அந்த பௌர்ணமி நிலவு என்னை பார்த்து ஈர்ப்பு பார்வையை வீசியது.. நான் அதை கண்டுக் கொள்ளவே இல்லை..அதை அப்படியே ரசித்தேன்.. நான் ரசிப்பதை அது காதல் என்று எடுத்துக் கொண்டு விட்டது போலும்..
காதல் இந்த வார்த்தையை நான் யோசித்து கொண்டே இருக்கும் போது கீழே எவரோ காலிங் பெல்லை அழுத்தி என்னை கூப்பிட முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.. நான் கீழே இறங்கி கதவை திறந்து பார்த்த பொழுது அங்கே அடுத்த தெரு வினோதன் நின்று இருந்தான்.. அவன் ஓர் ஐடி துறை ஊழியன்.. நான் அவனை பார்த்து கூட ரொம்ப நாளாகி விட்டது.. எங்கள் அறிமுகம் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அந்த அண்ணா பூங்காவில் வழக்கமாக இருந்து வந்தது.தற்போது இந்த சூழல் அமைந்துள்ளது..
நான் அவனை பார்த்து உள்ளே வா வினோதன் என்றேன்.. அவன் புன்னகைத்து கொண்டே சார் எப்படி இருக்கிறீர்கள்.. நலம் தானே என்றான்.. நான் அவனை பார்த்து இப்படி சார் எல்லாம் போட்டு என்னை அந்நியமாக்க வேண்டாம் என்றேன்.சிரித்தபடியே..
அவனோ பிறகு சரிங்க அண்ணா என்றான் சிரித்தபடியே..
நான் இதை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..நீ மதி என்றே கூப்பிடலாம்.. என்றேன்..
அவனோ அதெல்லாம் அப்படி உங்களை கூப்பிட முடியாது என்று சிரித்தபடியே சொல்லி விட்டான்..
சரி உன் விருப்பம் என்று சொல்லி விட்டு வேலை எவ்வாறு போகிறது என்றேன்..
அதற்கென்ன அண்ணா மிகவும் நன்றாக போகிறது.. தற்போது வீட்டில் இருந்து வேலை என்பதால் எங்கேயும் போக முடியவில்லை.. எந்த நேரத்தில் மீட்டிங் எந்த நேரத்தில் மேலதிகாரி அழைப்பார்கள் என்று ஓர் பதட்டத்தோடு அலுவலகத்தில் இருந்ததோடு கொஞ்சம் மன உளைச்சலோடு போகிறது என்றான்..
அது சரி.. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புவோம்..என்று சொல்லி கொண்டே அவனை மாடிக்கு போகலாமா என்றேன்..
கண்டிப்பாக அண்ணா என்றான்..
நான் ஓர் நிமிடம் என்று சொல்லி விட்டு அவனுக்கு மாடிக்கு செல்லும் வழியை காட்டி விட்டு கொஞ்ச நேரம் அங்கேயே இரு..இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சமையல் அறைக்கு சென்றேன்..
இரண்டு கப்பிற்கு மணமான இஞ்சி தேநீர் தயாரித்து கொண்டு சில பிஸ்கட் தட்டில் எடுத்து கொண்டு சென்றேன்.
அவன் அங்கே உலாவிக் கொண்டு இருந்தான் அந்த நிலவை பார்த்தபடியே..
நான் அவனை அழைத்து இதோ இதை பிடி வருகிறேன் என்று அவன் கையில் தேநீர் கோப்பையை திணித்து விட்டு எனது தேநீர் கோப்பை மற்றும் பிஸ்கட் தட்டை அங்கே இருந்த கைப் பிடி சுவரில் லாவகமாக வைத்து விட்டு மேலே உள்ள அறையில் இருந்து இரண்டு நாற்காலிகள் மற்றும் ஓர் டேபிளை கொண்டு வந்து அவன் முன் வைத்தேன்.
அந்த டேபிளில் பிஸ்கட் தட்டை வைத்து விட்டு நான் தேநீரின் சுவையில் மூழ்கினேன்..
அவனும் சில பிஸ்கட் எடுத்து அதில் மூழ்க வைத்து சாப்பிட்டுக்கொண்டே இடைஇடையே தேநீரையும் பருகிக் கொண்டே அந்த நிலவை ரசித்து கொண்டு இருந்தான்..
நான் இயல்பாக எனது தேநீர் காதலியை பருகிக் கொண்டே அந்த நிலவை ரசித்து கொண்டு இருந்தேன்..
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விநோதன் தான் அந்த மௌனத்தை உடைத்தான்.
அண்ணா உங்களிடம் ஓர் விசயம் சொல்ல வேண்டும் என்றான்..
ஓ தாராளமாக சொல்லலாமே.. என்றேன் புன்னகைத்தபடி..
நான் தேநீர் பருகி முடித்து விட்டு கோப்பையை டேபிளில் வைத்து போது அவன் ஏதோ சொல்ல தயங்குவதாக எனக்கு தெரிந்தது..
ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டு இப்படி தயங்கினால் எப்படி? அந்த நிலாவுக்கு கோபத்தை மூட்டுகிறாய்..நீ என்றேன்..
நான் தயங்குவதால் அதற்கு என்ன கோபம் அண்ணா என்றான் சிரித்தபடியே..
இல்லை.. அதுவும் எவரேனும் காதல் கதையை சொல்வார்களா என்று வெகுநேரமாக ஆவலாக உள்ளது.. என்னிடம் கூட காதல் சொல்ல கெஞ்சியது சற்று முன் கூட..நானோ அதை நிராகரித்து விட்டேன்.. அந்த கோபத்தை உன்னிடம் திருப்பி விட போகிறது என்றேன் கிண்டலாக..
அண்ணா ஏன் இந்த கொலவெறி என்றான் பலமாக சிரித்தபடியே..
சரி விசயத்திற்கு வா.. விநோதன்.. உனக்கும் கூட காதல் பிரச்சினையா என்றேன் மிக இயல்பாக..
அவன் உடனே ஆம் அண்ணா என்றான் மிகவும் பரபரப்பாக..
அப்படியா.. அந்த கொடுத்து வைத்த காதலி யார் என்றேன் நான் மிகவும் ஆவலாக..
அண்ணா அவள் ஓர் இலக்கியவாதி.. நிறைய கவித்துவமான படைப்புகள் படைத்து நிறைய வார மாத இதழ்களுக்கு அனுப்பி வைப்பவள்.. மேலும் இரண்டு நாவல்களும் எழுதி உள்ளாள்.. மேலும் அவள் முதுகலை தமிழ் பட்டதாரி.. வேலைக்கு எல்லாம் போகவில்லை.. எந்த அரசு போட்டி தேர்வும் எழுதவில்லை.
நாங்கள் அறிமுகம் ஆனது ஓர் இலக்கிய வட்டாரத்தில்.. நான் எதேச்சையாக அவள் படைப்புகளை ஓர் தளத்தில் படிக்க ஆரம்பித்து அதன் பிறகு அவள் எழுத்தின் காதலனாகி இப்போது அவள் மேல் ஏதோவொரு ஈர்ப்பு..அது காதல் தான் என்று எனக்கு தோன்றுகிறது.. ஆனால் எங்கள் வீட்டில் வேலைக்கு அதுவும் அரசாங்கம் உத்தியோகம் போகும் மணமகளை தான் தேடுகிறார்கள்..
மேலும் எங்கள் வீட்டில் காதலுக்கு எப்போதும் அவர்கள் எதிரி தான் என்று மடமடவென சொல்லி விட்டு என்னை பார்த்தான்..
நான் அவனை பார்த்து ரொம்ப பலமாக சிரித்தேன்..
அவன் பயந்து விட்டான் போலும்.. அண்ணா ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்.. என் காதல் கதை உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறதா என்றான்..
நான் மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னேன்..
விநோதன் இந்த காதல் எல்லாம் எப்போதும் இப்படி தானா.. இல்லை காதலிக்கும் நீங்கள் இப்படி தானா.. என்றேன்..
என்ன அண்ணா சொல்கிறீர்கள்.. ஒன்றும் புரியவில்லை என்றான்.
இல்லை எப்போதும் காதலித்து முடித்து விட்டு தீர்மானமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லாமல் பிறகு இது சரி வருமா என்று யோசிக்கிறீர்களே அதை கேட்டேன் என்றேன்..
அதுசரி நீ அவளிடம் உன் காதலை சொன்னாயா என்று கேட்டேன்..
நேற்று முன்தினம் தான் சொன்னேன் அண்ணா என்றான்..
சரி உன் காதலை ஏற்றுக் கொண்டாளா என்று கேட்டேன்..
இல்லை அண்ணா.. அவள் அதற்கு பதில் சொல்லாமல் கலகலவென்று சிரித்தாள் என்றான் விநோதன்.
ஏன்..உன்னை பைத்தியக்காரனாக பார்க்கிறாளோ என்றேன் நான் சிரித்தபடியே..
இல்லை அண்ணா..நீ யோசித்து கொள்..ஒரு இலக்கியவாதியோடு குடும்பம் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல என்று சொல்லி விட்டு ஆனாலும் உன் காதலை ரசிக்கிறேன் என்றாள்.
அதென்ன காதலை ரசிக்கிறாள் இதெல்லாம் இலக்கியவாதிகளின் தனித்தன்மை என்று சொல்லி விட்டு உன் காதலை ரசிக்கிறாள் ஒருவேளை உன் காதலை என்றேனும் ஏற்றுக் கொள்ளவும் கூடும்.நீ காத்திரு.. என்றேன்.
அண்ணா என் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.. இவள் எப்போது என் காதலை ஏற்றுக் கொள்வது.. நான் இவளோடு எப்போது திருமணம் செய்வது என்றான் மிகுந்த வேதனை கொண்ட காதலோடு..
கவலைப்படாதே விநோதா.. காதல் என்றால் அப்படி தான்..
நீ உன் வீட்டில் பேசி புரிய வை..
அவர்கள் ஒருவேளை உன் காதலை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.. ஆனால் அதற்கு முன் உன் காதலை ரசிக்கும் காதலி எப்போது உன்னை ரசிப்பாள் என்று தெரியவில்லையே என்றேன் கிண்டலாக..
அதுதான் அண்ணா பிரச்சினை..
அது நிகழலாம் நிகழாமலும் போகலாம் என்றான் சோகமாக..
நான் நம்பிக்கையோடு இரு.. எந்த உண்மையான காதலும் தோற்பது இல்லை..காத்திருப்பது என்பது இங்கே மிகவும் அவசியம்..
எவ்வளவு காலம் ஆனபோதும் காத்திருந்து தன் காதலியை அல்லது காதலனை அடைவது என்பது அவரவர் வைராக்கியம் பொறுத்த விஷயம்..
காதல் எப்போதும் எல்லாவற்றையும் தாண்டி பயணிக்கும்.. அதற்கு காதல் மட்டும் தான் தெரியும்.. காதல் உள்ள எவரோடும் அது பயணிக்கும்.. அதற்கு வயதோ காலமோ தேவையில்லை..
எல்லாம் கடந்த பிறகும் காதல் ஒளியோடு பயணிக்கும்.. காதல் ஓர் புரிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வு..
அந்த உணர்வின் உச்சத்தை அடைந்தவர்களை அந்த காதல் கொண்டாடி மகிழ்கிறது..
ஆனால் அந்த கொண்டாட்டத்தை அனுபவிக்க இங்கே எவருக்கும் பொறுமை இல்லை.. அதனால் காதலை குறை சொல்லி திரிகிறார்கள் என்று நீண்ட சொற்பொழிவை அவனுக்கு பரிசளித்தேன்..
அவனும் உன்னிப்பாக என் பேச்சை கேட்டு விட்டு ஆமோதித்து தலையசைத்தான்..
ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே.. அதில் என் காதல் என்னை கொண்டாடுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. அதில் எனது செயலும் அவளது செயலும் அடங்கி உள்ளது.. இருவரில் ஒருவர் அந்த காதலை வெற்றி பெற செய்தாலும் கூட காதல் என்னை கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளும்.. என்றான் உற்சாகமாக..
இந்த நம்பிக்கை உன் காதலை வெற்றி பெற வைக்கும்..விநோதா.. உற்சாகமாக இரு.. என்றேன் நான்..
சரி அண்ணா... உங்களோடு பேசியதில் எனக்கு ஓர் தெளிவு வந்து விட்டது.. நான் கிளம்புகிறேன்.. மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் போது நான் உங்களை வந்து பார்க்கிறேன் என்று கைக்குலுக்கி விடை பெற்றதை பார்த்து வானில் உள்ள நிலவு நான் வேண்டும் என்றால் தூது செல்கிறேன் அவர்கள் காதலுக்கு என்று என் காதில் இரகசியமாக சொன்னது..
நானோ அந்த தேவை வரும் போது உன்னிடம் சொல்கிறேன் என்றேன் சிரித்தபடியே..
நான் சிரிப்பதை பார்த்து என்ன அண்ணா சிரிக்கிறீர்கள் என்றான்..
அதுவா..அது எனக்கும் நிலவுக்கும் உள்ள இரகசியம் என்று சொல்லி விட்டு அவனை வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு இரவு உணவை தயார் செய்ய ஆயத்தம் ஆனேன்..
எனக்கு பிடித்த வானொலியில் பாடலை ஒலிக்க விட்டபடியே..
அதில் காதல் காதல் உன் கண்ணில் மின்னல் மோதல்.. ஒலித்துக் கொண்டு இருந்ததை நானும் முணுமுணுத்தபடியே சப்பாத்தி மாவை பிசைந்தேன்..
மீண்டும் பிரிதொரு பயணத்தில் சந்திக்கலாம் வாசக நெஞ்சங்களே🙏💫😊🤝💖🦋🐦🦚🦚🌴💫🙏
பின்குறிப்பு :-
இந்த பயணத்தில் ஓர் சந்திப்பு அத்தியாயங்கள் பற்றி தங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாங்க நெஞ்சங்களே 🙏. இதில் வரும் கதாபாத்திரங்கள் பற்
றிய தங்கள் மேலான எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.. நன்றி 🙏
#இளையவேணிகிருஷ்ணா.
#பயணத்தில் ஒரு சிந்திப்பு.
✨✨✨✨
✨✨✨.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக