ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 30 நவம்பர், 2023

காலமும் நானும்...

 


காலமும் நானும்:-

நான் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து விட்டு என்னருகே வந்த காலம் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்றது.. நான் அதனிடம் காரணம் கூட சொல்ல முடியவில்லை.. என் சிரிப்பை அடக்கி..காலமோ பொறுமையிழந்து முதலில் சிரிக்காமல் சொல் என்றது கொஞ்சம் செல்லமாக கோபித்து..

நான் அதனிடம் சாலையில் அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு செல்லும் ஒரு இளைஞனை காட்டி அவன் தான் காரணம் என்றேன்.. அப்படி என்ன தான் செய்தான் அவன் நீ இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு என்றது காலம்..

அவன் அலைபேசியில் அவன் காதலியின் பெயரை குறிப்பிட்டு நீ ஒரு அமிர்த கடல் என்றான்.. எதிர் முனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.. அவன் மீண்டும் மீண்டும் காதல் கவிதைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறான் அவளை சமாதானம் செய்ய என்றேன்..

இதற்கு போய் இப்படி ஏன் நீ சிரிக்கிறாய்.. அவன் காதலி அவன் ஏதேதோ சொல்லி விட்டு போகிறான்.. அதில் உனக்கு என்ன சிரிப்பு என்றது..

எனக்கு இப்போது கோபம் வந்து விட்டது காலத்தின் மேல்..நீ எவ்வளவு பெரிய ஆள்... இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது....

இதை எல்லாம் விட்டு விட்டு காதல் மயக்கத்தில் அமிர்த கடல் அமிர்த ஆறு என்று சொல்லி பிதற்றுகிறானே..பிதற்றுவதில் ஒரு நியாயம் வேண்டாம் என்றேன்..

ஓ அதுவா செய்தி.. அவன் திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படி பிதற்றுகிறானா பார்க்கலாம் என்றது சிரித்துக் கொண்டே..

அதற்காக தான் விழுந்து விழுந்து சிரித்தேன்..

இந்த மோகம் இருக்கிறதே அது மிகவும் மோசமானது என்றேன்..

ஆமாம் ஆமாம்.. எல்லோரும் உன்னை போல தத்துவம் பேசி திரிந்தால் எனக்கு பொழுது போக வேண்டாமா என்றது நகைச்சுவையாக..

அதுவும் சரிதான் என்று சொல்லி விட்டு நான் உள்ளே செல்வதை பார்த்து நான் எதற்காக செல்கிறேன் என்று புரிந்து கொண்டு எனக்கு தற்போது கொஞ்சம் பிளாக் காபி போதும் என்றது காலம்..

கண்டிப்பாக இதோ எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன் சமையலறையை பார்த்து..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 28 நவம்பர், 2023

ஆறுதல்...

 


ஒரு ஆறுதல் தேடி

அலைந்து சோர்வாக

நாற்காலியில் சாய்ந்து

கண் மூடி தளர்வாக

அமரும் போது

என்னையும் அறியாமல்

சிறு தீண்டலில்

அந்த மேசை மீது உள்ள

எழுது கோல் உருண்டோடி

என் கைகளை உராய்ந்து

கீழே விழும் ஓசையில்

நான் 

உயிர்ப்பிக்கப்படுகிறேன் ...

#ஆறுதல்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 28/11/23.

நேரம் முன்னிரவு 7:30.

என் நிலை...

 


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பைத்தியம் பிடித்து விடுகிறது.. உங்களுக்கும் ஏதோவொரு வகையில் பைத்தியம் பிடித்து இருக்கும் நிகழ்வு இருக்கும் தானே அது என்ன என்று நேசமிகுந்த தோழி ஒருவர் கேட்டார்... நிச்சயமாக எனக்கும் அப்படி ஒன்று உள்ளது.. அது நான் எழுதாமல் இருக்கும் போது நிகழ்ந்து விடுகிறது.. ஆனால் அந்த பைத்தியக்காரத்தனம் எழுதி முடித்தவுடன் மறைந்து விடுகிறது எனக்கு.. ஆனால் அதை என்னையும் அறியாமல் வாசிப்பவர்கள் மத்தியில் கடத்தி விடுவது தான் பெரும் தொல்லையாக போய் விடுகிறது..இதை தடுக்க என்ன வழி என்று யோசித்து எனக்கு ஏதேனும் வழி சொல் தோழி என்றேன்.. அந்த தோழி இவ்வளவு எழுதுகிறாய் உனக்கு தெரியாத வழியா எனக்கு தெரிந்து விட போகிறது என்று நழுவி விட்டார்... நான் இறுக பற்று சினிமாவில் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அந்த மன நல ஆலோசனை மருத்துவராக என் நிலை அந்தோ பரிதாபமாக... என் செய்வேன் நான் பாவம்..😌.

#இளையவேணிகிருஷ்ணா.

இது முதன் முறையல்ல எனக்கு...

 


எழுதுவதை தவிர

வேறென்ன தெரியும் என்று 

கேட்கிறார்கள்...

சிந்தாமல் சிதறாமல்

இந்த நொடியை ரசித்து புன்னகைக்க 

தெரியும் என்றேன்...

கேட்டவர்கள் கொஞ்சம்

எனக்கு மனம் பேதலித்து விட்டது போல என்று

சைகையால் சொல்லி செல்கிறார்கள்...

அந்த சைகை மொழியில்

ஆயிரம் ஆயிரம் ரசனைகளை நான் 

கண்டு களித்து கொஞ்சம் மெதுவாக 

நகர்கிறேன்

என் இதழில் புன்னகை 

சிந்தியபடியே...

இங்கே ரசனை என்பது

மனம் பேதலித்து விட்ட மனிதராக 

அடையாளம்

கண்டுக் கொள்ளப்படுவது

எனக்கு இது முதன் முறையல்ல...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 28/11/23.

நேரம் அந்தி மாலையும் இரவும் 

சந்திக்கும் 7:00.மணி..

இருளின் சாயலை நேசிப்பவர்...


எனக்கான நேரத்தில்

நான் இரவை நேசிக்கிறேன்

இருளின் சாயலை

இங்கே எவரும் பெற

விரும்பாத போதும்

நான் அதை நேசித்து கைப்பிடித்து

ஆள்அரவமற்ற அந்த சாலையில் 

பயணிக்கிறேன்..

இருளின் மௌனத்தை

நான் புரிந்துக் கொள்ள

சிறிதும் முயற்சி செய்யவில்லை..

நானும் அதே நிலையில்

இருக்கும் போது

அந்த புரிதல் தேவையற்றது..

ஏன் நீ என் கரம் பிடித்து

பயணிக்கிறாய்

என் மீது கொண்ட அனுதாபமா 

என்றது இருள்...

இல்லை இல்லை

உன் ஆழ்ந்த அமைதியின்

காதலை புரிந்துக் கொண்டு

உன் கரம் பிடித்து

நடக்கிறேன் என்றேன்..

அந்த வெளிச்சமற்ற தனிமையில்

தேகத்தின் மீது துளி மோகம்

இல்லாமல் பயணிக்கும்

நாங்கள் யார் என்று

அங்கே இரவின் நிசப்தத்ததை

தனது குரலால்

தாலாட்டும் இரவு பூச்சிகள்

ஆச்சரியமாக தங்களுக்குள்

பேசிக் கொண்டதை

எதேச்சையாக கேட்டு

நாங்கள் அந்த நெடுஞ்சாலையில் 

பயணிக்கிறோம்..

இன்னும் விடியலுக்கு

நேரம் இருக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவெனும் வெளியில்...

 


இரவெனும் வெளியில்

சத்தம் இல்லாமல் பயணிக்கிறேன்..

இங்கே எதிர்பார்ப்பு இல்லாத

அரவணைப்பை

இரவை தவிர எதுவும்

தர இயலாது..

சல்லி காசு பயன் ஏதும்

என்னிடம் எதிர்பார்க்காமல்

ஒரு அரவணைப்பு

இயற்கையால் கொடுக்கப்பட்டு இருக்கிறது..

இன்றைய நிகழ்வை

மீட்டி பார் என்கிறது

என்னோடு உறவாடும்

இந்த இரவு...

நானோ அதை செல்லமாக

கோபிக்கிறேன்..

போன பொழுதின் நினைவுகளை அப்படியே

விட்டு விடு இரவே...

இங்கே நீ நான் மட்டும்

போதும்..

நமக்கிடையே இன்று நடந்த

நிகழ்வை ஏன் சேர்த்துக் கொண்டு குளிர் காய வேண்டும்?

நாம் நாமாக பயணிப்போம்

சத்தம் போடாதே..

இங்கே எவரும் வந்து விடக் கூடும் உன் குரல் கேட்டு..

நம் தனிமையின் ஆனந்தத்தை விட்டு

விலகி விட அனுமதிக்காதே

உன்னோடு கலந்து விடும்

இந்த நேரத்தின் இனிமையை பெரும் காதலின் 

உணர்வற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்றேன் 

அதை இரவும் ஆமோதித்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 26 நவம்பர், 2023

கடந்து வந்த பாதையை கொஞ்சம் அசைப்போடுகிறேன்...


 முடிய போகும் இந்த ஆங்கில வருடத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் அசைப்போடுகிறேன்... ஒன்றும் புதிதாக செய்யவில்லை... வழக்கம் போல காலண்டரில் உள்ள காகிதங்கள் கிழிப்பட்டு குப்பைக்கு போனது.. நான் மட்டும் குப்பைக்கு போகாமல் தப்பித்து கொண்டே இருக்கிறேன்...

உருண்டோடி போகிறது காலம்... ஆனால் இனி இலட்சியம் என்று ஒன்றும் இல்லாமல் பயணிப்பதே வாழ்க்கை சுகம் கொடுக்கும்.. ஏனெனில் மீதி இருக்கும் காலத்தில் ஒவ்வொரு நொடியும் அது என்னை எப்படி நகர்த்துகிறதோ அப்படியே செல்வதே ஆனந்தம் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

இது வரையும் அப்படி தான் இருந்து இருக்கிறேன்.. ஏதேனும் நான் கடந்த காலத்தில் சாதித்து இருந்தால் அது என் ஆழ் மன தேடலின் வெளிப்பாடாக தான் இருந்திருக்கும்..இனி அப்படி எதுவும் இல்லாமல் காலத்தின் போக்கில் திட்டமிடாமல் புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு நொடியிலும் கலந்து அனுபவிக்க போகின்றேன்... புதுமையான ஒரு பயணத்தின் தொடக்கம்... இன்னும் நெடுந்தூர பயணம் என்றே நினைக்கிறேன்... களைப்படைந்து விடாமல் இறுதி வரை பயணிப்பேனா என்று காலம் கவலைக் கொள்கிறது... அப்படி ஒன்றும் வயதாகவில்லை காலமே என்று காலத்தின் கேள்விக்கு புன்னகையோடு பதில் அளித்து பயணிக்கிறேன்...

பார்க்கலாம்... எத்தனை சுவாரஸ்யம் மற்றும் ரகசியங்கள் எதிர் வரும் ஆங்கில புத்தாண்டில் எனக்கு காத்திருக்கிறது என்று...🎉🌿🎉.

#கரைந்துசென்றகாலங்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நானும் இந்த பேரமைதி கொண்ட பௌர்ணமி நிலவும்..


 பேச்சற்ற அந்த நொடிகளை

சில பேர் சுவாரஸ்யமே 

இல்லாமல் 

கடந்து செல்கிறார்கள்...

அப்படி செய்பவர்களை பார்த்து 

நானும் இந்த பேரமைதி கொண்ட 

பௌர்ணமி நிலவும்

கொஞ்சம் வியந்து தான் 

போகிறோம்...

இந்த சூட்சம அமைதியின் துகள்கள் 

ஓராயிரம் தத்துவங்கள் பேசாமல் 

எனக்குள் கடத்தி செல்வதை

அந்த பௌர்ணமி நிலவும்

இந்த இரவும் வேடிக்கை பார்த்து 

தனக்குள் மௌன சிரிப்பொன்றை 

பரிமாறிக் கொள்வதை தவிர 

அவர்களால்

வேறென்ன செய்ய இயலும்?

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி:26/11/23.

நேரம் #கார்த்திகைபௌர்ணமி

#முன்னிரவு.

இரவின் பெரும் தாகம்...


இரவின் பெரும் தாகம்

இசை ஒன்றை

மீட்டிக் கொண்டு

இருக்கிறது...

அந்த மெல்லிசையில்

என் ஆன்மா பேரொளியாக

உருகி ஆறாக வழிய

அது இறையெனும்

சமுத்திரத்தை தேடி

அலைகிறது...

நான் வழக்கம் போல வெறுமனே வேடிக்கை

பார்க்கும் மனுஷி ஆகிறேன்...

எந்தவித நிகழ்வின் பாதிப்பும் பெரும் தொல்லையாக ...

நான் கருதுவதால் கூட அப்படி இருக்கலாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 24 நவம்பர், 2023

ஜென் நிலை...

 


வாழ்க்கையை

வாழ்ந்துக் கொண்டு

இருக்கிறோம் என்று

நினைப்பது கூட

ஒரு சுமையே...

வாழ்க்கை மிகவும் தெளிவான 

நீரோடையில்

என்னை அப்படியே மிதக்க செய்து 

எங்கே சேர்க்க வேண்டுமோ அங்கே 

சேர்த்து விடுகிறது...

நான் அது சேர்த்த இடத்தில்

இறங்கிய போது ஒரு பேரமைதி 

அங்கே குடிக் கொண்டு இருந்தது...

அது என்னை பயமுறுத்தாத 

பேரமைதி...

ஆம் நான் வாழ்ந்து 

முடித்து விட்டேன்....

அது ஒரு இரைச்சல் இல்லாத 

மென்மையான இசை மூலம்

காலம் எனக்கு உணர்த்தியது...

இது ஒரு அற்புதமான நிகழ்வு...

நீங்களும் முயன்று பாருங்கள்...

வாழ்வின் சூட்சமங்கள்

இங்கே ரொம்ப ஆழமாக 

புதைக்கப்படுவதில்லை...

கடற்கரை அருகே மணற் பாங்கில் 

தோண்டும் போது

கிடைக்கும் நீரின் ஆழமே

அந்த பொக்கிஷம் இங்கே மறைந்து 

உள்ளது...

#ஜென்நிலை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 23 நவம்பர், 2023

எழுத்தாளனும் எழுத்தும்

 


எழுதி சம்பாதிக்கலாம் என்று இங்கே ஒரு டிரெண்ட் தற்போது... இப்படி நிறைய இணைய தளங்கள் தற்போது வருகிறது..நிச்சயமாக அப்படி அழைக்காதீர்கள்...

ஒரு உண்மையான எழுத்தாளன் நிச்சயமாக

அதை விரும்ப மாட்டான்.. ஏனெனில் இங்கே எழுத்தாளனுக்கு பார்க்கும் காட்சிகள் தமது வாழ்வியலில் இருந்து எடுத்த துளிகள் இப்படி அவன் மனம் பாதித்த விசயத்தை எழுதி விட்டு போய் விடுவான்... ஆனால் இப்படி குறிப்பிட்டு இந்த நேரத்தில் இத்தனை மணிக்குள் இத்தனை வார்த்தைகளில் இந்த மாதிரி எழுதுங்கள் என்று நீங்கள் நெருக்கடி கொடுத்தால் அதில் பங்கேற்கும் எழுத்தாளர்கள் எழுத்தில் நிச்சயமாக உயிரோட்டம் இருக்காது.. வெறும் வார்த்தை குவியல்களால் வாசிப்பாளனும் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது..சுருங்க சொல்ல போனால் வெறும் சக்கையாக தான் பெரும்பாலும் அந்த எழுத்து இருக்கும்.. இதில் மிக சொற்பமான விதிவிலக்குகள் இருக்கலாம்...

அதனால் ஒரு சின்ன திருத்தம் அப்படி இணைய தளம் ஆரம்பிப்பவர்களுக்கு...

உயிரோட்டமாக எழுத வாருங்கள்..என்று அழையுங்கள்..

அதுவே சரியாக இருக்கும்..

#எழுத்தாளனும்எழுத்தும்.

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்தின் சுவரின் மீது அமர்ந்துக் கொண்டு...

 


அந்த பற்றற்ற காலத்தின் சுவர் மீது

அமர்ந்துக் கொண்டு

என் துயரங்களுக்கு எல்லாம் காரணம் யார் தெரியுமா 

அந்த நாசமாய் போன காலம் தான் என்று வாய்க்கு வந்தபடி வசைப்பாடி ஆக்ரோஷமாக அழுது அந்த காலத்தின் சுவரிலேயே புரண்டாலும்...

உங்கள் பொல்லாத சுமைகளையும் தாங்கி 

நீங்கள் எங்கேயும் கீழே விழுந்து விடாமல் இருக்க

தாங்கி பிடிக்கும்

அந்த காலத்தை விட

பெரும்தன்மையாளர்கள்

இங்கே ஒருவரையேனும்

கை காட்டி விடுங்கள்...

நான் காலத்தின் பக்கம்

ஆதரவாக இருப்பதில் இருந்து 

விலகி விடுகிறேன்...

#காலம்

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 23/11/23.

நேரம் #அந்தி மாலை

கார்த்திகை மாதம் 7:11.

அந்த நதி ஏன் நகர்கிறது?

 


அந்த நதி

ஏன் நகர்கிறது என்று கேள்வி 

கேட்காதீர்கள் ...

அதன் நகர்வில் 

ஆயிரம் ஆயிரம் விருப்பங்கள் 

சோகங்கள்...

இப்படி எல்லாவற்றையும்

ஒரு பற்றோடு

அணைத்துக் கொண்டு

சாகரத்திலோ.. அல்லது

 கண்ணில் தென்படுகின்ற 

கரைகளிலோ.. அல்லது 

ஏதோவொரு பாறை இடுக்கிலோ... 

இப்படி ஏதோவொன்றில்

பற்றற்று தொலைத்து விடவே 

பயணிக்கிறது...

நீங்களோ சம்சாரம் எனும் பெரும் சாகரத்தில் உங்களோடு பயணிப்பவர்களை மூழ்கடித்து காயத்தை ஏற்படுத்தி மூச்சடக்கி

அவர்கள் பயணத்தை 

நீர்த்து போகவே 

செய்து விடுகிறீர்கள்...

நீங்கள் நதியை பார்த்து பிரமிக்க வேண்டுமே தவிர

அதை பார்த்து ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டு

அதன் கோபத்தை போகிற போக்கில் தூண்டி விடாதீர்கள்...

அதுவே போதுமானதாக இருக்கும் அந்த நதிக்கு...

#நதி

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி:23/11/23.

நேரம் 6:54.

எனது ஞாபகமாக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்...


வாழ்ந்தது சில காலம்

வாழப் போவதும் சில காலம்

இதில் உணர்வுப்பூர்வமான

நிகழ்வுகள் சில காலம்;

தொலைந்த நினைவுகள்

சில காலம்;

தொலைக்க வேண்டிய நினைவுகள்

சில காலம்;

இப்படி பல பல....

சற்றே அமைதியாக

என்னை விட்டு 

கொஞ்சம் தொலைவிலே

இருங்கள்;

நான் எனது மொத்த வாழ்வையும்

இந்த புகைத்தல் எனும்

வஸ்துவின் துணைக் கொண்டு

வேடிக்கை பார்த்து 

கொஞ்சம் பலமாக

சிரித்து விட்டு

போகிறேன்...

வாழ்தலின் புரிதல்

நான் கடந்து வந்த பாதைகளில்

எங்கேனும் சிதறி இருந்தால்

அதை எனது ஞாபகமாக

நீங்கள்

பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் ...

அதுவே எனது வாழ்விற்கான

பெரும் ஆறுதல் ...

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 23/11/23.

நேரம் மாலை4:48.

காலமும் நானும்

 


காலமும் நானும்:-

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் காலத்தோடு நான்.. என்ன சௌக்கியமா என்று கேட்டது காலம்..சௌக்கியம் என்று சொல்ல முடியாது.. ஆனால் சௌக்கியமாக இருக்கிறேன் என்றேன்.. என்ன வழக்கம் போல குழப்புகிறாய் என்று கடிந்து கொண்டது காலம்.. உடல் அளவில் கொஞ்சம் அசௌகரியம்.. ஆனால் மனதளவில் எப்போதும் ஆனந்தம் என்றேன் புன்னகைத்து..அது சரி.. அப்படி இருப்பது வாழ்வின் ஒரு கலை என்றது காலம்.. அதன் பதிலை உள் வாங்கி கொண்டே எழுந்து சமையலறையில் ஒரு சூடான இஞ்சி தேநீரை தயாரித்து அதனோடு வெங்காய பக்கோடா எடுத்துக் கொண்டு வந்து காலத்திடம் கொடுத்து விட்டு எனக்கான பங்கை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன்..

காலம் மிகவும் ஆவலாக அந்த பக்கோடாவை ரசித்து சாப்பிட்டு கொண்டே அந்த சூடான தேநீரை ருசித்து பருகியது.. எப்படி இருக்கிறது சுவை என்றேன் காலத்திடம்.. அதற்கென்ன மிகவும் அருமையாக உன்னை போல வித்தியாசமாக என்றது சிரித்து கொண்டே.. இந்த வானிலை ஏமாற்றி விட்டது இந்த முறை என்றது..

நானோ கடலோர மாவட்டங்கள் தப்பி விட்டது என்று சந்தோஷப்படுவதா இல்லை சம்பா பயிருக்கு கொஞ்சமேனும் மேல் மழை வேண்டும் என்று கவலைப்படுவதா என்று தெரியவில்லை காலமே என்றேன்..நீ சொல்வது சரிதான்.. ஆனால் வானிலை நமது கைகளில் இல்லையே என்றது வருத்தமாக..

ஆமாம் உன்னை போல என்றேன் சிரித்துக்கொண்டே..

சரி சரி அதை விடு.. உன்னிடம் ஒரு கேள்வி என்றது காலம்..

கேள் காலமே.. எப்போதும் என்னிடம் மட்டும் நீ கேள்விகணைகளை கொடுப்பதும் ஏனோ என்றேன் கேலியாக..

அது ஏனென்றால் நீ எனது சாயல் என்றது..

சரி கேள்விக்கு வருகிறேன்..

இறப்பை நேசிக்கிறேன் என்று பல பதிவுகளில் சொல்கிறாய்.. அப்பொழுது நீ நேசித்த இறப்பை நாடி செல்வாயா அல்லது இறப்பே உன் நேசிப்பில் ஓடோடி வர வேண்டும் என்று நினைப்பாயா என்றது..

நான் சிறிதும் யோசிக்காமல் நான் அதை நேசித்து ஓடுவது என்பது காலங்காலமாக நேசித்த காதலனை தேடி எப்போதும் நேசித்த குடும்பத்தை மதிக்காமல் ஓடுவதற்கு சமம்..அது எனது பாரம்பரியத்திற்கு அழகல்ல..அதுவே என்னை நேசித்து ஓடோடி வந்து ஆரத் தழுவிக் கொள்ளும் போது நாங்கள் எவரும் பிரிக்க முடியாத பிணைப்பில் கலந்து நேசித்து கிடப்போம் என்றேன்..

காலமோ நான் எதிர்பார்த்ததை போலவே சுவாரஸ்யமான பதிலை சொல்லி விட்டாய் என்று சொல்லி இதோ இந்த காலி தேநீர் கோப்பையை உனது சிறந்த பதிலுக்கு பரிசளித்து விட்டு விடை பெறுகிறேன்.. மீண்டும் சந்திப்போம் நேரம் கிடைக்கும் போது என்றது..

நானும் சிரித்துக்கொண்டே அந்த காலி கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்கிறேன்..

#காலமும்நானும்

மீள் பதிவு.

#இளையவேணிகிருஷ்ணா.

யாசித்தல் கொடுமையானதே..

 


யாசித்தல் கொடுமையானது

அதிலும் இறப்பை யாசித்து கிடப்பது மிகவும் மோசமான துன்பமான விசயம்.. அந்த அகங்காரம் கொண்ட மனிதனின் அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாக சரணடைகிறது இறப்பிடம்.. இறப்பின் காலடியை பிடித்து கெஞ்சுகிறது..என்னை உன் காலடி நிழலில் அடைக்கலம் ஆக்கிக் கொள் என்று.. பார்க்க பாவமாக இருந்தது.. ஆனால் இறப்பு அவரை கண்டுக் கொள்ளவே இல்லை..நீ இதே நிலையில் இன்னும் கொஞ்ச காலம் இருக்க வேண்டும்.. என் காலடியை உனது கண்ணீர் கழுவ வேண்டும்.. ஒவ்வொரு நொடியும் அகங்காரம் எவ்வளவு மோசமானது என்று நீ உணர வேண்டும்.. பிறகு அடுத்த பிறவியில் கூட உன்னை அகங்காரம் சூழாமல் இருக்க வேண்டும்... இதற்காக தான் இந்த தண்டனை..யாசித்துக் கொண்டே இரு.. நான் நீ கேட்ட யாசித்தலை நேரம் வரும் போது தருவேன்..

யாசித்தல் கொடுமையானது தான்..உன்னை போன்றவர்கள் உணர வேண்டாமா என்றது காலன்..

அந்த அகங்கார மனிதனோ கண்ணீர் சிந்தி சிந்தி காலனின் காலடியில் மயங்கி கிடக்கிறான்..நலனுக்கான நேரத்திற்காக...

#யாசித்தல்கொடுமையானது..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 21 நவம்பர், 2023

உங்கள் மனதிற்கு நெருக்கமான நண்பன்...


 நாளை நடப்பதை யார் அறியக் கூடும் என்று தெளிவாக தெரியாத முட்டாள் மனிதர்கள் தான் எது எதற்காகவோ கலக்கம் அடைவார்கள்... ஆனால் எதன் மீதும் அவ்வளவாக ஆர்வம் இல்லாத மனிதர்களுக்கு இங்கே எந்த இலாபமும் இல்லை; இழப்பும் இல்லை... ஒரு சமநிலையான மனதை எப்படியாவது பெற்று விடுங்கள்..அதுவே உங்கள் மனதிற்கு நெருக்கமான ஆறுதலான நண்பன்...

#வாழ்வியல்.

#இசைச்சாரல்வானொலி.

வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லும் வழிப்போக்கனாக...


ஒரு வேடிக்கை பார்த்துக் கொண்டே 

கடந்து செல்லும் 

வழிப்போக்கனாக

இருந்து விடுவதில்

இருக்கும் நிம்மதி

எதையாவது பற்றிக் கொண்டு 

பொறுப்போடு

திரிவதில் இருப்பதில்லை...

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 22/11/23.

நேரம் காலை 8:36.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்...

 


யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்... அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் என்று ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு பிடித்த பாடலை நான் நினைத்து பார்த்தேன்... ஆனால் அந்த இருமலை கூப்பிட்டதாக நினைத்து என்னை இறுக பற்றிக் கொண்டு போக மாட்டேன் என்கிறது... நான் இந்த நிலையில் அதன் நேசத்தை உதாசீனப் படுத்தினால் அது எங்கே தஞ்சம் அடையும் பாவம்... அதனால் அடைக்கலம் கொடுத்து இருக்கிறேன்.. நான் அதன் அதீத நேசத்தால் துடிப்பதை பார்த்து அது பற்றற்று விலகி விட்டால் எனக்கு தற்போது அதை விட மேலான சொர்க்கம் வேறெதுவும் இல்லை...😒.

#இருமல்எனும்காதலன்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 17 நவம்பர், 2023

சிறைப்படுதல்....

 



சிறைப்படுதல்

எனக்கு பிடிக்காது என்கிறேன்...

அப்படி என்றால் நீ காற்றா 

என்கிறார்கள்...

இல்லை நான் நதி என்கிறேன்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:35.

தேதி கார்த்திகை-1.

இழந்து விடுதல் ஒரு வரம்...

 


இழந்து விட ஏன்

பயப்படுகிறீர்கள்?

காலத்தின் ஒவ்வொரு நொடியும் 

இழக்கும் போது பயப்படுவதாக 

தெரியவில்லை...

மேலும் காலம் உங்கள்

அனுமதி கேட்டா தன்னை 

இழக்கிறது...

இழந்து விடுதல் என்பதில்

ஒரு புதுப்பித்தல் இருப்பதே

ஆக சிறந்த வரம் என்று

நீங்கள் ஏன் உணராமல்

பயந்து ஓடி ஒளிந்துக் 

கொள்கிறீர்கள்...

இழந்து விடுதல் என்பது

என்னை பொறுத்தவரை ஒரு வரம் 

என்பேன்...

வாழ்வின் சுமைகள் 

தானாகவே கழிந்து விடுவதில் 

உங்களுக்கு என்ன நஷ்டம் ஆகிவிட 

போகிறது???

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:23.

தேதி கார்த்திகை-1.

ஊர்ந்து செல்லும் நொடிகளுக்குள்...

 


நீ யார் என்று

எனை அங்கே

சில பேர் கேட்கிறார்கள்...

நான் ஊர்ந்து செல்லும் 

நொடிகளுக்குள்

மிகவும் நிதானமாக வாழ்க்கையை

ரசித்து பயணிப்பவள்

என்றேன் ...

அப்படி சொன்ன என்னை 

பேரதிசயமான பார்வையை

கொஞ்சம் என் மீது வீசி

செல்கிறார்கள்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:03.

தேதி கார்த்திகை -1.

வியாழன், 16 நவம்பர், 2023

நேற்றிருந்த நட்சத்திரத்தில் ...

 


அமைதியான இரவொன்றில் 

பாயில் கிடந்து

கொஞ்சம் வானை உற்று 

நோக்கினேன்...

நேற்று இருந்த நட்சத்திரத்தில் ஒன்று

இன்று காணவில்லை

என்றேன் ...

எனதருகே இருந்த

எனது வீட்டவர்கள்

என்ன உளருகிறீர்கள்

நட்சத்திரங்களை சரியாக

எண்ண முடியுமா என்று

ஒரு கேலி கலந்த ஆச்சரியத்துடன் 

என்னை  பார்க்கிறார்கள்...

ஆம் எனக்கு சரியாக கணக்கு 

தெரியாது என்றாலும்

அந்த ஒளி மிகுந்த நட்சத்திரம் 

என்னை நோக்கி காதலோடு 

கண் சிமிட்டும் தனித்துவத்தை எப்படி

என்னால் உணர முடியாமல் போகும்??

அந்த என் மீது

அதீத காதல் கொண்ட நட்சத்திரம் 

நிச்சயமாக

இன்று இல்லை...

நேற்று நான் அதனோடு உரையாடியதில்

ஏதேனும் ஊடல் கொண்டு 

இருக்குமோ என்னவோ என்று 

சோகமாக அந்த வானத்தையே 

பார்க்கிறேன்..

தன் ஊடலை துறந்து 

எந்த நேரத்திலும் வரக் கூடும் என்று...

என் வீட்டவர்களோ அது சரி என்று 

ஒரு மாதிரியாக சிரித்து விட்டு 

உறங்க செல்கிறார்கள்...

நானோ இங்கே உறங்காமல் 

தவிக்கிறேன்...

அது வரும் வழி பார்த்து...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

நேரம் மாலை 5:37.

தேதி 16/11/23.

புதன், 15 நவம்பர், 2023

தனது சிறகால் என் தோளை உரசி...

 


நான் எவரிடமோ சம்பந்தமே

இல்லாமல் சண்டை 

போட்டுக் கொண்டு

இருந்த அந்த தருணத்தில்

தன் சிறகால்

என் தோளை உரசி

அந்த குயில் கூவிக் கொண்டே 

சென்றது...

இது யதேச்சையா அல்லது

அது குறிப்பால் எனக்கு

ஏதோ உணர்த்துகிறதா என்று 

யோசிக்க

ஆரம்பித்த நேரத்தில்

விட்ட இடத்திலிருந்து 

என் எதிராளி சண்டை 

போட்டுக் கொண்டே இருந்தார்...

நானோ அவரை பார்த்து 

இனிமையான குரலால் 

கூவிக் கொண்டே இருந்தேன்

என்னையும் அறியாமல்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 8:15.

தேதி 15/11/23.

கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்...


கொஞ்சம் இலைகள் படர்ந்த

மரத்தில் ஓய்வெடுக்க

விரும்பிய

அந்த பறவைகளுக்கு

தற்போதெல்லாம்

சுட்டெரிக்கும் வெயிலும்

ஊசி போல தாக்கும் மழையிலும்

கிடந்து தவிக்கும்

கொஞ்சம் கூட

இரக்கமே இல்லாமல்

அந்த மொட்டை மாடியே 

பரிசளிக்கப்படுகிறது...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 7:56.

தேதி:15/11/23.

செவ்வாய், 14 நவம்பர், 2023

அந்த தாழிடப்பட்ட தாழ்பாள்களுக்கு தெரியாது..


அந்த தாழிடப்பட்ட

தாழ்பாள்களுக்கு

தெரியாது...

அந்த அறையின் உள்ளே

நடக்கும் விசயங்கள்

நியாயங்களா இல்லை

அநியாயங்களா என்று...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நெடுந்தூர இரவொன்று...

 


மிகவும் வேகமாக சுழலும்

இந்த 

இக்கால பிரபஞ்சத்தில்

நெடுந்தூர இரவொன்று

இளைப்பாறுதலுக்காக...

பரிசாகவோ வரமாகவோ 

கிடைத்து விடுகிறது 

எனக்கு ...

இந்த ஐப்பசி கார்த்திகை 

மாதங்களில்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

கவலைக்கு மருந்திட்டு முடித்த நேரம்...


திடீரென்று மனதின் பாரங்கள் 

கூடும் போது

யாரோ ஒருவரின் பிரச்சினைக்கான 

அழைப்பொன்று காத்திருக்கிறது

எனது அலைபேசியில்...

உடனே எடுத்து பேசிய போது

அவர்கள் கவலைக்கு ஒவ்வொன்றாக 

மருந்திட்டு முடித்த நேரம் ...

எனது பாரங்களின் அழுத்தத்தில் 

இருந்து விடுதலையடைகிறேன்...

எப்படி இது சாத்தியம் என்று

எனக்கு நானே ஆச்சர்யமாக கேள்வி

கேட்டக் கொண்ட போது

பொது நலனில் சுயத்தை 

இழந்தவனுக்கு இங்கே எல்லாமே 

சாத்தியம் என்று

சத்தம் இல்லாமல் சொல்லி 

போனது காலம்

எனது காதருகே...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

அந்த சிறு துண்டில் இருந்து வழிகின்ற சாற்றில் அமைதியடைகின்றேன்...


வாழ்க்கை என்னை 

சக்கையாக பிழிந்து

தூக்கி போட பார்க்கிறது...

நானோ கரும்பாலையில் இருந்து 

எப்படியோ

தப்பித்து வந்த

சிறு துண்டாக தூக்கி எறியப்பட்டேன் 

அதிர்ஷ்டவசமாக...

ஏனோ அந்த சிறு கரும்பு துண்டில் 

இருந்து வழிகின்ற சாற்றில்

அமைதி அடைகிறேன்...

பெரும் அமிர்தத்தை 

பருகியதை போல...

வாழ்வெனும் பெரும் பயணத்தில் 

ஒரு சிறு துண்டில் வழிகின்ற சாறே 

போதும் என்று 

நான் உணர்கின்ற போது

வாழ்வின் மைய பகுதியை 

நெருங்கிக் கொண்டிருக்கிறேன் 

என்பதே 

எனது சிறு பரிதாபத்துக்குரிய நிலை...

ஏக்க பெருமூச்சுடன் பயணிக்கிறேன்...

கரும்பு துண்டில் இருந்து சுவைத்த 

சாற்றின் சுவை இன்னும் என்னில் 

இருந்து வடியவில்லை என்கின்ற 

திருப்தியுடன்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 13 நவம்பர், 2023

கொஞ்சம் கருணை காட்டு ரெங்கநாதா...


 ரெங்கநாதா !எப்படியோ என் கணக்கில் எமது மாநிலத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் தற்போதைய நிதியமைச்சர் கனவில் தங்களது திருக்காட்சி கொடுத்து எனது கணக்கில் ஒரு 50 லட்சம் ரூபாய் போட சொன்னால் நான் அதை வைத்து எனது எழுத்துக்களை புத்தகமாக்கிக் கொண்டு இங்கே பல எழுத்தாளர்களுக்கும் புத்தகம் பதிப்பு செய்து அவர்களை மகிழ்வித்து பார்ப்பேன்... மேலும் எழுத்தாளர்கள் கூட்டம் கூட்டி விவாதம் மாதம்  ஒருமுறை கூடி பேசுவதற்கு மற்றும் அப்போது ஆகும் உணவு மற்றும் போக்குவரத்து செலவு எல்லாவற்றிற்கும் வைத்துக் கொள்வேன்... ஏனெனில் நான் எழுதியதை எல்லாம் புத்தகம் போட வேண்டும் என்று வீட்டில் காசு கேட்டால் வடிவேலு பாணியில் ஏதே! என்று கேட்டு திட்டுகிறார்கள்...திட்டி கம்முனு விட்டு விட்டால் கூட பரவாயில்லை... இப்படி எதையோ அலைபேசியில் தட்டிக்கிட்டே இருக்கிறாயே இதனால் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா என்று வேறு கிண்டலடிக்கிறார்கள்...ஏதோ ஒரு சிலர் உங்களை போல எல்லாம் எழுத வேறு எவராலும் முடியாது என்று சொல்வது மட்டும் அல்ல எதிர் காலத்தில் எனது எழுத்துக்களை ஆராய்ச்சி செய்வார்கள் என்று ஒரு சகி சொன்னார்கள் அவர்களும் #ஆல் #இந்தியா #ரேடியோ தொகுப்பாளர் தான்... இப்படி கருணை உள்ளம் கொண்டவர்களுக்காக எனது எழுத்துக்களை நேசிப்பவர்களுக்காக நான் அவர்களை மகிழ்விக்க எழுத வேண்டும்... நான் சொல்வது அந்த வைகுண்ட நாதருக்கு புரிந்தால் போதும்.. நிச்சயமாக நமது நிதியமைச்சர் எனக்கு வீடு தேடி வந்து பணம் கொடுத்து விட்டு ஆசியும் வழங்கி விட்டு போவார்... கொஞ்சம் கருணை காட்டும் ரெங்கநாதா 🙄😒🔥.

#எழுத்துமீதுமோகம்கொண்டகிறுக்கி

#இளையவேணிகிருஷ்ணா.

இளைப்பாறுதலின் கெஞ்சல்...

 


அவசியம் இல்லை என்றாலும்

அந்த இடத்தில் நின்று 

தொலைக்கிறேன்...

விரும்பி அல்ல...

ஒரு இளைப்பாறுதலின்

கெஞ்சலுக்காக...

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 12 நவம்பர், 2023

செலவில்லா கொண்டாட்டம்...


 எத்தனை நேரம் அங்கே நான் 

நின்றிருந்தேன் தன்னை மறந்து 

தெரியவில்லை... 

செலவில்லா கொண்டாட்டம்

வேடிக்கையல்லவா என்று

உணர்வு வந்து மீண்டு

சிறு புன்னகையுடன் 

தலையை இடவலமாக ஆட்டியபடி...

இதழில் வழிந்த சிரிப்பை 

அப்படியே வழிந்தோட 

அனுமதித்தபடி....

மெதுவாக அவ்விடம் விட்டு நகர்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

அன்றொரு நாள் சரயு நதிக்கரையோரம்...

 


அந்த சரயு நதியின்

அமைதியான நகர்வொன்றின் இரவில்

இதே நாளில் நாம் சந்தித்தோம்...

உனக்கு நினைவு உள்ளதா

தெரியாது...

இன்று நதிக்கரையோரம் உள்ள தீப ஒளியில்

ஒரு கணம்

உன்னை நான்

பார்த்த போது 

எனக்குள் நிகழ்ந்த பேரதிர்வில் உணர்ந்துக் கொண்டேன்...

நீ எனக்கானவன் என்று...

யுகங்கள் தாண்டியும்

மறைக்க முடியாது

அந்த பெரும் காதலை

என்று உணர்ச்சி பிரவாகத்தில் நான்...

நீயோ ஏதும் அறியாதவன் போல ஒரு புன்னகையில்

அந்த ஒளி வெள்ளத்தில் மிதந்து போகிறாய்...

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 8 நவம்பர், 2023

எழுத்தாளன் எனும் கிறுக்கன்

 


அத்தனை துன்பங்களையும்

ரா முழுவதும் எழுதி எழுதி 

தீர்த்து விட்டு

சக்கையாக...

உறங்க போகும் முன் 

காலத்திடம் கண்ணீரோடு

ஒரு கோரிக்கை வைக்கிறான்...

சிறிது உனது மடியில்

ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா என்று 

எழுத்தாளன் எனும் கிறுக்கன்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள் 08/11/23.

நேரம் 8:15.

திங்கள், 6 நவம்பர், 2023

ஆர் ஜே பாலாஜியும் நானும்..

 


எல் கே ஜி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்.. அதாவது ஒரு உள்ளூர் சேனலில் ஆர் ஜே பாலாஜி ஒரு நேர் காணல்.. அது ஒரு நேயர் தொலைபேசி அழைப்பில் கலந்துக் கொண்டு பாலாஜியிடம் தங்களது ஏரியா சார்ந்த குறைகளை கேட்டறிவார்.. அது அல்ல தற்போது பேச வந்த விசயம்.. நான் ஒரு கவுன்சிலர் என்னை இங்கே எவருக்கும் தெரியாமல் இருக்காது என்பார் ஆர் ஜே பாலாஜி.. அதற்கு அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி சொல்வது தான் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி.. சார் நான் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி..நானே ஒவ்வொரு முறையும் உங்கள் நேசமிகு தொகுப்பாளினி என்று அடிக்கடி என் பெயரை சொல்லி சொல்லி தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறேன்.. நீங்கள் ஒரு ஏரியா கவுன்சிலராக இருந்துக்கொண்டு உங்களை இந்த உலகமே தெரியும் என்பது போல காட்டிக் கொள்கிறீர்கள்...உங்களை எல்லாம் யாருக்கும் தெரியாது உங்களை அறிமுகம் செய்துக் கொண்டு பேசுங்கள் சார் என்பார் பாருங்கள்... எனக்கு அந்த இடத்தில் பயங்கர சிரிப்பு தான் வந்தது...என்னடா இது எல் கேஜிக்கு வந்த சோதனை என்று.. 😀.

இதை ஏன் தற்போது சொல்கிறேன் என்றால் நான் ஏதோ ஒரு மூலையில் ஒரு வானொலி தொகுப்பாளராக இருந்துக்கொண்டு ஆர் ஜே பாலாஜி அந்த தொகுப்பாளினியிடம் எல் கேஜி என்றால் இங்கே எவரும் அறியாதவர்கள் இருக்க முடியாது என்று சொன்னதை போல இங்கே என்னை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று நான் நினைத்து விடக்கூடாது அல்லவா... அந்த சீனை பார்த்தவுடன் எனக்கு என்னை அங்கே பொருத்தி பார்த்து கலகலவென்று சிரித்து சிரித்து மூச்சு திணறல் கூட ஏற்பட்டு விட்டது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் 🙄.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

#கிருஷ்ணாவானொலி.

இரவு கவிதை 🍁

 


உன்னோடு பேச தயக்கம்

இயல்பாக இருந்ததால்

யாரோடும் பேசாத மௌனத்தில்

நான் ஒளிந்துக் கொண்டேன்...

உன்னை எதிர்க் கொள்ளும் சக்தி

மீட்டெடுக்க முடியும் என்றால்

என் மௌனத்தை கலைத்து

இயல்பாக பயணிப்பேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/11/23.

நேரம் முன்னிரவு 8:15.

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி Krishna fm

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்... உங்களுக்கு பிடித்த கவிதைகளை இங்கே பதிவு செய்யுங்கள்... உங்கள் பெயரோடு நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆகும் நேயர்களே 🎻🙏✨🎻

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் வாருங்கள் 🙏🤝✨.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கீழேயுள்ள வானொலி லிங்கில் இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே ✨🎻🙏.

Follow the Krishna Fm channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4hWhh5Ejxuj7cLrn2S

வெள்ளி, 3 நவம்பர், 2023

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி Krishna fm

 


நேயர்களே வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி தொடர்கிறது இன்னும் சற்று நேரத்தில் ✨🎻✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் வாருங்கள் 🙏.

https://theonestopradio.com/radio/krishna_fm_in

வியாழன், 2 நவம்பர், 2023

இன்றைய சிந்தனை ✨


அங்கே ஏதோவொன்றில்

நாம்

தொலைந்து விடுகிறோம்...

 காலம் நம்மை 

தேடிக் களைத்து 

பிடித்து

இழுத்து வரும் வரை...

இளையவேணிகிருஷ்ணா.

நடுநிசி வேளையில் நீந்தி செல்லும் அந்த பறவைக்கு...

 


அதோ அங்கே

இந்த நள்ளிரவில்

ஏதோ சில காரணங்களால் 

தாமதமாக 

சற்றே சிரமத்தோடே

அதே சமயத்தில் கொஞ்சம் 

பயத்தோடு வானில் நீந்தி

செல்லும் அந்த பறவைக்கு

ஒரு மரத்தை மட்டும் உங்களால் காட்ட 

முடிந்தால் காட்டி விடுங்கள்...

அதிகாலை வேளை வரை

கொஞ்சம் ஓய்வெடுக்க...

அப்படி காட்ட முடிந்தால்

சற்றே உங்களுக்கு ஒரு

நிம்மதியான உறக்கமும்

இந்த நடுநிசியில் வரக் கூடும்..

யார் கண்டது

இங்கே நிம்மதியற்ற அந்த 

பறவையின் நிலை உங்களுக்கு கூட 

இதே நடுநிசியில் என்றேனும் 

வரக் கூடும்

அப்போது அந்த பறவையும் நன்றி 

உணர்வை வெளிப்படுத்தவும் கூடும்

தன் சிறகை சிலிர்த்தப்படி...

#வாழ்வெனும்பெரும்சுமை.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:02/11/23.

நேரம் முன்னிரவு 10:55.

ஒப்பீடு தற்போது வேண்டாம்...

 


என்னை எவரோடும்

ஒப்பிடாதீர்கள்...

எவரும் என்னோடு ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்...

நான் ஒப்பீடு

செய்துக் கொள்ள நான் நானாக இருக்கும் போது

நிச்சயமாக உங்களுக்கு தகவல் தருகிறேன்...

தற்போது கொஞ்சம் எந்தவித ஒப்பனையோ ஒப்பீடோ இல்லாமல் பயணிக்கவே விரும்புகிறேன்...

ஏனெனில் நான் ஆழ்ந்த மௌனத்தில் தற்போது இந்த வாழ்வில் பயணிக்கிறேன்..தற்போது

எந்தவித ஒப்பனைகளோ ஒப்பீடோ

செய்யும் போது என்னால் அதை ஏற்கவோ மறுக்கவோ முடியாதல்லவா...

#ஒப்பீடு.

#ஆழ்ந்தமௌனம்.

#இசைச்சாரல்வானொலி.

#நாள்:02/11/23.

நேரம் முன்னிரவு 10:36.

இயல்பை துறந்து எதிர் காற்றில் பயணித்து...

 


நீ இயல்பாக இரு

இயல்பை தொலைத்து பயணிப்பதால் தொலைந்து போய் விடுவாய் என்கிறேன் நான் அங்கே ஒருவரிடம்...

அவர் என்னை பரிதாபமாக பார்த்து விட்டு சொல்கிறார்...

உன்னை போல கிறுக்குப் தனமாக சுற்றி திரிந்த நாட்களில் நான் நானாக சுகமாக இதோ இந்த வாழ்வில் பயணித்தேன்...

இப்போது சில பல முகமூடிகள்

போட்டுக் கொண்டு இன்பமாக இருப்பதாக காட்டிக் கொண்டு பயணிக்கிறேன்...

நான் இயல்பை துறந்து எதிர் காற்றில் பயணித்து களைத்து கிடக்கிறேன்...

நீ கொஞ்சம் ஓரமாக போய்

உன் இயல்பு கதைகளை பேசிக் கொண்டு இரு...

அங்கே எவரேனும் உன் இயல்பை தூக்கி தூரமாக எறிந்து விட்டு உன்னை மட்டும் தரதரவென இழுத்து செல்ல வரக் கூடும்...

அப்போது நீ கதறுவதை

இதோ நம்மை தீண்டும் காற்று நமது பைத்தியக்காரத்தனமான இந்த தீங்குரலை 

எடுத்துச் சென்று

வேறு ஒரு நம்மை போன்ற கிறுக்குப் தனமான நபரிடம் சேர்க்கக் கூடும் என்றார்..

#வாழ்க்கை

#யதார்த்தம்

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/11/23.

நேரம்:10:22முன்னிரவு.

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி Krishna fm

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி மௌனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் ✨.

எப்போதும் எதையேனும் சிந்தனை செய்துக் கொண்டு இருப்பதை விட கொஞ்சம் மனதிற்கு ஓய்வு கொடுக்க வானொலியோடு பயணிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

நான் சொல்வது சரிதானே ✨😊✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🙏🤝💐.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 1 நவம்பர், 2023

என்னிடம் இருந்து பெரும் பிச்சையாக பெற...


எந்தவித சலனமும் இல்லாமல் மௌனமாக வாழ்ந்து விட்டு போவதில் எனக்கொன்றும் சலிப்பில்லை...

அதோ அங்கே எனை பார்த்து

கை நீட்டி முகம் சுழித்து

புறம் பேசுபவர்கள் தான்

எனக்கு மிக பெரிய சலிப்பை

தருவதாக நினைத்து 

வாழ்வின் மூச்சடக்கி 

போகும் போதும் சுவடாக

என்னிடம் இருந்து அந்த 

பெரும் சலிப்பை

பெரும் பிச்சையாக 

பெற்றுக் கொள்ள 

துடிதுடித்து போகிறார்கள்...

#இரவுகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:01/11/23.

புதன்கிழமை.

நேரம் இரவு 11:33.

இந்த வெட்டவெளி எனை உரிமைக் கொண்டாடுவதில்லை...

 


சர்வ அலங்காரங்கள் கொண்ட 

அந்த வீட்டில் எப்படியேனும் என்னை அடைக்க முயல்கிறார்கள்

அங்கே பலர்...

நானோ இதோ இங்கே ஒற்றை நட்சத்திர ஒளியில்

மங்கிய நிலவின் ஒளியின் அடியில் கொஞ்சம் இளைப்பாறுகிறேன்...

இதோ இந்த வெட்டவெளி

என்னை சிறைப்படுத்தி 

உரிமைக் கொண்டாடுவதும் இல்லை...

அதன் அடியில்

நான் இளைப்பாறுவதற்கு

எந்த கட்டணமும் வசூலிப்பதும் இல்லை...

இங்கே வெட்டவெளியில்

நனைவது ஒரு சுகம்...

அது மழையும் அல்ல...

அது வெறுமனே காற்று சுதந்திரமாக வந்து செல்லும்

ஒரு அலங்காரமும் இல்லாமல் என்னை ஈர்க்கும் வெட்டவெளி...

அவ்வளவே...

#இரவுகவிதை.

நாள்:01/11/23.

நேரம் இரவு 11:18.

கிருஷ்ணா இணையதள வானொலி (Krishna fm)

 


வணக்கம் நேயர்களே 🙏✨🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி மௌனா அவர்களின் கவிதை தொகுப்போடு அவரது பாடல் தேர்வுகள் ஒலிபரப்பு ஆகும்.. நிகழ்ச்சி கேட்க கீழேயுள்ள லிங்கிற்கு வாருங்கள்.. ✨💐🎻.


https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...