ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (15)

 


✨அந்த அதிகாலை நேரம் அவ்வளவு இனிமையானது.. நான் அந்த பொழுதை அவ்வளவு எளிதாக ரசிக்காமல் விட்டு விடவில்லை.எப்போதும் ஓடி ஓடி களைத்து விட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அது.. ஆனால் எத்தனை பேர் அதை அனுபவிக்கிறார்கள் என்று நிச்சயமாக தெரியவில்லை.நான் ஒவ்வொரு மணித்துளியையும் அனுபவித்து வாழ துடிப்பதால் எனக்கு அது மிகவும் பிடித்ததாக கூட இருக்கலாம்..

அந்த விடியற்காலை நான்கு மணி என்பது பலபேருக்கு நடுநிசி என்று கேலியாக எனது நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்..

இறைவன் இத்தனை அழகை ஏன் இந்த விடியல் நெருங்கும் வேலையில் மட்டும் கொட்டிக் கொடுத்து இருக்கிறான் என்று எனக்கு தெரியவில்லை..

நேற்றைய சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட வேண்டும்.. ஏன் நேற்றைய பொழுதையே மறந்து விட வேண்டும்.. அப்போது தான் இந்த விடியலை ரசிக்க முடியும்..


பொருளாதாரத்தை மட்டுமே தேடி அலைபவர்களுக்கு நிச்சயமாக இதை ரசிக்க முடியாது.மேலும் இன்றைய வாழ்வியல் சூழலில் பலபேர் இரவு பனிரெண்டு மணிக்கு தான் உறங்க செல்கிறார்கள்.. அந்த இரவையும் சுகமாக ரசித்து உறங்க முடியவில்லை ; இந்த விடியலை நெருங்கும் இந்த பொழுதையும் ரசிக்க முடியவில்லை;அது அவர்கள் தவறா இல்லை நமது அரசாங்கத்தின் தவறா என்று தெரியவில்லை..

ஒவ்வொரு மனிதனும் வாழ்வை வெறுத்து வெறும் சுவாசம் மட்டுமே இயங்கும் கதியில் தான் இருக்கிறார்கள்..

ஏன் அப்படி என்றால் அதற்கு அவர்கள் பொருளாதார சூழ்நிலை தான்..குடும்பத்தை காப்பாற்ற ஓடி ஓடி ஓய்ந்து விடும் நேரத்தில் கூட அவர்களால் வாழ்வை ரசிக்க முடியவில்லை..

ஏன் ஒரு மனிதன் இறக்கும் போது கூட அவன் உடலை ஏதோவொரு அவசரம் உந்தி தள்ளுகிறது.இப்போது அவன் ஓய்வெடுக்கிறான்.. அவன் குடும்பம் அவசரகதியில் இருக்கிறார்கள்.. ஏன் இந்த அவல நிலை என்று நினைக்கக் கூட எவருக்கும் நேரம் இல்லை..

அந்தளவுக்கு நேரத்தை மிதித்து ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்..


வாழ்க்கை என்பது மிகவும் ரசனையானது.. உண்மையிலேயே.. நாம் நமக்கான கௌரவத்தை அதே வெற்று கௌரவத்திற்காக தொலைத்து விடுகிறோம்.. வெறும் ஆசைகளால் வாழ்வது தான் வாழ்க்கையா? வெறும் உணர்வற்ற ஜடம் போல இயந்திர கதியில் இயங்குவது தான் வாழ்க்கையா??

இங்கே பலருக்கு தமக்கு என்று ஓர் தேடல் இருப்பதையே மறந்து விடுகிறார்கள்;தமக்கான ஆனந்தத்தை தொலைத்து விட்டு வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?? என்னுள் ஆயிரம் கேள்விகள்..

ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் தம்மை சுமைதாங்கியாக எண்ணிக் கொள்கிறார்கள்.அந்த சுமைகளை சுமப்பதே ஆனந்தமயமானது என்று வீண் கற்பனை செய்து கொள்கிறார்கள்.. உண்மையில் நாம் சுமைதாங்கியா ? இல்லை நீங்கள் உண்மையில் சுமைகளற்றவர்கள்.. ஆயிரம் ஆயிரம் சுமைகளை பகிர்ந்து கொள்ள தெரியாமல் சுற்றி அந்த சுமைகளின் அழுத்தத்தில் ஆனந்தத்தை உணர்வதாக கற்பனை செய்து கொண்டு திரிபவர்கள்.. உண்மையான ஆனந்தத்தை அறியாதவர்கள்..

ஆமாம் இந்த விடியற்காலையில் எனக்கு ஏன் இந்த வேண்டாத சிந்தனை என்று எனக்கு நானே சிரித்துக்கொண்டே கொல்லைப்புற தோட்டத்தில் உள்ள மலர்ந்தும் மலராத அந்த மலர்களை பறிக்க சென்றேன்..

மலர்களோ நானும் இந்த விடியற்காலையை ரசிக்கிறேனே ஏன் என்னை பறிக்கிறாய் என்று கேட்பது போல இருந்தது.. ஆம் அதன் கேள்வி நியாயமானதே..இயற்கையை இறைவனாக பார்க்க தெரிந்தவனுக்கு ஏன் அதை பறிக்க தோன்றியது என்று ஆச்சரியப்பட்டேன்..அதை அப்படியே விட்டு விட்டு கொல்லைப்புற தோட்டத்தில் கொஞ்ச நேரம் செலவிட்டேன் அந்த திண்டுவில் அமர்ந்து கொண்டு..எனை மிகவும் மெலிதாக வருடி சென்றது அந்த அதிகாலை காற்று..அதை முழுமையாக அனுபவித்தேன்..

அப்படியே அங்கே மலர் துடிக்கும் பூக்களை ரசித்த படி எவ்வளவு நேரம் இருந்தேன் என்று எனக்கே தெரியாது.. திடிரென ஓர் 🐦 பறவையின் சிறு ஒலி எனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது..

இதோ இன்னும் சில நிமிடங்களில் சூரிய பகவான் இங்கே மக்களுக்கு ஒளி கொடுத்து இயங்க வைத்து விடுவார்..

மீண்டும் ஓட்டம் ஓட்டம் ஓட்டம்..நானோ ஓடி வெகுநாட்கள் ஆகி விட்டது.. சுற்றுலா வழிகாட்டியாக இருப்பதால் இப்போது எனக்கு ஓட அனுமதி இல்லை..

ஆனால் இந்த லௌகீகத்தை நோக்கி  இயங்காமல் இருப்பது வரமே என்று நினைக்கிறேன்..

நீயோ பிரம்மச்சாரி.. உனக்கு என்ன பிரச்சினை என்று இங்கே ஆயிரம் பேர் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம்.. ஆனால் நானும் சாப்பிட வேண்டும் அல்லவா.. இப்படி சொல்வதால் சாப்பிட உனக்கு அவ்வளவு செலவா என்று கேட்க தோன்றும்.எனது தேவைகள் குறைவு தான்.. ஆனால் நான் வாழ்வதோ நகரத்தினை ஒட்டிய பகுதியில்.. அரசாங்கம் தான் எனது சம்பளத்தில் பாதியை சாப்பிடுகிறது.. நான் இந்த அரசாங்கத்திற்காகவாவது ஓட வேண்டும் தானே 😊..

ஆனால் விரைவில் எனது வாழ்வை ஓர் அழகிய கிராமத்தில் தொடர இருக்கிறேன்.. அதுவரை இந்த நகரத்தின் கோடிகோடி துகள்களில் ஓர் துகளாய் நானும் ஓட தான் வேண்டும்..

மீண்டும் சந்திப்போம் வாசக நெஞ்சங்களே!🙏⛱️🧚🦋⛵🌊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (15).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு புயலில் சிக்கிய ஓடம்...

தேடல் இல்லாத வாழ்க்கை  வறண்ட பாலை போன்றது  என்று அங்கே யாரோ ஒரு வாழ்க்கை  பயணி தன் உடன் பயணிப்பவரிடம்  சொல்லி செல்கிறார்... நானோ அந்த வார்த்...