அந்த நள்ளிரவு பொழுதில்
எதேச்சையாக சாலையில்
யாருமற்ற தனிமையில்
நடக்கிறேன் ...
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்
எனை மிருதுவாக தீண்டி
நலம் விசாரித்து என்னோடு
சிறு உரையாடல்
நிகழ்த்திக் கொண்டு
பயணிக்கிறது
அந்த குளிர் காற்று ...
என் காலடி ஓசையில்
திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தது
அந்த சாலையோர புழுதியில்
தனது உறங்கியும் உறங்காமல்
இருந்த நாய் ஒன்று...
என்னை ஏனோ பின் தொடர்ந்து
வந்துக் கொண்டே இருக்கிறது...
இங்கே யாருமற்ற சாலையில்
நானும் அந்த நாயும்
எங்களை வருடும் காற்றும்
எங்கிருந்தோ சத்தம் எழுப்பும்
இரவு பூச்சியின் ஓசையும்...
கொஞ்சம் இந்த பிரபஞ்சத்தின்
இருளின் நீண்ட தூர பயணத்தை
ரசிக்க மனமில்லாமல்
அங்கே பல மனிதர்கள் நாளைய
சூழலின் கவலைகளோடு
கண் அயர்கிறார்கள்...
நாங்கள் அந்த பேரமைதி கொண்ட
பயணத்தின் சாயலை
மனதில் தேக்கி வைத்து
விடிந்தும் விடியாத பொழுதில்
கை குலுக்கி விடை பெறுகிறோம்
ஒரு ஆழ்ந்த ரசனை கொண்ட
புன்னகையோடு....
நாங்கள் விடை பெற்று நிதானமாக
இந்த விடியலை எதிர் கொள்வதற்கு
பதிலாக உறங்க செல்கிறோம்
அங்கே அந்த பல கவலையோடு
கண்ணயர்ந்த மனிதர்கள்
திடுதிடுவென்று ஓட துவங்கி
விட்டார்கள்....
அந்த ஓட்டத்தில் நாங்கள் நிதானமாக
இரவில் பயணித்த சாலை
நசுங்குகிறது...
இது எதையும் கண்டுக்கொள்ளாமல்
நானும் அந்த நாயும் இரவு பூச்சியும்
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை
கவனித்த அந்த பகல் நேர சாலை
எங்களை வரவேற்க காத்திருக்கிறது
அந்திமாலை எப்போது வரும்
இந்த நசுங்கலில் இருந்து விடுபட்டு
சுவையான பயணிகளான
எங்களை சந்திக்க என்று...
#இரவும் நாங்களும்
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 13/10/24/ஞாயிற்றுக்கிழமை.