தை தவிர

என்னை சரியாக புரிந்து கொள்பவர் 

எவர் என்று

நினைத்தபடி...

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

அதெப்படி நீ மட்டும்...

 

எப்படியும் ஏதோவொரு அரிதாரம்

பூசிக் கொண்டு வாழும் வாழ்வு தானே

இதில் எனக்கு பிடித்த கதாபாத்திர

அரிதாரம் பூசிக் கொண்டு

வாழ்வதில் அப்படி என்ன தான்

உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று

கேட்கும் போதெல்லாம்

அதெப்படி நீ மட்டும்...

என்று ஏதேதோ காரணங்களை

சொல்லி இப்படி தான் 

நீ இருக்க வேண்டும் என்று 

மணிக்கணக்கில்

எனக்கு போதித்து

கட்டளையிட்டு 

செல்கிறார்கள் அவர்கள் ....

நானும் அமைதியாக

அவர்கள் போதித்த போதனையை 

பொறுமையாக 

கேட்டுக் கொண்டு 

மீண்டும் 

ஆழ்ந்த அமைதியோடு 

எனக்கான கதாபாத்திர அரிதாரத்தில் 

மூழ்கி விடுகிறேன்...

எந்தவித உறுத்தலும் இல்லாமல்...

இங்கே வாழ்தல் என்ற பெயரில்

வறட்சியான வாழ்தலே

சிறந்த அரிதாரம் என்று

பொருள் கொள்பவர்களை

நானும் வெறுமனே புன்னகைத்தே

கடந்து விட வேண்டியுள்ளது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/01/26.



இதோ யுகம் யுகமாக இந்த பிரபஞ்சத்தில் பயணம்...


இதோ யுகம் யுகமாக 

இந்த பிரபஞ்சத்தில் 

பயணிக்கும்

எனது பயணம் இன்னும் 

முடிந்து விடவில்லை...

அதோ அங்கே எனக்காக யுகம் யுகமாக 

காத்திருக்கும் அமிர்தத்துளிகளை

ஏமாற்றி விட்டு

எனது பயணத்தை முடித்துக் கொண்டால்

அதன் காத்திருப்பிற்கு 

அர்த்தங்கள் இல்லாமல் போவதை 

என்னால் எப்படி அனுமதிக்க முடியும்?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/01/26.

வெள்ளி, 23 ஜனவரி, 2026

ஏதோவொரு சத்தியம் இல்லாத போதை...


ஏதோவொரு சத்தியம் இல்லாத 

போதையில் தான்

இங்கே பெரும்பாலானவர்கள்

ஓடிக் கொண்டு இருக்கிறோம்!

அது சில நாட்களுக்கு பிறகு

பெரும் சலிப்பை

ஏற்படுத்தி விடும் போது தான்

ஏதோவொரு சத்தியம்

சூட்சமத்தில் உள்ளது என்று

தேட முனைவோம்...

அது வரை ஆயிரக் கணக்கான

போதை நிகழ்வுகளை துரத்தி

துரத்தி அலையும் நமது

இயல்பு மாறாது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/01/26.

கணங்களும் நானும்...

 


கணங்களோடு போராடி

தோற்றுக் கொண்டே இருக்கும் 

என்னை பார்த்து

அந்த காலம் முட்டாள் என்று

சிறு கோபத்தோடு

முனகிக் கொண்டே

என்னை கடக்கும் போது

நான் அதன் கோபத்தின்

அதிர்வில் சட்டென

நியாயத்தை உணர்கிறேன்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/01/26.

புதன், 21 ஜனவரி, 2026

இன்றைய தலையங்கம்//தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள்...

 


#இன்றையதலையங்கம்:-

#தேர்தல் #சீர்திருத்தம் #தேவை #இக்கணம்:-

எனக்கு தெரிந்த வரையில் இந்த மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் அதே சமயம் கோடி கணக்கில் சீட்டுக்காக கட்சி தலைமைக்கு பணத்தை கொடுக்காமல் வருபவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு என்று சொன்னால் நிச்சயமாக ஊழல் குறையும்... மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றாமல் விட்டவர்களை எந்த பயமும் இல்லாமல் கேள்வி கேட்கலாம்... மேலும் தேர்தல் கமிஷனே இந்த ஓட்டுக்கு சீட்டு என்ற புரையை சீர்திருத்த கத்தியால் வெட்டி எறிய வேண்டும்..

இதோடு போகட்டும் ஓட்டுக்கு சீட்டு என்ற நடைமுறை...

மக்களும் தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் யோசிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்...

ஆனால் இதை டிஎன்.சேஷன் போன்ற மிகவும் நேர்மையான அதிகாரி இருந்தால் சாத்தியம் தான் என்று தோன்றுகிறது...

துட்டுக்கு ஓட்டு என்பது எங்கே இருந்து துவங்குகிறது என்று நினைக்கிறீர்கள்... இந்த துட்டுக்கு சீட்டு என்ற நடைமுறையில் தான்...

தயவுசெய்து செய்து கோடிக் கணக்கில் செலவு செய்து எம் எல் ஏ சீட் வாங்காதீர்கள் வேட்பாளர்களே!


அது மறைமுகமாக நீங்கள் மக்கள் நலனை திருடும் ஒரு வகையான மோசமான செயல் என்று உணருங்கள்...

மக்களுக்கு சேவை செய்ய எதற்காக துட்டு செலவு செய்து நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டும்?

நீங்கள் துட்டு செலவு செய்து நின்றால் பாதிக்கப்பட போவது மக்களாகிய நாங்கள் தானே...

யோசியுங்கள்...

மக்கள் நிச்சயமாக உங்கள் பக்கம் இருப்பார்கள்...

இது தான் மகேஷன் சேவை என்று ஒரு நொடி யோசித்தீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக கட்சி தலைமையிடம் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனை பலப்படும்...


இங்கே அரசியல் ஆர்வம் மக்கள் நலன் என்று மிகவும் தீவிரமாக அலைபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்...

அவர்களை தேடி கட்சி தலைமை சீட் கொடுக்க வேண்டும்...

எந்த பெரிய கட்சியிடம் காசு இல்லை தற்போது?

அவர்கள் பினாமி பெயரில் உள்ள சொத்துக்களை விற்றாலே எத்தனை வேட்பாளருக்கு செலவு செய்யலாம்...

இது பற்றி யோசியுங்கள்...

இந்த கட்டுரை வாசித்த பிறகு இதை தேர்தல் கமிஷனுக்கு எவரேனும் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்...😉🤭🙌🎉🥲.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/01/26.

#தேர்தல்சீர்திருத்தநடவடிக்கை.

#இன்றைய #தலையங்கம்.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

ஒரு கோப்பை தேநீர் தேவைப்படுகிறது..


அந்த ஒரு மழைக் கால

மாலை நேரம்...

ஒரு கோப்பை 

தேநீர் ஒன்றோடு 

முற்றத்தில் அமர்ந்து

சிறு மிடறாக பருகிக் கொண்டு

இருக்கிறேன்...

விழும் மழைத் துளியை

வேடிக்கை பார்த்தபடி...


எங்கிருந்தோ வந்த குருவி

கீச் கீச்சென்று சத்தமிட்டு

என்னிடம் ஏதோ சொல்ல

நினைத்தது போல

தோன்றியது...

சட்டென்று திரும்பி பார்த்தேன்...

அது நீயும் நானும் சேர்ந்து

அன்றொரு நாள் பேசி சிரித்த

கைப்பிடி சுவரில் அமர்ந்து

என்னை நோக்கி 

சத்தமிட்டுக் கொண்டே

இருந்தது...


நான் மறந்து விடவில்லை

உன்னை...

நீ மறந்து சென்று 

ஆண்டு பலவாகி விட்டது...

இதோ இந்த மழை...

உன்னோடு அன்றொரு நாள்

இதே போல தேநீர் கோப்பை...

இவையெல்லாம்

மறக்க தான்

நான் இங்கே இடம் மாறி

அமர்ந்து தேநீரை மிடறு மிடறாக

பருகி உன் நினைவை

அழிக்க பெரும் முயற்சி

செய்துக் கொண்டு இருக்கிறேன்...

மீண்டும் இங்கேயும் 

சூட்சம உருவெடுத்து வந்து

என்னை நீ துன்புறுத்தி

ரசிக்காதே காதலே...


நான் இங்கே இந்த பிரபஞ்சத்தின்

ஒரு துளியாக கரைந்து

ஒன்றும் இல்லாமல் ஆகும் வரை

வாழ்ந்து தானே ஆக வேண்டும்...


அந்த வாழ்தலில் 

இதோ இங்கே

ஏதோ சில நாட்களில் 

பெய்யும் மழை

உன் நினைவுகளை 

பெரும் வெள்ளமாக 

அடித்துச் சென்று விடும்

காலத்திற்காக தான்

பெரும் ஏக்கம் கொண்டு

ஒரு கோப்பை தேநீர் கோப்பை

துணை எனக்கு தேவைப்படுகிறது...


நீ சற்றே என் நினைவில் இருந்து

விலகி நிற்பாயா...

நான் கொஞ்சம் என்னை

சற்றே நிலைநிறுத்திக் கொள்கிறேன்..


இதோ இந்த கோப்பை தேநீர்

இப்போதும் என்னை

நேசித்துக் கொண்டே

இருக்கிறது...

உன்னை போல கருணை இல்லாமல்

விலகி செல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/01/26.
















நானும் தனிமையும் உரையாடலை தொடங்கிய போது..


அந்த அசாதாரண நிகழ்வொன்றில்

நானும் தனிமையும்

பேசாமல் பேசிக் கொள்கிறோம்...

எவ்வளவு நேரம் கணக்கில்லை...

காலம் தான் தொணதொணவென பேசி

எங்களை ஒரு நிகழ் கால 

உணர்வு நிலைக்கு

கொண்டு வந்தது...

நாங்கள் பிரிய மனமில்லாமல் 

பிரிந்து செல்கிறோம்...

அங்கே ஒரு கூட்டம்

என்னை பார்த்து

ஹோவென சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறது...

ஏன் இவ்வளவு நேரம் என்று...

நானும் அமைதியும்

பேசாமல் பேசி மகிழ்ந்த ரகசியத்தை

சொல்ல தோன்றாமல்

ஒரு மெல்லிய சிரிப்புடன்

அவர்களோடு கலக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

இங்கே எனக்கு இயல்பென இருப்பது அவர்களுக்கு இயல்பில்லை..


சாதாரணமாக வாழ

உனக்கென்ன கஷ்டம்

என்று என்னை சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறார்கள்...

எனக்கு அசாதாரணத்தை தவிர 

வேறு எப்படியும்

வாழ தெரியாது என்கிறேன் நான்..

இங்கே எனக்கு இயல்பென

இருப்பது அவர்களுக்கு

இயல்பில்லை...

இங்கே ஒரே நிகழ்வு

பல பேருக்கு பல வகைகளில் காட்சி

தருவது யாருடைய பிழை?

பதில் இங்கே வெறும் ஆழ்ந்த 

அமைதி மட்டுமே...

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த காற்றினூடே கலந்த நேசத்தின் வாசம்...


நனைக்கும் 

மழைத்துளியொன்றின்

ஈரத்தில் ....

உன் பேரன்பு மட்டுமே தனித்து 

என்னை குளிர்விக்கிறது...

அந்த குளிரின் தன்மை

நீடித்து இருக்கக் கூடாதா என்று 

ஏங்கி தவிக்கும்

மனதை கொஞ்சம் அமைதிப்படுத்தி 

செல்கிறது....

அந்த காற்றினூடே கலந்த

உன் நேசத்தின் வாசம்...

#இளையவேணிகிருஷ்ணா.

காதலும் ஜென்நிலையும்...


உனக்கு காதல்

இயல்பில்லை என்று

சொல்கிறது மனது...

ஆம்... இயல்பில்லை தான்..

என்கிறேன் நான்...

பிறகெப்படி காதல் கவிதை

என்று கேட்கிறது...

அது ஒரு ஜென் நிலை என்கிறேன் நான்...

என்ன குழப்புகிறாய்

என்றது மனது...

ஆம் நீ கொஞ்சம் அமைதியாக 

விலகி இரு..

நான் தற்போது அந்த ஜென் நிலையில்

நான் தொலைத்த 

அந்த காதல் நிலையை

தற்போது உணர்ந்துக் கொள்கிறேன் 

என்றேன் நான்...

மனதோ சரியான பைத்தியமோ என்று

கொஞ்சம் என்னை பார்த்து

மிரட்சியோடு விலகி செல்கிறது...

இப்போது முழுமையாக 

உணர்கிறேன் நான்

அந்த ஜென் நிலையை...

#காதலும்ஜென்னும்.

#இளையவேணிகிருஷ்ணா.

அத்தனையும் துறந்து விடு என்கிறார்கள் அங்கே...நானோ


அத்தனையும்

துறந்து விடு

துறந்து விடு என்கிறார்கள்

அங்கே...

நானோ வெற்று பாத்திரம் கூட 

இல்லாமல் சுற்றுகிறேன்...

என் ஊண் உடம்பை பற்றிய

நினைவுகள் கூட

பாரமென உணர்வற்று

திரிகிறேன்...

என்னை பார்த்து

அத்தனையும் துறந்து விடு

என்கிறார்கள் அங்கே...

எதை என்று

யோசிக்கும் போதே

புரிகிறது...

இதைத் தான் என்று...

#தத்துவகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 19 ஜனவரி, 2026

காணொளி மோகம் மெல்ல தின்று தீர்க்கும் நஞ்சு...


தேவையில்லாத காணொளிக்கு லைக் மற்றும் கமெண்ட் மற்றும் பகிர்தல் போன்ற விஷயங்களை தயவுசெய்து செய்யாதீர்கள்.. அவர்களுக்கு சமூக வலைத்தள போதையை ஏற்றாதீர்கள்! ஒரு காணொளி ஒரு கபடமற்ற உயிரை மாய்த்து இருக்கிறது...

எதை எடுத்தாலும் பெண் சுதந்திரம் என்ற எல்லைக்குள் அடைக்காதீர்கள்!அது தான் சில வக்கிரம் பிடித்த பெண்களுக்கு வசதியாக போய் விடுகிறது...


ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நீதி தான் இங்கே ...

ஆனால் தற்போது பெண்களை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் பல பெண்கள் தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஆதாயம் காண்கிறார்கள்...

தயவுசெய்து மனிதர்களாக பிறந்த நாம் சில ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்...

பேருந்தில் எந்த பெண் காணொளி எடுத்து நமது குடும்பத்திற்கு உலை வைப்பாளோ என்று நல்ல பல ஆண்களை நினைக்க வைத்து விடக்கூடாது...

அந்த பெண்ணின் காணொளி மோகம் தான் இதற்கு காரணம்... எவ்வளவு அலங்கோலமான சமுதாயத்தில் வாழ்கிறோம்... காணொளி மோகம் அதனால் கிடைக்கும் போலியான அடையாளம்..இவை எல்லாம் சமுதாயத்தை மெல்ல தின்று தீர்க்கும் நஞ்சு...

இது ஆரோக்கியமான விஷயம் இல்லை...

#காணொளியும்கபடமும்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/01/26.

புதன், 7 ஜனவரி, 2026

பேரமைதிக் கொண்ட இரவின் நிழலில்...

 


பேரமைதி கொண்ட இரவின் நிழலில்

அங்கே இருஜோடி காதல் பறவைகள்

உறக்கம் பிடிக்காமல்

ஏதேதோ கதை பேசி

என் அறையின் கதவை தட்டி 

என்னை எழுப்பும் வேளையில்

உன் நினைவு மீண்டும் துளிர்த்து

கண்களில் கண்ணீரோடு

உறக்கம் வராமல்

நீயும் நானும்

அன்றொரு நாள்

இப்படி கதை பேசி

கழித்த இரவுகள்

எத்தனை எத்தனை

என்று வியந்து 

மீண்டும் கண்களில் கண்ணீரோடு

ஏங்கி

அந்த பறவைகள்

பிரியாதிருக்க

நீண்ட பிரார்த்தனை 

செய்துக் கொள்கிறேன்...

இங்கே பேரன்பும்

சில இரவுகளால்

களவாடப்படக் கூடும் என்ற அனுபவத்தால்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/01/26.

நேரம் இரவு படர்ந்த வேளையில் 10:23

புதன்கிழமை.

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...