தினம் தினம்
ஓடி ஓடி களைப்பது
இந்த வயிற்றுப் பாட்டிற்கு தான்
என்று போலியாக
சொல்லிக் கொண்டு
ஓடும் மனிதர்களை
பார்த்து பெரும் வியப்பில்
ஆழ்கிறது இந்த காலம்...
அவர்கள் சேர்த்து வைத்திருக்கும்
ஆஸ்தியோ கோடியில்
கொடி கட்டி பறக்க
அந்த ஆஸ்தியின் ஒரு மூலையில்
அவர்கள் அஸ்திக்கு அங்கே
இடம் இல்லை அங்கே என்ற போதும்...
பொருளற்ற ஓட்டத்தில்
ஏன் இந்த பொக்கிஷமான
வாழ்க்கையை
தன் சுயநலத்திற்காக பலியிட்டு
படையலிட்டு
அதை வேகமாக வேகமாக
உண்கிறார்கள் ...
அவர்கள் மென்று
உமிழ்ந்த பொய்களின்
எச்சத்தில்
இந்த பிரபஞ்சம் கறைப்பட்டு
அசிங்கப்படுவதை
கொஞ்சம் அருவருப்போடு
அந்த விடியல்
பார்த்துக் கொண்டு
இருக்கும் வேளையில்...
அங்கே சூரிய கிரணகங்களின்
மெல்லிய ஒளியில்
தன் சோம்பலை
கணப் பொழுதில் முறித்து
உண்மையில்
தன் பசியெனும்
பெரும் தீயை அணைக்க
எந்த அகங்காரமும்
இல்லாமல் ...
தினம் தினம்
வானில் ஒரு முறையான
வரிசையோடு...
ஒற்றுமையோடு...
நிலை மாறாமல் பறந்து
ஒரே மாதிரி விடியலை
உற்சாகமாக வரவேற்று
உண்மையாக
தன் வயிற்றுப்பாட்டிற்காக
நெடுந்தூரம்
இரை தேடும் பறக்கும்
அந்த பறவைகளுக்காக...
இந்த பிரபஞ்சம் இன்னும்
மூச்சை நிறுத்தாமல்
இயங்கி கொண்டிருக்கிறதோ
என்று பெருமூச்சுடன்
காலமும் அந்த பறவைக்கு
துணையாக
எந்தவித சத்தமும் இல்லாமல்
பெரும் நன்றியுணர்வோடு
உடன் பயணிக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:22/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக