உயிர் துளிகள்...

திடீரென்று எங்கிருந்தோ
சூழ்ந்துக் கொண்ட
போர் மேகங்களில்
பாலூட்டி வளர்த்த தாயின்
நேசத்தையும்
தந்தையின் பாசத்தையும் உள்வாங்கிக் கொண்ட பூமியில்
தேடி அலைகிறார்கள்
இந்த ஒன்றும் அறியாத
கள்ளம் கபடமற்ற குழந்தைகள்...
தாம் வாழ்ந்த வீடுகளை
தன்னுள் வலுக்கட்டாயமாக
புதைத்துக் கொள்ளவில்லை
பூமி தாய் என்று
உணர்ந்தபோதும்
நியாயம் கேட்டு தவிக்கிறது
இங்கே இந்த குழந்தைகள்
திக்கற்ற நிலையில்
தவித்து நிற்கும்
இந்த நிலையை
காண சகியாமல்....
பல கனவுகளை தமக்குள்
சுமந்து மகிழ்வோடு
திரிந்த பட்டாம்பூச்சிகளின்
சிறகுகளில் இருந்து
அந்த வண்ணங்கள்
வலுக்கட்டாயமாக
பிய்த்து எடுக்கப்படுகிறது
கடும் மனதைக் கொண்ட கயவர்களின் போர் வாளால்...
இங்கே பிரபஞ்சத்தின்
நியாயமான முனகலோடு கூடிய
குரல் கேட்க நாதியற்று
கிடக்கிறது...
அந்த உயிரற்ற
கட்டிட இடிபாடுகளுக்குள்...
இங்கே பேரமைதிக் கொண்ட
பிரபஞ்சத்தின் ரசனையான
வசந்த வாழ்வை
சிதைத்து விட்டதில்
உங்களுக்கு அப்படி என்ன
அல்ப மகிழ்வு என்று...
ஒற்றை ஆளாக நான் இங்கே
கதறி
அழுவது மட்டும்
அந்த கயவர்களின் செவிகளில்
விழுமா என்ன என்று
என் ஆழ் மனதின் கேள்விக்கு
பதில் சொல்ல நாதி இல்லாமல்
அநாதையாக கிடக்கிறது...
அந்த அழுகையின் கண்ணீர்
செந்நீராக போர் மேகம் பொழிந்த
குண்டு மழையில் கலந்து விடுகிறது
சத்தம் இல்லாமல்...
வேறென்ன செய்ய இயலும்
அந்த ஒற்றை மனுஷியான
என்னால்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/03/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக