நான் இங்கே எதையும் சேர்த்து வைக்க இயலாத
கையாகாத மனுஷியாக
ஓடிக் கொண்டிருப்பதாக
அங்கே பல பேரின் கேலி பேச்சுகளை மிகவும் நிதானமாக ரசித்து
புன்னகைத்து செல்வதை பார்த்து
காலம் கொஞ்சம்
அயர்ந்து தான் போனது...
அது என் தோளில் கை வைத்து ஏன் உனக்கு கோபம் வரவில்லை அவர்கள் பேச்சை கேட்டு என்று கேட்டது...
நானோ உன்னை சேமிக்க விரும்புகிறேன் நீ என்னோடு தங்கி விடுகிறாயா என்றேன்
அந்த காலத்திடம்...
உடனே காலம் சுதாரித்துக் கொண்டு அதெப்படி முடியும்
நான் எவரின் சேமிப்பாக இருக்க இயலாத ஜனனம் நான் என்றது...
அப்படி என்றால் நான் இங்கே எதை சேமித்து வைத்தாலும்
உன்னுள் கரைந்து ...
இருக்கும் இடம் தெரியாமல்
போய் விடும் தானே என்றேன்...
ஆம் அதிலென்ன சந்தேகம்
உனக்கு என்றது...
பிறகு ஏன் நான் எதையும் சேமித்து
அதை பாதுகாக்க
இந்த பிரபஞ்சத்தில் அல்லாடி
உயிரற்ற ஜடமாக
உலாவ வேண்டும்...
வாழும் இந்த தருணத்தில்
உன்னுள் என் உடல்
புதையும் வரை
கொஞ்சம் இலகுவாக
உன் கை பிடித்து ...
இந்த பிரபஞ்சத்தின் பேரழகில்
என்னை தொலைத்து
இந்த நாட்டில் அரசியல் என்ற
பெயரில் நடக்கும் கூத்துகளை
கொஞ்சம் கண்டுக்காமல் தள்ளி
வைத்து நான் வாழ்ந்து விட்டு
போவதில் அப்படி என்ன உனக்கு
பிரச்சினை என் காலமெனும்
தோழனே என்று சிரித்துக்கொண்டே
கேட்டதில் காலமும்
அதுவும் சரிதான் என்று கலகலவென
சிரித்து விட்டு
கொஞ்சம் உனது கையால்
இஞ்சி தேநீர்
சூடாக கொண்டு வா தோழியே உன் கைகளால் அந்த தேநீரை பருகி நாட்களாகி விட்டது என்று சொல்லி அங்கே உள்ள இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க அதில் 2026க்குள் தீவிரவாதம் இந்தியாவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா பேசிக் கொண்டு இருந்தார்...
இதை பார்த்தவுடன் பொட்டென்று ரிமோட்டில் தொலைக்காட்சியை அமைதிப்படுத்தி விட்டு
காத்திருந்த காலத்தின் கைகளில் சிரித்துக்கொண்டே எனது தயாரிப்பான இஞ்சி சுவையுள்ள தேநீரை திணித்தேன்...
ஏனோ அந்த தேநீரில் இன்று கொஞ்சம் காரம் அதிகமாக இருந்ததை இருவரும் உணர்ந்தோம்...
#காலமும் நானும்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/08/24/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக