ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 25 மே, 2025

அந்த சொற்ப நொடிகள் தான் நான் விரும்பிய நொடிகள்...


அந்த சொற்ப நொடிகள் தான் 

நான் பிடித்து 

வைத்துக் கொண்டு 

விருப்பம் கொண்ட நொடிகள்...

அது ஏனோ என்னிடம் இருந்து 

அழுது அடம் பிடித்து 

திமிறிக் கொண்டு 

செல்கிறது 

ஒரு சிறு குழந்தையை போல...

நான் நொடிகளோடு போராட 

மனம் இல்லாமல் 

என் மனதிற்கு ஆறுதல் சொல்லி அடுத்து வரும் நொடிகளை 

சுதந்திரமாக 

செல்ல அனுமதிக்கிறேன்!

இங்கே நிரந்தரமற்ற 

நொடிப் பொழுதின் தன்மையை 

புரிந்துக் கொண்டு 

அதன் இயல்பை நசுக்காமல்

பழகிக் கொண்டது 

என் குழந்தை மனமும்!

#அந்திமாலைப்பொழுது.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/05/25/ஞாயிற்றுக்கிழமை.

திருப்தி இல்லாத மனம்...


எதை செய்தாலும் 

திருப்தி இல்லாத 

அல்லது அலுத்துக் கொண்ட 

மனதிற்கு

யாரோ வீசி எறிந்த 

அந்த காகித குப்பையில் 

தன்னை மறந்து 

தன் வயிற்று அக்னியின் 

சிறு பகுதியையாவது

தணித்துக் கொள்ள 

சொற்ப சோற்றுத்துகளை 

தேடி அலைந்து திரியும் 

நாயின் தேடலில் ஏனோ 

திருப்திக் கொள்கிறது 

இந்த பாழும் மனது!

#அந்திமாலைகவிதை.

நாள்:25/05/25/ஞாயிற்றுக்கிழமை.

புதன், 21 மே, 2025

#சிறுகதை உலகம்//ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி

 


ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி -சிறுகதை எழுத்தாக்கம் வைத்தீஸ்வரன் அவர்கள்.

இந்த கதையை வாசிக்கும் போது நமக்குள் ஒரு அற்புதமான ஓவியம் எழுந்து ஆக்கிரமிப்பதை தடுக்க முடியவில்லை... வாழ்த்துக்கள் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களுக்கு 🙏 🤝 🦅 💫.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🎻 ❤️.

https://youtu.be/JJ5y3pvPXFM?si=tGVjg362o7Dy-vn9

சக ஜீவராசியின் இளைப்பாறுதல்...


அந்த நள்ளிரவு வேளையில் 

திடீரென ஏதோ கனவொன்று கண்டு 

திடுக்கிட்டு எழுந்து 

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மின் விளக்கை 

போடும் போது 

எனது அறையின் நடுவில் தரையில் கொஞ்சம் சுதந்திரமாக உறங்கிக் கொண்டிருந்த பல்லி திடுக்கிட்டு எழுந்து தடதடவென ஊர்ந்து சுவரில் 

வேக வேகமாக போக எத்தனித்து ஓரிரு முறை கீழே விழுந்ததை 

பார்க்கும் போது அந்த மோசமான கனவிலேயே 

நம்மை நாமே தேற்றிக் கொண்டு எழாமல் உறங்கி இருக்கலாமோ என்று 

எண்ண வைத்து விடுகிறது...

இளைப்பாறுதல் இங்கே 

தற்போதைய நிலையில் 

தொடர் ஆசுவாசமான நேரமாக நம்மோடு பயணிப்பதற்கு சில பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும் போல என்று மீண்டும் உறக்கத்தை வரவழைக்க போராடி தோற்பது நான் மட்டும் அல்ல...

அந்த 🦎 பல்லியும் தான்...

#சக #ஜீவ ராசியின் #இளைப்பாறுதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

முன்னிரவு பொழுது 10:35.

வியாழன், 15 மே, 2025

எந்த மர்ம புன்னகைக்கும் ஏதோவொரு அர்த்தம்...

 


எந்த மர்ம புன்னகைக்கும் 

ஏதோவொரு அர்த்தம் 

கற்பித்துக் கொள்கிறது 

இந்த உலகம்...

அந்த மர்ம புன்னகைக்கும் கூட தெரியாத ஆழ்ந்த ரகசியம் அந்த மெல்லிய புன்னகையோடு பயணிப்பதை 

அப்படியே 

விட்டு விடுங்களேன்...

எந்த தொந்தரவும் இல்லாமல் 

பயணிக்க நினைக்கும் அதன் 

இந்த ஒரு ஆசையை கூடவா 

உங்களால் நிறைவேற்றி விட முடியாத அளவுக்கு 

கடினமான பாறையால் ஆனதா உங்கள் அனைவரின் உள்ளமும்...

#மர்மபுன்னகை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/05/25/வியாழக்கிழமை.

புதன், 7 மே, 2025

மறுக்கப்படும் சமாதானங்கள்...

 

மறுக்கப்படும் சமாதானங்கள் 

எப்போதும் அடிமையாக தான் 

இருக்க வேண்டும் என்பதில்லை!

அது ஊழிதாண்டவமாக மாறி 

சின்னாபின்னமாக்கும் ஆற்றலும் 

அதன் அடி ஆழத்தில் 

அமிழ்ந்து கிடப்பதை 

மறந்து விடாதீர்கள்!.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/05/25/புதன்கிழமை.

போரும் நானும்...


போர் கதவை தட்டும் போதும் 

எழுந்து போய் திறக்க மனமில்லாமல் 

கையில் தட்டுப்பட்ட ஏதோவொரு 

தத்துவ புத்தகத்தை

ஆழ்ந்து வாசிக்கிறேன்...

போரோ நிதானம் இழந்து 

கண்கள் சிவந்து 

அங்கே இருந்து நகர்ந்து செல்கிறது 

மிக வேகமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/05/25/புதன் கிழமை.

ஞாயிறு, 4 மே, 2025

எனக்கு நான் யார் ...


ஒவ்வொரு முறையும், 

ஒவ்வொரு நிகழ்விலும்

கணத்து கடந்து செல்கின்ற 

அந்த ஒவ்வொரு கணத்திற்கும் 

நான் ஒரு வேடிக்கை மனுஷி...

எனக்கு நான் யார் ?

எனக்கும் நான் அந்த வேடிக்கை மனுஷியா அல்லது வேறு எதுவுமா என்ற அந்த விடை தெரியாத கேள்விக்கு மட்டும் 

விடை இல்லாமல் பயணிக்கிறது நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த கணங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.

#நீக்கமற நிறைந்து இருக்கும்அந்த கணங்கள்.

அந்த உணர்வற்ற மனிதனின் இதயத்தில் உள்ள நீர்மம்... சிறுகதை..

 


ஒரு கற்பனை கதை:-

அந்த உணர்வற்ற மனிதனின் இதயம்:-

தன் வாழ்வில் நடந்த அந்த நெடுங்சோகக் கதையை

நெடுநேரமாக ஒருவர் அந்த தேநீர் கடையில் சந்தித்த பழக்கமான ஒருவரிடம் உணர்வுபூர்வமாக சொல்லி கொண்டு இருந்ததை 

தற்செயலாக நான் வேடிக்கை பார்க்க நேர்ந்தது!

எனது வேலையை விட்டு விட்டு நான் அதை கவனிக்க வேண்டும் என்று நான் அவர் கதையை கேட்கவில்லை 

அவரின் உணர்வுபூர்வமான உடல் மொழியில் நான் 

உருகி கேட்டு கொண்டு இருந்தேன் என்று சொல்லலாம்...

எதிரே இருந்தவர் அதை சொல்லி முடிப்பதற்குள் 

பல முறை அப்படியா அப்படியா என்று உணர்வற்ற பதிலில் கேட்டுக் கொண்டு இருந்த அந்த எதிரே இருந்த மனிதர் முடிவில் சரி இதை எல்லாம் பெரிதாக நினைத்துக் கொண்டு உனது அன்றாட வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே... அடுத்து என்ன என்று பார் என்று அதே உணர்வற்ற மொழியில் சொல்லி விட்டு நகர்ந்து செல்கிறார்...

அவர் சொன்ன சோக கதையை இவ்வளவு நேரம் கேட்டு கொண்டு இருந்த தேநீர் கடையில் உள்ள தேநீரோ சற்றே அந்த மேசையில் இருந்து 

நகர்ந்து அவரை லேசாக இடித்து என்னை கொஞ்சம் பருகி உனது சோகத்திற்கான ஆறுதலாக இளைப்பாறிக் கொள் என்றது...

இதை கவனித்துக் கொண்டு இருந்த நானோ சற்றே நிம்மதியடைந்து நான் பருகிய காலி கோப்பையை மேசை மீது வைத்து விட்டு அதற்கான தொகையை செலுத்தி விட்டு என் பயணத்தை தொடர்கிறேன் இங்கே உணர்வற்ற மனிதர்களின் இதயத்தில் 

வெறுமனே வெப்பத்தை உமிழ்ந்து விடும் அந்த அதிசய நீர்மத்தின் விசேஷத்தை எவர் வைத்து படைத்தார் என்ற விடை தெரியாத கேள்வியோடு....

#அந்த #உணர்வற்றமனிதனின்இதயம்❤️

#இளையவேணிகிருஷ்ணா.

தூர தேச பயணியாகிறேன்..

 


தூர தேச பயணி நான்:-

நான் அந்த ஒற்றை சொல்லில் 

வாழ்கிறேன் என்கிறார்கள் சிலர்!

நான் அந்த ஒற்றை சொல்லை மட்டும் 

எதிர்கொள்ளாமல் 

இருந்து இருந்தால் 

இவ்வளவு சோர்வு 

எனக்கு இருந்து இருக்காது 

என்கிறார்கள் சிலர்...

நானோ 

உண்மையில் 

எந்த ஒற்றை சொல்லும் 

எவரையும் அப்படி ஒன்றும் பதம் 

பார்த்து விடுவதில்லை 

அந்த கேட்க கூடாதா ஒற்றை 

சொல்லை தனக்கான விருந்தினர் 

இல்லை என்று தீர்க்கமாக நம்பி 

காற்றில் ஏற்றி வழியனுப்பி 

வைத்து விட்டு அந்த சாலையில் 

உற்சாகமாக பயணியுங்கள் 

என்கிறேன் 

மிகவும் உற்சாகமாக...

அத்தனை பேரும் என்னை திரும்பி 

பார்த்து விட்டு 

மெதுவாக கையசைத்து 

புன்னகைத்து கடந்து 

செல்கிறார்கள்...

நானோ பெரும் விடுதலைக்கான 

தேடலில் 

மீண்டும் தூர தேச பயணியாக 

பயணிக்கிறேன் 

இந்த பிரபஞ்சத்தில்...

#இளையவேணிகிருஷ்ணா.

#தூரதேசபயணிநான்.

நாள்: 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.

அந்த இரண்டுமற்ற பொழுதின் சோக கதை...


இருளுமற்ற ஒளியுமற்ற அந்த 

காலத்தோடு நான் 

பயணித்துக் கொண்டு இருந்தேன்...

அந்த இரண்டும் அற்ற 

பொழுதோ ஆயிரம் ஆயிரம் 

சோக கதைகளை தாங்கி 

பயணிக்கிறது என்னோடு 

பெரும் அமைதியாக...

ஒரு மணி நேர எங்கள் பயணத்தில் 

ஒரு பேச்சும் இல்லை...

அதுவே பேசட்டும் என்று நான் அந்த 

சாலையில் போவோர் வருவோரை 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

மெதுவாக நடக்கிறேன்...

அந்த பொழுதோ இனியும் 

பொறுக்க முடியாது என்பது போல 

என் கையை பிடித்துக் கொண்டு பேச 

ஆரம்பித்த அந்த ஒற்றை 

வார்த்தையில் 

குரல் கரகரத்து கண்ணீர் 

வழிந்து கொட்டியதை 

என் கையில் தெறித்த சுடுநீரில் நான் 

உணர்ந்துக் கொண்டேன்...

ஏன் இந்த சோகம் என்றேன் நான் 

மெதுவாக...

என் இரண்டுமற்ற தன்மையில் 

நான் நீடித்து 

பெரும் காதலோடு பயணிக்க முடியவில்லை என்றது...

புரியவில்லை என்றேன்.

நான் பகலோடு கூடிய காதல் 

முடிவதற்குள் இரவின் பெரும் 

காதலை எதிர் கொள்ள வேண்டி 

உள்ளது...

இந்த இருபெரும் காதலில் 

நான் என் சுயத்தை தொலைத்து 

பெரும் மானத்தை தொலைத்து 

வாழ்வதாக அங்கே சிலர் என் 

காதுப்பட பேசி தன் பேச்சால் 

சுடுகிறார்கள் என்றது...

நானோ இதுதான் உன் 

உண்மையான 

சோகமா என்றேன்...

நிச்சயமாக என்றது...

இதற்காக இவ்வளவு 

கவலைக் கொள்ள 

தேவையில்லை என்றேன் 

நான்.

நீயும் என்னை கேலி செய்கிறாய் 

என்றது...

இல்லை இல்லை நான் உன்னை 

கேலி செய்யவில்லை...

உண்மை தான்.. உன் உண்மையான 

சுயநலமற்ற பெரும் காதலில் அந்த 

இரவும் பகலும் சங்கமித்து 

தன் பயணத்தை எந்தவித 

சஞ்சலமும் இல்லாமல் 

தொடர்கிறது...

இந்த மனிதர்கள் தனது நீண்ட 

பயணத்தை இந்த பிரபஞ்சத்தில் 

தொடர்கிறார்கள்...

உங்கள் நிச்சலனமான காதலில் 

பிறந்து விட்டு 

பெற்ற உங்களை சொற்களால் 

இம்சித்து 

தன் மனதில் உள்ள சேற்றை 

உன் மீது வீசிய போதும் 

உன் மீது அந்த சேற்றின் 

சுவடை நான் 

எங்கேயும் காணவில்லை...

அதனால் நீயும் ஒரு திரௌபதி தான் 

என்றேன்...

அந்த இரண்டுமற்ற காலமோ 

சற்றே எனது பதிலில் 

அமைதியடைந்து இருக்க வேண்டும்...

என் கைகளை இறுக 

பிடித்துக் கொண்டு விடை பெற எத்தனித்த போது 

நான் இரவாகிறேன்...

#இரண்டும் #அற்ற #பொழுதின்கதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.


என் மனமெனும் கிறுக்கலில் தோன்றிய புத்தர்...


அன்றொரு நாள் 

இப்படி தான் 

ஏதுமற்ற மனதில் 

ஏதோ கிறுக்கிக் கொண்டு 

இருந்தேன்...

அந்த கிறுக்கலை 

கூர்ந்து நோக்கியபோது 

அங்கே ஒரு புத்தர் தாமரை மலரில் 

பேரமைதியோடு 

அமர்ந்து இருந்தார்...

நான் அந்த புத்தரின் முகத்தில் 

தோன்றிய ஒளியில் 

என் மனதின் ஆக்ரோஷமெனும் 

பெரும் சுழலை அடக்கி 

ஆனந்தமெனும் 

பேருணர்வை உணர்ந்து 

மீண்டும் ஏதுமற்ற மனமாகிறேன்...

தற்போது அந்த ஏதுமற்ற மனதில் 

எதுவும் கிறுக்காமலேயே 

புத்தர் சிம்மாசனமிட்டு 

கண்களை மூடி இருந்தார்...

நான் அந்த புத்தரின் 

முகத்தில் லயித்து 

வாழ்வின் பெரும் தத்துவத்தை 

உணர்ந்துக் கொண்டு இருக்கும் போது 

எங்கோ இருந்து வந்த 

பெரும் சுழல் காற்றில் இருந்து 

புத்தரை காப்பாற்ற 

அவரை இறுக 

அணைத்துக் கொண்டபோது 

நான் அங்கே அவருள் கரைந்து போய் 

இருந்ததை பார்த்து என் மனம் 

ஏதும் செய்ய இயலாமல் 

சோகமாக வேடிக்கை பார்த்தது...

இதை எல்லாம் பார்த்துக் கொண்டே 

அந்த காலமும் 

மெல்ல மெல்ல நகர்கிறது 

பெரும் மூச்சை 

உதிர்த்துக் கொண்டே...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/05/25/ஞாயிற்றுக்கிழமை.

சனி, 3 மே, 2025

காலம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தின் நாயகி நான்...


காலம் ஆடும் கண்ணாமூச்சி 

ஆட்டத்தின் நாயகி நான்!

நான் அந்த ஆட்டத்தில் 

எங்கோ தொலைந்து ஆனந்தமாக 

அந்த சூட்சம காட்டில் சுற்றி 

திரிகிறேன்...

காலமோ என் மீது கொண்ட 

பெரும் காதலை மறக்க முடியாமல் 

கதறி அழுது அரற்றி 

எனை தேடி களைக்கிறது...

நானோ எந்த பற்றுதலும் இல்லாத 

ஞானி போல அந்த சூட்சம காட்டில் 

ஒரு ஆயிரம் வண்ணங்கள் கொண்ட 

பட்டாம்பூச்சி போல 

பறந்து திரிகிறேன்...

காலம் என் மீது கொண்ட பேரன்பின் 

காயத்தை பற்றிய 

எந்தவித நெருடலும் இல்லாமல்... 

#இரவுகவிதை.

நாள்:03/05/25/சனிக்கிழமை 

#இளையவேணிகிருஷ்ணா

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...