ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 4 அக்டோபர், 2025

இனியொரு விதி செய்வோம்...

 


#இன்றையதலையங்கம்:-

மிக பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் வாழ்ந்த தமிழ்நாடு தற்போது கலை வேறு அரசியல் வேறு என்பதில் தடுமாறி நிற்கிறது என்பது தான் ஜீரணிக்க முடியாத காலக் கொடுமை... எத்தனை நூலகங்கள் தமிழ் நாட்டில் உள்ளது... அங்கே உள்ள உலக அரசியல் தலைவர்கள் பற்றியோ உள்ளூர் அரசியல் தலைவர்கள் பற்றியோ மிகவும் நிதானமாக வாசித்தவர்கள் எத்தனை பேர்... இன்றைய இளைஞர்கள் கொஞ்சமும் புத்தக வாசனை இல்லாத மனிதர்களாகவே வலம் வருகிறார்கள்...சே குவேரா சட்டை பெருமிதமாக அணிந்து கொள்வார்கள்... ஆனால் அவரது புரட்சி எங்கே எப்படி ஆரம்பித்து எத்தனை இடர்களை கடந்து இன்றும் ஒரு புரட்சியாளராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்று எத்தனை பேர் அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது கேள்வி குறி தான்...இது சாதாரண வாசிப்பாளருக்கு சாத்தியம்... ஆனால் அரசியல் ஆர்வம் மிகுந்தவர்கள் அரசியலில் பெரிதாக புரட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இப்படியான மனிதர்களை ஆழமாக வாசித்து அதன் பிறகு அரசியல் புரட்சி செய்ய வருகிறார்கள்...

மேம்போக்கான அரசியல் மற்றும் துட்டுக்கு அரசியல் மற்றும் முக்கியமான பிரச்சினைகள் எழும் போதெல்லாம் கூட்டணி தர்மம் என்று ஓடி ஒளிந்து கொள்ளும் அரசியல்...இப்படிதானே இன்றைய அரசியல் போகிறது...மேலும் கட்சியில் உயிரைஐ கொடுத்து மக்களுக்காக சேவை செய்பவர்களுக்கு உண்மையில் சீட் கொடுக்கிறார்களா என்று அந்தந்த பெரிய கட்சிகள் தமது மனசாட்சியை கேட்டுக் கொள்ளட்டும்...அரசியல் பற்றிய உண்மையான உருவை மாற்றி இது தான் அரசியல் என்று மக்கள் மனதில் திணிப்பவர்களுக்கு சூட்டோடு சூடாக ஒரு குட்டு நீதிமன்றம் வைக்கட்டும்...


மேலும் சாலை என்பது மக்களின் வரிப்பணத்தில் போடப்பட்டது...அதை அடைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரமோ பேனர்கள் வைக்கும் கலாச்சாரமோ இனி எப்போதும் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்கட்டும்...

எல்லாவற்றிற்கும் மேலாக டாஸ்மாக் கடைகளை அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றம் நழுவாமல் தானே முன்வந்து இன்றைய இளைஞர்கள் சீரழிந்து சமுதாயத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கி வைத்து இருப்பதற்கு அரசாங்கம் பதில் சொல்ல காலக்கெடு விதிக்கட்டும்...

எப்படி இருந்த தமிழ் நாடு இவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டதை ஆழ்ந்த வருத்தம் நிறைந்த மனதோடு கண்ணீரோடு பெரும்பான்மையான பொது ஜனங்கள் மௌனமாக அழுவதை கொஞ்சம் உற்று கேளுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் வைத்து தமிழ் நாட்டில் அங்கங்கே நடக்கும் மோசமான நிகழ்வுகளை இன்றைய ஊடகங்கள் சுட்டிக் காட்டட்டும்...

இடித்துரைப்பவர்கள் இல்லாமல் போனால் இந்த நாட்டை ஆள்பவர்கள் மட்டும் அல்ல குடிமக்களுக்கும் நாசமாக தானே போவார்கள்...

இனியொரு விதி செய்வோம் 

அதை எந்த நாளும் காப்போம்...

#இனியொருவிதிசெய்வோம்

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:04/10/25/சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...