அந்த இரவு பயணத்தில்
அங்கே கடந்து செல்லும்
அத்தனை வாகனங்களின்
வெளிச்சத்தின் ஊடுருவலில்
சற்றே லயித்து ரசிக்கும் வேளையில்
அந்த ஒரு மரத்தின் கிளை மட்டும்
எனை தொட்டு ஏதோ சொல்ல வந்து
சோர்ந்து கடந்து செல்கிறது...
ஏனோ அதை அவ்வளவு எளிதாக
என்னால் கடந்து செல்ல
இயலவில்லை...
ஒரு வேளை அதன் சுவாச பாதையை
அந்த வெளிச்சத்தின் ஊடுருவல்
கிழித்து இருக்கக்கூடும் அல்லது
அதன் தனிமையை
அந்த வாகனத்தின் வெளிச்சம்
திருடிக் கொள்வதை என்னிடம்
சொல்ல வந்திருக்குமோ என்று
அந்த மரத்தின் கிளை மட்டும்
என்னோடு நீங்காத நினைவாக
பயணித்து விடுகிறது
நான் அறியாமலேயே ...
இங்கே என்னால் அதற்கு ஒன்றும்
உதவி செய்ய இயலவில்லையே
என்கின்ற ஏக்கத்துடன்
இறங்கிய போது அந்த சாலையின்
ஓரத்தில் இருந்த
மரத்தின் கிளையின்
தீண்டலில் சுயநினைவுக்கு வந்து
அந்த கிளையை வருடிக் கொடுத்து
கடத்துகிறேன் எனது பேரன்பை
அந்த பயணத்தில் என்னிடம் ஏதோ
சொல்ல நினைத்த
அந்த மரத்தின் கிளைக்கு ...
என்னால் இதை தவிர வேறு என்ன
அதிகபட்சமாக செய்து விட முடியும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/03/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக