ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 அக்டோபர், 2018

பிரச்சினைகளும் தீர்வுகளும்

அன்பர்களே வணக்கம்.
    நாம் தற்போது பார்க்க இருப்பது பிரச்சினைகளும் தீர்வுகளும்.நாம் அன்றாட வாழ்வில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கிறோம். இந்த பிரச்சினைகளை பாதிப்பேருக்கு கையாள தெரியாமல் இதயதுடிப்பு அதிகமாவதும் உண்டு. ஆனால் ஒருசிலர் எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் மிகவும் லாவகமாக கையாண்டு வெற்றி அடைகிறார்கள்.அதுதான் அவர்களை வாழும் கலை கற்றவர்கள் என்று அனைவரும் பாராட்டும் அளவிற்கு மிக அதிக உயரத்தில் வைத்திருக்கிறது.
   சரி தற்போது பிரச்சினைக்கு வருவோம். மனிதன் என்று பிறந்து விட்டாலே பிரச்சினைகளுக்கு பஞ்சம் ஏது?.அதை தீர்ப்பதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள். சும்மா சுத்தி வளைத்து பேசுவதே உங்களுக்கு வேலையாக போய்விட்டது என்று நீங்கள் என்மேல் மிகவும் கோபமாக இருப்பது எனக்கு தெரிகிறது. உங்கள் இதயதுடிப்பை அதிகப்படுத்திய பாவத்திற்கு நான் ஆளாக விரும்பவில்லை.
   ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் பிரச்சினை ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருசிலர் சந்திக்கும் பிரச்சினை மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.
     இப்படி தான் ஒரு மனிதன் வீதியில் போய்க்கொண்டு இருக்கிறான்.அவன் பாட்டுக்கு தான் போய்க்கொண்டு இருக்கிறான்.ஆனால் பின்னாடியே வேறு ஒரு மனிதன் ஏ நாயே நில்.ஏன் போய்க்கொண்டே இருக்கிறாய் என்று கத்திக்கொண்டே வருகிறான்.இப்போது வீதியில் அவனும் பின்னாடியே ஓடி வந்த மனிதனை தவிர அங்கே வேறு யாரும் இல்லை. இவனுக்கு வந்ததே கோபம். பின்னாடியே துரத்தி வந்த மனிதனை பார்த்து நாலு வாங்கு வாங்கி விட்டான்.அவனிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அடிவாங்கிய மனிதன் இவனை பார்த்து ஏன் என்னை அடித்தாய் என்று சிறுமுனகலுடன் கேட்டான். இவனும் மீண்டும் நன்றாக அடிக்க ஆரம்பித்து விட்டான் பண்ணுவதை பண்ணி விட்டு ஏன் அடிக்கிறாய் என்ற கேள்வி வேறா?என்று. அடிவாங்கிக்கொண்டு இருப்பவனுக்கு வந்ததே வீரம். அடிக்கொடுத்துக்கொண்டு இருப்பவனே நையபுடைக்க ஆரம்பித்து விட்டான்.இருவரும் சோர்ந்து போய்விட்டார்கள்.பிறகு மெல்ல கேட்டான் முன்னவன்.என்னை ஏன் நாய் என்று கூறினாய் என்று. இதைக்கேட்ட துரத்தி வந்தவன் அந்த மோசமான சூழ்நிலையிலும் சிரிப்பு வந்து விட்டது. அட முட்டாளே உன்னை எங்கே நாய் என்று கூப்பிட்டேன். நான் எனது நாயைதானே துரத்தி வந்தேன் என்றான் சாவகாசமாக.பிறகு ஒருவரையொருவர் கட்டித்தழுவி கொண்டார்கள்.
   சரி இந்த கதையின் மூலம் நீங்கள் என்ன உணர்ந்து கொண்டீர்கள். ஒருநிமிடம் இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டு இருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் என்ன நடந்தது?.ஒருவனின் முன்கோபத்தால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்து விட்டது. இப்படி தான் நமது மக்கள் தீர விசாரிக்காமல் பல பிரச்சினைகளை வரவழைத்து கொள்கிறார்கள்.
   சில பிரச்சினை மிகவும் எளிதானது.ஏன் அது பிரச்சினையாக கூட பார்க்க தேவையில்லை. ஆனால் ஒருசிலர் தனது வறட்டு வம்பிற்காக பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள். இது எப்படி உள்ளது என்றால் பேனை பெருமாளாக்கிய கதை என்று பெரியவர்கள் சொல்வதுபோல!.
   மனிதர்களே சில பிரச்சனைகள் நீங்கள் சந்திக்கும் போது உடனே முடிவெடுக்காதீர்கள்.அதை சற்றே சிந்தித்து பாருங்கள். ஒன்றும் முடிவு தோன்றவில்லையா நீங்கள் பாட்டுக்கு கம்முனு ஆறபோடுங்கள். உங்கள் கனவில் கூட அந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கலாம். ஆக மொத்தம் பிரச்சினை என்று ஒன்று இருந்தால் தீர்வு என்று ஒன்று இருக்கும். அதை நாம் மிகவும் சாதூர்யமாக கையாள வேண்டும். அதைவிடுத்து அவசரப்படக்கூடாது.
     ஒருசிலர் பிரச்சினைகளை மிகவும் ஆழமாக மனதில் உள்வாங்கி கொண்டு அதை யாரிடமும் சொல்லாமல்  பெரிய பொக்கிஷமாக பூட்டி வைத்துக்கொண்டு மன உளைச்சலை  தவிர்க்க முடியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். முதலில் இவர்கள் வாழ்க்கை என்றால் மிகவும் த்ரிலிங்கான அனுபவம் என்பதை புரிந்து கொண்டாலே மனம் அமைதி அடைவார்கள்.
  பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை தைரியமாக சந்திக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்டால் நாம் பாதி பிரச்சினையிலிருந்து மீண்டு விடுவோம். ஆனால் நாம் சிறு பிரச்சினை கூட சந்திக்க தயங்கும் போது பிரச்சினை பூதாகரமாக தெரியாமல் சின்னதாகவா தெரியும்?.யோசியுங்கள் அன்பர்களே!.கண்ணுக்கு அருகே சிறு துகளான கள்ளை கொண்டு சென்றாலும் பெரிய பாறாங்கல்லாக தான் தெரியும். என்ன நேயர்களே நான் சொல்வது உங்களுக்கு ஓரளவாவது புரியும் என்று நினைக்கிறேன். யோசியுங்கள் நேயர்களே!.
   சரி அன்பர்களே!மீண்டும் நான் உங்களை நல்ல பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.நன்றி நேயர்களே!🙏✊🖐️👍.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...