ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

அந்த பூனைகளின் சுவாரஸ்யமான வேடிக்கை...


அந்த நெருக்கடி நிறைந்த சாலையில் 

அந்தி மங்கும் அந்த இரவின் 

தொடக்கத்தில் வேலைக்கு சென்று 

திரும்பி வந்துக் கொண்டு 

இருக்கிறார்கள் அந்த நகரவாசிகள் 

அந்த உயிர் காக்கும் கவசத்தினால் 

எவரின் முகமும் எவருக்கும் 

தெரியாதபடி ஒருவரையொருவர் 

ஏதோ வேற்று கிரக வாசிகள் போல 

ஜட பார்வை பார்த்துக்கொண்டு 

சிகப்பு சமிக்ஞைக்காக

ஏதோவொரு பெரும் எரிச்சலோடு 

காத்திருக்கும் வேளையில் தான் 

அந்த அடுக்குமாடி குடியிருப்பு 

பகுதியின் மேற்பரப்பில் இருந்து 

கொண்டு அங்கே வசிக்கும் 

பூனைக் கூட்டங்கள் 

அந்த நகரவாசிகளின் கதைகளை 

பேசி பேசி நகைத்துக் கொண்டு 

இருக்கிறது...

இந்த நகரவாசிகள் 

தேடுவது யாது என்று ஒரு பூனையும் 

நமக்கு இருக்கும் வயிற்றை போல 

பல மடங்கு பெரும் பானை வயிறோ 

அவர்களுக்கு என்று இன்னொரு 

பூனையும்...

இல்லை இல்லை அவர்கள் 

வேறு ஒரு அற்புதமான 

கிரகத்தை சிருஷ்டித்து 

அதில் நம்மை குடியமர்த்த 

போவதற்காக இந்த ஓட்டம் 

ஓடுகிறார்கள் என்று 

அங்கிருந்த மற்ற பூனையும் 

சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு 

இருந்த போது 

அங்கே திடீரென வந்த 

வாழ்வின் எல்லையின் இறுதியில் 

இருந்த அந்த குடியிருப்புவாசி 

அந்த பூனைகளின் 

உரையாடலை கேட்டு 

கொஞ்சம் ஆச்சரியமாக கீழே 

எட்டி பார்த்தார் ...

அந்த பூனைகளின் உரையாடல் தான் 

எவ்வளவு பொருத்தமானதாக 

உள்ளது என்று தனக்குள் 

பேசிக் கொண்டு 

அந்த சாலையின் 

பெரும் கூட்டத்திற்கிடையில்

தனது கண்களை இடுக்கி 

தனது மகனின் தலையை தேடுகிறார் 

இன்னும் வீட்டிற்கு வரவில்லையே 

என்ற பரிவோடு...

#இளைய வேணி கிருஷ்ணா 

நாள் 27/01/25/திங்கட்கிழமை.

அதிகாலைப் பொழுதில்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...