ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 31 மே, 2024

கிருஷ்ணா இணையதள வானொலி

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்... 🎻.

இதில் படைப்பாளி காரைக்குடி யுக சரண் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

இது நமக்கே நமக்கான நேரம் உங்கள் அன்றாட பணிகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான நேரம் 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையை கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🍁.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 30 மே, 2024

இன்றைய சம்பவம்...

 


இன்றைய சம்பவம்:-

பல நாட்களாக ஒத்தி வைத்த வங்கிக்கு செல்லும் பணி இன்று...ஒத்தி வைப்பது என்ன அங்கே சென்றால் ஏதேனும் வம்பு வரும் என்றே நான் வங்கிக்கு செல்வதில் இருந்து பின் வாங்கி விடுவேன்... ஆனால் ஏடிஎம் அட்டை காலாவதி ஆகி பல மாதங்கள் ஆகிறது... அதனால் செல்ல வேண்டிய நிலை மற்றும் வங்கி புத்தகத்தில் பதிவு போட வேண்டிய பணியும் இருந்தது... எப்படியோ ஒவ்வொரு நாளும் இன்று நாளை என்று போக்கு காட்டி பிடிவாதமாக அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று விட்டேன்... வரும் போது ஞாபகமாக பேனா எடுத்து வர வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டு அடுத்தவரிடம் கடன் வாங்கும் நிலை வேறு.. எப்படியோ வங்கி சேமிப்பு புத்தகத்தில் பதிவு போட காத்திருந்தேன்.. எனக்கு முன்பு இருக்கும் வாடிக்கையாளர் வரை பதிவு போட்டு தந்த இயந்திரம் எனது முறை வரும் போது அது வேலையை காட்டி விட்டது... அதாவது அது வேலை செய்யவில்லை என்று அந்த வங்கி ஊழியர் ஒரு அலட்சியமாக சொன்னது மட்டும் அல்லாமல் வங்கி இருப்பு இவ்வளவு இருக்கிறது இந்தாம்மா என்று அலட்சியமாக எனது சேமிப்பு புத்தகத்தை எனது கையில் திணித்த போது எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை...என்னை பார்த்தால் எப்படி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றால் வேறு இயந்திரம் வாங்க வேண்டும் என்று கோபமாக சொல்லி விட்டு மேலும் பதிவு செய்யும் இயந்திரம் வாங்க வேண்டும் என்றால் பிரதம மந்திரியின் ஆர்டர் வேண்டுமா என்று சற்றே கோபத்தோடு கேட்டது தான் தாமதம்... அந்த ஊழியர் அட என்னம்மா இப்படி பேசுகிறீர்கள் என்று கொஞ்சம் பின்வாங்கி கொஞ்சம் நேரம் அமருங்கள் என்று சொல்லி விட்டு என்னவோ செய்து பதிவு செய்து தந்தார்... எனது ஏடிஎம் அட்டை பற்றி கேட்டதற்கு பக்கத்தில் உள்ள பெண் ஊழியரிடம் சொன்னார்.. அந்த பெண் ஊழியர் ஒரு படிவம் ஒன்றை கொடுத்து இதில் கையெழுத்து மட்டும் போட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டு உடனே அட்டையும் கொடுத்து விட்டார் அந்த பெண் ஊழியர்... ஏற்கனவே நான் ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இருந்தேன் அது பற்றிய விளக்கத்தை கொடுத்து விட்டு சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு வங்கி அட்டையை பெற்றுக் கொண்டு கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி பார்த்தால் எனக்கு பேனா கடன் கொடுத்தவரை காணவில்லை... பிறகு அங்கே வேலை செய்யும் ஊழியரிடம் யாரேனும் வந்து பேனா கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டு வெளியே வந்தால் ஏன் இளைய வேணி இப்படி எங்கே சென்றாலும் சண்டை போடுகிறாய் என்று என் கணவர் கேட்கிறார்...நானோ நான் எங்கே சண்டை போடுகிறேன்... நான் மென்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டு தான் உள்ளே போனேன்.. ஆனால் அவர்கள் தான் சண்டை போட வைத்து விட்டார்கள் என்றேன்... இதில் எனது தோற்றமும் ஒரு காரணம் என்று சொல்வேன்...எங்கே போனாலும் ஒரு சிலிப்பரை போட்டுக் கொண்டு நாகரீகமான அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருந்தால் ஒன்றும் தெரியாத அறிவிலி என்று நினைத்து விடுகிறார்கள்.. பிறகு பேச ஆரம்பிக்கும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது... நான் விபரம் பல அறிந்தவர் என்று 🙄. மேலும் அரசியல் என்னை எப்போதும் கைவிட்டது இல்லை... நல்ல வேளையாக பிரதமரின் தியானத்தை கலைத்து விட்ட பாவம் எனக்கும் இல்லை அந்த வங்கி ஊழியருக்கும் இல்லை என்கின்ற ஆறுதலோடு வங்கியை விட்டு வெளியே வருகிறேன்...😌.

#வங்கி செயல்பாடுகளும்

#எனது செயல்பாடும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நான் சொல்வது கேட்கும் இடத்தில் ஒரு ஓநாய்...

 


நான் சொல்வதை கேட்கும் இடத்தில் 

ஒரு ஓநாய் இருக்கிறது!

தந்திரங்கள் நிறைந்த ஓநாயின் 

மனதை எப்படியோ 

நான் ஆக்கிரமித்து விட்டேன்...

இன்னும் ஒரு சில நொடிகளில் 

நான் அதற்கு சில கட்டளைகள் இட்டு 

பயணிக்க வேண்டும்...

ஆனால் அதற்கு மேல் அதற்கு 

கட்டளை இட மனமில்லாமல் 

நகர்வதை பார்த்து 

அந்த ஓநாய் ஏதோவொன்று 

உந்தி தள்ள 

என் முன் வந்து மண்டியிடுகிறது...

நான் அதன் தலையை 

ஆதரவாக கோதி விட்டு 

எந்த கட்டளையும் பிறப்பிக்காமல் 

கடந்து செல்கிறேன்!

என் இயல்பை மீறிய செயலை 

நான் செய்கிறேன் என்று 

அங்கே பலர் ஆச்சரியபப்படும் போது 

அந்த ஓநாயின் பேரன்பு கொண்ட 

இயல்பு 

ஒரு மாய திரையால் 

மறைக்கப்படுவதை பார்த்து 

சில கண்ணீர் துளிகள் 

கசிந்து அந்த ஓநாயின் 

உடல் சிலிர்க்கிறது!

இது ஒரு மாய உலகம் என்று!

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன்/30/05/24/முன்னிரவு 7:50.

இன்னும் நிறைய சாபங்கள் எதிர்பார்க்கிறேன்...


சபிக்கப்பட்ட நாட்களோடு

பயணிப்பது எனக்கு ஒன்றும் 

புதிதல்ல!

சாபங்கள் ஏதோவொரு வகையில் 

ஆறுதல் தருகிறது என்று 

எண்ணிக் கொண்டே 

பயணிக்கிறேன்!

சில சூட்சமங்கள், உண்மைகள் 

முகமூடி கிழித்து உணர்த்தி 

விடுவதும் 

சாபங்கள்...

இன்னும் நிறைய சாபங்கள் 

எதிர்பார்க்கிறேன் நான்...

இன்னும் பல கர்மாக்களின் 

பிடியில் இருந்து 

விடுவித்துக் கொள்ள 

சாபங்களே தோணி என்று 

தீவிரமாக நம்பும் நான் 

சபிக்கப்பட்ட நாட்களில் 

பேரமைதியோடு பயணிக்கிறேன்!

இளைய வேணி கிருஷ்ணா.

நாள் 30/05/24.

வியாழக்கிழமை.

முன்னிரவு 7:30.

செவ்வாய், 28 மே, 2024

கிருஷ்ணா இணையதள வானொலி இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் யுக சரண் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சியோடு இணைந்துக் கொள்ளுங்கள் ✨🎉🎻.

இது இசையோடு ஒரு நெடுந்தூர பயணம் 🎻✨🎉.https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 27 மே, 2024

கிருஷ்ணா இணையதள வானொலி

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் யுக சரண் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சியோடு இணைந்துக் கொள்ளுங்கள் ✨🎉🎻.

இது இசையோடு ஒரு நெடுந்தூர பயணம் 🎻✨🎉.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வெள்ளி, 24 மே, 2024

இரவின் நாடகம்... காலையின் தாண்டவம்...

 


காலையில் எழுந்ததும் குரங்குகள் சண்டை இடுவதில் இருந்து விலக்கி விட பஞ்சாயத்து... இரவு முழுவதும் தெரு நாய்கள் சண்டை அதன் குரல்கள் மற்றும் மது பிரியர்கள் சாலையில் யாரையோ கோபமாக திட்டும் வசவுகள் அந்த ஏழு உலகத்திற்கும் கேட்கும் அளவுக்கு மணிக் கணக்கில் பேச்சு.. இதற்கு இடையில் அதெல்லாம் அமைதி அடைந்ததும் நான் தேவாரம் திருவாசகம் உரக்க வாசித்து காற்றில் கலந்த அந்த கழிவுகளை நீக்கி விட்டு உறங்கலாம் என்றால் ஆயிரம் ஆயிரம் கவலைகள்... கவலைகள் என்றால் என்னை பற்றியா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை... ஏனெனில் நான் எனக்கு என்ன நடந்தாலும் கவலை மட்டும் அடைவதே இல்லை... அது தான் பெரும் வரம் எனக்கு... என்னடா வாழ்க்கை என்று சோர்ந்து போய் உட்கார முடியவில்லை...ஏதொவொன்று இழுத்து செல்கிறது...அது தான் நிஜமா மாயையா... 🚣🏃

நாள் 25/05/24.

சனிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 23 மே, 2024

ஆத்ம விசாரம் மஹா பெரியவர் வாக்கு

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

மஹா பெரியவர் எத்தனையோ விசயங்களை சாதாரண மக்களும் புரிந்துக் கொள்ளும் படி நிறைய ஆன்மீக விசயங்களை நம்மிடம் பகிர்ந்து இருக்கிறார்...அவை எல்லாம் தெய்வத்தின் குரல் என்கின்ற புத்தகத்தில் தொகுத்து இருக்கிறார்கள் ஆன்மீக அன்பர்கள்.. அப்படியான தெய்வத்தின் குரல் தொகுப்பில் இருந்து ஒரு துளி கீழேயுள்ள லிங்கில் எனது குரலில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏 🎻 🙏.

கீழேயுள்ள லிங்கில் தெய்வத்தின் குரல் கேட்கலாம்...

https://youtu.be/lSeklXXNfqE?si=BPgdnnGb2SAiVUah


செவ்வாய், 21 மே, 2024

இளைப்பாறுதல் இங்கே....


அந்த நள்ளிரவு வேளையில் 

திடீரென ஏதோ கனவொன்று கண்டு 

திடுக்கிட்டு எழுந்து 

கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

மின் விளக்கை போடும் போது 

எனது அறையில் நடுவில் தரையில் கொஞ்சம் சுதந்திரமாக உறங்கிக் கொண்டிருந்த பல்லி திடுக்கிட்டு எழுந்து தடதடவென ஊர்ந்து சுவரில் 

வேக வேகமாக போக எத்தனித்து ஓரிரு முறை கீழே விழுந்ததை 

பார்க்கும் போது அந்த மோசமான கனவிலேயே 

நம்மை நாமே தேற்றிக் கொண்டு எழாமல் உறங்கி இருக்கலாமோ என்று 

எண்ண வைத்து விடுகிறது...

இளைப்பாறுதல் இங்கே 

தற்போதைய நிலையில் 

தொடர் ஆசுவாசமான நேரமாக நம்மோடு பயணிப்பதற்கு சில பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும் போல என்று மீண்டும் உறக்கத்தை வரவழைக்க போராடி தோற்பது நான் மட்டும் அல்ல...

அந்த 🦎 பல்லியும் தான்...

#சக #ஜீவ ராசியின் #இளைப்பாறுதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

முன்னிரவு பொழுது 10:35.

ஆத்ம விசார கவிதை 🍁


எனது இறப்பிற்கு 

உங்களிடம் இருந்து 

ஆழ்ந்த இரங்கலை 

நான் எப்போதும் 

எதிர்பார்ப்பது இல்லை...

நான் தீயில் வேகும் போது 

அங்கே அகங்காரம் கொண்டு 

நகைக்காமல் இருங்கள் 

அது போதும் எனக்கு...

உங்கள் நகைப்பு எனது வாழ்வை 

பற்றியது என்றால் 

இங்கே என்னை கொஞ்சம் கொஞ்சமாக 

உள்வாங்கும் தீயின் சூட்சம பாடம் 

உங்கள் காதுகளில் விழாத அளவுக்கு 

அஞ்ஞானிகளாகவே

விடை பெறுகிறீர்கள் 

நான் எரிந்துக் கொண்டு இருக்கும் 

சுடுகாட்டில் இருந்து...

#ஆத்ம விசார கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

அந்தி மாலைப் பொழுதில் 5:40

அந்த கடந்து செல்லும் நண்பகல் பொழுதொன்றில்...


அந்த நண்பகல் கடந்த சில மணித்துளிகளில் 

வேலைகள் முடிந்து சற்றே 

இளைப்பாறுவதாக...

நான் அந்த மனதிற்கு சொல்லி வைத்தது தான் தாமதம்...

என்னை ஆக்கிரமித்து 

ஆயிரம் ஆயிரம் கேள்விகளை 

கேட்டு தொலைக்கிறது...

வாழ்வின் பயணத்தில் 

என்ன கற்றுக் கொண்டாய்?

இன்னும் எவ்வளவு தூரம் நீ பயணிக்க வேண்டும் என்று தெரியுமா?

வாழ்வின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவே 

நீ இன்னும் சம்பாதிக்கவில்லை என்று 

குத்திக் காட்டும் கேள்விகள் உட்பட இப்படி பல பல கேள்விகள் கேட்டு 

இம்சை செய்துக் கொண்டே இருக்கும் போதே 

அதிகாலையில் இருந்து செய்த வேலையில் 

அயர்ந்து கண் மூடி உறங்கி விட்டேன்...

கண் விழித்து பார்க்கும்போது மாலை மணி ஐந்து என்று காட்டுகிறது...

மீண்டும் மாலை பணிகளை செய்ய ஆயத்தம் ஆகிறேன் நான்...

என்னை ஏதோ குற்றவாளி தப்பித்து செல்லும் போது 

காவல் அதிகாரி மறித்து பிடிப்பது போல 

கொஞ்சம் நில்...

நான் நண்பகலில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உறங்கி விட்டாயே...

தற்போது அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு போ என்றது...

நான் அதை கண்டுகொள்ளாமல் வேகமாக எனது பணிகளில் கொஞ்சம் எரிச்சலோடு கவனம் செலுத்துகிறேன்..

உனக்கு திமிர் என்று மீண்டும் மறிக்கும் போது 

கொஞ்சம் நகர்ந்து செல் 

நான் எனது பசிக்கான உணவை தயாரிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றேன்...

அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் கேட்டது...

உயிர் பிழைத்தல் தான் சம்பந்தம் என்று விட்டேத்தியாக சொல்லி விட்டு ஒரு சுவையான உணவை தயாரிக்கும் உற்சாகத்தில் அதன் எரிச்சலை கண்டுக் கொள்ள 

எனக்கு நேரம் இல்லாமல் போனது....

#உயிர்பிழைத்தல்.

#இளையவேணிகிருஷ்ணா.

#நண்பகல் #கடந்த #மணித்துளிகள்.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

தேநீர் கவிதை 🍁

 


என் ஆறுதலுக்கோ 

தேறுதலுக்கோ 

எந்த துணையையும் 

தேடியதே இல்லை...

எந்தவொரு ரணமும் 

தீராத வலியை 

கொடுத்த போதும் 

ஒரு சில நொடிகள் 

மனதிற்கான 

இளைப்பாறுதலைக் கொடுத்து 

கொஞ்சம் அதை அப்படியே 

கண் மூடி இருக்க 

சொல்லி விட்டு 

ஒரு தேநீர் கோப்பையை

அந்த மேசை மீது வைத்து விட்டு நகரும் போது 

அந்த தேநீரின் மணத்தில் 

பாதி பாரம் கரைந்து போக 

மீதி பாரத்தை அதை சுவைத்துக் கொண்டே 

அங்கே சாலையில் நனைந்து 

செல்லும் மனிதர்களை 

வேடிக்கை பார்த்து 

கரைத்துக் கொள்கிறேன்...

இன்னும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் 

வடிந்து விடவில்லை என்று 

என் காதருகே உரசி சென்ற 

அந்த பறவையின் சிறகில் 

இருந்து விழுந்து நனைத்த 

மழைத் துளி ஒன்றில்....

#தேநீர்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

நண்பகல் கடந்த மணித்துளிகள் 1:07.

புதன், 15 மே, 2024

இன்றைய தலையங்கம்

 

இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை நோகடிக்க வேண்டும் என்று எனக்குள் கேள்வி எழுகிறது...பாடகி சைந்தவி ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து தற்போது இணையதளத்தில் பெரும் விவாதமாக போய்க் கொண்டு இருக்கிறது... அவர்கள் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து திருமணம் செய்தவர்கள்.. பதினோரு ஆண்டு காதல் வாழ்க்கையில் ஒரு அன்பு பரிசாக குழந்தையும் உள்ளது... பெரும் காதல் கொண்ட தம்பதிகள் ஏதோ அவர்களுக்குள் ஒத்து போகவில்லை தீர்க்கமாக ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்... இது முழுக்க முழுக்க அவர்கள் சொந்த பிரச்சினை... மேலும் அதீத காதல் கொண்டு நேசித்தவர் கள் பிரியக் கூடாது என்று இயற்கை விதிகள் ஏதும் இல்லையே... சொல்ல போனால் பெரும் காதல் கொண்ட தம்பதிகள் தான் மனதில் ஏதோ பாரத்தோடு பிரியவும் கூடும்... அது அவர்களின் பெரும் நேசம் கொண்ட இரு மனதிற்கு தெரிந்தால் போதும்... நீங்கள் ஏன் உங்கள் சொந்த கருத்துக்களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்... ஒரு பிரபலமாக இருப்பது அவ்வளவு பெரிய கொடுமையான விசயமா என்று எண்ண தோன்றுகிறது... அவர்களின் காயத்திற்கு மருந்து கூட நீங்கள் போட வேண்டாம்... அந்த தம்பதிகளை நிம்மதியாக மன போராட்டம் இல்லாமல் வாழ விடுங்கள்..ஏதோ அவர்களின் நெருக்கத்திற்கு ஒரு ஆசுவாசமான இடைவெளி தேவைப்படுகிறது... அது அவர்கள் இருவருக்கும் தேவையாக இருக்கிறது... இதில் உங்களை கேட்டு தான் முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பது போல பதிவு போடாதீர்கள்...

உண்மையில் சைந்தவி யின் தேவாமிர்த குரலில் கண்களை மூடி மிதந்து செல்லுங்கள்... மற்ற படி அவர்கள் சொந்த வாழ்க்கையை பற்றி அவர்களும் அவர்களின் விதியும் தீர்மானிக்கும்...பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறாய் என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

#இன்றையதலையங்கம்.

#பாடகிசைந்தவி.

#ஜிவிபிரகாஷ்.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 12 மே, 2024

இரவு கவிதை 🍁

 


ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்

இருந்தாலும் 

என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில்

உங்களை மறந்து உறங்கி 

இருக்கிறீர்களா?

அவள் நிரந்தரமானவள்...

என்றும் நமது கவலைகளுக்கு 

கண்ணீருக்கு 

சூட்சும ஸ்பரிசத்தில் 

ஆறுதல் சொல்லி

நிச்சலனமான பேரமைதியோடு

உறக்கத்தை தருபவள்!

#இரவு கவிதை 🍁

முன்னிரவு பொழுது 10:00.

நாள்:12/05/24.

ஞாயிற்றுக்கிழமை.

இளைய வேணி கிருஷ்ணா.

வியாழன், 9 மே, 2024

பெரும் தவிப்போடு காத்திருக்கிறான் அவன்...


உள்ளேயும் வெளியேயும்

ஓடி ஓடி விளையாடும்

மூச்சுக் காற்றுக்கு தெரியாது

திக்கி திணறி தனது ஓட்டத்தில் இருந்து

விலகும் போது

எங்கே அருவமாக அலைந்து திரிந்துக் கொண்டு இருப்போம் என்று...

நிச்சயமாக எனக்கும் தெரியாது அதன் நிலை என்ன என்று...

ஆனால் இந்த ஆட வல்லவனுக்கு தெரியும்

இவள் ஒரு ஆழ்ந்த பித்து நிலையில் நம் மீது மோகம் கொண்டவள் என்று...

என் மூச்சு காற்று

ஓயும் போது இந்த உடல் கீழே வீழ்ந்து விடும் முன்

என்னை பற்றி பிடித்து

ஈர்த்து தனது

இதய கமலத்தில்

நோகாமல் இழுத்து இரண்டற கலந்துக் கொள்ளும் நொடிக்காக

அங்கே ஒருத்தன் ஏங்கி தவிக்கிறான்...

இங்கே வெறும் சம்சார கோட்டையை விட்டு விட்டு

விலகி வரும் நாளுக்காக

அவன் அங்கே பெரும் தவிப்போடு காத்திருக்கிறான்...

என் நிலைமையை இங்கே புரிந்துக் கொள்பவர்

அவனை தவிர வேறு யாராக இருக்கக்கூடும்???.

#ஆடவல்லானின்காதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

#ஆத்மவிசாரகவிதை.

#நாள்:09/05/24.

வியாழக்கிழமை.

முன்னிரவு 10:58.

பாடலும் பாடலின் வருடலும்

 


ஊரு சனம் தூங்கிடுச்சி ... பாடல் எஸ்.ஜானகியின் குரலில் கேட்கும் போது எப்போதும் அதை புதிதாக கேட்பது போலவே தோன்றும்.. அதுவும் இந்த இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்கும் போது அதன் மெல்லிய புல்லாங்குழல் இசை மற்றும் தேன் தடவிய குரலில் நமது செவிகளுக்கு மயிலிறகால் வருடுவது போல தோன்றும்... கண்களை மூடி கேட்கும் போது ஏதோவொரு அடர்ந்த காட்டில் நாம் மட்டும் உலாவுவது போல தோன்றும்..விரக தாபத்தில் திளைக்கும் அந்த நாயகியின் அருமையான உணர்வுகளை குரலில் கொண்டு வருவது எல்லாம் வேற லெவல்... இன்றும் என்றும் எப்போதும் இந்த பாடல் ஏதோவொரு மன கிறக்கத்தை நம்மை போன்ற இசை பிரியர்களுக்கு தந்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை 🎻🎻🎻🎻🎻🎻🍁🍁🍁🍁.

#பாடலும் #பாடலின் #வருடலும்.

#இளையவேணிகிருஷ்ணா.

முன்னிரவு 9:59.

நாள் 09/05/24.

வியாழக்கிழமை.

புதன், 8 மே, 2024

இரவு கவிதை 🍁


எத்தனையோ நட்சத்திர 

கூட்டங்களுக்கு

நடுவில் பிறையை தேடி அலையும்

 கண்களை போல...

அத்தனை சலசலப்பான உலகத்திலும்

பேரமைதியை தேடி அலையும்

என் மனதின் நிச்சலனமான

பயணத்தை எண்ணி

வியக்கிறேன் இங்கே...

இந்த இரவோ என்னோடு

கொஞ்சம் உரையாடக் கூடாதா

உன் மனம் வரும் வரை என்று

கெஞ்சுகிறது...

ஒரு தேடலும் ஊடலும்

இங்கே கலந்து என்னை 

திணறடிக்கிறது

இளம் தென்றல் என் நிலையை 

பார்த்து மெலிதாக தென்றல் எனும்

இசையை கொண்டு தாலாட்ட

நான் சற்றே கண் அயருகிறேன்...

#இரவு கவிதை 🍁.

நாள் 08/05/24.

புதன்கிழமை.

#முன்னிரவுப் பொழுது 10:15.

#இளையவேணிகிருஷ்ணா.

ஓவியத்தின் வண்ணத்தில் ஒரு தீராத காதல் 🍁

 இசையும் வாசிப்பும்

நம்மை வேறொரு உலகத்திற்கு

கடத்திச் செல்லும்...

என் உலகம் எப்போதும் பேரமைதியும் ஆனந்தமும் நிறைந்தது!

கீழேயுள்ள படத்தில் எனது கைவண்ணத்தில் பேரமைதியான உலகம் தெரிகிறதா நேயர்களே 🚴🍁🚣🎻.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/05/24.

புதன்கிழமை.

முன்னிரவு பொழுது 9:56.



வெள்ளி, 3 மே, 2024

டிராவல்ல ஒரு காதல் திரை விமர்சனம்

 


திரை விமர்சனம்:-#டிராவல்ல #ஒரு #காதல் ரொம்ப நாட்களாக பயணத்தை பற்றிய ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்... அதற்கான வாய்ப்பு நேற்று அமைந்தது... ஆம் அந்த படம் டிராவல்ல ஒரு காதல்... படத்தின் பெயரே நிச்சயமாக இந்த படம் நமக்கு ஒரு பயண அனுபவத்தை கொடுக்கும் என்று நினைத்தேன்... ஆம் அந்த படம் என்னை ஏமாற்றவில்லை... இந்த கோடை கால இரவொன்றில் தென்றல் காற்று போல மனதை வருடி தோய்வில்லாமல் என்னையும் அவர்களோடு செலவில்லாமல் அழைத்து சென்றது...

கதை களம் இது தான்... அதாவது அது கொரணா இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்... திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்கும் வீட்டில் வரன் தேடும் படலம் நடைபெறுகிறது... இருவருக்கும் அவ்வளவு எளிதாக வரன் அமையவில்லை அல்லது அவர்கள் எண்ணம் போல வரும் வரன் இல்லை...இரு வீட்டாரும் வரனின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு நாயகன் நாயகியை எப்படியாவது திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்... ஆம் சொல்ல மறந்து விட்டேன்.. கதாநாயகி #ராதிகா ஒரு வானொலி அறிவிப்பாளர்... கதாநாயகன் #கிருஷ்ணா பயணத்தில் மிகுந்த ஆர்வம் உடைய ஒரு கணினி ஊழியர்... தான் கண்ட பயண அனுபவத்தை ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து அதில் பதிவேற்றம் செய்து வருபவர்.. அது ஒரு லாக் டவுன் காலம் என்பதால் கதாநாயகன் கிருஷ்ணாவின் தாயார் கதாநாயகி ராதிகாவை தன்னோடு காரில் அழைத்து வர சொல்கிறார்... மறுநாள் பேருந்து செயல்படாது என்பதால் கதாநாயகன் கிருஷ்ணா முதலில் இதற்கு மறுத்தாலும் தாயாரின் பேச்சை தட்ட முடியாமல் நாயகி ராதிகாவை தன்னோடு அழைத்து வருகிறார்...கதாநாயகியை அவரது சொந்த ஊரான கேரளாவில் விட்டு விட்டு தனது ஊர் செல்ல வேண்டும் இது தான் கதாநாயகனின் வேலை.. இருவரும் தனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் தமது இளமைக் கால பயணங்கள் இப்படி பயணம் முழுவதும் இயல்பாக உரையாடி நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை மறக்க செய்து விடுகிறார்கள்... பயணம் சிறப்பாக அமைந்து கதாநாயகியை எந்த சிரமமும் இல்லாமல் ஊரில் நமது கதாநாயகன் #கிருஷ்ணா வீட்டில் விட்டாரா அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா என்பது தான் கதையின் சாராம்சம்...அதை எல்லாவற்றையும் விட காட்சி அமைப்பு இயற்கையோடு இணைந்து எடுத்த ஒரு சினிமா மற்றும் பயணத்திற்கு இதமான பாடல்கள் என்று நம்மை வேறு உலகத்திற்கு கூட்டி சென்று விடுகிறார் #இயக்குநர் #கிருஷ்... நிச்சயமாக தற்போதைய சூழலில் தேவையான ஒரு படம் என்று சொல்லலாம்... அதுவும் நான் மிகவும் ரசித்து பார்த்தேன்... ஏனெனில் நான் ஒரு இயற்கையை ரசிக்கும் பெரும் பித்து பிடித்தவள்... மேலும் அந்த வானொலி அறிவிப்பாளர் கதாநாயகி என்பதால் மிகவும் ரசித்து பார்த்தேன்... படம் முடியும் போது ஏன் முடிந்தது... இன்னும் கொஞ்ச தூரம் நம்மை அவர்களோடு பயணத்தில் அழைத்துச் சென்று இருக்கலாமே என்கின்ற ஏக்கம் மட்டும் இருந்தது உண்மை...

இயற்கையை நேசிப்பவராக பயணத்தை நேசிப்பவராக அது எல்லாவற்றையும் விட நம்மோடு நம் இயல்பை 

ஒத்தவர்கள் பயணிப்பது எவ்வளவு இனிமை என்பது நிச்சயமாக உங்களுக்கு புரியும்...

நேரம் கிடைத்தால் இந்த திரைப்படத்தை பார்த்து ரசியுங்கள் நேயர்களே 🎻✨🎉🍁🦋.

#டிராவல்ல #ஒரு #காதல்.

#திரைவிமர்சனம்.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁


இளைப்பாறி செல்கிறேன்

இங்கே இந்த தெரு விளக்கின்

அந்தவொரு வெப்பம் தாங்கிய

கிளையில்...

அந்தி சாயும் இந்த நேரம்

இன்னும் சற்று நேரத்தில்

முடிந்து விடும்...

எனது கூடெனும் வீட்டை

இங்கே அடையாளம் காண்பித்து

செல்லுங்கள்

சாலையில் ஆக்ரோஷமாக

பயணிக்கும் மனிதர்களே!

#இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/05/24.

வெள்ளிக்கிழமை.

முன்னிரவு பொழுது 9:24.

உன் சூட்சமத்தில் நான் எங்கே தொலைந்தேன்?


உன் சூட்சமத்தில்

நான் எங்கே தொலைந்தேன்

என் இருப்பு என்பதே

மாயை என்கின்ற போது 

நான் எனும் மாயையை

உன் திருவடியில் அழுத்தி...

உன் தூக்கிய திருவடியில்

என் பேரின்ப ஒளியை பாய்ச்சி 

பிறவி எனும் பெரும் காயத்திற்கு 

மருந்திட்டு

உன்னுள்

கரைத்துக் கொள்ளும் நாளும் எங்கே

ஒளிந்துக் கொண்டது என்று

வாழ்நாளில் தேடி தேடி 

தொலைகிறேன்

இந்த பேதை....

#ஆத்மசொரூபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/05/24.

வெள்ளிக்கிழமை.

முன்னிரவு பொழுது 8:48.

அந்த சாலையோர புளிய மரத்தில்...


அந்த சாலையோர

புளிய மரத்தில்

வசித்து வந்த பறவைகளின்

கீச்சிடும் குரல் தற்போது

நம்மிடம் இல்லை...

அந்த பறவைகளின் ஓராயிரம் சிறகுகள் இளைப்பாறிய 

அந்த கிளையின் முறிவு

சொல்லொணா துயரத்தை

எழுதி சென்றது

வானின் வழியே...

இரை தேடி அலைந்து திரிந்து 

தனது கூட்டை தேடி

இரவு முழுவதும் திரிந்து

சோர்ந்து அங்கே ஏதோவொரு சுவற்றில்

அடைக்கலம் ஆன போது

விடியல் தோன்றியது...

மீண்டும் சிறகை விரித்து

வானில் பறந்து இரை தேடி

அலைந்து திரிந்தது

அந்த பறவை...

நிதர்சனத்தை

புரிந்துக் கொண்டு எங்கோ ஒரு முள் காட்டில் கிடைத்த அந்த செடியில் இளைப்பாறி

இரவை கடத்துகிறது

உறங்கியும் உறங்காமலும்...

அந்த முட்களின் உரசலின் வலியை 

அதற்கு அந்த நிலையை பரிசளிக்க அனுமதி தந்த

நாம் இங்கே 

அந்த சூரியனை சபித்து

சாலையில் நடமாடி

இரவினை வெந்தணலில்

கழித்து வெப்ப காற்றை

சபித்து சலசலக்கிறோம்...

இன்னும் ஓரிரு மாதங்களில்

விடை பெறும் கோடை தானே என்று...

இப்போதும்

அங்கே அந்த பறவைகளின் இருப்பிடத்தை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லாமல் கடக்கும்

நாங்கள் மானுடர்கள் தான்...

நம்புங்கள் கவலையுற்ற பறவைகளே.....

#கோடை

#மரங்கள்

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:03/05/24.

வெள்ளிக்கிழமை.

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...