வாழ்வின் சுவை
அதன் போக்கில் நகரும்
நதியை ஒத்தது...
கூட்டத்தில் சலசலக்கும்
தேவையற்ற விசயங்களை
ஒதுக்கி விட்டு
இங்கே நகரும் நதியை
ஆழ்ந்த அமைதியோடு
ரசிக்கிறேன்...
எல்லா நிகழ்வுகளும்
ஏதோவொரு வகையில்
தனக்கான பயனை அடைந்து
நழுவி விடுவது யதார்த்தம்
இங்கே நதி மட்டும்
எந்த நிகழ்விலும் ஒட்டாமல்
பயணிப்பதால் தானோ என்னவோ
எப்போதும் உற்சாகமாக
தனக்குள் மட்டும் பேசிக் கொண்டு
தன்னை தானே ரசித்து
நகர்கிறது..
வழிகளில் தென்படும்
காட்சிகளில் தன்னை
பறிக் கொடுத்து விடாமல்...
நானும் ஒரு நதி தான்..
என்ன சம்சார பந்தத்தின்
நகர்வுகள் என்னை
இழுத்து செல்வதை
தடுக்க முடியாமல் திண்டாடும்
நதியாக...
என்றேனும் ஒரு நாள்
நானும் இப்படி பயணிப்பேன்..
அப்போது நான் நானாக
ஒரு தேனினும்
இனிமையான நதியாக..
ஒரு அமிர்த நதியாக...
பயணிப்பேன்...
இப்போது கொஞ்சம்
இந்த நதியின்
அமைதியான போக்கில் நான்
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்...
ஒரு ஏக்கமான பெருமூச்சோடு...
இங்கே இந்த ஆழ்ந்த அமைதியும்
இந்த நதியின்
சலசலப்பும் தவிர
வேறெதுவும் தேவையில்லை
இந்த தருணத்தில் நான்
என்னை கரைத்து
அந்த நதியில் கரைந்து விட்டால்
என்னை எவரும் தேடாதீர்கள்...
நான் பேரமைதியின்
பயணத்தில் நிம்மதியாக...
பயணிக்க அனுமதியுங்கள்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக