ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 30 மார்ச், 2026

நானும் என் வீடும் அந்த குருவியும்...


என்னை நானே அறியாமல் 

மிகவும் கூர்மையான பார்வையால் 

உற்று பார்க்கிறது என் வீடு..


நான் என்னை மறந்து பாடும் 

பாடல்களை மெய் மறந்து 

ரசித்து கேட்கிறது 

தனது கூர்மையான கேட்கும் திறன் கொண்ட செவிகளால்...

அந்த சுவர்கள்!


என் வாழ்வின் இன்பங்களை 

நான் நுகரும் போது 

அது அமைதியாக 

நிம்மதியடைகிறது...


நான் ஏதோ எனது சொந்தங்களின் 

ஏச்சு பேச்சில் 

காயப்படும் போதெல்லாம் 

துயருற்று சத்தம் இல்லாமல் 

கண்ணீர் வடிக்கிறது!


இங்கே என் கால்கள் நடக்கும் 

சத்தத்தில் எல்லாம் 

பெரும் நிம்மதியடைந்து 

பெரும் ஆறுதல் கொள்கிறது...


நான் தினமும் செய்து வரும் 

தான தர்ம செயல்களில் எல்லாம் 

தனது சுவாசத்தை 

புதுப்பித்துக் கொள்கிறது...


இந்த நிகழ்வுகள் எல்லாம் 

அன்றொரு நாள் சத்தம் இல்லாமல் 

நின்று போனதை 

அது அன்று நிலவிய அசாதாரண சூழலில் புரிந்துக் கொண்டு 

பெரும் அதிர்ச்சி அடைந்தது...


எது எப்படியோ நான் சூட்சமமாக 

அதனிடம் என் பூமி வருகை 

பதிவை முடித்துக் கொண்ட 

செய்தியை அதனிடம் 

தட்டு தடுமாறி சொல்லி முடித்த 

தருணத்தில் 

என் உயிர் சுதந்திரமாக பிரிந்து 

அந்த வீட்டில் இருந்து 

மெல்ல மெல்ல விலகியது...


அங்கே நான் சுடுகாட்டில் 

எரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அந்த வீட்டின் உரிமை 

வேறொருவருக்கு அடி மாட்டு 

விலைக்கு கை மாறியது...


ஏன் இவ்வளவு 

மோசமான விலை என்று 

அங்கே யாரோ கேட்கிறார்கள் 

அதற்கு அது வம்ச விருத்தி 

இல்லாத வீடு என்று 

யாரோ யதார்த்தமாக

சொல்லி செல்வதை பார்த்து 


அந்த வீடு அதே நொடியில் 

பூகம்பம் தாக்கியதை போல 

சடசடவென தரை மட்டமாகியதை 

பார்த்து அங்கே இருந்தவர்கள் 

பெரும் அதிர்ச்சி கொள்கிறார்கள்..


இங்கே கடும் அக்னியில் 

வெந்து கொண்டிருந்த நான் 

அந்த வீட்டின் பிரியத்தில் 

பெரும் கண்ணீர் உகுத்து 

நெருப்பை அணைக்கிறேன்...


இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்த 

மனிதர்கள் ஏதோவொரு 

ரகசிய ஒப்பந்தம் அந்த வீடும் 

நானும் போட்டுக் கொண்டதாக 

கிசுகிசுத்து கலைந்து செல்லும் போது 


அந்த வீட்டில் வசித்து வந்த குருவி 

சிறு முனகலோடு 

இடிந்த சுவர்கள் மீதேறி 

மேலே வந்து அவர்களை 

வேடிக்கை பார்த்தது...

இங்கே அந்த குருவி தான் 

வம்ச விருத்தியின் எச்சம் என்று 

எத்தனை பேர் புரிந்துக் கொண்டு 

இருப்பார்கள் என்று 

அந்த வீடு மெல்லிய 

குரலில் 

கேட்டு விட்டு தன் உயிரை 

தியாகம் செய்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/26.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...