ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

ஒரு இலக்கியவாதியும் அந்த நடுநிசி மனிதர்களும்...


அந்த இலக்கியவாதி அன்றொரு நாள் நடுநிசி நெருங்கும் அந்த வேளையில் தனக்கு நெருக்கமான எழுத்தாளரின் புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டு இருந்தார்...

தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் ஏதோவொரு கலை பயணத்தில் இணைத்துக் கொள்வது அவரது பொழுதுபோக்கு என்று சொல்லலாம்... அப்படி அந்த வாசிப்பில் மூழ்கியவருக்கு அவரது வீட்டின் அழைப்பு மணியோசை காதில் விழுந்தது... அந்த அழைப்பு மணி ஓசை கேட்டு சாதாரண மக்களாக இருந்தால் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் குடும்பத்தாரையே அலறி அடித்து எழுப்பி விடும் சுபாவம் உள்ளவர்கள் மத்தியில் இவர் அதை ஒரு முறை அப்படியே நோட்டமிட்டு விட்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

வெளியே ஒரு கூட்டமே அவரது கதவு திறக்காதா என்று ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து விட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்தியது... இப்போதும் எந்த சலனமும் இல்லை அவரிடம்...

பிறகு பொறுமை இல்லாமல் ஒருவர் அந்த கதவின் மீது கையை வைக்க அது இலகுவாக திறந்து கொண்டது கண்டு வியப்படைந்தார்கள்... அப்படியே அவர்கள் அவரை நோக்கி வந்து ஒரு வணக்கம் செலுத்தினார்கள்... அவரும் தனது உடல் மொழியால் அவர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

இவர்கள் அனைவரும் நாங்கள் இங்கே அமரலாமா சார் என்று கேட்டார்கள்.. அவரும் தனது கண்ணசைவில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்...

இவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அமர்ந்து கொண்டு எப்படி வந்த விசயத்தை ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தார்கள்... பிறகு ஒரு வழியாக அவரது இலக்கிய படைப்புகளை வரிசையாக தரம் பிரித்து வைத்துக் கொண்டு இந்த இந்த படைப்புகள் எல்லாம் நாங்கள் திரைப்படமாக எடுக்க போகிறோம் அதற்கு தங்களது அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள்... அப்போது அங்கே அந்த மேசையில் உள்ள பொம்மை ஒன்று காதை தீட்டிக் கொண்டது..இவரிடம் போய் இந்த மனிதர்கள் வந்து இருக்கிறார்களே இவர்கள் கிறுக்கு தான் பிடித்து விட்டது போலும்..இவர் என்ன குணாதிசயம் உள்ளவர் என்று இத்தனை நாள் இவரோடு பயணிக்கும் எனக்கே கணிக்க தெரியாதே..சரி இவர் என்ன தான் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று தனது காதை கூர்மையாக்கி கொண்டது..இவர் அதை கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை... வந்தவர்கள் தங்களுக்குள் இந்த இந்த படைப்புகளுக்கு இந்த தொகையை பேசி விடலாமா என்று விவாதித்து கொண்டு இருந்தார்கள்.. குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் அந்த விவாதம் போய்க் கொண்டிருக்கும்... ஒரு வழியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அவர் இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த இருக்கை காலியாக இருந்தது.. எங்கே சென்று இருப்பார் ஒரு வேளை கழிவறை சென்று இருக்கக் கூடும் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே அந்த இரவின் பேரமைதி வெளிப்படும் வகையில் அமர்ந்து இருந்தார்கள்... ஆனால் அவரை காணவில்லை..


ஒரு வேளை வெளியே தோட்டத்தில் உலாவ கூடும் என்று அந்த கூட்டத்தில் இருந்த இலக்கிய அறிவு சிறிது உள்ள ஒருவன் மட்டும் எழுந்து சென்று பார்த்தால் அவன் நினைத்தது போலவே அங்கே தான் அவர் அமைதியாக அந்த நடுநிசியில் நனையும் செடி கொடிகளை ரசித்தபடி மிகவும் மெதுவாக அதை வருடியபடியே அந்த தேய்பிறை நிலவின் மங்கிய ஒளியில் நடந்து கொண்டு இருந்தார்...

அவன் அதற்குள் உள்ளே ஓடோடி அவர் அந்த தோட்டத்தில் தான் இருக்கிறார் என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தான்..

எல்லோரும் அங்கே சென்று மீண்டும் தாங்கள் பேச நினைத்த அவர் எழுதிய இலக்கியத்திற்கான தொகையை சொன்னார்கள்... அவர் மிகவும் நிதானமாக நான் எப்போது என் கதையை உங்களிடம் கொடுப்பதாக சொன்னேன் என்று கேட்டார்..

இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. சார் நீங்கள் உங்கள் இல்லத்தில் எங்களை அனுமதித்தது மற்றும் நாங்கள் வந்த காரணத்தை சொன்னபோது நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே... அதனால் தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம் என்றார்கள்..

ஓ அப்படியா... ஆனால் நான் நீங்கள் எல்லோரும் ஏதோ எனது வீட்டில் திருட வந்ததாக அல்லவா நினைத்து மௌனமாக வாசித்து கொண்டு இருந்தேன் என்றார் மிகவும் நிதானமாக...

அதற்கு அவர்களுக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சார் ஒரு திருமணம் ஆகாத இலக்கியவவாதியான உங்கள் வீட்டில் என்ன இருக்க போகிறது? நாங்கள் திருடர்களாகவே இருந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனால் இலக்கியவாதியான உங்கள் வீட்டில் சில பல இலக்கிய புத்தகங்களோ தத்துவ புத்தகங்களோ நீங்கள் எழுதிய புத்தகங்களோ இருக்க போகிறது... இதை எவர் வாங்குவார்கள்...அதை நீங்கள் நினைப்பது போல நாங்கள் திருடர்களாகவே இருந்து எடுத்து சென்று விலைக்கு போட்டாலும் ஒரு வேளை உணவு எங்களால் நிம்மதியாக உண்ண முடியாத அளவுக்கு வரியை வாரி இறைத்து எங்கள் வயிற்றின் சூட்டில் குளிர் காயும் அரசாங்கம் உள்ள நாட்டில் உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களால் எங்கள் பசிக்கு கூட உதவ முடியாது... நாங்கள் இங்கே ஒரு பத்து பேருக்கு மேல் இருக்கிறோம்... அது சரி நீங்கள் எங்கோ வேறு உலகத்தில் வாழ்பவர் போல பேசுகிறீர்கள்.. நீங்கள் இந்த நாட்டின் பிரஜை தானே என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கேட்டான்..

அதற்கு அந்த எழுத்தாளர் ஆம் நான் இந்த நாட்டின் வரிக்கு உதவ முடியாத பிரஜை என்று நகைச்சுவையாக சொல்லி விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று தான் வாசித்து வந்த புத்தகத்தின் மீதி பக்கங்களை வாசிக்க தொடங்கினார்...

வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அப்ப நாங்க வரோம் சார் என்றார்கள்... ம்ம்... போகும் போது அந்த கதவை கொஞ்சம் நன்றாக சாத்தி விட்டு செல்லுங்கள் இன்னும் எவரும் உங்களை போல வந்து விட போகிறார்கள்... எனது வாசிப்பு தடை பட்டால் எனக்கு பிடிக்காது என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு அந்த புத்தகத்தில் வாசிக்க மூழ்கினார்...

#ஒருஇலக்கியவாதியும்

#அந்த நடுநிசி மனிதர்களும்.

#கதையாக்கம்இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...