ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 31 மே, 2023

ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் இடையே..

 


ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் இடையே

இருக்கும் வித்தியாசத்தை உணர முடிகிறதா உங்களால்.. அந்த நொடிக்கிடையே தான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் அந்த நொடிகளை மதிக்காமல் ஒரு வருடத்தை மிகவும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறோம் அல்லது சபிக்கிறோம்... இது தான் நாம் வாழும் வாழ்க்கையில் எல்லாம் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறோம்..இதை கொஞ்சம் நிதானமாக யோசித்து பாருங்கள்.. வாழ்வியல் அழகை தவற விட்டதற்கான வருத்தத்தை நீங்கள் உணர்வீர்கள்..

#வாழ்வியல்

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 29 மே, 2023

இன்றைய பயணம்

 


புது பேருந்துகள் வாங்காமல் காய்லாங்கடைக்கு போக வேண்டிய பேருந்தை வைத்துக் கொண்டு மக்களை மழையில் நனைய வைத்து அரசாங்கம் நடத்தும் இவர்களை போன்ற தரம் தாழ்ந்த அரசியல் வேறு எங்கும் நடக்காது... ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர் வெட்டி செலவு... முதலில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் ஓடுகிறது என்று சொல்கிறார்கள்... எந்த பொது துறை தான் இலாபத்தில் ஓடுகிறது என்று தெரியவில்லை... ஆனால் நான் பேருந்து பயணத்தில் இன்று கண்ட அனுபவம் நான் பிறந்த நாளில் இருந்து இதுவரை கண்டதில்லை... மிகவும் மோசமாக திட்ட தோன்றுகிறது.. ஓட்டு போட்ட பாவத்திற்கு மக்கள் இன்னும் இன்னும் எத்தனை துன்பங்களை தான் அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை... ஒரு துறை கூட சரியில்லை என்றால் என்ன தான் நிர்வாகம் நடக்கிறது என்று தெரியவில்லை.. நான் நடத்துநரிடம் நீங்கள் இந்த நிகழ்வை உங்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பேட்டில் எழுதி வையுங்கள் என்று சொனனது மட்டும் இல்லை மக்கள் மிகவும் தரம் தாழ்ந்து அரசாங்கத்தை வசை பாடினார்கள் என்று கூடுதலாக பதிவு செய்யுங்கள் என்று சொல்லி வந்தேன்..சரிமா என்று ஆமோதித்தார் நடத்துநர்.. முழுவதும் நனைந்து நான் இறங்க வேண்டிய இடத்தில் எனது கணவர் என்னை அழைத்து செல்ல காத்திருந்தார்.. அது தான் அப்போதைய ஆறுதல்...

தற்போது தான் சாப்பிட்டு விட்டு இந்த பதிவை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவு செய்கிறேன்..

பக்கத்தில் இருந்த பாட்டியம்மா இலவச பேருந்தில் கூட நான் நன்றாக தான் பயணம் செய்தேன்.. இதில் இவ்வளவு பணத்தை கொடுத்து விட்டு நனைய விட்டு விட்டார்களே என்று புலம்பினார்... அந்த பாட்டியம்மா கூட நன்றாக அரசாங்கத்தை திட்டி தீர்த்தார்..

இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது.. நான் இதுவரை மிகவும் சொகுசாக பயணம் செய்து இருக்கிறேன்.. இப்படி இருந்தால் நிச்சயமாக எந்த அனுபவமும் கிடைக்காது என்பதை இந்த பயணம் எனக்கு உணர்த்தியது..எனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்த தமிழ் நாடு போக்குவரத்து துறைக்கு நன்றி..

எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வர இந்த அனுபவங்கள் எல்லாம் உதவும் தானே...

#இன்றையபயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 27 மே, 2023

நானும் எமனும்

 


நான் குலுங்கி குலுங்கி அழுவதை பார்த்து எமன் அப்படி யார் அழைத்தும்

நான் வந்தது இல்லை..நீ அழைத்து என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை.. ஏன் என்னோடு வர பயமா.. அப்படி என்றால் சென்று விடுகிறேன்... இந்த தளர்வும் உனக்காக தான்.. என்கிறான்.. அப்படி இல்லை.. தங்களோடு வருவதில் ஓர் சிக்கல்.. உங்களோடு வந்தால் அந்த பயணம் சிறு இளைப்பாறுதல் அப்படிதானே என்றேன்.. ஆமாம்.. அப்படி தான் என்றான் எமன்.. அதுதான் எனக்கு பயத்தை கொடுக்கிறது என்றேன்.. அப்படியா ஏன் என்றான் எமன்.. இன்னும் எத்தனை எத்தனை பிறவியோ தெரியவில்லை.. நான் இந்த ஒரே பிறவியில் எல்லா வினைகளையும் அனுபவித்து பிறவிக்கு ஓர் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.. இந்த வாழ்தலின் நீட்சி அது எத்தனை யுகமாக இருந்தாலும் பரவாயில்லை.. நான் இங்கே பயணிக்க தயார்.. ஆனால் இந்த ஓர் பிறவியில் எல்லாம் முடிந்து விட வேண்டும்.. என்றேன்.. அப்படி ஓர் வரத்தை கொடுங்கள் தர்மராஜா என்றேன்...

எமனோ எனது வரத்தை கேட்டு சற்றே நடுநடுங்கி பின் வாங்கி சொல்கிறான்..அதை என்னால் தர இயலாது .. இப்போது நீ வருகிறாயா இல்லையா என்றான்..

நானோ கொஞ்சம் தயங்கி பின் சுதாரித்து நீங்கள் செல்லுங்கள்.. இங்கே ஓர் தவம் எனக்கு பாக்கி இருக்கிறது.. முடித்து விட்டு வருகிறேன் என்றேன்..

எமனோ எனது தவத்தை பற்றி யோசனையோடே எமலோகம் செல்கிறான்...

நான் அந்த பிறவியற்ற நிலையை அடைய கடும் தவத்தில் ஆழ்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 26 மே, 2023

நானும் இந்த பிரபஞ்ச மனிதர்களும்

 


இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களில்

என்னை இந்த சூழலுக்கு வாழ கற்றுக் கொள் 

இல்லை என்றால் உன்னால் தாக்குபிடிக்க முடியாது என்கிறார்கள்

நான் யோசித்து நாளை சொல்வதாக சொன்னேன் நேற்று!

இன்றும் நான் தெளிவாக இருக்கிறேன்

நிச்சயமாக இங்கே இந்த மனிதர்கள்

சொல்லும் சூழலில் ஒன்றி விட முடியாது என்று..

நான் என்ன செய்ய இயலும்?

என்னை படைத்த இறைவனின் எனது வித்தியாசமான வடிவமைப்பு

எனக்கு மட்டும் அப்படி இருக்கும் போது?

நான் இயல்பாக இந்த பிரபஞ்சத்தின் தற்போதைய பரபரப்புக்கு ஏற்ற வகையில் இருக்க முடியாமல் போவதற்கு எல்லாம் இங்கே வசைவுகள்

எந்த கட்டணமும் இல்லாமல் எனக்கு கிடைக்கிறது!

அதுவும் எனக்கு தேவையில்லை என்று சொன்னால் அவர்கள் விடுவதாக இல்லை!

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 24 மே, 2023

அந்த நெடுஞ்சாலை பயணத்தில்

 


அந்த நெடுஞ்சாலை பயணத்தில் எப்போதும் ஏதோ அருகில் இருப்பவரிடம் பேசிக் கொண்டே செல்லும் இயல்புடைய நான்

இந்த முறை எவரிடமும் பேச முயற்சி செய்யவில்லை....

மாறாக எதிரில் தென்படுபவரிடம் ஒரு புன்னகை மட்டுமே உதிர்த்து விட்டு என் பயணத்தை தொடர்ந்தேன்...

பெட்ரோல் போடும் இடத்தில் கூட ஏதேனும் அரசியல் பேசாமல் என்னால் வர முடிகிறது இந்த முறை

என்பதை பார்க்கும் போது

எனக்கு நானே அந்நியனானேன்...

ஏனோ இன்றைய பயணத்தில் என்னை எல்லோரும் ஒரு பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது..

நான் நானாக இயல்பாக பயணிப்பதில் இவ்வளவு

தடைகளா என்று

நான் கொஞ்சம் மலைத்தாலும் இனி இதே கெத்து தான் பின்பற்ற வேண்டும் என்று மட்டும்

மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்...

#நெடுஞ்சாலைபயணம்

#இளையவேணிகிருஷ்ணா.

காலைக் கவிதை

 

இந்த பிரபஞ்சத்தில் 

இயங்கிக் கொண்டு இருக்கும் 

மனிதர்கள் ஏதோவொரு 

நோக்கம் வைத்து ஓடிக் கொண்டே 

இருக்கிறார்கள்...

நான் எப்போதும் அவர்களோடு 

பயணிக்க இயலாது...

ஒரு உணவையே ரசனை இல்லாமல் 

சாப்பிட முடியாதவர்கள் தான் 

ஏதோவொரு நோக்கத்தை வைத்து 

ஓடி ஓடி களைத்து விடுவதை 

தினம் தினம்

பார்த்த பின்பு எப்படி

என்னால் அந்த சுவையற்ற பயணத்தில் 

கலந்துக் கொள்ள இயலும்?

ஏதோ சில தருணங்களை மட்டும் 

ஆனந்தமாக இருப்பதற்கு 

ஒதுக்குவதில் 

எப்போதும் எனக்கு உடன்பாடில்லை...

நான் எப்போதும் நானாக...

என்னோடு என்னை தவிர

நெடுந்தூரம் பயணிக்க இயலாது 

எவராலும்...

இப்போதும் சொல்கிறேன்

சுவையற்ற வாழ்வை எப்படி வாழ்வது????

அதை கொஞ்சம் எனக்கு 

கற்பித்து செல்லுங்கள்!

இல்லை என்னிடம் 

சுவையான வாழ்வியலை 

கற்றுக் கொள்ளுங்கள்!

#காலைகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

ஒவ்வொரு சுவாசமும்..

 


வாழுங்கள் வாழுங்கள்

அனுபவித்து வாழுங்கள்

வாழ்வின் பொருளை மட்டும் தேடாதீர்கள்!

வாழ்க்கை சுவாரஸ்யமாக 

இல்லாமல் போகும்..

ஒவ்வொரு சுவாசமும்

ஒவ்வொரு அனுபவம்...

இங்கே ஒரே நிகழ்வு எப்போதும் 

நீடிக்க போவதில்லை...

அது தெரிந்தும் ஏன் இந்த

மயக்கம்?😊

#காலைகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

சலிப்பு என்னை தழுவி...

 


வாழ்வின் அத்தனை விசயங்களும் முடிந்தது...

இனி இருக்கும் நாட்கள் எதற்காக என்று கேள்வி கணைகள் மட்டும் விட்டு விடாமல் என்னை துரத்துகிறது...

காலமோ கொஞ்சம் பொறு

உனக்கான சுவாரஸ்யமே இனிதான் என்கிறது

ஒரு பக்கம்...

அட சலிப்பு மேலோங்கி

நான் ஏதேனும் செய்துக் கொள்வதற்குள்

அந்த சுவாரஸ்யத்தை என் கண் முன்னே நிறுத்தி விட்டு

உன் போக்கில் நீ பயணி காலமே என்கிறேன்...

அதுவோ ஒரு பயங்கர சிரிப்பை மட்டும் போற போக்கில் உதிர்த்து விட்டு

குதிரை 🐎 வேகத்தில் பயணிக்கிறது...

நானோ இங்கே அநாதையாக தவிக்கிறேன்..

#இரவுகவிதை..

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 22 மே, 2023

அப்படியொரு நிகழ்வில்

 


நான் அப்படி

பிச்சை பாத்திரம்

ஏந்தி

யாசிப்பேன் என்று

இங்கே ஒருவரும்

நினைக்கவில்லை..

என் மீது பெரும் பற்று

உடையவர்கள்

ஓடி வந்து இப்படி

செய்யாதீர்கள்..

இது மிக பெரிய வெட்கக்கேடான விஷயம்

என்றார்கள்..

நான் அவர்கள் சொன்னதை

கொஞ்சம் உள்வாங்கி கொண்டு 

ஏதேதோ கணக்கில் அடங்கா

யாசித்தலை வைத்திருக்கும்

நீங்களே

வெட்கப்படாமல் 

பயணிக்கும் போது

பிரம்ம ஹஸ்தி தோஷம்

நிகழாமல் இருக்க

ஓர் யாசித்தலை செய்யும்

நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று

அவர்களிடம் கேட்டேன்..

மிகவும் நிதானமாக..

அவர்கள் புரிந்தும் புரியாமலும்

என்னை ஓர் பார்வை

தீர்க்கமாக பார்த்து விட்டு

மெல்ல நகர்கிறார்கள்

அந்த இடத்தை விட்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 21 மே, 2023

நான் அந்த நதியில் கரைந்து விடும் போது

 


வாழ்வின் சுவை

அதன் போக்கில் நகரும் 

நதியை ஒத்தது...

கூட்டத்தில் சலசலக்கும்

தேவையற்ற விசயங்களை

ஒதுக்கி விட்டு

இங்கே நகரும் நதியை

ஆழ்ந்த அமைதியோடு

ரசிக்கிறேன்...

எல்லா நிகழ்வுகளும் 

ஏதோவொரு வகையில்

தனக்கான பயனை அடைந்து

நழுவி விடுவது யதார்த்தம்

இங்கே நதி மட்டும்

எந்த நிகழ்விலும் ஒட்டாமல்

பயணிப்பதால் தானோ என்னவோ 

எப்போதும் உற்சாகமாக 

தனக்குள் மட்டும் பேசிக் கொண்டு

தன்னை தானே ரசித்து

நகர்கிறது..

வழிகளில் தென்படும்

காட்சிகளில் தன்னை 

பறிக் கொடுத்து விடாமல்...

நானும் ஒரு நதி தான்..

என்ன சம்சார பந்தத்தின்

நகர்வுகள் என்னை 

இழுத்து செல்வதை 

தடுக்க முடியாமல் திண்டாடும் 

நதியாக...

என்றேனும் ஒரு நாள்

நானும் இப்படி பயணிப்பேன்..

அப்போது நான் நானாக

ஒரு தேனினும் 

இனிமையான நதியாக..

ஒரு அமிர்த நதியாக...

பயணிப்பேன்...

இப்போது கொஞ்சம் 

இந்த நதியின் 

அமைதியான போக்கில் நான் 

என்னை கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்...

ஒரு ஏக்கமான பெருமூச்சோடு...

இங்கே இந்த ஆழ்ந்த அமைதியும் 

இந்த நதியின்

சலசலப்பும் தவிர

வேறெதுவும் தேவையில்லை

இந்த தருணத்தில் நான்

என்னை கரைத்து

அந்த நதியில் கரைந்து விட்டால் 

என்னை எவரும் தேடாதீர்கள்...

நான் பேரமைதியின் 

பயணத்தில் நிம்மதியாக...

பயணிக்க அனுமதியுங்கள்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 20 மே, 2023

இரவு சிந்தனை ✨

 

நெருக்கடிகள் வரும் போது நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.எந்தவித சவால்களையும் எதிர் கொள்ள தயங்க வேண்டாம்.ஏனெனில் சவால்கள் தான் நமக்கு வாழ்வியலை புரிந்து கொள்ள உதவுகிறது.எப்போதும் பாதுகாப்பாக வாழ்க்கை பயணம் செய்ய எத்தனிக்க வேண்டாம்.அப்படி செய்யும் போது ஒருவித சலிப்பு தட்டிவிட்டு விடுகிறது.வாழ்வியல் எனும் புத்தகத்தில் நிறைய பக்கங்களை புரட்டாமலேயே வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் அதிகம்.. அப்படி இல்லாமல் வாழ்வின் எல்லா பக்கத்தையும் நிதானமாக படித்து சுவைத்து நமது வாழ்வை கொஞ்சம் கடப்போமே!! என்ன நேய சொந்தங்களே 😊

#இரவுசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 18 மே, 2023

இரவு கவிதை 🍁


இழப்பதற்கு என்னிடம்

ஒன்றும் இல்லை...

என்னோடு பயணிக்கும் தைரியம்

எது வரை என்னை உற்சாகமாக

இழுத்து செல்கிறதோ

அது வரை நான் சோர்வின்றி

பயணிப்பேன்!

ஏனெனில் இந்த பிரபஞ்சம் பெரியது

நான் வசிக்கும் இடத்தை விட!

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

அன்பு

 


அன்பர்களே வணக்கம்.

            இன்று அடுத்து நாம் பார்க்க இருப்பது அன்பு.வேகமாக ஓடும் இந்த காலகட்டத்தில் அன்பு என்று ஒன்று உள்ளதா என்று கேட்கிறீர்களா.அதுவும் சரிதான்.

      நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேவை என்னவென்று தெரியாமலே ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் ஒரு வார்த்தை சொல்லி அவர்கள் தேவை என்ன என்று புரிய வைப்பதற்குள் நாம் பாதி தூரம் கடந்து விடுகிறோம். அவர்கள் காற்றோடு பேசிக்கொண்டு இருக்கும் பரிதாபத்தைக்கூட நாம் புரிந்து கொள்ள இயலாமல்.

          என்றோவொரு நாள் நமக்கு நேரம் கிடைக்கும் போது நம் அன்பை மொத்தமாக வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம். நாம் வெளிப்படுத்தாமலே அவர்கள் நம்மை விட்டு சென்று விடலாம் அல்லது இவ்வுலகை விட்டே போய் விடலாம். அப்போது நாம் அடுத்தவர்களிடம் தான் சொல்லி புலம்ப வேண்டி வரும். இந்த நிலை தேவையா.

       குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் வேண்டுவது பொருளை அல்ல. அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த பொருளை கொடுத்தாலும் கொஞ்ச நாட்கள் தான். பிறகு அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பைதான்.

       அந்த அன்பு ஒன்றை கொடுத்து அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள். அன்பை உள்ளே சேர்த்து வைக்காதீர்கள். உள்ளே போட்டு போட்டு மறைக்காதீர்கள்.உங்களை நேசிப்பவர்களிடம் வெளிப்படுத்துங்கள்.அதுவே அவர்களுக்கும் உங்களுக்கும் பலம்.

       அன்பை உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள்.பொருட்களால் அல்ல.பரிசுப்பொருட்களை குப்பை போல சேகரிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. உணர்வுகளால் வெளிப்படும் அன்பே இறுதி வரை வெல்லும். அதுவே கடைசி வரை கூட வரும். பரிசு பொருட்களால் வரும் அன்பு சில காலம் மட்டுமே பயன் அளிக்கும். எதிர்பார்ப்பில்லாமல் செலுத்தும் அன்பிற்கு வலிமை அதிகம்.

    ஆனந்தத்தை அனபெனும் உணர்வே கொடுக்கும். வாருங்கள் அனபர்களே அன்பால் ஆட்பட்டு கிடப்போம்.அன்பால் அனைவரையும் வெல்வோம்.🌹🌹🌹🌹🌹

புதன், 17 மே, 2023

ஏற்ற இறக்கங்கள்


 அன்பர்களே வணக்கம்.

           இன்று நாம் பார்க்க போவது ஏற்ற இறக்கங்கள் பற்றி. பலபேருக்கு நான் சொல்ல வந்த விசயம் புரிந்திருக்கும். ஆம் நாம் வாழ்வில் கண்டு வரும் ஏற்ற இறக்கங்களைப்பற்றி தான் .

          சாலையில் செல்கிறோம். பாதை ஒரே மாதிரியேவா இருக்கிறது. சில இடங்களில் மேடுபள்ளங்கள் சில இடங்களில் வேகத்தடை பல இடங்களில் வளைவுகள் பல இடங்களில் சோதனைசாவடிகள் இப்படி தானே இருக்கிறது. இதை கடந்து தானே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறோம்.இதை ஏற்று கொண்டு பயணத்தை தொடரும் நாம் வாழ்க்கை பயணத்தில் மட்டும் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்க நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம். சற்று சிந்தியுங்கள்.

         வாழ்வில் ஏற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நாம் இறக்கங்களை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

       ஒரு பலாப்பழம் இருக்கிறது.அதன் மேற்பகுதி கரடுமுரடாக இருந்தாலும் அதன் உள்ளே சுவையுள்ள பலாசுளைக்காக அதை வாங்குகிறோம். அது தெரிந்து இருக்கிறது .அதனால் வாங்குகிறோம் என்கிறீர்களா. அதேபோல் தான் வாழ்க்கையும்.இறக்கங்களை மட்டுமே எதிர்க்கொள்ள மாட்டோம். இறக்கங்கள் இருந்தால் கண்டிப்பாக ஏற்றங்கள் இருக்கும் என்று சுவாரஸ்யமாக பயணிப்போம்.அப்போது தான் இலக்கை அடையும் போது நமக்கு வெற்றி களிப்புடன் இருப்போம்.

          இறக்கங்களில் சோர்வுறாமல் ஏற்றங்களை நோக்கி பயணிப்போம். நம் பயணத்தில் எதிர்ப்படும் நிகழ்வுகளை வேடிக்கையாக பார்த்து கடந்து செல்வோம். தேங்கி விடாமல் பயணிப்போம். இலக்கை விரைவில் அடைவோம். பயண நிகழ்வுகளை ஆனந்தமாக ரசிப்போம் அது நல்லதோ கெட்டதோ.என்ன நேயர்களே ஆனந்தமாக பயணிப்போமா ஏற்றங்களை நோக்கி.!!🌷🌷🌷🌷🌷🌷

நினைவலைகள்

 


என்றாவது நீங்கள் எதிர் காற்று வீசும்போது மிதிவண்டியை ஓட்டி இருக்கிறீர்களா? நான் பள்ளி காலத்தில் போக ஏழு கிலோமீட்டர் வர ஏழு கிலோமீட்டர் மொத்தம் பதினான்கு கிலோமீட்டர் ஏழாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பயணித்து இருக்கிறேன்.. இதில் பள்ளி இறுதி ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பித்து சில நாட்களில் காற்று காலம் வரும்.. போகும் போது காற்றே நம்மை தள்ளி சென்று விடும்.. ஆனால் பெரும்பாலும் காற்று வீசாது.. ஆனால் பள்ளி முடியும் நேரத்தில் காற்று வீச தொடங்கி வீடு வரும் வரை இதே நிலை தான்.. நான்கு ஐந்து பெடல் வேகமாக போட்டால் தான் வண்டி சாயாமல் நிற்கவாவது செய்யும்.. கண்களில் கண்ணீரோடு மூச்சு வாங்கி கீழே இறங்கி அதை தள்ள முடியாமல் கொஞ்ச நேரம் தள்ளி காற்று சில நிமிடங்கள் அடங்கிய போது வண்டியில் ஏறி பெடலை வேகமாக மிதித்து வீடு போய் சேர்ந்த அந்த காலத்தை இப்போது நினைத்து பார்க்கிறேன்.இப்போது எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொள்கிறேன் அந்த துன்பத்தை எதிர் கொண்ட உனக்கு இப்போது என்ன ஆனது? அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு தெரியும் வாழ்க்கையின் வலி என்ன என்று...

குறிப்பு:-இப்போதெல்லாம் அந்த காற்றை காணவில்லை.. ஒரு வேலை இப்போது அதை எதிர்க்கொள்ளும் அளவுக்கு சைக்கிள் ஓட்டுபவர்கள் இல்லை என்பதாக கூட இருக்கலாம்.யார் கண்டது காலத்தின் கணக்குகளை?

#நினைவலைகள்

#இளையவேணிகிருஷ்ணா.

தேவை இங்கே ஒரு மென் சிறகு

 


தேவை இங்கே பேரமைதி

எந்தவித பேச்சும்

மனதிற்குள் கூட நடக்காத

ஒரு அமைதி!

தேவை இங்கே ஒரு

மென் சிறகு...

நான் நானாக

பறக்க அல்ல...

நான் நானாக என்னை மறந்து 

பிரபஞ்சத்தின்

ஆழ்ந்த நிலையை

பிரபஞ்சத்தின் வெகு தூர

வெட்டவெளியில் இருந்து

அனுபவிக்க...

#இரவுக்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 16 மே, 2023

வெயிலின் பேரன்பு


பகலில் மேனியில்

படர்ந்து பேரன்பு காட்டும் வெயிலை

வெறுக்க இயலவில்லை...

மாறாக வியர்வையின் மீது

கோபம் கொந்தளித்து வருகிறது...

#வெயில்

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 15 மே, 2023

காலை சிந்தனை ✨

 


காலம் என்னை நேர்த்தியாக

வடிவமைக்கிறது!

நான் அதன் வடிவமைப்பை

கொஞ்சம் பொறுமையாக இருந்து

ரசிக்கிறேன்!

ரசனை மிகவும் நேர்த்தியாக

வாழ்க்கையை நேசிக்க வைக்கிறது!

#காலை சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 14 மே, 2023

புத்தரின் வைராக்கியம்

 


புத்த பூர்ணிமா வில் புத்தரை பற்றிய ஓர் பார்வை:-

இங்கே சமூக வலைத்தளங்களில் எனது கண்ணில் அடிக்கடி படும் ஓர் விசயம் புத்தர் தனது மனைவியை தவிக்க விட்டு விட்டு சுயநலமாக சென்று விட்டார் என்று.. இங்கே ஓர் விசயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.. இராமானுஜர் வாழ்வும் இதே கதை தான்.. ஆனால் இராமானுஜருக்கு குழந்தை இல்லை.. புத்தருக்கு குழந்தை இருக்கிறது.. சரி அதை வைத்தே கூட இங்கே விவாதிக்கலாம்.. ஓர் பச்சிளம் குழந்தையை மிகவும் அழகான மனைவியை விட்டு விட்டு ஞானத்தை தேடி ஓர் பயணம் எல்லோருக்கும் சாத்தியமா என்று கேள்வி உங்களுக்குள்ளேயே கேட்டு பாருங்கள்.. அதற்கு எந்தளவுக்கு வைராக்கியம் இருந்து இருக்க வேண்டும் என்று யோசித்து பாருங்கள்..

ஓர் ஆத்ம ஞானத்தை தேடி ஓர் பயணம் என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வந்து விடாது.. அந்த வைராக்கியம் வருவதற்கு ஓர் ஆழ்ந்த ஞானம் வேண்டும்.. அந்த ஞானம் எல்லோருக்கும் இங்கே இருக்கிறதா..

ஓர் குழந்தை மேல் அவ்வளவு எளிதாக பற்றை விட்டு விட முடியுமா?? நீங்களே கேட்டு கொள்ளுங்கள்..இதை உங்களால் நிகழ்த்த முடிந்து அதற்கு பின் புத்தரை விமர்சனம் செய்யுங்கள்.. அதற்கு பின் உங்களால் விமர்சனம் செய்ய இயலாது.. ஏனெனில் நீங்கள் ஆழ்ந்த ஞானத்தில் அமிழ்ந்து விடுவீர்கள்..

இங்கே ஓர் அவதார புருஷனுக்கு என்று சில லட்சணங்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட உள்ளது.. அந்த லட்சணங்களை நீங்கள் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்..அதை விடுத்து புத்தரை விமர்சனம் செய்யாதீர்கள்.. அப்படி விமர்சனம் செய்து தான் நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.. அதற்கு பல வழிகள் உள்ளது..

மீண்டும் மீண்டும் புத்தரை இனியேனும் விமர்சனம் செய்யாதீர்கள்..

#புத்தர்எனும்சித்தார்த்தன்.

காலை சிந்தனை ✨


 விடியலின் பெருந்தன்மை

நமது நேற்றைய தவறுகளை 

மன்னித்து

இன்று புதிதாக உற்சாகமாக

பயணிக்க வைப்பது தான்!

எப்போதும் பிறந்திருக்கும்

புதிய நாளை நேசிப்போம்!

#காலை சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 13 மே, 2023

காலை சிந்தனை ✨


 இந்த பிரபஞ்சம் ஏன்

இயங்கிக் கொண்டே 

இருக்கிறது?

ஒரு துளி சலனம் இல்லாமல் 

இயங்கும்

அதன் இயக்கத்தை எண்ணி 

நான் வியக்கிறேன்!

என் இயக்கத்தின் சலனத்தை

நிறுத்த

என்ன வழி என்று

ஆழ்ந்த சிந்தனை கொள்கிறேன்!

#இளையவேணிகிருஷ்ணா.

குரங்கும் இந்த மாலைப் பொழுதும் திக் திக் நிமிடங்கள்

 


தற்போது காற்றாட மாடியில் நானும் எனது கணவரும் அமர்ந்து இருந்தோம்... ஒரு பெரிய குரங்கு 🐒 வேகமாக சீறிக் கொண்டு எங்களை நோக்கி பாய வருவது போல வாய் பிளந்து சீறி நின்றது... இந்த சமயம் பார்த்து அதை துரத்த குச்சியும் இல்லை.. நாங்கள் எதற்காக எழுந்தாலும் எங்கள் மீது பாய்வதற்கு அது தயாராகவே இருந்தது..அதை நாங்கள் பார்க்க அது சீறுதலும் அதிகமாக இருந்தது... எனது கணவருக்கோ அதன் மீது மிகுந்த கோபம்.. தன் கோப பார்வையால் பொசுக்கி விடுவது போல பார்த்தார்.. அப்போது அதுவும் முறைத்து வேகமாக வாயை பிளந்து தாவி வருவது போல நின்றது..அவரை பார்க்க பிறகு அதே சீறலோடு என்னை பார்க்க திக் திக் நிமிடங்கள்... நிஜமாகவே இதய துடிப்பு மிகவும் அதிகரித்தது எனக்கு.. ஏனெனில் அது அவ்வளவு பெரிய குரங்கு 🐒. உடனே நான் சமயோசிதமாக யோசித்து அதை பார்ப்பதை நிறுத்துங்கள் என்று எனது கணவரிடம் சொன்னேன்.. பிறகு கஷ்டப்பட்டு அவர் அதன் மீது இருந்த பார்வையை விலக்கினார்.. நானும் அதை பார்ப்பதை நிறுத்தி வேறு பக்கம் திருப்பினேன்.

இதெல்லாம் 🐒 குரங்கு எங்களுக்கு மிகவும் அருகில் நடந்த விசயம்.. காலடியில் நான்கு எட்டு வைத்தால் எங்களை துவம்சம் செய்து கடித்து குதறி இருக்கும்... ஆனால் அதன் பக்கம் இருந்து பார்வையை விலக்கியதால் உயிர் பிழைத்தோம்...

#இப்போது சற்று நிமிடங்களுக்கு முன்பு.

இப்போது இதை தட்டச்சு செய்யும் போது கூட நடுங்குகிறது... அசையாமல் ஒரு கைதியை போல இருந்த அந்த சில நிமிடங்கள் நிச்சயமாக மறக்க முடியாது...

#திக்திக்திக்நிமிடங்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 12 மே, 2023

நிகழ்வுகள் சத்தம் இல்லாமல் பயணிக்கிறது

 


விடை பெறும்

பொழுதுக்கு இரண்டும்

ஒன்று தான் 

இங்கே நிகழ்வுகள்

சத்தம் இல்லாமல்

பயணிப்பதும்...

மனிதர்களின் சலசலப்பான

பயணமும்....

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 10 மே, 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

#அரசியல் #தூய்மையானது:- அரசியலை இங்கே பல பேர் சாக்கடை என்று மிகவும் மோசமாக வசைப்பாடுகிறார்கள்.. அந்த பணியில் ஈடுபடுபவர்கள் பலபேர் செய்யும் தவறுக்காக அந்த துறையே தவறு அதை பற்றி பேசுவதே தவறு என்று எப்படி சொல்ல முடியும்? இங்கே அரசியல் எனது பார்வையில் மிகவும் தூய்மையான உயர்ந்த விஷேசமான பணி என்று தான் சொல்வேன்... எப்போதும் எந்த துறையும் இங்கே அசிங்கமான பார்வை பார்க்க தேவையில்லை..அந்தந்த துறையின் இயல்பை சிதைத்து விட்டவர்களை சாடுங்கள்... அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பியுங்கள்... அதே போல தான் ஆன்மீகமும்.. ஆன்மீகத்தில் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மெய் ஞானமே தவறு என்று எப்படி சொல்ல முடியும்? இங்கே தவறு செய்தவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சாடுங்கள்... ஆனால் எந்த துறையையும் சாடாதீர்கள்.. பாவம் அது என்ன செய்யும்?செய்யாத தவறுக்கு உங்களை பொறுப்பாக்கினால் உங்களுக்கு கோபம் வராதா? அப்படி தான் இதுவும்...

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் உங்களிடம் அரசியல் பேசுங்கள் மிகவும் நாகரீகமாக.. அரசியல் பற்றி வீட்டில் ஒரு மணி நேரமாவது அன்றன்று நடந்த விசயங்களை பற்றி விவாதியுங்கள்...அரசியலை தூய்மையாக்கும் பணி மக்களாகிய நம்மிடமே உள்ளது.. ஏனெனில் இன்னும் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கிறது.. அதுவும் நமக்காக தான்...

சிந்திப்போம்; செயல்படுத்துவோம்..

இங்கே எதுவும் சாத்தியம் தொடர் முயற்சி மற்றும் அக்கறையும் தான் வேண்டும் நம்மிடம்...

#இன்றையதலையங்கம்

#அரசியல்தூய்மையானது.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 9 மே, 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் அறத்துப்பால் பொருட்பால் அதிகாரத்தில் இருந்து திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தோடு எழுதி வைக்க வேண்டும் என்று அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது வரவேற்க்கத்தக்கது.

இன்றைய சூழலின் அவசியம் கூட... இன்னொரு விசயத்தையும் அவர் சேர்த்து இருக்கலாம்.. தினமும் ஒரு திருக்குறளை அரசு அதிகாரிகள் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அந்த திருக்குறளோடு பொருளையும் சேர்த்து ஒப்பிக்க வேண்டும் என்று சொல்வது மட்டுமல்லாமல் அந்த குறளில் இருந்து தாங்கள் புரிந்துக் கொண்டது என்ன.. குறைந்தபட்சம் இது படி நடக்க சிறு முயற்சியேனும் எடுப்பீர்களா என்று நேரடியாக அந்த அரசு துறை அதிகாரியிடம் மேலதிகாரி கேட்கும் போது மனசாட்சி உள்ள எவரும் தவறு செய்ய கொஞ்சமேனும் யோசிக்க கூடும் அல்லவா...

இதை பற்றியும் மதிப்பிற்குரிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு யோசித்தால் அவரது புகழ் நிச்சயமாக நிலைத்து நீடித்து இருக்கும்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

#திருக்குறள்.

காலை சிந்தனை ✨

 


பல ஸ்ருதி இல்லாமல்

இங்கே எதுவும் நடப்பதில்லை..

அந்த பலஸ்ருதி இல்லாத 

வாழ்வியல் பயணம் என்பது

தெளிந்த நீரோடை போல

ஆனந்தமான 

பயணமாக இருக்கும்...

#காலைசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

வேடிக்கை

 


வேடிக்கை இங்கே

பல வழிகளில் பயணிக்கிறது...

நான் என்னை உணர்கிறேன்

அங்கே எவரும் 

கண்டுக் கொள்ளாமல் பயணிக்கும்

ஒரு நுட்பமான வேடிக்கையில்...

#வேடிக்கை.

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்தின் சுவைகளில்...

 


காலத்தின் சுவைகளில்

நான் எந்த சுவை என்று

தேடியலைந்து தொலையும்

ஒவ்வொரு நொடியிலும்

நான் கைக்கு அருகில்

என் பசி தீர்க்கும் சுவையை

கண்டுக் கொள்ளாமலேயே

பயணிக்கும் கொடுமையை

காலத்தை தவிர

யார் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

தேர்தல் எனும் போர்க்களம்

 


கொஞ்சம் தேநீர் ☕

கொஞ்சம் அரசியல் 🎉


தேர்தல் எனும் போர்க்களம்

மெல்ல மெல்ல

அமைதியடைகிறது!

நாளை சிறைப்பிடிக்கப்படும்

மக்கள் எனும் சிப்பாய்களை

மீட்க எந்த நாட்டு ராஜாவும்

வரப் போவதில்லை என்று

தெரிந்தும் சிறைப்பட துடிக்கிறார்கள்

அங்கே சிப்பாய்கள்

பெரும் கூட்டம் கூட்டமாக...

#கர்நாடகதேர்தல்களம்

#இளையவேணிகிருஷ்ணா.

கொஞ்சம் காதல் 🦋 கொஞ்சம் மழை ☔


தேகம் இரண்டும் மோதலில்

சிலிர்ப்பதை விட

உன் நினைவெனும் 

அலையின் உரசலில்

ஆயிரம் ஆயிரம் உணர்வுகள் 

என்னை சிலிர்க்க வைக்கிறது!

காதலின் தீண்டலில் தான்

எத்தனை எத்தனை வகை இங்கே?

#இளையவேணிகிருஷ்ணா.

ஒரு பெரும் சுவை கொண்ட தேநீர் ☕ கோப்பை


இந்த பிரபஞ்சத்தின்

மோசமான நிகழ்வின்

தகிப்பை தணிக்க

எப்போதும் எனக்கு

எவர் மூலமாகவோ

கிடைத்து விடுகிறது..

ஒரு பெரும் சுவையான 

தேநீர் கோப்பை...

அந்த சுவையில் சுகித்து

திளைக்கிறேன்..

அந்த சில நிமிடங்களில்

ஒரு ஆனந்தமான யுகம்

எனக்காக 

சிருஷ்டிக்கப்பட்டு விடுவதை

இங்கே எவருக்கும் 

அறிவிக்க விரும்பவில்லை நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

எனக்குள் தகிக்கும் தணலில்


சிதைந்து விடுவதை விட

கரைந்து விடுவது ஆனந்தம்!

காணும் காட்சி பிழையில் கூட

கண்டுணர்கிறேன்

ஆயிரம் ஆயிரம் ஆனந்தம்!

இங்கே நான்

ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

எனக்குள் தகிக்கும் தணலில்!

இது எப்படி சாத்தியம் என்று

அங்கே கிசுகிசுத்து 

செல்பவர்களுக்கு தெரியாது!

தகிப்போ தவிப்போ

இங்கே உணர்வில் மூழ்கி விடாமல்

தனித்து தெரிதல் என்பது ஒரு

அற்புத கலை என்று!

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 8 மே, 2023

காலத்தின் கையில் நான்


காலம் தான் 

என்னை கடத்துகிறது!

காலம் தான் 

என்னை மிரட்டுகிறது!

காலம் தான்

என்னை அரவணைக்கிறது!

காலம் தான் 

என்னை புதுப்பிக்கிறது!

காலம் தான் 

என்னை இறுதியில்

தனக்குள் புதைத்துக் கொள்கிறது!

என் வாழ்க்கை பயணம்

சில பல துளிகளை 

இந்த பிரபஞ்சத்தில்

தூவி செல்வதை எவரும் 

கண்டுக் கொள்ளாமல் கிடக்கிறது!

நான் என்ன செய்ய இயலும்?

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 4 மே, 2023

ஆழ்ந்த அமைதியும் நானும்


ஆழ்ந்த அமைதியோடே

பயணிக்கிறேன்..

இதை உற்று பார்த்துக்

கொண்டிருந்த

காலம் 

ஏன் இப்படி

ஆழ்ந்த மௌனம் என்று

கேள்விக் கணைகளை

தொடர்ந்து கொடுப்பதை

பார்த்து...

சற்று நேரம்

அமைதியாக இரு...

நான் ஆழ்ந்த அமைதிக்கு

விஸ்வாசமாக இருக்கிறேன்

என்றேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

வெட்டவெளியோடு ஒரு பயணம்

 


கொஞ்சம் தேநீர் ☕

கொஞ்சம் கவிதை 🦋:-

அந்த நடுநிசியில்

மிகவும் அமைதியாக

வெட்டவெளியை

ரசித்து கொண்டு

இருந்தேன்..

கொஞ்ச நேரம் 

என்னோடு வருவாயா

பயணிக்க என்றது

வெட்டவெளி..

நானோ இங்கே

சில புரியாத மனிதர்கள்

கேள்விக் கணைகளால்

துளைத்தெடுப்பார்களே

என்றேன்

மிகவும் கவலையாக..

அப்படி என்றால்

உனக்கும் எனக்கும்

காலம் காலமாக

உள்ள பந்தத்தை விட

அந்த சில மனிதர்களின்

பேச்சுக்கு இரையாகி விட்டாயா 

என்றது வெட்டவெளி

ஊடலோடு...

நான் உடனே

புறப்பட்டு விட்டேன்

அதனோடு...

இந்த இரவின் பயணத்தின் 

சுவையை பருக

மிகவும் உற்சாகமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

அவர் நானல்ல


 அதோ அங்கே

என் சாயலில்

ஒருவர் 

என்னை கடந்து

வேகமாக போகிறார்

அவரை நான் என்று

நினைத்து தொடர்ந்து

விடாதீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

பயணத்தின் சிதறல்

 


ஏதோவொரு விசயத்தில்

நான் பயணிக்கிறேன் என்று

இங்கே பல பேர்

நினைத்துக் கொண்டு 

இருக்கிறார்கள்...

நான் அப்படி எந்த விசயத்திலும்

பயணிக்கவில்லை...

அப்படி ஓர் பயணத்தில்

கொஞ்சம் சிதறி விடுவதே

இங்கே பயணிப்பதாக

பலபேருக்கு

காட்சிப்படுத்தப்படுகிறது...

அவ்வளவே...

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்தின் வழிகாட்டி

 


நீ என்னிடம்

கற்றுக் கொள்

என்கிறது காலம்

நானோ கற்றுக் கொண்டு

எதையும் சாதிக்க

விரும்பவில்லை

உன்னோடு 

ஓர் புரிதலோடு

கரைதலை மட்டும்

நிகழ்த்தி விடு 

என்கிறேன் 

காலத்திடம்...

இதோ இப்போதே என்று

தன்னுள் என்னை

ஆழமாக ஆனந்தமாக

இழுத்துக் கொண்டது...

#இளையவேணிகிருஷ்ணா.

நடுநிசி நிகழ்வு

 


நடுநிசி கவிதை:-

எல்லா நிகழ்வுகளிலும்

உங்களை முன்னிலைப்படுத்தி

அடையாளப்படுத்திக் கொள்ள 

பரபரக்காதீர்கள்...

அதோ சுவரோரமாய்

எந்த சத்தமும் இல்லாமல்

நகர்ந்து செல்லும்

அந்த சிறு பூச்சிக்கு

கொஞ்சம் வழி விடுங்கள்..

இந்த பிரபஞ்சத்தின்

அடையாளத்தில்

அதற்கும் பெரும் அதிகாரம்

உள்ளது என்பதை

நினைவில் வையுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 3 மே, 2023

இரவு கவிதை 🍁


 அத்தனை நிகழ்வையும் 

புதைத்துக் கொள்ளவும் முடியாது

அத்தனை நிகழ்வையும் என்னோடு 

ஒன்றாக பயணிக்க 

அனுமதிக்கவும் முடியாது

காலமெனும் பெருவெளியில்

அது கலந்து விட நான் 

பெரும் பிரயத்தனம்

செய்கிறேன்..

இங்கே ஒரு சூட்சம காற்றாக

அலைந்து திரிந்தால்

 அதுவே எனக்கு போதும்!

நான் கொஞ்சம் என்னை

ஆசுவாசப்படுத்திக் கொள்ள!

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 2 மே, 2023

திருமணம் எனும் இம்சை

 

உடனடியாக விவாகரத்து வழங்கும் முறையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது..உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது..

இங்கே சேர்ந்து வாழவே முடியாது என்று ஆயிரம் ஆயிரம் முறை யோசித்து தான் பல பேர் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்..அவர்களை போய் நீ இன்னும் ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்து விட்டு வா என்று சொல்வது முறையல்ல.. இங்கே நீதிமன்றத்தில் கவுன்சிலிங் கொடுத்து மட்டும் எதுவும் மாறப் போவது இல்லை.அது மேலும் அவர்கள் மன காயத்தை தான் அதிகப்படுத்தும்.. மேலும் அரசியல்வாதிகள் ஊழல் செய்து விட்டு வழக்கு என்று வரும் போது வாய்தா வாங்குவது போல அல்ல இது..இது வாழ்க்கை.. நீதிமன்ற படி ஏறி ஏறி காயப்பட்டு மீதி வாழ்க்கையை தொலைத்து விட்டு கண்ணீரோடு வாழ்வின் இறுதி பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா?

என்னை பொறுத்தவரை இங்கே நமது தர்ம சாஸ்திர விதிப்படியா எல்லாம் இங்கே நமது நாட்டில் நடக்கிறது.. பிறகு ஏன் இந்து திருமண சட்டம் இதை அனுமதிக்கவில்லை அதை அனுமதிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மன்றாடுகிறார்கள்? இங்கே தற்போது திருமணம் என்பதே மிகவும் வேடிக்கையான விசயம் தான்... இங்கே பெண்கள் தான் அதிகமாக காயப்படுகிறார்கள்... பலபேர் காயத்தை வெளிக் காட்டிக் கொள்வது இல்லை... இங்கே அரசியல்வாதிகள் வெற்றி பெற தான் நமது குழந்தைகள் உதவுகிறது ஓட்டு எனும் ரூபத்தில்.. வேறு ஒன்றும் பெரிதாக பெரும்பாலும் இல்லை என்று தான் தோன்றுகிறது...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

திருமண பந்தம்

 


தவறொன்றும் இல்லை... எவ்வளவு பேர் மன உளைச்சலில் இருக்கிறார்கள்...வாய்தா வாய்தா என்று பாவம்... சொல்ல முடியாத துயரத்தை தான் கொடுத்து இருக்கிறது பலபேரின் வாழ்வில்... இதனால் இன்னொரு பிறவியில் கூட அவர்களால் மறக்கவே முடியாது..திருமண பந்தம் மோசமானது என்று...

இங்கே தற்போது பல பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் திருமண பந்தத்தில் நுழைய தேவையே இல்லை என்று... அது ஏன் என்றால் அந்தளவுக்கு தற்போது விஞ்ஞான வளர்ச்சியிலும் குடும்ப அமைப்பில் அதே சிக்கல் தான்... மாமியார் நாத்தனார் இவர்களின் இயல்பு மட்டும் யுகம் மாறினாலும் மாறாது... அதனால் தான் அதை உணர்ந்து திருமண பந்தத்தை தவிர்க்கிறார்கள் இந்த காலத்தில் சில பெண்கள்.. வலுக்கட்டாயமாக திருமண பந்தத்தில் நுழைந்து எதற்காக அவஸ்தை பட வேண்டும் என்று...

நமது குடும்ப அமைப்பு சிதறி பல வருடங்கள் ஆகிறது.. இங்கே வாழ்வியலை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு போக எண்ணம் இல்லாதவர்கள் கொஞ்சம் தனித்துவமாக வாழ நினைக்கிறவர்கள் திருமண பந்தத்தில் இணைவதில் பற்றி ஆயிரம் முறை யோசிக்கிறார்கள்... இது காலத்தின் கட்டாயம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்..

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 1 மே, 2023

இரவு கவிதை 🍁

 


இரவு கவிதை:-

தொலைகிறது

இங்கே

ஆயிரம் ஆயிரம்

விசயங்கள்!

அந்த ஆயிரத்தில்

ஓர் பொக்கிஷம்

ஆனந்தம்!

அதை எவரும்

தேடாமல்

பல உலக விசயங்களில்

தம்மை தொலைத்து

தேடுகிறார்கள்

தேடுகிறார்கள்

தேடிக் கொண்டே

இருக்கிறார்கள்

பல குப்பைகளை

பொக்கிஷமாக

நினைத்து!

ஆனந்தமோ 

எந்தவித சலனமும்

இல்லாமல்

வேடிக்கை பார்க்கிறது

மூடர்களின் அறியாமையை

சிறு புன்முறுவல் 

இதழ்களில் கசிய விட்டபடி!

#இரவின்வெளிச்சம்.

எல்லா நிகழ்வும் ஒரு கொண்டாட்டமே

 

கொண்டாட வேண்டிய விசயம் தான்...

வாழ்வில் சில பந்தங்கள் இப்படி தான்...

எது வரை பந்தம் என்று தெரியாது...

இருக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை..

சொல்ல போனால் இது ஒரு ஆறுதல் அந்த பெண்ணிற்கு..

இந்த போட்டோ ஷூட் குறை சொல்ல முடியாது...

இங்கே எல்லா நிகழ்வுமே ஒரு வகை கொண்டாட்டம் தான்...

வாழ்க்கை என்பது ஒரு ரசனை...

அதில் இது ஒரு ரசனை...

ஆனால் இந்த இணையவாசிகள் இந்த பெண்ணை சரியாக புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு ஒரு அறிவுரை ஒரு உபதேசம் என்று தொல்லை செய்யாமல் இருந்தால் சரிதான்...

#எனதுபார்வை.

#இளையவேணிகிருஷ்ணா.

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...