ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (12)

 


✨இன்று விடியற்காலை பொழுதில் வழக்கமான தேநீர் கோப்பை சுவையோடு தொடங்குகிறது..வாழ்க்கை என்பது என்ன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சிந்தித்து கொண்டே ஒவ்வொரு தேநீர் பருகலிலும் அதன் சுவையை அறிய முற்பட்டு கொண்டே நடக்கிறேன் எனது புழக்கடையில் உள்ள தோட்டத்தில்..

ஏதோவொரு தேடலில் நாம் தொலைந்து கொண்டே தான் இருக்கிறோம்.. தேடல் எப்போதும் சுவையை அதிகரிக்கிறது.. ஆனால் அந்த சுவையும் வெறுத்து விடுகிறது நாட்கள் செல்ல செல்ல..


ஏதோவொன்றில் ஆனந்தத்தை தேடி அலையும் மனதிற்கு மட்டும் அந்த ஆனந்தம் மட்டும் பிடிபடவே இல்லை.. ஆனந்தம் எங்கே உள்ளது?மனதிலா உடலிலா? புற விசயங்களிலா?விசய சுகங்களிலா .... இப்படி கேள்விகள் ஆயிரம் ஆயிரம் என்னை துரத்தி அடிக்கிறது.. ஆனால் இதில் எதிலும் இல்லை என்று உணர்ந்த மனம் அது எங்கே என்று தேடி அலைவதை மட்டும் நிறுத்தவே இல்லை.


பல சமயங்களில் பிறவி என்பது ஏதோவொரு வரம் என்று தோன்றி வந்த வேகத்திலேயே மறைந்தும் விடுகிறது..ஏனோ பிறவிவேரின் மூலம் மட்டும் பிடிபடவே இல்லை..

இந்த பிரபஞ்சம் ஆயிரம் ஆயிரம் விசயங்களை தன்னுள் புதைத்து உள்ளடக்கி உள்ள போதும் எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கும் ஆன்மாவை எது திருப்திப்படுத்த இயலும்??


சுகங்களை தேடி தேடி அலையும் மனதோ அது தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்தும் தேடி அலைவதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..

தேடல் ஓர் சுகம் தான்.. இளமைப் பருவத்தில் காதலுக்கானதாக இருக்கும் போது..

திருமணத்திற்கு பின் பிள்ளைகள் ஏதேனும் சாதித்து வந்து காட்டாதா என்று நினைத்து கொண்டு கனவினை சுமந்து தேடி அலைந்துக் கொண்டு இருக்கும்போது..

நடுத்தர வயதில் குழந்தை பருவ நினைவுகளை மட்டுமே இனிமை என்று சேர்த்து வைத்த பழைய ஞாபகங்களை தேடி அலையும் போது..

முதுமையில் இறப்பு நம்மை நோக்கி நெருங்கி வராதா என்று..எல்லா தேடல்களும் சுகமே.. ஆனால் ஏதோவொரு வலியும் ஏக்கமும் அதில் புதைந்து கொண்டு நம்மை வருத்தாத வரை...


ஏதோவொரு வலையில் அகப்பட்ட உணர்வு தான் தலைதூக்குகிறது.. அந்த வலை அவ்வளவு எளிதில் பலருக்கு விடுவதாக இல்லை..

என் வாழ்க்கை என் பயணம் என்று தனித்து இயங்குவதில் ஓர் அலாதி சுகம்.. அந்த சுகத்தை அனுபவித்து ருசித்து வாழ எல்லோருக்கும்ஆசைதான்.. எல்லோருக்கும் என்று சொல்வதை விட சொற்பமான வர்களுக்கு இருக்க தான் செய்கிறது..

இப்படி நான் சிந்தனை செய்து கொண்டு நடக்கும் போதே மிக அருகில் அந்த சிட்டுக்குருவி யின் சிறகு என்னை தீண்டியதை சடாரென பார்த்து புன்னகை பூத்து கொண்டேன்.. ஒவ்வொரு விடியலிலும் ஓயாமல் உற்சாகமாகபறந்து பறந்து இரையை தேடி அவைவது அதற்கு சுகமாக இருக்கிறது என்று நாம் நினைக்கக் கூடும்.. ஆனால் அவ்வாறா என்று உணவை தேடி வெகுதூரம் அலைந்து திரியும் அந்த பறவைக்கு தான் தெரியும்..என்று யோசித்து கொண்டே அந்த சிட்டுக்குருவி பறந்த திசையை பார்வையை செலுத்த தொடங்கினேன்..

மெல்ல மெல்ல இருளுக்கு விடைக் கொடுத்து கைக்குலுக்கி அனுப்பி வைத்தது விடியல்..இது எனது தருணம் என்று..

தருணங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.. அதாவது அந்த இருள் பூசிய இரவும் ஒளி கிரணங்களை பாய்ச்சி இந்த பிரபஞ்சத்தை பொழிவூட்டும் பகலும்..

அதன் தன்மையில் ஓர் அழகிய உண்மை ஒளிந்து உள்ளது..

அதுதான் இந்த உலகியலில்

பயணிக்கும் எந்த ஜீவராசிகளின் வாழ்வியலிலும் ஒட்டாமல் தனது பயணத்தை தொடரும் அந்த பொழுதுகள்..

நமக்கு வாழ்வியலை ஆழ்ந்த அமைதியில் இயங்கி கற்றுக் கொடுக்கிறது..

இந்த தெளிவான சிந்தனை வந்தவுடன் நானும் இன்றைய நிகழ்வுகளில் பயணிக்க ஆயத்தம் ஆனேன் மிகவும் உற்சாகமாக...

மீண்டும் சந்திப்போம் நேயர்களே ஓர் அழகான பயணத்தில் 🧚🦋🙏😊🧚

#பயணத்தில் ஒரு சந்திப்பு (12).

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...