அவளோடு ஓர் பயணம்(7):-
நான் இன்று கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தேன். கடந்த சில நாட்களாக இருந்த வருத்தம் இல்லை இது.புது ஆங்கில வருட பிறப்பை நண்பர்களோடு வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்கின்ற வருத்தம் தான் அது. என்ன செய்வது நதி சொல்வது போல எல்லாம் விதி விளையாடும் விளையாட்டில் நாம் கைபொம்மைகளோ..என்று தத்துவம் எனது மனதை சாந்தமாக்கியது.இந்த தத்துவம் கூட நமக்கு நிறைய விசயங்களுக்கு வடிகால் போலும். இதனால் தான் எல்லோரும் தத்துவத்தின் பின்னால் ஓடுகிறார்களோ என்று நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டேன்..
அப்போது நதியிடம் இருந்து அழைப்பு வந்தது அலைபேசியில்.நான் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன்.அலைபேசியை எடுத்து ஹலோ சொன்னேன்.கிருஷ் என்ன வருத்தம்.. குரல் கம்முகிறது...என்றாள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை நதி.கொஞ்சம் வெளியே போக முடியாமல் இருப்பதற்கான வருத்தம் தான்.வேறு ஒன்றும் இல்லை என்றேன்.
சரி இங்கே வா ..என்றாள்..நானோ அங்கே செல்ல கொஞ்சம் தயக்கம் காட்டினேன். ஏனெனில் ஏதேதோ தத்துவம் பேசி நம்மை நோகடிப்பாளே என்று.. ஆனால் ஒருவரும் இல்லாமல் இருப்பதற்கு நதி வீட்டுக்கு செல்வது நல்லது என்று தோன்றியது எனக்கு. சரி வருகிறேன் என்றான்.. உடனே கிளம்பினேன்..தனது வண்டியை எடுத்து கொண்டு..
சரியாக பதினைந்து நிமிடத்தில் நதி வீட்டில் இருந்தேன்.. காலிங் பெல்லை அழுத்த போனேன். ஆனால் கதவு லேசாக திறந்து இருந்ததை பார்த்து உள்ளே நுழைந்தேன்.
அங்கே நதி சோபாவில் அமர்ந்து தனது டைரியில் எதையோ எழுதி கொண்டு இருந்தாள்.. லேசாக தலை நிமிர்ந்து சிறு புன்னகை பூத்து வா கிருஷ்.. என்று தலையசைத்து கூப்பிட்டாள்.நான் நதியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என்ன நதி இன்று நடந்ததை எழுதி இந்த வருடத்தின் இறுதி பக்கத்தை நிறைவு செய்கிறாயா என்றேன். சிரித்தவாறே..😊
நதியோ இல்லை கிருஷ்.. இந்த வருடத்தின் நினைவுகளை நிரப்பி அதை மகிழ்விக்கிறேன் என்றாள்.😊கொண்டே.
சரி தான்..வார்த்தை ஜாலத்தில் நீ நாட்குறிப்பையே அதிரடிக்கிறாய்.என்றேன்.
கொஞ்ச நேரம் இரு..இந்த நாட்குறிப்பை எழுதி விட்டு வருகிறேன். அதுவரை இந்த ஜே.கே..புத்தகத்தை படி என்று எனது கையில் ஒரு புத்தகத்தை திணித்து விட்டு எழுதினாள்..
நான் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன்.. சில பக்கங்களில் கண்களை ஓட விட்டேன்.. அதில் உள்ள கிருஷ்ணமூர்த்தி ஐயா படம் ஏனோ என்னை பார்த்து சிரித்தது..எனக்கும் சிரிப்பு வந்தது.
நதி தனது நாட்குறிப்பை எழுதி விட்டு சமையலறை நோக்கி சென்றாள்.இருவரும் பருக இஞ்சி தேநீர் கொண்டு வந்து எனதருகே அமர்ந்தாள்.
நான் அவளிடம் இந்த வருடத்தில் நீ எதை முக்கியமாக செய்தாய் நதி..சென்ற வருடத்தில் நீ ஏதேனும் தீர்மானம் எடுத்து அதை நிறைவேற்றி விட்டாயா..என்றேன்..
நதி என்னை பார்த்து படுபயங்கரமாக சிரித்தாள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை..ஏன் என்னாச்சு என்றேன்.
நதி என்னிடம் கேட்டாள்..நீ ஏதேனும் தீர்மானம் எடுத்தாயா என்று..நான் ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை நதி என்றேன்..
ஏன் என்றாள்..
எந்த தீர்மானமும் எடுத்து சில நாட்களில் காணாமல் போகிறது.. கடைபிடிக்காமல் என்றேன்.. நீ என்ன தீர்மானம் எடுத்து இருந்தாய். அதை முதலில் சொல் என்றேன்.
நான் முதலில் கணந்தோறும் ஆனந்தமாக வாழ நினைப்பவள்.எனக்கு ஒவ்வொரு நாளும் புது வருட முதல் நாட்களே..😊அப்படி இருக்கும் போது நான் ஏன் பனிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒருநாளை கொண்டாட வேண்டும் என்றாள் கேலியாக.
அதெப்படி உன்னால் மட்டும் எல்லா நாட்களிலும் இனிமையாக கடத்த முடிகிறது என்றேன்.. ஆச்சரியமாக..
கிருஷ் அதெல்லாம் அப்படி தான்.. வாழ்க்கை என்பது கணந்தோறும் நம்மை ஆனந்தத்தில் லயம் அடைய செய்கிறது. நாம் தான் அந்த லயத்தில் அடங்காமல் திமிறி திரிந்து துன்பத்தை அடைகிறோம்..என்று சொல்லி கொண்டே எனது கையை பிடித்து இழுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்..
அங்கே அவள் இரு நாற்காலிகள் ஏற்கனவே இருந்தது.அதில் ஒன்றில் என்னை அமர வைத்து அவள் அமர்ந்து கொண்டு இமைக்காமல் அங்கே இருக்கும் நிலவை பார்த்தாள்..மிகவும் உற்சாகமாக.. கொஞ்ச நேரம் அமைதி அமைதி...அங்கே..
இந்த நிலவை நீ எப்போதும் ரசிப்பதற்கு காரணம் என்ன என்றேன்..
ஆனந்தத்தை அனுபவிக்க காரணம் தேவையில்லை கிருஷ். கணந்தோறும் இயற்கை ஆனந்தத்தில் தாண்டவமாடுகிறது..அந்த தாண்டவத்தில் நம்மை தொலைக்க மறுத்து சம்சாரம் எனும் துன்ப தாண்டவத்தில் துவண்டு போகிறோம்.. என்றாள்..சிரித்து கொண்டே..
கொஞ்ச நேரம் அந்த பனியில் நனைவதும் ஆனந்தமாக தான் இருந்தது.. தென்றல் காற்று இதமாக வருடியது..கொஞ்ச நேரத்தில் எனக்கு கொஞ்சம் குளிர ஆரம்பித்ததை அவள் கவனித்து விட்டாள்..
அருகே வந்து என்ன குளிர்கிறதா என்றாள்.எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.. மார்கழியில் குளிரால் வேர்க்கவா செய்யும்.. என்றேன்..
குளிர்வது குளிராமல் இருப்பது இந்த இரட்டைகளை கடந்து விடு கிருஷ்.. அப்போது தான் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும்..என்று சொல்லி கொண்டே வா கீழே போகலாம் என்றாள்..
கீழே வந்தவுடன் நீ இப்போது இங்கே இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பு என்றாள்..
சொல்லி கொண்டே வேகமாக வேலைகளை முடித்து சப்பாத்தி செய்து அதற்கு நல்ல குருமா வைத்து கொண்டு வந்து கொடுத்தாள்..அதை ருசித்து சாப்பிட்டு முடித்தேன்..
கிளம்பும் வேளையில் எனக்கு ஏதேனும் புது வருட செய்தி உள்ளதா என்றேன்..
அதற்கு அவள் எப்போதும் கணந்தோறும் கொண்டாடிக் கொண்டே இரு.கடந்த காலங்களில் தேங்காதே;எதிர்காலத்தில் தொலையாதே..இதோ கடந்து சென்று கொண்டே இருக்கும் இந்த நிமிடத்தில் வாழ கற்று கொள் என்று சொல்லி கொண்டே என்னை புன்னகையோடே வழியனுப்பி வைத்தாள்..நானும் அந்த கணத்தில் நழுவ விடாமல் எடுத்து சென்றேன்..மிகுந்த மனநிறைவோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
#மீள்பதிவு