கதவை வேகமாக போய் திறந்தேன்.அங்கே நான் நினைத்தது போல ராதை தான் நின்றிருந்தாள்..உள்ளே வா ராதா என்றேன் புன்னகையோடு..
உள்ளே சிரிப்போடு வந்த ராதா அந்த வரவேற்பறையில் இருந்த சோபா மீது ஆசுவாசமாக அமர்ந்தாள்.. கொஞ்சம் பருக நீர் கொண்டு வா கிருஷ்ணா என்று சொல்லி முடிப்பதற்குள் அருகே நீரோடு வந்து நின்று இந்தா எடுத்து மெதுவாக பருகு என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்...
அவள் அந்த நீரை பருகி விட்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தாள்... அவளது முகம் கொஞ்சம் ஆச்சரியம் மற்றும் சிறு முறுவல் என்று பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததை நான் மிகவும் ரசனையோடு பார்த்தேன்...
வாவ்... எவ்வளவு அற்புதமான கலை உணர்வோடு இந்த வீட்டை நீ வைத்து இருக்கிறாய் கிருஷ்ணா என்றாள்...
அதெல்லாம் ஒன்றும் இல்லை.. நான் ரசித்த விஷயத்தை இங்கே அமலுக்கு கொண்டு வந்து இருக்கிறேன் அவ்வளவு தான் என்று சொல்லி விட்டு சரி போய் குளித்து விட்டு வா நான் அதற்குள் இரவு உணவை தயார் செய்து வைக்கிறேன் என்று சொல்லி விட்டு சமையல் அறைக்கு சென்றேன் மீதமுள்ள பணிகளை முடிக்க...
சரி கிருஷ்ணா எங்கே குளியலறை என்று சொல்லி விட்டு போ என்றாள் கொஞ்சம் சத்தமாக... நான் அதோ என்று கை காட்டிய திசையில் நடந்து சென்றாள்...
நான் இரவு தயாரிக்க வேண்டிய உணவாக சப்பாத்திக்கு குருமா தயார் செய்ய முனைந்து ஒரு புறம் அதை ஒரு அடுப்பில் வைத்து விட்டு மறுபுறம் சப்பாத்தி போடுவதற்காக தோசை கல்லை போட்டு விட்டு சப்பாத்தி தேய்க்க ஆரம்பித்தேன்.... சிறிது நேரத்தில் ராதா தயாராகி என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் கிருஷ்ணா என்று சொல்லி விட்டு நான் தேய்த்துக் கொண்டு இருந்த சப்பாத்தி கட்டையை என்னிடம் இருந்து பறித்து தேய்க்க ஆரம்பித்தாள்... இருவரும் பள்ளி நாட்களில் நடந்த விசயங்களை பேசிக் கொண்டே வேலையை முடித்து விட்டு சாப்பிட தயாரானோம்... அந்த வரவேற்பறையில் இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்... சப்பாத்தி குருமா எவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கிறது.... இதெல்லாம் உனக்கு எப்படிடா என்று ஆச்சரியமாக பார்த்தாள்... அதெல்லாம் அப்படி தான்... வேறு வழி இல்லையே.. நேரம் வந்து விட்டால் வயிறு எனக்கு ஏதாவது போடுடா என்று உரிமையுடன் சண்டை போடுகிறதே என்றேன் சிறிது சிரித்தபடி... அதற்காக தினமும் நீதான் சமைத்து அலுவலகம் எடுத்து செல்வாயா என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.. ஆமாம் வேறு யாரும் சூட்சமமாக இங்கே எனக்கு உதவ ஆள் இல்லை ராதா நீ நம்பி தான் ஆக வேண்டும் என்றேன் கொஞ்சம் வேடிக்கையாக...
அட போடா எப்போதும் உனக்கு வேடிக்கை தான்...என்று சொல்லி சிரித்தாள்...
ஒரு வழியாக பேசிக் கொண்டே நாங்கள் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு சமையல் அறையை இருவரும் சுத்தம் செய்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக சோஃபாவில் அமர்ந்தோம்... மறுநாள் விடியற்காலையில் கிளம்ப சிறு சிறு வேலைகள் இருந்தது எனக்கு... அதற்கு ராதா உதவி செய்தாள்... தற்போது மணி இரவு எட்டு மணி காட்டியது... கிருஷ்ணா மணி எட்டு தான் ஆகிறது.. கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போகலாமா என்றேன்... சரி வா போகலாம் என்று மாடிக்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றேன்...
அங்கே இருந்த அறையில் இருந்து வெளியே இரு நாற்காலியை எடுத்து வந்து போட்டேன்... அங்கே நிலவு கொஞ்சம் கிழக்கில் மேலே எழுந்து இருந்து எங்களை வேடிக்கை பார்ப்பதற்காக எட்டி
பார்த்தது...
கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அந்த நிலவை அங்கே தவழும் மேகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.. தென்றல் எங்களை மெதுவாக தீண்டியது...
ராதா என்றேன் மிகவும் மெதுவாக...
என்ன என்று என்னை நோக்கி திரும்பி பார்த்தாள்... எப்படி வேலை போகிறது உனக்கு என்றேன்...
ம்ம் ஏதோ போகிறது...வாழ்க்கையை ஓட்ட தேவைக்கு அதிகமான பணத்தோடும் கொஞ்சம் வாழ்வின் ருசியை அனுபவிக்க முடியாத சக்கையாகவும் போகிறது..
ஆனால் நான் இந்த சமூகத்தின் கட்டமைப்பில் இல்லை..
அதனால் பெரிதாக சலிப்பு என்றும் சோர்வும் என்று சொல்லி விட முடியாதபடி போகிறது...இதோ இப்போது உன்னோடு மிகவும் சுதந்திரமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் அளவுக்கு என்றாள் சிரித்துக்கொண்டே...
அதெல்லாம் சரி உனது அண்ணா அம்மா அப்பா எல்லோரும் நலம் தானே என்றேன்..
அதெல்லாம் நலம் தான் கிருஷ்ணா.. வயோதிகம் காரணமாக கொஞ்சம் அயற்சியாக இருக்கிறார்கள்.. அண்ணி மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் மூன்று பேரையும் விட்டுக் கொடுக்காமல் அழகாக வாழ்வை நகர்த்தி செல்கிறார்.. அதனால் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறேன் என்றேன்...
மிகவும் மகிழ்ச்சி...நீ அப்போது பள்ளி நாட்களில் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இருக்கிறாய்...நீ அழைத்து எங்காவது போகலாமா என்று கேட்ட போது நான் கூட உனக்கு ஏதோ நிம்மதியாக இல்லாத சூழலில் இருக்கிறாயோ என்று பயந்து விட்டேன் என்றேன் கொஞ்சம் கவலையாக...
அப்படியா.. அதெல்லாம் ஒன்றும் இல்லை கிருஷ்ணா... நான் அந்தளவுக்கு மன தெளிவு இல்லாத மனுஷி இல்லை.. உனக்கு எனது நன்றியையும் பேரன் பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாள் சிரித்துக்கொண்டே...
நன்றி எல்லாம் வேண்டாம் நீ நன்றாக இருந்தாலே போதும் ராதா என்றேன் ஆறுதலாக...
அப்படியே நான் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை இப்போது கேட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவள் கிருஷ்ணா அங்கே பார் இரண்டு பறவைகள் வானில் தனது கூட்டிற்கு இவ்வளவு தாமதமாக செல்கிறதே அதற்கு வழி தெரியுமோ இந்த இருட்டில் என்று கவலையுடன் கேட்டாள்...
அதெல்லாம் அதற்கு இந்த பிரபஞ்சத்தின் காம்பஸ் மிகவும் அழகாக வழி காட்டி கூட்டி செல்லும் என்றேன்...
அதுவும் சரிதான் கிருஷ்ணா என்று சொல்லி விட்டு
நாம் காலையில் எத்தனை மணிக்கு இங்கே இருந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டாள்..
முதலில் எங்கே செல்ல வேண்டும் என்று நீ சொல்லவே இல்லையே என்றேன் சிறிது ஆச்சரியமாக..
அப்படி என்றால் நீ எதுவும் திட்டம் எதுவும் வைத்து இருக்கவில்லையா என்றாள் கொஞ்சம் ஆவலாக...
இல்லை ராதா...நீ எங்கே என்று சொன்னால் அங்கே போகலாம் என்று தான் அப்படியே விட்டு விட்டேன்... நீ அழைத்த போது எங்காவது செல்லலாம் என்று கேட்டபோது நான் உன்னிடம் ஏன் எதுவும் கேட்கவில்லை என்று தெரியுமா...நீ ஏதாவது திட்டம் வைத்து இருப்பாய் அதற்காக தான் என்னை அழைத்தாய் என்று மௌனமாக இருந்து விட்டேன் என்றேன்...
சரி பரவாயில்லை கிருஷ்ணா...
ஒன்றும் பிரச்சினை இல்லை பார்த்துக் கொள்ளலாம் எங்கே என்று தற்போது முடிவெடுக்க வேண்டாம்.. காலையில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு அங்கே பார் நிலவை எவ்வளவு ரம்மியமான காட்சி என்றாள்...
நானோ இவளால் எப்படி அடுத்த நிகழ்விற்கு எந்த சலனமும் இல்லாமல் நகர முடிகிறது என்று ஆச்சரியத்துடன் அவள் காட்டிய திசையில் அந்த நிலவை பார்த்தேன்...நிலவோ என்னை கண்டுக் கொள்ளாமல் அவளோடு மட்டும் உரையாடுவது போலவே எனக்கு தோன்றியது...
அடுத்து என்ன அடுத்த
அத்தியாத்திற்காக காத்திருங்கள் 🤷.
#இளையவேணிகிருஷ்ணா
நாள் 22/09/25
திங்கட்கிழமை.