வயலில் இருந்து கிளம்பி வரும் போது வழியில் அந்த அற்புதமான ஆலமரத்தின் அடியில் நண்பகல் வேளையில் அமர்கிறேன்...கொஞ்சம் களைப்பாக இருந்தது...பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து பருகி விட்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தேன்...நல்ல வெயில் என்பதால் அந்த மரத்தின் இலைகள் அசைந்து என் மேனியை வருடியது மிகவும் இதமாக இருந்தது...ஆம் நான் உங்களிடம் என்னை பற்றி சொல்ல மறந்து விட்டேன் அல்லவா...நான் ஒரு கணிப்பொறியாளர்...இதோ சில நாட்கள் விடுமுறை கிடைத்ததால் எனது பாட்டி வீட்டிற்கு வந்து இருக்கிறேன்...காலையில் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு பாட்டி வயலுக்கு வந்தேன்...பாட்டி வீடு புழக்கடையோடு உள்ள வீடு..மிகவும் நேர்த்தியாக அதே சமயத்தில் கலை நுணுக்கங்களோடு அந்த வீடு அமைந்து இருந்தது எனக்கு எப்போதும் பிடிக்கும்..எப்போதெல்லாம் எனக்கு விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கே வந்து விடுவேன்..தாயார் வருவதற்கு இயலாது..தந்தை ஒரு மத்திய அரசு துறையில் பணியாற்றும் அதிகாரி என்பதால்... அந்த நகரத்தின் மத்தியில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடத்தில் ஓரளவு பெரிய வீடு அது.எமது தந்தை பார்த்து பார்த்து கட்டிய வீடு தான் என்றாலும் எப்போதும் எனக்கு பாட்டி வீட்டின் இந்த அமைதியான சுற்றுச்சூழல் உள்ள வீடு தான் மிகவும் பிடிக்கும்...அந்த நகர கூட்டின் அலங்காரங்களை விட இந்த பாட்டி வீட்டின் பின்புறம் செடிகொடிகள் தலையசைத்து என்னை உற்சாகமாக வரவேற்கும் இந்த வீடு தான் உயிரோட்டம் நிறைந்ததாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்...அப்படியே அமைதியாக இப்படி எண்ணற்ற எண்ணங்கள் மனதில் ஓட அந்த மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தேன்... சில பல குருவிகளின் கீச் கீச்சென்று சத்தம் எனது செவிகளுக்கு இனிமையான இசையாக இருந்தது... அப்படியே நான் வாழ்ந்து வந்த நகரத்தினை மனதில் ஓட விட்டேன்... இந்த சூழலுக்கு மாறாக சாலையில் நெருக்கமான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களின் ஓடும் ஓசை கேட்டு கொண்டே இருக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும்..சாலையில் சில சமயங்களில் நான் நடந்து செல்லும் போது ஆபத்தான அமைதியை சீர்குலைக்கும் டயர்களின் கீறிச் சத்தங்கள் என் அருகில் வந்து உரசியது போல போகும் போதெல்லாம் என் இதயத்தின் துடிதுடிப்பை அதிகரிக்கும்... என்ன இது வாழ்க்கை என்று நான் நினைத்து கொண்டு சாலையில் அவர்களை ஒரு முறை முறைத்து பார்த்து விட்டால் கூட அவர்கள் வாயில் இருந்து வரும் வசவுகளை சொல்லி மாளாது...
இப்படியே ஒப்பீடு தொடர்ந்த நினைவலைகளுக்கிடையே என் திறன் பேசி சிணுங்கியது... பாட்டி தான் அழைக்கிறார்... அலைபேசியை எடுத்து சொல்லுங்கள் பாட்டி என்றேன்...மதிய சாப்பாடு தயார் ஆகி விட்டது கண்ணா...வா சாப்பிட என்றார்... சரி பாட்டி நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன்... இல்லயடா கண்ணா நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம் நீ பொறுமையாக வா என்றார்...
நான் சரி பாட்டி என்று சொல்லி அலைபேசியை அணைத்து விட்டு மீண்டும் அந்த ஆழ்ந்த அமைதியான சூழலை அனுபவிக்கிறேன்...இதோ நான் இளைப்பாறும் இந்த மரத்தின் அடியில் தான் வயல் வேலை இல்லாத நாள்களில் தாத்தாவும் பாட்டியும் பெரும்பாலான கதைகளை பேசி ஆனந்தமாக பொழுதை கழித்து வந்தோம் என்று வெட்க சிரிப்போடு அடிக்கடி என்னிடம் சொல்லி இருக்கிறார்... எவ்வளவு அற்புதமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் சொல்லொணா ஆனந்தம் அடையும்... பிறகு எப்படி இப்படி மாறியது வாழ்க்கை என்று யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியாமல் தலைவலி வந்தது தான் மிச்சம்...இதை பற்றி அம்மாவிடம் கேட்டால் ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாய் கண்ணா... இந்த வாழ்க்கைக்கு என்ன... உனக்கு தகுந்த வயது வரும் போது எல்லாம் புரியும் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார்... ஆனால் இது வரை நான் அன்று கேட்ட கேள்விக்கான விடை தான் இன்னும் கிடைக்கவில்லை...
இப்படி யோசிக்கும் போதே அந்த மரக்கிளையில் இருந்த இரண்டு குருவிகள் கீழே வந்து அங்கே கிடந்த பழங்களை கொத்தி கொத்தி தின்றது... பிறகு அப்படியே அந்த மரத்தடியில் மண்ணில் கிடந்த பூச்சிகளை சாப்பிட தொடங்கியது...அதை அப்படியே ரசித்து பார்த்து இருந்தேன்...
பிறகு கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்ததோ இரண்டும் பறந்து போனது...
நான் அது போன திசையையே ஒரு வித ஆச்சரியமாக பார்த்து இருந்தேன்... பிறகு இந்த பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் எங்கோ இருக்கும் இந்த பறவைகள் ஏதோவொரு வகையில் நிம்மதியாக ஆனந்தமாக வாழ்வதற்கு எது காரணமாக இருக்கும்...இதோ இப்போது மண்ணில் கிடந்த பழங்கள் மற்றும் பூச்சிகள் அதற்கு உணவாக இருக்கும் இடத்தில் கிடைத்ததா அல்லது இந்த பரந்து விரிந்து கிடந்த மரக்கிளையில் எது பற்றியும் கவலைக் கொள்ளாமல் வாழ்ந்து விட இயற்கை கொடுத்த இந்த கொடையா என்று ஆச்சரியமாக யோசித்துக் கொண்டே இருக்கும் போதே அந்த இரண்டு குருவிகளும் வேகமாக ஒன்றொடொன்று சிறகை உரசி கீச் கீச்சென்று சத்தம் போட்டுக் கொண்டே அங்கே வந்து அது கட்டிய அழகான பின்னலோடு கூடிய கூட்டில் புகுந்து கொண்டு கொஞ்சம் தலையை நீட்டி என்னை பார்த்து மீண்டும் கீச் கீச்சென்று கத்தியது... நான் எனது யோசனையை விட்டு விட்டு கொஞ்சம் தலையை உயர்த்தி பார்த்தேன்... அந்த ஜோடி குருவிகள் என்னை பார்த்ததும் தனது சிறகை படபடவென்று அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தியது... நான் அதை பார்த்து சிறிது சிரித்தபடி உற்சாகமாக கையசைத்தேன்...
மீண்டும் அலைபேசி ஒலித்தது... நான் திரையில் தோன்றிய பெயரை பார்த்து விட்டு எடுத்து இதோ வருகிறேன் பாட்டி என்று சொல்லி விட்டு அலைபேசியை எனது சட்டைப்பையில் வைத்து விட்டு அந்த குருவி இருக்கும் கூட்டை பார்த்து நான் வருகிறேன் என்று கையசைத்தேன்... அந்த குருவிகளும் சரி நாளை பார்க்கலாம் என்று தனது மொழியில் மெலிதான குரலில் கீச் கீச்சென்றது...
இந்த பிரபஞ்சத்தில் உள்ள சூட்சுமங்கள் எவ்வளவு அற்புதமானது... இவ்வளவு அற்புதங்கள் இருந்தும் எந்தவித அகங்காரமும் இல்லாமல் எப்படி இவ்வளவு அடக்கமாக மௌனமாக இருக்க முடிகிறது என்று நினைத்து மிகுந்த ஆச்சரியத்தை அடைந்துக் கொண்டே நடக்கும் போது மீண்டும் அலைபேசி சிணுங்கல்...யார் என்று பார்த்தால் தாயார் ... சொல்லுங்கள் அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்றேன்... நான் நலமாக தான் இருக்கிறேன்... அங்கே நீயும் பாட்டியும் எப்படி இருக்கிறீர்கள் நீயும் பாட்டியும் என்ன செய்கிறீர்கள் சாப்பிட்டு விட்டீர்களா இருவரும் என்று படபடவென்று கேட்டார்.. கொஞ்சம் பொறுங்கள்.. ஏன் இத்தனை கேள்விகள்... நான் தற்போது தான் வயலில் இருந்து வீட்டுக்கு போகிறேன்.. போய் தான் சாப்பிட வேண்டும் என்றேன்...
ஓ அப்படியா ஏன் இவ்வளவு நேரம்.. விரைவில் போய் சாப்பிடு என்று சொல்லி விட்டு கண்ணா ஒரு விஷயம் சொல்ல தான் உன்னை அழைத்தேன்..நீ எப்போது கிளம்பி வருகிறாய் என்று கேட்டார்..
ஏன் இந்த அவசரம்.. நான் கிளம்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் ஏன் என்று கேட்டேன்...
அதில்லைடா உன் பெயரில் உனக்கு ஒரு வீடு அப்பா இங்கே வாங்குவதாக பேசினார் அல்லவா...அது தற்போது பேரம் முடிந்தது... அந்த வீட்டின் ரெஜிஸ்ட்ரேஷன் வரும் வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று வீட்டை விற்றவர் சொன்னார்..அந்த வேலைக்காக தான் உன் வருகையை பற்றி கேட்டேன் என்றார்...
அம்மா இப்போது எனக்கு அந்த வீடு தேவையில்லை எனக்கு தற்போது அங்கே நீங்கள் வசித்து வரும் வீடே போதும்... மேலும் நான் அடுத்த வருடத்தில் இருந்து இங்கே பாட்டி வீட்டில் தான் வசிக்க போகிறேன் என்றேன்..
ஏ என்னடா கண்ணா சொல்கிறாய்... சும்மா விளையாடாதே என்று பதட்டமாக கேட்கிறார்...
நான் விளையாடவெல்லாம் இல்லை அம்மா.. நான் மிகவும் தெளிவாக தான் சொல்கிறேன் என்றேன்...
ஏன் கண்ணா... அங்கே இருந்து என்ன செய்வாய் உன் திருமணம் முடிந்ததும் நீ உனது வாழ்க்கை இனிமையாக துவங்க தானே அந்த வீடு அப்பா ஆசையாக வாங்கினார் நீ ஏன் இப்படி...
அம்மா எனக்கு வசிக்க மிகவும் அற்புதமான கூடு இங்கே பாட்டி வாழ்ந்த இயற்கை சூழ்ந்த பெருங் கூடாக இந்த வீடு உள்ளது... நான் இதில் தான் பாட்டியோடு எனக்கு மிகவும் பிடித்த விவசாயம் செய்துக் கொண்டு அற்புதமான வாழ்க்கை வாழ போகிறேன் என்றேன்...
என்னடா சொல்கிறாய் எனக்கு தலை சுற்றுகிறது என்றார் அம்மா...
அம்மா இதெல்லாம் உனக்கு இப்போது புரியாது... காலம் உங்களுக்கு புரிய வைக்கும் என்று சொல்லி விட்டு அலைபேசியை துண்டிக்கவும் பாட்டி வீடு வரவும் சரியாக இருந்தது...
பாட்டி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வாய் நிறைய சிரிப்போடு வாடா கண்ணா சாப்பிடலாம்... உனக்கு பிடித்த கத்தரிக்காய் கூட்டு வத்தல் குழம்பு வடகம் கார வடை தயிர் பச்சடி செய்து இருக்கிறேன் என்று சொல்லி கொண்டே வேகமாக வீட்டின் தாழ்வாரத்தை தாண்டி கூடத்திற்கு சென்று புழக்கடையில் உள்ள வாழையிலையை பறித்து வந்து கூடத்தில் பரிமாற ஆயத்தமாகிறார்...
நான் அவர் இலையில் பறிமாறிய அழகை ரசித்தபடியே சாப்பிட்டு முடித்து புழக்கடையில் கை கழுவ சென்றேன்.. அங்கிருந்த மரங்களின் கிளைகளில் இருந்த என்னை வந்த நாளில் இருந்து பார்த்து பழகிய ஒரு குருவி என்னை பார்த்து கீச் கீச்சென்று சிறகை அடித்து உற்சாகத்தை காட்டியது...
நான் அதற்கு பதிலுக்கு உற்சாகமாக ஒரு கையை ஆட்டி விட்டு உள்ளே சென்று எனக்கான அறையில் ஓய்வெடுத்தேன்... நிம்மதியாக எனது கண்களை தூக்கம் தழுவியது... எனது அறையில் உள்ள அந்த வானொலியில் சூழலுக்கு தகுந்தபடி தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று பாடவும் அந்தி மயங்கவும் சரியாக இருந்தது..
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:29/09/25/திங்கட்கிழமை.
%20(20240808110458).jpg)


















