ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 23 ஜூலை, 2025

மர்ம வீடு பாகம் (1)


அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்களால் நம்பப்பட்டு வந்தாலும் நான் அங்கே தான் வசிக்க ஆயத்தம் ஆனேன்.. ஏன் என்று நீங்கள் கேட்டால் நான் சொல்லும் பதில் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாதாக தான் இருக்கும்.. ஏனெனில் அந்த மரத்தின் அற்புதமான படர்ந்து விரிந்து இருந்த வசீகரம் மட்டும் அல்ல... அங்கே எப்போதும் குடிக் கொண்டு இருக்கும் பலவிதமான பறவைகள்... அதன் வாழ்வியல் என்று கூட சொல்லலாம்.தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்வியல் சூழலில் சலித்து கொஞ்சம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நான் வசிக்க வேண்டும் என்று நினைத்தபோது தான் இந்த வீடு பற்றிய தகவல் கிடைத்தது... உடனே நீங்கள் கேட்கலாம்..நீ மனநிலை பிறழ்வு உடையவரா என்று.. ஆமாம் என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்.. உங்கள் பார்வையில் நான் மனநிலை பிறழ்ந்தவர் தான்... நான் குடியேறி தற்போது சில நாட்கள் ஆகிறது.. ஆனால் அங்கே இந்த மக்கள் குறிப்பிட்டதை போல எல்லாம் ஒரு அமானுஷ்ய நிகழ்வுகளும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.. நான் எனது அன்றாட பணிகளில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன்... அந்த வீட்டிற்கு சொந்தமாக காணி நிலம் ஒன்றும் இருந்தது... அந்த நிலத்தோடு தான் இந்த வீட்டையும் எனக்கு வசிக்க விட்டார்கள்.. அந்த நிலத்தை கொஞ்சம் சீர்திருத்தம் செய்து காய்கறி செடிகள் நடலாம் என்று திட்டமிட்டு அதை உழுது தயாராக வைக்க இன்று ஆளை கூப்பிட வேண்டும் என்று நினைத்து தற்போது எனது காலைப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறேன்...இதோ முடிந்தது.. பசியும் என்னை கொஞ்சம் கண்டுக் கொள்ளேன் என்று உரிமையோடு சிணுங்கியது..காலை உணவாக தயாரித்து வைத்து இருந்த இட்லியும் அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னியும் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு அந்த மரத்தின் அடியில் உள்ள கல்லுக் கட்டில் அமர்ந்து மிகவும் நிதானமாக ரசித்து ருசித்துக் கொண்டே அந்த பறவைகளின் அற்புதமான குரலில் உரையாடலையும் கேட்டு ரசித்தேன்..என்ன அற்புதமான உலகம் இந்த இறைவன் படைத்து வைத்து இருக்கிறான்.. இந்த அற்புதத்தை தவற விட்டு விட்டு எங்கே இந்த மனிதர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக நினைத்தபடியே நான் சாப்பிட்டு முடிக்கவும் அங்கே நான் எதிர்பார்த்த உழவுக்கு டிராக்டரோடு ஆள் வரவும் சரியாக இருந்தது..என்ன அம்மா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார் அந்த மனிதர்.. ஆமாம் சாப்பிட்டு முடித்து விட்டேன்.. வாருங்கள் நீங்களும் சாப்பிடலாம் என்றேன்... அவர் சிரித்துக்கொண்டே அதெல்லாம் வேண்டாம் மா.. நான் முதலில் உழவை முடித்து விட்டு வருகிறேன்.. பிறகு தங்களது உணவை ருசி பார்க்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.. நானும் சரி என்று ஆமோதித்து தட்டை கழுவி வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டே கழனிக்கு நடந்தேன்... 

அடுத்த நிகழ்வில் சந்திப்போம்...

அந்த மர்ம வீட்டில் நேயர்களே 🙏.


திங்கள், 21 ஜூலை, 2025

எலிசபெத் மகாராணி வாழ்வில் சிறுவயதில் பாதித்த நிகழ்வு என்ன


எலிசபெத் மகாராணி வாழ்வில் சிறுவயதில் பாதித்த நிகழ்வு அவரை தீர்க்கமான முடிவை எடுக்க வைத்தது அது என்ன என்று கீழேயுள்ள லிங்கில் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நேயர்களே 🙏 

https://youtu.be/Wq6LbQHDvMY?si=g-P3Vm3ECgpK2AZL


உயிர் நாடி சிறுகதை//


அந்த பச்சை வயல்வெளியை

பேருந்து பயணத்தில் நான் 

கடந்து செல்லும் போது 

அன்று என்னிடம் இருந்த 

என் வயலில் 

உழைத்து களைத்த 

காளை மாட்டின் சத்தம் 

இன்னும் என் காதில் 

ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இன்றோ நான் விற்ற வயலை 

அதே பேருந்து பயணத்தில் கடக்க 

நேர்ந்த போது 

அங்கே காணும் காட்சியில் 

டிராக்டர் உழும் சத்தத்தில் 

என் உயிர் நாடி சற்றே சில நொடிகள் 

அடங்கி போக 

என்னையும் அறியாமல் 

என் கண்களில் தாரை தாரையாக 

நீர் வழிந்தபோது 

என் அருகில் இருந்தவர் 

என்னாச்சு என்று ஆறுதலாக 

கேட்டபோது நான் சுதாரித்து 

கண்களை 

துடைத்துக் கொண்டு 

ஒன்றும் இல்லை ஐயா என்று 

சொல்லியபடியே பேருந்தை விட்டு 

இறங்கி அங்கிருந்த 

பயணியர் இருக்கையில் சற்றே 

ஆறுதலாக அமர்ந்தேன்...

என் வலியை சமிக்ஞையால்

உணர்ந்த ஏதோவொரு 

பறவையொன்று 

நான் அமர்ந்து இருந்த 

இருக்கை 

அருகே உள்ள மரத்திலிருந்து 

சற்றே சிறகை சிலிர்த்து எழுந்து 

தன் சிறகாலே என்னை மிருதுவாக 

வருடி கீச் கீச்சென்று 

என் காதருகே பேசி ஏதோ 

ஆறுதல் செய்ய முயன்றதில் 

மீண்டும் என் கண்களில் கண்ணீர்...

அந்த பறவையின் எச்சத்தை 

அங்கே வேகமாக வந்த 

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 

என்றோவொரு நாள் வரும் 

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தை 

ஸ்பரித்து சிலிர்த்து எழ காத்திருக்கும் 

ஒரு விதையின் சிறு முனகலின் 

வலியை நான் உணர்ந்ததை போல 

அதில் பயணித்த பயணிகளின்

செவிகளை எட்டி இருக்க 

நியாயமில்லை ...

மீண்டும் மீண்டும் 

என் கண்களில் வழியும் கண்ணீரை 

அங்கே இருந்த மரங்களும் ,

செடி கொடிகளும் செய்வதறியாது 

திகைத்தது...

அங்கே மழைக்கான

அறிவிப்பாக பறந்து திரிந்த 

தட்டான்களும் சற்றே 

என் சோகத்தை கடக்க முடியாமல் 

மௌன சாட்சியாக அங்கேயே 

என்னை விட்டு அகலாமல் என்னை 

சுற்றி சுற்றி பறந்ததை 

பெரும் வியப்போடு 

போவோர் வருவோர் பார்த்து 

கடந்து செல்கிறார்கள்...

அவர்களுக்கோ அது வியப்பு..

எங்களுக்கோ அது நுட்பமான 

உயிரை உருக்கும் வலி என்று 

அவர்களுக்கு யாரேனும் 

புரிய வைக்க முயற்சி 

செய்யுங்களேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/25/திங்கட்கிழமை.



வெள்ளி, 18 ஜூலை, 2025

சிறுகதை உலகம்: கட்டெறும்பு கனைக்கிறது..


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வளர்கவி கோவை அவர்களின் அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்ட குடும்ப கதையை வாசித்து இருக்கிறேன்.. வழக்கம் போல தங்களது மேலான பேராதரவு தந்து கருத்துக்களை கதையை கேட்டு விட்டு பதியுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🎉 🎻 ✨.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் நேயர்களே 🎉 🙏 🤝 

https://youtu.be/WhP9qjY-9AM?si=M15iOMtNpRYMmfRm

சிறுகதை உலகம்//ஆனந்தம்


வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு பள்ளி சிறுவனின் உருக்கமான கதை நேயர்களே 🙏🎉🎻.

கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🙏 🎻 

https://youtu.be/0lOM7F62jrc?si=6VsBOWFDz5mQh-FL

புதன், 16 ஜூலை, 2025

அந்த இருவரின் குணங்களும்...

எப்போதும் என் தவறுகளை

தன் நிர்மலமான 

புன்னகையால் 

குழந்தையும் தெய்வமும் 

மன்னித்து ஒருவர் பார்வையாலேயே 

அரவணைக்கிறார்...

இன்னொருவரோ 

தன் செயல்களாலே 

ஒரு குறுஞ்சிரிப்பை காட்டி

எனது காலை 

கட்டிக் கொள்கிறார்...

இந்த குணங்கள் இல்லாமல் தான் 

நான் பொழுது விடிந்து 

பொழுது மறையும் வரை 

எவர் எவருடனோ சண்டை போட்டு 

என் மனதை குப்பையாக்கி எதுவுமே 

நடக்காதது போல 

சென்று விடுகிறேன்...

மனமோ தான் போட்ட 

அன்றைய அந்த 

சண்டை குப்பைகளை 

வெளியேற்ற முடியாமல் 

அதனுள் அழுந்தி மூச்சடக்கி 

சாக கிடக்கும் போது 

நான் கொஞ்சம் என் உள்ளுணர்வால் 

அங்கே எட்டிப் பார்த்து 

மூர்ச்சையாகி கிடப்பதை 

அந்த சாலையில் 


போவோர் வருவோர் 

எல்லாம் 

வெறுமனே வேடிக்கை பார்த்து 

கலைந்து செல்வதை 

என்னை நேசிக்கும் காலம் 

கண்ணீர் வடித்து 

பெரும் மௌனத்தோடு 

என்னை 

அடக்கம் செய்கிறது...

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:17/07/25/வியாழக்கிழமை.

செவ்வாய், 15 ஜூலை, 2025

அந்த குழந்தையின் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்..


அந்த பேருந்து நிறுத்தத்தின் அரசு இயந்திரம் இயக்கிய காணொளி மூலமாக ஒலித்துக் கொண்டே இருந்தது அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் இனி வரும் சாதனை சார்ந்த விஷயங்கள் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டே இருந்தது அதிகமான சத்தத்தோடு...

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் சில பேர் அதை வேண்டா வெறுப்பாக பார்த்தார்கள்..பல பேர் அங்கே அப்படி ஒரு காணொளி போய்க் கொண்டு இருக்கிறது என்கின்ற பிரஞ்ஞை கூட இல்லாமல் தமது ஊருக்கான பேருந்து வராதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மிகவும் சலிப்போடே...

என்னை போன்ற சொற்ப மனிதர்கள் மட்டுமே அதை கண்டும் காணாமல் அதில் லயித்தும் லயிக்காமல் போவோர் வருவோரை எல்லாம் சற்றே நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ...

விஞ்ஞானம் கையில் வந்து விட்ட காலத்தில் கூட இந்த பெரும்பாலும் கண்டுக் கொள்ளாத அல்லது கண்டுக்கொள்ள மனம் இல்லாத விசயங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி அரசு இயந்திர விளம்பரங்களுக்காக செலவு செய்கிறார்களே என்கின்ற ஆதங்கம் என்னை போன்ற அரசியல் பார்வையாளர்களுக்கு இருந்தது...

ஆனால் அந்த ஆதங்கம் எந்தளவுக்கு எல்லோருக்கும் இருக்கிறது அப்படியே இருந்தாலும் அதனால் நமது வரிப் பணத்தை குறைக்க போகிறார்களா என்ன... ஒன்றும் ஆகப் போவதில்லை... நமக்கு கொஞ்ச நேரம் இரத்த அழுத்தம் அதிகமாவது தான் மிச்சமாக இருக்கும் இல்லையா இப்படியே யோசித்துக் கொண்டு இருக்கும் போது எனதருகே ஒரு பெண்மணி தோளில் சிறு குழந்தையை போட்டுக் கொண்டு அமர்ந்தார் அந்த பேருந்து நிறுத்தத்தில்... அந்த குழந்தைக்கு வாகாக பார்க்கும் திசையில் அந்த காணொளி இருந்தது... அதில் வரும் மனிதர்கள் மற்றும் ஆராவாரங்கள் அந்த குழந்தைக்கு ஏதோ ஒரு வேடிக்கை காட்டுவதாகவே இருந்தது.. இமைக் கொட்டாமல் தன் பசியை மறந்து அழுகையை மறந்து அந்த காணொளியை தன்னை மறந்து லயித்து பார்த்துக் கொண்டு இருந்தது அந்த தாயிற்கு சற்றே ஆறுதல் தந்ததில் நான் மக்கள் வரிப்பணம் வீணாவதை சற்றே மறந்தேன்..அதுவரை அழுது ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டு  இருந்த தனது குழந்தைக்கு ஏதோவொரு ஆறுதல் எது கொடுத்தது என்று சற்றே திரும்பி பார்த்து சற்றே சலிப்படைந்தாலும் சிறிது ஆறுதலும் அடைந்தார் என்பதை தவிர அந்த காணொளியை அங்கே பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தில் அந்த குழந்தையின் கள்ளம் கபடமற்ற சிரிப்பை ரசித்துக்கொண்டே இருக்கும் போது நான் போகும் பேருந்து வந்தது... நான் சற்றே அந்த காணொளியை திரும்பி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்கிறேன்...இனி இன்னும் அங்கே அநேக பேருக்கு அந்த காணொளி பலபேருக்கு மீண்டும் பலவிதமான உணர்வுகளை கடத்தினாலும் அந்த குழந்தையின் சிரிப்பின் சுவடில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்து சற்றே சிரிப்போடே பயணித்தேன் எனது ஊருக்கு செல்லும் பேருந்தில்.....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/25/புதன்

கிழமை.


திங்கள், 14 ஜூலை, 2025

வாழ்வின் வண்ணக் கோலமாக...


வாழ்வின் வண்ணக்கோலமாக

நீ என் காதல் நெஞ்சில் இதுவரை 

மிளிரினாய்...

ஏனோ இன்று நான் போட்ட 

காதல் வண்ணங்களை கலைத்து 

அலங்கோலத்தின் 

சுவடுகளை மட்டும் 

விட்டு விட்டு வண்ணங்களை 

சிதறடித்து என் காதலை 

கழுவி செல்கிறாய்...

உன்னோடான பிரியத்தை 

நான் அந்த கலைந்து போன 

வண்ண கோலத்தில் தேடி 

அலைகிறேன் 

நான் செய்த பாவம் என்ன 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/07/25/செ

வ்வாய்கிழமை.

பெரும் மௌனதிரளில் மூழ்கி...


இன்றைய அலைபேசியின்

அத்தனை எனக்கான தரவுகளையும் 

சரிபார்த்து 

முடித்த பின்பும் நான் 

ஏதோவொரு சோர்வோடு 

உறங்க போகிறேன்...

உள்ளங்கையில் உலகமென 

உலகத்தின் அத்தனை 

விஷயங்களும் 

நான் எங்கே சென்றாலும் என்னோடு 

பிரயாணம் செய்தபோதும் 

என் கேள்விக்கான பதிலாக

உன் குறுஞ்செய்தி 

என் அலைபேசியில் இல்லாத 

வெறுமையை பூர்த்தி 

செய்யாத போது 

உலகம் என் உள்ளங்கையை 

பெரும் பிரயத்தனப்பட்டு

மென்மையான பூக்களால் 

அலங்கரித்து என்ன 

ஆகி விடப்போகிறது என்று 

நான் இந்த உலகத்தை 

கேள்வி கேட்க ...

இந்த உலகமோ 

பெரும் மௌன திரளில் மூழ்கி 

என்னிடம் இருந்து தப்பிக்க 

பார்க்கிறது...

நான் என் செய்வேன்

சொல் என் பெரும் காதல் நெஞ்சமே...

#இளையவேணிகிருஷ்ணா

நாள்:14/07/25/திங்கட்கிழமை.

14/07/25/திங்கட்கிழமை.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

அந்த சொற்பமான நொடிகளில்...


அந்த சொற்பமான நொடிகளில் 

எந்த சுவடும் இல்லாமல் 

தாம் வந்து சென்ற தடயம் இல்லாமல் 

அழித்து விட்டு 

மணலில் வீடு கட்டி

விளையாடிய சிறுமி 

தாமே அதை கலைத்து விட்டு 

மகிழ்ந்து கைகொட்டி 

குதூகலம் அடைவதை போல 

என் கனவுக்குள் பிரகாசமாக 

அதிவேகமாக பிரவேசித்து 

பிறகு நீ எங்கோ மறைந்து 

போகிறாய் என் இனிய காதல் 

கனவே...

நீ எங்கே சென்றாய் என்று 

இந்த பிரபஞ்சத்தின் 

மூலைமுடுக்கெல்லாம் விடாமல் 

தேடி அலைந்து களைத்து அமைதி அடைகிறேன் நான் 

உன் கனவின் சுவடை 

எந்த நதியிலும் கரைக்க மனம் இல்லாமல்...

#இளையவேணி கிருஷ்ணா 

நாள் 14/07/25

அலமாரியில் உறங்குபவன் -இலக்கியம்


அலமாரியில் உறங்குபவன் வேற்று நாட்டு இலக்கியவாதிகளின் இலக்கியம் பற்றிய எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பார்வையில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்கலாம் 🙏 💫 🎉.

https://youtu.be/IFHMYOVt89w?si=hGtb0TzG3k_NC-TQ

சனி, 12 ஜூலை, 2025

வீடு பற்றிய தொலைநோக்கு சிந்தனை டென்னிஷ் அரக்கல் பார்வையில் 🎉

 


வீடு பற்றிய தொலைநோக்கு சிந்தனை டென்னிஷ் அரக்கல் பார்வையில் கேட்டு மகிழுங்கள் நேயர்களே... கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்கலாம் 🙏💫🎉

https://youtu.be/qQ1k3kQcgVU?si=d66Npin8S3W9yVII

வெள்ளி, 11 ஜூலை, 2025

அந்த மயானத்தில் பேரமைதியில்...

 


அந்த மயான அமைதியில் தான் 

பேரமைதி கொண்ட பூக்கள் 

அவிழும் ஓசையை கேட்க முடிகிறது...

அந்த மயானத்தில் 

எப்போதும் வசித்து வந்த 

குயிலும் கூட தன் குரலை 

காற்றோடு கலந்து விடாமல் இருக்க 

சற்றே மெனக்கெடலோடு அடக்கி 

அந்த பூக்கள் அவிழும் ஓசையில் 

லயித்து கிடக்க 

அங்கே அன்று தான் வந்த 

காற்றற்ற உடலும் கொஞ்சம் 

சிலிர்த்து அடங்கியதில் 

புரிந்துக் கொண்டேன்

அந்த பூக்களின் பெரும் சக்தியை...

அதுவரை அந்த மயானத்தின் 

ஒரு மூலையில் பெரும் அமைதியை 

கைக்கொண்டு இவற்றை எல்லாம் 

கவனித்து வந்த இயற்கையை 

பெரும் காதலோடு 

நேசித்து வந்த நான்...

#இளையவேணி கிருஷ்ணா

நாள் 11/07/25/

வெள்ளிக்கிழமை.

வியாழன், 10 ஜூலை, 2025

அந்த அமைதியான பூங்காவனத்தில்...

 

அந்த அமைதியான 

பூங்காவனத்தில் தான் 

அந்த புழுதி படிந்த காட்டாற்று 

வெள்ளம் 

ஆயிரம் ஆயிரம் குப்பைகளை சுமந்து 

அந்த பூங்காவனத்தை 

ரணமாக்கி நகர்ந்தது!

ஏனோ அது வரை 

அந்த பூங்காவனத்தின் 

பேரழகை ரசித்தவர்கள் சிறிதும் 

இரக்கமின்றி 

எல்லோரும் சிதறி ஓட 

நான் மட்டும் அதுவரை 

அந்த பூங்காவனத்தில் 

அனைவரையும் வசீகரித்த 

பூக்களின் சிதைந்து போன

இதழ்களை சேகரித்து 

கைகளில் ஏந்தி அமைதியாக 

அந்த நீர் சூழ்ந்த பூங்காவனத்தின் 

ஒரு சிறு மூலையில் 

அஞ்சலி செலுத்துவதை 

அங்கே அந்த பூங்காவனத்தில் 

இதுவரை அடைக்கலம் ஆகி இருந்த 

பறவைகள் 

என்னை சுற்றி சுற்றி 

பேரன்பின் அலையை 

செலுத்தி வருவதை 

இந்த பிரபஞ்சம் வேடிக்கை 

பார்க்கிறது அந்த சூனியமான

பேரமைதியினை பருகிய படி...

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:11/07/25/வெள்ளிக்கிழமை

சிறுகதை உலகம்//மணமகன் -சிறுகதை 🎉


இன்றைய சிறுகதை உலகம் 

நிகழ்ச்சியில் மணமகன் -சிறுகதை 🎉

எழுத்தாளர் #சந்திராமனோகரன்.

#குரலாக்கம்:

இளையவேணிகிருஷ்ணா🎉 

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🙏 🎉 🎻.https://youtu.be/qye8SudCRlY?si=dOAjzLE6zq1Nzpy0

புதன், 9 ஜூலை, 2025

#சிறுகதைஉலகம்//நூறு நகல் மூளைகள்

 


சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் இன்று அறிவியல் புனைவு சுவாரஸ்யமான கதையை கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🎻https://youtu.be/ccm0wACeJfE?si=OYMzj4vWskWx88DJ

புதன், 2 ஜூலை, 2025

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

 


வணக்கம் நேயர்களே 🎻🙏 

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.

https://youtu.be/_APGhVcREJE?si=AB6ZpXRtJzLHfJZk

செவ்வாய், 1 ஜூலை, 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (8)


எல்லாம் எனக்கு தெரியும் என்று 

நான் நினைப்பதுமில்லை!

எதுவுமே தெரியாது என்று 

நான் நினைப்பதும் இல்லை!!

இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் 

நான் ஒரு சிறு துளியாக

இந்த பிரபஞ்சத்தில் மிதக்கிறேன்!

எதை நான் அறிந்துக் கொள்ள 

வேண்டுமோ அதை என்னை 

உள்ளிருந்து ஆட்டுவிக்கும் 

இறைவன் தக்க நேரத்தில் 

எனக்கு தெரிவிப்பான்...

இதை தவிர பெரிதாக 

இந்த உலகியலில் நான் 

பெருத்த ஈடுபாடு கொண்டதில்லை...

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/07/25/புதன்கிழமை

திங்கள், 30 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7)

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7)

அந்தி மயங்கும் வேளை தாண்டிய 

அந்த மெல்லிய இரவில் தான் 

அன்று அங்கே நடந்த மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த 

விசயங்களின் போக்குகளை 

பற்றி ஆள் ஆளாக்கு சரி என்றோ 

தவறு என்றோ 

பேசி வாக்குவாதம் செய்து 

ஓய்ந்து ஒவ்வொருவராக 

கலைந்து செல்கிறார்கள்...

அங்கே அந்த நிகழ்வை 

கூர்மையாக கவனித்து 

உண்மை தன்மையின் 

போக்கை முழுவதும் உணர்ந்த 

காலம் மட்டும் 

அங்கே அவர்கள் கூட்டாக நின்று 

பேசிய கூட்டத்தில் 

கலந்துக் கொள்ளாமல் 

வெறுமனே அவர்கள் பேசிய 

பேச்சின் கற்பனை கலந்த 

நிகழ்வை வேடிக்கையாக பார்த்து நகைத்து விட்டு 

அந்த பெரும் இருளில் கலக்கிறது...

இங்கே உண்மை எது பொய் எது 

என்று கேட்டு அறிந்துக் கொள்ள 

மனமில்லாமல் 

எதை எதையோ தன் சுவைக்கு 

தகுந்தார் போல 

பேசி களித்து களி நடனம் 

புரிபவர்கள் மத்தியில் காலம் ஏன் 

அங்கே நடந்ததை சாட்சியாக சொல்லவில்லை என்று 

என்னை போன்ற கோபம் 

கொள்பவர்களையும் 

காலம் கண்டுக் கொள்ளாமல் 

தன் போக்கில் 

இயல்பாக நிதானமாக 

பயணிப்பதை இங்கே 

என்னை தவிர எவரும் வேடிக்கை 

பார்க்கவில்லை 

என்பது தான் காலத்தின் துயரம்...

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️(7).

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/25/திங்கட்கிழமை.

அந்தி மாலை நேரம் கடந்த மெல்லிய இரவின் நொடிகளில் எழுதப்பட்ட கவிதை ❤️.

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️(7)


எந்த நோக்குமுமின்றி 

இயல்பாக 

கடந்து செல்லும் போது ரசிக்கப்படும்

நிகழ்வுகளில் படர்ந்து இருக்கிறது 

ஒரு துளி 

வாழ்வின் ரசனை...

பெரும் சமுத்திரத்தின் 

துயரத்தின் இடையே 

இது என்ன மாயம் 

செய்து விடப் போகிறது என்று 

கேட்பவர்களுக்கு மத்தியில் 

நான் அவர்களின் 

விட்டேத்தியான பேச்சை 

அங்கே தவழ்ந்து வரும் 

காற்றில் புதைத்து விட்டு 

அந்த ரசனையின் ஆழமான 

மௌனம் சூழ்ந்த மொழிகளை 

கூர்ந்து கேட்கிறேன்...

அது ஏதோவொரு மாய இசையை 

இசைத்து 

என் செவிகளுக்குள் இயல்பாக 

புகுத்தி 

சிறு குழந்தை போல 

துள்ளி நகைக்கிறது...

நானும் அதன் நகைப்பில் 

இயல்பாக கலக்கிறேன்...

இங்கே 

பெரும் பிரபஞ்சத்தின் 

மாய வித்தையின் மெல்லிய 

நுணுக்கங்களை யார் அறியக் கூடும் 

என்னை போன்ற 

வாழ்வின் ரசனையின் மீது 

பெரும் கிறுக்கு பிடித்தவர்களை 

தவிர!

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/25/திங்கட்கிழமை.

அந்தி மயங்கும் வேளை தாண்டிய மெல்லிய இரவில் எழுதியது

செவ்வாய், 24 ஜூன், 2025

சிறுகதை உலகம்: தனிமரம் -சிறுகதை எழுத்தாளர் உஷா தீபன் அவர்கள்


அனைவருக்கும் இனிய வணக்கம் நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் உஷா தீபன் அவர்களின் அற்புதமான கதையான தனிமரம் -சிறுகதை கேட்டு மகிழுங்கள் நேயர்களே...

கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🙏 🤝 🦅.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎉 🙏 🎻 

https://youtu.be/xj9Y7wyV2G0?si=bpPrL4qXkjBCr8sg

திங்கள், 23 ஜூன், 2025

கேளா வரம்-சிறுகதை உலகம்

 


வணக்கம் நேயர்களே 🎉🙏.

இன்று சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய அற்புதமான சிறுகதை கேளா வரம்- சிறுகதை... கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉🙏🎻.

கீழேயுள்ள யூடியூப் லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏 🎉 🎻.

https://youtu.be/XSbbr8u-n9k?si=FZhCQ3st2LhiOGkj

சனி, 21 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (6) அந்த துயரமெனும் வீதியில்...


அந்த துயரமெனும் வீதியில் தான் 

நான் இராப்பகலாக 

காலம் காலமாக அலைந்து 

திரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அன்றொரு நாள் நான் ஏதோ என் கைகளில் விழுந்த உணவை 

சாப்பிட்டு முடித்து சற்றே கண்ணயர 

அந்த புழுதி படிந்த 

கிழிந்த கம்பளியை உதறி 

விரித்து போடுவதை பார்த்து விட்டு 

அந்த அதிசய மனிதர் ஓடோடி வந்து 

அந்த கம்பளியை பிடுங்கி 

தூர எறிந்து விட்டு தன்னிடம் உள்ள 

புது கம்பளியை விரித்து போடுகிறார்..

இதை தூர இருந்து கவனித்து வந்த 

எனது உணவு பங்காளியான 

அந்த ஜீவராசியோ 

அந்த அதிசய மனிதர் மேல் 

பாய்ந்து பதம் பார்த்ததில் 

அந்த புழுதி படிந்த கம்பளியை 

அப்படியே போட்டுவிட்டு 

ஓடோடி மறைகிறார் 

அந்த அதிசய மனிதர்...

அந்த ஜீவராசி அந்த புழுதி படிந்த 

ஆயிரம் பொத்தல்கள் உள்ள கம்பளியை பெரும் நேசத்தோடு 

தனது வாயில் கவ்வி என்னிடம் 

தந்து விட்டு என் மேனியை நாவால் 

தடவி தன் நேசத்தை வெளிப்படுத்தி

என் அருகே படுத்து ஆழ்ந்த 

நித்திரை கொள்வதை பார்த்து 

நான் என்னில் வழிந்த கண்ணீரை 

துடைத்துக் கொண்டு 

மெல்ல நகர்ந்து அந்த புது வாசம் 

மாறாத கம்பளியை 

அந்த குளிரில் குறுகி என் அருகே 

படுத்து இருந்த 

அந்த ஜீவராசியின் மீது போர்த்தி விட்டு ஆழ்ந்த நிம்மதி அடைகிறேன்..

இங்கே பெரும் நேசத்தின் 

புரிதலுக்கான இலக்கணத்தை

யார் உணரக் கூடும்?

அந்த எனது பெரும் நேசமான

உணவு பங்காளியை போல ...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (6).

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:21/06/25/சனிக்கிழமை.





இப்படிக்கு காற்றை நேசிப்பவள்(5) ❤️சுமைப்பொதிகளாக ஆயிரம் ஆயிரம் பந்தங்கள்....

 


சுமைப் பொதிகளாக 
ஆயிரம் ஆயிரம் பந்தங்களை 
சுமந்து திரிகிறேன் 
இந்த பிரபஞ்சத்தின் காலவெளிதனிலே...
என்றோ என்னை அழைக்கும் காலனுக்கு நான் எளிதாக 
பணிந்து விட முடியாமல் 
திமிறிக் கொண்டு 
அழைக்கிறேன்...
நான் சேர்த்து வைத்த பந்தங்களின் 
செவிகளோ செவிடாக 
சுயமற்று பயணித்து 
என்னை ஒரு சவமாக 
கடந்து செல்கிறது...
நான் அந்த எமனின் வாயெனும் 
குகையில் கொஞ்சம் கொஞ்சமாக 
உள்ளே செல்கிற போது 
என்னில் இருந்து வழிந்த 
அந்த இரத்தத்தின் சிறுதுளியின் 
நாற்றத்தை பொறுக்க முடியாமல் 
வேகமாக ஓட்டமெடுத்து 
ஓடுகிறது அந்த பந்தமெனும் 
பெரும் கூட்டம்...
இது வரை என் கதறலுக்கு 
செவிடாக நடித்த கூட்டம் 
என்னில் இருந்து பயணித்த 
இரத்தத்தின் நாற்றத்தில் 
உயிர்ப்பித்து ஓடுகிறதே என்று 
நான் சூட்சம உடலில் 
கவனிக்க தொடங்கிய போது 
என்னோடு காலம் காலமாக 
பயணித்து வந்த அந்த பந்தத்தின் 
நாற்றத்தை உதிரமாக வெளியேற்றி
என்னை இலேசாக்கி அந்த பிரமாண்டமான சூட்சம உலகில் சுகமாக மிதந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து 
காலமும் கொஞ்சம் கரைந்து தான் போகிறது...
#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/06/25/சனிக்கிழமை.



இப்படிக்கு காற்றை நேசிப்பவள்(4) ❤️

 

ஓடிக் கொண்டே இருக்கும் 

தற்கால சிலபல 

துன்ப நிமிட துகளின் 

புழுதியில் இருந்து 

சற்றே எனை 

விடுவித்துக் கொண்டு 

இதோ என்னை தாங்கி செல்லும் 

இந்த காலமெனும் தோணியின் 

ஒரு மூலையில் 

என்னை 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

கடந்த கால நினைவுகளின் 

சுகங்களை கொஞ்சம் 

அசைப்போட்டு அனுபவித்து 

சற்றே இளைப்பாறுகிறேன்...

இதை பார்த்த அந்த சந்திர தேவனோ 

கொஞ்சம் காதலோடு 

தன் கிரணங்களால் 

என்னை அரவணைத்து 

காதல் மொழி 

என் காதில் கிசுகிசுத்து

சிலிர்ப்பூட்டி மகிழ்வதை பார்த்த 

காலமும் கொஞ்சம் 

நெகிழ்ந்து தான் போனது...

எத்தனை துன்பத்தின் சுவடுகளை 

சுமந்து ரணமாகிய 

மனதோடு இதுநாள் வரை 

பயணித்து இருந்தாளோ என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/06/25.சனிக்கிழமை

செவ்வாய், 3 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (3)


இந்த உலகத்தின் 

பார்வைக்காக தான் நான் 

வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன் என்றால் 

நான் சுவாசிக்கும் காற்றே 

என்னை பெரும் தீ கொண்டு 

பொசுக்குகிறது...

சமூக அல்ப விவகாரங்கள் எல்லாம் 

என்னை ஈர்க்க ஆயிரம் ஆயிரம் 

முயற்சிகள் செய்து 

தோற்றுப் போனபோதும் 

பெரும் வெறிக் கொண்டு 

என் அடிமைசாசனத்தை எழுதி வாங்க 

அர்த்தஜாம பேயின் 

புத்திக் கொண்டு என்னை 

ஒரு வட்டம் போட்டு சுற்றி சுற்றி 

வருகிறது...

இங்கே என்னை ஈர்க்கும் எதையும் 

பெரும் ஆக்ரோசம் கொண்டு 

அழித்து விட்டு

கொன்று தீர்த்து 

பேரமைதிக் கொண்டு 

அந்த சூட்சம உலகில் பயணிக்க 

நினைக்கும் போது 

எங்கிருந்தோ வந்த 

அந்த அதிசய காற்றின் மென்மையில் 

நான் இழக்கிறேன் என்னை 

என்னையும் அறியாமல்...

என்ன ஏதுவென்று 

தெரிந்துக் கொள்ள நினைத்து 

கண் விழிக்கும் வேளையில் தான் 

தெரிகிறது 

நான் பெரும் மாயையின் பிடியில் 

அகப்பட்டு துடிக்கிறேன் என்று...

இங்கே எதிலும் பற்றற்று 

என்னோடு பயணிக்கும் 

ஆன்மா மட்டும் 

எதுவுமே நடக்காதது போல 

என்னை மெல்லிய புன்னகை செய்து 

என்னுள் பேரமைதிக் கொண்டு 

யோக நித்திரை கொள்ளும் போது 

நான் விழித்துக் கொள்ளலின் 

தத்துவத்தை 

உணர்ந்துக் கொண்டு 

அதிசய நித்திரையின் 

ஆட்கொள்ளலில் 

பேரமைதிக் கொள்கிறேன்...

இங்கே இந்த பிரபஞ்சத்தின் 

பெரும் தத்துவத்தை யார் அறிந்துக் கொள்ள கூடும் என்று நினைத்து...

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️(3).

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/06/25/செவ்வாய்க்கிழமை.

திங்கள், 2 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (2)


கணந்தோறும்

எனை காலம் நலம் விசாரிக்காமல் 

கடந்து செல்ல 

நான் அனுமதித்தது இல்லை!

இன்னும் எவ்வளவு நாட்கள் 

இந்த நலம் விசாரித்தல் 

தொடரும் என்று 

என்னால் சொல்ல இயலாது...

அநேகமாக அந்த நலம் 

விசாரித்தல் குரல் 

என் காதில் விழாத போது 

நான் நிச்சயமாக அந்த காற்றோடு சற்று நிதானமாக 

தீராத காதல் மொழி பேசி 

இந்த பிரபஞ்சத்தில் 

லயித்து இருப்பேன் சூட்சமமாக 

அந்த நொடிப்பொழுதில் 

காலம் என் மீது கொண்ட 

தீராத காதலை கரைக்க 

பெரும் நதியை தேடி 

ஒரு பித்து நிலையில் 

அலைந்து திரிந்துக் கொண்டு இருக்கும்...

நானோ எங்கோ இருந்து 

ஒரு சிறு கண்ணீர் துளியை 

வெட்டவெளியில் 

உலாவ விட்டுக் கொண்டு இருப்பேன் 

அது தேடும் நதியில் 

அந்த பெரும் காதலின் சுமையை இறக்கி விட்டு 

இலகுவான மனதோடு 

அந்த சூட்சம உலகில் 

பயணிப்பதற்காக காத்திருப்பேன்...

இங்கே இருபெரும் காதலின் சூட்சம தீண்டலை 

வெகுஜன மக்களில் 

யார் அறியக் கூடும்?

என்கின்ற கேள்வியோடே 

மிகவும் நிதானமாக பயணிப்பேன்...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (2).

#இளையவேணிகிருஷ்ணா

நாள்:02/06/25

திங்கட்கிழமை.

இப்படிக்கு காற்றை நேசிப்பவள்(1) ❤️


இளைப்பாற ஒரு எளிமையான படகு

இந்த பிரபஞ்சத்தின் அழகை

ரசிக்க தன்னை அர்பணிக்கிறது...

இங்கே சிறகுகள் நைந்த பின்பும் 

அதன் எச்சங்கள் 

என்னோடு இருக்கும் வரையில் 

என்னோடு 

அந்த உருவமில்லா காதல் 

பயணித்துக் கொண்டு 

இருக்கும் வரையில் 

நான் பேரன்போடு நீண்ட நெடிய 

பயணத்தை தொடர்வேன் 

என் சிறகுகளை மெல்லிய தென்றல் 

தீண்ட...

அதைக் கொண்டு 

புறம் பேசாமல் கொஞ்சம் 

அமைதியாக என்னோடு சத்தம் 

இல்லாமல் பயணியுங்கள் 

மானுடர்களே!

இல்லை எனில் சத்தம் இல்லாமல் 

என்னைவிட்டு 

விலகிச் செல்லுங்கள்...

இங்கே வாழ்தல் அப்படி ஒன்றும் 

நீங்கள் நினைப்பது போல 

கடினமானது அல்ல...

நீங்கள் சிருஷ்டித்த சிறு உலகிற்கும் 

நான் எனக்குள் சிருஷ்டித்து 

பயணிக்கும் பெரும் உலகிற்கும் 

இங்கே மில்லியன் தூர அளவு 

இடைவெளி நிரம்பி வழிகிறது...

அந்த இடைவெளியின் நீட்சியை 

நீங்கள் குறுக்க முயலுங்கள்...

என்னை அந்த இடைவெளியை 

குறுக்க சொல்லி மன்றாடாதீர்கள்...

இங்கே என் சிறுதுளி நொடியும் 

அற்புதமானது 

அதை அனுபவித்தல் விடுத்து 

வெளியே வர 

என்னால் நிச்சயமாக இயலாது....

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/06/25.

திங்கட்கிழமை.

ஞாயிறு, 25 மே, 2025

அந்த சொற்ப நொடிகள் தான் நான் விரும்பிய நொடிகள்...


அந்த சொற்ப நொடிகள் தான் 

நான் பிடித்து 

வைத்துக் கொண்டு 

விருப்பம் கொண்ட நொடிகள்...

அது ஏனோ என்னிடம் இருந்து 

அழுது அடம் பிடித்து 

திமிறிக் கொண்டு 

செல்கிறது 

ஒரு சிறு குழந்தையை போல...

நான் நொடிகளோடு போராட 

மனம் இல்லாமல் 

என் மனதிற்கு ஆறுதல் சொல்லி அடுத்து வரும் நொடிகளை 

சுதந்திரமாக 

செல்ல அனுமதிக்கிறேன்!

இங்கே நிரந்தரமற்ற 

நொடிப் பொழுதின் தன்மையை 

புரிந்துக் கொண்டு 

அதன் இயல்பை நசுக்காமல்

பழகிக் கொண்டது 

என் குழந்தை மனமும்!

#அந்திமாலைப்பொழுது.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/05/25/ஞாயிற்றுக்கிழமை.

திருப்தி இல்லாத மனம்...


எதை செய்தாலும் 

திருப்தி இல்லாத 

அல்லது அலுத்துக் கொண்ட 

மனதிற்கு

யாரோ வீசி எறிந்த 

அந்த காகித குப்பையில் 

தன்னை மறந்து 

தன் வயிற்று அக்னியின் 

சிறு பகுதியையாவது

தணித்துக் கொள்ள 

சொற்ப சோற்றுத்துகளை 

தேடி அலைந்து திரியும் 

நாயின் தேடலில் ஏனோ 

திருப்திக் கொள்கிறது 

இந்த பாழும் மனது!

#அந்திமாலைகவிதை.

நாள்:25/05/25/ஞாயிற்றுக்கிழமை.

புதன், 21 மே, 2025

#சிறுகதை உலகம்//ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி

 


ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி -சிறுகதை எழுத்தாக்கம் வைத்தீஸ்வரன் அவர்கள்.

இந்த கதையை வாசிக்கும் போது நமக்குள் ஒரு அற்புதமான ஓவியம் எழுந்து ஆக்கிரமிப்பதை தடுக்க முடியவில்லை... வாழ்த்துக்கள் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களுக்கு 🙏 🤝 🦅 💫.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🎻 ❤️.

https://youtu.be/JJ5y3pvPXFM?si=tGVjg362o7Dy-vn9

சக ஜீவராசியின் இளைப்பாறுதல்...


அந்த நள்ளிரவு வேளையில் 

திடீரென ஏதோ கனவொன்று கண்டு 

திடுக்கிட்டு எழுந்து 

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மின் விளக்கை 

போடும் போது 

எனது அறையின் நடுவில் தரையில் கொஞ்சம் சுதந்திரமாக உறங்கிக் கொண்டிருந்த பல்லி திடுக்கிட்டு எழுந்து தடதடவென ஊர்ந்து சுவரில் 

வேக வேகமாக போக எத்தனித்து ஓரிரு முறை கீழே விழுந்ததை 

பார்க்கும் போது அந்த மோசமான கனவிலேயே 

நம்மை நாமே தேற்றிக் கொண்டு எழாமல் உறங்கி இருக்கலாமோ என்று 

எண்ண வைத்து விடுகிறது...

இளைப்பாறுதல் இங்கே 

தற்போதைய நிலையில் 

தொடர் ஆசுவாசமான நேரமாக நம்மோடு பயணிப்பதற்கு சில பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும் போல என்று மீண்டும் உறக்கத்தை வரவழைக்க போராடி தோற்பது நான் மட்டும் அல்ல...

அந்த 🦎 பல்லியும் தான்...

#சக #ஜீவ ராசியின் #இளைப்பாறுதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

முன்னிரவு பொழுது 10:35.

வியாழன், 15 மே, 2025

எந்த மர்ம புன்னகைக்கும் ஏதோவொரு அர்த்தம்...

 


எந்த மர்ம புன்னகைக்கும் 

ஏதோவொரு அர்த்தம் 

கற்பித்துக் கொள்கிறது 

இந்த உலகம்...

அந்த மர்ம புன்னகைக்கும் கூட தெரியாத ஆழ்ந்த ரகசியம் அந்த மெல்லிய புன்னகையோடு பயணிப்பதை 

அப்படியே 

விட்டு விடுங்களேன்...

எந்த தொந்தரவும் இல்லாமல் 

பயணிக்க நினைக்கும் அதன் 

இந்த ஒரு ஆசையை கூடவா 

உங்களால் நிறைவேற்றி விட முடியாத அளவுக்கு 

கடினமான பாறையால் ஆனதா உங்கள் அனைவரின் உள்ளமும்...

#மர்மபுன்னகை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/05/25/வியாழக்கிழமை.

புதன், 7 மே, 2025

மறுக்கப்படும் சமாதானங்கள்...

 

மறுக்கப்படும் சமாதானங்கள் 

எப்போதும் அடிமையாக தான் 

இருக்க வேண்டும் என்பதில்லை!

அது ஊழிதாண்டவமாக மாறி 

சின்னாபின்னமாக்கும் ஆற்றலும் 

அதன் அடி ஆழத்தில் 

அமிழ்ந்து கிடப்பதை 

மறந்து விடாதீர்கள்!.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/05/25/புதன்கிழமை.

போரும் நானும்...


போர் கதவை தட்டும் போதும் 

எழுந்து போய் திறக்க மனமில்லாமல் 

கையில் தட்டுப்பட்ட ஏதோவொரு 

தத்துவ புத்தகத்தை

ஆழ்ந்து வாசிக்கிறேன்...

போரோ நிதானம் இழந்து 

கண்கள் சிவந்து 

அங்கே இருந்து நகர்ந்து செல்கிறது 

மிக வேகமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/05/25/புதன் கிழமை.

ஞாயிறு, 4 மே, 2025

எனக்கு நான் யார் ...


ஒவ்வொரு முறையும், 

ஒவ்வொரு நிகழ்விலும்

கணத்து கடந்து செல்கின்ற 

அந்த ஒவ்வொரு கணத்திற்கும் 

நான் ஒரு வேடிக்கை மனுஷி...

எனக்கு நான் யார் ?

எனக்கும் நான் அந்த வேடிக்கை மனுஷியா அல்லது வேறு எதுவுமா என்ற அந்த விடை தெரியாத கேள்விக்கு மட்டும் 

விடை இல்லாமல் பயணிக்கிறது நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த கணங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.

#நீக்கமற நிறைந்து இருக்கும்அந்த கணங்கள்.

அந்த உணர்வற்ற மனிதனின் இதயத்தில் உள்ள நீர்மம்... சிறுகதை..

 


ஒரு கற்பனை கதை:-

அந்த உணர்வற்ற மனிதனின் இதயம்:-

தன் வாழ்வில் நடந்த அந்த நெடுங்சோகக் கதையை

நெடுநேரமாக ஒருவர் அந்த தேநீர் கடையில் சந்தித்த பழக்கமான ஒருவரிடம் உணர்வுபூர்வமாக சொல்லி கொண்டு இருந்ததை 

தற்செயலாக நான் வேடிக்கை பார்க்க நேர்ந்தது!

எனது வேலையை விட்டு விட்டு நான் அதை கவனிக்க வேண்டும் என்று நான் அவர் கதையை கேட்கவில்லை 

அவரின் உணர்வுபூர்வமான உடல் மொழியில் நான் 

உருகி கேட்டு கொண்டு இருந்தேன் என்று சொல்லலாம்...

எதிரே இருந்தவர் அதை சொல்லி முடிப்பதற்குள் 

பல முறை அப்படியா அப்படியா என்று உணர்வற்ற பதிலில் கேட்டுக் கொண்டு இருந்த அந்த எதிரே இருந்த மனிதர் முடிவில் சரி இதை எல்லாம் பெரிதாக நினைத்துக் கொண்டு உனது அன்றாட வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே... அடுத்து என்ன என்று பார் என்று அதே உணர்வற்ற மொழியில் சொல்லி விட்டு நகர்ந்து செல்கிறார்...

அவர் சொன்ன சோக கதையை இவ்வளவு நேரம் கேட்டு கொண்டு இருந்த தேநீர் கடையில் உள்ள தேநீரோ சற்றே அந்த மேசையில் இருந்து 

நகர்ந்து அவரை லேசாக இடித்து என்னை கொஞ்சம் பருகி உனது சோகத்திற்கான ஆறுதலாக இளைப்பாறிக் கொள் என்றது...

இதை கவனித்துக் கொண்டு இருந்த நானோ சற்றே நிம்மதியடைந்து நான் பருகிய காலி கோப்பையை மேசை மீது வைத்து விட்டு அதற்கான தொகையை செலுத்தி விட்டு என் பயணத்தை தொடர்கிறேன் இங்கே உணர்வற்ற மனிதர்களின் இதயத்தில் 

வெறுமனே வெப்பத்தை உமிழ்ந்து விடும் அந்த அதிசய நீர்மத்தின் விசேஷத்தை எவர் வைத்து படைத்தார் என்ற விடை தெரியாத கேள்வியோடு....

#அந்த #உணர்வற்றமனிதனின்இதயம்❤️

#இளையவேணிகிருஷ்ணா.

தூர தேச பயணியாகிறேன்..

 


தூர தேச பயணி நான்:-

நான் அந்த ஒற்றை சொல்லில் 

வாழ்கிறேன் என்கிறார்கள் சிலர்!

நான் அந்த ஒற்றை சொல்லை மட்டும் 

எதிர்கொள்ளாமல் 

இருந்து இருந்தால் 

இவ்வளவு சோர்வு 

எனக்கு இருந்து இருக்காது 

என்கிறார்கள் சிலர்...

நானோ 

உண்மையில் 

எந்த ஒற்றை சொல்லும் 

எவரையும் அப்படி ஒன்றும் பதம் 

பார்த்து விடுவதில்லை 

அந்த கேட்க கூடாதா ஒற்றை 

சொல்லை தனக்கான விருந்தினர் 

இல்லை என்று தீர்க்கமாக நம்பி 

காற்றில் ஏற்றி வழியனுப்பி 

வைத்து விட்டு அந்த சாலையில் 

உற்சாகமாக பயணியுங்கள் 

என்கிறேன் 

மிகவும் உற்சாகமாக...

அத்தனை பேரும் என்னை திரும்பி 

பார்த்து விட்டு 

மெதுவாக கையசைத்து 

புன்னகைத்து கடந்து 

செல்கிறார்கள்...

நானோ பெரும் விடுதலைக்கான 

தேடலில் 

மீண்டும் தூர தேச பயணியாக 

பயணிக்கிறேன் 

இந்த பிரபஞ்சத்தில்...

#இளையவேணிகிருஷ்ணா.

#தூரதேசபயணிநான்.

நாள்: 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.

அந்த இரண்டுமற்ற பொழுதின் சோக கதை...


இருளுமற்ற ஒளியுமற்ற அந்த 

காலத்தோடு நான் 

பயணித்துக் கொண்டு இருந்தேன்...

அந்த இரண்டும் அற்ற 

பொழுதோ ஆயிரம் ஆயிரம் 

சோக கதைகளை தாங்கி 

பயணிக்கிறது என்னோடு 

பெரும் அமைதியாக...

ஒரு மணி நேர எங்கள் பயணத்தில் 

ஒரு பேச்சும் இல்லை...

அதுவே பேசட்டும் என்று நான் அந்த 

சாலையில் போவோர் வருவோரை 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

மெதுவாக நடக்கிறேன்...

அந்த பொழுதோ இனியும் 

பொறுக்க முடியாது என்பது போல 

என் கையை பிடித்துக் கொண்டு பேச 

ஆரம்பித்த அந்த ஒற்றை 

வார்த்தையில் 

குரல் கரகரத்து கண்ணீர் 

வழிந்து கொட்டியதை 

என் கையில் தெறித்த சுடுநீரில் நான் 

உணர்ந்துக் கொண்டேன்...

ஏன் இந்த சோகம் என்றேன் நான் 

மெதுவாக...

என் இரண்டுமற்ற தன்மையில் 

நான் நீடித்து 

பெரும் காதலோடு பயணிக்க முடியவில்லை என்றது...

புரியவில்லை என்றேன்.

நான் பகலோடு கூடிய காதல் 

முடிவதற்குள் இரவின் பெரும் 

காதலை எதிர் கொள்ள வேண்டி 

உள்ளது...

இந்த இருபெரும் காதலில் 

நான் என் சுயத்தை தொலைத்து 

பெரும் மானத்தை தொலைத்து 

வாழ்வதாக அங்கே சிலர் என் 

காதுப்பட பேசி தன் பேச்சால் 

சுடுகிறார்கள் என்றது...

நானோ இதுதான் உன் 

உண்மையான 

சோகமா என்றேன்...

நிச்சயமாக என்றது...

இதற்காக இவ்வளவு 

கவலைக் கொள்ள 

தேவையில்லை என்றேன் 

நான்.

நீயும் என்னை கேலி செய்கிறாய் 

என்றது...

இல்லை இல்லை நான் உன்னை 

கேலி செய்யவில்லை...

உண்மை தான்.. உன் உண்மையான 

சுயநலமற்ற பெரும் காதலில் அந்த 

இரவும் பகலும் சங்கமித்து 

தன் பயணத்தை எந்தவித 

சஞ்சலமும் இல்லாமல் 

தொடர்கிறது...

இந்த மனிதர்கள் தனது நீண்ட 

பயணத்தை இந்த பிரபஞ்சத்தில் 

தொடர்கிறார்கள்...

உங்கள் நிச்சலனமான காதலில் 

பிறந்து விட்டு 

பெற்ற உங்களை சொற்களால் 

இம்சித்து 

தன் மனதில் உள்ள சேற்றை 

உன் மீது வீசிய போதும் 

உன் மீது அந்த சேற்றின் 

சுவடை நான் 

எங்கேயும் காணவில்லை...

அதனால் நீயும் ஒரு திரௌபதி தான் 

என்றேன்...

அந்த இரண்டுமற்ற காலமோ 

சற்றே எனது பதிலில் 

அமைதியடைந்து இருக்க வேண்டும்...

என் கைகளை இறுக 

பிடித்துக் கொண்டு விடை பெற எத்தனித்த போது 

நான் இரவாகிறேன்...

#இரண்டும் #அற்ற #பொழுதின்கதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.


என் மனமெனும் கிறுக்கலில் தோன்றிய புத்தர்...


அன்றொரு நாள் 

இப்படி தான் 

ஏதுமற்ற மனதில் 

ஏதோ கிறுக்கிக் கொண்டு 

இருந்தேன்...

அந்த கிறுக்கலை 

கூர்ந்து நோக்கியபோது 

அங்கே ஒரு புத்தர் தாமரை மலரில் 

பேரமைதியோடு 

அமர்ந்து இருந்தார்...

நான் அந்த புத்தரின் முகத்தில் 

தோன்றிய ஒளியில் 

என் மனதின் ஆக்ரோஷமெனும் 

பெரும் சுழலை அடக்கி 

ஆனந்தமெனும் 

பேருணர்வை உணர்ந்து 

மீண்டும் ஏதுமற்ற மனமாகிறேன்...

தற்போது அந்த ஏதுமற்ற மனதில் 

எதுவும் கிறுக்காமலேயே 

புத்தர் சிம்மாசனமிட்டு 

கண்களை மூடி இருந்தார்...

நான் அந்த புத்தரின் 

முகத்தில் லயித்து 

வாழ்வின் பெரும் தத்துவத்தை 

உணர்ந்துக் கொண்டு இருக்கும் போது 

எங்கோ இருந்து வந்த 

பெரும் சுழல் காற்றில் இருந்து 

புத்தரை காப்பாற்ற 

அவரை இறுக 

அணைத்துக் கொண்டபோது 

நான் அங்கே அவருள் கரைந்து போய் 

இருந்ததை பார்த்து என் மனம் 

ஏதும் செய்ய இயலாமல் 

சோகமாக வேடிக்கை பார்த்தது...

இதை எல்லாம் பார்த்துக் கொண்டே 

அந்த காலமும் 

மெல்ல மெல்ல நகர்கிறது 

பெரும் மூச்சை 

உதிர்த்துக் கொண்டே...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/05/25/ஞாயிற்றுக்கிழமை.

சனி, 3 மே, 2025

காலம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தின் நாயகி நான்...


காலம் ஆடும் கண்ணாமூச்சி 

ஆட்டத்தின் நாயகி நான்!

நான் அந்த ஆட்டத்தில் 

எங்கோ தொலைந்து ஆனந்தமாக 

அந்த சூட்சம காட்டில் சுற்றி 

திரிகிறேன்...

காலமோ என் மீது கொண்ட 

பெரும் காதலை மறக்க முடியாமல் 

கதறி அழுது அரற்றி 

எனை தேடி களைக்கிறது...

நானோ எந்த பற்றுதலும் இல்லாத 

ஞானி போல அந்த சூட்சம காட்டில் 

ஒரு ஆயிரம் வண்ணங்கள் கொண்ட 

பட்டாம்பூச்சி போல 

பறந்து திரிகிறேன்...

காலம் என் மீது கொண்ட பேரன்பின் 

காயத்தை பற்றிய 

எந்தவித நெருடலும் இல்லாமல்... 

#இரவுகவிதை.

நாள்:03/05/25/சனிக்கிழமை 

#இளையவேணிகிருஷ்ணா

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்...


அந்த ஏதோவொரு 

தேடலில் தான் 

நான் தொலைந்து 

போய் இருக்க வேண்டும்...

ஒரு முறை அந்த வழியில் 

சென்றதற்காக இவ்வளவு 

பெரிய தண்டனை வேண்டாம் என்று 

என்னை நேசித்தவர்கள் 

அங்கே கதறிக் கொண்டு 

தன் நிலை மறந்து 

கணத்த இதயத்தோடு 

என் நிலைமையை 

நினைந்து நினைந்து 

உருகுகிறார்கள் வெகுநாட்களாக...

நானோ அங்கே யாரோ 

ஒருவரால் வீசப்பட்ட 

அழுதுக் கிடக்கும் சிறு குழந்தை 

பொம்மையின் நிலையை நினைத்து 

அதனை சமாதானப்படுத்த 

அதை எங்கெங்கோ வேடிக்கை காட்டி 

பரந்த பிரபஞ்சத்தில் ஓடிகளைப்பதை 

பார்த்து காலம் 

என் கால்களை கட்டிக் கொண்டு 

பாசமழையை பொழிந்து 

அணைத்துக் கொண்டு 

பரிதவிக்கிறது...

இங்கே புரிதலின் 

பல்வேறு நுணுக்கங்களின் 

அதிசயத்தை கண்டு 

சில நிமிடங்களில் சுதாரித்து 

மீண்டும் தொலைந்து போகிறேன்...

அதோ அங்கே ஏதோவொரு தேடலில் 

மீண்டும் நான்...

என்னை தேடுபவர்கள் 

என்னை தேடுவதை 

விட்டு விட்டு அதோ அங்கே நடக்கும் 

தெருக் கூத்தில் 

தன் மனதை பறிக் கொடுத்து விட்டு நாளைய பணி நாளுக்கான 

ஓய்வை தேடி 

அந்த இரவில் தொலைந்து 

போகிறார்கள்...

இங்கே நிலையாமையின் 

நிழல் மட்டுமே அழியாத 

கோடாக தொடரும் என்பது 

இந்த பிரபஞ்சத்தின் விதி என்று 

அங்கே காலம் முணுமுணுப்பதை 

யாரும் கேட்க நாதிகளற்று 

காற்றில் கரைகிறது அதன் மொழி...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/04/25/ஞாயிற்றுக்கிழமை.

அந்தி மயங்கி இரவு தொடரும் வேளையில்..

இந்த பிரபஞ்சத்தின் பிறழாத சுழலில் எங்கோவொரு புள்ளியாக நான்...


இந்த பிரபஞ்சத்தின் 

வரைமுறைகள் எது 

என்று 

சரியாக புலப்படவில்லை எனக்கு...

ஏதோவொரு விதியின் 

வரைமுறையில் தான் 

இந்த பிரபஞ்சத்தின் 

பிறழாத சுழல்தல் நிகழ்கிறது 

என்பது மட்டும் எனக்கு 

நன்றாக தெரியும்...

அந்த பிறழாத சுழல்தலில் 

எங்கோ ஒரு புள்ளியாக நான் 

நின்றுக் கொண்டு இருக்கிறேன்...

நான் எந்த அசைவும் இல்லாமல் 

வெறுமனே 

நின்றுக் கொண்டு 

என் பிறவி வேரை அறுத்து 

விடை பெற்று பறந்து 

செல்லும் போது 

கீழே உள்ள பல சம்சாரிகள் 

என் இறகின் நிழல் ஏதோவொரு வகையில் பட்டு விடாதா என்று 

ஏங்கி என் பின்னால் ஓடி வருகிறார்கள்...

நான் அவர்களுக்காக 

என்னில் இருந்து 

வெகு பிரயணத்தோடு 

ஒரு சிறு இறகை உதிர்க்கிறேன்...

அதை பிடிக்க ஆயிரம் ஆயிரம் பேர் 

ஓடோடி வருகிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:-27/04/25/சனிக்கிழமை.

சனி, 19 ஏப்ரல், 2025

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...


அந்த வெறுமையோடு கூடிய 

பயணத்தை 

நான் பயணித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு 

சத்தம் இல்லாமல் பயணிக்கிறது...

நான் அந்த ஆழ்ந்த அமைதியிடம் 

சற்றே 

என்னை தனியாக பயணிக்க விடு 

என்கிறேன்...

நானும் உன்னை போல 

அந்த வெறுமையை நேசிக்கும் பயணி தான்...

ஒரு துணையும் இல்லாமல் பயணிக்கும் உனக்கு ஒரு துணையாக உன்னோடு 

நான் பயணிக்கக் கூடாதா 

என்றது சற்றே 

முகத்தை சோகமான 

பாவனையில் வைத்து...

நான் கொஞ்சம் தடுமாறி 

பின்னர் தலையசைத்து 

அதனோடு கொண்ட பற்றை 

வேகமாக அழித்து விட்டு  

விறுவிறுப்பாக நடக்கிறேன்...

இதை வேடிக்கை பார்த்து கொண்டு 

இருந்த காலமோ 

சற்றே எனது சிறுபிள்ளைத்தனமான 

பிடிவாதத்தை ரசித்து 

சிரித்து எங்களை நிழலாக 

தொடர்வதை நாங்கள் அறியாமல் 

பயணிக்கிறோம் 

அந்த வெட்டவெளியில்...

#நானும்வெறுமையும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/05/25/சனிக்கிழமை.

இந்த அந்தி சாயும் நேரத்தில்...


இந்த அந்தி சாயும் நேரத்தில் நான் 

ஏதேதோ வழக்கமான 

நிகழ்வை பூரணமாக 

முடித்து விட்டு காத்திருக்கும் போதும் 

ஏதோ ஒன்று எனை 

குறையாக நினைக்க வைத்து 

என்னை தடுமாற 

செய்தது...

அது என்ன என்று யோசித்து 

யோசித்து களைத்து விட்டபோது 

எங்கிருந்தோ சன்னல் வழியாக வந்த 

அந்த காற்று என் மேசை மீது இருந்த 

அந்த வெற்று காகிதத்தை 

என் காலை 

உரசி போட்டு விட்டு போனது...

இதோ அந்த வெற்றுத் தாள் மீது 

எனது தீவிரமான கிறுக்கல்கள் 

தொடங்கி விட்டது...

இப்போது நான் விடுதலையாகிறேன் 

ஏதோ ஒன்றாக இருந்து என்னை 

இதுவரை இம்சையடைய செய்த 

அந்த குறைப்படுதலில் இருந்து...

மெல்ல மெல்ல...

#அந்தஏதோவொரு #குறைப்படுதலிலிருந்து

#விடுபடுகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/04/25/சனிக்கிழமை.

நான் ஒரு வேடிக்கை மனுஷி என்று காலம் சொன்னது...


நான் வாழ்கிறேன் என்று அங்கே 

பலபேர் கூச்சலிட்டு 

ஆடி பாடி போகும் போது நான் 

அமைதியாக அந்த நிகழ்வை 

ரசித்து விட்டு 

நான் எனது பார்வையை 

திருப்புகிறேன்...

நீ அப்படி ஒன்றும் பெரிதாக 

வாழ்ந்து விடவில்லை என்று 

நினைத்து அந்த நிகழ்வில் இருந்து 

விடுபட்டு கொண்டாயோ என்று 

காலம் என்னை கேலி செய்தபோது 

நான் புன்வறுவலோடு 

நீ சொல்வது ஒரு வகையில் 

சரி தான் காலமே...

நான் எனக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் 

சிறிதும் மிச்சமில்லாமல் 

ரசித்து விடுவதை தவிர 

வேறொன்றும் செய்வதில்லை 

என்றேன் 

மிகவும் நிதானமாக...

காலமோ நீ எப்போதும் 

வேடிக்கை மனுஷி தான் என்று இரு பொருள் பட 

பேசி விட்டு கலகலவென்று 

சிரித்து கொண்டே நகர்ந்தது...

#நான்வேடிக்கைமனுஷி 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/25/சனிக்கிழமை.

அந்த முகவரியற்றவர்களும் பெரும் மகிழ்வும்...


அந்த மழைக் கால நேரமொன்றில் 

சில பறவைகளின் கீச் கீச் ஒலியோடு 

ஒரு அற்புதமான நிகழ்வொன்று 

அங்கே நடக்கிறது...

அந்த நிகழ்வை என்னை மறந்து 

ரசித்துக் கொண்டு 

இருக்கும் போது தான் 

யாரோ முகவரியற்ற ஒரு மனிதர் 

என் கையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

திணித்து விட்டு 

நிதானமாக அந்த மழையில் 

நனைந்து ரசித்து 

விடை பெறுகிறார்...

நான் அவரை கூவி 

அழைத்துச் சொல்கிறேன்...

நானும் கூட இந்த பிரபஞ்சத்தில் 

ஒரு முகவரியற்ற மனுஷி தான் 

என்று...

என் பதிலை சற்றே திரும்பி 

உள் வாங்கி கொண்டு 

புன்னகைத்து கையசைத்து 

செல்கிறார் அவர்...

அங்கே சிலர் தனக்கொரு 

முகவரி இல்லை என்று 

கூக்குரலிட்டு அழுவதை விட்டு விட்டு 

எங்கள் குரல் வந்த திசையை நோக்கி 

ஓடி வருகிறார்கள்...

தன் கண்களில் ஒளி மின்ன...

அந்த மழையின் நனைதலில் தான் 

இங்கே எத்தனை புரிதலை 

கொண்டு வந்து சேர்த்து விடுகிறது 

என்று 

நான் பெரும் காதலோடு கை 

நீட்டினேன்...

அங்கே ஓடோடி வந்து 

என் கைகளில் அடைக்கலம் 

ஆனது அவர்கள் மட்டும் அல்ல அந்த காலமும் தான்...

#முகவரியற்றவர்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/04/25/சனிக்கிழமை.

திங்கள், 14 ஏப்ரல், 2025

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

 


நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் 

கால்யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 

தெற்கு ஏர்பு இரங்கும் 

அற்சிரக் காலையும்,

அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.


தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

பாடல் எழுதியவர்:- பெருங்குன்றூர்கிழார். பாடல்https://youtu.be/6Md4pYjOjCY?si=yinS39I189kLUA8o

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

எனக்கென்று சிருஷ்டிக்கப்பட்ட விஷேச உலகம்...


இங்கே குடும்பத்தோடு 

ஏதோவொரு நிகழ்வில் 

பிணைத்துக் கொண்டு 

கொண்டாடும் சம்சாரிகளின்

ஒரு உலகம்...

அங்கே ஐபிஎல் ரசிப்பதை தவிர 

இங்கே வேறு ஒரு நிகழ்வும் 

பெரிதாக இல்லை என்று 

சிலாகித்து எழும் இளைஞர்கள் 

கூட்டத்தின் ஒரு உலகம்...

கடற்கரை மணற்வெளியில் 

தனக்கு பிடித்த வீடொன்றை 

கட்டி விட்டு அந்த வீட்டின் அருகே 

ஏதோவொரு மரத்தின் 

உடைந்த கிளையை 

மரமாக பாவித்து நட்டு 

வைத்து விட்டு தனக்கு பிடித்த 

ஒரு சிருஷ்டியை உருவாக்கி விட்ட 

பெருமிதத்தில் கை கொட்டி 

குதித்து அந்த அலையில் 

கால் நனைத்து 

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி

குதூகலித்து கொண்டாடும் 

அந்த சிறுமியின் உலகம்...

இப்படி ஆயிரம் ஆயிரம் உலகங்கள் 

நொடிதோறும் சிருஷ்டிக்கப்பட்டு 

காலத்தின் பார்வைக்கு 

எடுத்துச் செல்லப்படுவதை

பிரமிப்போடு வேடிக்கை மட்டுமே 

பார்த்து விட்டு 

என்னால் சிருஷ்டிக்கப்பட்ட 

அந்த அதி அற்புதமான 

விசேஷமான உலகத்தை 

காலத்தின் பார்வைக்கு 

எடுத்துச் செல்லாமல் 

பெரும் பிரயனத்தோடு 

மறைத்து வைக்கிறேன் நான்...

இங்கே எனது உலகத்தின் 

விசேட பார்வை ஒன்று 

அந்த காலத்தால் 

சிருஷ்டிக்கப்பட்டு 

களவாடப்படும் வரை 

அதை தினமும் 

நினைத்த போதெல்லாம் 

எடுத்து ரசித்து 

அதை என் சட்டை பைக்குள் 

பெருமிதத்தோடு 

சொருகி கொண்டு பயணிக்கும்

வாழ்க்கை பயணியாக ...

இல்லை இல்லை 

விசேஷ வாழ்க்கை பயணியாக

அந்த காலத்தின் சாலையில் 

இந்த பிரபஞ்சத்தின் வாசத்தை 

உணர்ந்து மெது மெதுவாக 

பயணிக்கிறேன் நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/04/25/திங்கட்கிழமை.




சனி, 12 ஏப்ரல், 2025

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...


ஒரு அற்புதமான விடியல் எப்போதும் 

சில பறவைகளின் 

மெல்லிய சத்தத்துடன் தான் 

துவங்குகிறது...

இலேசான குளிர் காற்றில் 

முழு வாழ்வின் பேரானந்த 

சுவையையும் 

இங்கே நாம் உணர்ந்து விடும் 

தருணத்தில் தான் 

ஜென் நிலைக்கு நம்மையும் 

அறியாமல் கடத்தப்படுகிறோம்...

அதோ அங்கே கத்திக் கொண்டே 

பறக்கும் பறவையின் 

இறகின் நிழலில் நான் இளைப்பாற 

முடிகிறது ஏதோரு தொந்தரவும் 

இல்லாமல் 

இங்கே...

வாழ்வின் பேராசை பசியின் 

அகப்படாமல் பயணிக்கும் நான் 

எப்போதும் என்னை...

என்னை சுற்றி நடக்கும் 

இயற்கையின் 

அசைவை அசைப்போட்டு 

பயணிக்கும் விஷேச பயணி நான்...

காலை கவிதை 🎉.

நாள் 13/04/25/ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...