ஏதோவொரு சூழலில்
அவள்
இந்த சமூக வாழ்வெனும்
நிகழ்வில் இருந்து
மரணத்தின் அரவணைப்பில்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத
தோரணையில்
அதை இறுக
கட்டிப்பிடித்துக் கொண்டு
கிடக்கிறாள்...
அந்த இளம் பெண்ணின்
மரணத்தின் உடலில்
ஆயிரம் ஆயிரம் கதைகள்
நிகழ்வாக புனையப்பட்டு
அங்கிருந்த மக்களால்
எழுதி எழுதி
அழிக்கப்படுகிறது...
ஏதோவொரு நிலையில் எழுந்து
இத்தனையையும் அவள்
சூட்சம நிலையில்
கேட்டு பரிதவிக்கிறாள்...
அவள் எதை காரணமாக நினைத்து
காலத்தோடு கலந்தால் என்று
எவரும் சரியாக புரிந்து கொள்ள
மனமில்லாமல்
அங்கே திரை இயக்குநர்கள் பலர்
உடனடியாக உருவாகி
ஒத்திகை பார்த்துக் கொண்டு
இருக்கும் போது...
தன் கதாபாத்திரத்தில்
பொருத்திக் கொள்ள
அங்கே யாரை நியமிக்கிறார்கள்
அவர்கள் என்ற ஆவலில்
அங்கே நோக்குகிறாள்...
அப்போதைக்கு அங்கே
அவளை தவிர
எவரும் இல்லை என்ற சூழலில்
மரணித்த தன் உடலுக்கு
அவர்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் தாங்க
உயிர் கொடுக்கும் முயற்சியில்
அத்தனை பேரும் ஈடுபட்டு
வருவதை தவிர ...
அங்கே அவளின் இல்லாத
அந்த வெறுமையை
அங்கே உள்ளவர்கள் எவரும்
கவலைப்படாமல்
எல்லா உறவுகளும் வந்ததை
உறுதி செய்துக் கொண்டு
தன்னை தீக்கு இரையாக்க தூக்கி
செல்வதை பார்த்து
அவள் அங்கே
வாழ்வின் நிலையாமையை
உணர்ந்து
திருப்தியோடு அந்த தீக்கு
தன்னை உணவாக கொடுத்து
அமைதிக் கொள்கிறாள்...
இங்கே
அடுத்த இளம் பெண்ணின்
இறப்பு கதை
எப்போது கிடைக்கும் என்று...
அங்கே இருந்த மக்கள்
சுடுகாட்டில் இருந்து
இருள் சூழ்ந்த அந்த நிலத்தில்
அந்த நெருப்பின்
வெளிச்சத்தில்...
ஒருவருக்கொருவர் விடாமல்
அவள் கதையை
வேறொரு கோணத்தில்
விவாதித்து கொண்டே
அவளிடம் இருந்து விடை பெற்று
செல்கிறார்கள்...
இன்னும் சில நாட்களுக்கு
அவளின் கதையை
வயல் ஏரி குளம் என்று
எல்லா இடத்திலும்
பேசி பேசி
அவள் இறந்து விட்டால்
என்பதையும் மறந்து...
மீண்டும் மீண்டும்
அவளுக்கு உயிர் கொடுத்து
கொன்று ரசிக்கும்
குரூரமான உலகம்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:07/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக