அமைதியாக ஓடும்
நதியை பார்க்கும் போது
நிச்சலனம் என்னை
ஆட்கொள்ளாதாவென
ஏங்கி தவிக்கிறேன்
ஓர் சிறுகுழந்தைபோல!
காலத்தில் முழுமையாக
கரைய விருப்பம் இல்லை
எனக்கு!
காலம் என்னை கொல்கிறது!
காலத்தை நான் கொல்வதாக
நினைத்து முட்டாளாகிறேன்
காலத்திடமும் நான்!
ஏன் இந்த ஜனனம் என்று
பல்லாயிரம்முறை கேட்ட கேள்விக்கு
இன்னும் பதில் இல்லை!
வினைகளை சுமந்து தான்
ஜனனம் என்று தெரிந்த நீ
ஏன் என்னிடம் கேள்வி
கேட்டு துன்புறுத்துகிறாய்
என்கிறான் ஒருபக்கம்
இறைவன்!
ஏதோவொரு சூட்சமம்
உண்டு என் பிறப்பிற்கு
என்று தேடி தேடி அலைந்து
கால்கள் ஓய்கிறது எனக்கு!
கடந்து வந்த பாதைகளை
நான் மீண்டும் திரும்பி பார்க்க
விரும்பவில்லை!
இனி கடக்க இருக்கும் பாதை
எவ்வாறு என்று
தெரிந்து கொள்ளும் ஆவலும்
தொலைந்து விட்டது!
விதியின் பாதையில்
பயணம் என்று ஆனபிறகு
விலகி விலகி ஓடுவதால்
எந்த பயனும் இல்லை!
கொஞ்சம் கொஞ்சமாக
என்னை நானே தேற்றி
பயணிக்கிறேன்
தனியேதன்னந்தனியே!
ஆறுதலுக்கும் தேறுதலுக்கும்
ஆள் வர வாய்ப்பு இல்லை!
வந்தாலும் என் சோகத்தை
முழுமையாக உள்வாங்கி
கரைய ஆளையும் படைக்கவில்லை
அந்த இறைவன் எனும் தலைவன்!
எவ்வளவு நல்லெண்ணமோ
இறைவா உமக்கு
வாழ்ந்து விட்டு போவீர் நீ!
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக