ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 6 ஏப்ரல், 2023

நானும் காலமும்

 


நான் மிகவும் அமைதியாக இங்கே ஒளிரும் நிலவில் என் சம்சார நிகழ்வை ஒத்தி வைத்து விட்டு அமர்ந்திருக்கிறேன் எனது வீட்டின் மாடியில்...எல்லா நிகழ்வையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பயணிக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்று மனதிற்குள் அசைப் போட்டபடி...எங்கோ சில தெருநாய்கள் சத்தம் மட்டும் கேட்கிறது..அதையும் தொந்தரவாக நினைக்க தோன்றவில்லை..இயற்கையின் படைப்பில் அதன் சத்தம் கூட அழகு தான் என்று புன்னகைத்து திரும்பிய போது காலம் என் தோளில் கை வைத்தபடி ஆறுதலாக கேட்கிறது..என்னாச்சு என்று..ஒன்றுமில்லை காலமே..சும்மா கொஞ்ச நேரம் நானும் என் வாழ்வியல் நகர்வும் ரசித்து கொண்டு இருக்கிறேன்..இங்கே அருகில் அமர்ந்து கொள்..நீயும் கூட சற்றே ஆறுதல் அடைவாய் என்றேன்..ஆம்..ரொம்ப நாளாகிவிட்டது உன்னை சந்தித்து அல்லவா..உன் ஞாபகம் வந்தவுடனேயே இங்கே வந்து விட்டேன் என்றது உற்சாகமாக..மிகவும் மகிழ்ச்சி காலமே..உன் ஆறுதல் தற்போது எனக்கு தேவைதான் என்று புன்னகைத்தேன்..

ஆயிரம் சஞ்சலங்கள் என் மனதை அமைதி இழக்க செய்கிறது காலமே.. சம்சார வாழ்க்கையின் விலகலை நாடி..தேவையில்லாத வாழ்வியல் போராட்டத்தில் ஈடுபடாத வாழ்வியல் நகர்வுகள் வேண்டும்.. எனக்கான தேடல் ஏதோவொரு மிக பெரிய பொக்கிஷம் என்று தோன்றுகிறது... ஆனால் அதன் சுவடு தான் அகப்பட மாட்டேன் என்கிறது என்றேன்..

காலமோ சற்றே என் கைகளை பிடித்து ஏன் இந்த சஞ்சலம்..இத்தனை நாட்கள் பொறுத்து வாழ்வியலை பயணித்தாய் மிகவும் பொறுமையாக.. இப்போதும் அதை தொடர்ந்து வா.. இங்கே ஞானிகள் கூட தருணத்திற்காக காத்திருந்திருக்கிறார்கள்.. ஏன் இங்கே எப்போது எப்படி அது நிகழும் என்று படைப்பின் ரகசியம் என்பதை உனக்கு நான் சொல்லி தான் புரிய வேண்டுமா என்ன என்றது..

உண்மை தான் காலமே.. ஆனால் சில நிமிட சஞ்சலங்கள் கூட பல யுகங்களின் வலியை தந்து விடுகிறது.அதிலிருந்து மீள என்ன தான் வழி என்று யோசித்து கொண்டு இருக்கும் போது நீ வந்து விட்டாய் என்றேன்..

காலமோ நான் உனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் கலங்காதே என்று என்னை அரவணைத்துக் கொண்டது..

நான் அதன் அணைப்பில் என் சஞ்சலங்களை வடித்தேன்...

ஒளிர்ந்து கொண்டு இருக்கும் நிலவோ எங்கள் இருவரையும் அதிசயமாக வேடிக்கை பார்த்தது..

#காலமும்நானும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...