ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஒரு பசுவின் கதறல்

 இன்று அதிகாலை ஒரு நான்கு முப்பது இருக்கும். ஒரு நிகழ்வு... மழைத் தூறல் அப்போது தான் ஆரம்பித்து இருந்தது.பக்கத்து வீட்டில் மாட்டு பட்டியில் வேறொருவரின் மாடுகள் கட்ட அனுமதித்து இருந்தார்கள்.. அந்த மாடு கன்று ஈனும் நிலையில் இருந்தது.. நாங்கள் மாடியில் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் அந்த பசுவின் கதறல் எங்களை எழுப்பி விட்டது.. ஏன் பசு கதறுகிறது என்று வேகமாக எழுந்து வெளியே வந்து பார்த்தோம் நானும் என் கணவரும்.மாடியில் இருந்து அவர்கள் மாட்டு பட்டி கொஞ்சம் தெரியும்.நான் ஏதோ பாம்பு வந்திருக்குமோ அதனால் தான் கத்துகிறதோ என்று நினைத்தேன்.. ஆனால் அது மிரண்டு கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சொல்கிறேன் கொஞ்சம் கூர்ந்து கவனித்த போது தெரிந்தது..கன்று ஈனும் நிலையில் உள்ள பசு என்று.ஆனால் அது கன்றை ஈன்று விட்டது.. எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து.. பிறகு பக்கத்து வீட்டுக்காரருக்கு அலைபேசியில் அழைத்து விசயத்தை சொன்னோம்.. சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் அலைபேசியில் சொல்லி விட்டார்.. நல்ல வேளையாக உடனடியாக வந்து விட்டார்கள்.இங்கே எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..மாடு என்பது ஒரு உயிருள்ள ஜீவன் தானே..அது கன்று ஈனும் நிலையில் இருக்கும் போது மாடு இருக்கும் இடத்தில் தானே படுத்து உறங்க வேண்டும்.ஆனால் மாடு ஒரு பக்கம் உரிமையாளர் ஒரு பக்கம்..நினைக்கவே கோபமாக வருகிறது.அதன் கதறல் எனக்கு உயிர் வலியை தந்தது..நானோ விரைவாக அலைபேசியில் அழைத்து விசயத்தை சொல்லுங்கள் என்கிறேன்.என் கணவரோ கொஞ்சம் பொறுமையாக இரு இளையவேணி என்று என்னை அமைதிப்படுத்துகிறார்.எனக்கு அவர்கள் வரும் வரை பதட்டமாக இருந்தது.என் கணவருக்கும் எனக்கும் சண்டையே வந்து விட்டது..நீ இவ்வளவு பதட்டம் அடையாதே என்கிறார்.அது எப்படி பதட்டம் அடையாமல் இருக்க முடியும்?

இதே வேளையில் மாட்டின் உரிமையாளர் மனைவி இப்படி கர்ப்பமாக இருக்கும் போது விட்டு விட்டு அமைதியாக உறங்கிக் கொண்டு இருப்பாரா?

கலி யுகத்தில் மாடு மற்றும் மற்ற ஜீவ ராசிகள் இவர்களிடம் படும் பாடு என்ன சொல்வது..

இப்போது மாடு என்பது ஒரு உயிருள்ள ஜீவன் என்பதை மறந்து அதை வருமானம் ஈட்டும் ஒரு ஜடமாக கருதுவது மனதிற்கு மிகவும் துன்பமாக உள்ளது..

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாடு கன்று ஈன்ற அடுத்த ஐந்து அல்லது பத்துநிமிடத்தில் கன்று எழுந்து உற்சாகமாக ஓட ஆரம்பிப்பது பார்க்கவே மிகவும் பரவசமாக இருக்கும்.. ஆனால் இந்த கன்று இப்போது வரை எழுந்திருக்கவே இல்லை..ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.நான் சிறு வயதில் இருக்கும் போது காலையில் பால் கறந்தவுடன் வீட்டுக்கு போக கன்றிற்கு தான் விடுவார்கள்..அது நாட்டு மாடு.. கற்றுக் குட்டியோ நம்மை பார்த்ததும் துரத்தி வரும்.. அதற்கு பயந்து ஓடிய நாட்கள் நினைவுக்கு வருகிறது..

எங்கே செல்கிறோம் நாம் நமது வாழ்வியலை மறந்து..

#ஒரு #பசுவின் #கதறல்.

#இளையவேணிகிருஷ்ணா.



சாபத்தின் நன்மை..


 உறங்கும் முன் ஒரு சிந்தனை:-

ஒருவர் உங்களோடு நெடுநேரம் சண்டை போட்டு விட்டு உங்களை நீ நாசமாக போய் விடுவாய் என்று சபிக்கிறார் என்றால் ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.. ஏனெனில் அவரையும் அறியாமலேயே உங்களுக்கு சாபம் கொடுத்து நன்மை செய்து இருக்கிறார்.. என்ன இது புது கதையாக உள்ளது என்று கேட்கிறீர்களா.. இல்லை இதில் ஒரு ஆழ்ந்த தத்துவம் அடங்கி உள்ளது.. அதாவது அவர் இங்கே நீ என்று குறிப்பிட்டு தானே நாசமாக போ என்று சொல்கிறார்.. அப்போது அங்கே நீ என்பது எது.. #நான்.. #நான் அழிந்தால் தானே பிறவி சூழலில் இருந்து முக்தி அடைய முடியும்...முக்தி அடைந்தால் தானே நாம் இந்த பிறவி எனும் பெரும் நோயிலிருந்து விடுபட முடியும்.. இப்போது புரிகிறதா அவர் உங்களுக்கு நன்மை தானே செய்து இருக்கிறார்...

எதிலும் ஒரு நன்மையை தேடுங்கள்.. வாழ்வில் ஒரு அமைதி கிடைக்கும்..

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

மிச்சம் இருக்கும் மனம்


எல்லாம் நிகழ்வும்

இங்கே முடிந்து விட்டது

நீ ஏன் காத்திருக்கிறாய்

என்றது என்னை பார்த்து

என் மனம்..

இதோ நீ இன்னும்

என்னோடு தானே 

இருக்கிறாய்

என்றேன் நான்..

#இளையவேணிகிருஷ்ணா.

நானும் என் பயணமும்


 ஏதோவொரு வெளிச்சம்

வந்து விடும்

நான் கொஞ்சம் தடுமாறாமல்

பயணிக்கலாம் என்று தான்

காத்திருக்கிறேன்...

காத்திருந்த நேரம் கரைகிறது

சத்தம் இல்லாமல்..

இதோ வாழ்வின் இறுதி பயணம்

தொடங்கி விட்டது..

நான் எமனை சற்று நேரம் பொறு

எனக்கான சிறு வெளிச்சம்

இதோ வந்து கொண்டு 

இருக்கிறது என்கிறேன்..

எமனோ 

நான் ஏதோ போதையில்

பேசுவதாக நினைத்து

வலுக்கட்டாயமாக 

இழுத்து செல்கிறான்

ஏ வெளிச்சமே நீ ஏன்

என்னை ஏமாற்றினாய்???

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 28 செப்டம்பர், 2022

உணர்வை தொலைத்து ஓர் ஓட்டம்..


பேரன்பு எனும்

உணர்வை குழி தோண்டி

புதைத்து விட்டு 

பேரன்பை தேடி

அலைந்து திரிகிறேன்...

கேட்க நாதியற்று..

நான் கொஞ்சம் பரவாயில்லை

அங்கே பலபேர்

இதை காலம் காலமாக

செய்து வருகிறார்கள்..

உணர்வற்ற இந்த ஓட்டத்தை

ஏன் ஓடுகிறீர்கள் என்று

நான் கேட்டால்

அவர்கள் சொன்ன பதில்

எனை ஆச்சரியப்படுத்தியது..

ஆம்.. நான் இப்படி 

உணர்வற்று ஓடுவதெல்லாம் 

என் மீது பேரன்பு செலுத்தும்

குடும்ப உறுப்பினர்களுக்காக

என்று சொல்லி விட்டு

மீண்டும் உணர்வற்ற ஓட்டத்தில்

தன்னை தொலைக்கிறார்கள்..

இவர்களை தேடி அங்கே

அவர்களை நேசித்து

பேரன்பு கொண்ட

குடும்பத்தினர் தேடி

அலைகிறார்கள்..

தங்கள் பேரன்பை தொலைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.





தொடர்பில்லாத மனமோ ஏன் காயப்பட வேண்டும்


அந்த ஒரு தொடுகையில் 

தொடங்கி இருந்தது

நமக்குள்ளான 

நெருக்கம்...

அந்த 

இன்னொரு தொடுகையிலான

நிகழ்வில் நிகழ்ந்தது

நமக்குள்ளான பிரிவு..

இது இரண்டுக்கும்

தொடர்பில்லாத மனமோ

ஏன் காயப்பட வேண்டும்

எனக்குள் ஓர் அர்த்தமான

கேள்வி...

விடை தந்து விட்டு போ

என் செல்ல காதலியே..

#இளையவேணிகிருஷ்ணா.



செவ்வாய், 27 செப்டம்பர், 2022

புகைச்சல்கள் படிமங்களாக..


மௌனமாக வேடிக்கை

பார்த்து களிக்கிறேன்..

ஆயிரம் ஆயிரம் புகைச்சல்கள்

படிமங்களாக மனதின் சுவரை

அரித்து தின்றும்

எதுவுமே நடக்காதது போல

இங்கே வேடிக்கை பார்க்கும்

மனுஷியாக...

மௌனமாக வேடிக்கை பார்த்து

களிக்கிறேன்...

நான் எப்போதும் நானாக..

மௌனமாக தனியாக

பிரயாணம் செய்வதில்

இருக்கும் சுகம்

என்னை தவிர வேறெவர்

அறியக் கூடும்..

#இளையவேணிகிருஷ்ணா.

காலமும் நானும் (1)

 

காலமும் நானும்:-

நான் கண்விழித்து பார்ப்பதற்காக காலம் வெகுநேரம் காத்திருந்தது.நான் மெதுவாக எனது ஆழ்ந்த தியானத்தில் இருந்து கண் விழித்து பார்த்தேன்.. காலம் அருகே வந்து என்ன அவ்வளவு பெரிய பிரார்த்தனை உனக்கு.. எப்போதும் நீ பிரார்த்தனையை விரும்புவது இல்லையே என்றது... ஆம் நீ சொல்வது சரிதான் காலமே.. நான் உனது விரலை பிடித்து நடக்கிறேன்..வாழ்வை போற போக்கில் உனது கரம் பிடித்து நடப்பதில் இருக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைப்பது இல்லை..அதை நான் பல சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன் என்றேன்..

பிறகு ஏன் இந்த நீண்ட பிரார்த்தனை என்றது ஆச்சரியம் கலந்த குரலில்..

இந்த பிரார்த்தனை எனக்கானது அல்ல.. எனது பக்கத்து மற்றும் எதிர் வீட்டுக்காரர்களுக்காக என்றேன்..

காலம் ஒரு அழகான புன்னகையை உதிர்த்து வாழ்த்தியது..

நான் அந்த வாழ்த்து செய்தியை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு சமையலறைக்குள் சென்று இஞ்சி கலந்த தேநீர் கோப்பையோடு வந்து காலத்தின் கைகளில் ஒன்றை கொடுத்து விட்டு எனக்கொரு கோப்பையோடு அமர்ந்தேன்..

அங்கே சில 🐦 பறவைகள் வானில் சிறகடித்து மாலை வேளையில் தன் கூட்டை நோக்கி பறந்தது எல்லா வித அன்றைய கவலைகளை தன் சிறகுகளால் வானில் கலக்க விட்டு...

நான் கொஞ்சம் புன்னகைத்தேன்.. காலமும் என் எண்ணத்தை புரிந்து சிறு புன்னகை சிந்தி தேநீரை சுவாரஸ்யமாக பருகியது...

#காலமும் நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 26 செப்டம்பர், 2022

சூட்சம ஆன்மாவின் அமைதியான பயணம்


கணக்கற்ற வினைகளை

சுமந்து திரிகிறது

இந்த தேகம்..

எண்ணிலடங்கா

வினைகளின் பதிவுகளை

அமைதியாக சுமந்து 

நம்மோடு மிகவும் சூட்சமமாக 

பயணிக்கிறது...

நுண்ணிய

இந்த ஆன்மா..

கடுகு சிறுத்தாலும் காரம்

குறையாதுஅல்லவா..

#இளையவேணிகிருஷ்ணா.

விடை பெறுகிறோம் நானும் அந்த பாதையும்

 

அந்த முடியா பாதை

இங்கே

முடிந்து விட துடிக்கிறது

நானோ இன்னும்

கொஞ்ச தூரம்

செல்ல உன் துணை

அவசியம் என்று

பிடிவாதமாக நீட்டிக்கிறேன்..

ஒரு சமயத்தில்

களைத்து விடுகிறது 

பாதை.....

நானும் கூட தான்...

இருவரும் மறைந்து

விடுகிறோம்..

எங்கள் அந்த பயண

திட்டத்தில் இருந்து...

எங்களை பின் தொடர்ந்த

அந்த நாயோ

செய்வதறியாமல்

திகைத்து திக்கற்று

நிற்கிறது...

ஒரு ஓரமாக....

#இளையவேணிகிருஷ்ணா.


ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பயணத்தில் ஓர் சந்திப்பு (1)

 அன்றைய மாலைப் பொழுதில் நான் தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை சுவைத்தபடியே வேடிக்கை பார்க்கிறேன் மாடியில் இருந்து சாலையை.. இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் என்று சென்று கொண்டே தான் இருக்கிறது அதிவிரைவாக.. அந்த வாகனத்தில் உள்ளே பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை.. நான் உற்று பார்த்தேன்.. ஒருவர் காரில் இருந்து இறங்கி எனது 🏡 வீட்டில் கேட்டை திறந்து உள்ளே நுழைகிறார்.அவர் யாராக இருக்கும் என்று நினைத்தபடியே கீழே வந்து கதவை திறந்தேன் .. அவர் கை காலிங் பெல்லை தொட எத்தனித்து இருக்கும் போதே நான் கதவை திறந்து விட்டேன்..





அவர் என்னை பார்க்க நானோ அவரை ஞாபகப்படுத்தி பார்க்க முயன்று தோற்றுவிடுகிறேன்.ஆனால் அவர் என்னை பார்த்தவுடன் கட்டியணைத்து கொண்டு என்னடா நன்றாக இருக்கிறாயா என்றார்.. யார் இவர் என்னை உரிமையாக வாடா போடா என்று பேசுகிறார் என்று யோசிக்கும் போதே ஏ மதி என்னை தெரியவில்லை.. நான் உன்னோட பள்ளி 🏫 தோழன் கண்ணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.. எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வந்து விட்டது.அட என்னடா உடல் சற்று பெருத்து முகசாயலே மாறிவிட்டதே என்றேன்.. ஆனால் நீ இன்னும் அப்படியே தான் உள்ளாய் மதி என்று சிரித்தபடியே கண்களால் யாரையோ தேடினான்..





நான் அவனிடம் யாரை தேடுகிறாய் கண்ணா என்றேன் ஆச்சரியம் கலந்த குரலில்.உனது மனைவி குழந்தைகள் தான்.. அவர்கள் எங்கே.. வெளியே சென்று இருக்கிறார்களா என்றான்..





எனக்கு சிரிப்பு வந்து விட்டது.நான் தான் சத்தம் எப்படி சிரிப்பேன் என்று உங்களுக்கு தெரியுமே.. ஆம் அந்த வீடே அதிரும் அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தேன்.. அவள் ஒன்றும் புரியாமல் விழித்தான்..


ஏன் மதி சிரிக்கிறாய்.நான் ஏதும் தவறாக கேட்டு விடவில்லையே.. என்றான் பரிதாபமாக.





நீ தவறாக ஒன்றும் கேட்கவில்லை.. எனக்கு மனைவி பிள்ளைகள் என்று ஒன்று இருந்தால் தானே இங்கே இருப்பார்கள் என்றேன் சாவுகாசமாக..





என்ன உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா.. என்றான் ஆச்சரியமாக..





ஆம் கண்ணா ஆகவில்லை என்று சொல்வதை விட எனக்கு விருப்பம் இல்லை என்று தான் சொல்வேன்.. என்றேன்.


ஏன்டா இப்படி என்றான்..


எனக்கு விருப்பம் இல்லை கண்ணா.அவ்வளவுதான்.வேறொன்றும் இல்லை என்றேன்.


அதுதான் ஏன் என்றேன்..?''என்றான் கண்ணன் விடாமல்..


திருமண சடங்குகள் எல்லாம் எனது வாழ்விற்கு ஒத்து வராது.வாழ்க்கைதுணையை அனுசரித்து வாழ்வது என்பது எனக்கு சரியாக வருமா என்று யோசித்து விட்டு விட்டேன் .. ஏன் இந்த உலகில் அனைவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் தான் இந்த பூமி சுமக்குமா நம்மை என்றேன்.


இன்னும் உனக்கு அந்த கேலி பேச்சு மட்டும் போகவில்லை.. என்றான் சிரித்தபடியே..





சரி உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்றேன்.


ஓ.. எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்.ஒருவன் மருத்துவம் படித்து கொண்டு இருக்கிறான். இன்னொருவன் வரலாறு படிக்கிறான் சென்னையில் பிரபலமான கல்லூரியில் ... நானும் என் மனைவியும் இங்கே சென்னையில் தான் தங்கி இருக்கிறோம். நான் ஓர்  வங்கி ஊழியர்.எனது மனைவி கல்லூரி பேராசிரியை.என்றான்..





வாழ்க்கை எவ்வாறு போகிறது என்றேன்..


நன்றாக போகிறது மதி.. அதாவது ஓர் அந்தஸ்தோடு என்றான்.. உனக்கு எவ்வாறு போகிறது..நீ என்ன தொழில் செய்கிறாய் என்றான்.





நான் ஓர் சுற்றுலா கைடு.. எனக்கு வாழ்க்கை சிறப்பாக போகிறது கண்ணா.. இந்த தேசத்தின் பெரும்பாலான எல்லைகளுக்கும் நான் ஓர் சுதந்திர பறவையாக சுற்றி திரிந்து இருக்கிறேன்.. என்றேன்.


அப்போ நீ உலகம் சுற்றும் வாலிபன் என்று சொல் என்றான் சிரித்தபடியே..





"அதுசரி என் விலாசம் உனக்கு எவ்வாறு தெரியும்..நீ இங்கே வந்ததில் மகிழ்ச்சி..கண்ணா.."


“உன் விலாசம் நதி தான் கொடுத்தாள்"..மதி.


நதியா.. என்றேன் எனது துக்கத்தை வெளிக்காட்டாமல்..





ஆமாம்.. அவள் தான் கொடுத்தாள்.. என்றான்..


"அவள் உன்னை நேசித்தாளா மதி "என்றான்..


இல்லை என்று உதடு சொல்ல துடிக்கும் போது ஆம் என்று தலையசைத்து எனது நேசத்தை சொல்லாமல் சொல்லி விட்டது..


பிறகு ஏன் நீ அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை.. என்றேன் ஆச்சரியமாக.


ஏனெனில் அவளும் என்னை போன்றே சுதந்திரமாக இருக்க நினைத்தாள் என்றேன்..


அது ஒன்றும் தவறில்லையே..நீ அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கலாமே.. என்றான் கண்ணன்..


இல்லை கண்ணா.. அவள் சுயத்தை நான் எரிக்க விரும்பவில்லை என்றேன்..


என்ன சொல்கிறாய்.. அவள் சுயத்தை எவ்வாறு இழப்பாள் உன்னை திருமணம் செய்து கொண்டால்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்றான்..





திருமண பந்தம் என்பது எப்போதும் ஒருவித கட்டுப்பாடு சடங்கு சம்பிரதாயம் நிறைந்தது.. அந்த பந்தம் எங்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுமோ.. எங்கள் சுயத்தை இழக்க வைத்து விடுமோ என்று பயம்.. மேலும் இருவருமே ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து ருசித்து வாழ நினைப்பவர்கள்.. இதெல்லாம் யதார்த்தத்திற்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை.. அதனால் தான் என்றேன்...


நீ சொல்வது உண்மை தான்.மதி..அந்த பந்தத்தின் புனிதம் காக்க நாம் நமது சுயத்தை நாமே எரித்து விட்டு தான் அதில் நுழைய வேண்டும்.. நான் இப்போது வாழ்வது கூட ஓர் பொய்யான வாழ்க்கை தான்.. ஆனால் சமுதாயம் எங்களை கொண்டாடுகிறது இல்லையா.. அதில் ஓர் பெருமை இருக்கிறது.அதனால் அந்த பிம்மத்தின் நிழலில் சுகமாக இருப்பதாக நினைக்கிறோம் நாங்கள்.. ஆனால் துல்லியமாக யோசித்து பார்க்கும் போது அது ஓர் போலியான வாழ்க்கை என்று தோன்றியது.. என்ன செய்ய இயலும்..நீயே சொல்.. இப்படியே இதற்கு அடிமையாகி விட்டோம் நாங்கள்.. என்றான் கண்ணன்..


"அந்த மாதிரி போலியான வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து விலகி விட்டோம்..கண்ணா.." இருவரும் அவரவர் பாதையில் மிகவும் ஆனந்தமாக பயணிக்கிறோம்.. எங்கள் காதலை மட்டுமே துணையாக கொண்டு.. இதில் எங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை..ஏமாற்றங்கள் இல்லை.. நாங்கள் எங்கள் வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக வாழ்கிறோம் என்று சொல்லி கொண்டே சமையலறையை நோக்கி நடந்தேன்...ஒரு எலுமிச்சை இஞ்சி கலந்த தேநீர் கலந்து எடுத்து வந்து அவன் அருகே அமர்ந்து அவனிடம் ஒன்று நீட்டினேன்..அதை மிகவும் நிதானமாக ரசித்து பருகினான்..


பிறகு விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கினான்.. உங்களுக்குள் இவ்வளவு புரிதல் இருக்கும் போது ஏன் விலகி இருக்க வேண்டும் என்றான் கண்ணன்..


அந்த புரிதல் இருப்பதால் தான் விலகி இருக்கிறோம் என்றேன்..


என்ன புரியவில்லை.. என்றான்..


வாழ்க்கை என்பது எப்போதும் ஆனந்தமயமானது.. ஒருவரையொருவர் எப்போதும் நேசித்து வாழலாம் தவறில்லை.. ஆனால் நேசித்தல் திகட்ட திகட்ட கிடைக்கும் போது வாழ்வில் ஓர் வெறுப்பு வந்து விடும்..நேசித்தலில் ஓர் அலுப்பு வந்து விட்டால் வாழ்வின் ஒவ்வொரு நொடிகளும் நொறுங்கி தூள் தூளாக மாறி நமது வாழ்க்கையில் காயம் ஏற்படுத்தி வலியை கொடுத்து நிம்மதியை கெடுக்கும்.





அந்த மாதிரி ஓர் வாழ்க்கை நரகத்தில் வாழ்வதற்கு சமம்.. அதனால் எங்கள் நேசம் எப்போதும் அருகில் இருக்கும்.. உடல் அளவில் தூரமாக இருந்தாலும்.. நாங்கள் எங்கள் காதலை பலிக் கொடுக்க நினைக்கவில்லை.. எங்கள் வாழ்க்கை எனும் புத்தகத்தில் எப்போதும் காதல் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.அதை புரட்டி புரட்டி எத்தனை தடவை படித்தாலும் ஆனந்தமாக உணர வேண்டும்.. என்றேன்.‌


இது இப்படியே போக சாத்தியமா என்றான் யோசித்தவாறே..





அவள் என் மேல் உள்ள நேசத்தை துறக்காதவரை.. நான் அவள் மேல் கொண்ட நேசத்தை துறக்காத வரை.. என்றேன்..


வாழ்க்கை என்பது பல சுவைகள் நிறைந்தது.. அதில் திருமண சுவை மற்றும் உடல் ரீதியான காமசுவையை மட்டும் விட்டு விட்டு வாழ நினைக்கிறோம் நாங்கள்.. அவ்வளவு தான்..


மேலும் எங்களை வாழ்க்கையை கூட கட்டுப்படுத்த விடவில்லை.


நகர்ந்து செல்லும் ஒவ்வொரு வினாடியிலும்  நாங்கள் ஆனந்தமாக பயணிக்கவே நினைக்கிறோம்.. இதில் எந்தவித பந்தத்திலும் இணையாமல் இருக்கும் வரை தான் சாத்தியம்.. நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.. எங்கள் காதலை நகர்ந்து செல்லும் வினாடிகள் சுகமாக சுமந்து செல்கிறது.. நாங்கள் இனிமையாக பயணிக்கிறோம் ஓர் வாழ்க்கை பயணியாய் அவ்வளவு தான்.. என்றேன்..


அவன் அந்த தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான்.. தேநீர் மிகவும் சுவையாக இருந்தது என்று பாராட்டியபடி..


உனது பாராட்டுதலுக்கு நன்றி என்று புன்னகைத்தபடி ஏன் அதற்குள் கிளம்பி விட துடிக்கிறாய் என்றேன்..


இல்லை மதி இன்னொரு நாள் நான் இங்கே வருகிறேன்.. உன்னை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி..என்று சொல்லி விட்டு நதியிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா என்றான்.சிரித்தபடி.





அவள் காதலை பத்திரமாக வைத்திருக்க சொல்லுங்கள்.. நகரும் நொடிகள் களவாடிவிட போகிறது என்றேன் சிரித்தபடி..


அவனும் சிரித்து கொண்டே உனது கவித்துவமான பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது .. ஆனால் என்ன செய்ய.. உன்னை போல் வாழ எனக்கு கொடுப்பினை இல்லை..எனது கடமைகள் வா வா என அழைக்கிறது.. என்றான் சிரித்தபடியே..


நானும் உனது பொழுதுகளை கடமைகள் மட்டுமே உரிமை கொண்டாடி களவாடிக் கொண்டு உள்ளதால் தான் உன்னால் வாழ்க்கை ஆனந்தமாக வாழ இயலவில்லை என்றேன்.. அவனும் சிரித்தபடியே காரில் ஏறி கையசைத்து பறந்தான்.. அவன் கடமைகள் துரத்த..


இங்கே காதல் என்பது பல விதமானது.அதை புரிந்து கொண்டு காதலிப்பவர்கள் பல பேர்.. வெறும் தேகத்தோடு சம்பந்தப்படுத்திய காதல் அந்த தேக சுகம் தீர்ந்ததும் கரைந்து விடுகிறது; உணர்வில் கலந்து உயிரோடு கலந்து நேசித்த காதல் பல யுகங்கள் கடந்தும் இருக்கிறது என்று யோசித்தபடியே இருந்தேன்..





நானோ வேகமாக போகும் அவன் காரை வேடிக்கை பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்..காற்றினிலே வரும் கீதம்..என்று எங்கோ எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா குரல் எனது செவிகளுக்கு இனிமை சேர்த்தது..


பின் குறிப்பு:-


காதல் எப்போதும் ஓர் ஈர்ப்புதன்மை கொண்டது.. அந்த காதலை மட்டும் நேசிப்பவர்கள் இங்கே பலவிதம்; அந்த காதல் கிடைக்கவில்லை என்று தன்னை தானே மாய்த்துக் கொள்பவர்கள் அதிகம்.. காதலில் வீழ்ந்து பைத்தியம் ஆனவர்கள் பல பேர்; காதலில் தீவிரமாக இருந்து தன்னை காதலிக்காதவர்களை ஆசிட் ஊற்றி பழி வாங்க துடிப்பவர்கள் சிலபேர்; இப்படி காதல் பல வகை..


ஆனால் இந்த எதிலும் இல்லாத தனித்துவமான காதல் போற்றத் தக்கது..அப்படியான காதலை நாமும் கூட ரசிப்போம்.. இல்லையா..


இதே போல இன்னும் பல பயணங்களில் சந்திக்கலாம் வாங்க நெஞ்சங்களே🧚🙏🤝💫🦋✨.


#இளையவேணிகிருஷ்ணா.




சனி, 24 செப்டம்பர், 2022

இறைவனும் நானும்


இறைவன் எனக்கு

சோதனை வைக்கிறான்

நான் அவனுக்கு சோதனை

வைக்கிறேன்..

இப்படியே இருவரும்

ஒருவருக்கொருவர்

சோதனை வைத்து விளையாடி

வாழ்வின் பயணத்தை

சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறோம்..

#இளையவேணிகிருஷ்ணா.

பேச்சற்ற நாட்களின் அமிர்தம்


எவரோடும்

ஒரு நாள் அவன் பேசவில்லை...

எவரும் அவனோடு 

பேசவில்லை..

அந்த நாளின்

அமிர்தம் கொஞ்சம் கொஞ்சமாக

அவன் சுவைக்கிறான்..

வாழ்வின் சூட்சமம்

அவனுக்கு விளங்கியது...

பேச்சற்ற நாட்கள்

இங்கே கிடைப்பது அரிது

அப்படி ஒரு நாள்

என்னையும் தேடி வந்தது..

என்னோடு நீ பயணிக்க

தயாரா என்றது..

எந்த கேள்விகளும் இல்லாமல்

அதனோடு பயணிக்க

தொடங்கி விட்டேன்..

நானும் அமிர்தம் 

சுவைக்க வேண்டும் அல்லவா?

#இளையவேணிகிருஷ்ணா.

நிசப்தம் காத்திருக்கிறது..கொண்டாடி மகிழ


ஆராவாரமான அலைபேசி

அழைப்புகள்

இல்லாத இந்த நாளை

நான் கொண்டாடி தீர்க்கிறேன்..

அத்தனை ஆனந்தம் உள்ளதா

எந்த அழைப்பும் வராமல்

இருப்பதில்?

நான் ஆச்சரியம் அடைந்து

பிரமித்து இருப்பதை பார்த்து

இயற்கை இது என்ன

இன்னும் இருக்கிறது

நீ இங்கே கொண்டாடி மகிழ 

கோடான கோடி நிசப்தங்கள்

உன் வருகைக்காக

காத்திருக்கிறது...

சப்தங்கள் அற்ற

அந்த அற்புத நிகழ்வொன்றில்

கலந்து விடும் போது

வாழ்வின் அர்த்தம்

உயிர்ப்பு அடைகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.


உயிரற்ற குரலுக்காக..


இங்கே ஒவ்வொரு நொடியும்

உங்களோடு களித்திருக்க 

காத்திருக்கிறது...

இந்த பிரபஞ்சம்...

நீங்களோ அங்கே

யாரோ ஒருவரின் 

உயிரற்ற குரலுக்காக

தவம் இருக்கிறீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.




வெள்ளி, 23 செப்டம்பர், 2022

எனது கடந்த கால நினைவலைகள்

 

இந்த அனுபவம் வேறு மாதிரி எனக்கு..

தணிக்கை படிப்பை நான் மேற்கொள்ளும் போது தணிக்கையாளரிடம் கண்டிப்பாக பயிற்சி சேர்ந்து அதற்கான சான்று வாங்கி சி.ஏ இன்ஸ்டியூட்டில் தந்தால் தான் நாம் மேற்கொண்டு தணிக்கை படிப்பை மேற்கொள்ள முடியும்... அப்படி தணிக்கையாளர் அலுவலகத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாலையில் நாம் அனைத்து பணிகளையும் முடித்து கிளம்பும் போது வேக வேகமாக ஒரு கிளையண்ட் வருவார் பாருங்கள்.. அப்போது மாலை ஏழு மணியை நெருங்கி கொண்டு இருக்கும்.. சம்பந்தப்பட்ட கிளையண்ட் கணக்கு வழக்குகளை நாம் தான் மேற்கொண்டு இருப்போம்.. அப்போது எமது தணிக்கையாளர் நீதானே அம்மா இவர் பைலை பார்த்து வருகிறாய்.. கொஞ்சம் இருங்கள் என்று சொல்வார் பாருங்கள்.. அப்போது வேறு வழி இல்லாமல் நாம் இருந்து அவர் கேட்கும் விளக்கங்கள் எல்லாம் முடித்து வெளியே வந்து வேகமாக சாலையில் இறங்கி நடக்கும் போது என்னை கடந்து ஒரு பேருந்து போகும்.. அந்த போர்டை பார்த்தால் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் பேருந்தாக இருக்கும்.. நான் எப்படியோ சென்று கொண்டு இருக்கும் பேருந்தில் வேகமாக படிக்கட்டில் கால் வைத்து ஏறும் போது என்னை நடத்துநர் ஒரு பார்வை பார்ப்பது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி தெரியாது..அப்படா ஒரு வழியாக பேருந்து கிடைத்து ஏறி விட்டோம் என்கின்ற நிம்மதி தான் இருக்கும்..

ஏனெனில் சென்னையில் நாம் பேருந்திற்காக காத்திருக்கும் போது நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு போக வேண்டிய பேருந்தை தவிர எல்லா பேருந்தும் நம்மை கடந்து போகும்..அது சென்னைவாசியாக வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்..

விவேக் ஒரு படத்தில் சொல்வது போல அவர் கொஞ்சம் தள்ளி சென்று நிற்பார்.. பேருந்து நிலையம் இதுதானே ஏன் அங்கே அவ்வளவு தூரத்தில் நிற்கிறீர்கள் என்று அந்த படத்தில் மக்கள் கேட்பார்கள்.. அதற்கு அவர் சொல்லும் வசனம் என்றைக்கு சென்னையில் பேருந்து பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறது என்று சிரிப்பார்...

இப்படி தான் எனது சென்னை வாழ்க்கை அமைந்தது...

ஏதோ இந்த மீம்ஸ் பார்த்தவுடன் எனக்கு எனது சென்னை அலுவலக நினைவலைகளை பகிர தோன்றியது 😊

#மலரும் #நினைவுகள் 

#இளையவேணிகிருஷ்ணா.

சூட்சம பயணம் (1)

 

சூட்சமத்தின் பயணத்தில்

பயணிக்கிறேன்

தனியொருவனாக..

சில பூச்சிகளின்

சத்தத்தையும்

சூட்சம வெளிச்சத்தையும் மட்டும்

துணையாகக் கொண்டு...

ஏன் அந்த பயணம் என்று

அங்கே சிலர் கேட்பது

காதில் விழுகிறது..

நான் சொல்லும் பதில்

அவர்கள் செவிகளுக்கு சென்று

சேரவில்லை..

இந்த அபூர்வ பயணத்தில்

நான் காணும் காட்சிகளை

நான் மட்டுமே ரசிக்க முடிகிறது

துணையில்லா இந்த பயணத்தில்

துணையை தேடி அலைவதில்

எந்தவொரு பயனும் இல்லை..

இந்த ஒரு தனி 

பயணத்தின் கதையை

நான் மட்டுமே உங்களுக்கு

விளக்க அனுமதி 

கிடைத்திருக்கிறது..

காத்திருங்கள்..

இன்னும் 

சுவாரசியமான பயணத்தின்

சூட்சமத்திற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

சித்தரும் பித்தரும்

 

இந்த பிரபஞ்சத்தில்

சித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை

பித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை..

சித்தரும் பயம் இல்லாதவர்

பித்தரும் பயம் இல்லாதவர்

சித்தருக்கும் துயரம் இல்லை

பித்தருக்கும் துயரம் இல்லை

இங்கே இருவரையும் 

புரிந்துக் கொள்ள

எவரும் துணிவில்லை

இருவரும் இந்த உலகை

கண்டுக் கொள்ளாமல்

பயணிப்பதால் நிம்மதியாக

இருக்கிறார்கள்..

இவர்களின் நிம்மதியை பார்த்து

சம்சாரிகளோ

எரிச்சல் அடைகிறார்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 22 செப்டம்பர், 2022

சூட்சமத்தில் நீ..

 

ஸ்தூலத்தில் பிரிந்து

பல வருடங்கள்

ஆகிறது நாம்

நம்ப முடியவில்லை..

சூட்சமத்தில் 

என் மனதோடு நீ

ஒரு நொடியும் பிரியாமல்

பயணிப்பதால்..

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 21 செப்டம்பர், 2022

சூட்சமத்தை மறந்து

 

அத்தனை 

ஸ்தூல சொத்துக்களையும்

தனக்கானது என்று

எடுத்துக் கொண்ட

பிள்ளைகள்

என் சூட்சம பாவ செயல்களால்

சேர்க்கப்பட்டது என்பதை 

மறந்து விடுகிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

விடை தெரியா கேள்வி இது


 அந்த இரவின் நிழலில்

ஓய்வெடுக்கிறேன்...

என் கவலைகளை

சுமந்த மனமோ

என்னை மௌனமாக

பார்க்கிறது...

நாளை இவன் நிலை

என்ன என்று...

எப்படியும் விடியலுக்குள்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்

கொண்டு பயணிக்க

காத்திருக்கிறேன் நான்...

நிழல் தந்த இரவோ

என்னை விட்டு

விலக மனம் இல்லாமல்

தவிக்கும் போது

அந்த விடியலில்

உதித்த சூரியன்

உற்சாகமாக கை கொடுக்கிறான்...

நீ கவலைக் கொள்ளாதே

நான் இனி அவனுக்கு

வழி துணையாக

என்று...

இரவும் பகலும் மாறி மாறி

பாதுகாத்த நானோ

விடை பெறும் நாளும்

வந்தது..

அப்போது அங்கே

இரவின் நிழலுக்கோ

விடியலில் தோன்றும்

சூரியனுக்கோ

அவசியம் இல்லாமல்

போனது...

அப்போது என் 

கவலைகள் எங்கே

கரைந்து இருக்கும்

விடை தெரியா

கேள்வி இதற்கு

எவரேனும் பதில்

தெரிந்தால் சொல்லுங்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

 

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஊடலின் பிடியில்





ஊடலில் எல்லாம்

நம் காதல்

இதயத்தில் அமைதியாக

எரிகிறது....

நீறுபூத்த நெருப்பு போல..

இருவரில் எவரேனும்

ஒருவர் பேசினாலும் போதும்

 அந்த நெருப்பு தணலாக

பற்றிக் கொள்ளும்

நம் இருவரையும்

காதலின்

பெரும் பிணைப்பின் ஊடாக..

எவர் பேசுவது என்பதின்

தயக்கம் ஊடலின் பிடியில்

சிக்கி தவிக்கிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வாழ்வின் போதை


ஏதாவது ஒரு போதை

இல்லாமல்

இந்த வாழ்வை வாழ்வது

மிகவும் கடினம்..

ஆனால் நாம் தேடும் 

போதை எது?

என்பதில் தான்

நமது வாழ்வின் 

சுவாரஸ்யமான நகர்வுகள் 

அடங்கி உள்ளது..

#இளையவேணிகிருஷ்ணா.

சிந்தனை துளிகள்


பிராண்ட் என்பது 

போட்டு இருக்கிற 

சொக்காயில் இல்லை;

வாழ்கின்ற 

வாழ்க்கையில் உள்ளது..

#புஷ்பா படத்தில் வரும் வசனம்..

அதேபோல் தான் 

அலங்காரம் செய்து கொண்டு இருப்பவர்கள் 

எல்லோரும் புத்திசாலிகள் 

இல்லை;

அலங்காரம் இல்லாமல்

மிகவும் யதார்த்தமாக 

இருக்கும் எல்லோரும்

முட்டாள்கள் இல்லை...

அழுக்கு படிந்த நிலையில் 

இருக்கும் சித்தரை தேடி 

இந்த பிரபஞ்சத்தில் 

கோடான கோடி மக்கள் 

அலைந்து தேடி 

திரிகிறார்கள்...இங்கே 

#ஆத்ம ஞானத்தின் முன் 

எல்லாமே இங்கே தூசி...

#இரவுசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 17 செப்டம்பர், 2022

மண் சிறப்புற வேண்டும்

 

இன்று ஒரு தலையங்கம்:-

இதை பற்றி எப்போதோ எழுத வேண்டும் என்று நினைத்தேன்.. இன்று தான் அதற்கான தருணம் அமைந்தது.. சமுதாய வானொலி தொடங்க வேண்டும் என்று பலபேருக்கு ஆசை.. ஆனால் அதற்கான செலவினங்கள் பார்த்தால் அரசாங்கத்திடம் உரிமை வாங்கவே பல இலட்சங்கள் செலவு ஆவதாக சொல்கிறார்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.. இன்றைய தேவையில் சமுதாய வானொலி மிகவும் அவசியமான ஒன்று.. குறிப்பாக விவசாய பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை சமுதாய வானொலி மூலம் வழங்கலாம்.. மதிப்பு கூட்டி வேளாண் பொருட்களை விற்பனை செய்ய...அந்தந்த பகுதி வானிலை அறிவிக்க.. குறிப்பாக அரசாங்கம் அறிவிக்கும் மானியம் தொடர்பான விபரங்களை அடிக்கடி விவசாயிகளுக்கு சொல்ல முக்கியமாக வேண்டும்.. ஏனெனில் தோட்டக்கலைக்கு அரசாங்கம் அவ்வளவு மானியங்கள் அறிவித்து உள்ளது.. நடைமுறையில் அவைகளை உண்மையான விவசாயிகள் அனுபவிக்கிறார்களா என்று பார்த்தால் செய்தித்தாள்களில் வரும் செய்திகளே அதற்கு சான்று.அதில் எந்தளவுக்கு ஊழல் நடைபெறுகிறது என்று..

மத்திய அரசாங்கம் எவ்வளவோ துறைகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.. (தற்போது பெரும்பாலும் பெயரளவில் என்பது வேறு விசயம்) இந்த சமுதாய வானொலி தொடங்க ஆர்வமாக உள்ளவர்களுக்கு ஊக்கம் அளித்து விவசாய பணிகளுக்கு உதவினால் என்ன?மண் சார்ந்த விசயங்கள் பாரம்பரிய கலை மற்றும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பண்பாட்டு கலைகள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்க இப்படி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

ஏதேதோ இலவசங்களை அறிவிக்க போட்டி போட்டு கொண்டு யோசிக்கும் அரசியல் கட்சிகள் இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்..

மேலும் விவசாயிகள் முட்டாள்கள் இல்லை.. எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பெரும்பாலும் நன்றாக படித்து விட்டு மிகவும் உற்சாகமாக வயலில் இறங்கி வேலை செய்பவர்கள் அதிகம்.. அவர்கள் இரவில் தினமும் விவசாயம் சார்ந்த விசயங்களை கலந்துரையாடல் செய்வது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்..இதை நான் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் மக்கள் எல்லோரும் அப்டேட்டாக இருக்கிறார்கள்..

ஆனால் அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு தேர்தல் எதை இலவசமாக கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறது...

இங்கே இந்த பதிவை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால் எனது நட்பு வட்டாரத்தில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்..

அவர்கள் இந்த பதிவை கொஞ்சம் அதிகப்படியான அக்கறையோடு யோசித்து மேலிடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்...என்பதற்காக தான்..

நீங்கள் கேட்கலாம் இதை நீங்கள் ஏன் மத்திய அரசாங்கத்தின் ஒலிபரப்பு துறைக்கு ஒரு மெயில் அனுப்பி கேட்கக் கூடாது என்று..

அந்த மெயில் எல்லாம் பத்தோடு பதினொன்றாக தான் இருக்கும்..

ஆனால் இங்கே இந்த பதிவை வாசிக்கும் அரசியல் நட்புகள் நேரடியாக முயற்சி செய்யவும் கூடும்.. விவசாயிகள் நலன் கருதி...

யோசிப்பார்கள் என்று நம்புவோம்..

#சமுதாய #வானொலி

#இளையவேணிகிருஷ்ணா.

கரை மீது வீசி எறிந்து விடு

 

அலை மீது விழுந்த 

இலை போல

உன் மீது விழுந்த மனமோ

இங்கே ஊசலாடுகிறது..

நீயோ அதை 

கண்டும் காணாமல் கடந்து 

செல்கிறாய்..

கொஞ்சம் இரக்கம் கொண்டு

என் மனதை 

கடலோரத்தில் உள்ள கரைமீது

வீசியேனும் எறிந்து விட்டு

செல் என் இரக்கமற்ற

காதல் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஆத்மாவின் ஆனந்த தாண்டவம்


வெந்து தணிந்த

அமைதியான

அந்த சம்சாரத்தின்

முடிவில்

சாம்பல் பொடி பறக்க

காலவரையறையின்றி

ஆத்மாவில் இருந்து

வெளிப்படும் ஆனந்தம்

தாண்டவமாடி 

தீர்க்கும் காலம் 

எவர் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா. 

#ஆத்ம தத்துவ கவிதை.

என் மீது பேரன்பு கொண்ட ரசனை


என்னை சுற்றி நடக்கும்

நிகழ்வுகள்

என்னை கேலி செய்து

சிரிக்கிறது...

நீ இந்த பிரபஞ்சத்தில்

கொஞ்சமும் வாழ

தகுதி இல்லாதவர் என்று..

நான் அதை எதிர்க்காமல்

ஆமோதிக்கிறேன்..

நான் இதுவரை மூச்சு காற்றும்

கொஞ்சம் ரசனையும்

போதும் என்று நினைத்தேன்..

நடப்பதென்னவோ வேறாக

இருக்கும் போது

நான் என்ன செய்ய இயலும்?

கொஞ்சம் கவலையோடு தான்

இருந்தேன்..

ஏன் இந்த கவலை என்று

என் மீது பேரன்பு கொண்ட

ரசனை கட்டிக் கொண்ட போது

நான் இந்த பிரபஞ்சத்தை பார்த்து

பலமாக சிரித்தேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

மாயா


 வாழ்வின் நகர்வுகள்

நரகத்தை பௌர்ணமி போல

 பெரிதாக காட்டி 

சொர்க்கத்தை

மூன்றாம் பிறை போல் சிறியதாக

 காட்சிப்படுத்தி

மறைந்து விடுகிறது...

இது புரியாமல் நாம்

மாயையில் உழன்று

அதனால் தினம் தினம்

தின்று தீர்க்கப்படுகிறோம்..

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 14 செப்டம்பர், 2022

பிரபஞ்சத்தில் எனது பயணம்...

 


நான் எனது

என்ற மாயையின் பிடியில்

சிக்கி கதறி அழுகிறேன்

அரவணைக்க கரங்கள்

தேடி தேடி அலைந்தும்

பயன் இல்லை...

வலுக்கட்டாயமாக

போவோர் வருவோரின்

கரங்களை பிடித்து

இழுக்கும் போது

உதறி நடக்கும்

மனிதர்களின் மரித்த

உள்ளத்தில்

மனித நேயத்தை

எதிர்பார்ப்பது கானல் நீர்

அழுது புலம்பி பயனில்லை

என்று வைராக்கியம் துணை

கொண்டு

ஒரு சித்தரை போல

ஊர் ஊராக

அலைந்த போது

ஏதோவொரு பேரமைதி

கிடைத்தது...

யாதும் எனது ஊர் தான் 

என்று முணுமுணுப்பதை

பார்த்து

அங்கே ஒருவர்

யாவரும் கேளீர் தானே

என்று என்னிடம்

புன்னகையோடே

கேட்டார்..

கேட்டவருக்கு

பலத்த புன்னகை

மட்டுமே பரிசாக

தந்து விட்டு

அந்த இடத்தை விட்டு

கடக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.




நட்சத்திரத்தில் உன் திலகம்


அந்த நட்சத்திரத்தின்

நகர்வில்

நான் என்னை மறந்து

ரசிக்கிறேன்...

அன்றொரு நாள்

உன் நெற்றியில்

நான் இட்ட திலகம்

ஒன்றும்

இந்த வடிவத்தில் தானே

இருந்தது என்று..

தற்போது வேறொருவர் கையால் நீ இட்டுக் கொண்ட 

திலகம் ஏனோ 

என் நினைவில் வரவும்

அந்த நட்சத்திரம்

விண்ணில் இருந்து

கீழே விழவும்

சரியாக இருந்தது..

பிரிவுகள் அந்த நட்சத்திரத்தையும் 

விட்டு வைக்கவில்லை என்று

#இளையவேணிகிருஷ்ணா.



மலரின் பயணம்


அகிலத்தை இரட்சித்து 

காக்கும்

அந்த இறைவனுக்கும்

அக்கிரமம் செய்து

பிழைக்கும்

பெரும்பாலான 

அரசியல்வாதிகளுக்கும்

இந்த உலகில்

இல்லற வாழ்வை

தொடங்கி இன்புற

காத்திருக்கும்

புதுமண தம்பதிகளுக்கும்

இந்த உலகின் வாசத்தை

முடித்து

உன் வாசத்தை

உடலில் சுமந்து

செல்லும்

மனிதர்களுக்கும்

நீ ஒரு வரம்...

#இளையவேணிகிருஷ்ணா.



செவ்வாய், 13 செப்டம்பர், 2022

சிலாகித்து சொல்ல...

 


உன் அணைப்பில்

உன் மூச்சு காற்றின்

மொழியில் நீ உணர்த்திய

காதலை

உதடுகள் எப்படி முயன்றும்

அந்த உணர்வுபூர்வமான

காதலை சொல்ல முயன்று

தோல்வியை தழுவி

ஏமாற்றம் அடைந்து

சோர்ந்து விடுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.


திங்கள், 12 செப்டம்பர், 2022

உற்சாகத்தை தூவி...


 இந்த பிரபஞ்சத்தின்

செல்லக் குழந்தை நான்..

அதன் ஒவ்வொரு நகர்விலும்

எனது உற்சாகத்தை

தூவி எனது இருப்பின்

நோக்கத்திற்கான

அடையாளத்துடன்

பயணிக்க வைக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 8 செப்டம்பர், 2022

நான் சுவைக்கிறேன் ஆழ்ந்த அமைதியை

 ஏன் மௌனமாக

இருக்கிறாய் என்கிறார்கள்

நான் ஒன்றும் இல்லை


ஓர் ஆழ்ந்த அமைதியில்

பயணித்து அதை அனுபவித்துக் 

கொண்டு இருக்கிறேன் 

என்கிறேன்..


சிறு முறுவலோடு...

அவர்கள் என் பதிலை

ஏற்றுக் கொள்ளாமல்

என் வாழ்வை பல கோணத்தில்

சித்தரித்து

நான் ஆச்சரியப்படும்படி

பரிசளித்து செல்கிறார்கள்..

நான் என் வாழ்வை வாழ

கொஞ்சம் அனுமதியுங்களேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

இறப்பென்பது பரிணாமம்

 

பெரும் சாம்ராஜ்யம்

ஆண்டாலும்

இறப்பு என்பது

இழப்பா என்று

கேட்டால்

இழப்பல்ல...

அதுவொரு பரிணாமம்

இந்த உடலில் கிடைத்த

புகழை சுமந்து

இன்னொரு ஜீவன்

அந்த அரண்மனையில் உதிக்கலாம்...

இந்த பிறவியின்

ஞாபகங்கள்

அந்த உடலுக்கு

கிடைக்காமல்

சாதாரண இளவரசியாக

வலம் வரலாம்...

இங்கே இருவினையின்

எச்சத்தை தவிர

வேறெதுவும்

நிலையில்லை...

ஆன்மாவின் பயணம்

முடிவற்றது...

#இரங்கல் கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 7 செப்டம்பர், 2022

கழுதையை ஏசாதீர்கள்

 


கழுதையை ஏசாதீர்கள்..

அத்தனை ஜீவராசிகளும்

படை திரண்டு

ஒரு நாள்

அதன் பின்னால்

போகும் போது

நீங்கள் மட்டும்

தனித்து விடப்படுவீர்கள்..

இங்கே கழுதைகள்

ஆத்ம தத்துவத்தை

உணரக் கூடாது என்று

விதி ஏதும் வகுக்கப்படவில்லை..

அரசனின் பின்னால்

போகிறவர்கள்

ஒரு நாள் கழுதையின்

பின்னால் போவதை

வேடிக்கை மட்டுமே

பார்க்க முடியும்..

அல்லது

மனசஞ்சலத்தோடு

வீதி தோறும்

திரியக் கூடும்...

இதை

மனதில் நிறுத்துங்கள்...

#தத்தவகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

அந்த நாளில் ..

 

எந்தவித எண்ணங்களும்

என்னை தொந்தரவு செய்ய

துணியாத நேரத்தில்

நீ தைரியமாக

உன் நினைவுகளை

என் நெஞ்சத்தில்

உலாவ விட்டு விட்டு

எங்கோ சென்று விட்டாய்..

நானோ அதன் துன்புறுத்தலில்

பைத்தியமானேன்...

கண்டுக் கொள்ள எவரும்

இல்லாத அநாதையாக

தவித்துக் கிடக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 எப்போதும் இணைந்து இருங்கள் இது ஒரு வித்தியாசமான இசை பயணம் நேயர்களே 🎻🙏🎻

இசை பல வகைகள்.. பாடல்கள் பல வகைகள்.. அதிலும் வித்தியாசமான பாடல்களை கேட்டு ரசிக்க இணைந்து இருங்கள் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில்..

இது இசையோடு ஓர் நெடுந்தூர பயணம்..✨💫🎸🥁🎙️☔🛤️🏝️https://play.google.com/store/apps/details?id=krishna.fm3🔥

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna


.fm3

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

என் ஜனனம்


கருவிலேயே எமனை

எதிர்த்து இந்த பூமிக்கு

வந்தவள்..

தினம் தினம் எமனிடம்

போராடுகிறேன்..

எமனே ஒவ்வொரு முறையும்

தோற்று தலைகுனிகிறான்..

அந்த ஈஸ்வரனே எமனிடம்

சொல்வான்..

அந்த பக்தையிடம் மட்டும்

கவனம் என்று..

நான் பிறந்தது 

ஓர் சராசரி நிகழ்வல்ல..

எண்ணற்ற பலருக்கு

ஓர் அபூர்வ ஜனனம்

என்பதை தானாகவே

விளங்கி விடுகிறது

அல்லது விளக்கப்படுகிறது...

நான் அந்த வாமனனின் அம்சம்..

என்னிடம் கொஞ்சம்

கவனமாக இருங்கள்..

ஆதரிக்கவும் கூடும்..

பாதாளத்தில் புதைத்து

அழுத்தவும் கூடும்..😊

அது அவரவர் செய்கை பொறுத்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

பொய் முகம் காட்டாத மேகம்


எதுவுமே வேண்டாம் என்று

இருக்கும் பொழுது..

எதுவோ நடந்து விட்டு

போகட்டும் என்று

இருக்கும் பொழுது..

வாழ்வியல் பயணத்தின்

சுவடுகளை மனதில் தேங்காமல்

பயணிக்கும் பொழுது..

எந்தவித ஆவலும்

இல்லாமல் இருக்கும் பொழுது

இதோ இந்த மழைக் கால மேகம் ☁️

ஒன்று என் கைபிடித்து

ஏமாற்றாமல்

கொஞ்சம் கூட பொய் முகம் காட்டி

பாவனை செய்யாமல்

என் வாழ்வின் இந்த நொடிக்கு

அர்த்தம் கற்பித்து

என்னை அமைதியடைய செய்கிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...