ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 ஜனவரி, 2026

சொல்ல மறந்து விட்டேன் ஜெய்ஹிந்த் 🙌🔥


நதிகள் குப்பைக் களங்களாக

பெரும் வாடை நாசியை

துளைக்க சகித்துக் கொண்டு

ஓடுகிறது...


சாலையின் இருபுறமும்

குப்பைகள் பறந்து

ஒவ்வொரு நாளையும்

பூக்கள் தூவி வரவேற்பது போல

வரவேற்கிறது...


மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு

அங்கங்கே கண்ணாடி பாட்டிலை

ஓடையில் ,சாலையில்

விவசாய நிலங்களில் தூக்கி

எறிந்து விட்டு 

மதியிழந்து...

தள்ளாடி போவோர் வருவோரை

மிரள வைக்கிறார்கள்...


இங்கே வழக்கம் போல

பாலாறும் தேனாறும் 

தேசத்தில் ஓடி

மக்களின் வாழ்வாதாரத்திற்கு

என்ன குறைச்சல் என்று

யூடியூப் காணொளி வழியாக

வரிந்துக் கட்டிக் கொண்டு

மணிக்கணக்கில் பேசி தீர்க்கிறார்கள்

கட்சி அபிமானிகள்...


அந்த கூச்சலுக்கிடையே

லட்ச கணக்கில் நிதி பற்றாக்குறை

மாநிலத்தில் யார் ஆட்சியில்

கூடி உள்ளது என்று

காரசாரமாக பொறுப்புள்ளவர்கள்

விவாதிக்கும் போதும்

சாதாரண மக்கள்

அதை சிரித்துக்கொண்டே

கடந்து செல்கிறார்கள்...


இத்தனையும் இங்கே

இன்னும் நடந்துக் கொண்டு தான்

இருக்கும்...

அது பற்றிய கவலை இங்கே

யாருக்கு இருக்கிறது?

தேர்தல் தேதி 

எப்போது அறிவிப்பார்கள் என்று

மக்கள் ஒரு பக்கம் துட்டுக்காக

பார்க்க...

வேட்பாளர்களோ

வேட்பாளராக அறிவிக்கப்படும் போது மக்களை 

சிறப்பாக கவர 

எத்தனை துட்டு செலவாகுமோ

என்று குழம்பி தவிக்க...


இந்த அலப்பறைகளுக்கிடையில்

இன்று குடியரசு தினம்

வந்ததும் தெரியவில்லை...

போனதும் தெரியவில்லை...

இந்த களேபரத்தில்

சொல்ல மறந்து விட்டேன்...

#ஜெய்ஹிந்த்.

#குடியரசுதினகொண்டாட்டம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/01/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...