ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜூன், 2023

நெட்டையை நம்பினாலும் பழமொழியின் அர்த்தம்

 


அன்பர்களே வணக்கம்.

நெட்டையை நம்பினாலும் குட்டையை நம்பக்கூடாது என்ற பழமொழி நம் அனைவருக்கும் தெரிந்ததே.அந்த பழமொழி எதனால் வந்தது என்று தெரியுமா?சிலபேருக்கு தெரியும். பலபேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.தெரியாதவர்களுக்குதான் இந்த பதிவு.

ஒரு முறை விஷ்ணு பலி சக்கரவர்த்தியிடம் தானம் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்து வந்தார். வாமனன் என்றால் குட்டையானவன் என்று அர்த்தம். 

பலி சக்கரவர்த்தி யாகம் செய்துக்கொண்டு இருக்கிறார்.பகவான் விஷ்ணு அந்தணராக வைடம் பூண்டு யாக சாலைக்கு தானம் கேட்க வருகிறார். அப்போது பலிசக்கரவர்த்தியிடம் தானமாக மூன்றடி மண் வேண்டும். அதுவும் தனது கால்களால் அளந்து வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பலியோ இந்த சிறிய பாதத்தால் எவ்வளவு தானம் பெறமுடியும். நான் உங்களுக்காக ஒரு பரந்த நிலப்பரப்பையே தானமாக தரமுடியும் என்று விஷ்ணுவிடம் சொல்கிறார். இதை கவனித்த குலகுரு சுக்ராராச்சாரியார் தன் ஞானதிருஷ்டியில் வந்தது யார் என்று உணர்ந்து கொண்டார்.உடனே பலிசக்கரவர்த்தியிடம் சொல்கிறார் வந்தது சாமானிய ஆள் இல்லை. நீ அவர் கால்களால் அளந்து தானம் கொடுக்காதே.அவர் மகாவிஷ்ணுவேதான்.உன்னிடம் ஏதோ சூழ்ச்சி செய்ய வந்திருக்கிறார்.நீயோ அரக்ககுல அரசன். அதனால் தேவர்கள் தான் அவரை அனுப்பி இருப்பார்கள் என்று எவ்வளவோ எடுத்து சொல்கிறார்.

   ஆனால் பலியோ தானதர்மத்தில் ஈடுபாடு உள்ளவன். வாக்கு தவறாதவன்.அதனால் வந்தவர் விஷ்ணுவாக இருந்தாலும் கவலை இல்லை. நான் அவர் கேட்டமுறையிலேயே தானம் அளிப்பேன் என்கிறான்.

சுக்ராச்சாரியார் என்ன செய்வது என்று தெரியாமல் வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தில் புகுந்து கொள்கிறார்.

ஏனெனில் தானம் செய்வதற்கு முன்னால் நீர் தாரை வார்க்க வேண்டும். பலி கமண்டல நீரை ஊற்றும் போது நீர் வரவில்லை. என்ன செய்வது என்று பலிக்கும் புரியவில்லை. இதை மகாவிஷ்ணு உணர்ந்து தனது கைகளால் தர்ப்பை எடுத்து கமண்டலத்தின் உள்ளே விட்டு ஒரு குத்து குத்துகிறார்.சுக்ராசாரியாரின் ஒற்றை கண்ணில் அது குத்தியது.வலி தாங்காமல் வண்டு உருவில் இருந்த சுக்ராச்சாரியார் வெளியே வருகிறார்.

 இதனால் தான் சுக்ராராச்சாரியாரியாருக்கு ஒரு கண் தான் தெரியும்.

நீர் கமண்டலத்திலிருந்து தடையின்றி வருகிறது. பெருமாளும் மகிழ்ந்து தனது உருவத்தை பெரிதாக்கி கொண்டே சென்று மூன்றடி மண் அளந்தார்.இரண்டு அடியால் பூமி வானம் இரண்டையும் முழுவதும் அளந்து மூன்றாவது அடி எங்கே என்று கேட்கிறார். பலிசக்ரவர்த்தியும் பணிவுடன் தனது தலையை காண்பிக்கிறார்.அதில் தனது திருவடி வைத்து பலியை ஆட்கொண்டு ஒரு வரம் தருகிறார். உனது பரம்பரையில் வரும் எவரையும் நான் கொல்ல மாட்டேன் என்று சொல்லி பாதாள உலகத்தை பலிக்கு கொடுத்து ஆட்சி செய்ய சொல்கிறார்.

       இந்த வாமன அவதாரத்தின் மூலமே நெட்டையை நம்பினாலும் குட்டையை நம்பக்கூடாது என்ற பழமொழி வந்தது. இப்போது பழமொழியின் அர்த்தம் புரிந்ததா ஆன்மீக அன்பர்களே?💐💐💐💐💐

இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...