ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 ஜூலை, 2018

நிபந்தனை

அன்புடையீர் வணக்கம்.
         நாம் இப்போது பார்க்க இருப்பது நிபந்தனை. என்ன நினைக்கிறீர்கள் நிபந்தனையை பற்றி. நான் உங்களுக்கு இதை பற்றி விளக்க வேண்டிய நிபந்தனை. ஆம் நேயர்களே. நாம் அனைவரும் ஏதோவொரு கண்ணுக்கு தெரியாத தெரிந்த நிபந்தனைகளால் கட்டுப்பட்டு இருக்கிறோம். ஒருசிலர் அதை உணர்கிறோம். ஒருசிலர் அதை உணராமலே கடக்கிறோம்.
          நாம் இப்போது பயன்படுத்தும் கைபேசியில் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே பயன்படுத்துகிறோம்.இந்த கைபேசியில் எத்தனை பேர் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஒழுங்காக படித்து ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதே பல மில்லியன் டாலர்கள் கேள்வி. ஆனால் நாம் எதையும் கண்டு கொள்ளாமல் தற்போதைக்கு அதன் பயன்பாடு கிடைத்தால் போதும் என்றே மனதளவில் நினைத்து படிக்காமல் நிபந்தனை ஏற்றுக்கொண்டு பல இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறோம்.
      சரி.நாம் மற்ற நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். நாம் திருமணத்தின்போது ஒருவரை பந்தத்துக்குள் இணைத்தஇணைத்துக்கொள்ள சாஸ்திரம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொள்கிறோம்.ஆனால் அந்த சாஸ்திரம் சொன்னதை புரிந்து தான் ஒப்பு கொள்கிறோமா என்று கேட்டால் கேள்விக்குறிதான்.
      ஏன் என்றால் நாம் மந்திரங்களை புரிந்து சொல்வது இல்லை. சமஸ்கிருத மந்திரத்தை யாரோவொருவர் ஓத நாம் அதை வழிமொழிகிறோம்.அது என்ன என்று தெரியாமலே.அதனால் வாழ்க்கை பந்தத்தில் நுழைவதற்கு முன்னால் நீங்கள் அந்த பந்தத்தின் நிபந்தனைகள் என்ன என்று நன்கு கற்று அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பிறகு நுழைந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை மதித்து நடப்பீர்கள்.ஏனெனில் ஆயிரம் விசயங்களை அந்த மந்திரங்கள் நமக்கு சொல்கிறது.அதை உங்கள் மொழியில் நீங்கள் தெரிந்து பிறகு திருமண பந்தத்தில் இணையலாமே.அப்போது எந்தவித பிணக்கும் தம்பதிக்குள் வர சாத்தியமே இல்லை.
                 மற்றொரு விசயம் என்னவென்றால் நீங்கள் முதலீடு செய்வது.ஒரு திட்டத்தில் அதாவது சேமிப்பு திட்டத்தில் நுழைகிறீர்கள் என்றால் நீங்கள் அவர்கள் கொடுத்த நிபந்தனைகளை படிக்காமல் தயவுசெய்து கையெழுத்து பௌடாதீர்கள்.அது உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும்.குருவிப்போல மக்கள் சேர்த்த பணங்களை மக்கள் இழப்பது எதனால் என்று சிந்தித்தீர்களா.அவர்கள் எல்லாம் அந்த நிபந்தனைகளை படிக்காமல் கையெழுத்து போட்டவர்களே.இதில் நன்கு படித்த மேதாவிகளும் அடங்குவர். ஏனெனில் அவர்கள் ஓடுவதற்கு மட்டுமே நேரத்தை ஒதுக்குபவர்கள்.அந்த ஓட்டத்தால் பெற்ற பயனை பாதுக்காக்க தெரியாமல் அடுத்தவர்கள் அனுபவிக்க விடும் மேதாவிகள்.
              நிபந்தனைகள் இப்படி தான் நம்மை வாழ்க்கையின் எல்லா மூலையில் இருந்தும் துரத்தி கொண்டே இருக்கும். நாம் அந்த நிபந்தனைகளை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு தான் நஷ்டம். வாழ்க்கை என்பது இப்போது எல்லா நிலைகளிலும் நிபந்தனைகளால் ஆக்கப்பட்டது.நாம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருந்தால் எப்போதும் ஆனந்தம் தான். இல்லை என்றால் அழுகைதான்.நாம் நமது பேராசையை விடுத்து ந்தமான வாழ்க்கை வாழ முற்பட வேண்டும். என்ன நேயர்களே சரிதானே.

நிலையாமை

அன்புடையீர் வணக்கம்.
                   இன்று நாம் பார்க்க இருப்பது நிலையாமை.ஆம். எதுவும் நிலையில்லை என்று தெரிந்தும் நாம் எல்லாவற்றின் மீதும் ஆசைப்படுகிறோம்.என்ன ஒரு விந்தை.பொதுவாகவே ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. எதை கொண்டு வந்தோம் ஏன் இவ்வளவு ஆசைப்படுகிறோம் என்று. ஆனால் அதை வாய்சவடாலாக மட்டும் பேசிவிட்டு செயலில் காட்ட மறுக்கிறோம்.
           நாம் இந்த மண்ணில் பிறந்து விட்டோம். ஏதோவொரு காரியத்தை சாதிப்பதற்கே நாம் இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வந்த வேலையை மறந்து விட்டு வேறு வேலையில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறோம். இதை கிராமத்தில் கூட விளையாட்டாக சொல்வார்கள். ஒருவனிடம் ஒரு வேலையை கொடுத்து விட்டு அவன் சம்பந்தப்பட்ட அந்த வேலையை செய்யாமல் வேறு வேலையில் ஈடுபட்டால் ஒன்று கிடக்க ஒன்று ஏன் செய்கிறான் என்று கேள்வி கேட்பார்கள். அதைத்தான் நாம் இப்போது பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
        இறைவன் நம்மை ஒரு வேலைக்கு கணக்கிட்டு அனுப்ப நாமோ அவர் இட்ட வேலையை விடுத்து வேறு வேலையில் மும்முரமாக செய்து கொண்டு இருக்கிறோம். நாம் பிறந்தது முதல் நமக்காக ஆயிரம் வேலைகள் கடமைகள் இங்கு உள்ளது. நாம் கல்வியை கற்று சம்பாதிப்பது மட்டுமே கடமை என்று நினைக்கிறோம்.
     எதையும் பணத்தால் அளவிடுகிறோம்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம்.நான் இப்படி நம்புபவர்களிடம் ஓன்றை கேட்கிறேன்.பணத்தால் ஆத்ம ஞானத்தை விலைக்கு வாங்க முடியுமா?.இந்த ஒரே கேள்வியில் அத்தனை பேர்களும் அடித்து வீழ்த்தப்படுவீர்கள்.இந்த கேள்வி ஏன் எனில் கண்டிப்பாக முடியாது என்று தெரிந்தும் ஏன் இறுதி வரை அதன் பின்னாலே மட்டும் நாம் போக வேண்டும். இதுதான் என் கேள்வி.
         மனிதர்களே ஒன்றை நான் உங்களிடம் நிச்சயமாக சொல்ல முடியும். நீங்கள் பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்தால் அதற்காக எதையும் இழக்க தயாரானால் நீங்கள் இந்த பிறவி எடுத்ததே வீண். மாறாக நீங்கள் இந்த பிறவியை வீணடிக்கிறீர்கள்.
           நீங்கள் சேர்த்து வைத்த சொத்தை பிரித்து செல்வதற்கு உங்கள் பிள்ளைகள் கண்கொத்தி பாம்பாக இருக்கிறார்கள். உங்கள் உறவுகள் உங்கள் முன்னேற்றத்தை நினைத்து வயிறு எரிந்து சாகிறார்கள்.உங்கள் நண்பர்கள் அதாவது மோசமான நண்பர்கள் உங்கள் வீழ்ச்சியை நினைத்து பாய்விரித்து காத்திருக்கிறார்கள்.உங்கள் மனைவி நீங்கள் அவர் கேட்பதை வாங்கி வாங்கி தரும் வரை மட்டுமே உங்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
          இத்தனை விசயங்கள் இருந்தும் போலியான மனிதர்கள் இருந்தும் ஏன் நீங்கள் இந்த மாயை பின்னால் ஓடுகிறீர்கள்?.இறப்பதற்கு முன்னால் உங்கள் ஆன்மா கடைத்தேற ஏன் ஒரு சிறுஅடி கூட எடுத்து வைக்கவும் மாட்டேன் என்கிறீர்கள்?
                  நீங்கள் எத்தனை விதமான சொத்துக்கள் சம்பாதித்தாலும் அவற்றிலிருந்து எவ்வளவு தூரம் ஆடம்பரமாக அனுபவித்தாலும் ஒன்றும் உங்கள் பின்னால் வரப்போவது இல்லை. அத்தனையும் அழிவுக்குரியது.அழிவுக்கு உரியதன் மேல் இவ்வளவு பற்று உள்ள உங்களுக்கு அழியாத ஆன்மா மேல் ஏன் பற்று வரவில்லை. இங்கே தான் மாயாசக்தி அவள் பிடியில் உங்களை வைத்திருக்கிறாள்.
           மாயாசக்தியின் கைப்பிடியில் இருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். நிலையாமையை பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மாயை நீங்கள் உள்ளது உள்ளபடி உணர்ந்து கொண்டால் நீங்கள் ஆன்மாவை நோக்கி முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்.
        ஆத்மஞானத்தை நீங்கள் அடைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்ததற்கான அறிகுறிகள் தான். ஆத்மஞானத்தை அடைந்தால் நிச்சயமாக உங்களாலும் ஆனந்தமான வாழ்க்கை வாழமுடியும். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.

திங்கள், 30 ஜூலை, 2018

ஆறுதல்

அன்புடையீர் வணக்கம்.
               இன்று நாம் பார்க்க இருப்பது ஆறுதல் பற்றி. ஆம். நாம் வாழும் இந்த கலியுகத்தில் எதையோ தேடிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறோமே தவிர நாம் அந்த ஓடுதலில் என்ன கற்றுக்கொண்டோம் என்பதில் இருக்கிறது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம். இதை நான் சொல்வதால் நான் ஓடுவதை தவறு என்று சொல்லமாட்டேன்.ஓடுவது தான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.ஆனால் ஓடும் போது நாம் அருகில் இருப்பவர்களையும் அரவணைத்து ஓட வேண்டும். இதுதான் வாழ்க்கை ஓட்டம்.
              அதைவிடுத்து ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப்போல வெறிப்பிடித்தவர்களைப்போல ஓடுவதால் தான் பிரச்சினை. இந்த ஓட்டம் என்பது நமது வாழ்க்கை மிக அழகாக வாழ்வதற்கு. அந்த ஓட்டம் என்பது விளையாட்டு. அதில் போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி  அந்தந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் இந்த ஓட்டத்தில் வெற்றி என்பது தனிமனிதனின் வெற்றியை சார்ந்தது அல்ல. இது சமுதாய வெற்றியை சார்ந்தது.
               இந்த ஓட்டத்தில் நாம் மட்டும் தனித்து ஓடி வெற்றி பெறுவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக மற்றவர்களை அரவணைக்க மறந்ததால் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து தற்கொலதற்கொலைக்கு கூட நம்மையும் அறியாமல் தூண்டி விடுகிறோம்.
                நாம் ஓடும் திறமை அதிகமாக பெற்றிருந்தாலும் நாம் மனிதாபிமானத்தை இழந்து விடக்கூடாது. வெற்றி பெறாதவர்களை குற்றவாளிகள் போல பார்க்காமல் அவர்களுக்கு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும். மிகவும் பொறுமையாக காத்திருந்து அவர்களை ஆதரவாக கைபிடித்து அழைத்து செல்ல வேண்டும்.
           இன்றைய சூழலில் பிறந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவருக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது.அதுவும் நமது முட்டாள்த்தனமான ஓட்டத்தால் நாம் மற்றவர்களை அதாவது கொஞ்சம் பலவீனமாக இருப்பவர்களை பயமுறுத்தும் காரியத்தையே செய்து கொண்டு இருக்கிறோம்.இதனால் அவர்கள் மிகவும் மனம் தளர்ச்சி அடைகிறார்கள்.
        தளர்ச்சி அடைந்தவர்களை பார்த்து நாம் கேலியாக சிரிக்கிறோம்.நீ எல்லாம் இந்த உலகத்தில் வாழவே தகுதி இல்லை என்று மிரள வைக்கிறோம். அவர்கள் ஏற்கனவே பயந்து போய் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பங்குக்கு கூட கொஞ்சம் மிரள வைக்கிறீர்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது.
            எந்த மனிதனும் முட்டாள் இல்லை. சிலபேர் மிக குறைந்த காலத்தில் புரிந்து கொண்டு முன்னேறுகிறார்கள்.இன்னும் சிலபேர் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.அவ்வளவு தான். கால இடைவெளி தான் வித்தியாசம் இங்கே. அதனால் நீங்கள் அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறி அழைத்து செல்வது உங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும்.
         இன்றைய உலகில் ஆறுதலை தேடி அலைபவர்களை புறக்கணித்தால் நாமும் ஒருநாள் அப்படி தான் வேறு யாரோ ஒருவரால் புறக்கணிக்கப்படுவோம்.இன்றைய தேவை மனிதர்களுக்கு ஆறுதலான வார்த்தை மற்றும் அதனால் ஏற்படும் உற்சாகம் மட்டுமே.
      இதைக்கொடுப்பதால் நாம் ஒன்றும் குறைந்து விடமாட்டோம்.மாறாக நமது உள்ளத்திலும் ஒரு உற்சாக அலை ஊற்றெடுக்கும். அப்போது நாமும் ஆனந்தமாக இருப்போம். மற்றவர்களும் ஆனந்தமாக இருப்பார்கள். என்ன நேயர்களே நீங்கள் இப்போது எங்கே கிளம்பி விட்டீர்கள்.ஓ ..ஆறுதல் தேடுபவர்களை தேற்றவா.நல்லது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

சஞ்சலங்கள்

அன்பர்களே வணக்கம்.
         இன்று நாம் பார்க்க இருப்பது சஞ்சலங்கள். நம் மனது எப்போதும் எதையோ நினைத்து நினைத்து சஞ்சலம் அடைவது இயல்பு தான். ஆனால் சஞ்சலங்களை நாம் கையாளும் விதத்தில் உள்ளது அது நிரந்தரமாக நம்மிடம் தங்கிவிடுவது இல்லை போய்விடலாமா என்று சஞ்சலங்கள் தீர்மானிப்பது நம் முடிவை பொறுத்துதான்.
         அதனால் நாம் சஞ்சலங்களை நாம் நினைத்து ஒரு மூலையில் உட்கார்ந்து விடக்கூடாது. அதை நம் மனதில் இருந்து விரட்டி அடிப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அது எப்படி என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.ஏனெனில் நாம் அனைவரும் சஞ்சலங்களால் ஏதோவொரு தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களே.
               சரி நான் சொல்வதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். முதலில் நாம் சஞ்சலப்படும் விசயங்களை பற்றி தெளிவாக நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும். எந்த விசயத்தில் சஞ்சலம் ஏற்படுகிறதோ அதை நாம் தீர ஆராய வேண்டும். நாம் போகும் பாதை சரிதானா என்று ஆராய வேண்டும். சரிதான் என்று உணர்ந்தால் நாம் நம் சஞ்சலங்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு நமது வேலையில் ஈடுபட வேண்டும். ஏனெனில் தடைகள் சஞ்சலங்கள் ரூபத்தில் கூட வரும்.
            மற்றொன்று சஞ்சலங்கள் மற்றவர்களால் வருவது.அது எப்படி என்றால் நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டு இருக்கும் போது மற்றவர்கள் கருத்து கந்தசாமிகளாகி கருத்து சொல்கிறேன் என்று குழப்பி விடுவார்கள். தெளிவாக ஒரு முடிவை எடுத்த பிறகு அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம். மிகவும் நல்ல யோசனையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செயல்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பட்ஜெட்டில் சிறிய மாற்றத்தை தந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்.இல்லை என்றால் அதை ஒரு பக்கம் தூக்கி வைத்துவிட்டு நீங்கள் தெளிவான உங்கள் பாதையில் பயணம் செய்யுங்கள்.
             ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு முன்னால் நமக்கு எவ்வளவோ சஞ்சலங்கள் நம்மை மோதி நம்மை ஒரு கைபார்த்து விடும். இது அனுபவ உண்மை. ஆனால் நாம் இந்த சஞ்சலங்களை நமது மனோவலிமையால் அடக்கி ஆள வேண்டும். சஞ்சலங்கள் எப்போதும் நம்மை ஆளவிடக்கூடாது.
          நம்மில் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் என்ன என்றால் ஒரு காரியத்தை அவசரம் அவசரமாக  ஆரம்பித்து விட்டு பிறகு மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்பது.நமது திருவள்ளுவர் சொல்வது போல தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுரவும் தீரா இடும்பை தரும். அதனால் ஒரு செயலை ஆரம்பிக்கும் முன் ஆயிரத்தெட்டு முறை ஆராயுங்கள்.ஆனால் முடிவு எடுத்தபின் சஞ்சலங்களுக்கு இடம் அளிக்காதீர்கள்.
         ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போதும் திடசித்தம் இருக்க வேண்டும் அதாவது திடமான மனம். எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற மனோபாவம் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் எடுத்த காரியத்தை முடிக்க முடியும்.
          அதைவிடுத்து நாம் சஞ்சலங்களுக்கு நமது மனதில் இடம் அளித்து விட்டால் நாம் அதோகதிதான். நமது வெற்றியும் தோல்வியும் நாம் சஞ்சலங்களை எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது.
         அதனால் நாம் சஞ்சலங்களை ஒரு கைபார்த்து வாழ்க்கையில் ஆனந்தமாக வாழ முயற்சி செய்வோமாக.

ஞாயிறு, 29 ஜூலை, 2018

தவறுகள்

அன்புடையீர் வணக்கம்.
       இப்போது நாம் பார்க்க இருப்பது தவறுகள். நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் தவறுகள் செய்வது இயல்பான ஒன்று தான்.ஆனால் லவறுகளை திருத்திக்கொள்ளாமல் இருப்பது தான் தவறு.
       ஒரு செயலை செய்கிறோம். அதில் ஏதோ தவறு ஏற்பட்டால் அதை நாம் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மீண்டும் நிகழாதவாறு நாம் பார்த்து கொள்ள வேண்டும்.
இன்னொரு விசயம் என்னவென்றால் நாம் வெற்றி பெறும் போது நமது வெற்றிகளை மட்டுமே பொது இடங்களில் வெளிப்படுத்துகிறோம்.ஆனால் அது தவறானது .உண்மையிலேயே நாம் ஒருவரை முன்னேற்ற நினைத்தால் நமது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்களை தவறுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் நாம் பிறருக்கு செய்யும் மகாபெரிய வழிகாட்டி.
       அதைவிடுத்து நாம் சரியாக நமது விளக்கத்தை பகிராமல் போனால் நாம் சமுதாயத்திற்கு மறைமுகமாக வஞ்சித்ததாகவே அர்த்தம். ஒரு விசயம் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த வெற்றியும் தவறுகள் இல்லாமல் பெறப்படுவது இல்லை.
          உங்கள் குழந்தைகள் நடக்க பழகும் போது எத்தனை முறை விழுந்து விழுந்து தானே எழுகிறது. நீங்களும் உங்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது அவர்கள் குறைகளை சுட்டி காட்டி சுட்டி காட்டி நோகடிக்காதீர்கள்.மாறாக அவர்கள் குழந்தையாக இருந்தபோது எத்தனை முறை விழுந்து விழுந்து தான் எழுந்தாய்.கவலைப்படாதே.தவறுகள் நிரந்தரம் இல்லை என்று சொல்லி புரியவையுங்கள்.
        அதைவிடுத்து பக்கத்துவீட்டு பிள்ளையோடு அவர்களை ஒப்பிட்டு நீ ஏன் இதை செய்வதற்கு இவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறாய்.அவனை பார்.கற்பூரப்புத்தி அவனுக்கு. நீயும் தான் இருக்கிறாயே.எப்போது பார்த்தாலும் ஏதாவது தவறு செய்து கொண்டு இருக்கிறாய்.நீ ஒரு முட்டாள். நீ எதற்கும் லாயக்கில்லாதவன் என்று சொல்லி கொண்டே இருந்தால் அந்த வார்த்தைகள் அவன் காதில் அடிக்கடி விழுந்து அது அவனையும் அறியாமல் மனதின் ஆழத்தில் பதிந்து அவன் திறமையை செயல்திறனை குறைக்கிறது.
          எல்லா பிள்ளைகளும் ஓரே வகையான திறன் உடையவர்கள் இல்லை. இதை நீங்கள் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகளின் செயல்திறனை வளர்ப்பதை விடுத்து மாறாக இருக்கும் செயல்திறனை குறைக்கும் வேலையில் நீங்கள் இறங்கக்கூடாது.
           பெற்றோர்களே நீங்கள் தவறுகள் செய்யாமல் எந்த விசயத்தையும் சாதித்து விடவில்லை. இன்னும் சொல்ல போனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் தவறுகளை அடிக்கடி சுட்டிக்காட்டி குத்தி காட்டாமல் ஊக்கம் தரும் வார்த்தைகளை தர வேண்டும். ஊக்கம் தரும் வார்த்தைகளை தராவிட்டாலும் பரவாயில்லை.மனதை காயப்படுத்தாமல் இருங்கள் போதும். அவன் அவன் தவறை உணர்ந்து திருத்தி கொண்டு முன்னேறிசெல்வான்.
      எதிர்காலத்தை எல்லா குழந்தைகளுமே ஏதோவொரு கனவோடுதான் எதிர்கொள்கிறார்கள்.அவர்கள் கனவிற்கு துணை நின்று அவர்கள் தவறுகள் செய்யும் போது ஒரு தோழனை போல இருந்து திருத்தி கொள்ள உதவுங்கள். உங்கள் குழந்தைகளை ஆனந்தமாக அவர்கள் இலட்சியத்தை சாதிக்க விடுங்கள். நீங்களும் அவர்கள் சாதனைகளில் பங்கு கொண்டு ஆனந்தமாக இருங்கள். ஆனந்தம் என்பது ஒவ்வொரு சின்னச்சின்ன விசயத்திலும் உள்ளது. வாழ்த்துக்கள்.

வைராக்கியம்

அன்புடையீர் வணக்கம்.
   இன்று நாம் பார்க்க இருப்பது வைராக்கியம்.இன்றைய வாழ்வில் மக்களுக்கு தேவையான ஒன்று.தேடினாலும் கிடைக்காது. இன்றைய சமுதாயம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் பலருக்கும் திகைப்பாகத்தான் இருக்கிறது.
      அது சரி.நாம் நமது தலைப்பின் பொருளை அறிந்துக்கொள்வோம்.முதலில் வைராக்கியம் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டு பாருங்கள். பலரும் பலவிதங்களில் சொல்வார்கள். ஆனால் அதன் உண்மை தன்மையை சொல்பவர்கள் மிகவும் சிலரே.
          வைராக்கியம் என்றால் பலரும் பிடிவாதத்தை அதனோடு சேர்த்து பொருள் சொல்கிறார்கள்.அது அல்ல வைராக்கியம் என்பது.வைராக்கியம் என்னும் அழகான பழக்கத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். வைராக்கியம் என்பது பலரும் நினைப்பது போல பிடிவாதம் இல்லை. அதை முதலில் நீங்கள் மனதில் பதிய வையுங்கள்.
         இன்றைய இளைஞர்கள் தன்மானம் மிக்கவர்களாக பலரும் இருப்பது நல்ல விசயமே.ஆனால் மிக சிலபேர் தன்மானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு முதலில் ஒழுக்கத்தில் வைராக்கியம் வேண்டும். நல்ல ஒழுக்கத்தை விட்டு எந்த சூழலிலும் விலக மாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்க வேண்டும்.
     நல்ல ஒழுக்கத்தை எந்த சூழலிலும் விடாமல் கடைப்பிடித்தால் வரும் நன்மைகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிறுவயதில் இருந்து அந்த பழக்கத்தை நாம் வலியுறுத்தி இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல அழகாக நடைப்போடும்.எந்த வித இடையூறுகளும் அவர்களை நெருங்காதவாறு அவர்கள் வைராக்கியம் அவர்களை பாதுகாக்கும்.
       ஒருவன் எந்த சூழலிலும் சத்தியத்தை விடாமல் பின்பற்றினால் நம் சமுதாயம் எவ்வளவு அழகாக இருக்கும். நினைக்கவே நன்றாக உள்ளது. இதை நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் முக்கியமாக அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். நம் சமுதாயம் ஊழலுக்கு விலைபோகாத சமூகமாக இருக்கும்.
         மற்றொன்று இன்பம் துன்பம் இரண்டிலும் சமமாக இருக்கும் பண்புகள் நம்மிடம் இருந்தால் சமமாக பாவிக்கும் மனப்பான்மை இருந்தால் நாம் நிம்மதியாக இருப்போம். அதற்கு நம் மனதில் வைராக்கியத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டால் தான் இயலும். இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பான்மை வைராக்கியம் கொண்டவர்களுக்கே வரும்.
       மேலும் இந்த உலகம் மாயை.அதன் மாயையில் நாம் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கை படகை மிகவும் நிதானமாக செலுத்த பழக வேண்டும். இந்த உலகத்தின் மேல் நாம் எந்தவித பற்றுதலையும் வைக்காமல் இருக்க வைராக்கியத்தை நாம் துணைக்கொள்ள வேண்டும்.
          நமது வாழ்க்கை தேவைகளை குறைத்து கொள்வதில் நமக்கு மிகவும் தேவையான ஒரு பண்பு வைராக்கியம்.ஆனால் இன்றைய இளைஞர்கள் பலர் கற்பனை வளர்த்து கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள்.இப்படி வாழ்வதற்கு அதாவது தேவைகளைக் குறைத்து வாழ நிறைய வைராக்கியம் வேண்டும்.
     இன்றைய வாழ்க்கையில் நல்ல பல பண்புகள் வளர வைராக்கியம் என்கிற பண்பு மிகவும் அவசியம் ஆகிறது.அதனால் நமது குழந்தைகளை பொருள்களுக்கு அடிமைப்படுத்தாமல் அதிலிருந்து விலகி இருப்பதற்கான வைராக்கியத்தை வளர்க்க நாம் துணை நிற்போம். அதாவது தேவைக்கு மட்டும் பொருட்களை பயன்படுத்த அனுமதி அளிப்போம்.
    என்ன நேயர்களே நான் சொல்வதை நீங்களும் கடைப்பிடித்து உங்கள் குழந்தைகளையும் கடைபிடிக்க வைத்து ஆனந்தமாக வாழ்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 

புதன், 25 ஜூலை, 2018

தூண்டுதல்

அன்பர்களே வணக்கம்.
     இப்போது நாம் பார்க்க இருப்பது தூண்டுதல். தூண்டுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று.சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூண்டுதல் இருந்தால் தான் எந்த காரியத்தையும் சாதிக்க முடியும். இந்த வகையில் நாம் மற்றவர்களை எந்தளவு உற்சாகப்படுத்துகிறோமோ அந்தளவுக்கு உற்சாகப்படுத்த வேண்டும்.
         ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் ஏதோவொரு காரணத்திற்காக சோர்ந்து தான் போகிறாரபோகிறார்கள்.அப்போது அவர்கள் அருகில் உற்சாகம் நிறைந்தவர்கள் இருந்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் அப்போது தான் பலபேர் அவர்களை தூற்றுவார்கள். மேலும் அவனை நான் இப்படி செய்ய வேண்டாம் என்று சொன்னேன் கேட்டானா என்பார்கள். மேலும் முன்னாடி எப்போதோ தெரியாமல் அவர்களை மோசமாக பேசியிருந்தாலோ அல்லது மன்னிப்பு கேட்டிருந்தாலும் இந்த தருணத்தில் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதாவது எதிராளிக்கு.அதனால் அவர்கள் கேலி பேச்சுகள் நம்மை சோர்வடைய வைக்கும்.
        சரி .நாம் அடுத்தவர்களுக்கு பொருளாதார உதவி செய்தால் தான் உதவி என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.நல்ல வார்த்தைகளும் ஒரு உதவி தான். ஒருவனை மேன்படுத்த சரியான வழிநடத்துதல் இருந்து விட்டால் போதும். அவன் மேலும் மேலும் முன்னேறுவான்.
        ஆனால் தற்போது நாம் வாழும் சமுதாயம் நன்றாக பொருளாதார ரீதியில் மேலே வந்தவர்களுக்கே மரியாதை கொடுக்கிறது. ஒருவனை பொருளாதாரத்தை மட்டும் வைத்து எடைப்போட வேண்டாம். ஏனெனில் வாழ்க்கை வசதிகள் என்பது ஆடம்பர வாழ்க்கை என்பது எப்போதும் நிரந்தரம் அல்ல. மேலும் பொருளாதார வசதிகள் இருப்பவர்கள் எல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு மனநிம்மதியோடு இருக்கிறார்கள் என்று பொருள் இல்லை.
         மேலும் சிறுகுழந்தைகள் முதல் நாம் அவர்கள் எந்த விசயத்தை செய்தாலும் முதுகில் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் பாராட்டுங்கள். அவர்களை சோர்வடைய செய்யாதீர்கள். இந்த சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் அவர்களை விடாதீர்கள். ஏனெனில் ஒரு நல்ல குழந்தைகள் எண்ணம் இந்த சமுதாயத்தில் என்றும் மதிக்கப்பட்டது இல்லை. அதனால் அவர்கள் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையில் எரிந்து சாம்பல் ஆகக்கூடாது.
              குழந்தைகள் நல்ல எண்ணத்தை ஊக்கப்படுத்த தவறாதீர்கள். இந்த சமுதாயத்தில் மதிக்கப்படாத விசயங்கள் தான் பிற்காலத்தில் பலராலும் பேசப்படுகின்றன.அதனால் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையை கண்டுக்கொள்ளாமல் உனது கொள்கையில் நீ உறுதியாக இரு.நான் உனக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
                இந்த சமுதாயம் என்பது மாயையால் கட்டுப்பட்டது.அதனால் நீ உனது ஊக்கம் குறையாமல் சாதிக்க வேண்டிய விசயத்தை சாதித்து விடு என்று கூறி தூண்டினால் அவன் திறமை குடத்தில் இட்ட விளக்கு போல இல்லாமல் அனைவருக்கும் பயன் அளிக்கும்.
            அதைவிடுத்து அவர்கள் திறமை தெரியாமல் திட்டினீர்கள் என்றால் அவன் எப்படி சாதனையாளன் ஆவான். ஆட்டுமந்தை கூட்டம் போல ஒரே படிப்பில் சேர்த்தவர்கள் கதி இன்று என்னவாயிற்று?யோசனை செய்யுங்கள். சொத்தை விற்று படிக்க வைத்தீர்கள். உங்கள் சொத்தும் போனது .அவன் கனவுகளும் சிதைந்து போனது.அதனால் நீங்கள் உங்கள் கற்பனை கனவுகளை உங்கள் பிள்ளைகள் திணிக்காமல் அவர்கள் கனவுகளை நிறைவேற்ற தூண்டுதலாக இருங்கள்.
              உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் ஒதுக்கும் தூண்டுதலுக்கான ஊக்கத்தை கொடுத்ததாகவே அர்த்தம். என்ன நேயர்களே ஆனந்தமாக உங்கள் குழந்தைகளை வளர்க்க முடிவெடுத்து விட்டீர்கள்தானே.மகிழ்ச்சி.
         .

திட்டமிடுதலும் நமது குழந்தைகளும்.


திங்கள், 23 ஜூலை, 2018

பிடிவாதம்

அன்பர்களே வணக்கம்.
        இப்போது நாம் பார்க்க இருப்பது பிடிவாதம். என்ன நீங்கள் எல்லோரும் யாரையாவது இந்த குணத்தை உடையவர்களை கைகாட்டுவது எனக்கு தெரிகிறது. ஆம். நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் இந்த குணத்தை உடையவர்களால் பாதிக்கப்பட்டுள்ளோம்.அப்படி தானே அன்பர்களே.ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருக்கும் போது நாம் அடையும் எரிச்சலுக்கு அளவே இருக்காது.அப்படி நம்மை அவர்கள் படுத்தி எடுத்து விடுவார்கள்.
         ஒரு மனிதனை வாட்டி வதைப்பது பிடிவாதம் தான் என்று தெரிந்தும் ஏன் அதை விட மறுக்கிறார்கள் சிலபேர்.இதை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒரு விசயத்தை நாம் புரிந்துக்கொள்ள முடியும். அவர்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். அவர்கள் நினைப்பதை சாதிக்க வேண்டும். இவ்வளவு தான். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. மற்றவர்கள் முன்னால் அவமானப்படக்கூடாது.இது ஒரு முக்கிய காரணம்.
            சரி.ஒன்றை பிடிவாதம் பிடிப்பவர்களே புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் பிடிவாதத்தால் நல்ல விசயங்களை கூட இழக்க வாய்ப்பு உள்ளது. அதனால் எந்த விசயத்திற்கும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று உறுதியாக இருக்கக்கூடாது. அதனால் இழப்பு வந்தால் வேறு எவரும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் தான் தாங்க வேண்டும்.
    அதனால் அடுத்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கொஞ்சம் நீங்கள் காது கொடுத்து கேளுங்கள்.நீங்கள் அதையே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தோன்றாத ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு தோன்றி இருக்கலாம். நீங்கள் கூட யோசிக்கலாம். அடடே இதை எப்படி மறந்தேன் என்று. அதனால் நாலுபேர் சொல்வதை கேட்பதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் விசயம். நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
      பிடிவாதத்தால் நிறைய பேர் கெட்டபெயரும் புகழையும் இழக்கிறார்கள். நமது வறட்டு கொள்கையால் நாம் நல்ல பல விசயங்களை இழந்து விடக்கூடாது.
    நல்ல விசயத்தை பின்பற்றுவதில் சத்தியத்தில் நிலைத்து இருப்பதில் அடுத்தவருக்கு உதவுவதில் தமது கடமைகளை செய்வதில் நாம் பிடிவாதமாக இருப்பதில் தவறு இல்லை. ஆனால் சுயநலத்திற்காக விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பதில் தவறு உள்ளது.
      விட்டு கொடுப்பவர் என்றுமே கெட்டு போவது இல்லை. பெருந்தன்மை என்பது எல்லோருக்கும் வந்து விடாது.அது இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கே வரும். அதனால் நாம் என்றும் பிடிவாதத்தை கைவிட்டு நல்ல விசயத்திற்காக விட்டு கொடுத்து ஆனந்தமாக வாழ்வோம்.

கௌரவம்

அன்பர்களே வணக்கம்.
   இன்று நாம் பார்க்க இருப்பது கௌரவம். இன்று சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் விரும்புவது.முதலில் நாம் கௌரவம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.நாம் நமது உழைப்பில் சாப்பிடுவது.பிறர் பொருளை விரும்பாமல் இருப்பது. நாம் நமது நல்லொழுக்கத்தில் எப்போதும் கவனமாக இருப்பது. நல்ல செயல்களை செய்வது .நல்ல விசயத்தை நான்கு பேருக்கு சொல்வது.எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசுவது...இவைகளை போல இன்னும் இருக்கிறது.
     சரி.நாம் மேற்சொன்ன விசயங்களை கடைப்பிடித்தலே கௌரவம். ஆனால் தற்போது நாம் கௌரவம் என்கிற பெயரில் என்ன செய்கிறோம் என்று உங்களை நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள்.
      நாம் நல்ல வருமானத்தை பெறுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.என்ன செய்கிறோம். முதலில் நாம் பயணம் செய்ய ஒரு ஆடம்பரமான காரை வாங்குகிறௌம்.பிறகு ஆடம்பர வீடு மேலும் சொகுசு வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை எல்லாம் வாங்கி வைத்து அனுபவிப்பதுதான் கௌரவம் என்று நினைக்கிறோம்.இது சரியானதுதானா.நமது தேவையை சுருக்கிக்கொண்டு நாம் பிறருக்கு உதவினால் நமது கௌரவம் சமூதாயத்தில் பலமடங்கு உயரும். மாறாக நாம் ஆடம்பர பிரியர்களாக இருந்தால் முகத்திற்கு நேரே நல்லவர்கள் போல மரியாதை கொடுத்து முதுகிற்கு பின்னால் மோசமாக பேசுவார்கள். மேலும் அவனிடம் வசதி இருந்து என்ன பயன் என்று தூற்றுவார்கள்.அப்போது நாம் நினைக்கும் கௌரவம் எங்கே போய் ஒளிந்து கொள்ளும்?.சிந்திப்பீர்.
     மேலும் கௌரவம் என்பது நாம் ஆடம்பரமாக வாழ்வதில் எப்போதும் இல்லை. அது நமது கற்பனை. நன்றாக யோசித்து பார்த்தால் நமது அடிப்படை தேவைக்கு மேலே நாம் செலவு செய்தால் அது அடுத்தவர் சொத்தை திருடியதற்கு சமம்.
          ஒரு மனிதன் அவனது உழைப்பில் வாழும் போது இயல்பாகவே சமுதாயத்தில் அவனது மதிப்பு கூடி அவனுக்கு கௌரவம் சேர்க்கிறது. ஒருவன் ஏட்டு படிப்பு படித்து விட்டு கௌரவம் பார்த்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சுற்றி திரிந்தால் அவனது கௌரவம் அங்கே நசுக்கப்படுகிறது.அதனால் இளைஞர்களே எந்த வேலையிலும் எப்போதும் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை. சேற்றில் இறங்குவதை ஒரு விவசாயி கேவலமாக நினைத்தால் நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான்.அதனால் எது கௌரவம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
      ஒருவன் எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும் அடுத்தவர்கள் கொடுப்பதை வாங்காமல் தனக்கு கிடைத்ததை மட்டும் வைத்து மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்.அவர்கள் கௌரவமானவர்கள்.
      நாம் எந்த சூழ்நிலையிலும் நல்லொழுக்கத்தில் வாழ்வோமேயானால் அது எவ்வளவு கௌரவமான செயல் என்பது உணர்ந்தவர்களுக்கே தெரியும். அரிச்சந்திரன் எந்த சூழலிலும் சத்தியத்தை கடைப்பிடித்ததைப்போல நாமும் எந்த சூழலிலும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் நிச்சயமாக கௌரவமான மனிதர்கள் தான். நம்மை பற்றிய மரியாதை சமுதாயத்தில் கூடும் போது நமது கௌரவம் நம்மில் பூத்து மணம் வீசும்.
       நம்மை பற்றி பிறர் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்கக்கூடாது.நம்பிக்கை என்பது நாம் சேர்க்க வேண்டிய சொத்து. இன்று நமது சமுதாயத்தில் சத்தமே இல்லாமல் நம்பிக்கைக்கு உரியவர்கள் மறைந்து கொண்டே வருகிறார்கள். நம்பிக்கைக்கு உரியவரை தேடி கண்டுபிடிக்க வேண்டியதாய் உள்ளது இந்த கலியுகத்தில். அதனால் அடுத்தவர்கள் உங்கள் வைத்த நம்பிக்கையை எக்காரணத்தையும் கொண்டும் இழந்து விடாதீர்கள்.
       என்ன நேயர்களே கௌரவம் என்றால் என்ன என்று இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.உங்களிடம் உள்ள மோசமான கௌரவத்தை ஒழித்து உண்மையான கௌரவத்தை கடைப்பிடித்து ஆனந்தமாக வாழுங்கள்.

வெள்ளி, 20 ஜூலை, 2018

வலி

வணக்கம் அன்பர்களே
       இன்று நாம் பார்க்க இருப்பது வலி.என்ன நேயர்களே வித்தியாசமாக இருக்கிறதா? ஆம். நாம் பார்க்க இருப்பது வலியைப்பற்றி தான். வலி என்பது  பலருக்கும் ஞாபகம் வருவது உடல் ரீதியான வலி மட்டுமே. ஆனால் அது மட்டுமே வலி இல்லை. குறிப்பாக உடல் ரீதியான வலிகூட நாட்கள் சென்றால் ஆறிவிடும். ஆனால் மனோ ரீதியான வலி?.சிலபேர் இருக்கிறார்கள்.அடுத்தவரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தி அவர்கள் மனதில் வலியை ஏற்படுத்திவிடுகிறார்கள்.
            நாம் யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க தேவையில்லை. மற்றவர்களின் மனதை காயப்படுத்தி வலிகளை ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும். நாம் அடுத்தவரை காயப்படுத்தும் போது நம்மை எவரேனும் அதேபோல காயப்படுத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
        வலிகளை நம்மால் ஒருமுறை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி விட்டால் அது நீங்காத வடு ஏற்படுத்தி விடும் அவர்களுக்கு. எப்போதும் அடுத்தவர்களை மிகவும் மரியாதையாக நடத்துங்கள். உங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பீர்களோ அதைப்போல.ஏன் என்றால் யாரையும் காயப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. வார்த்தைகளால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது.
        இனிமையான வார்த்தைகள் பல இருக்க ஏன் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை காயப்படுத்த வேண்டும். காயப்படுத்துவது என்பது அதாவது வலி ஏற்படுத்துவது என்பது பல வழிகளில் ஏற்படுத்தப்படுகிறது.அதாவது உடல் மொழிகளால் மற்றும் மற்றவர்களை கண்டும் காணாமல் இருப்பது கேவலமாக மற்றவர்கள் முன்னிலையில் நடத்துவது மற்றவர்கள் முன் தேவையில்லாமல் வேலை சொல்லி ஏவுவது.இப்படி பல.இப்படி காயப்படுத்துபவர்கள் இப்போது சமூகத்தில் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள். இது நிச்சயமாக கவலைக்குரியது.
         வலிகளை உள்ளே நிறுத்தி சிலர் மனம் புழுங்குகிறார்கள்.பலர் பழிவாங்குகிறார்கள்.நல்ல சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.நல்ல சமுதாயம் என்பது இனிமையான சூழல் மற்றும் இனிமையான மனிதர்களை உள்ளடக்கியது.
       இன்றைய இளைஞர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுக்கொள்ளட்டும்.சில இளைஞர்கள் அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எப்படி வரவேற்பது என்று கூட தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவர்களை வாருங்கள் என்று கைகள் கூப்பி வணக்கம் வைத்து எத்தனை பேர் வரவேற்கிறார்கள்?.முதலில் விருந்தினரை நல்ல விதமாக இன்முகத்துடன் வரவேற்று விருந்தினருக்கு மனவலியை ஏற்படுத்தாமல் சந்தோஷப்படுத்த சொல்லி கொடுக்க வேண்டும்.
      விருந்தினர்கள் உபசரிப்பு என்பது எப்படி என்று சுத்தமாக பல இளைஞர்களுக்கு தெரிவதில்லை. வந்தவர்களை இருக்கை அளித்து அமர வைத்து பருக தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் அவர்களுடன் உரையாட வேண்டும். நிறைய இளைஞர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் விருந்தினர்கள் மனோரீதியாக வலியை சந்திக்கிறார்கள்.
     இவ்வாறு நடந்து கொள்வதை வீட்டில் உள்ள பெற்றோர் ஊக்குவிக்கக்கூடாது.அவன் அப்படி தான் என்றோ அவள் அப்படி தான் என்றோ சொல்லி நிறைய பெற்றோர்கள் சமாளிக்கிறார்கள்.இது தவிர்க்க பட வேண்டும். நீங்கள் அவர்கள் வீட்டில் இவ்வாறு உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டால் நீங்கள் அவர்களிடம் சொல்லாமல் வெளியே வந்து புறம் கூறுவீர்கள் தானே.
      நாம் வாழ்க்கையில் அனைவருடனும் முடிந்த வரை சுமுகமாக பழக வேண்டும். அடுத்தவர்களை எப்போதும் காயப்படுத்தக் கூடாது. வலிகளை ஏற்படுத்தும் சொற்களை நாம் எப்போதும் பயன்படுத்தாமல் இருப்பதை ஒரு கொள்கையாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.
    ஆனந்தம் என்பது அடுத்தவர்களுக்கு வலி ஏற்படுத்தாத வாழ்க்கை வாழ்வதுதான். இவ்வாறு நமது வாழ்க்கையை அமைத்து கொண்டு நாமும் ஆனந்தமாக வாழ்வோம். மற்றவர்களையும் ஆனந்தமாக வைத்திருப்போம்.என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.

மௌனம்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது மௌனம். நம்மில் பலர் இருக்க முடியாதது.என்ன அன்பர்களே உண்மைதானே.சில மனிதர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ தேவையில்லாமல் பேசுவதை அவர்களால் நிறுத்த முடியாது.எதையாவது பேசியே பொழுதை கழிப்பார்கள்.இவர்கள் நேரத்தின் அருமை அறியாதவர்கள்.
      நாம் பேசுவதால் அடுத்தவருக்கு பிரயோஜனமும் ஆனந்தமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இல்லை என்று தெரிந்தும் அவர்கள் பேசுவதை நிறுத்துவதில்லை.அடுத்தவர்களை பேசியே கொன்று விடுவார்கள். மௌனத்தின் அருமை தெரியாதவர்கள்.
     மௌனம் என்பது எப்போதும் யாருக்கும் இடையூறு இல்லாதது.இன்று நிறைய பேரை நீங்கள் பார்க்கலாம். மீடியாவில் தனது பெயர் வர வேண்டும் என்பதற்காக மிகவும் மோசமான வார்த்தைகளால் அடுத்தவர்களை தாக்கி பேசுகிறார்கள். இவர்கள் இவர்கள் பெருமையை தானே குறைத்து கொண்டதற்கு அந்த பேச்சே காரணம் ஆகிவிடும்.
      நாம் நமது குடும்பத்திலும் நமது வேலைகளை மட்டும் பார்த்து கொண்டு தேவையில்லாமல் பேசாமல் நல்ல புத்தகங்களை வாசித்துக்கொண்டு தேவைக்கேற்ப தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கி பேச்சை குறைத்தாலே நமது குடும்ப உறுப்பினர்களிடம் நமக்கு மரியாதை கூடும்.
           பெரியவர்கள் என்றால் எப்போது பார்த்தாலும் ஏதாவது அறிவுரை என்கிற பெயரில் பேசுவது இன்றைய தலைமுறைக்கு பிடிப்பது இல்லை. அதற்காக நாம் அவர்களை வழிநடத்தாமலும் விட்டு விடக்கூடாது. தேவைக்கேற்ப அவர்கள் வழியிலேயே சென்று திருத்த முயல வேண்டும். கொஞ்சம் சிரமம் தான். ஆனால் இதை இன்றைய விஞ்ஞான உலகத்தில் கைக்கொண்டு தான் ஆக வேண்டும்.
           மற்ற நேரங்களில் நாம் அமைதியாக தியானம் செய்து மனதை உள்முகப்படுத்துதலே நமக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. உங்களுக்கு தெரியுமா நாம் பேச்சை எவ்வளவு குறைக்கிறோமோ நமது சக்தி சேமிக்கப்படுகிறது.அதை உபயோகமான மற்ற விசயங்களுக்கு நாம் பயன்படுத்தலாம்.மௌனம் மிகவும் அழகானது.அதை கைக்கொண்டவர்களுக்கே தெரியும். அதன் அருமை.
           மௌனத்தால் நாம் நிறைய சக்திகளை சேகரிக்கிறோம்.மேலும் மௌனம் நமக்கு நிறைய உள்நோக்கிய தேடலுக்கு அழைத்து செல்கிறது. அந்த சக்தி நமக்கு ஆத்மஞானத்தை கொடுக்கிறது.
         எப்போதும் உங்கள் ஆன்மாவிடம் நிறைய பேசுங்கள். விடை தெரியாத கேள்விகளுக்கு ஆன்மாவே பதில் சொல்ல முடியும். நாம் இந்த பூமிக்கு வந்ததன் நோக்கத்தை நமக்கு சொல்லும். பிறவிபயனை நாம் மௌனத்தின் மூலமே அடையலாம்.
            அதைவிடுத்து எப்போது பார்த்தாலும் நாம் பேசிக்கொண்டே இருந்தால் நமது வாழ்க்கை அர்த்தம் அற்றதாகிவிடும்.இறைவனை பற்றி நிறைய பேசுங்கள். உலகியல் விசயங்களை மற்றவர்கள் பேசும் போது நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள். உங்களால் முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த முயலுங்கள். முயற்சி செய்யுங்கள். நல்வழிப்படுவதும் இல்லை மாற்றுவழி தேர்ந்தெடுப்பதும் அவர்கள் விருப்பம்.
     அதற்காக விவாதம் நிறைய செய்யாதீர்கள். உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காதீர்கள்.ஏனெனில் மௌனம் அபூர்வமானது.அதை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    மௌனத்தால்தான் ஆனந்தம் கிடைக்கும். ஆனந்தமான வாழ்க்கை வாழ நீங்கள் தயாராகிவிட்டீர்கள்தானே அன்பர்களே? 

புதன், 18 ஜூலை, 2018

தடைகள்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் தடைகள். தடைகள் இல்லாத வாழ்க்கை என்பது ஏது.தடைகளை கடந்தால் தான் மிகவும் நல்ல விசயங்களை நம்மால் சாதிக்க முடியும். சிலர் ஒரே முயற்சியில் தான் நினைத்ததை சாதிக்க நினைப்பார்கள். அது எப்படி சாத்தியமாகும். அப்படியே சாத்தியப்பட்டாலும் நமக்கு அனுபவமஅனுபவம் கிடைக்காது.சுவாரஸ்யமான சம்பவங்களுக்கு இடம் இல்லாமல் போய் விடும்.அதாவது முதல் முயற்சியிலேயே எடுத்த காரியத்தை சாதித்து விட்டால்.
  பலர் எவ்வளவு முயற்சி செய்தாலும் காரியம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்கள் அந்த தடைகள் எதனால் ஏற்பட்டது என்று ஆராய முற்படுவதில்லை.அந்த காரணத்தை கண்டறிய முயல்வதில்லை.ஒரு காரியத்தை சாதிக்க விடாமுயற்சி வேண்டும். விடாமுயற்சியாலேயே பல காரியங்கள் இங்கு சாதிக்கப்பட்டுள்ளது.
        ஒரு காரியத்தை எந்த நேரத்தில் எடுக்கிறோம் என்பதை ஆராய வேண்டும். எந்த சூழ்நிலை அதற்கு ஒத்து வரும் சரியான திட்டமிடுதலும் அவசியம். திட்டமிடாத காரியம் கடிவாளம் இல்லாத குதிரை போலத்தான். தறிகெட்டு ஓடும். அதனால் திட்டமிடுதலை சரியாக செய்து சரியான பாதையில் செல்ல தீர்மானிக்க வேண்டும்.
     ஒரு காரியத்தை தேர்தெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்தபின் மற்றவர்களின் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் முன்னோக்கி செல்ல வேண்டும். சிலர் அவர் மேற்கொண்ட காரியத்தை பிறர் கேலி செய்யும் போது பாதியிலேயே விட்டு விடுவார்கள். எந்த காரியத்தை செய்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை எல்லாம் நாம் கண்டு கொள்ள கூடாது. விமர்சனங்களை ஒன்று கண்டுக்கொள்ளக்கூடாது அல்லது விமர்சனங்களை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் நீங்கள் எடுத்த காரியத்தை சாதிக்க இயலவே இயலாது.
           இன்னொரு விசயத்தையும் உங்களுக்கு நான் சொல்ல விருப்பப்படுகிறேன்.உங்களுக்கு எந்த காரியத்தை பிடிக்குமோ அதை தேர்தெடுங்கள்.ஏனெனில் பிடித்த விசயத்தில் ஈடுபடும் போது நமக்கு தடைகள் தெரியாது.சோர்வு தெரியாது. முக்கியமாக இதை செய்யும் போது நீங்கள் மற்றவர்கள் விமர்சனங்களை நீங்கள் கண்டுக்கொள்ள மாட்டீர்கள்.
        தடைகள் என்றுமே உங்களுக்கு ஒரு சிறுதேர்வுதானே தவிர அதனால் நீங்கள் சோர்ந்து விடக்கூடாது. சோர்வு ஏற்பட்டுவிட்டால் நீங்கள் தொடங்கிய காரியம் பாதியிலேயே பின்னப்பட்டுவிடும்.அதனால் தடைகளை கண்டறிந்து அதை நீக்கும் வழிகளை கண்டுபிடித்து முன்னேறி செல்லுங்கள். வெற்றி கனி உங்கள் கைகளில் வந்து தானாக விழும்.
       என்ன நேயர்களே .உங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபட்டு வெற்றி பெற தொடங்கி விட்டீர்கள்தானே.இனி உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் தாண்டம் ஆடும்.
      வாழ்த்துக்கள் எடுத்த காரியத்தை சாதிப்பதற்கு.

தனிமனித ஒழுக்கம்

அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் முக்கியமான விசயம் தனிமனித ஒழுக்கம். இன்று நாம் எந்த விதமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பார்த்தால் மிகவும் அருவருப்பாக உள்ளது. எப்படி நாம் இப்படி மாறிபோனோம் என்றே நமக்கு தெரியவில்லை. நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிஇருக்கிறோம் என்பதே உண்மை.
  நம் பாரதத்தை பார்த்து ஒருகாலத்தில் அனைவரும் பொறாமைக்கொண்டார்கள்.ஆனால் இன்று நாம் அந்த நிலையை சிதைத்து விட்டோம்.நம் கைகளுக்குள் உலகம் அடங்கிவிட்டது என்பது உண்மை தான். ஆனால் நமது பாரம்பரியம் நமது கலாச்சாரம் எங்கே?.
நாம் நாமாக நிச்சயமாக மாறவில்லை என்பதே உண்மை. இந்த அரசியல்வாதிகள் மக்களை மூளைசலவை செய்து மாற்றி விட்டார்கள். நான் நிச்சயமாக சொல்வேன் நமது அரசியல்வாதிகளும் ஒருவகையில் தீவிரவாதிகளே.இன்னும் சொல்ல போனால் தீவிரவாதிகளைகூட நாம் ஏற்றுக்கொள்ள முடியும். எப்படி என்றால் அவர்கள் கொள்கை விசயத்தில் மிகவும் தெளிவாக இருப்பதால்.
  ஆனால் இந்த அரசியல்வாதிகள் நம்மை நம்பவைத்து கழுத்தறுக்கும் மோசமான தீவிரவாதிகள். தீவிரவாதிகளுக்கு எந்த சட்டம் பொருந்துமோ அதுவே இந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். இவர்கள் அடிப்படை கொள்கை மக்களின் செல்வத்தை பொது சொத்தை கொள்ளையடிப்பதுதான்.
  தனிமனிதர்களே நீங்கள் உங்கள் ஒழுக்கத்தை தூக்கி போட்டு நீங்கள் வாழும் சமுதாயத்தை கேவலமாக்கிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரிகிறதா.நாளை உங்கள் சந்ததி இதே பூமியில் தான் வாழ போகிறார்கள். அவர்கள் உங்கள் வரலாறை நீங்கள் வாழ்ந்த சமுதாய வாழ்வை பார்த்து சிரிக்க மாட்டார்களா?.உங்கள் மரியாதை கலாச்சாரத்தை நினைத்து அவர்கள் பெருமைக்கொள்வதற்கு பதிலாக சிறுமை கொள்வார்கள்.
   உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை கைவிடாதீர்கள்.நீங்கள் சேர்த்து வைத்த மற்ற சொத்துகளைவிட ஒழுக்கமே எந்த சூழலிலும் உங்கள் பெருமையை உணர்த்தும். உங்கள் பிள்ளைகள் வேண்டும் என்றால் நீங்கள் சம்பாதித்த சொத்திற்காக பெருமைக்கொள்வார்கள்.ஆனால் சமுதாயம் நீங்கள் சேர்த்த சொத்தை வைத்து உங்களை எடைப்போடாது.நீங்கள் சம்பாதித்த புகழை வைத்துதான் எடைப்போடும்.நீங்கள் சம்பாதித்த நல்ல பெயரை வைத்துதான் எடைப்போடும்.
  உங்கள் புகழுக்கு உங்கள் ஆன்மாவிற்கு கலங்கம் விளைவிக்கும் எந்தவித செயலையும் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது.அதை உங்கள் மோசமான செயல்களால் தயவுசெய்து வீணடித்துவிடாதீர்கள்.
     எப்போதும் அழகான பூஞ்சோலைகள் நிறைந்த வழிதடம் இருபக்கமும் நம்மை ஆசீர்வதிக்க மோசமான முள்நிறைந்த பாதையை தேர்ந்தெடுப்பது நமக்கு எவ்வளவு இன்னலை கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வீரர்கள் தான். அதறகாக உங்கள் நடவடிக்கைகளால் உங்கள் குடும்பத்தையும் சந்ததியையும் பழிகொடுத்துவிடாதீர்கள்.
      நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழ இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

செவ்வாய், 17 ஜூலை, 2018

கவலைகள்

அன்பர்களே வணக்கம்.
     இன்று நாம் பார்க்க இருப்பது கவலைகள்.சிலர் எப்போது பார்த்தாலும் எதற்காகவாவது கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் கவலை மிகவும் வித்தியாசமாக இருக்கும் .சிலருக்கு எரிச்சல் கூட வரும். ஆனால் அவர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தேவை கவலைப்படும் உணர்வு.
   சரி இன்னும் சிலப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் நடந்த சோகங்களை சொல்லி சொல்லசொல்லியே மற்றவர்களை கவலையடைய வைத்துவிடுவார்கள்.ஏன் இந்த கவலைகளை மூட்டை கட்டி கொண்டு திரிகிறார்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது.
       சரி விசயத்திற்கு வருவோம். ஒரு மனிதன் எப்போது பார்த்தாலும் கவலையில் இருந்தால் அவனுக்கு எதிர்மறை சிந்தனைகளே அதிகமாகி அவனின் செயல்திறனை குறைத்து விடும். எப்போதும் உற்சாகமாக இருப்பவர்களை பாருங்கள். அவர்களால் எளிதாக பல காரியத்தை சாதித்து இருக்க முடியும். ஆனால் கவலையும் சோகமும் உடையவர்கள் எளிதான காரியத்தை கூட கோட்டை விட்டு விடுவார்கள்.
   அதனால் எதிர்மறை சிந்தனை உடையவர்களிடம் நெருங்கி பழகாதீர்கள்.முடிந்தால் அவர்களை நீங்கள் திருத்த பாருங்கள். இல்லை என்றால் விலகிவிடுங்இள்.உங்கள் நேர்மறை சிந்தனைகள் அவர்களோடு இருப்பதால் உங்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.
    மனிதர்களே எதற்காக கவலை?கவலைகளால் தோல்விகளும் மன இறுக்கமுமே அதிகமாகும். அதனால் கவலைகளை தூக்கி போட்டு விட்டு ஆகவேண்டிய காரியங்களை பாருங்கள். நான் தங்களிடம் கவலைகளே வேண்டாம் என்று சொல்லவில்லை. அதிலேயே மூழ்கி இறந்து விடாதீர்கள். கொஞ்ச நேரம் மட்டுமே அதற்கு கொடுங்கள் .
     பிறகு உனது நேரம் முடிந்து விட்டது. நீ செல்லலாம் என்று தயவுதாட்சயம் இல்லாமல் சொல்லி விடுங்கள். இறைவன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்றே பார்க்கிறார்.அவர் வைத்த தேர்வில் வெற்றி அடையவே அவர் விரும்புகிறார்.
   தருணங்களை எண்ணி காத்திருங்கள். கவலைகளை கடந்து ஆனந்தமாக வாழ முடிவு செய்யுங்கள்.என்ன அன்பர்களே உங்கள் கவலைகளை மூட்டை கட்டி பரண் மேல் போட முடிவு செய்து விட்டீர்களா.வாருங்கள் சாதிக்க நிறைய விசயங்களை இந்த மண்ணில் இறைவன் கொட்டி வைத்து இருக்கிறார். அதை நோக்கி நம் பயணத்தை தொடர்வோம்.
   எல்லோரும் ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்.

திங்கள், 16 ஜூலை, 2018

ஏமாற்றங்கள்

அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது ஏமாற்றங்கள். நாம் ஒவ்வொருவரும் எதன்மூலமாகவோ யார் மூலமாகவோ ஏதோவொரு வகையில் ஏமாற்றத்தை சந்திக்கிறோம்.இதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த ஏமாற்றங்களால் நாம் சோர்ந்து விடுகிறோம். இதுதான் நாம் செய்யும் தவறு.
  வாழ்க்கையில் சாதித்தவர்கள் எவரும் தோற்காமல் ஏமாற்றங்களை சந்திக்காமல் சாதனை புரிந்தது இல்லை. நாம் அவர்களின் சாதனைகளை மட்டும் எடுத்து கொண்டு அந்த சாதனைக்காக அவர்கள் சந்தித்த ஏமாற்றங்களை மறந்து விடுகிறோம். அவர்கள் சொன்னாலும் நாம் ஏற்று கொள்ள தயங்குகிறோம்.
  வெற்றி என்பது எப்போதும் ஏமாற்றங்களை உரமாக ஏற்றுதான் நமக்கு கிடைக்கும். அதற்கு நமக்கு பொறுமை மிகவும் அவசியம். ஆனால் நாம் செய்யும் செயல்களில் உடனே வெற்றியை எதிர்பார்ப்பதும் ஏமாற்றங்கள் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.
      நாம் அனைவரும் ஏதோவொன்றை நிறைவேற்ற சாதிக்கவே இந்த பூமிக்கு வந்துள்ளோம். அதனால் தாமதங்களால் எப்போதும் சோர்வடையக்கூடாது.மிகவும் நேர்த்தியாக காரியம் முடித்து காத்திருக்கும் கலையை கற்க வேண்டும். வெற்றிக்காக காத்திருத்தல் என்பது ஒரு சுகமாக உணர வேண்டும்.
  ஏமாற்றங்களை வெற்றிக்கான உரமாக மண்ணில் போட்டு விட்டு நாம் காத்திருப்போம் வெற்றிக்காக.ஏமாற்றங்களின் மூலம் வரும் வெற்றியே நமக்கு நீடித்து இருக்கும். ஏற்றங்கள் பல தரும் ஏமாற்றங்களை வெறுக்காமல் அதை நமக்கு கிடைத்த அனுபவமாக எடுத்து கொண்டால் நாம் வாழ்வில் எப்போதும் ஆனந்தமாக இருப்போம்.
   என்ன அன்பர்களே ஆனந்தமாக வாழ நீங்கள் தயார் தானே!
       எல்லோரும் இன்புற்று இருக்க அல்லாமல்.

தானம் செய்யுங்கள்

அன்பர்களே வணக்கம். இன்று நாம் பார்க்க இருப்பது தானதர்மங்கள்.இன்று பெரும்பாலானவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் தர்ம சிந்தனை இல்லை. அப்படியே இருந்தாலும் வெறும் விளம்பரத்திற்காக செய்கிறார்கள். நிறைய சம்பாதித்தால் அதை நமது குடும்ப உறுப்பினர்களுக்கே செலவு செய்கிறார்கள். சிலப்பேர் தேவை இருக்கிறதோ இல்லையோ நிறைய செலவு செய்து பணத்தை வீணடிக்கிறார்கள்.இதை தட்டிக்கேட்டால் ஸ்டேடஸ் அது இது என்று பிதற்றல்கள் இருக்கும். ஏன் அந்த தேவையில்லாத ஆடம்பரமான செலவை குறைத்து கொண்டு நாலு ஏழை பிள்ளைகளை படிக்க வைத்தால் அந்த பிள்ளைகள் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றக்கூடாது. உனக்கு இறைவன் அபரிதமான செல்வம் கொடுத்து இருக்கிறார் என்றால் அதை உன்மூலம் நாலுபேர் நன்மை அடைவதற்கு தான். அதை உங்கள் இஷ்டத்துக்கு செலவுகள் செய்து லட்சுமியை அவமானம் படுத்தக்கூடாது. உங்கள் தேவைகளை குறைத்து வாழுங்கள். நீங்கள் உங்கள் அபரிதமான செல்வத்தை நன்கு தானதர்மங்கள் செய்யுங்கள். கல்வி கொடுங்கள். நிறைய சேவைகளை அந்த செல்வத்தை வைத்து செய்யுங்கள். நீங்கள் இந்த செல்வத்தை எப்படி சேலவு செய்கிறீர்கள் என்று இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை ஞாபகம் வையுங்கள். தானதர்மத்தில் ஈடுபாடு கொண்டு அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.அதில் தான் உங்கள் ஆனந்தம் அடங்கியுள்ளது.வாழ்த்துக்கள்.

தியாகம்

அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது தியாகம். தியாகம் என்றால் என்ன?நாம் எந்தவித பிரதிபலனும் பாராமல் வேலை செய்வது.உண்மையில் நம்மை அப்படி தான் வளர்த்தார்கள் நம் பெற்றோர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. சின்ன குழந்தையிடம் கூட நாம் எதிர்பார்ப்பு என்ற நஞ்சை விதைக்கிறோம்.இது சரிதானா.
  உண்மையில் அந்த காலத்தில் குழந்தைகளிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்த்ததால் தான் நம்மால் நமக்குள் இருக்கும் திறமையை நிரூபிக்க முடிந்தது.
    ஆனால் இன்று நம் குழந்தைகள் நாம் ஆட்டிவைக்கும் பொம்மைகள் ஆக்கி விட்டோம். ஏன் இந்த நிலைமை.எந்த பள்ளியில் சேர வேண்டும் எந்த கல்லூரியில் சேர வேண்டும் எந்த படிப்பு படிக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோம்.இது முற்றிலும் தவறானது.ஒரு கட்டத்தில் குழந்தைகள் முடிவெடுக்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து எல்லாவற்றிற்கும் மற்றவர்களை சார்ந்து வாழ பழகிவிடுவார்கள்.
    இதைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் ஊக்குவித்து சமயோசித புத்தி இல்லாமல் செய்து அவர்களை ரோபோ ஆக்கி விடுகிறார்கள். அப்படி சொல்வது கூட தவறு.ரோபோ கூட சில சமயம் சிந்திக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதில் பெருமை வேறு.என் பிள்ளை என்னை கேட்காமல் எதையும் செய்ய மாட்டான் என்று. அவனுக்கு சிந்திக்க தெரியவில்லை. முடிவெடுக்க தெரியவில்லை. அப்போது உங்களிடம் தானே வருவான். இதில் என்ன பெருமை.
   பெற்றோர்களே தயவுசெய்து நீங்கள் பிள்ளைகளை உங்கள் முடிவுகளை திணித்து கட்டுப்படுத்தாதீர்கள்.அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் இருங்கள். நல்லது கெட்டது சொல்லி தாருங்கள். ஆனால் முடிவுகள் மட்டும் அவர்கள் எடுக்கட்டும்.
இன்றைய சிந்தனை பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.நன்றி.

ஞாயிறு, 15 ஜூலை, 2018


அன்பே!
உன் வண்ணகனவுகளை
நிறைவேற்றுவேன்
நிச்சயமாக!
நீ என்னை கைவிட்டு விடாதே!
✍️இளையவேணிகிருஷ்ணா.
அன்பர்களே வணக்கம். எனது முதல் இடுகை இது. எல்லோரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...