ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சொற்களின் அலமாரி...

 





உன்னிடத்தில் வெகுநாட்களாக

பிரியம் கொண்டு

நான் உன்னிடம்

பேச நினைத்த சொற்களை

பேசாமல் தினம் தினம்

பொழுது போகிறது...


உன்னோடு இருந்த

ஒவ்வொரு கணங்களையும்

நான் கவிதை கோர்த்து

சொற்களுக்குள்

புதைத்துக் கொள்கிறேன்...

அதை உன்னிடத்தில்

சமர்ப்பிக்காமலேயே...


என் தேடல் எப்போதும் நீயாக

இருக்கும் போது

உன் தேடல் எதுவோ என்று

கேட்க நினைத்து

நீ விளையாட்டாக

எதிர் கருத்து ஏதேனும் சொல்லி விடுவாயோ என்று

கேட்காமலேயே நகர்ந்து

சென்ற நாட்கள் இங்கே

ஏராளம் ஏராளம்...

எது எப்படியோ உன் மீது கொண்ட

பெரும் காதலின்

சொல்லதிகாரத்தை

பெரும் புத்தகமாக்கி...

இங்கே எனது வீட்டின்

ஒரு பிரமாண்ட அறையை

அலமாரியாக ஒதுக்கி

சேர்த்து வைத்து இருக்கிறேன்...


அந்த சொற்களின் அலமாரியை

நீ கண்டு களிக்க 

வரும் நாளில் எந்த பூச்சியும்

அரித்து விடக் கூடாது என்று

என் நேசத்தின் கவசத்தை

வேலி இட்டு 

பாதுகாத்து வைத்திருக்கும்

தகவலையேனும்

எவரும் சொல்வதற்கு

முன்பே 

உனக்கு அறிவித்து விட

துடிக்கும் நான்

உன் பெரும் காதலின்

அடையாளம் என்று

நீ உணர்வாயோ மாட்டாயோ

நான் அறியேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/02/26.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...