ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எதிர்கால முதியவர்கள்

அன்புடையீர் வணக்கம்.
             இன்று நாம் பார்க்க இருப்பது எதிர்கால முதியவர்கள் பற்றி. ஆம் நேயர்களே நாம் பார்க்க இருப்பது இதைத்தான். இன்றைய நவீன உலகத்தில் முதியவர்களை ஒவ்வொருவரும் எப்படி நடத்துகிறோம் என்பதை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
      நாம் எவ்வளவோ நாகரீகத்தை கற்றுள்ளதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்.ஆனால் நாம் கற்றுக்கொண்ட நாகரீகம் எது என்று நமது மனசாட்சியை கேட்டு கொள்வது நல்லது.
          எது நாகரீகம்?.ஒரு முதியவரை அல்லது முதிய வயது உள்ள பெண்மணியை மரியாதையாக நடத்தாமல் அவர்ளை எவ்வளவு இழிவுப்படுத்த வேண்டுமோ அவ்வளவு இழிவுப்படுத்தி அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தி மனோரீதியாக வேதனை அடைய செய்து அவர்களை ஒரு வேண்டாத பொருளாக நினைப்பது எல்லாம் எவ்வளவு கேவலமான செயல்? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
    உங்கள் வீட்டில் ஒரு முதியவர் இருந்தாலும் தயவுசெய்து அவர்ளை காயப்படுத்தாதீர்கள்.மேலும் இப்போது இளைஞர்கள் பெரும்பாலோனோர் வெளிமாநிலத்தில் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் அருகாமை தேவைப்படும் நேரத்தில் நீங்கள் வெளியே இருப்பது அவர்களின் துரதிருஷ்டம்.மேலும் அது காலத்தின் கட்டாயம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள்
       எது எப்படியோ அவர்களை நீங்கள் ஏதோவொரு வகையில் நன்றாக பார்த்து கொள்ளத்தான் வேண்டும். நன்றாக பார்த்து கொள்வது என்பது பணத்தை நீங்கள் வெளிநாட்டில் இருந்து அனுப்புவது என்று நீங்கள் புரிந்து கொண்டால் அது நிச்சயமாக தவறு.ஏனெனில் வாழ்க்கை என்பது நம் அனைவருக்குமே பணம் என்பது ஒரு பகுதி தான். அதுவே வாழ்க்கை ஆகிவிடாது.அதற்கும் மேல் ஒரு வாழ்க்கை உள்ளது. அதை நாம் அனைவரும் புரிந்து வாழ முற்பட வேண்டும்.
        முதியவர்கள் என்பவர்கள் குழந்தை போன்றவர்கள். அவர்களை நீங்கள் உங்கள் குழந்தை போல பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் எப்படி விளையாடுகிறீர்களோ எப்படி உரையாடுகிறீர்களோ அப்படி தான் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் உரையாட வேண்டும்.
     ஏன் அவர்களுக்கு தான் வயதாகி விட்டதல்லவா.அவர்கள் ஏன் புரிந்து கொள்ளக்கூடாது என்று எதிர்கேள்வி கேட்கக்கூடாது.நீங்கள் அந்த நிலைக்கு வரும் போதுதான் தெரியும் அவர்கள் பட்ட துன்பம் என்ன என்பது.
     உங்கள் வீட்டில் அவர்கள் உழைத்து ஓய்ந்த ஒரு நல்ல மனிதராக பாருங்கள். மேலும் அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பது  நமக்கு மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் குடும்பத்தில் மிகவும் திருப்தியாக மனநிறைவோடு வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முதுமையில் அவர்களை எவ்வாறு கவனித்து கொண்டீர்கள் என்பதைப் பொறுத்தது.
        உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் போதே அவர்கள் மனநிறைவோடு தமது வாழ்க்கை பயணத்தை முடிப்பார்கள். அவர்களை தயவுசெய்து உங்கள் வீட்டில் ஒரு வேலையாளைப்போல நடத்தாதீர்கள்.
      மேலும் அவர்களிடம் மிகவும் மென்மையாக பேசுங்கள். உங்களிடம் ஒருவர் மிகவும் வேகமாக குரலை உயர்த்தி பேசினால் நீங்கள் அவர்களிடம் கோபித்து கொள்ள மாட்டீர்களா.பிறகு ஏன் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் அவ்வாறு பேசுகிறீர்கள். அவர்கள் ஒன்றும் ஜடம் அல்லவே.அவர்களுக்கும் உணர்வுகள் உங்களைவிட அதிகமாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் வயது காரணமாக அவர்கள் மனோவலிமையை இழந்தவர்கள்.
    நீங்கள் எந்த ரூபத்திலும் அவர்களை காயப்படுத்தாதீர்கள்.அந்த காயம் கண்டிப்பாக உங்களுக்கு ஏதோவொரு ரூபத்தில் திரும்பிவரும்.அதனால் நீங்கள் அவர்களிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
        உங்களால் என்ன  நல்லது செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நல்லது செய்யுங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள்.உறவுகளாக இருந்தால் அவர்களை சென்று பார்த்து பேசிவிட்டு ஆசீர்வாதம் வாங்கி வாருங்கள். அவர்களுடன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த கடந்த கால மலரும் நினைவுகளை அவர்களிடம் கேட்டு ரசித்து அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவு செய்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.
     நன்றாக கவனியுங்கள் அன்பர்களே.உங்களை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.நீங்கள் எப்போது வருங்கால முதியவர்கள் ஆவீர்கள் என காத்து இருக்கிறார்கள். அவர்களின் மனதில் நல்ல விதைகளை தூவி நல்ல விசயங்களை செய்ய ஊக்குவியுங்கள்.
     நீங்கள் இன்று செய்யும் ஒரு நல்ல விசயங்கள் நாளைய சமுதாயத்தை நல்ல முறையில் வழிநடத்தட்டும்.
நல்ல சமுதாயத்தை உருவாக்கி நாமும் ஆனந்தமாக வாழ்ந்து நம்மை சார்ந்த சமுதாயத்தையும் வழிநடத்தி ஆனந்தமாக வாழ வழிவகை செய்வோம்.வாழ்த்துக்கள் அன்பர்களே.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...