ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

நேர்மறை எண்ணங்கள்

அன்புடையீர் வணக்கம்.
       இன்று நாம் பார்க்க இருப்பது நேர்மறை எண்ணங்கள். இன்று மனிதர்களிடையே நேர்மறை எண்ணங்களைவிட எதிர்மறை எண்ணங்களே அதிகமாக ஈர்க்கிறது. சமூக வளைத்தளத்தில் கூட நேர்மறை எண்ணங்களுக்கு கிடைக்கும் லைக்ஸைவிட எதிர்மறை எண்ணங்கள் சோகமான பதிவுகளே அதிக வரவேற்பை பெறுகிறது. அதை நீங்களே கூட கவனித்து இருக்கலாம். அதை தவறு என்று கூட சொல்லமுடியாது.ஏனெனில் இந்த உலகில் வாழ்வில் எந்த மூலைக்கு போனாலும் மனிதர்கள் தங்கள் உறவினர்களாலோ அல்லது சமூகத்தாலோ அல்லது நண்பர்களாலோ ஏமாற்றப்படுகிறார்கள்.அதனால் தான் அவர்கள் அந்த எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை அதிகமாக விரும்புகிறார்கள்.அட நம்மை போல தான் இவர்களும் என்று.
       ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே மனம் எதை அதிகமாக உள்ளே அனுமதிக்கிறதோ அதை அப்படியே உள்ளே  ஆழமாக புதைத்து கொள்ளும்.அதனால் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக உள்ளே அனுமதிக்காதீர்கள்.
    ஒரு காரியத்தை எடுத்து பல்வேறு தடங்கல் வந்தாலும் அதை எதிர்த்து சமயோசிதமாக அதை கையாள வேண்டுமேயொழிய அதற்காக சோர்ந்து உட்காரக்கூடாது.அப்போது அந்த காரியத்தை விட்டு விடலாமா என்று தான் மனம் யோசிக்கும். இது எதிர்மறை எண்ணம். இதை நாம் கண்டிப்பாக மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
   நம்மிடம் பேசுபவர்கள் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை நமது நேர்மறை எண்ணங்களை நோக்கி திருப்ப வேண்டுமேயொழிய நாம் அவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு பலியாகிவிடக்கூடாது.இதில் நாம் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
    அதிகாலையில் எழுங்கள்.உற்சாகமான சொற்களை உங்கள் மனதிற்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள். இன்று ஏதோவொரு புதிய காரியத்தை நாம் தொடங்கி சாதிக்க போகிறோம் என்று நினையுங்கள். அல்லது ஏற்கனவே தொடங்கிய காரியம் நல்லபடியாக முடியபோகிறது என்று உற்சாகமாக நாளை தொடங்குங்கள்.
    எந்த நேரமும் நீங்கள் சோர்வடையாதீர்கள். போதிய ஓய்வு  எடுத்துக்கொண்டு மீண்டும் வேலைகளை உற்சாகமாக செய்யுங்கள்.நம்மை விட்டால் இந்த வேலையை செய்ய இங்கு வேறு எவருமே இல்லை என்று உத்வேகம் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் அதிக நேர்மறை அதிர்வலைகளை பெறுவீர்கள்.
    எப்போதுமே உற்சாகமாக இருப்பவர்களை சுற்றி ஒரு நல்ல அதிர்வலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த அதிர்வலைதான் இவர்களை காக்கும் பொன்வளையம் என்றே சொல்லலாம்.
   நேர்மறை எண்ணங்கள் கடுமையான நோயை கூட குணபடுத்திவிடுகிறது என்று பல ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள்.அதனால் தான் நானும் உங்களிடம் இதை வலியுறுத்தி கூறுகிறேன்.
         அன்பர்களே நீங்கள் எந்த அளவுக்கு நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்கிறீர்களோ நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பழகுகிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை படைப்பீர்கள்.இது நிச்சயம். அதனால் நீங்கள் இப்போதில் இருந்து இந்த எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
  சரி நேயர்களே!நேர்மறை எண்ணங்கள் மூலம் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று வாழ்த்துக்கள் கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.மீண்டும் ஒரு நல்ல பதிவில் நான் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக பிரிகிறேன்.மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.🙏👍🖐️🖐️🖐️.

செவ்வாய், 23 அக்டோபர், 2018

கலை

அன்பர்களே வணக்கம்.
   நாம் சந்தித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அனைவரும் அந்த இறைவன் அருளால் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.🙂🙏
       நாம் தற்போது பார்க்க இருப்பது கலை.இந்த உலகில் இறைவன் படைப்பில் நாம் பார்க்கும் அனைத்தும் ஒருவித கலைதான். ஆனால் என்ன நாம் இறைவன் அருளால் இருக்கும் அனைத்து படைப்புகளையும் கலையாக ரசிக்க நேரம் இல்லாமல் அலைகிறோம்.அதுதான் நமது ஒரே குறை.அதனால் என்ன நமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொண்டால் ஆயிற்று.
       நாம் தினமும் அலுவலகத்திற்கு ஒருவித பரபரப்போடு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருகிறோம்.இதுதான் நமது தினசரி கடமையாக வேலையாக இருக்கிறது. மாறிவரும் வாழ்வியல் சூழலில் நாம் இதற்கு பழக்கப்படுத்திக்கொண்டதால் நமது மனம் சோர்வடைகிறது.உண்மையில் இறைவன் நம்மை நல்ல நோக்கத்திற்காக படைத்துள்ளான் என்பதை நாம் நம்ப வேண்டும். அதை நமது மனமும் உணர செய்ய வேண்டும். அப்போது தான் நாம் மனசோர்வில் இருந்து விடுபட இயலும். நாம் வாழும் வீடு முதலில் சிறியதாக இருந்தாலும் புழக்கடை என்று ஒன்று வீட்டின் பின்புறத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நான் சொல்ல வந்த வாழ்க்கை கலை என்ன என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியும்.
     நாம் ஒரு வேலைக்கு செல்வது நமது அடிப்படை தேவைகளை பூர்த்திச் செய்து கொள்வதற்காக தான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?.அதிலேயே நமது வாழ்க்கையை தொலைத்து விட்டு இறைவன் படைத்த பூமியில் உள்ள கலைகளை ரசிக்க மறந்து விடுகிறோம்.
   இந்த உலகில் கடல்,வானம், மரங்கள், சோலைகள் ,மலைகள், ஆறுகள், அருவிகள்,சூரியன், சந்திரன், நட்சத்திர கூட்டம்,மேகம்,மழை,தூறல், பூக்கள், புல்வெளி,......இப்படி எல்லாமே நாம் ரசிக்க தான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?.அனைத்தையும் கலையாக பார்க்காமல் வெறுக்கிறோம்.மேலும் அதை ரசிக்க தெரியாமல் நமது பேராசையால் இறைவன் கொடுத்த இந்த கலைப்பொக்கிஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துணிந்துவிட்டோம்.இப்போது நடக்கும் இயற்கை பேரழிவிற்கு தயைகூர்ந்து இயற்கையை திட்டி தீர்க்காதீர்கள்.இதெல்லாம் நாம் கடந்த காலத்தில் இப்போது செய்து கொண்டு இருப்பதற்கு எதிர்வினை என்பதை நாம் புரிந்து கொண்டு இனிமேலாவது இயற்கையை பழைய நிலைக்கு கொண்டு வரமுயலுவோம்.அதற்கு கண்டிப்பாக நிறைய காலம் பிடிக்கும். நிறைய பொறுமை அவசியம்.
  ஒருகாலத்தில் நாம் ரசித்த இயற்கை இன்று நம்மை மிரட்டிக்கொண்டு இருப்பதாக நினைக்கிறோம்.உண்மையில் இயற்கை நம்மை ஏன் மிரட்ட வேண்டும்?.கொஞ்சம் யோசித்து பார்ப்போம். இனியாவது நாம் இறைவன் படைத்த பொக்கிஷமான கலைகளை நாம் நிச்சயமாக ரசித்து நமது சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டும். என்ன நேயர்களே!நாம் ஒரு அடியாவது எடுத்து வைக்க முயற்சி செய்வோமா?.
      இயற்கையை நேசிப்போம்!இறைவனையும் நேசிப்போம்!கலைகளை பாதுகாப்போம்!🙏👏👍
   நேயர்களே மீண்டும் ஒரு பதிவில் நான் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.உங்கள் அன்பான ஆதரவுக்கு எப்போதும் நான் தலை வணங்குகிறேன்.எனது எழுத்தை ரசிக்க இவ்வளவு ரசிகர்களா என்று நான் வியந்து அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️👏🤝

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அதிகாரம்

அன்புடையீர் வணக்கம்.
      இன்று நாம் பார்க்க இருப்பது அதிகாரம்.அதிகாரம் என்று சொன்னவுடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நபரை ஞாபகம் வரும். பெரும்பாலும் சின்ன குழந்தைகளுக்கு அவரது பெற்றோர், பெரியவராக இருந்தால் அரசியல்வாதிகளையும் அலுவலகத்தில் தம்முடைய மேலதிகாரிகளையும் ஞாபகம் வரும்.
   சரி இப்போது நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யாரோ ஒருவர் மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறோம்.அது ஏனோ தெரியவில்லை அதிகார போதை மட்டும் அனைவருக்கும் இருக்கிறது. இந்த போதை குடிகாரர்கள் போதையை விட மோசமானது என்றே சொல்லலாம். ஏனெனில் இது அந்தளவிற்கு அடுத்தவரின் உரிமைகளை பறிக்கும் குணமாகவே இருக்கிறது.
       உண்மையில் அதிகாரம் செலுத்துபவர்களை விட அன்பால் சாதித்தவர்களே இந்த உலகத்தில் அதிகம். ஏன் அதிகாரம் கையில் இருந்தும் கூட அதை கையில் எடுக்காமல் சாதூர்யமாக அன்பால் சாதித்தவர்களே அதிகம். அந்தளவிற்கு அன்பு சக்தி வாய்ந்தது. ஆனால் அதை பயன்படுத்துபவர்கள் தான் குறைவாக இருக்கிறார்கள்.
     இன்றைய சூழலில் தீவிரவாதம் அதிகரித்ததற்கு காரணம் கூட அன்பின் தாத்பரியம் புரியாமல் போனதுதான் காரணம் என்று நான் அழுத்தம் திருத்தமாக சொல்வேன்.
    இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட அன்பாக நடந்து கொள்ள பொறுமை இல்லாமல் அதிகாரம் செய்து செய்தே நமது குடும்ப அமைப்பை சிதைத்து விட்டோம்.
      கொஞ்சம் நிதானமாக நாம் இருந்தால் நமது குடும்ப குதூகலிப்பிற்கு குறைவேது.
     அதிகாரமும் தேவைதான்.அதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கே அளவறிந்து பயன்படுத்த தெரிந்தவர்களே அது எந்த துறையாக இருந்தாலும் சாதிக்கிறார்கள்.
    சில இடங்களில் அதிகாரம் இல்லாமல் சாதிக்காமல் போன காரியங்கள் ஏராளம். அதனால் அதிகாரம் வேண்டும். ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கு மதிப்பு கூடுகிறது.
  மோசமானவர்களின் கையில் மாட்டிய அதிகாரம் தான் சிதைந்து போவதுடன் அதன் மரியாதையையும் இழந்து விடுகிறது.
    அதனால் மக்களே நாம் சிந்தித்து செயல்பட்டு அதிகாரத்தின் மரியாதையை காப்பவர்கள் மற்றும் அதை துஷ்பிரயோகம் செய்யாதவர்கள் கையில் கொடுத்து அதன் மாண்பை காக்க முயற்சி செய்வோம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.சரி நேயர்களே மீண்டும் நாம் ஒரு அழகான கட்டுரையில் சந்திக்கும் வரை பிரிவோம்!சந்திப்போம்!🖐️🖐️🖐️🙏

புதன், 19 செப்டம்பர், 2018

வாழ்வியல் சிந்தனைகள்


வாழ்வியல் சிந்தனைகள்


வாழ்க்கை தத்துவம்


வாழ்க்கை தத்துவம்


வாழ்க்கை தத்துவம்


செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வாழ்வியல் தத்துவம்

  • அன்பர்களே வணக்கம்.வாழ்க்கை தத்தவத்தை விளக்கும் இந்த பாடலை நான் எழுதி உருவாக்கியது.இதை கேட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.
  •         

திங்கள், 17 செப்டம்பர், 2018

இசை

அன்பர்களே இந்த இசையை கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.இது எனது எழுத்து மற்றும் இசையில் நானே பாடியது.பிடித்தால் லைக் செய்யுங்கள். உங்கள் ஊக்கமே எனது படைப்பை மெருகேற்றும்.

பிடிப்புகள்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது பிடிப்புகள். என்ன இது வித்தியாசமாக இருக்கிறது இன்றைய தலைப்பு என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதைத்தான் நான் உங்களிடம் விளக்கமாக சொல்ல இருக்கிறேன்.
     நாம் பிறந்தது முதல் இறப்பு வரை எதையாவது நமதுகைகள் பிடித்துக்கொள்ளவே விரும்புகிறது.அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீங்களும் யோசியுங்கள். பிறந்த சிறுகுழந்தையிடம் உங்கள் கைகளையோ இல்லை ஏதாவது பொருளையோ கொடுத்து பாருங்கள். அது ஆவலாக அதை பிடிக்கவே நினைக்கும். நீங்கள் அதை எவ்வளவு தள்ளி பிடித்தாலும் அதை அது உற்சாகமாக பிடிக்கவே முனைப்பு காட்டும். இந்த செயல் தான் பிற்காலத்தில் எதைஎடுத்தாலும் தனதாக்கி கொள்ள தூண்டுகிறது. ஆனால் அந்த செயலை தடுக்க முடியாது. சிறுவயதில் அது சாத்தியமும் அல்ல. ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு நாம் எல்லாவித பிடிப்புகளிலிருந்தும் விலகி இருக்க பழக வேண்டும். அப்போது தான் நாம் பரந்த மனப்பான்மை வளர்க்க முடியும்.
      அதைவிடுத்து நாம்அந்த செயலை ஊக்கப்படுத்தினால் நாம் தான் அந்த செயலுக்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டும். நீங்கள் எல்லாவித பிடிப்புகளையும் கொஞ்சம் உதறி பாருங்கள். பிறகு எவ்வளவு நிம்மதியாக ஆனந்தமாக வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அதை நாம் உடனடியாக அடைந்து விட முடியாது. அதற்கு நமது மனதை நாம் பழக்கப்படுத்ததான் வேண்டும்எஎச்சச
    பிடிப்புகள் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று நல்லது மற்றது கெட்டது.நல்ல பழக்கங்கள் நல்ல விசயங்களை கேட்டல் நல்ல சான்றோர்களுடன் நட்பு  நல்ல கொள்கைகள் ....இப்படி நல்லது எதுவானாலும் அதில் பிடிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
     மோசமான விசயங்கள் மோசமான பழக்கங்கள் மோசமான நட்பு.....இப்படி எதுவெல்லாம் மோசமாக உள்ளதோ அந்த பிடிப்பை உதறிதள்ள வேண்டும்.
   ஆனால் நடைமுறையில் பல மனிதர்கள் மோசமான விசயங்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நல்ல பல விசயங்களை உதறி தள்ளி விடுகிறார்கள். இதுதான் வேதனையான விசயம். இதை நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை எனில் நமது வாழ்க்கை வீணாக போய்விடும்.
   இன்றைய சமுதாயத்தில் நல்ல விசயங்களை தேடி கண்டு பிடிப்பதாக உள்ளது. மோசமான விசயங்கள் மிகவும் எளிமையான கிடைத்துவிடுகிறது.நல்ல விசயங்கள் மிகவும் அடக்கமாக ஒருமூலையில் இருக்க மோசமான பல விசயங்கள் அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஈர்த்து விடுகிறது. அந்த மாயவலையில் மதிமயங்கி விட்டில் பூச்சிகளாக மக்கள் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.
  மக்களாகிய நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நல்ல பல விசயங்களை நோக்கி நம்மை அழைத்து செல்ல வேண்டுவோம்.
    நல்ல விசயங்களை நல்ல பழக்கங்களே நம்மை எப்போதும் பாதுக்காக்கும் வளையம்.அதைவிடுத்து நாம் வெளியே வர முயற்சி செய்தால் நம்மை மோசமான அரக்கர்கள் கொன்று சீரழித்து விடுவார்கள்.
      அதனால் நேயர்களே நாம் நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தெரிந்தபிறகு நல்ல விசயங்களை நோக்கி நமது மனதை கடிவாளம் போட்டு இழுத்து கொண்டு போவோம். அப்போது தான் நாம் நல்வழிபட இயலும். இல்லை எனில் மோசமான சகதியில் சிக்கி சீரழிந்து போவோம் என்பதை மனதில் வைத்து ஆனந்தமான வாழ்க்கை வாழ நல்ல சிந்தனைகளை மனதிற்கு எடுத்து சொல்லி புரிய வைப்போம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.
    சரி நேயர்களே மீண்டும் நான் உங்களை மற்றொரு பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.🖐️🖐️🖐️👍👍👍🙏🙏🙏.

வியாழன், 13 செப்டம்பர், 2018

தன்னை மதித்தல்

அன்பர்களே வணக்கம்.
       இன்று நாம் பார்க்க இருப்பது தன்னை மதித்தல்.ஒருவர் எப்போதும் தன்னை தானே மதித்து நடக்க பழக வேண்டும். ஏனெனில் தன்னை தானே மதித்து நடந்துக்கொள்ள தெரிந்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடைய இயலும்.
       ஒருவருக்கு சுய மரியாதை என்பது மிகவும் அவசியம்.ஒருவர் தன்னை தானே மதித்து கொள்ள தெரியவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி மரியாதை கொடுப்பார்கள்?
     இந்த உலகில் முன்னேறியவர்கள் எல்லாம் தன்னை தானே மதித்து கொண்டவர்கள் தான். ஒவ்வொரு முறை நீங்கள் சாதிக்கும் போது உங்கள் ஆன்மா தான் முதலில் ஆனந்தம் அடையும். பிறகு தான் வெளியுலகத்திற்கு உங்கள் சாதனை தெரியும்.
     நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் செயல்களை முதலில் நீங்கள் மதிக்க கற்று கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்களை முதலில் மதித்தால் மற்றவர்கள் எவ்வளவு கேவலமாக உங்கள் செயல்களை விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் உங்கள் முன்னேற்றத்தை நோக்கியே உங்கள் பயணம் இருக்கும். மாறாக நீங்கள் சுயமதிப்பை இழந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய லட்சியங்களையும் கைவிட நேரிடும்.
     தகுந்த நேரத்தில் தகுந்த மரியாதை கிடைக்க நீங்கள் உங்களை தட்டிக்கொடுத்துக்கொண்டே வாருங்கள். நீங்கள் தான் உங்களுக்கு நல்ல சக்தியை தர இயலும். மாறாக சுய மரியாதை இல்லை என்றால் எல்லாம் சீட்டு கட்டில் கட்டிய கட்டடங்கள் போல சரிந்து வீழும்.
     நீங்கள் உங்களை எந்தளவிற்கு நேசிக்கிறீர்களோ அந்தளவுக்கு சாதனைகளை செய்வீர்கள். மாறாக நீங்கள் எந்தளவுக்கு உங்களை ஊதாசீனப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் உங்கள் வாழ்வில் சரிவை சந்திப்பீர்கள். அதனால் நேயர்களே நீங்கள் முன்னேற சாதனை செய்ய நீங்கள் உங்களை மதித்து நடந்து கொள்ள தான் வேண்டும்.
   பல சாதனையாளர்கள் தன்னை தானே தட்டி கொடுத்து சபாஷ் போட்டு வேலை வாங்க தெரிந்தவர்கள்.அதனால் தான் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்தியும் சோர்வில்லாமல் இன்னும் பல செயல்களை செய்ய தூண்டுகிறது.
     நேயர்களே நான் சொல்வது புரிந்ததா?கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அதனை அவர்கள் தான் கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும். அதை செய்ய வைப்பது உங்களை நீங்கள் மதித்தல்.💐💐💐
      நேயர்களே நீங்களே உங்களை மதிக்காமல் மற்றவர்கள் மரியாதை தரவில்லை என்று அங்கலாப்பது என்ன நியாயம்?.
    உங்களை நீங்கள் மிக உயர்ந்தவர்களாக மதியுங்கள். பல சாதனைகளை செய்யுங்கள். வெற்றி மட்டும் உங்கள் காலடியில் இல்லை. இந்த உலகமே உங்கள் காலடியில் தான்.😊😊
          நேயர்களே நீங்கள் உங்களை மதித்து நிறைய சாதனைகள் செய்து வானில் உயர உயர பறக்க கற்று கொள்ளுங்கள். உங்கள் வெற்றி உங்கள் கைகளில்.👍👍👌👌💐
    சரி நேயர்களே மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.😊🖐️🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நம்பகத்தன்மை

அன்பர்களே வணக்கம்.
                  இன்று நாம் பார்க்க இருப்பது நம்பகத்தன்மை.என்ன நேயர்களே இதனுடைய பொருளை நாம் பார்ப்போமா?.இன்றைய உலகத்தில் நமது நம்பிக்கை என்பது மனிதர்கள் மற்றும்  பொருள்கள் மீது தான் உள்ளது. ஆனால் நாம் நம்பும் அளவிற்கு அந்த பொருளோ அல்லது மனிதர்களோ எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது என்பது நமது கேள்விகுறி.ஏன் இந்த நிலை என்று யோசித்து பார்த்தால் கொடுத்த வாக்கை காப்பாற்ற அக்கறை இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.
        அந்த காலத்தில் வாக்கு கொடுத்தால் அந்த வாக்கிற்காக உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவார்கள்.ஏனெனில் வாக்கு என்பது உயிருக்கு நிகராக இருந்தது. அதனால் ஒருவர் வாக்கு கொடுத்தால் அதை நம்பி சில நடவடிக்கை கூட எடுக்காமல் தள்ளி போட்டார்கள். ஆனால் இன்று அது ஒரு தவறான செயல் அதாவது கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருப்பது தவறான செயல் என்று கூட நினைக்க மறக்கிறார்கள்.இது தான் வேதனையின் உச்சம்.
        கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருப்பது வாக்கு தவறுவது என்பது மட்டும் அல்ல. ஒருவருக்கு இழைக்கப்படும் நீதியும் கூட என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
               நம்பகத்தன்மை என்பது எப்போதும் தனிமனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. அது நாம் வாழும் சமுதாயத்தோடு சம்பந்தப்பட்ட விசயம். ஏனெனில் சமுதாயம் என்பது ஒழுக்கத்தையும் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக்கொண்டது.
   இன்று நம் சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் மிக மோசமான சமுதாயத்தை நாம் நம்மையும் அறியாமல் ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
     முதலில் நமது வீட்டில் குழந்தைகளுக்கு சொன்னால் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்கிற பழக்கத்தை கொண்டு வரவேண்டும். ஏனெனில் வீட்டில் இருந்து தான் எந்த நல்ல மற்றும் மோசமான விசயங்கள் ஆரம்பம் ஆகிறது.
      எப்பாடுபட்டாவது நம் மேல் எவர் வைக்கும் நம்பகத்தன்மையையும் நாம் சீர்குழைத்து விடக்கூடாது. இன்று ஒரு பொருளை விற்கும் விற்பனை பிரதிநிதிகள் தமது விற்பனை நடந்தால் சரி என்றே இருக்கிறார்கள். அந்த பொருள் எந்தளவுக்கு  சரியானது நம்பகத்தன்மை உடையது என்று தெரியாமலே அல்லது ஆராயாமலே விற்பனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விற்பதால் மக்கள் நல்ல பொருட்களை கூட சந்தேகத்தோடு  பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது.
        ஒரு நிறுவனம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தொடங்கினால் நிச்சயமாக அழிவை சந்தித்தே தீரும். அது நிறைய நாட்கள் கண்டிப்பாக தாக்குபிடிக்காது.இதை நினைவில் கொண்டாலே ஒவ்வொரு நிறுவனமும் நம்பகத்தன்மை எவ்வளவு முக்கியமானது என்று உணர தொடங்கி விடும்.
     மனிதர்களும் நம்பகத்தன்மை காப்பாற்றும் அளவிற்கு தான் அவர்கள் பெயர் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும். அந்த மனிதன் இறந்தும் வாழ்வான். அதை விடுத்து சொல்லும் செயலும் வேறாகும் போது நம்பகத்தன்மை அங்கே தீயிலிட்ட தூசு போல பொசுங்கி விடும்.
           ஆதலால் நேயர்களே நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை சோதிக்கும் காலம் நெருங்கி விட்டது.நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை புதுப்பித்து புடம் போட்ட தங்கம் போல கண்டிப்பாக ஜொலிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
            சரி நேயர்களே நீங்கள் எனது அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு நான் உங்கள் நம்பகத்தன்மையை சோதிக்க வருகிறேன். மீண்டும் சந்திப்போமா நேயர்களே.
     ஆனந்தமான வாழ்க்கை என்பது அடுத்தவர்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு காப்பீர்கள் அல்லது காத்து வந்துள்ளீர்கள் என்பதில் உள்ளது.
   சரி நேயர்களே அடுத்த பதிவில் தங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

சனி, 1 செப்டம்பர், 2018

பறத்தல்

அன்பர்களே வணக்கம்.
       நாம் இப்போது பார்க்க இருப்பது பறத்தல். இந்த வார்த்தையை கேட்டவுடனேயே உங்கள் மனம் சிறகடித்து பறப்பது எனக்கு தெரிகிறது. ஏனெனில் நம் அனைவருக்கும் ஏதோவொரு நேரத்தில் நாம் வானத்தில் பறந்தால் எவ்வாறு இருக்கும் என்று தோன்றியிருக்கும்.ஆனால் என்ன செய்வது நம்மிடம்தான் சிறகுகள் இல்லையே.ஆனாலும் நாம் ஏதோவொரு வகையில் பறந்து கொண்டு தான் இருக்கிறோம். என்ன புரியவில்லையா?.ஆம் நேயர்களே நாம் தினமும் இல்லாவிட்டாலும் ஏதோவொரு விசயத்தை மனதில் அசைபோட்டு பறந்து கொண்டு தான் இருக்கிறோம்.
    நீங்கள் தயவுசெய்து சுற்றி வளைத்து பேசாமல் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
    சரி நாம் இப்போது சில தளங்களில் பறப்போமா?.வாருங்கள் பறப்போம்.சிறகுகள் இல்லாவிட்டால் என்ன?நாம் நமது எண்ண சிறகுகளை விரித்து சிறிது நேரம் நமக்கு பிடித்த விசயங்களை மனதில் அசைபோட்டு பறப்போம்.
    நமது பால்ய கால நினைவுகளை இந்த அழகான ஞாயிற்றில் நினைத்து பாருங்கள் நேயர்களே. நாம் நமது நண்பர்களுடன் துள்ளி குதித்த அந்த நாட்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?.நாம் இன்றைய வாழ்க்கை சூழலில் அடிக்கடி பறந்து பறந்து சென்று பார்த்தது நமது பால்யகால நினைவுகளை தானே.அந்த பால்யகாலத்தில் நாம் செய்த குறும்புகள் மற்றும் நாம் அறியாமல் செய்த தவறுகள் அந்த தவறுகளுக்கு பெற்ற தண்டனைகள்..ஏராளம் ஏராளம். அந்த நினைவுகளை தேடி நமது எண்ணங்கள் சிறகடித்து பறப்பதில்தான் எவ்வளவு சுகம்?.இல்லையா அன்பர்களே.
    அடுத்து நமது பள்ளி பருவத்தில் நாம் செய்த குறும்புகள் மற்றும் நாம் பள்ளிஆண்டு விழாவில் செய்த சாதனைகள் நாம் மட்டும் சில பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்ததும் நம்மை நமது ஆசிரியர்கள் கொண்டாடியதும் சில பாடங்களில் மிக மோசமான மதிப்பெண் எடுத்து பிரம்படிபட்டு அடுத்த நாள் நமது பெற்றோரை பள்ளிக்கு கூட்டி சென்றதும் நமது பெற்றோர்களிடம் ஆசிரியர் நம்மை பற்றி பட்டியல் பட்டியலாக புகார் வாசித்ததும் நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?.இந்த நினைவுகளை நோக்கி நமது எண்ணசிறகுகள் இப்போதும் சிறகடித்து பறந்து மனதில் சிரித்து கொண்டு தானே இருக்கிறோம்?.அன்று வேதனைப்பட்ட நாம் இன்று அதே விசயத்தை எண்ணி எண்ணி சிரிக்கிறோம். அப்படி தானே நேயர்களே.
   அடுத்து கல்லூரி காலங்கள்.இதை சொல்ல தேவையே இல்லை. கண்டிப்பாக நாம் செமஸ்டரில் ஸ்கோர் பண்ணுகிறோமோ இல்லையோ நமது பட்டியலில் காதல் மட்டும் வண்டி வண்டியாக ஸ்கோர் செய்து இருக்கிறோம். உங்களுக்கு அனுபவமா என்று கேட்காதீர்கள். ஏனெனில் நான் அப்போதெல்லாம் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.உங்களுக்கு சந்தேகம் என்றால் எனது கல்லூரி நண்பர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். அதுசரி நிறைய பேர் அவர்கள் எதிர்காலத்தை தொலைத்து பின்வரும் நாட்களில் அழுததை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் நிலையை இப்போதும் நமது எண்ணசிறகுகள் தேடி அலைகிறது. நாம் காதலிக்கவில்லை என்றாலும் காதலுக்கு தூது போன நினைவுகளை நோக்கி நமது எண்ணசிறகுகள் சிலிர்ப்பூட்டி சிறகடித்து பறக்கிறது இல்லையா.கல்லூரி மேடைகளில் வண்டிவண்டியாக இலட்சியத்தை உரக்க பேசிய நாம் அந்த இலட்சியங்களை எங்கோ தொலைத்துவிட்டு இப்போது வெறும் வயிற்று பிழைப்புக்காக எவரிடமோ அடிமையாக வேலை செய்வதை கண்டிப்பாக நம்மால் ஜீரணம் செய்து கொள்ள இயலுகிறதா சொல்லுங்கள் அன்பர்களே.நாம் தற்போது நாம் அந்த காலத்தில் பேசிய இலட்சியங்களை அசைப்போடும் மாடுகளாக மட்டும் ஆகிவிட்டோம்.என்ன செய்வது காலத்தின் கோலம்.
     அடுத்து திருமணம். இந்த காலம் எப்போது வரும் வரும் என்று நினைத்து ஏங்கி தொலைத்த நாட்கள் பலருக்கும் இங்கே இருக்கலாம். ஏன் திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்திருப்போம்.ஆனால் விதி வலியது.பலப்பேருடைய இலட்சியங்களை காற்றில் கரைத்து விடுகிறது. புயலில் புரட்டி போட்டு விடுகிறது. வெள்ளத்தில் அடித்து சென்று விடுகிறது.ஆனால் நமது எண்ணசிறகுகள் மட்டும் எப்போதும் அந்த இலட்சியத்தை நினைத்து நினைத்து வானில் வட்டமடித்து பறக்கிறது.
    அடுத்து நாம் தவறவிட்ட இலட்சியத்தை அப்படியே விட்டு விட்டு போக நாம் என்ன பைத்தியமா என்ன என்று பலபேர் முட்டாள்தனமாக தமது பிள்ளைகளை களம் இறக்குகிறார்கள்.இது எவ்வளவு கொடுமை.அவர்களது சிறகையும் நாம் ஒடித்து விடுகிறோம். நாம் இந்த தவறை எப்போதும் செய்யக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கும் பறப்பதற்கு உரிமை உள்ளது.
   என்ன நேயர்களே பறத்தலின் இனிமை எப்படி இருந்தது.நமது வாழ்வில் எத்தனை விசயங்கள் நடந்தாலும் நாம் பறப்பதை மட்டும் நிறுத்தி விடக்கூடாது. ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பதே அந்த பறத்தல் என்ற ஒன்றால் தான்.
   நம்முடன் அனைவரையும் இணைத்துக்கொள்வோம் பறப்பதற்காக.ஆனால் நமது சிறகுகளை ஒடித்துவிட மட்டும் அனுமதிக்காமல்.ஏனெனில் நமது சிறகுகளைக்கொண்டே நம்மால் பறக்க இயலும்.
    என்ன நேயர்களே பறத்தலில் மூழ்கி வானத்தை இந்த சிலநிமிடங்களில் அளந்து விட்டோம்.எது எப்படி இருந்தாலும் நம்மால் பறந்து பறந்து தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். நமது வாழ்வில் எத்தனையோ கனவுகள் சிதைக்கப்பட்ட போதும் நம்மால் ஆனந்தமாக எவ்வாறு வாழ முடிகிறது என்று இப்போது புரிந்ததா.
   சரி நேயர்களே மீண்டும் ஒரு அழகான பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன். நன்றி.🖐️🖐️🙏

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

அலைகள்

அன்பர்களே வணக்கம்.
  நாம் இப்போது பார்க்க இருப்பது அலைகள். நாம் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு விசயம். அலைகளை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் உள்ளார்களா என்ன?.இல்லை தானே.
    சரி நேயர்களே நமக்கும் அலைக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கிறது. அதனால் தான் நாம் அலைகளை நேசிக்கிறோம்.என்ன புரியவில்லையா?.ஆம் நேயர்களே. நாமும் ஓயாமல் எண்ண அலைகளால் அவதிப்படுகிறோம்.இந்த அலையும் ஓயாமல் அடித்து அடித்து கரையை பதம் பார்க்கிறது.
      நமது எண்ண அலைகளுக்கும் கடல் அலைகளுக்கும் எப்போதும் ஓய்வே இல்லை. ஆனால் நாம் அமைதியை தேடும் போதெல்லாம் கடல் அலைகளையே ரசிக்கிறோம்.என்ன ஒரு விந்தை?.நமது மனம் அமைதி இழக்கும் போது அமைதியான இடத்தை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஏன் எப்போதும் ஆரவாரமாக சத்தத்தை எழுப்பும் அலைகள் அடிக்கும் கடலை தேர்ந்தெடுக்கிறோம்?.யோசியுங்கள் அன்பர்களே.
     கடல்அலைகள் சத்தம் எழுப்பி எழுப்பி கரையை தொட்டாலும் அது மீண்டும் கடலிலியே சென்று சேர்கிறது. அதுப்போலவே நமது மனமும் எண்ண அலைகளால் அவதிப்படும்போது நாம் ஆழ்மனதை சென்று சேர வேண்டும். ஏனெனில் ஆழ்மனது எப்போதும் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கும். மேல் மனது தான் அதிக கூச்சலிட்டு கொண்டே இருக்கும்.
   கடலிலும் மேற்பரப்பில் தான் அதிக ஆவாரங்கள் சத்தங்கள். ஆனால் கடலின் ஆழம் எப்போதும் அமைதியானது.அதனால் தான் நாம் நமது உணர்வை ஒத்த கடலில் எப்போதெல்லாம் அமைதியை இழக்கிறோமோ அப்போதெல்லாம் கடலில்  தஞ்சம் அடைகிறோம்.
   நாம் கடலில் கற்றுக்கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்க மேம்போக்காக ரசித்து வந்து விடுகிறோம். உண்மையிலேயே கடல் நமது தாயை ஒத்தவள்.ஏனெனில் நாம் அமைதி இழந்து தவிக்கும் போது தனது அலைகள் எனும் கரங்களால் நமது காலை வருடி வருடி ஆதரவு கொடுக்கிறாளே!காயம் பட்ட நமது மனதிற்கு ஒத்தடம் கொடுக்கிறாளே.இவைகளை நினைத்து பார்க்கும் போது அவள் நமது அன்னை அல்லாமல் வேறென்ன நேயர்களே.
      நாம் நமது எண்ண அலைகளை கட்டுக்குள் கொண்டு வந்தால் ஆழ்கடலின் அமைதியை எப்போதும் பெறலாம். ஆராவரிக்கும் அலைகளைப்போல நாம் நமது எண்ண அலைகளை கொண்டு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க இயலாது.
      ஓயாமல் மோதும் அலைகள் என்ன சுகத்தை கண்டது?.அதுபோல ஓயாமல் எண்ண அலைகளை கொண்ட மனமும் நிறைய வடுக்களையும் நிம்மதியின்மையையுமே பெறும். அதனால் நாம் என்ன சுகத்தை அடைந்தோம்?.சிந்தியுங்கள்.
      எண்ண அலைகளை அடக்கி ஆழ்மனதின் அமைதியை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கை ஆனந்தம் அடைய தடை ஏது?
    அமைதியான மனமே எப்போதும் ஆனந்தமாக இருக்கும். அமைதியான ஆழ்கடலே அனைத்து ஜீவராசிகளுக்கு அடைக்கலத்தை கொடுப்பது போல.
     ஆனந்தத்தை தேடி கோயில் கோயிலாக சுத்தாதீர்கள்.ஆனந்தத்தை எந்த கோயிலோ மடங்களோ எப்போதும் உங்களுக்கு கொடுக்காது உங்கள் மனதை நீங்கள் கடிவாளம் போல இழுத்து பிடித்து அமைதி அடைய செய்யும் வரை எந்த இடமும் உங்களுக்கு ஆனந்தத்தை கொடுக்காது.உங்கள் எண்ண அலைகளை எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போதே உங்கள் மனதில் நீங்கள் தேடும் இறைவன் அமர்வான்.அதுவரை நீங்கள் இந்த உடலை அலையடிப்பதுதான் மிச்சம் ஆகும்.
   இப்போதே திரும்பி விடுங்கள் அன்பர்களே.மனம் எனும் அலையை அடக்கி ஆழ்மனதில் அமைதியை தேட.
  என்ன நேயர்களே நீங்கள் எண்ண அலைகளை அடித்து துரத்தி விட துணிந்து விட்டீர்கள் தானே.மீண்டும் ஒரு பதிவில் தங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.மிகவும் ஆனந்தம்.😍😃😍🖐️🖐️🙏

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

முடியாது

அன்பர்களே வணக்கம்.
     நாம் இப்போது பார்க்க இருப்பது முடியாது என்கிற வார்த்தை. சில சமயங்களில் இதற்கு மிகவும் சக்தி அதிகம். இதை நாம் சொல்ல தெரிந்து கொண்டால் போதும். நிம்மதியாக இருக்கலாம்.
    நம்மில் பலர் முயற்சி செய்யுங்கள் முன்னேறுவீர்கள் என்று சொன்னால் முடியாது முடியவே முடியாது என்று தீர்மானமாக சொல்லி விடுவார்கள் முயற்சியே சிறிதும் செய்யாமல். ஆனால் முடியாது என்று சொல்ல வேண்டிய விசயத்திற்கு சொல்ல தயங்குவார்கள். இதுதான் இன்றைய பலருடைய பிரச்சினையே.
   எதற்கு முடியும் சொல்ல வேண்டும் எதற்கு முடியாது சொல்ல வேண்டும் என்ற தடுமாற்றம் இருப்பதால்தான் அவர்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள்.
       நல்ல பல விசயங்களை செய்வதற்கு பலதடைகளை மீறி சாதிப்பேன் .என்னால் முடியும் என்று சொல்ல வேண்டும். மோசமான விசயங்களை செய்வதற்கு எந்த பணபலனிற்காகவும் அடிபணிந்து விடாமல் முடியாது என்று தைரியமாக தெளிவாக சொல்லி விட வேண்டும். அப்போது நாம் நிறைய சாதிப்போம்.
    அதேபோல் குழந்தைகள் விசயத்திலும் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து அவர்களை கெடுக்காமல் முடியாது என்று தெளிவாக சொல்லி விட வேண்டும். இதில் நீங்கள் பந்தபாசத்திற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்றால் கதை கந்தல் தான். பிறகு உங்கள் பிள்ளைகள் தான் எதிர்காலத்தில் துன்பம் அடைவார்கள்.
     தாம் தான் நாம் துன்பம் அடைந்தோம். நம் குழந்தைகள் கண்டிப்பாக துன்பம் அடையக்கூடாது என்று நினைத்து அவர்களுக்கு முடியாது என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்தால் நீங்கள் அவர்கள் வாழ்க்கையை மோசமான பாதையில் அழைத்து செல்கிறீர்கள் என்று பொருள்.அதனால் தயைகூர்ந்து உங்கள் குழந்தைகளை நல்ல வழியில் அழைத்து செல்ல முடியாது என்று சொல்ல பழகுங்கள்.
     ஆடம்பர வசதிகளை ஏற்கமுடியாது என்று தெளிவாக உங்கள் மனதிற்கு சொல்லி விடுங்கள். அதில் என்ன தயக்கம்?.அப்போது தான் நீங்கள் உண்மையான மனிதர்களாக இந்த பூமியில் வாழ்ந்ததற்கான சுவடை விட்டு செல்வீர்கள். அதுவொரு மகத்தான முடிவு என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்.
    அடுத்து தேர்தலில் எந்த பணபலத்திற்கும் அடிபணியாமல் மோசமான மக்கள் நலன் இல்லாமல் இருப்பவர்களை தயைகூர்ந்து ஓரம் கட்டிவிட்டு அவர்கள் ஓட்டு கேட்க வரும் போது தைரியமாக உங்களுக்கு ஓட்டு போடமுடியாது என்று தெளிவாக சொல்லி விடுங்கள். ஒரு நல்ல ஜனநாயகம் தலைக்க வைக்க நீங்கள் மறைமுகமாக இதன் மூலம் உதவுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
  இப்படி நீங்கள் முடியாது என்று சொல்லும் விசயங்களும் இங்கே நல்ல விசயங்கள் நடைபெற உதவும் போது நாம் முடியாது என்கிற வார்த்தையை அதன் தன்மையை பொறுத்து மதிப்பிட வேண்டும். ஏனெனில் எல்லா சொல்லுக்கும் ஏதோவொரு வகையில் பொருள் உண்டு. மதிப்பும் உண்டு.
  அதனால் நேயர்களே நாம் முடியாது என்கிற சொல்லை தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தி நாம் நம் சமுதாயத்தை நமது குடும்பத்தை நம்மை வளப்படுத்த முயன்றால் நாம் தேடும் ஆனந்தம் நம்முடனேயே நிரந்தரமாக தங்கி விடும்.
   சரி நேயர்களே வழக்கம் போல நாம் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

இடைவெளி

அன்பர்களே வணக்கம்.
         நாம் இன்று பார்க்க இருப்பது இடைவெளி.நீங்கள் இடைவெளியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்காமல் எந்த பதிவும் போட தெரியாதா?என்று முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. என்ன செய்வது. உங்களிடம் கேள்வி கேட்டு அந்த இடைவெளியில் நான் சிந்தனை செய்து பதிவு போடலாம் என்று தான் அன்பர்களே.நான் போடும் பதிவுகளை பற்றி தாங்கள் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. இது ஏதோ எழுதுகிறேன் பேர்வழி என்று நம்மை கிறுக்கர்கள் ஆக்கி விடுமோ என்று நீங்கள் எண்ணுவதும் எனக்கு தெரிகிறது. ஆனால் நீங்கள் அனைவரும் என் எழுத்துக்களை ரசித்து தான் ஆகவேண்டும். வேறுவழி இல்லை. ஏனெனில் உங்கள் அன்பு அப்படி பட்டது.
      சரி நேயர்களே நான் தற்போது விசயத்திற்கு வருகிறேன். எந்த ஒரு விசயத்திலும் இடைவெளி மிகவும் முக்கியம் ஆனது.நாம் சாலையில் வாகனத்தில் செல்கிறோம்.சிறிது இடைவெளி விட்டு பின்தொடரவும் என்ற வாசகம் நம் கண்களில் படுகிறது. அது ஏன்?நமது பாதுகாப்புக்கு தானே.அதுபோல வாழ்க்கையில் சில விசயங்களில் நாம் இடைவெளியை பின்பற்றி தான் ஆக வேண்டும்.
   நமது உறவுகளில் கூட நாம் இடைவெளியை பின்பற்றினால் தான் அந்த உறவு இறுதி வரை இருக்கும். இது சில உறவுகளில் நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் தேவையில்லாத சங்கடங்களில் மாட்டிக்கொள்ள நேரும்.
      நாம் பேசும் பேச்சில் கூட இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் சோர்ந்து விடுவீர்கள்.
    செய்யும் வேலைகளுக்கிடையே இடைவெளி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் உடல் சோர்வடையும்.அதனால் நாம் மனதளவில் கூட பாதிப்படைவோம்.
       ஏன் வயலில் விவசாயம் செய்யும் போதுகூட நீங்கள் தொடர்ந்து அந்த நிலத்திற்கு ஓய்வு கொடுக்காமல் இடைவெளி இல்லாமல் பயிரிட்டால் நீங்கள் இலாபம் அடைவதற்கு பதிலாக நஷ்டம் தான் அடைவீர்கள். ஏனெனில் விளைச்சல் குறையும்.
       ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடைவெளி வேண்டும். அப்போது தான் அந்த இரண்டு வேலைகளுமே நன்றாக அமையும்.
      இடைவெளியை சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதியாக ஆனந்தமாக வாழ தெரிந்தவர்கள்.இடைவெளி என்பது நமக்கு கிடைத்த வரம்.
       இடைவெளி இன்பத்தை தரும். காலத்தை நாம் ரசிக்கிறோம்.ஏனெனில் ஒவ்வொரு வெயில் காலத்திற்கும் பனிகாலத்திற்கும் மழைக்காலத்திற்கும் சமமான இடைவெளி இருப்பதால் தான் நாம் காலத்தை ரசிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலம் பிடிக்கும். அனைவரையும் இங்கே திருப்தி செய்வது எது?.சொல்லுங்கள் நேயர்களே.இடைவெளி தானே.
    வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து விசயங்களும் இடைவெளி விட்டே நடப்பதால் தான் நாம் நிம்மதியாக இருக்கிறோம்.
  கிரகங்கள் அதற்குரிய இடைவெளியில் வானவெளியில் சுற்றுவதால் தான் நாம் இங்கே சுவாரஸ்யமான சம்பவங்களை சந்திக்கிறோம்.
  ஆக நேயர்களே இப்போது புரிகிறதா இடைவெளியின் அவசியத்தை. இடைவெளியின் அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டால் நாம் இங்கே ஆனந்தமாக வாழலாம்.
   சரி நேயர்களே. மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.அதுவரை🖐️🖐️🙏

பகவத் கீதை


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

செலவுகள்

அன்புடையீர் வணக்கம்.
    இப்போது நாம் பார்க்க இருப்பது செலவுகள். செலவுகளை பற்றி பேசப்போகிறீர்களா?.அது நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிய வேண்டுமா?.அதுதான் ஏகப்பட்டது ஆகுதே .அதை ஒரு தலைப்பு என்று சொல்ல வந்துவிட்டீர்கள்.ஏற்கனவே நாங்கள் மிகவும் கோபமாக இருக்கிறோம்.போய்விடுங்கள்என்று நீங்கள் என்னை துரத்தி அடிப்பது தெரிகிறது. வருமானத்திற்கு வழி சொல்லி ஒரு பதிவை போடாமல் செலவை பற்றி பேச வந்து விட்டீர்கள்.போங்கள் போய் வேலை இருந்தால் பாருங்கள் என்று முணுமுணுப்பதும் கேட்கிறது.
   சரி விசயத்திற்கு வருவோம். எப்போதும் போல நீங்கள் நினைக்கும் செலவை பற்றி நான் பேசப்போவது இல்லை. அதுதானே பார்த்தேன் என்று நீங்கள் ஒரு புன்னகை பூப்பதும் எனக்கு தெரிகிறது.
     அன்பர்களே செலவுகள் என்றால் பணம் மட்டும் தானா என்ன?.எல்லாமே செலவு தான். என்ன நீங்கள் இன்று குழப்புவதற்காகவே வந்து இருக்கிறீர்கள் போலும் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
     செலவுகள் என்பது பலவகைப்படும்.நீங்கள் வாழ்க்கையில் நல்ல சுகத்தை ,சாப்பாட்டை ,உறக்கத்தை ,நல்ல வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கிறீர்களா?.உங்கள் புண்ணிய கர்மா அங்கே செலவழிகிறது.ஆம் நேயர்களே. புண்ணியம் அனுபவித்தால் அது அந்த அனுபவத்தை செலவாக கழிக்கிறது.இதனால் நமது புண்ணியம் செலவாகிறது.ஏன் இதை செலவு செய்ய வேண்டும்?.நான் இதை சேர்த்து வைக்கிறேன் என்று எல்லாம் சொல்ல முடியாது. அதை நீங்கள் சேமித்து எல்லாம் வைக்க முடியாது. அது உங்கள் வாழ்க்கையில் எப்போதும் எல்லாம் தேவையோ அப்போதெல்லாம் செலவழிந்துக்கொண்டேதான் செல்லும்.
  சரி அடுத்து பாவம் என்ன செய்யும் என்று நீங்கள் கேட்காமலே புரிகிறது. அதுவும் நாம் படும் துன்பங்களாக கழிகிறது. நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவவினைகள் துன்பம் எனும் செலவாக கழிகிறது. இதையும் நாம் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். இல்லை இல்லை முடியாது என்று சொல்லி தப்பிக்க எல்லாம் முடியாது. அது உங்களுக்கே தெரிந்தது தான்.
   ஆக பாவம் புண்ணியம் இரண்டும் செலவுகள்.முன்ஜென்மத்தில் சேமித்து வைத்த முதலீடுகளை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவித்து தீர்க்க வேண்டும். ஆக எல்லா வகை கர்மாவும் சேரும் பிறகு செலவுகளாக அழியும். இவை ஒரு வட்டம் போல.தொடக்கமும் முடிவும் இல்லாதது.இதை புரிந்து கொண்டால் எதை சேமிக்க வேண்டும்?எதை விட வேண்டும்?என்று உங்கள் அனைவருக்கும் புரியும்.
     நான் மேலே சொன்ன கணக்குகளை புரிந்து நடந்தால் ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு தடை ஏது?.
       சரி நேயர்களே!மீண்டும் மற்றொரு பதிவில் நாம் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சகிப்புத்தன்மை

அன்பர்களே வணக்கம்.
      தற்போது நாம் பார்க்க இருப்பது சகிப்புத்தன்மை. இன்று எவரிடமும் கொஞ்சமும் இல்லாதது.மன்னிக்கவும். பெரும்பாலானவர்களிடம் இல்லலாதது.ஏன் எங்கே சென்றது அந்த நல்ல குணம் நம்மைவிட்டு?யோசிக்க வேண்டிய விசயம். அப்படி தானே அன்பர்களே.
   அப்போதெல்லாம் அதாவது அந்த காலத்தில் எல்லாம் கூட்டுகுடும்பம் இருந்தது. அந்த கூட்டுகுடும்பத்தில் அனைவரும் பரந்த மனப்பான்மையோடு இருந்தார்கள். ஒருவருக்கு ஏதாவது ஒன்று என்றால் மற்றவர்கள் பதறி விடுவார்கள். ஒருவர் செய்யும் தவறை சுட்டி காட்டி திருத்துவார்கள்.மன்னித்தும் விடுவார்கள். ஆனால் இன்று சின்ன குடும்பம் தான். ஆனால் சகிப்புத்தன்மை இல்லாமல் போனதால் நாம் அனைவரும் துயரப்படும்படி சிறுகுழந்தைகள் கூட துயர முடிவை எடுக்கிறார்கள். கணவன் மனைவி இருவருக்குள்ளுமே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போனதால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது.
   ஒன்றுக்கும் பொறாத விசயங்களை ஊதிஊதி பெரிதுப்படுத்தி குடும்பத்தை விளையாட்டு மைதானமாகக்கூட இல்லை ஒரு குஸ்தி போடும் இடமாக மாற்றி விட்டார்கள். இதைப்பார்த்து வளரும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள் நேயர்களே.
        குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வாழவேண்டிய நாம் ஒரு எதிரியைப்போல உருவாக்கி கொண்டு இருக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்கள் எதையாவது குழந்தைத்தனமாக செய்யும் போது அதை கேலி கிண்டல் செய்து அவர்களை நம் குழந்தைகள் முன்னால் அவமானப்படுத்துகிறோம்.இது சரிதானா. குடும்பத்தில் உள்ள பெரியவர்களை பொறுமையோடு எவ்வாறு கவனிக்க வேண்டும் என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதை விட்டு விட்டு நாம் பெரியவர்களை குற்றம் குறைகூறி சகிப்பு தன்மை கொஞ்சம் கூட இல்லாமல் சொல்வதால் இதை பார்த்து பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் ஆழமாக நீங்கள் நடந்துக்கொள்வது பதிந்து விடுகிறது. பிறகு எதிர்கால முதியவர்களாகிய உங்களை அவ்வாறே நடத்துகிறது.இதை எண்ணி எண்ணி உள்ளுக்குள்ளேயே உங்களால் அழதான் முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் கர்மவினை அது.நீங்கள் என்ன கொடுத்தீர்களோ அது திரும்பவும் உங்களுக்கே எந்தவித சேதாரமும் இல்லாமல் உங்களிடமே வந்து விடுகிறது.
       ஒரு இல்லத்தில் சமையல் என்றாவது ஒருநாள் தாமதம் ஆனால் ஊரையே கூட்டிவிடும் அளவிற்கு சத்தம் போடுவது எதனால்?.இது சாதாரண வருமானம் உள்ள வீட்டில் கண்கூடாக பார்க்கிறோம். மேலும் ஒரு மனைவிக்கு என்றாவது ஒருநாள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மனைவியை அன்பாக ஆதரவாக பார்த்து கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பாசக்கார மனைவி அழுது புலம்பி எத்தனை வேண்டுதல் வைக்கிறாள்.அவளுக்கு அவ்வளவு சகிப்பு தன்மை  இருக்கும் போது உங்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது?.இது அனைத்து இல்லத்தரசிகளின் கேள்வி. மேலும் இதற்கு விசால மனமும் பொறுமையும் இல்லாததை தவிர வேறு என்ன இருக்க முடியும்?.
     அதேபோல் குழந்தைகள் விசயத்திலும். அதுவும் இந்த கால குழந்தைகள் செய்யும் சேட்டைகள் ஒரு அளவே இல்லை. நான் சொல்வேன் இதை சமாளிக்கும் அம்மாக்களுக்கு அரசாங்கம் கூப்பிட்டு வைத்து பரிசு தரலாம். வீட்டில் உள்ளவர்கள் பாராட்டாவிட்டாலும் திட்டாமலாவது இருக்கலாம். இவர்களை சமாளிக்க ஒரு தனி சகிப்பு தன்மை வேண்டும்.ஆனால் இந்த கணவன்மார்களிடம் இந்த குழந்தைகளை ஒரு ஒருமணிநேரம் பார்த்து கொள்ள சொன்னால் ஓடிவிடுகிறார்கள்.இவர்கள் சகிப்பு தன்மையை வரவழைத்து கொள்ளாமல் மனைவிமேல் பாரத்தின் மேல் பாரத்தை தூக்கி வைத்து அவளை சுமைதாங்கி ஆக்கினால் அவள் மனசுமை அதிகமாகி மன அழுத்தத்தால் மிகவும் சோர்ந்து விடுகிறாள்.எந்த வேலையையும் இருவரும் பகிர்ந்து செய்வதற்கு முதலில் மனப்பக்குவம் வேண்டும். இது இருந்தால் சகிப்பு தன்மை தானாக வந்து விடும்.
   சரி நேயர்களே. இன்று உங்களுக்கு சலிப்பு வரும் அளவிற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டேன்.மீண்டும் ஒரு பதிவில் உங்களை நான் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

புதன், 22 ஆகஸ்ட், 2018

ஊன்றுகோல்

அன்புடையீர் வணக்கம்.
        இன்று நாம் பார்க்க இருப்பது ஊன்றுகோல். நாம் அனைவரும் ஒருகாலத்தில் தேடுவது தேடப்படுவது.அப்போது தான் அதன் அருமை புரியும். எந்த பொருளின் அருமையும் அதன் தேவை ஏற்படும் போதுதானே  நமக்கு தெரியும். இது இயல்பு தானே அன்பர்களே!
        ஆனால் நான் இப்போது கூற இருப்பது அந்த ஊன்றுகோலைப்பற்றி அல்ல. அது தேவைப்படும் போது பார்த்து கொள்ளலாம். இப்போது பார்க்க இருப்பது நமது நம்பிக்கை எனும் ஊன்றுக்கோலை.தைரியம் என்ற ஊன்றுகோலை.மனோவலிமை எனும் ஊன்றுகோலை.இன்னும் நிறைய....
       நாம் சோர்ந்து விழும்போதெல்லாம் ஒரு கை நமக்கு ஊன்றுகோலாக தேவைப்படுகிறது.அந்த கை வேறு ஒன்றும் இல்லை. நம்பிக்கைதான் அந்த கை.இந்த கையை இழந்து விட்டால் நம்மை தூக்க எத்தனை கைகள் வந்தாலும் நம்மை காப்பாற்ற இயலாது. அதனால் எந்த சூழலிலும் நாம் நமது நம்பிக்கை எனும் ஊன்றுகோலை பிடித்து எழுந்து நிற்க வேண்டும். அப்போது தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.
அதைவிட்டு விட்டால் நாம் பலம் இழந்தவர்கள் ஆவோம். ஆதலால் மனித கைகள் நம்மை தூக்க வரவில்லை என்ற கவலை விடுத்து நமது நம்பிக்கை எனும் கையை ஊன்றி எழுந்து கம்பீரமாக நிற்போம். என்ன நேயர்களே. நான் சொல்வது சரிதானே?
      அடுத்து நாம் பார்க்க இருப்பது தைரியம் எனும் ஊன்றுகோலை ஊன்றி நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும். தைரியம் எனும் ஊன்றுகோல் நமக்கு கடைசி வரை துணையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவர் தான் நமது முக்கிய உறவு என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த கலியுகத்தில் நம்மை எந்த நேரத்தில் எவரும் கைவிடுவார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் தைரியம் எனும் உறவு மட்டுமே நம்முடைய உண்மையான உறவாக எப்போதும் நம்முடன் பயணிக்கும். அதனால் நீங்கள் முதலில் மற்ற உறவுகளை மிக முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதை இந்த தைரியம் எனும் உறவு சிறிது நகைப்போடே உங்களை நோக்கும். ஏன் என கேட்கிறீர்களா?.எப்போதும் கூடவே இருக்கப்போகும் உறவான என்னை விடுத்து இவர்கள் ஏன் போலி உறவுகள் பின்னால் நாய்க்குட்டி போல போகிறார்கள் என்று.
               நாம் அடுத்து பார்க்க இருப்பது மனோவலிமை எனும் ஊன்றுகோலை. இந்த மனோவலிமையை எப்போதும் நமது நண்பனாக கருத வேண்டும். அப்போது தான் அவன் நமக்கு தேவைப்படும் போது நம்மை உயிராக பேணி காப்பான். இந்த ஒரு நண்பனை நீங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டால் போதும். உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பான்.எப்போதும் நண்பனுக்கு ஒரு தனி இடம் ஒன்று உண்டு தானே. அந்த இடத்தை நிரப்ப போவது நமது மனோவலிமை எனும் தோழன். நாம் இந்த தோழமையை நன்றாக பேணிகாத்து வந்தால் நாம் நமது வாழ்க்கையைசுபிட்சமாக வைத்துக்கொள்ளலாம்.நமது வாழ்க்கை சுபிட்சமாக இருப்பதை பார்த்து உண்மையான சந்தோஷத்தை அடைவது நமது உண்மையான நண்பன் தானே.
     ஆக நாம் இந்த ஊன்றுகோலை துணையாக கொண்டால் நிச்சயமாக கவலை இல்லாத ஆனந்த வாழ்வு நிச்சயம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே?.
    சரி நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவை போட்ட திருப்தியில் சென்று வருகிறேன். மீண்டும் மற்றொரு பதிவில் உங்களை சந்திக்கும் வரை🖐️✋🙏

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

எது சுதந்திரம்

அன்பர்களே வணக்கம்.
       நாம் இன்று பார்க்க இருப்பது சுதந்திரம். எது சுதந்திரம் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பட்டிமன்றம் மட்டும் தவறாமல் நடக்கிறது. ஆனால் சுதந்திரம் என்பது என்ன என்று மட்டும் நமக்கு தெளிவாக தெரிவதில்லை. இப்போதாவது நாம் சுதந்திரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முனைப்பு காட்டலாமே.
     சரி நேயர்களே விசயத்திற்கு வருவோம். சுதந்திரம் என்று நாம் நினைப்பது எதுவுமே சுதந்திரம் இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
        சுதந்திரம் என்றால் நாம் நமது இஷ்டப்படி நடந்து கொள்வது என்று பெரும்பாலானவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறோம். அதுவல்ல சுதந்திரம்.
    இன்று சுதந்திரம் என்கிற போர்வையில் நமது சமூகம் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை. மேலும் சமூக வலைத்தளங்களில் நாம் ஒருசிலர் பதிவிடும் வக்கிரமான சொற்கள் அடங்கிய பதிவுகளை பார்க்கும் போது நிச்சயமாக நமது தமிழ் அன்னை மனதிற்குள் கண்ணீர் வடிப்பாள் என்பது மட்டும் நிச்சயம். ஏன் இந்த வக்கிரம்.மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் வார்த்தையாக வடிவம் பெறுகிறது. நமது தமிழ் அன்னையை நாம் ஆக்கபூர்வமான விசயங்களில் பயன்படுத்தி தமிழின் பெருமையை பரப்ப இங்கே ஆயிரம் விசயங்கள் கொட்டிக்கிடக்க நாம் மிகவும் மோசமாக அதை பயன்படுத்துவது நமது தாயை அவமதிப்பதற்கு சமம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்தை ஆக்கபூர்வமான விசயங்களுக்கு பயன்படுத்தினால் தான் நாம் சுதந்திரம் அடைந்ததற்கான பலனை பெறமுடியும். அதைவிடுத்து அருவருக்கத்தக்க விசயங்களில் பயன்படுத்தினால் நமது தமிழ் அன்னை நமது மோசமான நடத்தையை பார்த்து மனம் வெதும்ப மாட்டாளா.அதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?.சிந்தியுங்கள் சுதந்திர விரும்பிகளே.
      அடுத்து ஒரு விசயம் பேச்சு. எவ்வளவு அழகு அழகான வார்த்தைகள் இருக்க மிக மிக தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி தமிழ் அன்னையை தலைகுனிய வைப்பது தான் சுதந்திரமா?.எந்த மொழிகளிலும் இல்லாத பொக்கிஷமான வார்த்தைகள் ரசிக்கும் படியான வார்த்தைகள் சரம் சரமாக பூக்களை கோத்ததுப்போல தமிழில் இருக்க நாம் தேடி தேடி மோசமான  தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவது சரிதானா என்பதை உங்களது பார்வைக்கே விட்டு விடுகிறேன். மேலும் படித்தவர்கள் தான் மிக கேவலமாக நடந்து கொள்கிறார்கள். நிச்சயமாக ஏட்டு படிப்பு இல்லாதவர்கள் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை அழகாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் இங்கே எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
     மேலும் சுதந்திரம் என்று சொல்லி கொண்டு கன்னாபின்னாவென உடை உடுத்துவது உங்களை ஒரு கேலிசித்திரமாக பார்க்க உதவுமே தவிர வேறு எதற்கும் அது பயன்படாது.மேலும் பொது இடங்களில் மிகவும் நாகரிமாக நடந்து கொள்வது தற்போது குறைந்து வருகிறது. யார் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் நடந்து கொள்வோம் என்று கூறுவது சுத்த முட்டாள்தனம் ஆணவம் பிடித்த மனிதர்கள் என்பதை உங்களை அடையாளப்படுத்துமஅடையாளப்படுத்துமே தவிர அது சுதந்திரம் என்று நீங்கள் நினைத்துக்கொள்வது மடத்தனம் அல்லாமல் வேறு என்ன?
      சரி நேயர்களே இந்த சுதந்திர தினத்திலாவது மேற்கூறிய மோசமான எல்லா செயல்களையும் விடுத்து மிகவும் பண்புள்ளவர்களாக மாறி சமுதாயத்திற்கு எந்த வகையிலும் ஊறுவிளைவிக்காமல் நடந்து கொள்ள முயற்சி செய்வோமாக.
    உண்மையான சுதந்திரம் என்பது சமுதாயத்தை அமைதியாக வைத்திருப்பதில் நமக்கு பங்களிப்பை கொடுத்து இன்றைய இளைஞர்களை கட்டுக்கோப்பாக வழிநடத்தி சுதந்திரம் என்பது இஷ்டப்படி நடந்து கொள்வது இல்லை. நமது கடமைகளையும் உரிமைகளையும் அழகாக அடுத்தவர்களின் தலையீடு இல்லாமல் தடைகள் உடைத்து நல்ல விசயங்களை செய்வதில் உள்ளது என்பதை புரிய வைத்து நாமும் ஆனந்தமாக இருந்து அடுத்தவர்களையும் ஆனந்தமாக வைத்திருப்போமாக!
சரி நேயர்களே!நான் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து 🖐️🖐️🙏

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

வாக்குறுதி

அன்பர்களே வணக்கம்.
              இப்போது நாம் பார்க்க இருப்பது வாக்குறுதி.நீங்கள் என்மேல் கோபமாக இருப்பது எனக்கு தெரிகிறது. ஏனெனில் இந்த காலத்தில் எதெல்லாம் நடக்காமல் இருக்கிறதோ அதை எல்லாம் நீங்கள் பேசுவது என்று ஒரு முடிவெடுத்துதான் வந்திருக்கிறீர்கள் போலும். சரி கேட்பது எங்கள் தலைவிதி.சொல்ல வந்ததை சொல்லி விட்டு இடத்தை காலி செய்து விட்டு போவீர் ஐயா என்று தானே சொல்ல வந்தீர்கள். கண்டிப்பாக நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டு நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சென்று விடுகிறேன் .கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஐயா என்று நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா ஐயா?.
        சரி விசயத்திற்கு வருவோம். இன்று வயலில் விவசாயி விதைகளை தெளிப்பது போல வாக்குறுதிகள் அள்ளி தெளிக்கப்படுகிறது.நான் சொல்வது அரசியல்வாதிகள் மட்டும் இல்லை.பொதுமக்களும் இப்படி தான் தற்போது இருக்கிறார்கள்.
       ஒருகாலத்தில் ஒருத்தருக்கு ஒரு வாக்கு கொடுத்து விட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.சாமான்யமாக யாருக்கும் அவ்வளவு எளிதில் வாக்கு கொடுக்கமாட்டார்கள்.அப்படி கொடுத்து விட்டால் கண்டிப்பாக அதை நிறைவேற்றாமல் விடமாட்டார்கள். ஒரு மனிதன் என்பவன் முழுமையடைவதே அவனுடைய சொல்லாலும் செயலாலும் தான். ஆனால் தற்போது அது ஒரு விளையாட்டு பொருளாகிவிட்டது மக்கள் மத்தியில். எளிதாக யாருக்கும் வாக்கு கொடுக்கிறார்கள். அதை நம்பி எதிராளியும் அமைதியாக இருக்கும் போது நம்பியவர்காலை தக்க சமயத்தில் வாரிவிடுகிறார்கள்.
       கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போகிறாயே என்று யாரையேனும் கேட்டால் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நான் அப்படி தான். இதுவொரு சின்ன விசயம். இதைப்போய் பெரிதுப்படுத்திக்கொண்டு என்பார்கள். இது ஒருவகையில் நம்பிக்கை துரோகம் இல்லையா.
   நான் சொல்ல வருவது அனைவரையும் இல்லை. ஏனெனில் வாக்கை நிறைவேற்ற எவ்வளவோ பிரயத்தனம் செய்து தோற்றவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் முயற்சி எடுத்தார்கள். ஆனால் அதற்கான பலன் இல்லை. இதற்கு பரிகாரம் தேவையில்லை. நான் சொல்ல வருவது முயற்சியே இல்லாமல் இருப்பவர்களை பற்றி தான். அதை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களைப்பற்றித்தான்.
       வாக்கு என்பது மிகவும் வலிமையானது.அதை நாம் போற்றி பாதுக்காக்க வேண்டும். புராணங்களை எடுத்துக்கொண்டால் எல்லாமே நிகழ்ந்தது வாக்கிறுதியாலே என்றே சொல்லலாம். ஏன் அவர்கள் வாக்கை கேலிப்பொருளாக நினைத்து தூக்கி போடவில்லை என்று நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அதிலிருந்தே புரியும் வாக்கின் பெருமை.அப்படஅப்படிப்பட்ட வாக்கை நாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாலுபேருக்கு முன்னால் கேவலப்படுத்துகிறோம்.
   ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நேயர்களே. கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் எவனும் மனிதனே இல்லை. கொடுத்த வாக்கை இவர்கள் நிறைவேற்றாமல் போனால் இவர்கள் வேறொரு இடத்தில் அதே ஏமாற்றத்தை நிச்சயமாக சந்திப்பார்கள். இது உறுதி. அதனால் வாக்கு கொடுப்பதற்கு முன்னால் ஆயிரம் தடவை யோசிப்போம்.அப்படி யோசித்து கொடுக்கப்பட்ட வாக்கை நாம் உயிராக நேசித்து நிறைவேற்றி ஆனந்தமாக வாழ்வோம்.
     என்ன நேயர்களே நான் இதை சொன்னவுடன் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த வாக்குறுதிகள் ஞாபகம் வருகிறது அல்லவா.யோசியுங்கள். நன்றாக யோசியுங்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் இருந்தால் இதுதான் தக்க சமயம். நிறைவேற்றி விடுங்கள். நீங்களும் ஆனந்தமாக இருப்பீர்கள். வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதால் எதிராளியும் ஆனந்தப்பட்டு உங்களை நம்பிக்கைக்குரியவர் பட்டியலில் சேர்த்து கொள்வார்.
  சரி நேயர்களே. மீண்டும் ஒரு பதிவில் நாம் சந்திக்கும் வரை🖐️🖐️🙏

சனி, 11 ஆகஸ்ட், 2018

தைரியம்

அன்பர்களே வணக்கம்.
       இப்போது நாம் பார்க்க இருப்பது தைரியம். இன்றைய இளைஞர்களுக்கு தைரியம் என்றால் என்ன என்று சரியாக புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது வேதனை.
           இன்றைய இளைஞர்கள் தைரியம் என்றால் வன்முறை என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள்என்று தான் நினைக்கிறேன். ஆனால் தைரியம் என்பது மன அளவில் சம்பந்தப்பட்டது.ஆமாம்நேயர்களே.
         எதிர்க்க வேண்டிய விசயங்களை எதிர்த்து மனோரீதியாக பலப்படுத்தி வைராக்கியமாக காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து முட்டாள்த்தனமாக வன்முறையில் ஈடுபடுவது அமைதியை சீர்குலைக்கும் தவிர அதனால் வேறுபயன் ஒன்றும் இல்லை.
        நல்ல விசயங்களை செய்வதற்கு கூட தற்போது பயப்பட வேண்டியதாக உள்ளது. இது எவ்வளவு கொடுமை.இதைத்தான் நாம் மனோரீதியாக வெல்ல வேண்டும். நல்ல விசயங்களை செய்வதற்கு எத்தனை வித தடைகள் வந்தாலும் நாம் அகிம்சை பலப்படுத்தி அதேசமயம் தைரியத்தை ஊக்கப்படுத்தி நமது அந்த நல்ல காரியத்திலேயே கண்ணாக இருந்து எதிர்விளைவுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதே தைரியம்.
        மோசமான விசயங்கள் நடக்கும் போது வாய்மூடி மௌனியாக இல்லாமல் எங்கே தவறு நடக்கிறதோ அதை தட்டி கேட்பதே தைரியம். அதைவிடுத்து கோழைப்போல பயந்து பின்வாங்குவது அல்ல.
    இன்றைய இளைஞர்கள் நல்ல விசயங்களை செய்வதற்கும் மோசமான விசயங்களை அதே இடத்தில் தட்டி கேட்பதற்கும் மிகவும் பயப்படுகிறார்கள்.இது எப்படி சரியாகும். நமது மனசாட்சியே நம்மை கொன்றுவிடாதா?.நாம் வாழும் வரை நல்ல விசயங்களை செய்வதற்கும் மோசமான விசயங்களை தட்டி கேட்பதற்கும் மிகவும் அவசியமஅவசியமாக தேவைப்படுவது தைரியம்.
         தைரியம் என்பதை தவறாக புரிந்து கொண்டு சமுதாயத்தை நாமே கெடுத்து விடக்கூடாது. பெரிய பெரிய தலைவர்கள் எவ்வளவோ விசயங்களை மனோதைரியத்தால் வென்றிருக்கிறார்கள்.மனோதைரியத்தை துணைக்கொண்டே இங்கே அத்தனை விசயங்களும் சாதிக்கப்பட்டிருக்கிறது.
         மோசமான விசயங்களை செயல்படுத்த விடாமல் இருப்பதற்கு நாம் உறுதியாக இருப்பது கூட தைரியம் தான். எந்த மோசமான விசயங்களையும் உறுதியாக கொள்கைப்பிடிப்போடு எதிர்ப்பது கூட தைரியம் தான்.
     நல்ல விசயங்களை செயல்பட விடாமல் இருப்பவர்களை தமது எழுத்துக்களாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாலும் செயல்பட வைப்பதும் தைரியம் தான்.
   ஆக தைரியம் என்பதை சரியாக புரிந்து கொண்டு நாம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது தைரியம். அதைவிடுத்து வன்முறையில் ஈடுபடுவது தைரியம் இல்லை. கோழைகளே வன்முறையில் ஈடுபடுவார்கள்.
   ஆகவே நேயர்களே நாம் தைரியத்தை சரியாக புரிந்து கொண்டு சரியான பாதையில் நடந்தால் நாம் ஆனந்தமாக வாழ்வது திண்ணம்.
   சரி நேயர்களே மற்றுமொரு அழகான தலைப்பில் மீண்டும் சந்திக்கும் வரை 🖐️✋🙏

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ஒடுக்குதல்

அன்பர்களே வணக்கம்.
          நாம் தற்போது பார்க்க இருப்பது ஒடுக்குதல்.இதைப்பற்றி நாம் பேசும் போது ஒருகாலத்தில் நமது சமுதாயத்தில் ஒருபிரிவினரை நமது சமுதாயம் எவ்வாறு ஒடுக்கி அடக்கி ஆண்டது என்பது நம் கண் முன்னால் வந்து போகும். ஆனால் நமது சமுதாயத்தை சீர்திருத்த நிறைய தலைவர்கள் தோன்றி அந்த தன்மையை மாற்றினார்கள் என்பது வரலாறு.
      சரி நான் இப்போது பேசப்போவது அதுவல்ல .பின் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்களா. ஆம் நான் பேசப்போவது நமது மன ஒடுக்கத்தை பற்றி. அட போங்க .உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ஏன் எங்களை போட்டு இப்படி படுத்தி எடுக்கிறீர்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை. ஆனால் என்ன செய்வது.இறைவன் என்னை தூதாக அனுப்பி உள்ளான் உங்களை எல்லாம் காப்பாற்ற.😃நான் சொல்வதை நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.😀
          சரி விசயத்திற்கு வருவோம். மனதை ஒடுக்குதல் என்றால் நல்ல தடிகளையும் பல மரகட்டைகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளட்டுமா என்று நீங்கள் நக்கலாக
கேட்பதும் என் காதில் விழாமல் இல்லை. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் அமைதியாக உங்கள் மன ஓட்டத்தை கவனிக்க வேண்டும். அவ்வளவு தான்.
      என்ன விளையாடுகிறீர்களா.அமைதியாக எண்ண ஓட்டத்தை கவனித்து வந்தால் மனம் அப்படியே பவ்யமாக ஒடுங்கி என்ன எஜமானனே.நீங்கள் உத்தரவு தாருங்கள். அதை செய்கிறேன் என்று கைகட்டி நிற்குமா என்று நீங்கள் கேட்கிறீர்கள்.அப்படி தானே.ஆம் கண்டிப்பாக கேட்கும். ஆனால் உடனே எல்லாம் அந்த அதிசயம் நடந்து விடாது.அதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.
     நிறைய பொறுமை காத்தால் நீங்கள் உங்கள் மனதை ஒடுக்குவது மட்டும் இல்லை.நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ அதை அப்படியே துல்லியமாக நிறைவேற்றும்.இது நிச்சயம்.
         முதலில் அப்படி இப்படி தான் இருக்கும். பிறகு மனம் கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்குவதை உங்களால் உணர முடியும். நீங்கள் எண்ண ஓட்டங்களைவிலகி நின்று கவனித்து கொண்டே வாருங்கள்.
            எந்தெந்த விசயத்தில் மனம் அதிகம் ஓடுகிறது என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். பிறகு அந்த விசயத்தால் உங்களுக்கு உங்கள் வேலைக்கு மனதிற்கு எந்த வித பாதிப்பு என்பதையும் குறிப்பெடுங்கள்.அந்த எண்ண ஓட்டத்தில் தோன்றும் விசயத்தால் நீங்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைகிறீர்கள் என்று குறிப்பெடுங்கள். அந்த விசயத்தால் நீங்கள் அதிகமான பாதிப்பு அடைகிறீர்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக அந்த விசயத்திலிருந்து விலகி அதற்கு மாற்றான வழியை கண்டுபிடித்து தான் ஆக வேண்டும்.
    மேலும் மனதை முடிந்த வரை எண்ண ஓட்டங்கள் அதிகமாக இல்லாமல் குறைத்து கொண்டே வாருங்கள். ஏனெனில் எண்ண ஓட்டம் அதிகமாக ஆக நீங்கள் மனதை ஒடுக்குவது மிகவும் சிரமமான காரியம் தான்.
   எண்ண ஓட்டத்தை ஒழுங்கமைக்க ஏதாவது வேலை செய்து கொண்டே இருங்கள். ஏனெனில் உடல் ஓய்வாக இருந்தால் தான் நாம் எண்ண ஓட்டத்தால் பாதிக்கப்படுவோம்.
       உங்கள் மனதில் நல்ல விசயங்களை போட்டு கொண்டே வாருங்கள். பிறகு பாருங்கள். நல்ல நேர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு உங்கள் மனம் தேவையில்லாத எண்ணங்களில் இருந்து ஒடுங்கி உங்களுக்கே தெரியாமல் நல்ல பல விசயங்களை சாதிப்பதற்கு உதவும்.
    என்ன அன்பர்களே.நான் எனக்கு தெரிந்த வழிமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.நீங்கள் உங்கள் மனதிற்குள் இந்த எளியேனின் வழிமுறைகளை செலுத்தி முயற்சி தான் செய்து பாருங்களேன். பலன் நிச்சயம் கிடைக்கும்.
     சரி நேயர்களே  மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அதுவரை எப்போதும் போல🖐️🖐️🙏

வேடிக்கை

அன்பர்களே வணக்கம்.
                    நாம் இப்போது பார்க்க இருப்பது வேடிக்கை. ஆம். நம் வாழ்வில் நடப்பது அனைத்துமே வேடிக்கை. நாம் அனைவரும் வேடிக்கையை விரும்புகிறோம்.ஆனால் நமது வாழ்க்கையை ஒரு வேடிக்கையாக பார்க்க விரும்பமாட்டேன் என்கிறோம். அதுதான் ஏன் என புரியவில்லை.
       நாம் ஒரு திருவிழாவிற்கு செல்கிறோம்.அங்கே ஆடல் பாடல்கள் நிகழ்ச்சி வைத்திருக்கிறார்கள்.அதை ரசித்து பார்க்கிறோம்.அதுபோல தான் வாழ்க்கை என்பதை மறக்கிறோம்.
      நமது வாழ்க்கையில் நாம் மிகவும் பற்று வைத்திருக்கிறோம்.பந்தபாசம் நமது கண்ணை மறைக்கிறது.இதுதான் நம்மை நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்க விடாமல் தடுக்கிறது.அந்த மாயை திரையை நாம் விலக்கினால் நாம் நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்க முடியும்.
     ஏன் நான் நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்கிறேன் என்றால் அப்போது தான் நாம் நிம்மதியாக நமது வாழ்க்கையை நடத்த முடியும்.
      நமது இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இதை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியாது. ஆனால் அதிலிருந்து நம்மால் விலகி இருக்க முடியும். அதனால் தான் இதை நான் வலியுறுத்தி சொல்கிறேன்.
       இன்பம் வந்தால் ஏற்றுக்கொண்டு குதூகலிக்கும் மனது ஏன் துன்பத்தை ஏற்க மறுக்கிறது.அதை யோசியுங்கள். நாம் நாடகத்தில் அனைத்து சம்பவங்களையும் ரசித்து பார்க்கிறோம். இன்னும் ஒருபடி மேலாக இன்னொருவர் வாழ்க்கையில் ஏதாவது துன்பம் நடந்தால் வேடிக்கை பார்க்கும் மனதால் நமது வாழ்க்கையில் நடக்கும் போதுமட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது.சிந்தியுங்கள்.
       ஏன் எனில் அது வேறொருவர். அவருக்கும் நமக்கும் தொடர்பு இல்லை. ஆனால் நமது வாழ்வில் நமது வாழ்க்கை துணை பிள்ளைகள் எல்லோரும் நம்முடன் இணைந்தவர்கள் என்று நினைப்பதால்.
       இந்த நினைவை நீங்கள் மாற்றினால் ஒழிய இந்த உணர்வில் இருந்து விடுபட முடியாது. வேடிக்கை என்பது பொதுவானது.ஆனால் நாம் தான் அதை அடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியும் நமக்கு ஒரு மாதிரியுமாக பிரித்து பார்க்க கற்று கொண்டுள்ளோம்.இதனால் தான் பிரச்சினை தீவிரமாகிறது.இந்த பிரச்சனை நாம் உடலோடு அதிக பற்று வைப்பதால் வந்த பிரச்சினை. அதை ஆன்மாவோடு தொடர்புபடுத்தி எப்போது பார்க்க தொடங்குகிறோமோ அப்போதே நாம் நமது வாழ்க்கையை தள்ளி இருந்து வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்வோம்.
      அதனால் அன்பர்களே கொஞ்சம் மனதை ஒருமுகப்படுத்தி ஆத்மஞானத்தை விரைந்து கைகொள்ளுங்கள்.அப்போது எல்லா நன்மைகளையும் அடைவதோடு உண்மை எது பொய்மை எது என்று பிரித்தறியும் தன்மை வரும். அதோடு உங்கள் வாழ்க்கையை லாவகமாக கையாண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.அப்போது எல்லாம் உங்களுக்கு வேடிக்கை பொருளாக தான் தெரியும். எதன்மேலும் ஒரு பற்று இல்லாமல் உங்கள் கடமைகளை மட்டும் செய்வதில் ஆர்வம் கொண்டு ஆனந்தமான வாழ்க்கை நீங்கள் வாழ்வீர்கள்.
    சரி நேயர்களே. மிகவும் மகிழ்ச்சி. வேடிக்கை பார்க்க கற்று கொண்டதற்கு. மீண்டும் சந்திப்போம். அதுவரை எப்போதும் போல🖐️🖐️🙏

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

நாணம்

அன்பர்களே வணக்கம்.
             நாணம் என்ற சொல்லைக்கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது சொல்லுங்கள். பெரும்பாலானாவர்கள் அட போங்க நீங்க வேற .இல்லாத ஒன்றை ப் பற்றி கேட்டுக்கொண்டு என்கிறீர்களா. அதுவும் சரிதான். ஆமாம் இல்லை. நீங்கள் நினைப்பதும் சரிதான்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பெண்களின் நாணம் பற்றி அப்படி தானே.அதுவும் நாணம் தான். ஆனால் காலத்தின் மாற்றத்தில் அந்த குணம் கரைந்து போனது.அதனால் ஒன்றும் நஷ்டம் இல்லை.
             நான் சொல்ல வரும் நாணத்தை பற்றி இப்போது பார்ப்போம். நாணம் என்பது மனிதர்கள் பால்பேதம் இல்லாமல் தேவையான ஒன்று. ஏனெனில் அந்த உணர்வு ஒன்று இல்லை என்றால் நாம் மனிதர்கள் மனிதத்தன்மை இல்லாமல் இருப்போம்.
      மனிதர்கள் ஒவ்வொருவரும் மோசமான விசயங்களில் ஈடுபடுவதை நினைத்து நாணப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மோசமான ஒரு செயலில் ஒருவர் இறங்குகிறார் என்றால் அதை மற்றவர்கள் சுட்டி காட்டும் போது கூட நாணம் வரமாட்டேன் என்கிறது.இது வேதனையான விசயம். ஒருவர் நமது செயல் அருவருப்பானது என்று சுட்டி காட்டும் போது கூனிகுறுகி நாணம் கொள்ள வேண்டும். நானா இப்படி செய்தேன் என்று. ஆனால் மாறாக இங்கே என்ன நடக்கிறது. சுட்டிக்காட்டுபவர்கள் மேலேயே கோபம் கொள்கிறோம்.
இது ஆரோக்கியமான விசயமா?யோசித்து பாருங்கள்.
       இப்போது சமுதாயத்தில் மனிதர்களிடையே அருவருக்கத்தக்க முறையில் வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக்கொள்வது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இது சரிதானா. நாம் ஆரோக்கியமான சமுதாயத்தை நமது வார்த்தைகளால் கெடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை நமது மனம் ஏன் உணர்ந்து நாண மறுக்கிறது.நாம் ஜடத்தன்மை அடைந்து விட்டோமா.சொல்லுங்கள்.
        முகநூலை திறந்தால் நாம் எதிர்கொள்ளும் நல்ல விசயங்களை விட மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகள் நிரம்பிய பக்கங்களே அதிகம் என்று சொல்லலாம். ஒருவரை விமர்சிக்க எவ்வளவோ ஆரோக்கியமான வழிகள் உள்ளன. ஆனால் நாம் அந்த வழி பக்கம் தலைக்கூட வைத்து படுப்பதில்லை.ஏன் என்று புரியவும் இல்லை.
   முதலில் நாம் மோசமான வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் நாம் நமக்கு நாமே வெட்கப்பட்டு திருத்தி கொள்ள வேண்டும். அதைவிடுத்து இல்லை இல்லை நான் இப்படி தான் பேசுவேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று சொல்வது ஆரோக்கியமான போக்கு அல்ல.மேலும் அப்படி பேசுபவர்களை நம்மால் முடிந்த அளவு திருத்த முயற்சி செய்ய வேண்டும்.
       நமக்கு எப்போதும் சுயக்கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களையும் சுயக்காட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அது நமது கடமையும் கூட. ஏனெனில் எல்லாவற்றையும் சகஜம் சகஜம் என்று எடுத்து கொண்டால் நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க தவறிவிடுகிறோம். அதனால் நாம் எப்போதும் இந்த விசயத்தில் விட்டு கொடுக்க கூடாது.
       அடுத்து பெண்களை கேவலமாக போகப்பொருளாக நாம் நடத்துவதை பெருமையாக நினைக்கிறோம்.ஒருசிலர் பெண்களின் வளர்ச்சியில் பங்கு கொள்ளாவிட்டாலும் தடையாக இருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் நல்ல வழியில் நடப்பதற்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களை மோசமாக நடத்த நடத்த அவர்களையும் அறியாமலேயே தீய வழியில் பயணம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் மன அழுத்தத்தால்.ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு பெண்களின் அளப்பரிய பங்கு அவசியம். பெண்களை துன்புறுத்தி விட்டு அவர்களிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்காதவர்கள் மனித உருவில் உள்ள மிருகங்களாக கணிக்கப்படுகிறார்கள்.
      பெண்களை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களிடம் மோசமாக எந்த விதத்திலும் நடக்க கூடாது. அப்படி தெரியாமல் கவனக்குறைவாக நடந்து கொண்டாலும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களிடம் தான் செய்த செயலுக்கு நாணம் கொள்கிறேன். இனி அவ்வாறு நடக்காது என்று உறுதி கொடுக்க வேண்டும். அதைவிடுத்து அசட்டை செய்தால் அது மிகப்பெரிய தவறு ஆகும்.
       இப்படி நாணம் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. மனிதர்களாகிய நாம் நாணம் கொள்ள வேண்டிய விசயத்தில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. அப்போது தான் ஒரு நல்ல வாழ தகுந்த சமுதாயத்தை உருவாக்கிய திருப்தி நமக்கு கிடைக்கும்.
      என்ன நேயர்களே இப்போது சொல்லுங்கள். நாணம் என்பது நம் அனைவருக்கும் தேவையான ஒன்று தானே.அதை உணர்விழக்க செய்து விட்டோம். தற்போது மீட்டெடுப்பது காலத்தின் அவசியம் ஆகும். நீங்களும் மற்றவர்கள் நாணம் கொள்ளும் விசயத்தை செய்யாதீர்கள். மற்றவர்களையும் செய்ய விடாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆரோக்கியமான ஆனந்தமான சமுதாயத்தை உருவாக்கி நமது சந்ததியர் வாழும் சூழலை விட்டு செல்வோம்.
    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை👐👐🙏

வெறுமை

அன்பர்களே வணக்கம்.
               நாம் இப்போது பார்க்க இருப்பது வெறுமை.வெறுமை இந்த உணர்வு எப்போதாவது நமக்கு தோன்றுவது உண்டு. ஏன் அப்படி தோன்றுகிறது என்று நமக்கே தெரியாது. ஆனால் அந்த உணர்வு வரும் போது நாம் நம்மை கேள்வி கேட்டு கொள்வோம். நாம் வாழ்ந்த வாழ்க்கை சரிதானா என்று. அப்போது தான் நாம் உண்மையான பொருளை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.
             வெறுமை நம் வாழ்வில் நாம் நன்றாக இருக்கும் போதே தோன்றுகிறது. வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்காமலே போய் விடுவோமோ என்று தோன்றும். ஆனால் நாம் நமது கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு இருக்கும் போது தோன்றுகிறதே அதுதான் ஏன் என்று நமக்கு பிடிபடாது.
     இந்த உணர்வு தோன்றும் போதுதான் நாம் ஆத்மஞானத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறோம் என்று அர்த்தம். ஏனெனில் நாம் நமது அனைத்து கடமைகளையும் முடித்துவிட்ட பிறகு கண்டிப்பாக நமக்கு இந்த உணர்வு தோன்றினால் நல்லது என்றே நான் சொல்வேன்.
        நாம் நமது சம்சார சாகரத்தில் மூழ்கி மூழ்கி களைத்து விட்டோம். நாம் நமது பிள்ளைகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து அவர்கள் பிள்ளைகளையும் பார்த்து விட்டோம். பிறகு நாம் கண்டிப்பாக அவர்களை விட்டு நீங்கி ஆத்ம ஞானத்தை தேடுவதே முறை.
      ஆனால் நாம் என்ன செய்கிறோம். மீண்டும் ஒரு சம்சாரத்தில் நுழைந்து விடுகிறோம்.இதில் தான் நாம் தவறு செய்கிறோம். இன்றைய பெற்றோர்கள் நிலையை நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. இவர்கள் பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தால் அங்கே மனைவியோடு சென்று விடுகிறார்கள். பிறகு பிள்ளை உருவாகும் போது தனது பெற்றோரை அங்கே கூட்டி செல்கிறார்கள். எதற்காக கூட்டி செல்கிறார்கள். எல்லாம் சுயநலம். தனது பிள்ளைகளை பொறுப்பாக பார்த்து கொள்ள ஒரு ஆள் தேவை.அதற்காகத்தான்.
      பெற்றோர்களும் கடைசி காலத்தை நிம்மதியாக ஆன்மீக விசயத்தில் அல்லது தனக்கு பிடித்த விசயத்தில் ஈடுபடலாம் என்று நினைத்து ஒரு கனவை கண்டு கொண்டிருக்க அங்கே இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வரும். அடுத்த மாதம் நான் விமானத்தில் உங்களுக்கு டிக்கெட் போட்டிருக்கிறேன் நீங்கள் கண்டிப்பாக மறுப்பு ஏதும் சொல்லாமல் வர வேண்டும் என்று.
       இவர்கள் முடிவுகளுக்கு கால அவகாசம் தரப்படுவதில்லை.மேலும் இவர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களை மதிப்பதே இல்லை. இப்படி இருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு ஏதோவொரு வெறுமை தோன்றுவது இயல்பு தானே.இவர்கள் ஒன்றும் ஜடம் இல்லையே எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு.
        பெற்றோர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கனவுகள் உண்டு என்பதை இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் மதிப்பதே இல்லை அவர்கள் உங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார்கள்.நன்றாக கவனனியுங்கள்.இந்த பதிவு பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தவர்களுக்காக.
            அன்பான இளைஞர்களே நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக உங்கள் பெற்றோர் கனவுகளை சிதைக்காதீர்கள்.வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்தளே நீங்கள் முதலில் உங்கள் பெற்றோர் விருப்பத்தை நாசுக்காக தெரிந்து கொண்டு முடிவெடுங்கள்.ஏனெனில் அவர்கள் அங்கே வந்து திருப்தியாஇ கண்டிப்பாக இருக்கப்போவது இல்லை. பழகிய இடத்தில் நாலுபேர் இங்கே அவர்களோடு பழகியவர்கள் இருப்பார்கள். மேலும் புது இடத்தில் மொழி தெரியாத இடத்தில் வீடே சிறையாகவும் அவர்களுக்கு தோன்றும். இங்கேயும் அப்படி தான் என்றாலும் கண்டிப்பாக குறைந்த பட்சம் காலை மாலை அவர்கள் தெருவில் வெளியே உட்கார்ந்து இருப்பார்கள். அங்கே அப்படி வெளியே விடமாட்டீர்கள்.மேலும் அந்த நாட்டில் சட்ட திட்டங்கள் எப்படியோ.அதற்கேற்ப இவர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு பிடிப்படாது.அதுவே உங்களுக்கு எரிச்சலை தந்துவிடும்.அதனால் நீங்கள் கொஞ்சம் கடுமைக்காட்ட அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அழுதுவிடுவார்கள்.
         அப்போது அவர்களையும் அறியாமல் ஒரு வெறுமை தோன்றும். அப்போது அவர்கள் மிகவும் வேதனை அடைவார்கள். தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோமோ என்று ஆதங்கம் அடைவார்கள். அதனால் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை உண்டு.நீங்கள் அதில் தலையிடாமல் முடிந்தவரை அவர்களை ஆனந்தமாக வாழ விடுவோமே.
            என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.நீங்கள் புரிந்து கொண்டு நீங்களும் சம்பந்தப்பட்டவர்களையும் ஆனந்தமாக வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்👐👐🙏

உரிமைகளும் கடமைகளும்

அன்பர்களே வணக்கம்.
           இப்போது நாம் பார்க்க இருப்பது உரிமைகளும் கடமைகளும்.முதலில் நாம் உரிமைகள் என்றால் என்ன கடமைகள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபகுதிகள் போன்றது.ஒன்றை விட்டு ஒன்றை பிரித்து பார்க்க முடியாது.
            உரிமைகள் என்றால் என்ன. அது நான் விளக்காமலே உங்களுக்கு விளங்கி இருக்கும். அதாவது நமக்கு தேவையானதை நமக்கு உரிமை உள்ள எந்த வஸ்துவும் நமது உரிமை. அதாவது நாம் அதற்கு எஜமான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.நாம் அதன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியும். அதுதான் உரிமை. இந்த உரிமைகள் என்பது நமது கல்வி பேச்சு எழுத்து சமுதாய சீர்திருத்தம்... இப்படி எதன் மீது வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் நமது உரிமையை நாம்  சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்துகிறோமா என்பது தான் பிரச்சினை. நமது உரிமையை ஒழுங்காக பயன்படுத்தி வரும் போது நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை தவறாகபயன்படுத்தினால் நாம் கண்டிப்பாக கேவலப்பட்டு நிற்போம்.
       சரி இப்போது கடமைகள் என்ன என்று பார்ப்போம். கடமைகள் என்பது நாம் உரிமை எடுத்துக்கொள்கிறோமே அங்கே தான் தொடங்குகிறது.நாம் எந்த பொருளில் வஸ்துவில் உரிமை எடுத்து கொள்கிறோமோ அந்த பொருளில் வஸ்துவில் பாலில் நெய் போல கடமையும் கலந்து உள்ளது.
         நாம் பெரும்பாலும் உரிமை எடுத்துக்கொள்கிற அளவிற்கு கடமையை செய்ய தவறிவிடுகிறோம்.இதில் தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிவிடுகிறது.
பேச்சுரிமை எடுத்து கொள்கிறோம் சரி.ஆனால் நாம் பேச்சுரிமை எடுத்து கொண்ஞ அளவிற்கு நாம் பேசும் பேச்சின் படி நடந்து கடமை ஆற்றுகிறோமா என்பது கேள்வி குறிதானே அன்பர்களே.
           கல்வி உரிமை எடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் கற்றக்கல்வி சொல்லி தந்தப்படி நடக்கிறோமா என்று ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் படிப்பதற்கும் செயல்களுக்கும் இடைவெளிகள் அதிகம். நாம் படித்த படி நடப்பது தானே நமது கடமை.ஆனால் உரிமையை எடுத்து கொண்டு கடமையை அனாதையாக்கிவிடுகிறோம்.இது நியாயம் தானா அன்பர்களே.சுயமாக சிந்தித்து பார்ப்போம் .
          நாம் எவ்வளவோ விசயங்களை எழுதுகிறோம்.ஆனால் நாம் எழுதிய விசயங்களை நாம் கடைப்பிடிக்கிறோமா என்று கேட்டால் நிச்சயமாக பெரும்பாலானவர்கள் பதில் இல்லை என்றே சொல்லும். நமது எண்ணமும் செயலும் எப்போது ஒன்றுப்பட ஆரம்பிக்கிறதோ அப்போது தான் நாம் நமது உரிமையும் கடமையும் நிறைவேற்றுபவர்களாக ஆவோம்.
       நாம் நமது வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்இதற்கான வேலைகளை.நமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு நாம் இதைப்பற்றி தெளிவாக சொல்லி கொடுக்க வேண்டும். உரிமைகளை மட்டும் சொல்லி கொடுக்கிறோம்.கடமைகளை சொல்லி கொடுக்க மறக்கிறோம்.அதனால் தான் இன்று பல முதியவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள். இது நாம் கடமைகளை ஞாபகப்படுத்தாததன் விளைவு.மேலும் நம் பெண்பிள்ளைகளுக்கு இது முக்கியமாக கற்று கொடுக்க வேண்டும்.
              ஏனெனில் புகுந்த வீட்டில் போய் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ள சொல்கிறோம். ஆனால் எடுத்து கொண்ட உரிமைகளுக்கு பதிலாக கடமைகளை செய்ய சொல்லி நாம் சொல்லித்தருவதில்லை.அதனால் தான் பெரும்பாலான குடும்பங்கள் இன்று நீதிமன்றம் ஏற வேண்டிய சூழ்நிலை .
          உரிமைகளை விட கடமைகளுக்கு நிறைய முக்கியத்துவம் தரும் போது உரிமைகள் தானாகவே வந்து சேரும்.நாம் நமது அகங்காரத்தை விடுத்து உரிமைகளையும் கடமைகளையும் பார்த்தால் தெரியும். நடுநிலையோடு எதையும் அணுகினால் நமது உரிமைகளும் கடமைகளும் நமக்கு நிச்சயமாக புரிய வரும்.
     என்ன நேயர்களே உரிமைகளையும் கடமைகளையும் புரிந்து கொண்டீர்கள். அப்படி தானே.இன்னும் என்ன தயக்கம். புரிந்து கொண்டதை செயல்படுத்திவிட வேண்டியதுதானே.ஆனந்தமான வாழ்க்கை வாழ நமக்கு அது நிச்சயம் வழிக்காட்டும்.சரி நேயர்களே மீண்டும் மற்றொரு சந்திப்பில் வேறொரு தலைப்பில் நாம் சந்திப்போம்.அதுவரை🖐️🖐️🙏

புகழ்

அன்பர்களே வணக்கம்.
           இன்று நாம் பார்க்க இருப்பது புகழ். ஆம். புகழ் தான். நாம் அனைவரும் கண்டிப்பாக புகழைத்தேடத்தான் செய்வோம். ஏன் நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் உழைப்பதும் அதற்கு தான்.
        சரி புகழ் என்பது என்ன அவ்வளவு எளிதில் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதில் கிடைத்துவிடக்கூடியதா என்ன. இல்லை. நாம் அதுவும் அதை எதிர்பார்த்து செய்யும் போது நம் கைநழுவி போய்விடுவதே அதிகம். அதனால் நாம் புகழ் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நமது செயல்களை மிகவும் ஒழுங்காக நேர்த்தியாக நேர்மையாக செய்து கொண்டே வரவேண்டும்.
      அப்படி செய்துக்கொண்டே வரும் போது நாம் எந்த இடையூறு விமர்சனங்கள் வரும் போதும் அதைப்பற்றி கவலைக்கொள்ளக்கூடாது.அப்போது தான் நாம் புகழை அடைய முடியும். உலகில் பெரும் புகழை அடைந்தவர்களைப் பார்த்தால் நமக்கு ஒன்று நன்றாக புரியும். அவர்கள் அவர்களின் செயல்களில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள்.அவர்கள் அப்படி இருந்ததால் தான் அந்த புகழை அடைய முடிந்தது.
    மேலும் நாம் பொது சேவையில் இருப்பவர்களஇருப்பவர்களே அதிகப்புகழ் அடைவதைப் பார்க்கிறோம்.மற்றும் மக்களுக்கு பயன் தரும் கண்டுபிடிப்புகள் செய்தவர்கள் அதிகப்புகழ் அடைந்திருக்கிறார்கள்.இவர்கள் மட்டும் இல்லை.இன்னும் எத்தனையோ துறையில் இருப்பவர்களும் புகழ் மழையில் நனைகிறார்கள்.ஒரே வித்தியாசம் என்ன என்றால் பொது மக்களுக்கு பயன் உள்ள வகையில் செயல்களை செய்தவர்கள் நீடித்த புகழ் உடையவர்களாக உள்ளார்கள். மற்ற துறைகளில் புகழ் அடைந்தவர்கள் அந்தந்த துறையை சேர்ந்தவர்களுக்கே தெரியும் .அவ்வளவு தான்.
        மேலும் பொதுவாழ்வில் புகழ் அடைந்தவர்களை பாருங்கள். அவர்கள் அனைவரையும் அரவணைத்து சென்றதாலேயே அந்த புகழை அடைந்திருப்பார்கள்.அவர்கள் புகழ் அடைய பின்னாலே நிறைய மனிதர்கள் சத்தம் இல்லாமல் வேலை செய்திருப்பார்கள்.ஆனால் அவர்களை எப்படி அரவணைத்து வேலை வாங்க வேண்டும் என்கிற கலை கண்டிப்பாக தெரிந்ததால்தான் ஒருவருக்கு புகழ் கிடைக்கிறது.
       புகழ் என்பது ஒரு மிக பெரிய போதை.அதை அவ்வளவு எளிதில் வாங்கி விடமுடியாது. அதை வாங்க அது என்ன எளிய வஸ்துவா என்ன?.அதனால் புகழை நாம் எப்போதும் வாங்க துடிப்பதைவிட நமது காரியத்தை திறம்பட ஒழுங்கமைத்து செய்துக்கொண்டே வருவோம். இதை செய்யும் போது அடுத்தவர்கள் எந்த மோசமான விமர்சனங்கள் செய்தாலும் பொருட்படுத்தாமல் செய்து வருவோம். நமது செயல் நல்ல செயல்களாக இருக்கும் பட்சத்தில் நம்மை தேடி புகழ் வரும்.
       எந்த ஆடம்பரமான செயலிலும் புகழை வாங்க முடியாது. அது எளிமையான மனிதர்களையே தேடி சேரும். எந்தளவிற்கு நாம் எளிமையாக இருக்கிறோமோ அதாவது அடுத்தவர்கள் நம்மை அணுகுவதில் மற்றும் அடுத்தவர்களை நாம் நடத்துவதில் அடுத்தவர்களுக்கு உதவுவதில் ..இப்படி எல்லா விசயத்திலும் எளிமை வேண்டும்.
      நம்மிடம் செல்வம் வந்த போது நம் தேவையை குறைத்து அதை ஆக்கபூர்வமாக நாலுபேருக்கு செலவு செய்யும் போது நிச்சயமாக நம்மை தேடி புகழ் வரும். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்ன என்றால் தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான நபருக்கு நம் செல்வம் உதவி செய்ய செல்கிறதா என்பதுதான்.
    நாம் நம் சேவைகளை ஒழுங்காக செய்துக்கொண்டே வரும் போது கண்டிப்பாக நம்மை தேடி புகழ் வந்தே தீரும். அப்போது நாம் அகங்காரத்தை நம்முள் அணுகவிடக்கூடாது.அதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மோசமாக தூண்டி விட்டாலும் நாம் நமது செயலில் கவனமாக இருக்க வேண்டும்.
    ஒவ்வொரு மனிதனும் வள்ளுவர் சொல்வதைப்போல தோன்றின் புகழோடு தோன்ற வேண்டும். அப்போது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும். அதற்காக குறுக்கு வழியில் புகழை நாம் தேடக்கூடாது.அது நீண்ட நாள் நிலைக்காது.
       ஒருமுறை புகழ் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு பாருங்கள். பிறகு உங்களை புகழ் மழை நனைக்கும். அப்படி முதலில் உங்களை வந்து சேர்ந்த புகழை நீங்கள் காப்பாற்றி பொக்கிஷம் போல பாதுக்காத்து வையுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை கொடுக்கும் கருவி.
     தேவைப்படும் போது அதை நினைத்து நினைத்து உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.அது இன்னும் பல புகழை உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.
    என்ன நேயர்களே புகழ் புரியும் காரியங்களில் ஈடுபட்டு ஆனந்தத்தை அதில் தேட முயற்சி செய்ய ஆயத்தம் ஆகிவிட்டீர்கள் அப்படி தானே. நல்லது. நல்ல செயல்களை இப்போதே செய்ய ஆரம்பித்து புகழோடு ஆனந்தமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எதிர்கால முதியவர்கள்

அன்புடையீர் வணக்கம்.
             இன்று நாம் பார்க்க இருப்பது எதிர்கால முதியவர்கள் பற்றி. ஆம் நேயர்களே நாம் பார்க்க இருப்பது இதைத்தான். இன்றைய நவீன உலகத்தில் முதியவர்களை ஒவ்வொருவரும் எப்படி நடத்துகிறோம் என்பதை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
      நாம் எவ்வளவோ நாகரீகத்தை கற்றுள்ளதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்.ஆனால் நாம் கற்றுக்கொண்ட நாகரீகம் எது என்று நமது மனசாட்சியை கேட்டு கொள்வது நல்லது.
          எது நாகரீகம்?.ஒரு முதியவரை அல்லது முதிய வயது உள்ள பெண்மணியை மரியாதையாக நடத்தாமல் அவர்ளை எவ்வளவு இழிவுப்படுத்த வேண்டுமோ அவ்வளவு இழிவுப்படுத்தி அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தி மனோரீதியாக வேதனை அடைய செய்து அவர்களை ஒரு வேண்டாத பொருளாக நினைப்பது எல்லாம் எவ்வளவு கேவலமான செயல்? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
    உங்கள் வீட்டில் ஒரு முதியவர் இருந்தாலும் தயவுசெய்து அவர்ளை காயப்படுத்தாதீர்கள்.மேலும் இப்போது இளைஞர்கள் பெரும்பாலோனோர் வெளிமாநிலத்தில் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் அருகாமை தேவைப்படும் நேரத்தில் நீங்கள் வெளியே இருப்பது அவர்களின் துரதிருஷ்டம்.மேலும் அது காலத்தின் கட்டாயம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள்
       எது எப்படியோ அவர்களை நீங்கள் ஏதோவொரு வகையில் நன்றாக பார்த்து கொள்ளத்தான் வேண்டும். நன்றாக பார்த்து கொள்வது என்பது பணத்தை நீங்கள் வெளிநாட்டில் இருந்து அனுப்புவது என்று நீங்கள் புரிந்து கொண்டால் அது நிச்சயமாக தவறு.ஏனெனில் வாழ்க்கை என்பது நம் அனைவருக்குமே பணம் என்பது ஒரு பகுதி தான். அதுவே வாழ்க்கை ஆகிவிடாது.அதற்கும் மேல் ஒரு வாழ்க்கை உள்ளது. அதை நாம் அனைவரும் புரிந்து வாழ முற்பட வேண்டும்.
        முதியவர்கள் என்பவர்கள் குழந்தை போன்றவர்கள். அவர்களை நீங்கள் உங்கள் குழந்தை போல பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் எப்படி விளையாடுகிறீர்களோ எப்படி உரையாடுகிறீர்களோ அப்படி தான் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் உரையாட வேண்டும்.
     ஏன் அவர்களுக்கு தான் வயதாகி விட்டதல்லவா.அவர்கள் ஏன் புரிந்து கொள்ளக்கூடாது என்று எதிர்கேள்வி கேட்கக்கூடாது.நீங்கள் அந்த நிலைக்கு வரும் போதுதான் தெரியும் அவர்கள் பட்ட துன்பம் என்ன என்பது.
     உங்கள் வீட்டில் அவர்கள் உழைத்து ஓய்ந்த ஒரு நல்ல மனிதராக பாருங்கள். மேலும் அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பது  நமக்கு மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் குடும்பத்தில் மிகவும் திருப்தியாக மனநிறைவோடு வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முதுமையில் அவர்களை எவ்வாறு கவனித்து கொண்டீர்கள் என்பதைப் பொறுத்தது.
        உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் போதே அவர்கள் மனநிறைவோடு தமது வாழ்க்கை பயணத்தை முடிப்பார்கள். அவர்களை தயவுசெய்து உங்கள் வீட்டில் ஒரு வேலையாளைப்போல நடத்தாதீர்கள்.
      மேலும் அவர்களிடம் மிகவும் மென்மையாக பேசுங்கள். உங்களிடம் ஒருவர் மிகவும் வேகமாக குரலை உயர்த்தி பேசினால் நீங்கள் அவர்களிடம் கோபித்து கொள்ள மாட்டீர்களா.பிறகு ஏன் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் அவ்வாறு பேசுகிறீர்கள். அவர்கள் ஒன்றும் ஜடம் அல்லவே.அவர்களுக்கும் உணர்வுகள் உங்களைவிட அதிகமாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் வயது காரணமாக அவர்கள் மனோவலிமையை இழந்தவர்கள்.
    நீங்கள் எந்த ரூபத்திலும் அவர்களை காயப்படுத்தாதீர்கள்.அந்த காயம் கண்டிப்பாக உங்களுக்கு ஏதோவொரு ரூபத்தில் திரும்பிவரும்.அதனால் நீங்கள் அவர்களிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
        உங்களால் என்ன  நல்லது செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நல்லது செய்யுங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள்.உறவுகளாக இருந்தால் அவர்களை சென்று பார்த்து பேசிவிட்டு ஆசீர்வாதம் வாங்கி வாருங்கள். அவர்களுடன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த கடந்த கால மலரும் நினைவுகளை அவர்களிடம் கேட்டு ரசித்து அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவு செய்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.
     நன்றாக கவனியுங்கள் அன்பர்களே.உங்களை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.நீங்கள் எப்போது வருங்கால முதியவர்கள் ஆவீர்கள் என காத்து இருக்கிறார்கள். அவர்களின் மனதில் நல்ல விதைகளை தூவி நல்ல விசயங்களை செய்ய ஊக்குவியுங்கள்.
     நீங்கள் இன்று செய்யும் ஒரு நல்ல விசயங்கள் நாளைய சமுதாயத்தை நல்ல முறையில் வழிநடத்தட்டும்.
நல்ல சமுதாயத்தை உருவாக்கி நாமும் ஆனந்தமாக வாழ்ந்து நம்மை சார்ந்த சமுதாயத்தையும் வழிநடத்தி ஆனந்தமாக வாழ வழிவகை செய்வோம்.வாழ்த்துக்கள் அன்பர்களே.    

சனி, 4 ஆகஸ்ட், 2018

கவனச் சிதறல்கள்

அன்பர்களே வணக்கம்.
         தற்போது நாம் பார்க்க இருப்பது கவன சிதறல்கள். ஆமாம் .நாம் மிகவும் சரியான வேலையை தேர்ந்தெடுத்து சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்போம்.ஆனால் நமது வளர்ச்சியை பிடிக்காமல் சில சமயங்களில் சில இடையூறுகளை காலமே ஏற்படுத்தி விடும். ஏன் காலம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா.ஆமாம். நீங்கள் எந்த தடையையும் பொறுமையாக எதிர்கொள்கிறீர்களா என்று எப்படி மற்றவர்கள் அறிய முடியும் என்று தான்.
     இன்னொரு விசயம் நீங்கள் உங்கள் தரத்தை நிரூபிக்க காலத்தால் நடத்தப்படும் நாடகம் என்று எடுத்து கொண்டு முன்னேற வேண்டும். ஆனால் இதில் தான் ஒரு சூட்சமம் உள்ளது. அது என்னவெனில் காலம் நடத்தும் நாடகத்தில் கண்டிப்பாக நாம் மாட்டியே தீருவோம். மிகவும் புத்திசாலிகளே இதில் இருந்து தப்பிக்க முடியும். அவர்கள் கவன சிதறல்களை மிக நேர்த்தியாக கையாண்டு அவர்கள் எடுத்த காரியத்தை முடிப்பார்கள்.
           நாம் நமது கொள்கையில் திடமாகவும் ஆர்வமாகவும் இருந்தால் எந்த கவன சிதறல்களும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. ஏனெனில் நமக்கு பிடிக்காத வேலையை செய்ய ஆரம்பித்தால்தான் நமது கவனம் சிதறும். அதனால் உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய ஆரம்பியுங்கள்.எந்த வேலையும் விரும்பாத மனிதன் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அவனை இந்த பூமி சுமப்பதே வீண்.
           மற்றொரு விசயம் நாம் செய்யும் வேலைகளுக்கிடையே மற்றவர்கள் வந்து நமது கவனத்தை திசைதிருப்பக்கூடும்.அப்போது தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் கண்டிப்புடனும் இருக்க வேண்டும். ஏனெனில் காலத்தை நமது சாதுர்யத்தால் கூட சமாளித்து விடலாம். ஆனால் மனிதர்களை சமாளிப்பதற்குள் நமக்கு மண்டை காய்ந்து விடும். அதனால் இவர்களை நாம் நேர்த்தியாக கையாண்டு நமது காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். நமது கொள்கையை நமது வேலைகளை வெற்றி கொள்ள வைப்பதே தற்போது நமது வேலை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
           நாம் ஒரு விசயத்தை சாதிப்பதற்குள் ஆயிரத்தெட்டு கவனசிதறல்கள் வந்து வந்து போகும். அந்த கவனசிதறல்கள் எனும் மாயை சமாளிக்க சாதூர்யமாக சாட்டையை சுழற்றுபவனே இந்த பூமியில் நிலையான புகழோடு நிற்கிறான். அந்த மாயவலையில் விழுந்தவன் தெளிவடைவதற்குள் காலம் பாதி போய் விடும்.
      பெரிய பெரிய சாதனையாளர்கள் சரித்திரத்தை கூர்ந்து படித்து பாருங்கள். அப்போது அவர்கள் எப்படி கவனசிதறல்களை சமாளித்தார்கள் என்று ஒரு சிறு குறிப்பாவது இல்லாமல் இருக்காது.
          மகாத்மா காந்தி சுயசரிதை படித்து பாருங்கள். உங்களுக்கு கவனசிதறலை எப்படி சமாளிப்பது என்று புரியும். மேலும் நாம் மிகவும் கடுமையாக உழைக்கிறோம் என்கிற போர்வையில் சின்ன சின்ன சந்தோஷத்தையும் இழந்து விடக்கூடாது. ஏனெனில் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டது.அதன் எல்லா பக்கத்திலும் குறைந்த பட்சம் காலாவது ஊன்றிவிட வேண்டும்.பிறகு எதையோ இழந்து விட்டதாக கவலைக்கொள்ளக்கூடாது.
      என்ன நேயர்களே நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் உங்கள் காரியத்தை கவனசிதறல்கள் எனும் மாயை உடைத்து வெல்ல துணிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் 🤝👐🙏.

ரசனைகள்

அன்பர்களே வணக்கம்.
           இப்போது நாம் பார்க்க இருப்பது ரசனை.என்ன நேயர்களே நீங்கள் தயார் தானே உங்களின் ரசனைகளை பகிர்ந்து கொள்ள. ஆனால் உங்களுக்கு ஒரு நிபந்தனை. நீங்கள் உங்கள் தரமான அடுத்தவர்களும் அதை கேட்டு ரசிக்க வேண்டும். இந்த ஒரு நிபந்தனை ஏற்றுக்கொள்ள தயார் என்றால் உங்கள் ரசனைகளை இங்கே பகிருங்கள் நேயர்களே.
          நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைகள் இருக்கும். சிலபேர் ரசனைகள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.சிலபேர் ரசனைகள் நமக்கு கோபத்தை ஏற்படுத்தும்.இன்னும் சில பேர் ரசனைகள் நமக்கு வேடிக்கை காட்டி செல்லும். சிலபேர் ரசனைகள் நமக்கு பேரதிர்ச்சி கொடுக்கும்.இப்படி ரசனைகள் பலவிதம்.மனிதர்கள் எத்தனை விதமோ அத்தனை விதம் ரசனைகள் என்று சொன்னால் மிகையில்லை.
      சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இப்போது சமீபத்தில் நான் கண்ட காட்சி எனக்கு மிகவும் மனவேதனையும் கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விட்டது.இந்த மாதிரி ரசனைகள் அதுவும் சிறுவர்களிடையே எப்படி தோன்றுகிறது என்று எனக்கு ஆச்சரியம் கலந்த பயத்தை தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை.
        அது என்ன என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழாமல் இல்லை. அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு தான் இந்த ரசனை பதிவு. கேளுங்கள்.சில சிறுவர்கள் ஒரு நாயின் முதுகில் அவர்கள் புத்தக பையை மாட்டி அதற்கு உடையையும் போட்டு அவர்கள் சுமக்க வேண்டிய உணவு பை தண்ணீர் பாட்டில் என்று சகலமும் அதன்  மேல் மாட்டி அது கதற கதற ஆளுக்கொருப்பக்கம் பிடித்துக்கொண்டு இழுத்து செல்கிறார்கள் தெருவில். அதுவும் சும்மா இல்லை. அதை அடித்துக்கொண்டே.இது எவ்வளவு பெரிய பாவசெயல்.அந்த ஜீவன் ஏன் என்ன பாவம் செய்தது.இது யாருடைய குற்றம் என்று கொஞ்சம் சொல்லுங்கள் நேயர்களே. நாம் அந்த சிறுவர்களுக்கு ஜீவகாருண்யம் பற்றி சொல்லி கொடுக்காததே காரணம். அப்படி தானே.ஏன் வீட்டில் இதை பற்றி எல்லாம் சொல்லி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று எனக்கு புரியாத புதிராக உள்ளது.
        தரமான விசயங்களை பேசி சிறுவர்களை வழிநடத்த மறந்த நாம் தான் முதல் குற்றவாளி. மேலும் அப்படி செய்ததை படம் பிடித்து சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு மற்றவர்களிடம் ஆயிரமாக பரவவிடுவது சமுதாய குற்றம் என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைத்து இனி அதுபோல காரியத்தை செய்தால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று சொல்ல வேண்டும்.
        நாம் குடும்பத்தில் கூட தரம் தாழ்ந்த விசயங்களை பேசி ரசிக்க கூடாது. ஆயிரம் ஆயிரம் ரசனைகளை இயற்கை அன்னை நமக்கு இந்த பூமியில் கொட்டி கொடுத்திருக்க நாம் அதை மெல்ல மெல்ல அழித்து விட்டதால் வந்த வினை இது.விஞ்ஞான வளர்ச்சி எப்படி வேண்டும் என்றாலும் இருந்தாலும் நாம் அந்த விஞ்ஞான வளர்ச்சியை சரியாக பயன்படுத்தாவிட்டால் நாம் கண்டிப்பாக நாகரிக கோமாளிகள். விஞ்ஞான கோமாளிகள். இப்படி சொல்வதை தவிர வேறுவழியில்லை.
           பெண்களை கேவலமாக படம் எடுத்து ரசிப்பது.இதெல்லாம் நல்ல ரசனையா?.சொல்லுங்கள் நீங்களே.இந்த ரசனைகள் மிகவும் தரம்தாழ்ந்த ரசனை இல்லாமல் வேறு என்ன?தயைகூர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய நாமே மிகவும் கேவலமான காரியங்களில் ஈடுபட்டால் நமது வருங்கால சந்ததி எவ்வாறு நம்மை எடைப்போடும்.
    கையில் மிக எளிமையாக விஞ்ஞானம் இருக்கிறது என்றால் அதை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி உங்கள் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்.உங்கள் மோசமான ரசனைகளை மாற்றி நல்ல விதமாக உங்கள் எண்ணத்தை மேம்படுத்தி நல்ல ஆக்கபூர்வமான ரசனைகளை பதிவிடுங்கள். நீங்கள் ரசித்த விசயத்தை நான்கு பேர்கள் முகம் சுளிக்காமல் கேட்கும் படி இருக்க வேண்டும். இதை நீங்கள் உங்கள் கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.
      நல்ல ரசனைகளுக்கும் பங்கு உண்டு. நல்ல சமுதாயத்தை உருவாக்க நல்ல ரசனைகளுக்கும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்ன நேயர்களே நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு சின்ன பங்களிப்பு செய்தால் கூட போதும். உங்கள் அருகில் உள்ள சிறுவர்களிடம் நல்ல விதைகளை விதைத்து நாளைய நல்ல தலைமுறைகளை உருவாக்கலாமே.
என்ன உங்களுக்கு வேறுவேலையே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நாம் சமுதாய பங்களிப்பு செய்யாமல் வாழ்ந்து விட்டு சமுதாயத்தை திட்டுவதால் ஒரு பயனும் இல்லை என்று உணர்ந்து இதை சொல்கிறேன். நீங்கள் கண்டிப்பாக உங்கள் சமுதாய பங்களிப்பை அளித்து நல்ல நாளைய தலைமுறையை உருவாக்குவதில் ஆனந்தம் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
   சரி நேயர்களே மீண்டும் சந்திப்போம் ஒரு ஆரோக்கியமான தலைப்பில்.அதேவரை ....🖐️🙏

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...