அப்படி ஒரு விசித்திரமான வழக்கொன்றை போல பல வழக்குகளை அந்த நீதிபதி பார்த்து இருக்கிறார் என்றாலும் இது அதனிலும் விசித்திரமான வழக்கு.. அந்த வழக்கு சபைக்கு விசாரணைக்கு வந்தது..நீதிபதி வழக்கை விசாரிக்க தொடங்கினார்..
என்னம்மா பிரச்சினை என்று நீதிபதி கேட்டார்..
நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லை நீதிபதி அவர்களே..சென்ற வேலை தங்களுக்கு முடிந்ததா என்று தான் கேட்டேன் கணவரிடம்.. அதற்கு அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும் நீங்களே சொல்லுங்கள் ஐயா என்றார் அந்த மனைவி...
நீதிபதியோ சென்ற வேலை முடிந்தது இல்லை என்று தான் பதில் சொல்லி இருக்க வேண்டும் அம்மா என்றார்..
அதைத் தானே சொல்லி இருக்க வேண்டும்..அதை சொல்லாமல் பயங்கரமாக என்னை திட்டி விட்டார் ஐயா.. இவரோடு எல்லாம் என்னால் வாழ இயலாது ஐயா என்றார்..
உடனே நீதிபதி கொஞ்சம் பொறு அம்மா என்று சொல்லி விட்டு கணவர் பக்கம் திரும்பி நீங்கள் அதற்குரிய பதிலை சொல்லாமல் ஏன் அவர்களை சம்மந்தமே இல்லாமல் ஏன் திட்டினீர்கள் என்று கேட்டார்..
கணவரோ ஐயா நானே அப்போது தான் உள்ளே நுழைந்தேன்..உடனே எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று எத்தனை முறை அவளிடம் சொல்வது ஐயா? இப்போது இங்கே தான் தெரிந்துக் கொண்டேன்.அவள் என்ன கேள்வி கேட்டாள் என்றே என்றார்..
உடனே நீதிபதி அந்தளவுக்கு நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு கோபம் அடைகிறீர்கள் என்று கேட்டு விட்டு அந்த மனைவியிடம் திரும்பி அம்மா நீ கேட்ட கேள்வியையே அவர் இப்போது தான் தெரிந்துக் கொண்டார் என்று சொல்கிறார்.. அதனால் இதை வழக்காக விசாரிக்க முடியாது.. நீங்கள் அவரை மன்னித்து விடுங்கள் என்றார்..
சரிங்க ஐயா..இனி அப்படி நடக்காது என்று அவரிடம் வாக்கு மூலம் வாங்கிக் கொடுங்கள் ஐயா என்றாள்.
உடனே கணவரோ அதெல்லாம் முடியாது ஐயா அவளோடு இனி சேர்ந்து வாழ இயலாது என்றார்..
நீதிபதி ஏன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்கிறீர்கள்.அவர் தான் மன்னித்து விட்டேன் என்று சொல்கிறாரே.. நீங்கள் தான் இனி கோபத்தை குறைத்து ஒழுங்காக அவரோடு ஒத்து வாழ வேண்டும் என்றார்..
உடனே அந்த கணவரோ ஐயா அவள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்று என்னை முட்டாள் என்று திட்டி விட்டாள்.. அதனால் இப்படி கணவரை மோசமாக நடத்தும் அவளோடு வாழ முடியாது என்று சொன்னான்.
நீதிபதி இப்போது பெருமூச்சுடன் ஏன் அம்மா நீங்கள் இப்படி அவரை முட்டாள் என்று திட்டினீர்கள் என்று கேட்டார்..
உடனே அந்த மனைவி அதற்கு அவர் தான் உடனே நானா முட்டாள் நீதான் முட்டாள் என்று சொல்லி விட்டாரே.. அதற்கும் இதற்கும் சரியாக போய் விட்டது ஐயா என்றார்..
உடனே நீதிபதி அந்த கணவரிடம் அதுதான் சரி என்று நினைத்து நீங்கள்தான் பதிலுக்கு அதே வார்த்தை கொண்டு அவரை திட்டி விட்டீர்களே.. அதனால் இதனோடு தொடர்புடைய இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று சொன்னார்..
உடனே அந்த தம்பதிகள் அதெல்லாம் முடியாது நீங்கள் இந்த பிரச்சினைக்கு பஞ்சாயத்து செய்து அனுப்பி வையுங்கள் ஐயா என்றார்கள்..
அது தான் வழக்கு முடிந்தது என்று சொன்னேனே..
வழக்கு எங்கே ஐயா முடிந்தது.... எங்கள் பிரச்சினையை முடித்து வையுங்கள் என்றார்கள்..
விவாகரத்து எல்லாம் தர முடியாது என்றார் நீதிபதி.
உடனே அந்த தம்பதிகள் விவாகரத்து யார் ஐயா கேட்டார்கள்.. என்று கேட்டார்கள்..
இப்போது நீங்கள் தானே கேட்டீர்கள் விவாகரத்து என்றார் கணவரை பார்த்து..அவள் மன்னித்து சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டு நான் வாழ்வதா அதனால் தான் ஐயா அப்படி சொன்னேன் என்றார்..
என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இது நீதிமன்றம்.. உங்கள் விளையாட்டு மன்றம் இல்லை என்றார் கொஞ்சம் கோபமாக.. நாங்களும் அப்படி நினைக்கவில்லை ஐயா.. அதனால் தான் இங்கே வந்தோம். எங்கள் சண்டையை தானே தீர்க்க சொன்னோம் என்றார்கள் கோரஸாக..
நீதிபதி மைண்ட் வாய்ஸில் ஸ்வப்பா இப்பவே கண்ணக் கட்டுதே 🙄😟 என்று நினைத்து அப்படியே அமர்ந்து விட்டார்...
இப்போது என்ன செய்ய வேண்டும் என்று மிகவும் பொறுமையாக கேட்டார்.. எங்கள் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் அதுதான் வேண்டும் என்றார்கள்..
நீதிபதி இந்த ஒரு வழக்கை நாம் எப்படி கையாள்வது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.. பிறகு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து வீட்டுக்கு சென்று விட்டார்..
வீட்டில் நுழையும் போதே நீதிபதி மனைவி ஏன் இன்று இவ்வளவு தாமதம்.. அவ்வளவு பணிகளா உங்களுக்கு இன்று என்று கேட்டார்...
ம்ம் என்று சொல்லி விட்டு உள்ளே மிகவும் அமைதியாக நுழைந்து விட்டார்.ஏனோ இன்றைய வழக்கில் வந்த அந்த பெண்மணி ஞாபகத்துக்கு வந்து வந்து போனாள்..நீதிபதிக்கு...
#ஞாயிறு #குட்டி
#நகைச்சுவைகதை.
#இளையவேணிகிருஷ்ணா.