அன்றொரு மாலை நேரம்.அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு எனது சோஃபாவில் அமர்ந்தேன் என் காதலியான இஞ்சி கலந்த தேநீரை பருகியபடி.. வாசல் கதவு அகலமாக திறந்து இருந்ததால் வெளியே போகும் வாகனங்கள் கண்ணில் பட்டது.. நடைபாதையில் நடக்கும் வாழ்வை ரசிக்க தெரிந்த பயணிகள் வேடிக்கை பார்த்து கொண்டே சென்றார்கள்..அதை எனது தேநீர் கோப்பையில் உள்ள தேநீரோடு ரசித்து கொண்டே இருக்கும் போது அருகில் உள்ள அலைபேசி அழைத்தது.. யார் என்று பார்க்கும் போது எனது பள்ளி கால தோழி தான்..அழைத்திருந்தாள்.அலைபேசியை காதில் வைத்து சொல் லதா.. நன்றாக உள்ளாயா என்றேன்.நான் நலம் மதி என்று சொல்லும் அவள் குரலில் சுருதி இல்லை.பதிலுக்கு நீ நலமா என்று கேட்டாள்.நான் நலமே.சொல் என்ன விசயம்.ரொம்பநாளாகி விட்டது உனது குரலை கேட்டு என்றேன்.
"எனக்கு ஓர் உதவி செய்வாயா மதி "என்றாள் பரபரப்பாக.
"என்ன உதவி கேள்.. உனக்கு நான் செய்யாமல் இருப்பேனா.ஏதாவது பண உதவி வேண்டுமா" என்றேன் .
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் மதி.நீ தற்போது ஓய்வாக இருந்தால் கொஞ்சம் கடற்கரை பக்கம் வர இயலுமா" என்றாள்..
ஓ.. கண்டிப்பாக.இப்போதே கிளம்பி வருகிறேன் என்று சொல்லி அலைபேசியை வைத்து விட்டு மணி பார்த்தேன்.மாலை நான்காகி இருந்தது.
நான் சுவைத்து முடித்த தேநீர் கோப்பையை கழுவி வைத்து விட்டு உடை மாற்றி எனது தோழனான புல்லட்டில் பறந்தேன்.. கடற்கரை நோக்கி.
கடற்கரை மிகவும் ஆரவாரமான அலைகளோடு என்னை வரவேற்றது.நான் கண்களால் தேடினேன்..எனது பள்ளி கால நட்பை.. அவள் என்னை கவனித்து கையசைத்து கூப்பிட்டாள்.
நான் வேகமாக அவள் அருகே சென்றேன்.
இருவரும் கொஞ்ச நேரம் பால்ய கால நட்புகளை விசாரித்து கொண்டோம் பரஸ்பரம்.
அதற்குள் சுண்டல் விற்பனை செய்யும் பையன் அருகில் வந்து "என்ன அண்ணே நல்லா இருக்கீங்களா.ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து" என்றான் மிகவும் ஆவலாக."நான் நன்றாக உள்ளேன் நீ எவ்வாறு இருக்கிறாய்" என்று சிரித்தபடியே கேட்டேன்.நான் நலம் அண்ணே.இதோ இந்த வியாபாரம் எனது பசியை தீர்க்கிறது என்றான் உற்சாகமாக.
பிறகு அவனிடம் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டு காசை கொடுத்தேன்.அவன் சில்லறை தேடினான் மீதி கொடுக்க.நான் பரவாயில்லை வைத்து கொள் என்றேன்.இல்லண்ணே..வேணாம்.உழைப்பில் கிடைத்த கூலி போதும் என்றான்.நான் அவனிடம் கேட்டேன்.அப்போ நீ என்னை அண்ணன் என்று அழைத்தது எல்லாம் போலி அப்படிதானே.. என்றேன் சிரித்தபடி.
அந்த நுட்பமான உறவின் தாக்கம் அவனை நெகிழ வைத்து இருக்க வேண்டும்.உடனே இலேசான கண்ணீரோடு அப்படி எல்லாம் இல்லண்ணே..என்று சொல்லி சில்லறையை பாக்கெட்டில் போட்டு கொண்டு விடை பெற்று நகர்ந்தான்..
நான் எனது தோழியிடம் திரும்பினேன்.. அவள் எங்கள் உரையாடலில் லயித்து புன்னகை பூத்து கேட்டாள்.நீ மட்டும் எப்படி எல்லோரிடமும் நட்பாகி விடுகிறாய் என்று.
இங்கே வாழும் அனைவரும் ஏதோவொரு வகையில் நமக்கு உறவு தான்.இந்த பிறவியில் இல்லாமல் இருக்கலாம்.ஏதோவோரு பூர்வ ஜென்ம பிணைப்பு தான் இவர்கள்.. நான் எல்லோரையும் உறவாக நினைப்பேன்.அதோ அங்கே பார்.. அந்த கரை ஒதுங்கிய ⛵ படகு கூட எனக்கு ஓர் நட்பு அல்லது உறவு தான்.. அதன் அருகே சென்றால் அது இதுநாள் வரை மனதில் தேக்கி வைத்த எண்ணங்களை சொல்லி மனபாரத்தை இறக்கி வைக்கவும் கூடும் என்றேன் புன்னகை செய்தபடியே..
பிறகு சரிசரி நீ எதற்காக என்னை அழைத்தாய்.அதை சொல் முதலில் என்னிடம் என்றேன்.
மதி எனது பிள்ளை தமிழன் பொறியியல் பட்டதாரி.. அவன் தற்போது கல்லூரி கேம்பஸ் தேர்வில் தேர்வாகி விட்டான்.அவன் டிரெயினிங் காலம் முடிந்து ஒரு வருடம் அமெரிக்கா போய் வேலை பார்க்க வேண்டும் என்று அவனை தேர்வு செய்த கம்பெனி சொல்வதாக சொன்னான்.. எனக்கு அவனை விட்டு விட்டு இருக்க முடியுமா தெரியவில்லை.ஒரே அதே சிந்தனை..மனகுழப்பம் அதிகரித்து..ஏதேஏதோ எண்ணி தவிக்கிறேன்..இதை அவர் இருந்தால் அவரிடம் சொல்லி குழப்பத்தை தீர்த்து இருப்பேன்.ஆனால் அவர் இறந்த பிறகு எனக்கு இவன் ஆறுதல் தந்தான் கூடவே இருந்து.இருக்கும் இந்த ஓர் உறவும் என்னை விட்டு போகபோகிறது என்று நினைக்கும் போது ரொம்ப பயமாக உள்ளது மதி.என்றாள் சோகமாக.
நான் அவளை பார்த்து இவ்வளவு தானே என்று சிரித்தேன்..அவளோ என்ன இவ்வளவு தானே என்று கேட்கிறாய்.. உனக்கு தனிமையின் கொடுமை புரியவில்லை போலும் என்றாள்.
ஹலோ லதா நான் இப்போது ஓர் பத்து பேரோடா இருக்கிறேன்..தனியாக தானே என்றேன்..
மதி புரியாமல் பேசாதே.நீ இருப்பதற்கும் நான் இருப்பதற்கும் எத்தனை விதமான வித்தியாசம்.. என்றாள் படபடப்பாக.
அதுதான் என்ன வித்தியாசம் என்று கேட்கிறேன்.
தனிமை என்பது ஆண் பெண் மற்றும் ஜீவ ராசிகள் என்று எப்போதும் பேதம் பார்ப்பது இல்லை.. என்றேன்..
இது கேட்பதற்கு நன்றாக உள்ளது.. ஆனால் நடைமுறையில்.. அவன் ஒரு வருடத்தில் வந்து விட்டால் பிரச்சினை இல்லை.அவனுக்கு அங்கேயே தேர்வு செய்த கம்பெனி இருக்க சொல்லி விட்டால்.. என்றாள் கவலையோடே..
அதனால் தான் என்ன.. அவன் அங்கேயே இருந்து வேலை பார்த்து விட்டு போகட்டுமே.பிறகு அவன் திருமண வயதுக்கு வரும் போது நீ இங்கே பெண் பார்த்து திருமணம் செய்து வை அவனுக்கு பிடித்து இருந்தால்.இல்லை என்றால் அவன் விருப்பத்தை பூர்த்தி செய்.. இதில் கவலைப் பட ஏதும் இல்லை..வீணாக உனது அழகான நேரத்தை வீண் செய்யாதே.எனது அலை 🌊 தோழி கோபம் கொள்வாள் என்னிடம்.. ஏனெனில் நான் இங்கே வந்து பலநாள் ஆகிறது.நான் அவளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் அல்லவா என்றேன் புன்னகைத்தபடி.
அதற்கு லதா சொல்கிறாள், "உனக்கு எல்லாமே விளையாட்டு தானா மதி..நீ திருமண பந்தத்தில் இணைந்து இருந்தால் உனக்கு இந்த மாதிரி வலிகள் உணர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்.. அதனால் உன்னை சொல்லி குற்றம் இல்லை "என்றாள் கோபமாக..
எனக்கு மிகவும் சிரிப்பு தான் வந்தது அவள் பேச்சை கேட்டு."நீ நினைப்பது போல எல்லாம் அப்போது கூட நடந்து இருக்காது.. நான் எப்போதும் எதனோடும் போராடுவது இல்லை" என்றேன் புன்முறுவலோடு..
"என்ன சொல்ல வருகிறாய் புரியவில்லை" என்றாள் ..
நீ உனது கணவனின் இறப்பிற்கு பிறகு உனது பையனை இறுக பிடித்து கொண்டாய்.இனி எல்லா சுமைகளையும் இவன் தாங்குவான் என்று.. அதனால் தான் இந்த வருத்தம்.அவன் நீ நினைக்கும் படி வெறும் சுமைதாங்கி அல்ல.அவன் உணர்வுள்ள அவன் பருவத்திற்கே உரிய ஆசை உள்ள சராசரி மனிதன்.அவன் அந்த வாழ்க்கை வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உள்ளது.
நீ செய்து வைத்த கற்பனையை அவன் மேல் திணிக்காதே.லதா.என்றேன்.
அதற்கு அவள் நான் அவனிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.என்னோடு கூட இருந்தால் போதும்.. என்றாள்.
இந்த பாச கயிறு தான் வேண்டாம் என்கிறேன்.நீ இவ்வளவு நாள் அவனுக்காக பார்த்து பார்த்து செய்தது எல்லாம் சுயநலமாகி விடாதா என்றேன்..
அதுவும் சரிதான்.. ஆனால் அவன் அங்கே போய் கஷ்டப்பட மாட்டானா.. ஒவ்வொன்றுக்கும் அவன் என்னை பார்த்து வாழ்ந்து விட்டான்.ஏன் சில சமயங்களில் சாப்பாடு கூட நான் தான் ஊட்டி விடுவேன் தெரியுமா.. அப்படி இருந்தவன் அங்கே தனியே நினைக்கவே பயமாக உள்ளது மதி என்றாள்.
அவள் பேச்சை கேட்டு எனக்கு கோபம் வந்தது.என்னது சாப்பாடு நீ ஊட்டி விடுகிறாயா.. நன்றாக உள்ளது உனது செயல்.எந்த ஜுவராசியாவது வளர்ந்த தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு இருப்பதை நீ பார்த்து இருக்கிறாயா என்றேன் கோபமாக.
இல்லை தான்.. ஆனால் அவன் மேல் நான் அதிகமாக பாசத்தை வைத்து விட்டேனே என்றாள்..
நீ உனது செயலுக்கு காரணம் கற்பித்துக் கொண்டு அவனை நினைத்து கலங்குவதை நிறுத்து.. என்றேன்..
உனக்கு தனிமையை நேசிக்க தெரியவில்லை.. அதுதான் இந்த புலம்பல்.. இவ்வளவு நாள் உனக்கான கடமையை மிகவும் அழகாக செய்தாய்.அந்த கடமை தற்போது முடிவுக்கு வருகிறது.அதை நீ ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் மிகவும் உற்சாகமாக.உனக்கு பிடித்த விசயங்களை இனி நீ செய்யலாம்.. அதில் கவனத்தை செலுத்து..நீ பள்ளி நாட்களில் அழகாக ஓவியம் வரைவாயே.. ஞாபகம் இருக்கிறதா.. பள்ளிகளுக்கு இடையே நீ தான் முதலில் வந்தாய்.உன்னை எல்லோரும் பாராட்டினார்கள்.உன்னிடம் கூட நான் என்னை வரைய சொல்லி கேட்டு இருந்தேன்.நீ அவ்வளவு அழகாக வரைந்த ஓவியம் இன்னும் எனது வீட்டு வரவேற்பு அறையை அலங்கரிக்கிறது.எனது வீட்டுகஞவருபவர்கள் பெரும் பாலும் எவ்வளவு அவசரமாக இருந்தாலும் அந்த ஓவியத்தை பாராட்டாமல் சென்றது இல்லை..அது நான் வரைந்த ஓவியமா என்று எத்தனை பேர் கேட்டு இருக்கிறார்கள் தெரியுமா.. என்றேன்.
அந்த பேச்சை கேட்டு உற்சாகமாகி விட்டாள்..நானே மறந்து விட்ட ஓர் விசயத்தை நீ இவ்வளவு ஞாபகம் வைத்து சொல்கிறாயே மதி என்றாள் உற்சாகமாக..
எந்த ஓவியமும் மறக்கப்படுவது இல்லை லதா..வாழ்க்கையை நமக்கு இறைவன் அழகான ஓவியமாக தான் கொடுக்கிறான்.நாம் தான் அதன் அருமை தெரியாமல் மிதித்து துவம்சம் செய்து விடுகிறோம் என்றேன்..
உண்மை தான் மதி..தனிமை எப்போதும் நம்முள் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தை வெளியே எடுத்து அலங்காரம் செய்து விட துடிக்கும் போது நாம் தான் அதை மூச்சு கூட விட முடியாதபடி அடைத்து விடுகிறோம் இல்லையா என்றாள்..
ஆம் லதா.கடமைகளை செய்து விலகி விடும் போது உறவுகள் நமக்கு காயத்தை உண்டு செய்வது இல்லை.அதை விடுத்து பந்தம் எனும் கயிற்றை கொண்டு இறுக்கி கட்டி விடும் போது காயம் சம்பந்தப்பட்ட நமக்கு மற்றும் அந்த உறவுகளுக்கும் தானே.. என்றேன்..
மதி நிச்சயமாக நான் மீண்டும் ஓவியம் வரைவேன்.அதை கண்காட்சி படுத்தும் அளவுக்கு நிறைய வரைந்து குவிக்க போகிறேன்..இனி எனக்கான வாழ்க்கை என்று உள்ளது.அதை தூசு தட்டி எடுக்கும் போது உயிர் பெறுகிறது எனது அடுத்த கட்ட உற்சாகமான வாழ்க்கை..
இதயத் துடிப்பினில் ஓசை இல்லை..எடுத்து சொல்லவும் பாஷை இல்லை.. இதற்கு முன் இந்த ஆசை இல்லை.இதய விசிறிகள் வீசவில்லை..என்று உற்சாகமாக பாடினாள்.. அவள் சத்தமாக பாடியதை பல பேர் திரும்பி பார்த்து புன்னகை செய்து பாராட்டி சென்றார்கள்.. அவளுக்கு இவ்வளவு நல்ல குரல் வளம் பாடுவதில் என்று இப்போது தான் எனக்கே தெரிந்தது..
நானும் ஆச்சரியம் கொண்டு அவளை பாராட்டினேன்.. வாழ்க்கை இசைமயமானது..அதை ஆராதித்து கொண்டே இரு.இசையாலே..எப்போதும் நீ உற்சாகமாக இருக்கும் போது வாழ்க்கை உன்னை கையில் ஏந்தி கொண்டாடி தீர்த்து விடும்..
என்றேன் சிரித்தபடி.
மிகவும் மகிழ்ச்சி நன்றி மதி.. வாழ்க்கை என்பதை ஏதோவொரு சிறு வட்டத்தில் அடைத்து வேதனை அடைய நினைத்த எனக்கு நீ நல்ல விளக்கத்தை தந்து எனது மாயையை அகற்றி விட்டாய்.. நான் எனது மகனுக்கும் வாழ்க்கை பற்றிய புரிதலை கொடுத்து அனுப்பி வைப்பேன்.. அவன் என்னை பார்த்து ஆச்சரியம் அடைவான்.ஏனெனில் நான் அவன் பயணத்தை நினைத்து தினம் தினம் அழுது புலம்பி வந்தேன்.. அவன் எவ்வளவு கனவுகள் வைத்து இருந்திருப்பான்.எனக்காக அவன் பயணத்தை ரத்து செய்வதாக யோசித்தான்.. நல்ல வேளை..அவன் கனவை கலையாமல் பாதுகாத்துவிட்டேன் உங்கள் மூலமாக.. என்றாள்..
சரி லதா நாம் கிளம்புவோம்.மணி எட்டாகி விட்டது பார்.. என்றேன்..
கண்டிப்பாக கிளம்பலாம்..மதி.. மீண்டும் சந்திக்கலாம் இதே உற்சாகத்துடன்.நீங்களும் வர வேண்டும் எனது மகனை ஏர்போர்ட்டில் வழி அனுப்பும் போது என்றாள்..
அதற்கென்ன வந்துவிடலாம் என்று அவளிடம் விடை பெற்று கொண்டு செல்ல எத்தனிக்கும் போது அலை வேகமாக எனது காலை மோதி நானும் இருக்கிறேன் என்றது செல்ல கோபமாக.. நான் சற்றே குனிந்து நான் வருகிறேன் தோழி.. இன்றும் உன்னோடு தனியாக உரையாட முடியவில்லை என்று எனக்கும் வருத்தம் தான் என்றேன்..
அதற்கு அது அடுத்த முறை எந்த தோழியையும் அழைத்து வந்தாய் என்றால் எனது கடல் தாயிடம் இழுத்து சென்று விடுவேன் புரிந்ததா என்றது..
நானும் புரிந்தது என்று அதனிடம் விடைபெற்று கிளம்பினேன்..
எனது இன்னொரு நண்பன் புல்லட் இவ்வளவு நேரம் என்ன தான் செய்தாய் என்றது கடுமையாக.. மன்னித்து விடு.. தாமதத்திற்கு என்று சொல்லி விட்டு அதில் ஏறி காற்றாய் பறந்தேன்.. சாலையில்..சாலை கம்பத்தில் உள்ள விளக்குகள் மட்டும் எந்த கேள்வியும் கேட்காமல் என் மேல் கருணை ஒளி பொழிந்தது.. எனக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது..
மீண்டும் பிரிதொரு பயணத்தில் சந்திப்போம் வாசகர்களே 😊
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக