ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 30 ஏப்ரல், 2026

இத்தனை வன்மமும் எதற்காக??

 

 


என் மீதான 

காதல் உணர்வுகளில் 

ஒரு வித மையல் கொண்டு

என்னை நெருங்காதே...

உன் மீதான 

என் பெரும் காதலின் 

அலையில் நீ அடித்து 

சென்று நடுக் கடலில் 

தத்தளிக்கவும் கூடும்...


அந்த பரந்து விரிந்துள்ள 

பெரும் அடர்ந்த காட்டில் 

பயமின்றி ஒரு பட்டாம்பூச்சியாக 

நீ இங்கும் அங்கும் பறந்து 

செல்லும் போது கூட 

உன் இலேசான வண்ணமயமான 

சிறகை கொண்டு என்னை நீ 

தீண்டி நெருங்காதே...


அந்த சிறு தீண்டலில் கூட 

நான் பெரும் தீயாக தகித்து 

உன்னை என் காதலியின் தீயில் 

இரையாக்கி விடவும் கூடும்...

அதனால் என்னை விட்டு 

வெகுதூரம் நீ விலகியே இரு...


என் புழக்கடையில் பூத்திருக்கும் 

அந்த ரோஜா பூவை நான் 

என்னை மறந்து ரசிக்கிறேன் 

என்பதற்காக 

நீ அங்கே மலர துடிக்காதே...


நான் அந்த செடியில் உள்ள 

முள்ளாக உன் சதையை 

கிழித்து பெரிய ரணமாக 

காலம் முழுவதும் 

உன்னை வலியில் நான் 

துடிக்க விடவும் கூடும்...

அதனால் நீ அந்த மலராக 

மலர பெரிய ஆவல் கொள்ளாதே...


இத்தனை வன்மமும் எதற்காக 

என்று நீ அங்கே அழுத முகத்தோடு 

என் மீது கேள்வி கணைகளை

கேவிக் கொண்டே 

என் மீது எரிகிறாய்...


அத்தனையும் வன்மம் அல்ல 

அது நான் உன் மீது 

பெரும் பித்து பிடித்து 

ஒரு பைத்தியக்காரனாக

இங்கும் அங்கும் அலைந்து 

தொலையும் போது 


இந்த பிரபஞ்சம் முழுவதும் 

உன்னை கைநீட்டி 

குற்றம் சாட்டி 

நீ அந்த குற்ற உணர்ச்சியில் 

கரைந்து...


என் மீதான உன் பேரன்பு கொண்ட 

காதலின் சுவாசத்தை 

நிறுத்தி 

என்னை விட்டு 

வேறொரு உலகத்திற்கு 

சென்று விடக்கூடாது 

என்பதாலேயே 

எனக்கு நானே 

கொடுத்துக் கொள்ளும்/கொல்லும்

தண்டனையடி 

என் தீஞ்சுவை காதலே!!!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/04/26.









செவ்வாய், 28 ஏப்ரல், 2026

தோல்வி தரும் பெரும் ஆழ்ந்த மன அமைதி...


 பல முயற்சி எனும் 

அற்புதமான பூக்கள் 

கடும் வெப்பத்தால் 

கருகி வீழ்வது போல 

என் முன்னெடுப்பு 

நிகழ்வுகள் எல்லாம் 

என்னை துன்புறுத்தி 

மகிழ்ந்த போதும்...


பெரும் அற்புதமான 

அந்த அலையில்

கால் நனைத்தலில் 

நான் என்னை மறந்து 

இந்த சிருஷ்டிக்கு 

நன்றி சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 

அதே அலை என்னை 

கடலில் எங்கோ ஒரு மூலையில் 

என்னை 

இழுத்துக் கொண்டே போய் 

போட்டது போல 

தடுமாறி அதிர்ச்சி 

அடைந்த போதிலும்...


நான் எனக்கான 

சாதாரண உணவை 

பெரும் பிரயத்தனப்பட்டு

சாப்பிட அமரும் போது 

எங்கிருந்தோ வந்த நாய் 

அதை வேகமாக இழுத்துக் கொண்டு 

போய் என் வயிற்றின் அக்னியை 

மேலும் தகிப்பூட்டி 

நான் அதிர்ச்சியாக 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

இருப்பதை 

பலபேர் கலகலவென சிரித்து 

நான் அங்கே 

வேடிக்கை பொருளாக 

காட்சியளித்த போதும்...


நான் இங்கே இம்மியளவும் 

கலங்குவதே இல்லை...

இங்கே எனக்கு தோல்வி என்பதோ

என் முன்னெடுப்புகள் எல்லாம் 

கானல் நீராகுவதோ 

என்னை சற்றும் நிலைதடுமாறி 

கீழே விழாமல் 

மிகவும் கூடுதல் வலிமையாக 

நின்று கொண்டு தான் 

இருக்கிறேன்...


அந்த அற்புதங்கள் 

எல்லாம் நிகழ...

அத்தனையும் சாத்தியமாக...

எனக்கு உதவிய தோல்வி எனும் 

மனதை பக்குவப்படுத்திய 

நண்பனால் தான்

இயன்றது...

தோல்வி எனும் நண்பனின் 

கரம் பற்றி நான் எத்தனை தூரம் 

செல்வேன் என்று தெரியாது...

அது வெற்றிகரமாக 

கனியாகாவிட்டாலும் 

ஒரு வித ஆழ்ந்த 

பக்குவ நிலையை 

உணர்த்தி என்னுள் 

ஆழ்ந்த அமைதியை 

அனுபவிக்க 

உதவ தவறுவதில்லை...

அதனால் என் நிரந்தர தோழன் 

அவன் ...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/04/26.




ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முகமூடியின் மாய வித்தை...

 




பிரதிபலிக்க கூடாத 

இடங்களில் எல்லாம் 

உணர்வுகளை 

மறைக்கும் திரையாக 

பலபேருக்கு 

கை கொடுத்த போதும்...


எதிரிகளை எதிர் கொள்ள 

திராணி இருந்தும் 

அவர்களை கையாள 

ஒரு சூழ்ச்சியாக 

மறைந்துக் கொள்ள 

பயன்பட்ட போதும்...


சில நேரங்களில் ஓட்டுகளை 

அறுவடை செய்ய 

நேரத்திற்கு தகுந்தார் போல 

தயார் நிலையில் இருந்து 

அரசியல்வாதிகளுக்கு 

கடும் பிரயத்தனப்பட்டு

பாதுகாப்பு கொடுத்த போதும்...


சில உறவுகளின் குணங்களை 

பிடிக்காமல் 

ஒதுங்கிக் கொள்ள 

விகாரத்தில் தோன்றும் 

கடும் கோபத்தை

மறைத்து கொள்ள 

எளிமையாக உதவிய போதும் 

அவர்களால் 

பாதிப்பு ஏதும் நேர்ந்து விடாமல் 

அதை கண்ணை இமை 

காப்பது போல

காத்து வந்த போதும்...


இப்படியாக அதை பலவகையில் 

சூழ்ச்சியாக 

பயன்படுத்திக் கொள்பவர்களை 

எல்லாம் விட்டு விட்டு 

இதோ இப்போது 

என்னோடு தேவையே 

இல்லாமல் வலுக்கட்டாயமாக 

சண்டை போட்டு 

உன் முகத்திரையை கிழித்து 

தொங்க விடுகிறேன் என்று

முகதிரையே இல்லாத 

என்னை...

என் உணர்வுகளை தூண்டி 

கையறு நிலையில் 

நிற்க வைத்து...


வீதியில் பலபேர் 

வேடிக்கை பார்க்க வைத்து 

விட்டதில் தான்...

முகமூடியே இல்லாத 

அதன் நிறம் என்ன என்று கூட 

தெரியாத நான் 

அந்த முகமூடியின் 

எண்ணற்ற 

மாய வித்தை சக்தியை 

ஒரு வித பயத்தோடு 

அதிர்ச்சியோடு 

உணர்கிறேன்...


இங்கே இந்த சமூகத்தில் 

எதையும் கண்டுகொள்ளாமல் 

சூழ்ச்சி பற்றிய 

எந்தவித எண்ணங்களும் 

இல்லாமல் பயணிப்பது 

மிக மிக 

கடினமான ஒன்று என்று... 

என் நிலையை 

அங்கே பலமுகமூடிகள் 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 

வேடிக்கை பார்த்தது மட்டும் அல்லாமல் 

சிரித்தும் வைப்பதை 

நான் கொஞ்சம் எரிச்சலோடு 

கடந்து போனேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:20/04/16.


அந்த பொம்மைக்காகவேனும்...

 




நீ என்னோடு பயணித்த நாட்களில் 

எல்லாம் நமது வீட்டில் 

ஒரு ஓரமாக அமைதியாக 

வேடிக்கை மட்டுமே 

பார்த்துக் கொண்டு இருந்தது...


நமது சிறு சிறு சுவாரஸ்யமான 

மகிழ்வில் எல்லாம் 

அது சிறு முறுவல் கொண்டு 

பார்த்து ரசித்து இருந்தது...


ஏதோவொரு நேரத்தில் 

நாம் ஊடல் கொண்டு 

பேசாத நாட்களில் எல்லாம் 

ஒரு தோழமையோடு 

சோகமான முகத்துடன் 

இருப்பது போலவே 

காட்சி அளிக்கும்... 

ஊடலை நிறுத்தி விடுங்களேன் 

என்று கெஞ்சும் 

ரகசிய தொனியில்...


இதோ இப்போது 

நமக்குள் ஏற்பட்ட 

பெரிய கருத்தியல் மோதலில் 

உனது வீட்டிற்கு சென்று 

நாட்கள் மாதங்களாக 

உருண்டோடி விட்டது...


எனக்கான துணையாக 

நீ ஆசையாக வாங்கி தந்த 

முதல் ஆண்டு நிறைவில் 

திருமண நாள் பரிசாக 

இதோ இந்த கரடி பொம்மை 

பாவமாக என்னை பார்க்கிறது...


என்னை பார்த்து எப்போது 

நீ சென்று கூட்டி வருவாய் என்று 

கேட்பது போல முகத்தை 

தொங்க போட்டு கிடக்கிறது...

என் மீது கோபித்துக் கொண்டு...


எனக்காக இல்லை என்றாலும் 

இந்த கரடி பொம்மைக்காகவேனும்

இல்லம் தேடி ஓடி வந்து 

என்னை ஒரு பாவனைக்காக

அணைத்துக் கொள் 

பாவம் அந்த உயிரற்ற 

ஆனால் உணர்வை 

புரிந்துக் கொண்டு பிரதிபலிக்கும் 

ஜீவனின் மகிழ்விற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.


சனி, 18 ஏப்ரல், 2026

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி கோப்பையில் ஊற்றப்பட்ட அந்த விலை உயர்ந்த மது ரசம்...

 

 


எத்தனையோ 

கனவுகள் அடங்கிய 

அலங்கரிக்கப்பட்ட 

கண்ணாடி கோப்பையில் 

ஊற்றப்பட்ட விலை உயர்ந்த 

மது ரசத்தின் 🍷 துளிகளில் 

மூழ்கும் இரு உள்ளங்கள்...


அன்றாட தேவைகளுக்கு 

ஓடி ஓடி 

தினசரி நிகழ்வுகளில் 

தொலைத்து விட்டு 

கிடைக்கும் 

ஓரிரு மணித் துளிகளில்...


தன் அளப்பரிய காதலை 

தன் இணைக்கு எப்படியும் 

கடத்தி விட துடித்து 

கணங்கள் போதாமல் 

தோற்று போகும் 

அந்த காதல் உள்ளங்கள்...


ஏதோவொரு கணத்தில் 

இணையோடு ஒன்ற முடியாமல் 

பிரிந்து செல்ல துடித்து 

நீதிமன்றத்தில் 

எத்தனையோ கேள்விகளுக்கு 

வழக்கறிஞர் சொல்லி கொடுத்த 

அந்த தயார் பதிலை சொல்லி... 


அந்த புரிந்துக் கொள்ள 

எந்தவொரு முயற்சியும் 

செய்யாத வாழ்வின் 

அற்புதமான தருணங்கள் 

நீதிபதியின் உத்தரவில் 

கரைந்து ஆழ் மனதில் 

தாங்கொணா ரணத்தை 

கொடுத்து ...


வாழ்வின் மீது இது வரை 

வைத்திருந்த பெரும் மதிப்பை 

வெறுத்து ஒதுக்கும் 

சில பலஉள்ளங்களின் 

ஆழ் மனதில் பதுக்கி வைத்திருக்கும் 

கண்ணீரின் வீரியத்திற்கு 

இங்கே எவரும் ஆறுதல் 

சொல்லி தேற்ற முடியாது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்...


எந்தவித முன்னறிவிப்பும் 

இல்லாமல் 

உன் வாழ்வின் அத்தனை 

அத்தியாயங்களும் 

முடிவுக்கு வந்து விட்டது 

என்கிறது அங்கே காலம்...

நான் அந்த கூற்றை கேட்டு 

ஆதரிக்கவும் இல்லை 

எதிர்க்கவும் இல்லை...

இது வரை நான் எழுதிய 

அத்தியாயங்கள் 

வாசித்து விட்டு 

அங்கே அந்த வாசகர்கள் 

இறுதி அத்தியாயத்தை 

சுவாரஸ்யமாக எழுதி முடித்து 

விடுவார்கள்...

அது நான் எழுதி வந்த கதையின் 

அத்தியாயத்தை விட 

இன்னும் சிறப்பாக இருக்கும்...

அது பற்றிய கவலை எனக்கு எதற்கு இனி?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/04/26.

வெறும் பகடைக் காய்களுக்குள் தஞ்சம்...

 

 


தீர்ந்துக் கொண்டே 

வரும் நாட்களில் எல்லாம் 

நான் என் பெரும் பிரயத்தனங்களை 

யாரோ ஒருவரின் குழந்தை 

என் கைகளை பிடித்து 

வருவதை போல 

அதை கொஞ்சம் கொஞ்சமாக 

கை விடுகிறேன்...


சிறு வயதில் 

ஓடி திரிந்த நாட்கள் எல்லாம் 

தற்போது கனவாக 

தேய்பிறை நிலவாக 

கலை இழந்து 

என் மனதின் ஓரத்தில் 

தூசி படிந்து கிடக்கிறது...


என்றோ நான் வாங்கிய விருதுகள் 

எல்லாம் என்னை பார்த்து 

இத்தனையும் 

உன் தொலைதலுக்கு பிறகு 

என்னாகும் என்று 

பெரும் அச்சத்தோடு 

கேள்வி எழுப்புகிறது...


என் அடையாளங்கள் என்று 

நான் கர்வப்பட்ட அத்தனையும் 

என் இறுதி ஊர்வலத்தில் 

பூக்களாக மிதிபட்டு 

கிடக்க வேண்டிய நிர்பந்தம் 

ஏற்பட போவதை நினைத்து 

தற்போது 

நான் கொஞ்சம் கொஞ்சமாக 

உணர்கிறேன்...


இத்தனை நிகழ்வுகளையும் 

அசைப்போடும் தருணத்தில் 

அந்த மூச்சை கவர்ந்து 

செல்பவன் என் கண்களுக்கு 

காட்சி கொடுத்து 

மிரள வைக்கிறான்...


இன்னும் என்ன 

காலம் உருட்டும்  

பகடைக் காய் 

உருட்டலில் 

உன் கடைசி உருட்டலும் 

கடந்த நொடிகளில் 

முடித்துக் கொண்டது...

இனி நாம் நம் பயணத்தை 

தொடரலாமா என்று 

கேட்ட கேள்வியில் தான் 

நான் விழிப்படைந்து 

அதிர்ச்சி அடைந்தேன்...


நான் வாழ்ந்த வாழ்வின் 

அர்த்தங்கள் எல்லாம் 

வெறும் பகடைக் காய்களுக்குள் 

தஞ்சம் புகுந்துக் கொண்ட

நிகழ்வி

ன் சத்தியத்தை...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/04/26.







 



திங்கள், 13 ஏப்ரல், 2026

போர் நிறுத்தம்...

 




இத்தனை நாள் தூரமாக நின்று 

வேடிக்கை பார்த்த 

அமைதி 

இன்று எந்த தயக்கமும் 

இல்லாமல் என் கைகளில் 

வேகமாக ஓடி வந்து 

பேரன்பு கொண்டு 

என்னை அணைக்கிறது...


ஏதேதோ நிம்மதியை தரும் 

என்று இத்தனை நாள் 

தேடி அலைந்த 

நாட்களை பார்த்து 

நான் வெட்கம் அடைகிறேன்...


என் வீட்டின் முற்றத்தில் 

நான் நட்டு வைத்து 

பாசமாக நீருற்றி வளர்த்த 

மரத்தின் நிழலில் 

வெகு நாட்களுக்கு பிறகு 

என் ஆசுவாசத்தை 

கொஞ்சம் புதைத்துக் கொள்கிறேன்...


எங்கோ கேட்ட மரண ஓலங்களின் 

சத்தத்திற்கு விடுதலை 

கிடைத்த கொண்டாட்டத்தின் 

உதிரல்களாக அங்கே 

பூத்து குலுங்கும் வசந்தத்தின் 

வாசத்தை சுவாசிக்கிறேன்...


இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தெரிந்த மனதின் 

ஸ்திர தன்மையை மட்டும் 

காலம் நொடிக்கொரு முறை 

நினைவூட்டிக் கொண்டே 

இருந்தால் போதும்...

இங்கே என் வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும் 

புதைந்து கிடக்கும் அமிர்தத்தை 

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

நான் கொஞ்சம் சுவைக்க....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/04/26.


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...

 


#இன்றைய #தலையங்கம்:-

எடப்பாடியார் பேசுவதை மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்... அவர் கொரணா சமயத்தை நான் சரியாக கையாளாமல் இருந்து இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதற் கொண்டு எல்லோரும் காணாமல் போய் இருப்போம் என்கின்ற அர்த்தத்தில் தான் சொன்னார்...

இப்போது மீண்டும் போய் கேட்டு பாருங்கள்...

யார் பேசுவதையும் திரித்து தயவுசெய்து பரப்பாதீர்கள்...

அது எந்த அரசியல் தலைவர் பேச்சாக இருந்தாலும்...

முதலில் தரம் தாழ்ந்து ஏன் பேச வேண்டும்?

தனிநபர் விமர்சனம் பொது மக்களாகிய வாக்காளர்களுக்கு தேவையா?

அவர்களுக்கு தேவை அவர்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் தவிர உங்களது தனி நபர் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அல்ல...

எடப்பாடியார் சசிகலா காலை வணங்கி அரசியலுக்கு வந்தார் என்று சொல்லும் போது அந்த நிகழ்வு அவர் மட்டுமா வணங்கினார்கள்...

மேலும் அந்த நிகழ்வு நடந்து தான் அவர் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை...

அவர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தீவிரமாக கட்சி பணியாற்றியவர்...

அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்..

குறிப்பாக விவசாயிகளுக்கு..

அதற்காக அவரை ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்கள்?

ஏன் தினகரன் எவ்வளவு பிரயத்தனம் செய்தும் கட்சியை கைப்பற்ற இயலவில்லை...

இங்கே அடிமட்டத்தில் இருந்து யார் ஒருவர் மக்களின் உணர்வுகளோடு பயணிக்கிறார்களோ அவர்கள் தான் மக்களின் தலைவராக வருவார்கள்...


ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள்..

இது வரை உங்களுக்கு இதை இதை எல்லாம் செய்தோம்... இனியும் செய்வோம் என்றும் கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் மக்களிடையே நடந்த தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்து ஓட்டு கேளுங்கள்...

அதை விடுத்து எப்போதும் தனி நபரை துதி பாடியோ அல்லது அசிங்கப்படுத்தியோ ஏன் ஓட்டு கேட்கிறீர்கள்...

மக்களுக்காக தான் அரசியல் தவிர 

அரசியலுக்காக மக்கள் இல்லை...


ஒவ்வொரு விவசாயின் துயரம் எல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டே ஆய்வு செய்பவர்களுக்கு தெரியாது..

இந்தியா இயல்பிலேயே விவசாய நாடு... அதன் உயிரோட்டத்தை கெடுக்காத மனிதன் தான் தற்போதைய அரசியல் தலைவராக தேவை...

மற்றவை எல்லாம் பிறகு தான்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 

மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்...

#விவசாயிமரியாதை

#மாண்பபுமிகுவிவசாயி.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/04/26.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம்... எடப்பாடியார் வாக்கு..

 


#இன்றையதலையங்கம்

#ஒருவிவசாயியின்துயரம்:- விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம் 24மணிநேரமும் முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வாக்கு கொடுத்து இருக்கிறார்...

இது ஒன்று போதும் அஇஅதிமுக வெற்றி பெற...

கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் விவசாயிகள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தார்கள்..

அதுவும் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எனது சகோதரர் இரவில் எந்த நேரம் என்று பாராமல் தூக்கத்தை தொலைத்து தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் அவரது மற்ற பணிகளை பார்த்து தந்தையின் உடல் நலன் மிகவும் மோசமான தருணத்தில் அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த குறித்த நாளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு இல்லத்திற்கு வந்தவுடன் மீண்டும் தோட்டத்திற்கு சென்று மும்முனை மின்சாரம் வந்து விட்டதா என்று பார்த்து விட்டு மோட்டார் போட்டு விட்டு தண்ணீர் பாய்ச்ச வயலில் இறங்கினால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வு எல்லாம் வாழ்வில் மறக்கவே முடியாது...

ஒரு மனிதன் விவசாயம் பார்ப்பதே மிகவும் மோசமான நிகழ்வாக இன்றைய காலகட்டத்தில் மாறி விட்டது... அதிலும் இயற்கை இடர்பாடுகள் தாண்டி இடுப் பொருள் விலையேற்றம் ஆள் பற்றாக்குறை விளைச்சல் கைக்கு வந்தவுடன் விலை இல்லை... இப்படி இத்யாதி இத்யாதி சொல்லி கொண்டே போகலாம்... இத்தனை விஷயங்கள் நடக்கிறது...

ஒழுங்கான மும்முனை மின்சாரம் கொடுக்க கூட மனமில்லை... மேடைக்கு மேடை எங்கள் ஆட்சியில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பேசுவதை மக்கள் சரியான கிறுக்குப் தரமான பேச்சாக தான் பார்க்கிறார்கள்..

ஆமாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...

வயலுக்கு நடு இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு தண்ணீர் பாய்ச்ச போனால் அங்கே சாலையை ஆக்கிரமித்து போதை இளைஞர்கள்...

அவர்களை பார்த்து பயந்துக் கொண்டு தான் வயலுக்கு போக வேண்டும்...

நல்லா ஆட்சி நடத்தினீர்கள் ஐயா 🙏 

இதே இடத்தில் இதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்...

கலைஞர் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கொடுத்தார்.. நீங்கள் அவரது மகனாக இருந்துகொண்டு விவசாயியை துயர கடலில் மூழ்கடித்தீர்கள்...

ஆட்சி நிர்வாகம் என்பது சாதாரண விஷயம் இல்லை...

அதற்கு மிக பெரிய அனுபவம் மக்களோடு மக்களாக உண்மையான உணர்வோடு பழகி இருக்க வேண்டும்.. வெறும் போட்டோ சூட் நிச்சயமாக களத்தில் வெற்றி பெற உதவாது...

இங்கே அரசியல் பேச்சு கலையில் தேர்ந்தவர்களை மதித்த காலம் போய் செயலில் யார் மக்களின் உணர்வுகளோடு ஒட்டி இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

#ஒருவிவசாயியின்துயரம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/04/26.

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...