ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 29 ஜூன், 2026

அந்தி மயங்கும் வேளை தாண்டிய அந்த மெல்லிய இரவில்...


அந்தி மயங்கும் வேளை தாண்டிய 

அந்த மெல்லிய இரவில் தான் 

அன்று அங்கே நடந்த மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த 

விசயங்களின் போக்குகளை 

பற்றி ஆள் ஆளாக்கு சரி என்றோ 

தவறு என்றோ ...

பேசி வாக்குவாதம் செய்து 

ஓய்ந்து ஒவ்வொருவராக 

கலைந்து செல்கிறார்கள்...

அங்கே அந்த நிகழ்வை 

கூர்மையாக கவனித்து 

உண்மை தன்மையின் 

போக்கை முழுவதும் உணர்ந்த 

காலம் மட்டும் 

அங்கே அவர்கள் கூட்டாக நின்று 

பேசிய கூட்டத்தில் 

கலந்துக் கொள்ளாமல் 

வெறுமனே அவர்கள் பேசிய 

பேச்சின் கற்பனை கலந்த 

நிகழ்வை வேடிக்கையாக பார்த்து நகைத்து விட்டு 

அந்த பெரும் இருளில் கலக்கிறது...

இங்கே உண்மை எது 

பொய் எது என்று கேட்டு 

அறிந்துக் கொள்ள மனமில்லாமல் 

எதை எதையோ தன் சுவைக்கு 

தகுந்தார் போல 

பேசி களித்து களி நடனம் 

புரிபவர்கள் மத்தியில் காலம் ஏன் 

அங்கே நடந்ததை 

சாட்சியாக சொல்லவில்லை என்று 

என்னை போன்ற 

கோபம் கொள்பவர்களையும் 

காலம் கண்டுக் கொள்ளாமல் 

தன் போக்கில் 

இயல்பாக நிதானமாக பயணிப்பதை 

இங்கே 

என்னை தவிர எவரும் வேடிக்கை 

பார்க்கவில்லை 

என்பது தான் காலத்தின் துயரம்...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள்❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/26

ஒரு நாள் ஒரு பொழுதேனும் இப்படி...


ஒரு நாள் ஒரு பொழுதேனும்

இப்படி தன்னை மறந்து உறங்க 

துடிக்கும் இமைகளுக்கு இங்கே 

ஆயிரம் ஆயிரம் கவலைகளை 

போற போக்கில் 

அள்ளித் தெளித்து விட்டு 

போகிறது காலம்...

நானும் மனதும் தான் இங்கே 

இமைகளை கெஞ்சிக் கூத்தாடி 

உறங்க வைக்கிறோம்...

மீண்டும் கொஞ்சம் 

எல்லாம் மறந்து 

இமைகள் மூடும் போது 

அங்கே தலை வாசல் வழியே 

தலையை எட்டி பார்த்து 

காலம் தனது கைகள் நிறைய 

கவலைகளை கொண்டு வந்து 

வீடு முழுக்க இறைத்து விட்டு 

ஓடோடி போகிறது நொடிப்பொழுதில்...

நான் இமைகளை கை கூப்பி 

கேட்டுக் கொண்டு 

அங்கே இறைந்து கிடந்த 

கவலைகளை 

ஒரு மெலிதான 

துணியை வைத்து ...

சத்தம் இல்லாமல் 

தூய்மை செய்து 

முடிக்கும் போது 

நடுநிசி இரவு 

என்னையும் 

என் இமைகளையும் 

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் 

சிரித்து வைத்து போனதில் 

எனது இல்லம் அங்கே சத்தம் 

இல்லாமல் கண்ணீர் வடிப்பதை 

யார் அறியக் கூடும்???.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இமையும்நானும்.

நாள்:29/06/26

ஞாயிறு, 28 ஜூன், 2026

பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்...


பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்:-

அத்தனை துர்நாற்றத்தோடும்

நான் நிரந்தரமாக 

வசிக்கிறேன்...


நீங்களோ என்னை கடந்து 

செல்லும் போது 

அந்த சில நிமிடங்கள் 

உங்கள் நாசியை 

துளைக்கும் 

அந்த துர்நாற்றத்தை 

சகிக்காமல் 

மூக்கை மூடி 

செல்கிறீர்கள்...


எனது மடியில் 

உணவை தேடி தத்தி தத்தி 

செல்லும் அந்த காகங்களுக்கும் 

நாய்களுக்கும் பசுக்களுக்கும்

நான் வைத்திருக்கும் 

இந்த நெகிழி கழிவை 

பசியாற கொடுத்து விட்டு 

மௌனமாக அழுகிறேன்...


அங்கோ 

ஏசி பேருந்துகள் இயக்க 

அரசு பெரும் பிரயத்தனங்களை 

செய்து வருவதாக 

கேள்வியுற்று 

கொஞ்சம் திகைத்து தான் 

நான் போகிறேன்...


என் அழிவின் விளிம்பை 

அவர்களால் எப்படி 

அவ்வளவு எளிதாக 

கடந்து செல்ல முடிகிறதென்று

எனக்கு நானே கேள்வி 

கேட்டுக் கொள்கிறேன்...


சில நேரங்களில் 

என் கோபத்தின் 

தாக்கத்தினால் 

சில பல நாடுகளில் கட்டிடங்கள் 

இடிந்து விழுவதை 

வேடிக்கை பார்த்து விட்டு 


இயற்கை அன்னைக்கு 

அப்படி என்ன தான் 

கோபமோ என்று 

என்னையே திட்டி தீர்க்கும் 

மனிதர்கள் விசுவாசத்தை 

எண்ணி கொஞ்சம் வியந்து தான் 

போகிறேன்...


நான் அசுத்தப்படுத்தப்படுகிறேன்

என்று உணராமல் 

நீங்கள் எனக்கு இழைக்கும் 

தீங்குகளை எல்லாம் 

சேகரித்து வருகிறேன்...

என்றோவொரு நாள் 

அந்த சமுத்திரத்தின் 

ஆழத்தில் புதைத்துக் கொண்ட 

நீங்கள் எனக்கு அளித்த 

கழிவெனும் பரிசை 

உங்கள் முகத்தில் உமிழும் போது 

அங்கே எவரும் 

உங்களை காப்பாற்ற 

வர மாட்டார்கள்...

ஏன் என்று கேட்காதீர்கள்...


அங்கே 

மொத்த மனிதர்களும் 

மரணித்து என் கால்களை 

தழுவி மன்னிப்பு கேட்கும் 

தோரணையில் 

வீழ்ந்து கிடக்கும் போது... 


அங்கே என் மடியில் 

உணவுக்காக அலைந்து கொண்டு 

இருந்த சிற்றுயிர்களுக்கு 

உங்களை 

பெரும் விருந்தாக்கி

மகிழ்ந்து 

உணவளித்து 

பெரும் ருத்ர தாண்டவம் 

ஆடுவதை 

இந்த பிரபஞ்சம் கொஞ்சம் 

நடுங்கி மிரண்டு 

தள்ளி நின்று 

வேடிக்கை பார்க்கும்...


பிறகு மெல்ல மெல்ல 

அமைதியடைந்து

பெரும் பிரயத்தனப்பட்டு

அந்த இயற்

கையிடம் 

முறையிட்டு

ஒரு புது யுகத்தை 

உருவாக்குவேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:28/06/26.





திங்கள், 22 ஜூன், 2026

அந்த பங்களாவின் அதிகாரம் யாருக்கு?


அந்த அடர்ந்த பண்ணை 

காட்டின் நடுவே 

என்றொவொரு நாள் 

வாழ்ந்த காலத்தில் 

என் முன்னோர்கள் கட்டிய 

பங்களாவை தேடி 

பல காலங்கள் கழித்து 

கரையில் ஒதுங்கிய 

கிழிஞ்சல்கள் போல 

அதை சேர்கிறேன்...


வீட்டின் கதவில் கை வைத்தபோது 

அங்கே இருந்த சிலந்தி பூச்சி 

கடகடவென்று வேகமாக 

கதவின் இடுக்கில்

ஓடி ஒளிகிறது...


கதவின் பூட்டின் துளையில் 

சாவியை விட்டு 

திறந்த போது பெரும் இருள் 

சூழ்ந்த கருமை நிறம் 

என்னை ஓடோடி வந்து 

வரவேற்கிறது...


என்றோ என் முன்னோர் வைத்த 

அற்புதமான விருந்தின் மீதமாக 

கீழே உருண்டோடி கிடக்கும் 

ரம் பாட்டில்களில் 

என் கால் ஏதேச்சையாக பட ...


அது பயந்து நழுவி ஓடி 

எழுப்பிய சத்தத்தில் 

அங்கே காதலோடு 

புணர்ந்து கொண்டிருந்த 

பல்லி இரண்டும் 

வேறு வேறு திசையில் 

அச்சத்தில் ஓடி ஒளிகிறது...


மெதுவாக அந்த பங்களாவின் 

புழக்கடை பகுதிக்கு சென்று 

சன்னலை திறந்து 

பார்க்கிறேன்...


அங்கே பல மலர் செடிகள் 

பூத்து குலுங்கிய தடயங்களாக 

மலர் இதழ் சருகுகள் 

செத்து கிடக்கிறது 

காய்ந்து போன 

தாய் செடிகளுக்கு 

அடியில் உரமாக...


இத்தனைக்கும் நடுவில் 

அந்த பங்களா 

சில ஜீவ ராசிகளுக்கு 

அடைக்கலம் கொடுத்து 

உயிர்ப்போடு வைத்திருந்ததை 

நான் அங்கே கண்ட காட்சிகளில் 

உணர்ந்து கொண்டு


சில பல ஆசுவாசங்களுக்கிடையே

அந்த இரவில் 

அங்கே நான் 

தங்க முடிவு செய்ததை 

அங்கே அந்த பங்களா சுவருக்கு 

கொஞ்சம் 

சத்தமாக அறிவித்தேன்...


எங்கிருந்தோ ஊரை சுற்றி விட்டு 

பங்களாவின் முகப்பில் 

என் முன்னோர்கள் நட்டு வைத்த 

மரமொன்றில் 

கம்பீரமாக அமர்ந்த 

குருவி ஒன்று...


அதற்கு என் அனுமதி தேவை 

என்று பெரும் குரலெழுப்பி 

சொல்ல 

நானும் அந்த பங்களா சுவர்களும் 

கொஞ்சம் அதிர்ந்து தான் 

அந்த குருவியை 

திரும்பி பார்க்கிறோம்...


இங்கே சில பல காலங்கள் 

கழித்து உரிமை கொண்டாட 

நான் வரும் போது 

அங்கே இதுவரை 

என் முன்னோர்கள் வாழ்ந்த 

பங்களாவை 

உயிர்ப்போடு வைத்திருந்த 

அந்த ஜீவ ராசிக்கு 

கட்டுப்பட்டு வந்த வழியே 

திரும்பி சோகமாக 

நடப்பதை பார்த்து 


அந்த குருவி 

நீ இந்த இரவு மட்டும் 

தங்கலாம்...

உன்னிடம் நிறைய கதைகள் 

பேச வேண்டி உள்ளது ...

கதை ஓரிரவில் முடியாது 

அதனால் சில நாட்கள் 

இங்கே தங்க உனக்கு 

அனுமதி தருகிறேன் என்றது...


நான் மீண்டும் அந்த பங்களாவில் 

நுழைந்த போது 

அங்கே ஏதோவொரு சூட்சம சக்தி 

என்னை பார்த்து சிரிப்பது போல 

உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/06/26.

















 

நான் என்பது யாரோ பெரும் திரளினிலே...


கண்ணாடி பார்த்து 

எத்தனை நாட்கள் ஆகிறது 

உங்கள் முடி நரைத்து இருப்பதை 

கவனிக்கவில்லையா என்று 

அங்கே ஒருவர் 

என்னை உரையாடல் நடுவில் 

சிரித்தபடியே கேட்கிறார்...

நிச்சயமாக எவ்வளவு காலம் 

என்று தெரியவில்லை எனக்கு 

என்று நான் சொல்வதை பார்த்து...

அவர் விசித்திரமான பார்வை 

ஒன்றை 

என் மீது வீசி விட்டு 

ஏன் என்று கேட்டார்...

நீங்கள் நினைப்பது போல 

என் முகமோ அல்லது உடலோ 

நான் இல்லை என்று 

நன்றாக எனக்கு தெரிந்து 

இருக்கும் போது 

எனக்கு கண்ணாடி பார்க்கும் 

அவசியம் தான் என்ன என்று 

கேட்டதும் சற்றே யோசித்து 

அமைதியாக பதிலேதும் 

பேசாமல் போய் விட்டார்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/06/26.

ஞாயிறு, 21 ஜூன், 2026

இருளில் நனையும் நட்சத்திரமும் நானும்...


இருளில் நனையும் 

நட்சத்திரங்கள் 

அமைதியாக எனை 

வேடிக்கை பார்க்கிறது...

நானும் அதை கொஞ்சம் 

ரசித்து சிரிக்கிறேன்...


இங்கே என் நேரத்தில் 

நீ ஏன் தொந்தரவாக 

இருக்கிறாய் என்று 

என்னை பார்த்து 

வேடிக்கையாக 

கேட்கிறது...

அந்த நட்சத்திரங்களில் ஒன்று 

கொஞ்சம் மிடுக்காக...


இங்கே இந்த நேரத்தில் 

உனக்கு என்ன வேலை 

கொடுக்கப்பட்டு இருக்கிறதோ 

அந்த வேலையில் 

ஏதேனும் தவறு நடந்தால் 

என்னிடம் சொல் என்று 


அந்த இறைவன் எனக்கு 

ஆணையிட்டு இருப்பதாக 

கலகலவென்று நகைப்புடனே 

சொல்கிறேன்...


அந்த நட்சத்திரமோ 

இங்கே உன்னை கண்காணிக்க 

என்னை இறைவன் அனுப்பி 

இருக்கிறார் என்று 

இன்னும் மிடுக்காக 

சொல்ல...


நானோ உன்னிடம் 

என் உறக்கத்தை 

தொலைத்து விட்டு 

இங்கே நிர்க்கதியாக 

நிற்கிறேன்...

நீயோ கண் சிமிட்டி 

காதல் மொழி பேசுகிறாய்...


ஒன்று செய்வோம் 

நாம் இருவரும் ஒருவரையொருவர் 

சமாதானமாக போய் விடுவோம் 

நம் காதல் ஈர்ப்பு விதியாவது 

அந்த இறைவனிடம் இருந்து 

தப்பிக்கும் என்றேன் நான் 

சிரித்தபடியே...


அந்த நட்சத்திரமோ 

அதுவும் சரிதான்...

உன் காதலை எல்லாம் 

என்னால் ஏற்க முடியாது

என்றது...

ஏன் என் காதலில் 

புனிதம் இல்லையா என்று 

தவிப்போடு கேட்கிறேன்...


அப்படி தான் 

வைத்துக் கொள்ளேன் 

பொழுது புலர்ந்ததும் 

உன் அலுவலக மேலதிகாரியின் 

கட்டளைகளை சிரம் மேல் ஏற்று 

ஒரு அடிமையை போல 

இருக்கும் உன் கோலத்தை 

என்னால் சகிக்க முடியாது...


உன் இயந்திரத்தனமான 

காதலில் எல்லாம் விழும் அளவுக்கு 

நான் ஒன்றும் உணர்வற்ற ஜடமல்ல என்று சொல்லி விட்டு 


அங்கே மேகங்களில் இருந்து 

வெளியே வந்து 

எங்கள் சண்டையை 

எட்டிப் பார்த்த நிலவின் 

காதல் ஒளியில் 

தன்னை இழந்தது 

அந்த நட்சத்திரம்...


நானோ அதை பார்த்து பெரு மூச்சு 

ஒன்றை உதிர்த்து விட்டு 

இமைகளோடு போராடுகிறேன் 

உறக்கத்திற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/06/26.

சனி, 20 ஜூன், 2026

மரணத்தில் துணை வரும் தோழன்...

 





அற்புதமான படைப்பின் 

ரகசியத்தை அறிந்த 

கையில் உருவான 

இந்த சிறு மண் பாத்திரம் 

என் உடலெனும் 

கூட்டை விட்டு உயிர் 

போகும் போது 

வழி துணையாக

இத்தனை காலம் 

என்னோடு பயணித்த 

அத்தனை உறவுகளும் 

சத்தம் இல்லாமல் 

சிறு விசும்பலோடு விலகி 

என் உடலுக்கு 

தீ வைத்தவுடன் 

மெல்ல மெல்ல 

விடை பெறும் போது 

அந்த குயவனின் 

அழகிய கைகளால் உருவான 

அந்த அழகிய மண் பாண்டம் 

மட்டும் 

தன் உடலை சிதறடித்து 

உயிரை அர்பணித்துக் கொண்டு

என்னோடு பயணிப்பதை 

சூட்சமமாக பார்த்து 

கொஞ்சம் நெகிழ்ந்து தான் 

போகிறேன்...

இங்கே எனக்கான 

துணையாக 

அந்த பாண்டம் மட்டும் 

ஏன் என்னை கூடவே 

துரத்தி வருகிறது என்று 

யோசிக்கும் போதே 

உனக்கும் எனக்கும் உள்ள 

உறவை எப்படி நீ மறந்தாய் என்று 

அது கேட்டு விட்டதில் 

நான் பேரமைதி கொண்டு 

சூட்சம உலகில் பயணிக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/06/26.


ஞாயிறு, 14 ஜூன், 2026

எல்லாவித பயணத்திலும் ஒருவித சலிப்பே மிஞ்சி விடுகிறது...

 


எல்லாவித பயணத்திலும்

ஏதோவொரு சலிப்பே

மிஞ்சி விடுகிறது!

பேச்சற்ற தனிமையில்

நான் பேரானந்த ஊற்றை 

உணர்ந்துக் கொண்டு

இருக்கும் போது

அந்த சிறு இலை

எனது மடியில் சத்தமின்றி

சயனிக்கிறது!

ஏதோவொன்றிற்கு நான்

அடைக்கலமாகிறேன்

இங்கே என் அனுமதி கேட்டு

எதுவும் நடக்கவில்லை

நான் அந்த இலையின் துயிலை ரசித்து

இந்த இரவை கடக்கிறேன்...

இங்கே சம்சாரிகள் போல

நடிப்பதை விட

உண்மையில் 

ஒரு தூய்மையான துறவறம் 

தேவை இங்கே எனக்கு 

என்றுணரும் தருணத்தில் தான்

நான் நானாக 

இந்த வாழ்வெனும் நதியில்

நிச்சலனமாக பயணிக்கிறேன்...

இங்கே எந்தன் தேவை ஒரு

ஆழ்ந்த அமைதி

இதை உணரும் தருணத்தை

நான் இத்தனை நாள்

தவற விட்டு பயணித்து 

இருப்பதை பார்த்து

என்னை நானே வியக்கிறேன்...

இரவெனும் நதியின் கரையோரம் 

நான் இருக்கும் இந்த நிலையில்

அந்த இலையும் நானும்

மௌனமாக 

அந்த பேரின்ப நிலையை 

ஒரு புன்னகையோடு 

ரசிக்கிறோம்..

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 12 ஜூன், 2026

உதிர்ந்த இலையின் பயணம்..


தன் இறுதி பயணத்தை 

தொடங்கிய அந்த இலையை 

பிரிய மனமில்லாமல் 

கிளை எனும் கையை கொண்டு 

முடிந்தளவு 

தன்னோடு அணைத்துக் கொள்ள 

பார்க்கிறது 

அந்த மரம் எனும் தாய்...

அதுவோ சுக பிரம்மம் போல 

எந்த உணர்வுகளையும் 

வெளிப்படுத்தாமல் பயணிக்கிறது...

மண்ணோடு 

புதைந்துக் கொள்வதற்கு முன் 

ஒரேயொரு செய்தியை 

தகுதி வாய்ந்தவரிடம் 

பகிர்ந்து விட வேண்டும் என்று 

தீவிரமாக தேடும் போது 

அங்கே ஒரு குயிலின் சிறகு 

தன் மீது உராய்ந்த அதிர்வில் 

அதன் மீது அந்த செய்தியை 

கடத்தி விட்டு 

மண்ணில் புதைந்து 

ஆனந்தலயமாக 

எத்தனிக்கும் போது 

அந்த இலையின் இறுதி சடங்கை 

எங்கிருந்தோ வந்த 

அதன் மூதாதையரின் 

தென்றல் காற்றில் 

சிறு அசைவை மட்டும் 

வெளிப்படுத்தி அமைதிக் கொள்கிறது 

அந்த இலை...

#உதிர்ந்த #இலையின் #பயணம் 

#இளையவேணிகிருஷ்ணா.


செவ்வாய், 9 ஜூன், 2026

எனக்கு பிடித்தது என்று ஒரு காலத்தில் இருந்தது... தற்போது இல்லை...


 நான் எப்போதும் 

வெற்றியை பற்றியோ 

தோல்வியை பற்றியோ 

கவலைப்பட்டதே இல்லை...

வெற்றியோ தோல்வியோ அது சிறு சலனத்தை ஏற்படுத்தும் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்... ஆனால் அந்த சலனத்தை சொற்ப வினாடிகளிலேயே கொன்று புதைத்து விட்டு மாற்று வேலைக்கு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் சென்று விடுவேன்...

இது தான் நான் பயணிக்கும் சாலை என்று எவரிடமும் அகங்காரம் கொண்டு பேசியது இல்லை... ஏனெனில் சில மணித்துளிகளில் என் பயண சாலை மாறும் என்பது எனக்கு நன்றாக தெரியும்...

எனக்கு பிடித்தது என்று எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது... ஆனால் தற்போது இல்லை...

நான் இந்த காலத்தில் பயணிக்கிறேன் 

அவ்வளவு தான் ...

இது தான் நான் வாழ்வில் கற்றுக் கொண்ட அல்லது காலம் கற்பித்த கட்டணம்இல்லாத பாடம் என்று சொன்னால் அது மிகையல்ல....

#இளையவேணிகிருஷ்ணா.

#நள்ளிரவின் #மெல்லிய #குரல்.

அந்த சிதிலமடைந்த வீட்டில்...


அந்த சிதிலமடைந்த

வீட்டின் வலியை

அங்கே வந்து சென்ற

சில பறவைகள்

அறியக் கூடும்

சில வருடங்களுக்கு

முன்பு வரை

இங்கே கூடி கூட்டமாக

தானியங்களை சாப்பிட்டு விட்டு பறந்து 

அடுத்த நாளும்

அங்கே வந்து பார்த்து 

ஏமாந்த போது தான்

தெரிந்தது!

அந்த வீட்டில் வசித்த

அந்த மனிதருக்கும்

வறுமை வரக் கூடும் என்று

தாம் அறிந்து வைத்திருக்கவில்லையே என்று

கொஞ்சம் யோசித்துப் பார்த்து

தன் சிறகை விரித்து உடனே

பறந்து விட்டது ...

சில பல தானியங்கள் அங்கே முன்னேற்பாடாக

அங்கே அந்த வீட்டின் உரிமையாளர் 

போட்டு விட்டு சென்றதை

சாப்பிட மனமில்லாமல் ...

#கொஞ்சம்தேநீர்

#கொஞ்சம்கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...