ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 23 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (13)

 


✨குளிர் காற்று என்னை வருடியபடி இருக்க நான் இந்த இரவை ரசித்தபடி எனது வீட்டின் மாடியில் மெதுவாக நடக்கிறேன் எனது அலைபேசியில் சுசீலாவின் இசையை ரசித்தபடி..இரவு தான் எவ்வளவு அழகு.. இந்த இருள் இவ்வளவு அழகை சேர்க்க முடியுமா இரவுக்கு என்று ஆச்சரியப்படுகிறேன் நான்..

இயற்கை ஒவ்வொன்றும் ஒப்பனை இல்லாமலேயே இவ்வளவு அழகாக இருப்பதை பார்த்து வியக்கிறேன்..


இரவின் வெறுமை தான் அழகை சேர்க்கிறது.. பகலின் ஒலி இரவை ஆக்கிரமிக்காமல் இருப்பது தான் இரவின் அழகை கூட்டுகிறது.. நீங்கள் எல்லாம் நகரத்தில் இருந்து கொண்டு இந்த இரவின் அமைதியை ரசிக்க முடியாது..இது உண்மை தானே..😊

இரவின் அழகில் மயங்கிய எனக்கு அலைபேசியின் ஒலி கலைத்தது..எடுத்து பார்த்தேன்.. கயல் தான் அழைத்து இருந்தாள்.கயல் எனது அத்தை மகள்.. இந்த நேரத்தில் என்னவாக இருக்கும் என்று யோசித்து சொல்லு கயல் என்றேன்..

மதி நலமா.. என்ன ரொம்ப நாளாக அழைக்கவே இல்லை.. அதுதான் அழைத்தேன் என்றாள்.

நான் நலம்..நீ நலமா என்று கேட்டு விட்டு நீயாக அழைத்தால் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் கயல்.. ஏனெனில் எனக்கு வேலை இல்லை என்பதற்காக சம்சாரி களை தொந்தரவு செய்ய வேண்டாமே என்று தான்..என்று சொன்னேன்.. சிரித்தபடி..

அதற்கு அவள்,நீ சொல்வடா ஏன் சொல்ல மாட்டாய்..நீ திருமண பந்தத்தில் இணையாமல் தப்பித்து விட்டாய்.. நாங்கள் இந்த சாகரத்தில் நீந்தி நீந்தி சோர்ந்து விட்டோம்.. கண்ணுக்கு தெரியும் வரை கரையை தான் காணோம் என்றாள் ஆவேசமாக..

அட.. ஏன் இவ்வளவு அலுத்து கொள்கிறாய் கயல்.. இன்னும் எவ்வளவு நிகழ்வுகளை உன் வாழ்வில் கடக்க வேண்டும்..இப்போதே சோர்ந்து விட்டால் எப்படி என்றேன் கிண்டலாக..

உனக்கு எப்போதும் நகைச்சுவை தான் ..மதி என்றாள்..

சரி அங்கே அனைவரும் நலமா.. குட்டி செல்லம் கீர்த்தி நலமாக இருக்கிறாளா என்றேன்..

இங்கே அனைவரும் நலம்..மதி..

நீ அங்கேயே இருந்து கொண்டு என்ன செய்கிறாய்.. இங்கே கொஞ்சம் வந்தால் தான் என்ன என்றாள்.

நான் இப்போது கொஞ்சம் படிக்க வேண்டி உள்ளது.. நிறைய புத்தகங்கள் வாங்கி விட்டேன்..அதை எல்லாம் எனது விடுமுறை நாட்களான இப்போது படித்தால் தான் உண்டு.. அங்கே வந்து என்ன செய்ய போகிறேன் என்றேன்.

இங்கே நீ வந்தால் எனக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும்.. ஏனெனில் உன்னிடம் நிறைய பேச வேண்டும்.. தினம் தினம் ஒரே மாதிரி வேலை மற்றும் மற்ற பணிகளில் நான் கொஞ்சம் சோர்ந்து விட்டேன்.. இங்கே எனக்கு பேசக் கூட எவரும் இல்லை மதி..சக்தி வீட்டில் இருந்து வேலை செய்கிறார் என்று தான் பெயர்.காலையில் இருந்து இரவு வரை அவர் இருக்கும் அறையை விட்டு சாப்பிட தவிர வெளியே வருவதே இல்லை.. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது.. உன்னை போல புத்தக புழுவாக இருந்தால் பிரச்சினை இல்லை... இங்கே எனது பேச்சை கேட்க ஆள் இல்லை..இப்படியே போனால் பைத்தியம் பிடித்து விடும் போல உள்ளது மதி என்றாள்..

பொறு பொறு.. ஏன் இப்படி மூச்சு விடாமல் பேசுகிறாய்..உனது தினசரி பணிகளை செய்து செய்து சோர்ந்து விட்டாய்.. அவ்வளவு தானே.. இதற்கு ஏன் இவ்வளவு பதட்டம்.. என்றேன்..

"ஏதோவொரு வெறுமை வாழ்க்கையில் தோன்றுகிறது மதி.. வாழ்க்கை ஓர் அர்த்தமும் இல்லாமல் போகிறது என்று தோன்றுகிறது."என்றாள்.

சில சமயங்களில் அப்படி தான் தோன்றும் கயல்.. அதெல்லாம் பெரிதாக நினைக்காதே.‌

உனக்கு தான் வீணை வாசிக்க தெரியுமே என்றேன்..

ஆமாம் மதி.. ஆனால் அதை எல்லாம் வாசித்து எத்தனை வருடங்கள் ஆகிறது தெரியுமா.. என்றாள்..

அந்த வீணையை தற்போது கையில் எடு என்றேன்..

மதி அதை வாசித்து வருட கணக்கில் ஆகிறது.. இப்போது சத்தியமாக எனது விரல்கள் தடுமாறும் என்றாள்..

அதெல்லாம் தடுமாறாது.. இப்போது நீ போய் அதை எடுத்து வா.. என்றேன் பிடிவாதமாக..

அவளும் கொஞ்ச நேரம் தொடர்பில் இரு என்று சொல்லி விட்டு பூஜை அறையில் உள்ள அந்த வீணையை எடுத்து வந்தாள்..

இப்போது வாசி என்றேன்..

அதை எடுத்து சில ராகங்களை வாசித்து பார்த்தாள்.ஒன்றும் வழிக்கு வரவில்லை சில நிமிடங்கள்.. கொஞ்ச நேரம் பிடிவாதமாக அதனோடு போராடி குறையொன்றுமில்லை என்று வாசிக்க தொடங்கினாள்.. அவள் அங்கே வாசித்தது அலைபேசி வழியே கசிந்து இங்கே இருக்கும் என் செவிகளுக்கு மட்டும் இல்லை..என்னை வருடிக் கொண்டு இருக்கும் காற்றுக்கும் தீனி போட்டது.

அதை தொடர்ந்து அலைபாயுதே வாசிக்க தொடங்கினாள்.. அந்த காற்றில் கண்ணனே ஊடுருவி தவழ்ந்து வந்தது போல் இருந்தது.. மெய் மறந்து கேட்டு கொண்டே இருந்தேன்..

அவளும் இன்னும் பல கீர்த்தனைகளை வாசித்து கொண்டே இருந்தாள் இடைவிடாமல்.. அந்த இசை எங்கள் இருவருக்கும் ஆறுதல் தந்தது..

இப்படி ஒரு மணிநேரத்திற்கு மேல் எங்களை கட்டிப் போட்ட இசை கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானது..

எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதி.. நானும் அந்த அமைதியை அப்படியே ரசித்தேன்..ஹலோ மதி இருக்கிறீர்களா என்றாள் கயல்.

நான் இங்கே தான் இருக்கிறேன் கயல்.. ரொம்ப அருமையான இசை..வீணை இசையை நீ வாசித்து நான் கேட்ட அந்த நாட்கள் எனக்கு ஞாபகம் வருகிறது.. நான் அடிக்கடி உன்னை வாசிக்க சொல்லி கேட்பேன்.. உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்றேன்.

ஆம் மதி.. அதெல்லாம் ஓர் இனிமையான தருணங்கள் நிறைந்த நாட்கள்..

நான் உன்னை நேசித்தேன்..நீ என்னை நேசித்தாயா என்று எனக்கு ஞாபகம் இல்லை..

எனது தந்தை பிடிவாதமாக சாஃப்ட் வேர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று சொன்னார்..அதை உன்னிடம் ஓர் தகவலாக சொன்னேன்.. உன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை அப்போது என்றாள்..

அதெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய் என்றேன்.

இல்லை இந்த தருணத்தில் எனக்கு அந்த ஞாபகம் வந்தது.. அதனால் சொன்னேன்.

இப்போது சற்று முன் உன்னிடம் சொன்னேனே ஏதோவொரு ஓர் வெறுமை..அது இப்போது இல்லை மதி.. நான் ரொம்ப ஆனந்தமாக உணர்கிறேன் ரொம்ப நாளைக்கு பிறகு.. என்னோடு எனது உயிர் மூச்சாக வீணை இருப்பதை நான் எவ்வாறு மறந்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்றாள்..

காலம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்க துடிக்கும் போது நாம் அதை உதாசீனப்படுத்தி விலகி விடுவதால் வரும் வினை என்றேன்..

"ஆம் மதி..நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.." என்றாள்..

நீ காலத்தில் ஆனந்தமாக கரைந்து கொண்டு இருக்கிறாய் இப்போது அப்படி தானே என்றாள்..

ஆம் கயல்.. எப்போதும் காலத்தில் லயமாகி ஆனந்திக்கும் தருணங்கள் தான் என்னை உற்சாகமாக வைத்து இருக்கிறது என்றேன்..

அந்த மாதிரி தருணங்களை ஆராதிக்கும் பாக்கியம் உனக்கு கிடைத்து இருக்கிறது..மதி.நான் காலத்தின் புயலில் சிக்கிய மரத்தை போல வாழ்வோடு போராடுகிறேன்.என்றாள்.

அப்படி சொல்லாதே கயல்.. வாழ்க்கை எவரையும் வெறுப்பது இல்லை..நீ உனக்கு வாய்த்த தருணங்களில் ஆனந்திக்க கற்றுக் கொள்.இப்போது இருந்தாயே இசையில் லயித்து.இதேபோல என்றேன்..

நிச்சயமாக முயற்சி செய்கிறேன் மதி.. உன்னை போல ஓர் மனிதனை எனது தந்தை அவமானப்படுத்தியதற்கு நான் வெட்கப்படுகிறேன்.. இப்போது மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மதி அவர் சார்பாக என்றாள்..தழுதழுத்த குரலில்..

அட அந்த மாதிரி எல்லாம் பேசாதே கயல்.. வாழ்வியல் முடிச்சுகளின் சூட்சுமத்தை நம்மால் அறிய முடியாது.. அந்த மாதிரி நடந்தது தான் நமது வாழ்வின் நிகழ்வுகள்..

கடந்து சென்ற அந்த நினைவுகளை அசை போட்டு உனது வாழ்வை ரணமாக்கிக் கொள்ளாதே.. கடந்து போன நிகழ்வுகள் எப்போதும் நம்மை ரணமாக்க அனுமதிக்கக் கூடாது..நிகழ்கால நிகழ்வுகளில் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்.. கடந்த ஒருமணி நேரம் எவ்வளவு ஆனந்தத்தை அள்ளித் தெளித்தது அந்த அமுத ஊற்றில் மெய் மறந்த தருணங்கள் தான் இனிமையானது இல்லையா என்றேன்..

ஆம்.. உண்மை தான் மதி..நீ வாழ்வை நேசிக்கிறவன் அணுஅணுவாக.உன்னை காயப்படுத்த விரும்பவில்லை..

இவ்வளவு நேரம் என்னோடு நீ இருந்தாய் என்கின்ற ஆனந்தம் போதும்..என் வீணையின் ஒலி இனி என் வாழ்வியல் தருணங்களில் ஆனந்த தேனை பருக கொடுக்கும்.. மறந்து விட்ட எனது ருசியை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி என்றாள்.. இனிமையான இரவு வணக்கம் என்றாள்..

நானும் தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று பாடி வைத்தேன்..எதிரே மௌன புன்னகை ஒலி ரகசியமாக கேட்டது எனது செவிகளுக்கு மட்டும்..

அலைபேசியை அணைத்து விட்டு உறங்க கீழே செல்வதற்கு முன் இருளுக்கு வணக்கத்தை சொல்லி பிரியா விடை பெற்றேன்.. இருளும் புன்னகைத்தது என்னை நோக்கி...

மீண்டும் சந்திக்கலாம் பிரிதொரு பயணத்தில் ⛵🌊🧚😊

#பயணத்தில் ஒரு சந்திப்பு (13).

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...