ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 20 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (10)

 


✨மாலை நேரத்தில் சூரியன் மெல்ல மெல்ல தன் ஒளியை இரவுக்கு பலிக் கொடுப்பது ஓர் அழகு தான்.தன்னை வசப்படுத்தவும் ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போது கொஞ்சம் ஆச்சரியம் கூட தோன்றும்.அது எவ்வாறு எனில் அதுவரை கட்டுக் கடங்காது திரிந்த ஆண் ஓர் பெண்ணிடம் காதல் வயப்படும் போது தனது திமிரை கொஞ்சமேனும் இழக்கிறான் அல்லவா.. அதுபோல..

அந்த இரவு நெருங்கும் நேரத்தில் நான் கொஞ்ச நேரம் அந்த நிகழ்வை ரசிப்பது எனது வழக்கம்.அப்படி ரசித்து முடித்து விட்டு கொல்லைப்புற தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் சென்றேன்.வரவேற்பறையில் விளக்கை போட்டுவிட்டு இரவு உணவை தயாரிக்க சமையலறை சென்றேன்..

அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்று போய் கதவை திறந்தேன்.அங்கே எனது பக்கத்து வீட்டு பத்மநாபன் நின்று கொண்டு இருந்தார்.உள்ளே வரலாமா என்று கேட்டார் சிரித்தபடியே.நானும் அவருக்கு வழி விட்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்து சென்று சோஃபாவில் அமர வைத்தேன்.


கொஞ்ச நேரம் இந்த புத்தகத்தை படித்து கொண்டு இருங்கள்.நான் இதோ வந்து விடுகிறேன் என்று சமையலறை நோக்கி சென்றேன்..

பரவாயில்லை நீங்கள் உங்கள் வேலையை முடித்து நிதானமாக வாருங்கள்.உங்களோடு கொஞ்சம் உரையாடலாம் என்று தான் வந்தேன் என்றார்.

நான் இரவு உணவாக நான்கு கோதுமை ரொட்டி தயார் செய்து விட்டு அவருக்கும் எனக்கும் கொஞ்சம் எலுமிச்சை 🍋 இஞ்சி கலந்த தேநீர் கொண்டு வந்து அவர் கையில் ஒன்றை கொடுத்து விட்டு அவரருகில் அமர்ந்தேன்.. கொஞ்சம் மாடிக்கு போய் அங்கே காற்று வாங்கி கொண்டு பேசலாமா என்றேன் அவரிடம்.

ஓ.. நிச்சயமாக..என்று எழுந்தார்.


நான் அவரிடம் இருந்து தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு அவரோடு நடந்தேன்.மேலே இருவருக்கும் இருக்கையாக அங்கே இருந்த மர சாய்வு நாற்காலி அவருக்கு கொடுத்து விட்டு நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்தேன்.அவர் கையில் தேநீர் கோப்பை கொடுத்தேன்.. மிகவும் நிதானமாக பருகி விட்டு இவ்வளவு சுவையான தேநீர் தயாரிக்க எவரிடம் கற்றுக் கொண்டீர்கள் என்றார் ஆவலாக.

எல்லாம் ஓர் கைப்பக்குவம் அவ்வளவு தான் ஐயா என்றேன்..

அதுவும் சரிதான் என்று சிரித்தபடியே சொல்லி விட்டு கொஞ்ச நேரம் அண்ணாந்து வானத்தை பார்த்தார்..கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் அவரை கவர்ந்து இருக்கக்கூடும்.சிறு புன்முறுவல் அவரிடம்..

ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீர்களே என்று அவரிடம் ஞாபகப்படுத்தினேன்.


ஆமாம்.. வீட்டில் எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது தம்பி..மனைவியோடு பழைய கதைகளை பேசினால் சலிப்பாக பார்த்து விரட்டி விடுகிறாள்.. அதுதான் உங்களை தேடி வந்து விட்டேன் என்றார்.. சிரித்தபடி.

கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு அவரே ஆரம்பித்தார்.. இவ்வளவு நாட்கள் வாழ்ந்து முடித்து விட்டேன் தம்பி.எனக்கு தற்போது எழுபது வயதாகிறது.ஆனால் ஏனோ தற்போதெல்லாம் இனி இருக்கும் வாழ்க்கை வீண் என்று தோன்றுகிறது என்று சொன்னார் மிகவும் நெகிழ்வாக..

அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் ஐயா.. எவ்வளவு காலம் இருந்தாலும் நமக்கான பயணம் முடியும் வரை ரசிப்பு தன்மையை மட்டும் விட்டு விடக்கூடாது என்றேன்.. உங்கள் பேரக் குழந்தைகளை அடிக்கடி சென்று பாருங்கள் ஐயா.அவர்களோடு கொஞ்ச நேரம் விளையாடுங்கள்.. அவர்களுக்கு நல்ல நல்ல கதைகளை சொல்லுங்கள் என்றேன்.

அதற்கு அவர் அதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஆசைதான்.ஆனால் அவர்களுக்கு நேரம் இல்லை தம்பி.. நான் உரையாடியே பல நாட்கள் ஆகிறது என்றார் சோகமாக.

எனக்கு அதை கேட்டு வருத்தம் அதிகமாகிவிட்டது.

சரிங்க ஐயா உங்கள் இளமை கால பள்ளி கால நட்பை பற்றி கொஞ்சம் என்னிடம் பேசலாமே என்றேன்..

அதை கேட்டவுடன் அந்த இரவில் கூட அவர் முகம் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததை நான் பார்த்தேன்..

அவர் பள்ளி காலத்தில் செய்த அந்த குறும்புகள் மற்றும் கணிதம் வராமல் ஆசிரியரிடம் அடி வாங்கியது.. நண்பனுக்காக இவர் பொய் சொல்லி பெற்றோரிடம் அடி வாங்கியது என்று நீண்டு கொண்டே போனது அவர் பேச்சு.. அந்த பேச்சை மிகவும் நிதானமாக கேட்டு அங்கங்கே கேள்வி எழுப்பி அவர் அதற்கு உற்சாகமாக பதில் தந்து என்று மிகவும் நன்றாக சென்றது எங்கள் உரையாடல்.

அவர் அத்தனை விசயத்தையும் பேசி முடித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டார்.

கொஞ்ச நேரம் ஓர் பேரமைதி எங்கள் இருவருக்கும் இடையே நிலவியது..

பிறகு அவர் என்னிடம் மணி கேட்டார்.. நான் எட்டு மணி ஆகப்போகிறது என்றேன்..

சரிங்க தம்பி மிகவும் மகிழ்ச்சி.. இந்த மாதிரி பேசி பேசி சிரித்து மகிழ்ந்து வருட கணக்கில் ஆகிறது.. தினமும் சிரிப்பேன்.ஆனால் அதில் எந்தவித உணர்வும் இருக்காது.. இன்று நான் பேசியது மகிழ்ந்து சிரித்தது.. எல்லாம் என் ஆழ்மனதில் இருந்து ஆத்மார்த்தமாக வந்தது.. இப்படி எல்லாம் என் மகனிடம் பேசி மகிழ வேண்டும் என்று ஓர் ஆசை அவ்வபோது வந்து போகும்.. ஆனால் அந்த ஆசை கானல் நீராக தான் போகும்..

அவர்கள் அமெரிக்காவில் அவர்களுக்கு என்று ஓர் வாழ்க்கை குடும்பம் என்று நிம்மதியாக வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு அந்த தேசம் பிடித்து விட்டதாம்.. இங்கே வர விருப்பம் இல்லையாம்..

அது அவர்கள் விருப்பம்.அதில் நான் தடையேதும் சொல்லவில்லை.. வருடத்தில் ஓர் முறை இங்கே இரண்டு மாதங்கள் வந்து இருந்து எங்களை மகிழ்விக்க அவனுக்கு மனம் இல்லை என்று நினைக்கும் போது தான் மனம் வலிக்கிறது தம்பி.. என்றார்..

பேரக்குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் பண்பாடு வரலாறு என்று அவர்களிடம் சொல்ல ஆயிரம் விசயங்கள் என்னிடம் பொக்கிஷமாக உள்ளது.. ஆனால் அவர்களுக்கு அதற்கென தனியாக டியூஷன் போட்டு இருக்கிறார்களாம்.நான் சொல்லி தர அவசியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்..

இதெல்லாம் பார்க்கும் போது தான் தோன்றுகிறது பந்தம் பாசம் எல்லாம் மாயை என்று.. என்றார் விரக்தியாக..

ஐயா நான் உங்களிடம் ஒன்று சொல்லட்டுமா என்றேன்..

சொல்லுங்கள் தம்பி.. என்றார்.

இங்கே பலபேருக்கு பிரச்சினை எது என்றால் பரந்த மனப்பான்மை இல்லாது போவது தான் என்றேன்..

என்ன தம்பி சொல்கிறாய்.. புரியவில்லை என்றார்..

இங்கே பாருங்கள்... இத்தனை நாட்கள் நீங்களும் நானும் இங்கே அருகில் தான் இருக்கிறோம்.. இருவரும் வெறும் சிரிப்பை மட்டுமே பரிமாறி கடந்து சென்று வந்தோம்.. இருவரும் எப்போதேனும் பேசினால் நலமா என்று விசாரிப்போடு முடிந்து விடும்..

இப்போது தானே நீங்கள் என் வீட்டு கதவை தட்டினீர்கள்.. இப்போது கூட நீங்கள் பக்கத்து வீட்டுக்காரராக தான் நீங்கள் என்னை பார்க்கிறீர்கள்.ஆனால் நான் உங்களை என் வீட்டில் பார்த்தவுடன் எனது தந்தை என்ற உணர்வு தான் வந்தது.. என்றேன்.. உங்களுக்கு மகன் என்ற உணர்வு இருந்ததா என்றேன் சிரித்தபடி.

கண்டிப்பாக தம்பி.நீங்கள் சொல்வது உண்மை.. ஆனால் இப்போது உங்களை எனது பெற்ற மகனாக தான் பார்க்கிறேன்... வயதான காலத்தில் எவர் ஒருவர் தனது தந்தைக்கு ஒப்பான மனிதரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்கிறாரோ அவர் நிச்சயமாக மகன் தான் என்றார் உணர்ச்சி பொங்க..

நான் சிரித்தபடி அவர் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கீழே போகலாமா என்றேன் அவர் தோளை பிடித்து கொண்டு..

போகலாம் என்று தலையசைத்தார்.

நாங்கள் இருவரும் கீழே வந்து அவரை சாப்பாடு மேசைக்கு அருகே உள்ள நாற்காலியில் அமர வைத்து அந்த கோதுமை ரொட்டியை பரிமாறினேன்.அதை அவர் ருசித்து சாப்பிடும் அழகில் லயித்து போனேன்..

வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் காம்பினேஷன் ரொம்ப அருமை தம்பி ரொட்டி..என்று கை கழுவினார்..

அவர் சாப்பிட்டு முடித்தவுடன் மெதுவாக அழைத்து சென்று அவர் வீட்டில் விட போனேன்..

அவர் வீட்டில் அவர் மனைவி வாசலில் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தார் இவர் வருகைக்காக.. இவ்வளவு நேரமாக என்ன தான் செய்தீர்கள் என்றார் கோபமாக..

நான் சொன்னேன்.. அம்மா கோபம் வேண்டாம்.. அவர் அவருடைய மகனிடம் பேசிக்கொண்டு இருந்ததால் நேரமாயிற்று என்றேன்.. அமைதியாக..

அந்த தாயின் கண்கள் என்னை உற்று பார்த்து விட்டு கண் கலங்கியதை அந்த இரவின் வெளிச்சம் காட்டி கொடுத்தது..

நான் இருவரிடம் கையசைத்து விடை பெற்றேன்.. மிகவும் திருப்தியான மனநிலையில் எனது வீட்டுக்கு..

அங்கே எப்போதும் போல காத்திருந்தது எனது வருகைக்காக அன்று நான் சந்தித்த தெருநாய்..

அதற்கு ஓர் புன்னகை பரிசளித்து வேகமாக உள்ளே சென்று மதியம் வைத்திருந்த சாதத்தில் தயிர் போட்டு எடுத்து வந்து போட்டேன்.. அதன் தட்டில்.. நிம்மதியாக சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டி நன்றி சொல்லி வெளியே உள்ள திண்ணையின் அடியில் படுத்துக் கொண்டது..

நான் முன் வாயில் கதவை மூடி விட்டு வீட்டுக்கு உள்ளே சென்று கதவை தாழிட்டு வீணை இசையை கசிய விட்டு எனது படுக்கையில் படுத்தேன் .. ஏதோவொரு ஆனந்தம் என்னை தாலாட்டியது மெலிதாக.என்னுள்ளே..கண்கள் உறக்கத்தை பரிசாக பெற்று மகிழ்ந்தது.

மீண்டும் ஓர் பயணத்தில் சந்திப்போம் வாசகர்களே 😊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (10).



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...