ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 17 ஜனவரி, 2022

பேரமைதி

 எந்தவித சலனத்தையும்

சுமக்காமல் 

அந்த சாலையில் பயணிக்கிறேன்!

இந்த பிரபஞ்சம்

தன்னுள் அமைதியை

மட்டுமே நிரப்பி

சலனமில்லாமல்

பயணிப்பதால் தான்

சண்டைகளை பற்றி

அதிகமாக கவலைக் கொள்ளாமல்

உற்சாகமாக இளமையோடு

வெகுதூரம் பயணிக்க

முடிகிறது போலும்

இந்த ரகசியத்தை

உணர்ந்தேன்!

நானும் பேரமைதியில்

புதைத்துக் கொண்டேன்!

இங்கே சண்டைகளை பற்றி

பேசுவதை போல

பேரமைதியை எவரும்

கண்டுக் கொள்ளாமல்

இருப்பது 

எனக்கு வசதியாக போயிற்று!

#இளையவேணிகிருஷ்ணா.


சனி, 8 ஜனவரி, 2022

பயணத்தில் ஓர் சந்திப்பு(3)

 அன்றைய மாலைப் பொழுதில் நான் தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை சுவைத்தபடியே வேடிக்கை பார்க்கிறேன் மாடியில் இருந்து சாலையை.. இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் என்று சென்று கொண்டே தான் இருக்கிறது அதிவிரைவாக.. அந்த வாகனத்தில் உள்ளே பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை.. நான் உற்று பார்த்தேன்.. ஒருவர் காரில் இருந்து இறங்கி எனது 🏡 வீட்டில் கேட்டை திறந்து உள்ளே நுழைகிறார்.அவர் யாராக இருக்கும் என்று நினைத்தபடியே கீழே வந்து கதவை திறந்தேன் .. அவர் கை காலிங் பெல்லை தொட எத்தனித்து இருக்கும் போதே நான் கதவை திறந்து விட்டேன்..


அவர் என்னை பார்க்க நானோ அவரை ஞாபகப்படுத்தி பார்க்க முயன்று தோற்றுவிடுகிறேன்.ஆனால் அவர் என்னை பார்த்தவுடன் கட்டியணைத்து கொண்டு என்னடா நன்றாக இருக்கிறாயா என்றார்.. யார் இவர் என்னை உரிமையாக வாடா போடா என்று பேசுகிறார் என்று யோசிக்கும் போதே ஏ மதி என்னை தெரியவில்லை.. நான் உன்னோட பள்ளி 🏫 தோழன் கண்ணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.. எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வந்து விட்டது.அட என்னடா உடல் சற்று பெருத்து முகசாயலே மாறிவிட்டதே என்றேன்.. ஆனால் நீ இன்னும் அப்படியே தான் உள்ளாய் மதி என்று சிரித்தபடியே கண்களால் யாரையோ தேடினான்..


நான் அவனிடம் யாரை தேடுகிறாய் கண்ணா என்றேன் ஆச்சரியம் கலந்த குரலில்.உனது மனைவி குழந்தைகள் தான்.. அவர்கள் எங்கே.. வெளியே சென்று இருக்கிறார்களா என்றான்..


எனக்கு சிரிப்பு வந்து விட்டது.நான் தான் சத்தம் எப்படி சிரிப்பேன் என்று உங்களுக்கு தெரியுமே.. ஆம் அந்த வீடே அதிரும் அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தேன்.. அவள் ஒன்றும் புரியாமல் விழித்தான்..

ஏன் மதி சிரிக்கிறாய்.நான் ஏதும் தவறாக கேட்டு விடவில்லையே.. என்றான் பரிதாபமாக.


நீ தவறாக ஒன்றும் கேட்கவில்லை.. எனக்கு மனைவி பிள்ளைகள் என்று ஒன்று இருந்தால் தானே இங்கே இருப்பார்கள் என்றேன் சாவுகாசமாக..


என்ன உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா.. என்றான் ஆச்சரியமாக..


ஆம் கண்ணா ஆகவில்லை என்று சொல்வதை விட எனக்கு விருப்பம் இல்லை என்று தான் சொல்வேன்.. என்றேன்.

ஏன்டா இப்படி என்றான்..

எனக்கு விருப்பம் இல்லை கண்ணா.அவ்வளவுதான்.வேறொன்றும் இல்லை என்றேன்.

அதுதான் ஏன் என்றேன்..?''என்றான் கண்ணன் விடாமல்..

திருமண சடங்குகள் எல்லாம் எனது வாழ்விற்கு ஒத்து வராது.வாழ்க்கைதுணையை அனுசரித்து வாழ்வது என்பது எனக்கு சரியாக வருமா என்று யோசித்து விட்டு விட்டேன் .. ஏன் இந்த உலகில் அனைவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் தான் இந்த பூமி சுமக்குமா நம்மை என்றேன்.

இன்னும் உனக்கு அந்த கேலி பேச்சு மட்டும் போகவில்லை.. என்றான் சிரித்தபடியே..


சரி உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்றேன்.

ஓ.. எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்.ஒருவன் மருத்துவம் படித்து கொண்டு இருக்கிறான். இன்னொருவன் வரலாறு படிக்கிறான் சென்னையில் பிரபலமான கல்லூரியில் ... நானும் என் மனைவியும் இங்கே சென்னையில் தான் தங்கி இருக்கிறோம். நான் ஓர்  வங்கி ஊழியர்.எனது மனைவி கல்லூரி பேராசிரியை.என்றான்..


வாழ்க்கை எவ்வாறு போகிறது என்றேன்..

நன்றாக போகிறது மதி.. அதாவது ஓர் அந்தஸ்தோடு என்றான்.. உனக்கு எவ்வாறு போகிறது..நீ என்ன தொழில் செய்கிறாய் என்றான்.


நான் ஓர் சுற்றுலா கைடு.. எனக்கு வாழ்க்கை சிறப்பாக போகிறது கண்ணா.. இந்த தேசத்தின் பெரும்பாலான எல்லைகளுக்கும் நான் ஓர் சுதந்திர பறவையாக சுற்றி திரிந்து இருக்கிறேன்.. என்றேன்.

அப்போ நீ உலகம் சுற்றும் வாலிபன் என்று சொல் என்றான் சிரித்தபடியே..


"அதுசரி என் விலாசம் உனக்கு எவ்வாறு தெரியும்..நீ இங்கே வந்ததில் மகிழ்ச்சி..கண்ணா.."

“உன் விலாசம் நதி தான் கொடுத்தாள்"..மதி.

நதியா.. என்றேன் எனது துக்கத்தை வெளிக்காட்டாமல்..


ஆமாம்.. அவள் தான் கொடுத்தாள்.. என்றான்..

"அவள் உன்னை நேசித்தாளா மதி "என்றான்..

இல்லை என்று உதடு சொல்ல துடிக்கும் போது ஆம் என்று தலையசைத்து எனது நேசத்தை சொல்லாமல் சொல்லி விட்டது..

பிறகு ஏன் நீ அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை.. என்றேன் ஆச்சரியமாக.

ஏனெனில் அவளும் என்னை போன்றே சுதந்திரமாக இருக்க நினைத்தாள் என்றேன்..

அது ஒன்றும் தவறில்லையே..நீ அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கலாமே.. என்றான் கண்ணன்..

இல்லை கண்ணா.. அவள் சுயத்தை நான் எரிக்க விரும்பவில்லை என்றேன்..

என்ன சொல்கிறாய்.. அவள் சுயத்தை எவ்வாறு இழப்பாள் உன்னை திருமணம் செய்து கொண்டால்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்றான்..


திருமண பந்தம் என்பது எப்போதும் ஒருவித கட்டுப்பாடு சடங்கு சம்பிரதாயம் நிறைந்தது.. அந்த பந்தம் எங்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுமோ.. எங்கள் சுயத்தை இழக்க வைத்து விடுமோ என்று பயம்.. மேலும் இருவருமே ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து ருசித்து வாழ நினைப்பவர்கள்.. இதெல்லாம் யதார்த்தத்திற்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை.. அதனால் தான் என்றேன்...

நீ சொல்வது உண்மை தான்.மதி..அந்த பந்தத்தின் புனிதம் காக்க நாம் நமது சுயத்தை நாமே எரித்து விட்டு தான் அதில் நுழைய வேண்டும்.. நான் இப்போது வாழ்வது கூட ஓர் பொய்யான வாழ்க்கை தான்.. ஆனால் சமுதாயம் எங்களை கொண்டாடுகிறது இல்லையா.. அதில் ஓர் பெருமை இருக்கிறது.அதனால் அந்த பிம்மத்தின் நிழலில் சுகமாக இருப்பதாக நினைக்கிறோம் நாங்கள்.. ஆனால் துல்லியமாக யோசித்து பார்க்கும் போது அது ஓர் போலியான வாழ்க்கை என்று தோன்றியது.. என்ன செய்ய இயலும்..நீயே சொல்.. இப்படியே இதற்கு அடிமையாகி விட்டோம் நாங்கள்.. என்றான் கண்ணன்..

"அந்த மாதிரி போலியான வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து விலகி விட்டோம்..கண்ணா.." இருவரும் அவரவர் பாதையில் மிகவும் ஆனந்தமாக பயணிக்கிறோம்.. எங்கள் காதலை மட்டுமே துணையாக கொண்டு.. இதில் எங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை..ஏமாற்றங்கள் இல்லை.. நாங்கள் எங்கள் வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக வாழ்கிறோம் என்று சொல்லி கொண்டே சமையலறையை நோக்கி நடந்தேன்...ஒரு எலுமிச்சை இஞ்சி கலந்த தேநீர் கலந்து எடுத்து வந்து அவன் அருகே அமர்ந்து அவனிடம் ஒன்று நீட்டினேன்..அதை மிகவும் நிதானமாக ரசித்து பருகினான்..

பிறகு விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கினான்.. உங்களுக்குள் இவ்வளவு புரிதல் இருக்கும் போது ஏன் விலகி இருக்க வேண்டும் என்றான் கண்ணன்..

அந்த புரிதல் இருப்பதால் தான் விலகி இருக்கிறோம் என்றேன்..

என்ன புரியவில்லை.. என்றான்..

வாழ்க்கை என்பது எப்போதும் ஆனந்தமயமானது.. ஒருவரையொருவர் எப்போதும் நேசித்து வாழலாம் தவறில்லை.. ஆனால் நேசித்தல் திகட்ட திகட்ட கிடைக்கும் போது வாழ்வில் ஓர் வெறுப்பு வந்து விடும்..நேசித்தலில் ஓர் அலுப்பு வந்து விட்டால் வாழ்வின் ஒவ்வொரு நொடிகளும் நொறுங்கி தூள் தூளாக மாறி நமது வாழ்க்கையில் காயம் ஏற்படுத்தி வலியை கொடுத்து நிம்மதியை கெடுக்கும்.


அந்த மாதிரி ஓர் வாழ்க்கை நரகத்தில் வாழ்வதற்கு சமம்.. அதனால் எங்கள் நேசம் எப்போதும் அருகில் இருக்கும்.. உடல் அளவில் தூரமாக இருந்தாலும்.. நாங்கள் எங்கள் காதலை பலிக் கொடுக்க நினைக்கவில்லை.. எங்கள் வாழ்க்கை எனும் புத்தகத்தில் எப்போதும் காதல் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.அதை புரட்டி புரட்டி எத்தனை தடவை படித்தாலும் ஆனந்தமாக உணர வேண்டும்.. என்றேன்.‌

இது இப்படியே போக சாத்தியமா என்றான் யோசித்தவாறே..


அவள் என் மேல் உள்ள நேசத்தை துறக்காதவரை.. நான் அவள் மேல் கொண்ட நேசத்தை துறக்காத வரை.. என்றேன்..

வாழ்க்கை என்பது பல சுவைகள் நிறைந்தது.. அதில் திருமண சுவை மற்றும் உடல் ரீதியான காமசுவையை மட்டும் விட்டு விட்டு வாழ நினைக்கிறோம் நாங்கள்.. அவ்வளவு தான்..

மேலும் எங்களை வாழ்க்கையை கூட கட்டுப்படுத்த விடவில்லை.

நகர்ந்து செல்லும் ஒவ்வொரு வினாடியிலும்  நாங்கள் ஆனந்தமாக பயணிக்கவே நினைக்கிறோம்.. இதில் எந்தவித பந்தத்திலும் இணையாமல் இருக்கும் வரை தான் சாத்தியம்.. நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.. எங்கள் காதலை நகர்ந்து செல்லும் வினாடிகள் சுகமாக சுமந்து செல்கிறது.. நாங்கள் இனிமையாக பயணிக்கிறோம் ஓர் வாழ்க்கை பயணியாய் அவ்வளவு தான்.. என்றேன்..

அவன் அந்த தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான்.. தேநீர் மிகவும் சுவையாக இருந்தது என்று பாராட்டியபடி..

உனது பாராட்டுதலுக்கு நன்றி என்று புன்னகைத்தபடி ஏன் அதற்குள் கிளம்பி விட துடிக்கிறாய் என்றேன்..

இல்லை மதி இன்னொரு நாள் நான் இங்கே வருகிறேன்.. உன்னை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி..என்று சொல்லி விட்டு நதியிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா என்றான்.சிரித்தபடி.


அவள் காதலை பத்திரமாக வைத்திருக்க சொல்லுங்கள்.. நகரும் நொடிகள் களவாடிவிட போகிறது என்றேன் சிரித்தபடி..

அவனும் சிரித்து கொண்டே உனது கவித்துவமான பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது .. ஆனால் என்ன செய்ய.. உன்னை போல் வாழ எனக்கு கொடுப்பினை இல்லை..எனது கடமைகள் வா வா என அழைக்கிறது.. என்றான் சிரித்தபடியே..

நானும் உனது பொழுதுகளை கடமைகள் மட்டுமே உரிமை கொண்டாடி களவாடிக் கொண்டு உள்ளதால் தான் உன்னால் வாழ்க்கை ஆனந்தமாக வாழ இயலவில்லை என்றேன்.. அவனும் சிரித்தபடியே காரில் ஏறி கையசைத்து பறந்தான்.. அவன் கடமைகள் துரத்த..


நானோ வேகமாக போகும் அவன் காரை வேடிக்கை பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்..காற்றினிலே வரும் கீதம்..என்று எங்கோ எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா குரல் எனது செவிகளுக்கு இனிமை சேர்த்தது..

#இளையவேணிகிருஷ்ணா.



இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...