ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 23 நவம்பர், 2022

காலமும் நானும்

 


காலமும் நானும்:-

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் காலத்தோடு நான்.. என்ன சௌக்கியமா என்று கேட்டது காலம்..சௌக்கியம் என்று சொல்ல முடியாது.. ஆனால் சௌக்கியமாக இருக்கிறேன் என்றேன்.. என்ன வழக்கம் போல குழப்புகிறாய் என்று கடிந்து கொண்டது காலம்.. உடல் அளவில் கொஞ்சம் அசௌகரியம்.. ஆனால் மனதளவில் எப்போதும் ஆனந்தம் என்றேன் புன்னகைத்து..அது சரி.. அப்படி இருப்பது வாழ்வின் ஒரு கலை என்றது காலம்.. அதன் பதிலை உள் வாங்கி கொண்டே எழுந்து சமையலறையில் ஒரு சூடான இஞ்சி தேநீரை தயாரித்து அதனோடு வெங்காய பக்கோடா எடுத்துக் கொண்டு வந்து காலத்திடம் கொடுத்து விட்டு எனக்கான பங்கை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன்..

காலம் மிகவும் ஆவலாக அந்த பக்கோடாவை ரசித்து சாப்பிட்டு கொண்டே அந்த சூடான தேநீரை ருசித்து பருகியது.. எப்படி இருக்கிறது சுவை என்றேன் காலத்திடம்.. அதற்கென்ன மிகவும் அருமையாக உன்னை போல வித்தியாசமாக என்றது சிரித்து கொண்டே.. இந்த வானிலை ஏமாற்றி விட்டது இந்த முறை என்றது..

நானோ கடலோர மாவட்டங்கள் தப்பி விட்டது என்று சந்தோஷப்படுவதா இல்லை சம்பா பயிருக்கு கொஞ்சமேனும் மேல் மழை வேண்டும் என்று கவலைப்படுவதா என்று தெரியவில்லை காலமே என்றேன்..நீ சொல்வது சரிதான்.. ஆனால் வானிலை நமது கைகளில் இல்லையே என்றது வருத்தமாக..

ஆமாம் உன்னை போல என்றேன் சிரித்துக்கொண்டே..

சரி சரி அதை விடு.. உன்னிடம் ஒரு கேள்வி என்றது காலம்..

கேள் காலமே.. எப்போதும் என்னிடம் மட்டும் நீ கேள்விகணைகளை கொடுப்பதும் ஏனோ என்றேன் கேலியாக..

அது ஏனென்றால் நீ எனது சாயல் என்றது..

சரி கேள்விக்கு வருகிறேன்..

இறப்பை நேசிக்கிறேன் என்று பல பதிவுகளில் சொல்கிறாய்.. அப்பொழுது நீ நேசித்த இறப்பை நாடி செல்வாயா அல்லது இறப்பே உன் நேசிப்பில் ஓடோடி வர வேண்டும் என்று நினைப்பாயா என்றது..

நான் சிறிதும் யோசிக்காமல் நான் அதை நேசித்து ஓடுவது என்பது காலங்காலமாக நேசித்த காதலனை தேடி எப்போதும் நேசித்த குடும்பத்தை மதிக்காமல் ஓடுவதற்கு சமம்..அது எனது பாரம்பரியத்திற்கு அழகல்ல..அதுவே என்னை நேசித்து ஓடோடி வந்து ஆரத் தழுவிக் கொள்ளும் போது நாங்கள் எவரும் பிரிக்க முடியாத பிணைப்பில் கலந்து நேசித்து கிடப்போம் என்றேன்..

காலமோ நான் எதிர்பார்த்ததை போலவே சுவாரஸ்யமான பதிலை சொல்லி விட்டாய் என்று சொல்லி இதோ இந்த காலி தேநீர் கோப்பையை உனது சிறந்த பதிலுக்கு பரிசளித்து விட்டு விடை பெறுகிறேன்.. மீண்டும் சந்திப்போம் நேரம் கிடைக்கும் போது என்றது..

நானும் சிரித்துக்கொண்டே அந்த காலி கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்கிறேன்..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...