எல்லாவித பயணத்திலும்
ஏதோவொரு சலிப்பே
மிஞ்சி விடுகிறது!
பேச்சற்ற தனிமையில்
நான் பேரானந்த ஊற்றை உணர்ந்துக் கொண்டு
இருக்கும் போது
அந்த சிறு இலை
எனது மடியில் சத்தமின்றி
சயனிக்கிறது!
ஏதோவொன்றிற்கு நான்
அடைக்கலமாகிறேன்
இங்கே என் அனுமதி கேட்டு
எதுவும் நடக்கவில்லை
நான் அந்த இலையின் துயிலை ரசித்து
இந்த இரவை கடக்கிறேன்...
இங்கே சம்சாரிகள் போல
நடிப்பதை விட
உண்மையில் ஒரு தூய்மையான துறவறம் தேவை இங்கே
எனக்கு என்றுணரும் தருணத்தில் தான்
நான் நானாக இந்த வாழ்வெனும் நதியில்
நிச்சலனமாக பயணிக்கிறேன்...
இங்கே எந்தன் தேவை ஒரு
ஆழ்ந்த அமைதி
இதை உணரும் தருணத்தை
நான் இத்தனை நாள்
தவற விட்டு பயணித்து இருப்பதை பார்த்து
என்னை நானே வியக்கிறேன்...
இரவெனும் நதியின் கரையோரம் நான் இருக்கும் இந்த நிலையில்
அந்த இலையும் நானும்
மௌனமாக அந்த பேரின்ப நிலையை ஒரு புன்னகையோடு ரசிக்கிறோம்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக