ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

கல்லறை மனிதர்கள் காத்திருக்கிறார்கள்...


கல்லறை மனிதர்கள்

காத்திருக்கிறார்கள்

இன்னும் கனவுகள்

பலிக்கும் நாளுக்காக!

நடப்பதோ நாடக கூத்து

இதில் இவர்கள்

கனவுகளுக்கு

குறைந்தபட்ச மரியாதை

இல்லை என்று

எவர் சொல்லக்கூடும்

கிசுகிசுப்பாகவேனும்

அந்த கல்லறை மனிதர்களிடம்!

#கல்லறைமனிதர்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இரவு சிந்தனை ✨


வாழ்தல் ஒரு சாபம் என்கிறார்கள்

அங்கே பல பேர்...

நானோ வாழ்தல் ஒரு வரம்

நீங்கள் எந்த ஜட பொருளோடோ

எந்த ஜீவனோடோ

பெரும் பற்றோடு பயணிக்காத வரை

வாழ்தல் ஒரு பெரும் வரம் என்றேன்!

அவர்களோ அது எப்படி என்றார்கள்...

அந்த பாதையில் 

பயணித்து பாருங்கள்

அப்போது தான் தெரியும் என்றேன்...

#இரவு சிந்தனை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :28/04/24.

ஞாயிற்றுக்கிழமை.

முன்னிரவு பொழுது 11:25.

இரவு கவிதை 🍁


என் வலி எனும் உணர்வுகளை நிச்சலனமாக 

உள் வாங்கி வெளியே தள்ளி

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்....

இந்த வெட்ட வெளி என்னை 

தழுவிக் கொண்டு

ஆறுதல் சொல்கிறது...

நான் என் உணர்வுகளை கடத்தி வைக்க எந்த ஜீவனையும் தேடவில்லை...

அதை மிக கச்சிதமாக

எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த இயற்கை செய்து முடித்து விடுகிறது...

ஒருவரின் தேடலும் இல்லாமல் இங்கே நான் வாழ கற்றுக் கொண்டேன்

மிகவும் இயல்பாக என்று

அந்த காலம் என்னை உதாரண புருஷராக்கி அங்கே பலபேருக்கு கை காட்டி விளக்கம் சொல்லி 

செல்லும் போது

நான் நானாக பயணிப்பதை இங்கே வேடிக்கை பார்க்க

இவ்வளவு கூட்டமா என்று

கொஞ்சம் மலைத்து போகிறேன்...

ஒரு தேடலும் 

ஒரு இலட்சியமும் இல்லாமல்

இங்கே பயணிப்பது எனக்கு அவ்வளவு எளிதாக இருப்பது

வரம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது

அங்கே ஒரு மனம் நலன் சரியில்லாத ஒருவர் தேமே என்று வானத்தை பார்த்துக் கொண்டு சாலையின் நடுவில் நிற்கிறார் என்று

யாரோ ஒருவர் கூப்பாடு போட

என்னை நோக்கி மறுபடியும் ஒரு கூட்டம் கூடி விட்டது...

இங்கே வாழ்தல் ஒரு பிழையா பிழைப்பிற்கான சாடலா என்று முணுமுணுத்துக் கொண்டே

அவர்களை ஒரு பார்வையால் 

தீண்டி விட்டு நகர்கிறேன்...

அந்த முணுமுணுப்பிற்கும்

இங்கே அந்த கூட்டம் சாபம் 

கொடுத்து செல்கிறது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:52.

நாள் 28/04/24.

ஞாயிற்றுக்கிழமை.


சனி, 27 ஏப்ரல், 2024

பெரும் நகரத்தில் இருந்து விடை பெறும் போது...


அந்த பெரு நகரத்தில் இருந்து 

விடை பெறும் போது

என்னையும் அறியாமல் துக்கம் 

எனை பீடிக்கிறது...

அது நகரத்தை விட்டு பிரியும் துக்கமா 

இல்லை

அந்த நகரத்தின் பரபரப்பான 

சாலைகளில் இருந்து

விடை பெறும் துக்கமா 

தெரியவில்லை...

இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத இந்த நகரத்தின் பிரிதல் ஏதோவொரு கனத்தை மட்டும் தந்து செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை...

 #இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:09.

நாள்:27/04/24.

சனிக்கிழமை.

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அந்த ஈசலின் பெரும் காதல் .🍁🍁🍁


அந்த ஈசலின் பெரும் காதலை மறுக்க மனமில்லாமல்

சேற்றில் விழுகிறது

அந்த மழைத் துளி...

ஈசலும் அந்த இரவை கடந்து ஜீவித்து இருக்கவில்லை...

அந்த தூய்மையான மழைத் துளியும் ஜீவித்து இருக்கவில்லை...

இங்கே பெரும் காதலோடு ஒரு சில மணித்துளிகள் பயணித்து இறந்து விட்ட 

இந்த இருவரின் ஈடு இணை இல்லாத காதல்

இரவென்றும் பாராமல் ஏதேதோ

முணுமுணுத்துக் கொண்டே சாலையில் பயணிக்கும்

அந்த நகரத்தாரை கூவி அருகே அழைத்து ஒரு சில விநாடிகள் துக்கம் அனுசரிக்க சொல்கிறேன்...

அந்த துக்கம் அனுசரிக்க நாங்கள் செய்யும் விநாடிகளின் விரயத்தை எங்களுக்கு தாங்கவொணாத துயரத்தை கொடுத்து விடும் என்று குரல் கம்ம சொல்லி செல்கிறார்கள்...

இங்கே வாழ்தல் இனிதா

இறத்தல் இனிதா

பெரும் காதல் இனிதா...

நீங்களே சொல்லுங்கள்

பிரபஞ்சத்தின் நாயகர்களே!

#பிரபஞ்சத்தின்நாயகர்கள்.

#இரவுகவிதை.

முன்னிரவு நேரம் 11:25.

நாள்:26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

அதீத காதல் 🍁

 


எனக்கு உன் மீது உள்ள கோபத்தில் நான் அந்த தந்தி கம்பிகள் அறுந்து விடும் அளவுக்கு இசைத்து

உன் மீது நான் கொண்ட அதீத காதலை இந்த பிரபஞ்சம் அறிய அறிவித்து விடுவேன் என்று

நீ அங்கே உன் தோழிகளோடு சாதாரணமாக சிரித்து சொல்லிக் கொண்டே என்னை கவனிக்கிறாய்...

நான் உன்னை அப்படி அறிலித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று இல்லை...

என் கையில் இருக்கும் இசைக் கருவியோடு நான் கொண்ட காதலை உன்னை காயப்படுத்தி அறிலித்து விட்டேன்...

என் பெரும் காதலை எப்போதும் நிராகரிக்காத

அந்த இசைக் கருவியை விட

உன் இதயம் மேலானதாக எனக்கு தோன்றவில்லை...

நான் உன் மீது தொடுத்த அந்த காயங்கள் 

ஆறி விடக் கூடும்...

என் கையில் எந்த கேள்விகளும் 

கேட்காமல் அடைக்கலம் ஆன

இசைக் கருவிக்கு என்னை விட 

வேறு துணை யார் இருக்கக்கூடும்...

சென்ற நொடி வரை

என்னை காயப்படுத்திய

முன்னாள் காதலியே...

#இரவுகவிதை.

நாள்:26/04/24.

முன்னிரவு 11:05.

#இளையவேணிகிருஷ்ணா.

வீழ்ந்துக் கொண்டே இருக்கும் அந்த உயிர் துளிகள்...


கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்று விடும் காலத்தின் முன் மண்டியிட மனமில்லாமல் கதறி அலைகிறேன் இங்கும் அங்கும்...

என் வாழ்வின் துளிகள் கரைகிறது சத்தம் இல்லாமல்...

நானோ இன்னும் ஏதோ ஒன்று என்னுள் உயிர் கொண்டு அலைவதை மட்டும் கையில் பிடித்து விட எண்ணம் கொண்டு பகீரத முயற்சி கொண்டு அகத்தில் ஆழமாக விழுகிறேன்...

விடுபட்டு விட மட்டும் எண்ணம் கொண்ட அந்த உயிர் துளி மட்டும் கையில் அகப்படாமல் உள்ளே உள்ளே வீழ்ந்துக் கொண்டே இருக்கிறது...

என் கையில் அகப்படாமல்

வீழ்ந்துக் கொண்டே இருக்கும் அந்த உயிர் துளிக்கும் ஏதோவொரு இலட்சியம் இருக்கும் போது நான் ஏன் அதை துரத்தி அலைய வேண்டும் என்று

விட்டு விட்டு மேலே மேலே

நான் மிதந்து வருவதை

அந்த காலம் மட்டும்

கண்டும் காணாமல் பயணிப்பது 

எனக்கு நியாயமாக தெரியவில்லை...

உங்களுக்கும் அப்படி தானே?

#இரவுகவிதை.

நேரம் முன்னிரவு 10:45.

நாள் 26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

நினைவுகள் மட்டும் அசைப்போட்டு...

 


தொடர் வண்டியின்

பயணத்தில் ஆயிரம் ஆயிரம்

கனவுகள், வாழ்வியல் நிகழ்வுகள், 

மெல்ல மெல்ல

கடந்து செல்கிறது...

நேற்று நம்மோடு பயணித்த 

பயணிகள் இன்னும் 

சில மாதங்களோ வருடங்களோ

பயணித்து விட்டு 

கலைந்து விடத் தான் போகிறார்கள்...

நம்மோடு கண்ணுக்கு தெரியாமல் 

பயணிக்கும் காற்றைப் போல ...

நம்மோடு சேர்கிறார்கள் 

பிரிகிறார்கள் மனிதர்கள்...

அவர்கள் விட்டு சென்ற 

நினைவுகள் மட்டும் நம் மனது 

அசைப்போட்டு 

உயிர்ப்பித்துக் கொண்டே 

இருக்கிறது....

இங்கே உயிர்ப்போடு ஜீவனோடு 

பயணிக்கும் அந்த நிகழ்வுகள் மட்டும் 

இல்லை என்றால்

இந்த வாழ்க்கை பலபேருக்கு

மரத்தில் இருந்து விடுப்பட்ட 

சருகை போல பலபேரின் காலடியில் 

மிதிபட்டு மௌனமாக 

அழும் நிலையை தவிர வேறு 

என்னவாக இருக்க முடியும்???.

#இரவுகவிதை.

நாள் 26/04/24.

வெள்ளிக்கிழமை.

முன்னிரவு பொழுது 10:25.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

 


என் காதல் இசையோடு

கலந்து லயிக்கிறேன்...

அந்த மழைத் துளியின் 

சிறு குமிழில் ஏனோ

அந்த தெரு விளக்கின்

வெளிச்சத்திலும் உன் முகம்

தேடி தொலைகிறது

என் மனம்... 

என் அருகில் உள்ள மரத்தின் நிழல் மட்டும்

இரவின் சாயலை வெளிப்படுத்தி 

அந்த மழையில் கரைகிறது

நான் உன்னோடு கொண்ட 

அந்த காதலை போல...

#இரவுகவிதை.

நாள்:26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 24 ஏப்ரல், 2024

இளம் காலைப்பொழுது ✨


நேற்றைய நிகழ்வின்

சுவடுகளை துறந்து

உதிக்கும் இந்த ஆதவனின் 

கைகளில் அடைக்கலம்

ஆகிறேன் 

மிகவும் உற்சாகமாக....

எனது கையில் 

அடைக்கலம் ஆன

தேநீர் கோப்பையோ

எனது ருசியில் உனது 

இன்றைய கனவை

துவங்கி விடு என்கிறது...

இதை எல்லாம் கவனித்து கொண்டே 

என்னோடு பயணிக்கும் காலம்

ஒரு சிறு புன்முறுவலோடு 

சத்தம் இல்லாமல் 

என்னை சுமக்கும் கனம் தெரியாமல் 

புத்துணர்வோடு கடந்து செல்கிறது...

என் முன்னே எழும் அலைகளில் 

எனது இன்றைய 

பயணத்தின் திட்டத்தை 

எழுதி விட்டு

அந்த கடல் அன்னையிடம் இருந்து 

விலக மனமில்லாமல்

விலகி செல்கிறேன்...

என் சுவடுகளை 

அந்த அலைகள் வந்து ஆவலோடு

முத்தமிட்டு ஆசீர்வதிப்பதை

அறியாமலேயே....

#காலைகவிதை.

#நாள் 25/04/24.

#இளையவேணிகிருஷ்ணா.

#இளங்காலைப்பொழுது

நேரம் 6:30.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁


அந்த பக்கத்தின் வரிகள்

என் மனமெனும் இருக்கையில் 

அமர்ந்துக் கொண்டு

ஜென் நிலைக்கு

என்னை

அழைத்துச் செல்கிறது...

அருகில் இருக்கும் அந்த

மது கிண்ணமோ இதை எதையும் அறியாமல்

நுரைத்து குதூகலித்து

என்னை ஈர்க்க பல விதங்களில் 

நடனம் ஆடி

ஓய்ந்து உள்ளடங்கி ஊடல் 

கொள்கிறது...

ஒரு பெரும் காதலோடு 

தழுவ வந்த அந்த மதுவெனும் 

காதலனின் நிலையை 

இங்கே யார் அறியக் கூடும்???.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்: ஏப்ரல் 23.

#அந்திமாலைப்பொழுது.5:15.

சனி, 20 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁

 


ஏதோவொரு தேடலோடு

வாழ்க்கை நகர்கிறது!

எதை தேடுகிறோம் என்று

நாமே மறந்து விடும் அளவுக்கு

காலம் நம்மை கை பிடித்து

ஏதோவொரு மாய உலகிற்கு

அழைத்துச் செல்கிறது...

இதுவும் கடந்து போகும் என்று

அங்கே யாரோ என்னை நோக்கி

கூக்குரலிடுகிறார்கள் ...

நானோ அதனால் என்ன

நான் நிச்சலனமான மனதோடு

பயணிக்கும் போது

எதுவும் கடந்து போகட்டும்...

எதிலும் நான் இல்லை

அதனால் எனக்கு 

கவலை இல்லை என்றேன்

அவர்களை பார்த்து நிதானமாக

ஒரு புன்னகையோடு...😊

#இரவு கவிதை 🍁

#நாள்20/04/24.

சனிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

இரவு சிந்தனை ✨


ஆசைகள் 

அநாதையாகும் போது

நமக்கு ஞானம்

பிறக்கிறது !

#இரவு சிந்தனை 🍁

நாள் சித்திரை 3.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நான் ஒரு திக்கற்ற சுதந்திர பயணி 🚴🌆

வாழ்வெனும் பெரும் அலையில் 


ஒரு பேரமைதி கரையில்இளைப்பாறுகிறது...

அந்த பேரமைதி திடீரென சிலிர்த்தெழுந்து எந்த திசையில் பயணிக்கலாம் என்று

மேல் மனதிடம் யோசனை கேட்பதை அறிந்து ஓடோடி வந்துசட்டென்று நிறுத்தி விடுகிறது ஆழ் மனது...

இந்த கரையை விட வேறு எது உனக்கு ஆழ்ந்த அமைதியை கொடுத்து விட போகிறது...சும்மா வெறுமனே இந்த மணலில் படுத்து புரண்டு அலை வந்து உன்னை அணைத்துக் கொள்வதை பெரும் காதலோடு ரசித்து உன் அருகில் பறக்கும் அந்த பறவையின் சிறகில் சிலிர்த்து கண்களை மூடி கிடந்து விடுவதில் பெரும் சுகம் உன்னை துளைக்கும்...

அந்த துளைத்தலில் வலி இல்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று சொல்லி

தனது அறையில் சென்று 

முடங்கிக் கொண்டது...

இதோ அந்த பேரமைதியை தேடி நான் அந்த கடற்கரை சாலையில் அலைந்து திரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அதை பார்த்தவுடனே எனக்கு கொஞ்சம் தகவல் தெரிவித்து எனக்கு கொஞ்சம் அமைதியை கொடுத்து விட்டு பயணியுங்கள்...

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்ளும் நான் ஒரு திக்கற்ற சுதந்திர பயணி....

#திக்கற்ற சுதந்திர பயணி.

#தத்துவ கவிதை.

நாள் சித்திரை -2.

காலை 9:38.

#இளையவேணிகிருஷ்ணா.

சித்திரை முதல் நாள் சிந்தனை ✨

 


வணக்கம் நேயர்களே 🍁🦋🎉.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐🎻🦋.

கீழேயுள்ள லிங்கில் சித்திரை முதல் நாளில் இருந்து உற்சாகமாக வாழ்க்கை பயணத்தை எடுத்து செல்ல ஒரு சிந்தனை துளி உள்ளது.. கேட்டு முயற்சி செய்து பயனடையுங்கள் நேயர்களே 🎻✨🎉.

https://youtu.be/vQYP1s6QHY0?si=vy-YQa898qLAB31T

இரவு கவிதை 🍁

 


வாழ்வின் ஒவ்வொரு துளியும்

ஆனந்தம் எனும் அமிர்தத்தால்

நிரம்பி வழிகிறது!

நான் அதை பொருட்படுத்தாமல்

உப்பு தண்ணீரை இங்கே 

சுவைத்துக் கொண்டு

வாழ்வெனும் சாலையில்

சோகமாக பயணிப்பதை பார்த்து

அந்த காலம் கலகலவென்று

சிரித்து தொலைக்கிறது!

#இரவு கவிதை 🍁

நாள்: சித்திரை -1.

#இளையவேணிகிருஷ்ணா.

மதுரை சித்திரைத் திருவிழா

 


வாழ்வின் தாத்பரியம் ஆனந்தம் பேரானந்தம் தான்... அதிலும் சித்திரை என்றாலே மதுரை... மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர்... மனதிற்கு ஒரு பேரமைதி கொடுத்து விடும் சக்தி மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு உண்டு... சில இடங்களில் நடக்கும் தெய்வீக கொண்டாட்டங்கள் நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்து விடும்... அதில் என்னை ஆக்கிரமித்தது இந்த மதுரை சித்திரை திருவிழா... சைவம் வைணவம் இரண்டையும் இணைத்து ஒரு அருமையான ஆன்மீக பெருவிழா என்றால் நிச்சயமாக அது மதுரை சித்திரைத் திருவிழா தான்... அந்த பேரின்ப நிலைக்கு அந்த சுந்தரேஸ்வரர் நம்மை எல்லாம் தள்ளி விடுவது நம்மையும் அறியாமல் நம் ஆன்மாவை ஆக்கிரமித்து அங்கே சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுவது எதை உணர்த்துகிறது என்றால் இங்கே லௌகீகத்தில் சுகத்தை தேடி அலையாதே மானுடா...இதோ உன் மனதில் ஆக்கிரமித்து சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் என்னில் உன்னை கலந்து விடு! அது உனக்கு சுகத்தை மட்டும் அல்ல பேரின்ப நிலையை கொடுத்து மீண்டும் கருப்பையில் புகாத வண்ணம் ஆத்ம போதத்தை அளிக்கும் என்று சூட்சமமாக சொல்லி விடுகிறார்....

#மதுரைமீனாட்சி

#சுந்தரேஸ்வரர்.

#ஆத்மபோதம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் சித்திரை -1.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

உன்னோடு உள்ள ஊடல்...


எவ்வளவு முயன்றும்

என்னால் 

உன்னோடு உள்ள ஊடலை 

ஒரு சில மணி நேரங்களுக்கு மேல்

நீட்டிக்க முடியவில்லை

அங்கே வாசலில் எவரோ

வந்து நின்று 

அவரை கூப்பிடுங்கள் என்று

சொல்லும் போது ...

சில பல நாகரீகங்கள் கருதி...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.


அப்புறம்????

 


எப்போதாவது வரும் 

அலைபேசி அழைப்புகளுக்கு

சில பல நல விசாரிப்புகள்

முடிந்ததும் அப்புறம் என்று

தொக்கி நிற்கும் அந்த கேள்விக்கு

மட்டும் எவ்வளவு முயற்சி செய்தாலும் 

என்னால் 

ஒன்றும் இல்லை என்ற பதிலை தவிர 

வேறு எந்த கதையும்

சொல்ல இயலவில்லை...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.

அவர்கள் செய்த தர்மங்கள் மட்டும்...

 



அந்த வாழ்ந்து கெட்ட வீட்டின்

அடையாளமாக 

வௌவால்களின் எச்சங்களே

மக்களின் மத்தியில் 

பெரிதாக பேசப்படும் போது

அங்கே அவர்கள் செய்த 

தர்மங்கள் மட்டும் 

சூட்சமமாக அழுது தீர்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

#வாழ்க்கை

நாள் 07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.



இந்த நொடிக்கும் போதை ஏற்றுகிறேன்...


நான் தான் இன்று

மிகவும் கோலாகலமாக

இந்த அந்தி மாலைப் பொழுதை

கொண்டாடி தீர்க்கிறேன்...

என் அதீத உற்சாகத்தை கண்டு

நிச்சயமாக ஏதோவொரு விரும்பிய

நிகழ்வு தான் எனது இந்த

கொண்டாட்டத்திற்கு 

காரணமாக இருக்கும் என்று 

என் காதுப்பட உரக்க பேசி

என்னை பார்த்து கையசைத்து

என்னருகே வந்து

வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டே

கேட்கிறார்கள் ...

உங்கள் விருப்ப நிகழ்வு தான் 

நிறைவேறி உள்ளதா...

அப்படி என்றால் அது என்ன என்று

மிகவும் ஆர்வமாக கேட்கிறார்கள்...

நானோ பலமாக சிரித்துக் கொண்டே

எனக்கென்று விருப்ப நிகழ்வுகள்

இது வரை நடந்து விடவில்லை...

இனியும் வேண்டாம் என்றே

உற்சாகமாக கொண்டாடி தீர்க்கிறேன்

ஆமாம் இங்கே கொண்டாடுவதற்கு

விருப்ப நிகழ்வு ஒன்று

அவசியமா என்ன என்று 

கேட்டுக் கொண்டே 

அந்த பழச்சாறை பருகி 

இந்த நொடிக்கும்

போதை ஏற்றுகிறேன்...

என்னை

சூழ்ந்துக் கொண்டவர்களுக்கு 

ஆச்சரியம் தாங்காமல்

என் கொண்டாட்டத்தின்

நிறைவு வரை என்னோடு இருந்து

இந்த பொழுதிற்கு ஒரு ஆச்சரியத்தை

கொடுத்து விடை பெறுகிறார்கள்...

நானும் தான் விடை பெறுகிறேன்

இந்த அந்தி மாலைப் பொழுதின்

கொண்டாட்டத்தின் தீராத காதலின்

அணைப்போடு....

#இளையவேணிகிருஷ்ணா.

#அந்திமாலைப் பொழுதின் 

கொண்டாட்டம்...

நாள் 07//04/24.

ஞாயிற்றுக்கிழமை.

நேரம் முன்னிரவு 8:20.




ஓடி ஓடி நாட்களும் சத்தம் இல்லாமல் விடை பெறும் தருணத்தில்...

 

இது சுவாரஸ்யம்...

இது சுவாரஸ்யம் என்று

ஓடி ஓடி நாட்களும் சத்தம் இல்லாமல்

என்னிடம் இருந்து

விடை பெறும் காலத்தில் 

அந்த கடைசி காலத்தின்

சில துளிகள்...

எந்தவித சுவாரஸ்யமும் 

இல்லை உன்னிடம் என்று 

ஒதுக்கி வைத்திருந்த தனிமை

என் கைகளை ஆறுதலாக

அதே சமயத்தில் எங்கே மீண்டும்

உதாசீனம் செய்து விடுவேனோ 

என்று நடுக்கத்தோடே 

என் கரங்களை தீண்டும் போது 

என் கண்களில் வழிந்த 

கண்ணீர் துளிகள் அதன் மீது 

சிதறியதில் என் உணர்வை 

மௌனமாக புரிந்துக் கொண்டு

வாரி அணைத்துக் கொண்டதை

இங்கே எனை கடந்து சென்ற 

அத்தனை சுவாரஸ்யமான 

நிகழ்வுகளும் 

வேடிக்கை பார்த்து கேலி சிரிப்பை 

உதிர்த்து சென்றதை

நாங்கள் இருவரும்

கண்டுக் கொள்ளவில்லை...

#இளையவேணிகிருஷ்ணா.

#வாழ்வியல் கவிதை...

நாள் 07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.

நேரம் முன்னிரவு 8:00மணி..


அந்த அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் நகரம்...


அந்த அலைந்து

திரிந்துக் கொண்டிருக்கும் 

நகரத்தின் காற்று

என் மனதை தீண்டாத உயரத்தில்

நான் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!

அங்கே அலைந்து

திரிந்துக் கொண்டிருக்கும் 

மனிதர்களிடம் 

ஏதோவொரு அனுபவத்தை

அந்த நகரத்தின் சாலை

பெற்றுக் கொண்ட திருப்தி...

அங்கே பயணிக்கும் மக்களோ

கொஞ்சமும் நிதானம் இல்லாமல்

தங்களது நகர்வுகள் மூலம்

சாலைக்கு தீனிப் போட்டு விட்டு 

சுவாரஸ்யம் கொஞ்சமும் இல்லாமல்

அந்தி சாயும் வேளையில்

இல்லத்திற்குள் நுழையும் போது

வெற்று ஆராவாரங்களின்

மூச்சு காற்று கொஞ்சம் கொஞ்சமாக

அவர்களிடம் இருந்து

விடை பெறுவதை கூட 

உணர முடியாமல் மீண்டும் 

ஓடுகிறார்கள் இல்லத்திற்குள்

ஏதோவொரு குற்றவுணர்ச்சி 

அவர்களை தீண்டுவதை போல 

உணர்ந்ததால்...

இங்கே எது தான் தேவை 

அவர்களுக்கு என்று..

அந்த இல்லம் அவர்களை வெறுமனே

வேடிக்கை பார்த்து 

கவலைக் கொள்கிறது...

#நகரத்தின் சாயல்..

#வாழ்வியல் கவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.


சனி, 6 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁


அந்த சூழலில் 

நான் எப்படி நடந்துக் கொள்ள 

வேண்டும் என்று...

இந்த உலகம் 

ஆயிரம் ஆயிரம் யோசனைகளை

சொல்லி சொல்லி 

அனுப்பி வைத்தது...

அந்த சூழலை எதிர் கொண்டு

திரும்பிய என்னை 

இந்த உலகம் கேட்டது

என்ன நாங்கள் சொன்னபடி

எல்லாம் சரியாக தானே முடிந்தது 

என்றது!

ஆம்...அந்த சூழல் 

எந்த காயமும் அடையாமல்

எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் 

நான்...

அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு

ஒரு வித நிம்மதியோடு விடை 

பெறுகிறார்கள்...

#இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/04/24.

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

காலை சிந்தனை 🍁


ஓடிக் கொண்டே 

இருக்கும் போது தான்

இந்த உலகம் உங்களை மதிக்கிறது...

ஆனால் அதற்காக ஓடாதீர்கள்...

உங்களால் முடியும் என்றால்

பிடித்து இருந்தால் ஓடுங்கள்..

இல்லை என்றால் தள்ளி நின்று

ஓடுபவர்களை வேடிக்கை பாருங்கள்...

ஓடுவதை விட வேடிக்கை

பார்ப்பதில் தான் சுவாரஸ்யம் 

அதிகம்!

#,காலை சிந்தனை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/04/24.

திங்கள், 1 ஏப்ரல், 2024

காலை சிந்தனை ✨

 


ஒரு நதியை வேடிக்கை

பார்ப்பது போல

நாம் நம்மை கொஞ்சம் 

தள்ளி நின்று

வேடிக்கை பார்க்க 

பழகிக் கொண்டால்

வாழ்க்கை அப்படி ஒன்றும்

சலிப்பல்ல என்று

உற்சாகம் அடைவீர்கள்!

#காலை சிந்தனை 🍁

நாள் 02/04/24.

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...