ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 4 ஆகஸ்ட், 2018

கவனச் சிதறல்கள்

அன்பர்களே வணக்கம்.
         தற்போது நாம் பார்க்க இருப்பது கவன சிதறல்கள். ஆமாம் .நாம் மிகவும் சரியான வேலையை தேர்ந்தெடுத்து சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்போம்.ஆனால் நமது வளர்ச்சியை பிடிக்காமல் சில சமயங்களில் சில இடையூறுகளை காலமே ஏற்படுத்தி விடும். ஏன் காலம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா.ஆமாம். நீங்கள் எந்த தடையையும் பொறுமையாக எதிர்கொள்கிறீர்களா என்று எப்படி மற்றவர்கள் அறிய முடியும் என்று தான்.
     இன்னொரு விசயம் நீங்கள் உங்கள் தரத்தை நிரூபிக்க காலத்தால் நடத்தப்படும் நாடகம் என்று எடுத்து கொண்டு முன்னேற வேண்டும். ஆனால் இதில் தான் ஒரு சூட்சமம் உள்ளது. அது என்னவெனில் காலம் நடத்தும் நாடகத்தில் கண்டிப்பாக நாம் மாட்டியே தீருவோம். மிகவும் புத்திசாலிகளே இதில் இருந்து தப்பிக்க முடியும். அவர்கள் கவன சிதறல்களை மிக நேர்த்தியாக கையாண்டு அவர்கள் எடுத்த காரியத்தை முடிப்பார்கள்.
           நாம் நமது கொள்கையில் திடமாகவும் ஆர்வமாகவும் இருந்தால் எந்த கவன சிதறல்களும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. ஏனெனில் நமக்கு பிடிக்காத வேலையை செய்ய ஆரம்பித்தால்தான் நமது கவனம் சிதறும். அதனால் உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய ஆரம்பியுங்கள்.எந்த வேலையும் விரும்பாத மனிதன் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அவனை இந்த பூமி சுமப்பதே வீண்.
           மற்றொரு விசயம் நாம் செய்யும் வேலைகளுக்கிடையே மற்றவர்கள் வந்து நமது கவனத்தை திசைதிருப்பக்கூடும்.அப்போது தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் கண்டிப்புடனும் இருக்க வேண்டும். ஏனெனில் காலத்தை நமது சாதுர்யத்தால் கூட சமாளித்து விடலாம். ஆனால் மனிதர்களை சமாளிப்பதற்குள் நமக்கு மண்டை காய்ந்து விடும். அதனால் இவர்களை நாம் நேர்த்தியாக கையாண்டு நமது காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். நமது கொள்கையை நமது வேலைகளை வெற்றி கொள்ள வைப்பதே தற்போது நமது வேலை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
           நாம் ஒரு விசயத்தை சாதிப்பதற்குள் ஆயிரத்தெட்டு கவனசிதறல்கள் வந்து வந்து போகும். அந்த கவனசிதறல்கள் எனும் மாயை சமாளிக்க சாதூர்யமாக சாட்டையை சுழற்றுபவனே இந்த பூமியில் நிலையான புகழோடு நிற்கிறான். அந்த மாயவலையில் விழுந்தவன் தெளிவடைவதற்குள் காலம் பாதி போய் விடும்.
      பெரிய பெரிய சாதனையாளர்கள் சரித்திரத்தை கூர்ந்து படித்து பாருங்கள். அப்போது அவர்கள் எப்படி கவனசிதறல்களை சமாளித்தார்கள் என்று ஒரு சிறு குறிப்பாவது இல்லாமல் இருக்காது.
          மகாத்மா காந்தி சுயசரிதை படித்து பாருங்கள். உங்களுக்கு கவனசிதறலை எப்படி சமாளிப்பது என்று புரியும். மேலும் நாம் மிகவும் கடுமையாக உழைக்கிறோம் என்கிற போர்வையில் சின்ன சின்ன சந்தோஷத்தையும் இழந்து விடக்கூடாது. ஏனெனில் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டது.அதன் எல்லா பக்கத்திலும் குறைந்த பட்சம் காலாவது ஊன்றிவிட வேண்டும்.பிறகு எதையோ இழந்து விட்டதாக கவலைக்கொள்ளக்கூடாது.
      என்ன நேயர்களே நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் உங்கள் காரியத்தை கவனசிதறல்கள் எனும் மாயை உடைத்து வெல்ல துணிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் 🤝👐🙏.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...