ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அதிகாரம்

அன்புடையீர் வணக்கம்.
      இன்று நாம் பார்க்க இருப்பது அதிகாரம்.அதிகாரம் என்று சொன்னவுடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நபரை ஞாபகம் வரும். பெரும்பாலும் சின்ன குழந்தைகளுக்கு அவரது பெற்றோர், பெரியவராக இருந்தால் அரசியல்வாதிகளையும் அலுவலகத்தில் தம்முடைய மேலதிகாரிகளையும் ஞாபகம் வரும்.
   சரி இப்போது நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யாரோ ஒருவர் மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறோம்.அது ஏனோ தெரியவில்லை அதிகார போதை மட்டும் அனைவருக்கும் இருக்கிறது. இந்த போதை குடிகாரர்கள் போதையை விட மோசமானது என்றே சொல்லலாம். ஏனெனில் இது அந்தளவிற்கு அடுத்தவரின் உரிமைகளை பறிக்கும் குணமாகவே இருக்கிறது.
       உண்மையில் அதிகாரம் செலுத்துபவர்களை விட அன்பால் சாதித்தவர்களே இந்த உலகத்தில் அதிகம். ஏன் அதிகாரம் கையில் இருந்தும் கூட அதை கையில் எடுக்காமல் சாதூர்யமாக அன்பால் சாதித்தவர்களே அதிகம். அந்தளவிற்கு அன்பு சக்தி வாய்ந்தது. ஆனால் அதை பயன்படுத்துபவர்கள் தான் குறைவாக இருக்கிறார்கள்.
     இன்றைய சூழலில் தீவிரவாதம் அதிகரித்ததற்கு காரணம் கூட அன்பின் தாத்பரியம் புரியாமல் போனதுதான் காரணம் என்று நான் அழுத்தம் திருத்தமாக சொல்வேன்.
    இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட அன்பாக நடந்து கொள்ள பொறுமை இல்லாமல் அதிகாரம் செய்து செய்தே நமது குடும்ப அமைப்பை சிதைத்து விட்டோம்.
      கொஞ்சம் நிதானமாக நாம் இருந்தால் நமது குடும்ப குதூகலிப்பிற்கு குறைவேது.
     அதிகாரமும் தேவைதான்.அதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கே அளவறிந்து பயன்படுத்த தெரிந்தவர்களே அது எந்த துறையாக இருந்தாலும் சாதிக்கிறார்கள்.
    சில இடங்களில் அதிகாரம் இல்லாமல் சாதிக்காமல் போன காரியங்கள் ஏராளம். அதனால் அதிகாரம் வேண்டும். ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கு மதிப்பு கூடுகிறது.
  மோசமானவர்களின் கையில் மாட்டிய அதிகாரம் தான் சிதைந்து போவதுடன் அதன் மரியாதையையும் இழந்து விடுகிறது.
    அதனால் மக்களே நாம் சிந்தித்து செயல்பட்டு அதிகாரத்தின் மரியாதையை காப்பவர்கள் மற்றும் அதை துஷ்பிரயோகம் செய்யாதவர்கள் கையில் கொடுத்து அதன் மாண்பை காக்க முயற்சி செய்வோம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.சரி நேயர்களே மீண்டும் நாம் ஒரு அழகான கட்டுரையில் சந்திக்கும் வரை பிரிவோம்!சந்திப்போம்!🖐️🖐️🖐️🙏

புதன், 19 செப்டம்பர், 2018

வாழ்வியல் சிந்தனைகள்


வாழ்வியல் சிந்தனைகள்


வாழ்க்கை தத்துவம்


வாழ்க்கை தத்துவம்


வாழ்க்கை தத்துவம்


செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வாழ்வியல் தத்துவம்

  • அன்பர்களே வணக்கம்.வாழ்க்கை தத்தவத்தை விளக்கும் இந்த பாடலை நான் எழுதி உருவாக்கியது.இதை கேட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.
  •         

திங்கள், 17 செப்டம்பர், 2018

இசை

அன்பர்களே இந்த இசையை கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.இது எனது எழுத்து மற்றும் இசையில் நானே பாடியது.பிடித்தால் லைக் செய்யுங்கள். உங்கள் ஊக்கமே எனது படைப்பை மெருகேற்றும்.

பிடிப்புகள்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது பிடிப்புகள். என்ன இது வித்தியாசமாக இருக்கிறது இன்றைய தலைப்பு என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதைத்தான் நான் உங்களிடம் விளக்கமாக சொல்ல இருக்கிறேன்.
     நாம் பிறந்தது முதல் இறப்பு வரை எதையாவது நமதுகைகள் பிடித்துக்கொள்ளவே விரும்புகிறது.அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீங்களும் யோசியுங்கள். பிறந்த சிறுகுழந்தையிடம் உங்கள் கைகளையோ இல்லை ஏதாவது பொருளையோ கொடுத்து பாருங்கள். அது ஆவலாக அதை பிடிக்கவே நினைக்கும். நீங்கள் அதை எவ்வளவு தள்ளி பிடித்தாலும் அதை அது உற்சாகமாக பிடிக்கவே முனைப்பு காட்டும். இந்த செயல் தான் பிற்காலத்தில் எதைஎடுத்தாலும் தனதாக்கி கொள்ள தூண்டுகிறது. ஆனால் அந்த செயலை தடுக்க முடியாது. சிறுவயதில் அது சாத்தியமும் அல்ல. ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு நாம் எல்லாவித பிடிப்புகளிலிருந்தும் விலகி இருக்க பழக வேண்டும். அப்போது தான் நாம் பரந்த மனப்பான்மை வளர்க்க முடியும்.
      அதைவிடுத்து நாம்அந்த செயலை ஊக்கப்படுத்தினால் நாம் தான் அந்த செயலுக்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டும். நீங்கள் எல்லாவித பிடிப்புகளையும் கொஞ்சம் உதறி பாருங்கள். பிறகு எவ்வளவு நிம்மதியாக ஆனந்தமாக வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அதை நாம் உடனடியாக அடைந்து விட முடியாது. அதற்கு நமது மனதை நாம் பழக்கப்படுத்ததான் வேண்டும்எஎச்சச
    பிடிப்புகள் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று நல்லது மற்றது கெட்டது.நல்ல பழக்கங்கள் நல்ல விசயங்களை கேட்டல் நல்ல சான்றோர்களுடன் நட்பு  நல்ல கொள்கைகள் ....இப்படி நல்லது எதுவானாலும் அதில் பிடிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
     மோசமான விசயங்கள் மோசமான பழக்கங்கள் மோசமான நட்பு.....இப்படி எதுவெல்லாம் மோசமாக உள்ளதோ அந்த பிடிப்பை உதறிதள்ள வேண்டும்.
   ஆனால் நடைமுறையில் பல மனிதர்கள் மோசமான விசயங்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நல்ல பல விசயங்களை உதறி தள்ளி விடுகிறார்கள். இதுதான் வேதனையான விசயம். இதை நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை எனில் நமது வாழ்க்கை வீணாக போய்விடும்.
   இன்றைய சமுதாயத்தில் நல்ல விசயங்களை தேடி கண்டு பிடிப்பதாக உள்ளது. மோசமான விசயங்கள் மிகவும் எளிமையான கிடைத்துவிடுகிறது.நல்ல விசயங்கள் மிகவும் அடக்கமாக ஒருமூலையில் இருக்க மோசமான பல விசயங்கள் அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஈர்த்து விடுகிறது. அந்த மாயவலையில் மதிமயங்கி விட்டில் பூச்சிகளாக மக்கள் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.
  மக்களாகிய நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நல்ல பல விசயங்களை நோக்கி நம்மை அழைத்து செல்ல வேண்டுவோம்.
    நல்ல விசயங்களை நல்ல பழக்கங்களே நம்மை எப்போதும் பாதுக்காக்கும் வளையம்.அதைவிடுத்து நாம் வெளியே வர முயற்சி செய்தால் நம்மை மோசமான அரக்கர்கள் கொன்று சீரழித்து விடுவார்கள்.
      அதனால் நேயர்களே நாம் நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தெரிந்தபிறகு நல்ல விசயங்களை நோக்கி நமது மனதை கடிவாளம் போட்டு இழுத்து கொண்டு போவோம். அப்போது தான் நாம் நல்வழிபட இயலும். இல்லை எனில் மோசமான சகதியில் சிக்கி சீரழிந்து போவோம் என்பதை மனதில் வைத்து ஆனந்தமான வாழ்க்கை வாழ நல்ல சிந்தனைகளை மனதிற்கு எடுத்து சொல்லி புரிய வைப்போம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.
    சரி நேயர்களே மீண்டும் நான் உங்களை மற்றொரு பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.🖐️🖐️🖐️👍👍👍🙏🙏🙏.

வியாழன், 13 செப்டம்பர், 2018

தன்னை மதித்தல்

அன்பர்களே வணக்கம்.
       இன்று நாம் பார்க்க இருப்பது தன்னை மதித்தல்.ஒருவர் எப்போதும் தன்னை தானே மதித்து நடக்க பழக வேண்டும். ஏனெனில் தன்னை தானே மதித்து நடந்துக்கொள்ள தெரிந்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடைய இயலும்.
       ஒருவருக்கு சுய மரியாதை என்பது மிகவும் அவசியம்.ஒருவர் தன்னை தானே மதித்து கொள்ள தெரியவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி மரியாதை கொடுப்பார்கள்?
     இந்த உலகில் முன்னேறியவர்கள் எல்லாம் தன்னை தானே மதித்து கொண்டவர்கள் தான். ஒவ்வொரு முறை நீங்கள் சாதிக்கும் போது உங்கள் ஆன்மா தான் முதலில் ஆனந்தம் அடையும். பிறகு தான் வெளியுலகத்திற்கு உங்கள் சாதனை தெரியும்.
     நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் செயல்களை முதலில் நீங்கள் மதிக்க கற்று கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்களை முதலில் மதித்தால் மற்றவர்கள் எவ்வளவு கேவலமாக உங்கள் செயல்களை விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் உங்கள் முன்னேற்றத்தை நோக்கியே உங்கள் பயணம் இருக்கும். மாறாக நீங்கள் சுயமதிப்பை இழந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய லட்சியங்களையும் கைவிட நேரிடும்.
     தகுந்த நேரத்தில் தகுந்த மரியாதை கிடைக்க நீங்கள் உங்களை தட்டிக்கொடுத்துக்கொண்டே வாருங்கள். நீங்கள் தான் உங்களுக்கு நல்ல சக்தியை தர இயலும். மாறாக சுய மரியாதை இல்லை என்றால் எல்லாம் சீட்டு கட்டில் கட்டிய கட்டடங்கள் போல சரிந்து வீழும்.
     நீங்கள் உங்களை எந்தளவிற்கு நேசிக்கிறீர்களோ அந்தளவுக்கு சாதனைகளை செய்வீர்கள். மாறாக நீங்கள் எந்தளவுக்கு உங்களை ஊதாசீனப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் உங்கள் வாழ்வில் சரிவை சந்திப்பீர்கள். அதனால் நேயர்களே நீங்கள் முன்னேற சாதனை செய்ய நீங்கள் உங்களை மதித்து நடந்து கொள்ள தான் வேண்டும்.
   பல சாதனையாளர்கள் தன்னை தானே தட்டி கொடுத்து சபாஷ் போட்டு வேலை வாங்க தெரிந்தவர்கள்.அதனால் தான் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்தியும் சோர்வில்லாமல் இன்னும் பல செயல்களை செய்ய தூண்டுகிறது.
     நேயர்களே நான் சொல்வது புரிந்ததா?கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அதனை அவர்கள் தான் கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும். அதை செய்ய வைப்பது உங்களை நீங்கள் மதித்தல்.💐💐💐
      நேயர்களே நீங்களே உங்களை மதிக்காமல் மற்றவர்கள் மரியாதை தரவில்லை என்று அங்கலாப்பது என்ன நியாயம்?.
    உங்களை நீங்கள் மிக உயர்ந்தவர்களாக மதியுங்கள். பல சாதனைகளை செய்யுங்கள். வெற்றி மட்டும் உங்கள் காலடியில் இல்லை. இந்த உலகமே உங்கள் காலடியில் தான்.😊😊
          நேயர்களே நீங்கள் உங்களை மதித்து நிறைய சாதனைகள் செய்து வானில் உயர உயர பறக்க கற்று கொள்ளுங்கள். உங்கள் வெற்றி உங்கள் கைகளில்.👍👍👌👌💐
    சரி நேயர்களே மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.😊🖐️🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நம்பகத்தன்மை

அன்பர்களே வணக்கம்.
                  இன்று நாம் பார்க்க இருப்பது நம்பகத்தன்மை.என்ன நேயர்களே இதனுடைய பொருளை நாம் பார்ப்போமா?.இன்றைய உலகத்தில் நமது நம்பிக்கை என்பது மனிதர்கள் மற்றும்  பொருள்கள் மீது தான் உள்ளது. ஆனால் நாம் நம்பும் அளவிற்கு அந்த பொருளோ அல்லது மனிதர்களோ எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது என்பது நமது கேள்விகுறி.ஏன் இந்த நிலை என்று யோசித்து பார்த்தால் கொடுத்த வாக்கை காப்பாற்ற அக்கறை இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.
        அந்த காலத்தில் வாக்கு கொடுத்தால் அந்த வாக்கிற்காக உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவார்கள்.ஏனெனில் வாக்கு என்பது உயிருக்கு நிகராக இருந்தது. அதனால் ஒருவர் வாக்கு கொடுத்தால் அதை நம்பி சில நடவடிக்கை கூட எடுக்காமல் தள்ளி போட்டார்கள். ஆனால் இன்று அது ஒரு தவறான செயல் அதாவது கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருப்பது தவறான செயல் என்று கூட நினைக்க மறக்கிறார்கள்.இது தான் வேதனையின் உச்சம்.
        கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருப்பது வாக்கு தவறுவது என்பது மட்டும் அல்ல. ஒருவருக்கு இழைக்கப்படும் நீதியும் கூட என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
               நம்பகத்தன்மை என்பது எப்போதும் தனிமனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. அது நாம் வாழும் சமுதாயத்தோடு சம்பந்தப்பட்ட விசயம். ஏனெனில் சமுதாயம் என்பது ஒழுக்கத்தையும் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக்கொண்டது.
   இன்று நம் சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் மிக மோசமான சமுதாயத்தை நாம் நம்மையும் அறியாமல் ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
     முதலில் நமது வீட்டில் குழந்தைகளுக்கு சொன்னால் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்கிற பழக்கத்தை கொண்டு வரவேண்டும். ஏனெனில் வீட்டில் இருந்து தான் எந்த நல்ல மற்றும் மோசமான விசயங்கள் ஆரம்பம் ஆகிறது.
      எப்பாடுபட்டாவது நம் மேல் எவர் வைக்கும் நம்பகத்தன்மையையும் நாம் சீர்குழைத்து விடக்கூடாது. இன்று ஒரு பொருளை விற்கும் விற்பனை பிரதிநிதிகள் தமது விற்பனை நடந்தால் சரி என்றே இருக்கிறார்கள். அந்த பொருள் எந்தளவுக்கு  சரியானது நம்பகத்தன்மை உடையது என்று தெரியாமலே அல்லது ஆராயாமலே விற்பனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விற்பதால் மக்கள் நல்ல பொருட்களை கூட சந்தேகத்தோடு  பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது.
        ஒரு நிறுவனம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தொடங்கினால் நிச்சயமாக அழிவை சந்தித்தே தீரும். அது நிறைய நாட்கள் கண்டிப்பாக தாக்குபிடிக்காது.இதை நினைவில் கொண்டாலே ஒவ்வொரு நிறுவனமும் நம்பகத்தன்மை எவ்வளவு முக்கியமானது என்று உணர தொடங்கி விடும்.
     மனிதர்களும் நம்பகத்தன்மை காப்பாற்றும் அளவிற்கு தான் அவர்கள் பெயர் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும். அந்த மனிதன் இறந்தும் வாழ்வான். அதை விடுத்து சொல்லும் செயலும் வேறாகும் போது நம்பகத்தன்மை அங்கே தீயிலிட்ட தூசு போல பொசுங்கி விடும்.
           ஆதலால் நேயர்களே நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை சோதிக்கும் காலம் நெருங்கி விட்டது.நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை புதுப்பித்து புடம் போட்ட தங்கம் போல கண்டிப்பாக ஜொலிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
            சரி நேயர்களே நீங்கள் எனது அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு நான் உங்கள் நம்பகத்தன்மையை சோதிக்க வருகிறேன். மீண்டும் சந்திப்போமா நேயர்களே.
     ஆனந்தமான வாழ்க்கை என்பது அடுத்தவர்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு காப்பீர்கள் அல்லது காத்து வந்துள்ளீர்கள் என்பதில் உள்ளது.
   சரி நேயர்களே அடுத்த பதிவில் தங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

சனி, 1 செப்டம்பர், 2018

பறத்தல்

அன்பர்களே வணக்கம்.
       நாம் இப்போது பார்க்க இருப்பது பறத்தல். இந்த வார்த்தையை கேட்டவுடனேயே உங்கள் மனம் சிறகடித்து பறப்பது எனக்கு தெரிகிறது. ஏனெனில் நம் அனைவருக்கும் ஏதோவொரு நேரத்தில் நாம் வானத்தில் பறந்தால் எவ்வாறு இருக்கும் என்று தோன்றியிருக்கும்.ஆனால் என்ன செய்வது நம்மிடம்தான் சிறகுகள் இல்லையே.ஆனாலும் நாம் ஏதோவொரு வகையில் பறந்து கொண்டு தான் இருக்கிறோம். என்ன புரியவில்லையா?.ஆம் நேயர்களே நாம் தினமும் இல்லாவிட்டாலும் ஏதோவொரு விசயத்தை மனதில் அசைபோட்டு பறந்து கொண்டு தான் இருக்கிறோம்.
    நீங்கள் தயவுசெய்து சுற்றி வளைத்து பேசாமல் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
    சரி நாம் இப்போது சில தளங்களில் பறப்போமா?.வாருங்கள் பறப்போம்.சிறகுகள் இல்லாவிட்டால் என்ன?நாம் நமது எண்ண சிறகுகளை விரித்து சிறிது நேரம் நமக்கு பிடித்த விசயங்களை மனதில் அசைபோட்டு பறப்போம்.
    நமது பால்ய கால நினைவுகளை இந்த அழகான ஞாயிற்றில் நினைத்து பாருங்கள் நேயர்களே. நாம் நமது நண்பர்களுடன் துள்ளி குதித்த அந்த நாட்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?.நாம் இன்றைய வாழ்க்கை சூழலில் அடிக்கடி பறந்து பறந்து சென்று பார்த்தது நமது பால்யகால நினைவுகளை தானே.அந்த பால்யகாலத்தில் நாம் செய்த குறும்புகள் மற்றும் நாம் அறியாமல் செய்த தவறுகள் அந்த தவறுகளுக்கு பெற்ற தண்டனைகள்..ஏராளம் ஏராளம். அந்த நினைவுகளை தேடி நமது எண்ணங்கள் சிறகடித்து பறப்பதில்தான் எவ்வளவு சுகம்?.இல்லையா அன்பர்களே.
    அடுத்து நமது பள்ளி பருவத்தில் நாம் செய்த குறும்புகள் மற்றும் நாம் பள்ளிஆண்டு விழாவில் செய்த சாதனைகள் நாம் மட்டும் சில பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்ததும் நம்மை நமது ஆசிரியர்கள் கொண்டாடியதும் சில பாடங்களில் மிக மோசமான மதிப்பெண் எடுத்து பிரம்படிபட்டு அடுத்த நாள் நமது பெற்றோரை பள்ளிக்கு கூட்டி சென்றதும் நமது பெற்றோர்களிடம் ஆசிரியர் நம்மை பற்றி பட்டியல் பட்டியலாக புகார் வாசித்ததும் நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?.இந்த நினைவுகளை நோக்கி நமது எண்ணசிறகுகள் இப்போதும் சிறகடித்து பறந்து மனதில் சிரித்து கொண்டு தானே இருக்கிறோம்?.அன்று வேதனைப்பட்ட நாம் இன்று அதே விசயத்தை எண்ணி எண்ணி சிரிக்கிறோம். அப்படி தானே நேயர்களே.
   அடுத்து கல்லூரி காலங்கள்.இதை சொல்ல தேவையே இல்லை. கண்டிப்பாக நாம் செமஸ்டரில் ஸ்கோர் பண்ணுகிறோமோ இல்லையோ நமது பட்டியலில் காதல் மட்டும் வண்டி வண்டியாக ஸ்கோர் செய்து இருக்கிறோம். உங்களுக்கு அனுபவமா என்று கேட்காதீர்கள். ஏனெனில் நான் அப்போதெல்லாம் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.உங்களுக்கு சந்தேகம் என்றால் எனது கல்லூரி நண்பர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். அதுசரி நிறைய பேர் அவர்கள் எதிர்காலத்தை தொலைத்து பின்வரும் நாட்களில் அழுததை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் நிலையை இப்போதும் நமது எண்ணசிறகுகள் தேடி அலைகிறது. நாம் காதலிக்கவில்லை என்றாலும் காதலுக்கு தூது போன நினைவுகளை நோக்கி நமது எண்ணசிறகுகள் சிலிர்ப்பூட்டி சிறகடித்து பறக்கிறது இல்லையா.கல்லூரி மேடைகளில் வண்டிவண்டியாக இலட்சியத்தை உரக்க பேசிய நாம் அந்த இலட்சியங்களை எங்கோ தொலைத்துவிட்டு இப்போது வெறும் வயிற்று பிழைப்புக்காக எவரிடமோ அடிமையாக வேலை செய்வதை கண்டிப்பாக நம்மால் ஜீரணம் செய்து கொள்ள இயலுகிறதா சொல்லுங்கள் அன்பர்களே.நாம் தற்போது நாம் அந்த காலத்தில் பேசிய இலட்சியங்களை அசைப்போடும் மாடுகளாக மட்டும் ஆகிவிட்டோம்.என்ன செய்வது காலத்தின் கோலம்.
     அடுத்து திருமணம். இந்த காலம் எப்போது வரும் வரும் என்று நினைத்து ஏங்கி தொலைத்த நாட்கள் பலருக்கும் இங்கே இருக்கலாம். ஏன் திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்திருப்போம்.ஆனால் விதி வலியது.பலப்பேருடைய இலட்சியங்களை காற்றில் கரைத்து விடுகிறது. புயலில் புரட்டி போட்டு விடுகிறது. வெள்ளத்தில் அடித்து சென்று விடுகிறது.ஆனால் நமது எண்ணசிறகுகள் மட்டும் எப்போதும் அந்த இலட்சியத்தை நினைத்து நினைத்து வானில் வட்டமடித்து பறக்கிறது.
    அடுத்து நாம் தவறவிட்ட இலட்சியத்தை அப்படியே விட்டு விட்டு போக நாம் என்ன பைத்தியமா என்ன என்று பலபேர் முட்டாள்தனமாக தமது பிள்ளைகளை களம் இறக்குகிறார்கள்.இது எவ்வளவு கொடுமை.அவர்களது சிறகையும் நாம் ஒடித்து விடுகிறோம். நாம் இந்த தவறை எப்போதும் செய்யக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கும் பறப்பதற்கு உரிமை உள்ளது.
   என்ன நேயர்களே பறத்தலின் இனிமை எப்படி இருந்தது.நமது வாழ்வில் எத்தனை விசயங்கள் நடந்தாலும் நாம் பறப்பதை மட்டும் நிறுத்தி விடக்கூடாது. ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பதே அந்த பறத்தல் என்ற ஒன்றால் தான்.
   நம்முடன் அனைவரையும் இணைத்துக்கொள்வோம் பறப்பதற்காக.ஆனால் நமது சிறகுகளை ஒடித்துவிட மட்டும் அனுமதிக்காமல்.ஏனெனில் நமது சிறகுகளைக்கொண்டே நம்மால் பறக்க இயலும்.
    என்ன நேயர்களே பறத்தலில் மூழ்கி வானத்தை இந்த சிலநிமிடங்களில் அளந்து விட்டோம்.எது எப்படி இருந்தாலும் நம்மால் பறந்து பறந்து தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். நமது வாழ்வில் எத்தனையோ கனவுகள் சிதைக்கப்பட்ட போதும் நம்மால் ஆனந்தமாக எவ்வாறு வாழ முடிகிறது என்று இப்போது புரிந்ததா.
   சரி நேயர்களே மீண்டும் ஒரு அழகான பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன். நன்றி.🖐️🖐️🙏

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...