ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 1 மே, 2026

உயிரோட்டமாக ஜீவித்து இருக்கும் கலை...

 


ஏதேதோ தேடி ஓடிக் கொண்டே 

இருக்கும் மக்களின் 

தீராத அந்த நெடுந்தூர ஓட்டத்தின் 

எல்லை எது என்று 

தெரியவில்லை...


வறண்ட பாலைவனத்தில் 

தண்ணீர் தேடி அலையும் 

அந்த பறவைக்கு கூட 

ஒரு அர்த்தம் இருக்கிறது...

உயிர் மீட்டலின் வலி அது...

தன்னை தானே 

மாய்த்துக் கொள்ள 

மனம் இல்லாமல் 

இறுதி வரை 

போராடிக் கொண்டிருக்கும் 

தன் முனைப்பின் நம்பிக்கை அது...


அந்த பறவைக்கு இங்கே 

எதையும் தன் வசப்படுத்திக் கொள்ள 

தேவையில்லாத மனநிலை அது...

அதன் தேவை எல்லாம் 

தான் ஜீவித்து இருக்கும் 

காலத்தை உறுதி செய்துக் கொள்ள 

போராடும் நிலையது...


இங்கே அந்த சிறு பறவையோடு 

ஒப்பிட்டு பார்க்கும் போது கூட 

இங்கே ஈசல் போல 

இயந்திரத்தனமாக ஓடும் 

மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்!


இங்கே தன்னிறைவு எனும் 

மனநிலையை தாண்டி 

எதற்கும் மதிப்பில்லை என்று 

இத்தனை தூரம் 

நான் அந்த சாலையில் 

மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் 

அந்த சிறு பூச்சியிடம் 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 


அந்த ஈசல் கூட்டத்தில் இருந்து 

ஒருவன் என்னை 

வேகமாக தள்ளியதும் அல்லாமல் பைத்தியம் தனியாக 

ஏன் இங்கே பேசுகிறாய்...

இங்கே பார் நாங்கள் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

நீ நட்ட நடுசாலையில் 

ஒன்றுக்கு உதவாமல் 

வெட்டிக் கதையை 

தன்னந்தனியாக பேசிக் கொண்டு 

இருக்கிறாய்..

நேரம் போனால் வராது...

தள்ளி நில் சித்தம் கலங்கியவனே 

என்று ஆக்ரோஷமாக 

கோபத்தை காட்டி விட்டு 

ஓடுகிறான்...


அவன் என்னிடம் பேசிய 

அந்த சில நிமிடங்களில் 

அவனோடு பிரயாணம் செய்த 

கூட்டம் அவன் ஒருத்தன் 

தன்னோடு பிரயாணம் 

செய்ததையே

மறந்து விட்டு புள்ளியாக 

மறைந்த போனார்கள்...


அவனோ என்னை திரும்பி 

முறைத்து பார்த்தான்...

நான் சலனமில்லாமல் 

அவனை நோக்கி ஒரு புன்னகையை 

உதிர்த்து விட்டு 

அந்த பூச்சிக்கு 

இன்னொரு தத்துவ சாரலை 

போதித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

அதுவும் மெல்ல ஊர்ந்து கொண்டே 

என் கதையை கேட்டு 

சலிப்பில்லாமல் 

தன் பயணத்தை 

புத்துணர்ச்சியோடு 

தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் நேசிக்க மறந்த அந்த நொடிகள்...

 ஜெயிப்பது தோற்பது  பற்றி எல்லாம் நான் எப்போதும்  கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு  நேசிக்க மறந்து  இயந்திரத்தனமாக எப்போதாவது  ஓடிக் கொ...