ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 4 மே, 2025

அந்த இரண்டுமற்ற பொழுதின் சோக கதை...


இருளுமற்ற ஒளியுமற்ற அந்த 

காலத்தோடு நான் 

பயணித்துக் கொண்டு இருந்தேன்...

அந்த இரண்டும் அற்ற 

பொழுதோ ஆயிரம் ஆயிரம் 

சோக கதைகளை தாங்கி 

பயணிக்கிறது என்னோடு 

பெரும் அமைதியாக...

ஒரு மணி நேர எங்கள் பயணத்தில் 

ஒரு பேச்சும் இல்லை...

அதுவே பேசட்டும் என்று நான் அந்த 

சாலையில் போவோர் வருவோரை 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

மெதுவாக நடக்கிறேன்...

அந்த பொழுதோ இனியும் 

பொறுக்க முடியாது என்பது போல 

என் கையை பிடித்துக் கொண்டு பேச 

ஆரம்பித்த அந்த ஒற்றை 

வார்த்தையில் 

குரல் கரகரத்து கண்ணீர் 

வழிந்து கொட்டியதை 

என் கையில் தெறித்த சுடுநீரில் நான் 

உணர்ந்துக் கொண்டேன்...

ஏன் இந்த சோகம் என்றேன் நான் 

மெதுவாக...

என் இரண்டுமற்ற தன்மையில் 

நான் நீடித்து 

பெரும் காதலோடு பயணிக்க முடியவில்லை என்றது...

புரியவில்லை என்றேன்.

நான் பகலோடு கூடிய காதல் 

முடிவதற்குள் இரவின் பெரும் 

காதலை எதிர் கொள்ள வேண்டி 

உள்ளது...

இந்த இருபெரும் காதலில் 

நான் என் சுயத்தை தொலைத்து 

பெரும் மானத்தை தொலைத்து 

வாழ்வதாக அங்கே சிலர் என் 

காதுப்பட பேசி தன் பேச்சால் 

சுடுகிறார்கள் என்றது...

நானோ இதுதான் உன் 

உண்மையான 

சோகமா என்றேன்...

நிச்சயமாக என்றது...

இதற்காக இவ்வளவு 

கவலைக் கொள்ள 

தேவையில்லை என்றேன் 

நான்.

நீயும் என்னை கேலி செய்கிறாய் 

என்றது...

இல்லை இல்லை நான் உன்னை 

கேலி செய்யவில்லை...

உண்மை தான்.. உன் உண்மையான 

சுயநலமற்ற பெரும் காதலில் அந்த 

இரவும் பகலும் சங்கமித்து 

தன் பயணத்தை எந்தவித 

சஞ்சலமும் இல்லாமல் 

தொடர்கிறது...

இந்த மனிதர்கள் தனது நீண்ட 

பயணத்தை இந்த பிரபஞ்சத்தில் 

தொடர்கிறார்கள்...

உங்கள் நிச்சலனமான காதலில் 

பிறந்து விட்டு 

பெற்ற உங்களை சொற்களால் 

இம்சித்து 

தன் மனதில் உள்ள சேற்றை 

உன் மீது வீசிய போதும் 

உன் மீது அந்த சேற்றின் 

சுவடை நான் 

எங்கேயும் காணவில்லை...

அதனால் நீயும் ஒரு திரௌபதி தான் 

என்றேன்...

அந்த இரண்டுமற்ற காலமோ 

சற்றே எனது பதிலில் 

அமைதியடைந்து இருக்க வேண்டும்...

என் கைகளை இறுக 

பிடித்துக் கொண்டு விடை பெற எத்தனித்த போது 

நான் இரவாகிறேன்...

#இரண்டும் #அற்ற #பொழுதின்கதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...